வியாழன், 29 செப்டம்பர், 2016

திருக்குறளில் வேள்வியும் வேட்டலும்

முன்னுரை:

திருக்குறளில் எந்தவொரு மதம் சார்ந்த கருத்துக்களும் கூறப்படவில்லை என்று பல கட்டுரைகளில் முன்னர் கண்டுள்ளோம். இந்நிலையில், திருக்குறளில் வரும் வேள்வி, வேட்டல் ஆகிய சொற்கள் தேவர்களைக் குறித்து செய்யப்படும் யாகங்களைக் குறித்தது என்றும் இதன்மூலம் வள்ளுவர் இந்துமதம் சார்ந்த கருத்துக்களையே முன்வைக்கிறார் என்றும் சிலர் வாதிடுகின்றனர். இவர்களது வாதம் எவ்வளவு பொய்யானது என்பதை இக் கட்டுரையில் ஆதாரங்களுடன் காணலாம்.

வேள்வியும் வேட்டலும் - தற்போதைய அகராதிப் பொருட்கள்:

வேள்வி, வேட்டல் ஆகிய சொற்களுக்குத் தற்போதைய தமிழ் அகராதிகள் என்னென்ன பொருட்களைக் காட்டியிருக்கின்றன என்று கீழே பார்க்கலாம்.

வேள்வி vēḷvi , n. < வேள்-. [T. M. vēḷvi, K. bēluve.] 1. Sacrifice. See ஐவகைவேள்வி, 1. முன்முயன் றரிதினின் முடித்த வேள்வி (அகநா. 220). 2. Spiritual discipline. See ஐவகையாகம், 2. 3. Sacrificial pit; ஓமகுண்டம். (பிங்.) 4. Service, worship; பூசனை. (பிங்.) வேள்வியி னழகியல் விளம்பு வோரும் (பரிபா. 19, 43). 5. Marriage; கலியா ணம். நாமுன்பு தொண்டுகொண்ட வேள்வியில் (பெரியபு. தடுத்தாட். 127). 6. Benevolence; gift; கொடை. (பிங்.) 7. Religious merit; புண்ணியம். ஆள்வினை வேள்வியவன் (பு. வெ. 9, 27). 8. (Puṟap.) Theme eulogising a warrior on his destroying his enemies to feast devils with their dead bodies. See களவேள்வி. பண்ணி தைஇய பயங்கெழு வேள்வியின் (அகநா. 13). 9. The 10th nakṣatra. See மகம், 2.

வேட்டல் vēṭṭal , n. < வேள்-. 1. Sacrificing, one of antaṇan-aṟu-toḷil, q.v.; யாகம் பண்ணுகை. ஓதல் வேட்ட லவைபிறர்ச் செய்தல் (பதிற்றுப். 24, 6). 2. Marriage; விவாகம். (பிங்.) 3. Desiring; விரும்புகை. (பிங்.) 4. Begging; ஏற்கை. (அரு. நி.)

வேள்¹-தல் [வேட்டல்] vēḷ-, 9 v. tr. [K. bēḷ.] 1. To offer sacrifices; யாகஞ் செய்தல். ஓதல் வேட்டல் (பதிற்றுப். 24, 6). 2. To marry; மணம்புரிதல். மெய்ந்நிறை மூவரை மூவரும் வேட் டார் (கம்பரா. கடிமணப். 102). 3. To desire; விரும்புதல். வயவுறு மகளிர் வேட்டுணி னல்லது (புற நா. 20). 4. To love; சினேகித்தல். மலர்ந்து பிற் கூம்பாது வேட்டதே வேட்டதா நட்பாட்சி (நலாடி, 215).

திருக்குறளில் வேள்வி:

முதலில் வேள்வி என்ற சொல் பற்றிக் காணலாம். திருக்குறளில் வேள்வி என்னும் சொல் இரண்டு பாடல்களில் பயின்றுவருகிறது. அப் பாடல்களையும் அவற்றுக்கு இன்றைய உரையாசிரியர்கள் கூறியிருக்கும் விளக்கங்களையும் கீழே காணலாம்.

(1)  இனைத்துணைத்து என்பதொன்று இல்லை விருந்தின்
துணைத்துணை வேள்விப் பயன் - குறள் 87

கலைஞர் உரை: விருந்தினராக வந்தவரின் சிறப்பை எண்ணிப் பார்த்து விருந்தோம்பலை ஒரு வேள்வியாகவே கருதலாம்.

மு.வ உரை: விருந்தோம்புதலாகிய வேள்வியின் பயன் இவ்வளவு என்று அளவு படுத்தி கூறத்தக்கது அன்று, விருந்தினரின் தகுதிக்கு ஏற்ற அளவினதாகும்.

சாலமன் பாப்பையா உரை: விருந்தினரைப் பேணுவதும் ஒரு யாகமே. அதைச் செய்வதால் வரும் நன்மை இவ்வளவு என்று அளவிட முடியாது; வரும் விருந்தினரின் தகுதி அளவுதான் நன்மையின் அளவாகும்.

பரிமேலழகர் உரை: வேள்விப்பயன் இனைத்துணைத்து என்பது ஒன்று இல்லை - விருந்தோம்பல் ஆகிய வேள்விப் பயன் இன்ன அளவிற்று என்பதோர் அளவுடைத்தன்று; விருந்தின் துணைத்துணை - அதற்கு அவ்விருந்தின் தகுதியளவே அளவு. (ஐம்பெரு வேள்வியின் ஒன்றாகலின் 'வேள்வி' என்றும், பொருள் அளவு தான் சிறிது ஆயினும் தக்கார்கைப் பட்டக்கால் , வான் சிறிதாப் போர்த்து விடும் (நாலடி.38) ஆகலின், இனைத்துணைத்து என்பது ஒன்று இல்லை என்றும் கூறினார். இதனான் இருமையும் பயத்தற்குக் காரணம் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை: விருந்தினர்க்கு அளித்ததனால் வரும் பயன் இன்ன அளவினையுடைத்தென்று சொல்லலாவது ஒன்றில்லை. அவ்விருந்தினரின் தன்மை யாதோ ரளவிற்று அத்தன்மை யளவிற்று விருந்தோம்பலின் பயன்.

(2)   பரிந்தோம்பி பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி
வேள்வி தலைப்படா தார் - குறள் 88

கலைஞர் உரை: செல்வத்தைச் சேர்த்துவைத்து அதனை இழக்கும்போது, விருந்தோம்பல் எனும் வேள்விக்கு அது பயன்படுத்தப்படாமற் போயிற்றே என வருந்துவார்கள்.

மு.வ உரை: விருந்தினரை ஓம்பி அந்த வேள்வியில் ஈடுபடாதவர் பொருள்களை வருந்திக்காத்துப் (பின்பு இழந்து) பற்றுக்கொடு இழந்தோமே என்று இரங்குவர்.

சாலமன் பாப்பையா உரை: விருந்தினரைப் பேணி, அந்த யாகத்தின் பயனைப் பெறும் பேறு அற்றவர். செல்வத்தைச் சிரமப்பட்டுக் காத்தும் அதனை இழக்கும் போது, இப்போது எந்தத் துணையும் இல்லாதவராய்ப் போனோமே என்று வருந்துவர்.

பரிமேலழகர் உரை: பரிந்து ஓம்பிப் பற்று அற்றேம் என்பர் - நிலையாப் பொருளை வருந்திக் காத்துப் பின் அதனை இழந்து இது பொழுது யாம் பற்றுக்கோடு இலமாயினேம் என்று இரங்குவர்; விருந்து ஓம்பி வேள்வி தலைப்படாதார் - அப்பொருளான் விருந்தினரை ஓம்பி வேள்விப் பயனை எய்தும் பொறியிலாதார். ("ஈட்டிய ஒண்பொருளைக் காத்தலும் ஆங்கே கடுந்துன்பம் (நாலடி.280) "ஆகலின், 'பரிந்து ஓம்பி' என்றார். 'வேள்வி' ஆகுபெயர்.).

மணக்குடவர் உரை: விருந்தினரைப் போற்றி உபசரிக்க மாட்டாதார், வருந்தியுடம் பொன்றையும் ஓம்பிப் பொருளற்றோமென் றிரப்பர்.

வேள்வி = யாகம் என்பது சரியா?

மேற்காணும் அனைத்து உரைகளையும் நோக்கினால், வள்ளுவர் விருந்தோம்புதலை வேள்வியுடன் ஒப்பிட்டுப் பாடியிருப்பது விளங்கும். இவற்றில் வரும் வேள்வி என்னும் சொல்லுக்கு அகராதிப் பொருளான யாகம் என்பதைப் பொருளாகக் கொண்டே உரையாசிரியர்கள் விளக்கம் கூறியிருக்கின்றனர். இவ் விளக்கங்கள் சரியா தவறா என்பதைக் கீழே விரிவாகக் காணாலாம்.

வேள்வி என்பதற்கு யாகம் என்ற பொருள் இப்பாடல்களில் பொருந்துமா என்றால் ஒருபோதும் இல்லை எனலாம். காரணம், இப் பாடல்களில் விருந்தோம்பலானது வேள்வியுடன் ஒப்பிட்டுக் கூறப்பட்டிருப்பதால், விருந்தோம்புதலும் யாகம் செய்தலும் ஒப்புமை கொண்ட செயல்கள் என்ற பொருள் தோன்றுகின்றது அல்லவா?. ஆனால் உண்மை என்ன?. விருந்தோம்புதலும் யாகம் செய்தலும் முற்றிலும் மாறுபட்டவை ஆகும். இது எவ்வாறெனின்,

விருந்தோம்பலில், வந்த விருந்தினர்களை இன்முகத்துடன் வரவேற்று, அவர்களது தாகம் தீர நன்நீர் கொடுத்துப் பருகச் செய்வர். பின்னர் அவர்களது வயிறார உணவிட்டு அவரது இன்முகம் கண்டு மகிழ்ந்து அவர்களை மனமகிழ்வுடன் வழியனுப்பி வைப்பர். ஆனால், யாகத்தில்...?. தேவர்களின் ஆசைகளையும் குறைபாடுகளையும் நிறைவேற்றுவதாகக் கருதிக்கொண்டு, பூமியில் செய்யப்படுவதாகிய யாகத்தில்... நடப்பது என்ன?. குண்டத்தில் தீயை மூட்டி அதனைத் தொடர்ந்து வளர்ப்பதற்காக நெய், விறகு போன்ற எரிபொருட்களை இட்டு அதன்மேல் பலவகையான உணவுப் பொருட்களை பலிபொருட்களாக வரிசையாகக் கொட்டி அனைத்தையும் எரித்துப் புகையாக்கி, வான மண்டலத்தையே புகை மண்டலமாக்கி..... அப்பப்பா !. விருந்தோம்பலுக்கும் யாகத்திற்கும் இடையில்தான் எவ்வளவு வேறுபாடுகள்! முரண்பாடுகள்!!. கீழே பாருங்கள்.

விருந்தோம்பலில் விருந்தினரின் பசித்தீயானது உணவுகொடுத்ததும் அணைந்துவிடும். ஆனால் யாகத்தீயானது பொருட்களைக் கொடுக்கக்கொடுக்க அணையாமல் வளர்ந்துகொண்டே இருக்கும்.

விருந்தோம்பலில் உணவினை உண்டவர்கள் மட்டுமின்றி கொடுத்தவர்களின் உடலும் மனமும் குளிர்கிறது. ஆனால் யாகத்தில் யாகம் செய்பவர்களின் உடலும் மனமும் தீயின் அருகிலேயே இருப்பதால் குளிர்வதில்லை. அத்துடன் சுற்றுப்புறமும் காற்றும் கூட வெகுவாக சூடேறிவிடுகிறது.

விருந்தோம்பலில் எந்தவொரு எரிபொருளும் உணவுப்பொருளும் வீணடிக்கப்படுவதில்லை. ஆனால், யாகத்தில் எல்லா எரிபொருட்களும் உணவுப் பொருட்களும் எரிக்கப்பட்டு வீணடிக்கப்படுகிறது.

" இல்லை இல்லை. யாகத்தில் எந்தவொரு உணவுப் பொருளும் வீணடிக்கப்படுவதில்லை. மாறாக, தேவர்கள் அவற்றைப் புகை வடிவில் ஏற்றுக் கொள்கிறார்கள் " என்று சிலர் கூறுகின்றனர். இதை அவர்களது மூட நம்பிக்கை என்று கூறாமல் என்னவென்று சொல்வது?. இவர்களின் கூற்று உண்மையென்றால், " நாம் எல்லோருமே நாள்தோறும் தேவர்களுக்காக யாகம் செய்பவர்கள் தான் !. அன்றாடம் நாம் உருவாக்கும் வாகனப் புகை, தொழிற்சாலைப் புகை, இன்னபிற புகை யாவும் தேவர்களுக்குத் தான் !!. மாதம் மும்மாரி மண்ணில் மழை பெய்து மக்கள் மகிழ்வுடன் இருப்பது இப் புகையினை ஏற்றுக்கொண்டு அவர்கள் மகிழ்வதால் தான் !!!. " என்றெல்லாம் நகைச்சுவையாகக் கூறலாம் தானே?. ஆனால், இவற்றில் எதுவுமே உண்மையில்லை என்று நாம் அனைவரும் நன்கு அறிவோம். இப்படிப்பட்ட மூட நம்பிக்கைகள் இன்றல்ல நேற்றல்ல, பன்னெடுங்காலமாகவே சமுதாயத்தில் இருந்துவந்துள்ளன. இவற்றை உண்மையென்று நம்பத் துவங்கியதன் விளைவு, யாகத்தில் உணவுப் பொருட்களுடன் பல உயிர்களும் பலியிடப்பட்டன. சங்க காலத்தில் ஏதுமறியாத பல வாயில்லாப் பிராணிகள் யாக குண்டத்தில் பலி இடப்பட்டிருக்கின்றன. யாக குண்டங்களில் எருதுகள் பலியிடப்படுவதைக் கீழ்க்காணும் பட்டினப்பாலைப் பாடல் கூறுவதைக் காணுங்கள்.

......அறம் நிலைஇய அகன் அட்டில்
சோறு வாக்கிய கொழும் கஞ்சி
யாறு போல பரந்து ஒழுகி
ஏறு பொர சேறாகி
தேர் ஓட துகள் கெழுமி
நீறு ஆடிய களிறு போல
வேறுபட்ட வினை ஓவத்து
வெண் கோயில் மாசு ஊட்டும்
தண் கேணி தகை முற்றத்து
பகட்டு எருத்தின் பல சாலை
தவ பள்ளி தாழ் காவின்
அவிர் சடை முனிவர் அங்கி வேட்கும்
ஆவுதி நறும் புகை முனைஇ.....

பொருள்: .... அறச்சாலைகளில் உணவாக அளிக்கப்பட்டு சிந்திய சோற்றுக்கஞ்சியானது ஆறுபோல எங்கும் பரந்து பின்னர் வெயிலில் காய்ந்து, மாட்டு வண்டிகளும் தேர்களும் ஏறிச்செல்ல வெண்புழுதியாகி மண்ணில் கிடக்க, அப் புழுதியைத் தன்மேல் வாரிவீசியும், அப் புழுதியின்மேல் புரண்டும் எழுந்த கரிய ஆண்யானையின் உடலெங்கும் வெண்ணிறமும் ஆங்காங்கே சிறிது கருநிறமும் ஒரு வரையப்பட்ட ஓவியம் போலத் தோன்ற, அந்த யானையின் உடலைப் போல வெண்ணிறமாகத் தோன்றிய கோயிலை மாசுபடுத்தும் விதமாக, கிணற்றினை உடைய அக் கோவிலின் முற்றத்தில் வெட்டப்பட்ட எருமைத்தலைகளையும் பெரிய யாகசாலைகளையும் உடைய அந்தச் சோலையிலே சடையுடை முனிவர்கள் யாகத்தில் தீ வளர்த்து எரித்த ஆவுதியின் புகையானது பெரிதாய்த் தோன்றிப் பரவவும், அதை வெறுத்து......

இன்றளவும் கூட பல யாகங்களில் உயிர்ப்பலி கொடுக்கப்படுவதாகக் கேள்வி. கொடுமை நிறைந்த இதுபோன்ற மூடநம்பிக்கைகள் என்று ஒழியுமோ தெரியவில்லை.

இதுவரை கண்டவற்றில் இருந்து, தேவர்கள் என்போரைக் கற்பனைசெய்துகொண்டு, அவர்களைத் திருப்திசெய்தால் பல ஆற்றல்களையும் நன்மைகளையும் பெறலாம் என்று நினைத்து, பல அப்பாவி உயிர்களைப் பலியிடுவதுடன் உணவுப் பொருட்களையும் எரிபொருட்களையும் எரித்து வீணாக்கி சுற்றுப்புறச் சூழலையும் மாசுபடுத்துவதான இந்த யாகம் என்ற இழிவான செயலை விருந்தோம்புதலாகிய மிகச் சிறந்த செயலுடன் ஒருபோதும் ஒப்பிடமுடியாது என்பதைத் தெள்ளிதின் விளங்கிக் கொள்ளலாம். எனவே மேற்காணும் பாடல்களில் வரும் வேள்வி என்ற சொல்லுக்கு யாகம் என்ற பொருள் தவறானது என்பது முடிபாகிறது. என்றால், வேள்வி என்பதன் பொருள்தான் என்ன?. இதைப் பற்றிக் கீழே காணலாம்.

வேள்வி - புதிய பொருளும் காரணமும்:

மேற்கண்ட குறள்களில் வரும் வேள்வி என்ற சொல் குறிக்கும் புதிய பொருள் : பசியாற்றுதல்.

பசியாற்றுதல் என்பது,

தனது பசியாற்றுதல் என்ற வகையில் உண்ணுதலையும்
பிறரது பசியாற்றுதல் என்ற வகையில் உணவளித்தலையும் ஊட்டுதலையும் குறிக்கும்.

வேள்வி என்னும் சொல்லுக்கு இப் புதிய பொருட்கள் தோன்றியதன் அடிப்படை ' வேள் ' என்ற வேர் ஆகும்.
வேள் என்பது வேண்டுதல் என்ற வினைவடிவில் விரும்புதலையும் தேவைப்படுதலையும் குறிப்பதாகும்.
வேள் என்பதிலிருந்து தோன்றுவதான வேட்கை என்ற பெயர்ச்சொல் பசி, தாகம் போன்ற அடிப்படை உடல் தேவைகளையும் இதர தேவைகளையும் குறிக்க பயன்படுத்தப்படுகிறது. இனி,

பசி, தாகம் போன்ற தேவைகளைத் தீர்த்துக்கொள்ளும்பொருட்டு செய்யப்படும் உண்ணுதலாகிய தொழிலையும் ஊட்டுதலாகிய தொழிலையும் குறிக்க ' வேள்வி ' என்ற சொல்லைப் பயன்படுத்தினர் எனலாம். சுருக்கமாக,

வேள் ----> வே(ள்)ட்கை -----> வேள்வி.

திருக்குறளில் வேட்டல்:

இனி, திருக்குறளில் வேட்டல் என்ற சொல் பற்றிக் காணலாம்.

அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத்து உண்ணாமை நன்று - குறள் 259

கலைஞர் உரை: நெய் போன்ற பொருள்களைத் தீயிலிட்டு ஆயிரம் வேள்விகளை நடத்துவதைவிட உண்பதற்காக ஓர் உயிரைப் போக்காமலிருப்பது நல்லது.

மு.வ உரை: நெய் முதலியப் பொருள்களைத் தீயில் சொரிந்து ஆயிரம் வேள்விகள் செய்தலை விட ஒன்றன் உயிரைக்கொன்று உடம்பைத் தின்னாதிருத்தல் நல்லது.

சாலமன் பாப்பையா உரை: (மந்திரம் சொல்லித் தேவர்களுக்கு இடும் உணவாகிய) அவிகளைத் தீயில் போட்டு ஆயிரம் வேள்வி செய்வதைக் காட்டிலும் ஓர் உயிரைப் போக்கி அதன் உடம்பை உண்ணாமல் இருப்பது நல்லது.

பரிமேலழகர் உரை: அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின் - தீயின்கண் நெய் முதலிய அவிகளைச் சொரிந்து ஆயிரம் வேள்வி வேட்டலினும், ஒன்றன்உயிர் செகுத்து உண்ணாமை நன்று - ஒரு விலங்கின் உயிரைப் போக்கி அது நின்ற ஊனை உண்ணாமை நன்று. (அவ்வேள்விகளான் வரும் பயனினும் இவ்விரதத்தான் வரும் பயனே பெரிது என்பதாம்.).

மணக்குடவர் உரை: நெய் முதலான அவியைச் சொரிந்து ஆயிரம் வேள்வி வேட்டலினும் ஒன்றினுயிரை நீக்கி அதனுடம்பை யுண்ணாமை நன்று.

வேட்டல் = யாகம் என்பது சரியா?

மேற்காணும் உரைகளை நோக்கினால், அவை அனைத்திலும் வேட்டல் என்பதற்கு யாகம் என்ற பொருளே கொள்ளப்பட்டுள்ளதை அறியலாம். ஆனால், இப்பொருள் இப்பாடலில் பொருந்துமா என்றால் இல்லை. இதைப்பற்றிக் கீழே விரிவாகக் காணலாம்.

யாகம் என்பது என்னவென்றும் அது ஒரு மூடத்தனமான இழிவான செயலென்றும் மேலே கண்டோம். அதனில் எத்தனை எத்தனை உயிர்கள் பலியிடப்படுகின்றன என்றும் மேலே கண்டோம். அன்புசெய்தலையும் அறம் புரிவதனையும் அனைத்து உயிர்களுக்கும் வலியுறுத்தும் கொள்கையினராகிய வள்ளுவப் பெருந்தகை, யாகம் போன்ற கொடிய செயல்களைப் பற்றித் தம் பாடல்களில் பேசுவாரா?. ஒருபோதும் பேசமாட்டார். யாகத்தைப் போலவே உயிர்களைக் கொல்லும் கொடிய செயல்களான சதி அதாவது உடன்கட்டை ஏறுதல், மரணதண்டனை விதித்தல் போன்றவை வள்ளுவரின் காலத்திலும் இருந்திருக்கக்கூடும். ஆனால், அதைப்பற்றி ஒருபாடலில் கூட அவர் குறிப்பிடவில்லை என்பதை இங்கே நாம் நினைத்துப் பார்க்கவேண்டும். இதிலிருந்து உயிர்க்கொலை புரியும் கொடிய செயலான யாகத்தைப் பற்றி இப் பாடல் பேசவில்லை என்பது தெளிவாகிறது.

வள்ளுவர் எந்த ஒரு குறளிலும் மதம் தொடர்பான கருத்துக்களைக் கூறவில்லை என்று முன்னர் பல கட்டுரைகளில் கண்டுள்ளோம். அவற்றில் தேவர்கள் என்னும் கற்பனைப் படைப்புக்களைப் பற்றி எந்தவொரு பாடலிலும் அவர் குறிப்பிடவில்லை என்னும் கருத்தானது பல ஆதாரங்களுடன் ஏற்கெனவே உறுதிசெய்யப்பட்டுள்ளது. தேவர்களே கற்பனை என்றிருக்கும்போது அவர்களுக்காக யாகம் நடத்துவதென்பது அதைவிடக் கற்பனையான ஒன்றென்று சொல்லவும் வேண்டுமோ?. எனவே, இப்பாடலில் வரும் வேட்டல் என்பது ஒருபோதும் யாகத்தைக் குறிக்காது என்பது தெளிவு. என்றால், இப்பாடலில் வரும் வேட்டல் என்பது எதைக் குறிக்கும் என்பதைப் பற்றிக் காணலாம்.

வேட்டல் என்பது என்ன?

இப்பாடலில் வரும் வேட்டல் என்பது ' பசியாற்றுதல் ' ஆகிய அன்னதானத்தினைக் குறிப்பதாகும்.

இப் பாடலில் வரும் 'அவி' என்பது 'அவித்த உணவாகிய சோற்றினைக்' குறிப்பதாகும். இப் புதிய பொருட்களின்படி, இக்குறளுக்கான புதிய விளக்கம்:

' ஆயிரம் பேருக்கு உணவினை வழங்கி அவர்களின் பசியாற்றுவதைக் காட்டிலும் ஒரேயொரு உயிரைக் கொன்று உண்ணாதிருப்பது சாலச் சிறந்த செயலே. "

நிறுவுதல்:

வேட்டல் என்பது எவ்வாறு பசியாற்றுதலைக் குறிக்கும் என்று காணலாம்.

நாம் மேலே கண்டபடி, வேட்டல் என்ற சொல்லும் வேள் என்னும் வேரை அடிப்படையாகக் கொண்டு பிறந்ததே ஆகும். எப்படி வேள்வி என்பது பசியாற்றுதலைக் குறிக்குமோ அவ்வாறே வேட்டல் என்பதும் பசியாற்றுதலைக் குறிப்பதேயாம்.

வேள் + வி = வேள்வி. 
வேள் + தல் = வேட்டல்.

ஒருவரது பசியாற்ற வேண்டுமெனில், அவருக்கு நல்ல உணவினை வழங்கவேண்டும். அந்த உணவைப்பெற பணம் வேண்டும். ஆக, ஒரே ஒருவருக்கு உணவுவழங்கவே பணம் தேவைப்படும் நிலையில், ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்வதென்றால் அது சாதாரண செயலன்று. பெரும் நிலக்கிழார்கள், மன்னர்கள், வணிகர்கள் போன்ற பணம் படைத்தவர்களால் தான் இதைச்செய்ய முடியும் இல்லையா?. பணம் மட்டுமின்றி எவ்வளவு உழைப்பும் மேலாண்மையும் இதற்குத் தேவைப்படும் என்பது நாம் அறிந்த ஒன்றேயாகும். இப்படி பலரது பசியினைப் போக்கினால் என்ன கிடைக்கும்?. எதைப்பெறுவதற்காக இந்தக் கடினமான செயலைச் செய்யவேண்டும்?. இக் கேள்விகளுக்கான ஒரே விடை: உள்ளத் தூய்மை.

தம் கைப்பொருள்கொண்டு செலவழித்து உணவுவழங்கி பலரது பசியினைப் போக்கி அவரை மகிழ்விக்கும்போது, அன்னதானம் செய்வோரின் மனம் குளிர்ந்து அமைதி பெறுவதுடன் தூய்மையடையத் துவங்குகிறது. பொருட்களின் மேல் அவருக்கிருக்கும் பற்று கொஞ்சம் கொஞ்சமாக விலகி அவர் உள்ளத்தால் சிறந்த துறவியாகிறார். தன்னிடத்தில் இருக்கும் எதையும் தனக்கெனக் கொள்ளாமல் பிறருக்கே என்றெண்ணும் பெருந்தகை ஆகிறார். ஆனால், இதை அடைவதற்கு ஒரு தடையும் உண்டு. அதுதான் புலால் உண்ணுதல். புலால் என்பது ஒரு உயிரைக்கொன்று அதனின் இருந்து பிரிந்துவந்த ஊன் ஆகும். உயிர்களின் பசியாற்றி அவர்களை மகிழ்வுடன் வாழவைப்பதையே கொள்கையாகக் கொண்டொழுகும் ஒருவர் வேறொரு உயிரினைக் கொன்று அதை உண்டுவந்தால், அது கொள்கைமுரண் என்பது மட்டுமின்றி அவரது மனம் ஒருபோதும் அமைதியடையாது; தூய்மையும் ஆகாது. அதனால் தான் இக் குறளில் வள்ளுவர் இவ்வாறு கூறுகிறார்: ' ஆயிரம் பேருக்கு உணவு வழங்கி அவரது பசியாற்றுவதை விட ஒரே ஒரு உயிரைக் கொன்று உண்ணாதிருப்பது சாலச் சிறந்தே செயலே '.

இதிலிருந்து நாம் அறிந்துகொள்ள வேண்டிய இன்னொரு கருத்தும் உள்ளது. நமது மனம் அமைதியும் தூய்மையும் அடைய வேண்டுமெனில், ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்யவேண்டிய அவசியமில்லை. அது எல்லோராலும் முடியக்கூடியதுமல்ல; எந்தவொரு உயிரையும் கொன்று தின்னாதிருந்தால் போதும்; இது எல்லோராலும் முடியக்கூடியதே; அமைதியும் தூய்மையும் தானே மனதில் குடிகொண்டுவிடும்.

முடிவுரை:

துறவறவியலில் புலால்மறுத்தல் அதிகாரத்தில் வரும் இப்பாடல் முற்றுந்துறந்த துறவியருக்கானது என்று சிலர் கருதுகின்றனர். இது முற்றிலும் தவறானதாகும். மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை என்று அனைத்தையும் துறந்தவனே துறவி. இந்நிலையில் ஒரு துறவி ஏன் அன்னதானம் செய்யவேண்டும்?. ஒரே ஒருவருக்கு அன்னதானம் செய்யவே அதிக பணம் தேவைப்படும்போது, ஆயிரக்கணக்கான பேருக்கு உணவளிக்க எந்தத் துறவியால் முடியும்? அப்படி முடிந்தால் அவன் துறவியே அல்ல. ஆக, இப் பாடல் துறவியருக்கானதல்ல; பணம் படைத்த இல்லறத்தாருக்கு உரியதே என்பது தெளிவாகிறது.
-----------------------------------------------------------------

சனி, 10 செப்டம்பர், 2016

திருக்குறளில் நிணமும் புலால் மறுப்பும்

முன்னுரை:

திருவள்ளுவர் என்னதான் பாவம் செய்தாரோ தெரியவில்லை, எல்லோரும் அவரைத் தம் விருப்பம் போல் வம்புக்கிழுக்கத் துவங்கிவிட்டனர். தமிழராய்ப் பிறந்ததொன்று தான் அவர் செய்த மிகப்பெரிய பாவம். அவர் மட்டும் இந்திக்காரராகவோ மலையாளியாகவோ தெலுங்கராகவோ கன்னடராகவோ இன்னபிற மொழியினராகவோ பிறந்திருந்தால் அவருக்கு இந்தநிலை வந்திருக்காது என்பது மட்டும் உறுதி. கொல்லாமையைப் போற்றும் கொள்கையினராகிய வள்ளுவரை சமணர் என்று தம் பக்கம் இழுப்போர் சிலர்; சைவர் என்று இழுப்போர் சிலர்; வைணவர் என்று இழுப்போர் ஒருசாரர். இப்படி திருவள்ளுவர் எல்லோராலும் கொண்டாடப்பட்டு வந்தாலும் விலங்குகளின் ஊன் உண்ணும் அசைவர்களும் தற்போது தம் பக்கமாக அவரை இழுக்கத் துவங்கி விட்டார்கள். திருவள்ளுவர் ஊன் உண்ணுவதை ஆதரித்தார் என்று ஒரு முட்டாள்தனமான கேவலமான கருத்தைக் கூறி அவரைத் தம் பக்கம் இழுக்கப் பார்க்கின்றனர். இதற்கு ஆதாரமாக அவர்கள் கீழ்க்காணும் குறளைக் காட்டுகின்றனர்.

நிணந்தீயில் இட்டன்ன நெஞ்சினார்க்கு உண்டோ
புணர்ந்தூடி நிற்பேம் எனல் - 1260

இக் குறளில் கூறப்பட்டிருக்கும் உண்மையான கருத்தை அறிந்துகொள்ள முற்படாமல் தான்தோன்றித் தனமாக அவர்கள் பொருள்கொண்டு வள்ளுவரின் மாட்சியினைச் சிதைக்கவும் தயாராகிவிட்டனர். அவர்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் தான் இக் கட்டுரை எழுதப்படுகிறது. முதலில், இக் குறளுக்குத் தற்போதைய உரை ஆசிரியர்கள் என்ன பொருள் கூறியிருக்கிறார்கள் என்பதைப் பார்க்கலாம்.

தற்போதைய பொருள் விளக்கங்கள்:

கலைஞர் உரை: நெருப்பிலிட்ட கொழுப்பைப் போல் உருகிடும் நெஞ்சம் உடையவர்கள், கூடிக் களித்தபின் ஊடல் கொண்டு அதில் உறுதியாக இருக்க முடியுமா?.

மு.வ உரை: கொழுப்பைத் தீயில் இட்டால் போன்ற உருகும் நெஞ்சுடைய என்னைப் போன்றவர்க்கு, இசைந்து ஊடி நிற்போம் என்று ஊடும் தன்மை உண்டோ?.

சாலமன் பாப்பையா உரை: கொழுப்பைத் தீயிலே போட்டால் அது உருகுவது போலத் தம் காதலரைக் கண்டால் மன அடக்கம் இன்றி உருகும் நெஞ்சினையுடைய பெண்களுக்கு, அவர் கூடவும், நாம் ஊடவும் பின்பு ஏதும் தெரியாத நிலையிலேயே நிற்போம் என்ற நிலை உண்டாகுமோ?.

பரிமேலழகர் உரை: (இதுவும் அது.) நிணம் தீயில் இட்டன்ன நெஞ்சினார்க்கு - நிணத்தைத் தீயின்கண்ணே யிட்டால் அஃது உருகுமாறு போலத் தம் காதலரைக் கண்டால் நிறையழிந்து உருகும் நெஞ்சினையுடைய மகளிர்க்கு; புணர்ந்து ஊடி நிற்பேம் எனல் உண்டோ - அவர் புணர யாம் ஊடிப் பின்பு உணராது அந்நிலையே நிற்கக்கடவேம் என்று கருதுதல் உண்டாகுமோ? ஆகாது. (புணர்தல் - ஈண்டு மிக நணுகுதல்; எதிர்ப்படுதலுமாம். 'புணர' என்பது 'புணர்ந்து' எனத் திரிந்து நின்றது. 'யான் அத்தன்மையேன் ஆகலின் எனக்கு அஃது இல்லையாயிற்று', என்பதாம்.).

மணக்குடவர் உரை: தீயின்கண்ணே நிணத்தையிட்டாற்போல, உருகும் நெஞ்சினை யுடையார்க்குக் காதலரை யெதிர்ப்பட்டு வந்து ஊடி நிற்போமென்று நினைத்தல் உளதாகுமோ?.

உரைத்தவறுகள்:

மேற்கண்ட உரைகள் அனைத்திலும் நிணம் என்பதற்கு மாமிசத்தில் இருக்கும் கொழுப்பு என்றே பொருள்கொண்டு உரை கூறி இருக்கின்றனர். இதனை அடிப்படையாகக் கொண்டே மாமிச உணவுண்போர் வள்ளுவரைத் தம் பக்கம் இழுக்கப் பார்க்கின்றனர். ஆனால் இது மிக மிகத் தவறான கருத்தாகும். காரணம், நிணம் என்பதற்கு இப்பாடலில் கொழுப்பு என்ற பொருள் பொருந்தவே பொருந்தாது. இதைப் பற்றிக் கீழே விரிவாகக் காணலாம்.

இப் பாடலில் நிணம், தீ, புணர்ச்சி, ஊடல் ஆகியவை பேசப்படுகின்றன. இவற்றில் தீயானது புணர்ச்சியுடனும், நிணமானது ஊடலுடனும் உவமையாகக் கூறப்பட்டுள்ளது. நிணமானது தீ தீண்டும்வரையில்தான் கெட்டியாய் இருக்கும். அதைப்போல, தலைவியின் ஊடலும் தலைவன் அவளைத் தீண்டும்வரையில்தான் உறுதியுடன் இருக்கும். தலைவன்  தீண்டியதும் தலைவியும் தன் ஊடலின் உறுதிகுலைந்து உருகி முழுவதுமாய்க் கரைந்து கொண்டவனின் விருப்பத்திற்கொப்ப தன்னை மாற்றிக்கொள்வாள். இப் பாடலில் தலைவியின் ஊடலை நிணத்துடன் உவமையாக்கிக் கூறி இருப்பதில் இருந்து, நிணமும் ஊடலைப் போலவே முதலில் உறுதியுடன் இருந்து பின்னர் தீ தீண்டியதும் உருகி முழுதுமாய்க் கரைந்து கொள்கலத்தின் வடிவத்திற்கொப்ப தன்னை மாற்றிக்கொள்ளவேண்டும் என்பது விளங்கக் கூடிய ஒன்றேயாகும். ஊடலுக்கும் நிணத்துக்கும் இத்தகைய ஒத்த தன்மைகள் இருப்பதால்தான் வள்ளுவர் இப் பாடலில் இரண்டையும் ஒப்பிட்டுக் கூறி இருக்கிறார்.

இந்நிலையில், நிணம் என்னும் சொல்லுக்கு இப்பாடலில் மாமிசக் கொழுப்பு என்ற பொருள் பொருந்துமா என்றால் பொருந்தாது. காரணம், மாமிசக் கொழுப்பானது முதலில் கெட்டியாய் இருந்தாலும் அதை உருக்க அதிக வெப்பம் வேண்டும். கொழுப்பை நீரிலிட்டு நெடுநேரம் அதிக வெப்பத்தில் வைத்தால் அது உருகிக் கரைந்து எண்ணை போல நீரின்மேல் மிதக்கும். இப்பாடலில் கூறப்பட்டுள்ள உவமையின் சிறப்புப் பண்பே உருகும் காலம் தான். அதாவது, காதலன் தொட்டவுடன் காதலியின் ஊடல் கரைந்துபோவதைப் போல தீ தொட்டவுடன் நிணம் கரையும் தன்மையது என்னும் நிலையில் ஊடலுக்கு உவமையாக, கரைவதற்கு மிகமிக அதிக நேரம் எடுக்கின்ற மாமிசக் கொழுப்பினைக் கூறுவது சற்றும் பொருத்தமானதல்ல என்பதைத் தெள்ளிதின் விளங்கிக் கொள்ளலாம். 

இதிலிருந்து, இப் பாடலில் வரும் நிணம் என்பதற்கு மாமிசக் கொழுப்பு என்பது பொருளாக வராது என்பது உறுதியாகிறது. என்றால், இச் சொல்லின் புதிய பொருள் என்னவென்று கீழே காணலாம்.

நிணம் - புதிய பொருள் என்ன?

நிணம் என்னும் சொல் இப்பாடலில் குறிக்கும் புதிய பொருள்கள் ' வெண்ணெய் ' மற்றும் ' நெய் ' ஆகும்.

பல இடங்களில் வெண்ணெய் என்ற பொருளிலும் சில இடங்களில் நெய் என்ற பொருளிலும் பயன்படுத்தப் பட்டுள்ளது.

நிறுவுதல்:

நிணம் என்பது எவ்வாறு வெண்ணையைக் குறிக்கும் என்று இங்கே ஆதாரங்களுடன் காணலாம்.

நிணம் என்பதற்கு தற்கால அகராதிகளும் வெண்ணெய் என்ற பொருளைக் கூறுகின்றன. ஆனால் நேரடியாகக் கூறாமல் மறைமுகமாகக் கூறுகின்றன. இது எவ்வாறெனின்,

இழுது என்பதற்கு நிணம் என்ற பொருளையும் வெண்ணெய், நெய் போன்ற பொருட்களையும் அகராதி காட்டுகிறது.

 இழுது iḻutu , n. [M. viḻutu.] 1. Butter; வெண்ணெய். இழுதார்மென் பள்ளிமேல் (சீவக. 1576). 2. Ghee; நெய். இழுதமை யெரிசுடர் விளக்கு (சீவக. 2630). 3. Fat, grease; நிணம். இழுதுடை யினமீன் (கம்பரா. வருண. 29). 4. Honey; தேன். இழுதார் . . . பூ (சீவக. 3137). 5. Thick semi-liquid substance; குழம்பு. சேறிழுது செய்யினுள் (பெரியபு. திருநாட். 12).

மேலே கண்ட அகராதியின்படி,

இழுது = நிணம்.
இழுது = வெண்ணெய், நெய்.

எனவே நிணம் = வெண்ணெய், நெய் என்றும் பொருள் கொள்ளலாம் அன்றோ?

அப்படியென்றால், ஒரு சொல் குறிக்கும் பல பொருட்களுக்கிடையிலும் இப்படி ஒரு சமன்பாட்டினை உருவாக்கலாமா என்று சிலர் கேட்கலாம். இல்லை. அவ்வாறு செய்யக் கூடாது. நிணம் என்பது வெண்ணெய் / நெய்யைக் குறிக்கவும் செய்யும் என்பதை நிறுவுவதற்கு வேறு சில ஆதாரங்களும் கீழே தரப்படுகின்றன.

அன்னாய் வாழி .........................
........................................உவக்காண்
நிணம் பொதி வழுக்கில் தோன்றும்
மழை தலைவைத்து அவர் மணி நெடும் குன்றே - ஐங்கு. 207

பொருள்: அன்னையே வாழ்க!.......அங்கே பார். அவரது கரிய மலையின் உச்சியில் படிந்திருக்கும் வெண்ணிற மேகங்கள் வெண்ணெயால் செய்த பெரிய பெரிய உருண்டைகளைப்போலத் தோன்றுவதைக் காணாய்.

இப்பாடலில் வரும் வழுக்கு என்பது உருண்டையினைக் குறிக்கும். இது வழுக்கட்டை என்று தற்போது பயன்படுத்தப் படுகிறது. இப் பாடலில் நிணம் என்பதற்கு மாமிசக் கொழுப்பு என்ற பொருள் பொருந்துமா என்றால் பொருந்தாது. காரணம், மாமிசத்தின் கொழுப்புப் பகுதிகளை வெட்டியெடுத்து ஒன்றுசேர்த்துப் பெரிய பெரிய உருண்டைகளாகச் செய்ய முடியாது. 

........வால் நிணம் உருக்கிய வாஅல் வெண் சோறு
புகர் அரை தேக்கின் அகல் இலை மாந்தும் - அகம். 107

பொருள்: வெண்ணெயை உருக்கிச் சேர்த்த வெண்ணிற சோற்றினை தேக்குமரத்தின் அகன்ற இலைகளில் வைத்து உண்கின்ற....

இப்பாடலில் வரும் நிணம் என்பதற்கு மாமிசக் கொழுப்பு என்ற பொருள் பொருந்துமா என்றால் பொருந்தாது. காரணம், மாமிசக் கொழுப்பினை உருக்கி யாரும் சோற்றில் பிசைந்து சாப்பிட மாட்டார்கள். ஆனால், வெண்ணையை உருக்கி நெய்யாக்கி சோற்றில் பிசைந்து உண்பார்கள். காரணம், அது உணவுக்கு நல்ல வாசனையைத் தருவதுடன் சுவையும் தரும். மேலும், வெண்ணையை உருக்கிச் சோற்றுடன் சேர்ப்பது எளிதான செயலுமாகும். சிலநேரங்களில் வெண்ணையை சூடான சோற்றில் போட்டு பிசைந்தாலே போதும். அந்தச் சூட்டிலேயே வெண்ணெய் உருகி நன்கு கலந்துவிடும். வெண்ணையை உருக்கிச் சோற்றில் பிசைந்து சாப்பிடுவது பற்றிக் கூறும் இன்னொரு பாடல் கீழே:

.....மலர திறந்த வாயில் பலர் உண
பைம் நிணம் ஒழுகிய நெய் மலி அடிசில்     - குறி. 204

இப்பாடலில் நிணமானது நெய்யுடன் நேரடியாகத் தொடர்புறுத்திப் பேசப்படுகிறது. அதாவது, பசிய நிணமாகிய வெண்ணெயினை உருக்கி நெய்யாக்கித் தாராளமாகக் கலந்து செய்யப்பட்ட உணவு என்பது இப் பாடலின் இறுதிவரியின் பொருளாகும்.

.........நிணம் தின்று செருக்கிய
நெருப்பு தலை நெடு வேல் - புறம். 200

பொருள்: நெய் பூசி செருக்குடன் திகழ்கின்ற தீப்போலும் கூர்மையுடைய நீண்ட வேல்.........

வேல்கள் துருப்பிடித்தலைத் தவிர்க்க, அவற்றின்மேல் நெய் முதலானவற்றைப் பூசுவது வழக்கம். இப்பாடலில், நிணம் என்பது நெய் என்ற பொருளில் பயன்படுத்தப் பட்டுள்ளது. இப்படி நெய் பூசப்பட்டு பளபளப்புடன் திகழ்கின்ற கூரிய வேலுடன் பெண்ணின் மையுண்ட இமைகளையும் கூரிய கடைக்கண்ணையும் ஒப்பிட்டுக் கூறும் சிந்தாமணிப் பாடலொன்று கீழே தரப்பட்டுள்ளது.

நிணம் கொள் வை நுதி வேல் நெடும் கண்ணினாள் - சிந்தா.344


மேலே கண்ட சான்றுகளில் இருந்து நிணம் என்பதற்கு அகராதிப் பொருட்களான கொழுப்பு, மாமிசம், ஊன்நீர் நீங்கலாக வெண்ணெய், நெய் போன்ற பொருட்களும் உண்டென்று அறியலாம்.

குறளுக்கான புதிய விளக்கம்:

இனி, இப் புதிய பொருட்களின்படி, இக் குறளுக்கான புதிய விளக்கம் என்னவென்று காணலாம்.

நிணந்தீயில் இட்டன்ன நெஞ்சினார்க்கு உண்டோ
புணர்ந்தூடி நிற்பேம் எனல் - 1260

திருந்திய விளக்கம்: தீயில் இட்ட வெண்ணெய் போன்ற உள்ளம் கொண்டவர்க்கு (தம் காதலனைப்) புணர்ந்தவிடத்து ஊடிநிற்க முடிவதுமுண்டோ?. (முடியாது).

வெண்ணெயானது தீ தீண்டும்வரையில் உறுதியாக இருக்கும். எடுத்துவைத்த பாத்திரத்தின் வடிவத்துடன் அதற்கு ஒரு தொடர்புமிராது. ஆனால், தீ தீண்டியதும் அது தன் உறுதியை இழந்து உருகி முற்றிலும் நீராகி கொண்ட பாத்திரத்தின் வடிவத்திற்கேற்ப தன்னை மாற்றிக்கொள்ளும். அதைப்போல, காதலியும் தனது காதலனுடன் ஊடல்கொண்டு மனதைக் கல்லாக்கிக் கொண்டு பேசாதிருக்கிறாள். இந்நிலையில் எதிர்பாராதவிதமாக காதலன் காதலியைத் தழுவவும், அப் புணர்ச்சி உண்டாக்கிய தீயில் அவளது கல்லாகிய மனம் உறுதியை இழந்து உருகி அவளது ஊடல் முற்றிலும் நீர்த்துப் போக, காதலனின் விருப்பத்திற்கேற்ப தன்னை மாற்றிக் கொள்கிறாள். இவ் இரண்டு நிகழ்ச்சிகளையும் ஒப்பிட்டு இக் குறளில் பாடுகிறார் வள்ளுவர்.

முடிவுரை:

நிணம் என்பதற்கு அகராதிகள் காட்டுகின்ற கொழுப்பு, மாமிசம் போன்ற பொருட்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு உரை எழுதியதால் ஏற்பட்ட விளைவே ' திருவள்ளுவர் புலால் உண்பதை மறுக்கவில்லை; மாறாக புலாலை நெருப்பில் வாட்டி உண்பதை சான்றாகக் காட்டி அதை உண்ணவும் ஆதரித்திருக்கிறார் ' என்பது போன்ற பல தவறான கற்பிதங்களுக்கு வழிவகுத்துவிட்டது.

வள்ளுவர் புலால் உண்பதை ஆதரித்து இந்தக் குறளில் மட்டுமல்ல எந்தக் குறளிலும் கூறவில்லை. இனியேனும் வள்ளுவர் மீது இதுபோன்ற தவறான குற்றச்சாட்டுகளை அடுக்காதிருப்பார்களாக !!!.
===================== தமிழ் வாழ்க!============