திங்கள், 12 டிசம்பர், 2016

திதலையும் தித்தியும்

முன்னுரை:

சங்கத்தமிழ்ப் புலவர்கள் இலக்கியங்களில் பயன்படுத்திய பல சொற்களுக்கு இன்றைய அகராதிகள் எப்படியெல்லாம் தவறான பொருட்களைக் கூறியிருக்கின்றன என்று ' தமிழ் அகராதிகளின் குற்றங்களும் குறைகளும் ' என்ற கட்டுரையில் மிக விரிவாகக் கண்டோம்.  அவ்வகையில் திதலை, தித்தி ஆகிய சங்கத் தமிழ்ச்சொற்கள் தமது பொருளில் எவ்வாறு மாற்றம் அடைந்துள்ளன என்பதனைப் பற்றி இக்கட்டுரையில் ஆதாரங்களுடன் விரிவாகக் காணலாம்.

திதலை, தித்தி - தற்போதைய அகராதிப் பொருட்கள்:
திதலை, தித்தி ஆகிய சொற்களுக்கு இற்றைத் தமிழ் அகராதிகள் காட்டும் பொருட்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

திதலை titalai , n. perh. sita. 1. cf. sidhma. Yellow spots on the skin, considered beautiful in women; தேமல். பொன்னுரை கடுக்குந் திதலையர் (திருமுரு. 145). 2. Pale complexion of women after confinement; ஈன்ற பெண்களுக் குள்ளவெளுப்புநிறம். ஈன்றவ டிதலைபோல் (கலித். 32).

தித்தி² titti , n. < தித்தி-. [K. sihi.] 1. Sweetness; தித்திப்பு. தித்திப்பனங்கட்டி. (W.) 2. cf. திற்றி. Light food; சிறுதீனி. (J.) 3. Date palm; பேரீந்து. (W.) 4. Pleasure; இன்பம். (அக. நி.) 5. cf. sidhman. Yellow spreading spots on the body; தேமல். கோதையூரலந் தித்தி (பதிற்றுப். 52, 17). 6. Common bottle-flower. See குரா. (யாழ். அக.), n. < தித்தி onom. 1. (Mus.) Two syllables sung to a tune, signifying time- measure; தாளச்சதி. தித்தி யறுத்தும் (திருப்பு. 417). 2. Monkey; குரங்கு. (அக. நி.) n. < dṛti. [T. K. M. Tu. titti.] 1. Bellows; துருத்தி. வாயுவேற்றித் தித்திவாய்ச் செம்மில் (யசோதர. 4, 12). 2. Purse, leather bag; தோற்பை. Loc. 3. A kind of flute or pipe; ஒரு வகை வாத்தியம். தித்திசிறு முகவீணை (குற்றா. தல. தருமசாமி. 54). n. perh. dīpti. cf. தித்தியம். A sacrificial pit; வேள்விக்குண்டம். (W.)

பொருள் பொருந்தா இடங்கள்:

முதலில் திதலை என்ற சொல்லை மட்டும் தனியே எடுத்துக்கொண்டு, தேமல் என்ற அகராதிப் பொருள் அதற்குப் பொருந்துமா என்று பார்ப்போம். பொதுவாக, தேமல் என்பது ஒருவகை தோல்நோயே ஆகும். தேமல் என்பது வெள்ளை நிறத்தில் மட்டுமின்றி வேறு நிறத்திலும் தோன்றும். இதில் பலவகைகள் உண்டென்றாலும் அனைத்துமே நோயினால் உருவாவதே. இது உடலில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் என்றில்லாமல் எந்த இடத்தில் வேண்டுமானாலும் தோன்றலாம். எந்தவகைத் தேமல் ஆனாலும் அது யாருக்கும் அழகு சேர்க்காது. பார்ப்பவர்க்கு அருவருப்பையே தரும். இந்நிலையில், அதன் அழகினை யாரும் புகழ்ந்து பாடமாட்டார்கள். ஆனால், காதலியின் திதலை அழகினைப் பாராட்டுவதாகக் கீழ்க்காணும் பாடல்கள் கூறுகின்றன.

திதலை அல்குலும் பல பாராட்டி - நற் 84/2
திதலை அல்குல் நலம் பாராட்டிய - நற் 307/4

அல்குல் பகுதியில் இருந்த திதலையினைப் பாராட்டியதாக மேற்காணும் பாடல் வரிகள் கூறுகின்றன. இதிலிருந்து, திதலை என்பது தேமலாக இருக்க முடியாது என்பது உறுதியாகிறது. காரணம் நாம் மேலே கண்டபடி, நோயின் விளைவாகிய தேமலைக் கண்டு வருந்துவார்களேயன்றி யாரும் புகழ்ந்து பாராட்ட மாட்டார்கள். திதலை என்பது அழகு மிக்கது என்பதனை கீழ்க்காணும் பாடல்களும் மறைமுகமாகக் கூறுகின்றன.

திதலை அல்குல் அம் வரி வாடவும் - அகம் 183/2
திதலை அல்குல் வரியும் வாடின - அகம் 227/2

திதலை என்பது அழகிய வரிவடிவத்தில் இருக்கும் என்பதுடன் அவை வாடுவதுமுண்டு அதாவது தமது அழகு கெடுவதுமுண்டு என்று மேற்காணும் வரிகள் கூறுகின்றன. ஆனால், தோல்நோயான தேமலானது யாருக்கும் வரிவடிவத்தில் இருக்காது. ஆங்காங்கே திட்டுத்திட்டாக ஒழுங்கின்றி காணப்படும். எனவே திதலை என்பது ஒருபோதும் தேமலைக் குறிக்காது என்பதை உறுதிசெய்து கொள்ளலாம்.

அடுத்து, திதலை என்ற சொல் பயின்றுவரும் பாடல்களை ஆய்வுசெய்ததில், ஏறத்தாழ 18 இடங்களில் 'அல்குல் ' என்ற சொல்லுடன் சேர்ந்து ' திதலை அல்குல் ' என்றே பயின்று வந்துள்ளது. அப்பாடல் வரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

திதலை அல்குல் பெரும் தோள் குறுமகட்கு - நற் 6/4
திதலை அல்குல் குறுமகள் - நற் 77/11
திதலை அல்குலும் பல பாராட்டி - நற் 84/2
திதலை அல்குல் நலம் பாராட்டிய - நற் 307/4
திதலை சில் பொறி அணிந்த பல் காழ் அல்குல் - நற் 133/3,4
திதலை அல்குல் தேமொழியாட்கே - நற் 161/12
கோடு ஏந்து அல்குல் அரும்பிய திதலை - நற் 198/6,7
திதலை அல்குல் முது பெண்டு ஆகி - நற் 370/6
திதலை அல்குல் என் மாமை கவினே - குறு 27/5
திதலை அல்குல் நின் மகள் - ஐங் 29/4
திதலை அல்குல் துயல்வரும் கூந்தல் - ஐங் 72/2
திதலை அல்குல் எம் காதலி - அகம் 54/21
நுதலும் தோளும் திதலை அல்குலும் - அகம் 119/1
திதலை அல்குல் அம் வரி வாடவும் - அகம் 183/2
திதலை அல்குல் குறுமகள் அவனொடு - அகம் 189/9
திதலை அல்குல் வரியும் வாடின - அகம் 227/2
திதலை அல்குல் தேம் கமழ் குழலியர் - சிலப்.மது 22/128
திதலை அல்குல் தேவியொடு மகிழ்ந்து - பெருங்.நரவாண 1/120

திதலை என்பது அல்குலுடன் பெரிதும் தொடர்புடையது என்பதையே மேற்காணும் பாடல்கள் கூறுகின்றன. இந்நிலையில், அல்குல் என்பதற்கு பெண்குறி என்றும் திதலை என்பதற்குத் தேமல் என்றும் பொருள்கொண்டு, திதலை அல்குல் என்பது பெண்குறிக்கு மேலாகவும் தொப்புளுக்குக் கீழாகவும் காணப்படும் தேமல் என்று கேவலமான பொருள் கூறுகின்றனர் இன்றைய உரையாசிரியர்கள்.

இத்தனைப் பாடல்களில் பாடுபொருளாக அல்குல் வந்திருப்பதிலிருந்தே அது பெண்குறி போல மறைவானதொரு உறுப்பல்ல என்பதை உணர்ந்திருக்க வேண்டும். தொப்புளும் அதற்குக் கீழே உள்ள தேமலும் தெரியுமாறு பெண்கள் ஆடை அணிந்தனர் என்றால் ஆடை அணியவேண்டிய தேவையே இல்லையே. ஆடை என்பதே மானத்தை மறைக்கத்தானே?. அதையே வெளிப்படையாகக் காட்டிவிட்டு பின் எதை மறைக்க வேண்டும்?. அதுமட்டுமல்ல, அக் காலத்துப் பெண்கள் தமது பெண்குறி மட்டுமல்லாது மார்பகங்களும் வெளிப்படையாகத் தெரியுமாறு ஆடை அணிந்தனர் என்று விளக்கம் கூறியுள்ளனர் இற்றை உரைகாரர்கள்.

திதலை அணிந்த தேம் கொள் மென் முலை - அகம் 26/13
திதலை மென்முலை தீம்பால் பிலிற்ற - நற் 380/3

இப் பாடல்களில் வரும் ' திதலை மென்முலை ' என்பதற்கு ' தேமல் மிகுந்த மார்பகம் ' என்று பொருள்கூறி இருக்கின்றனர். அப்படியானால், சங்கப் பெண்கள் தமது மார்பகங்களும் வெளியே தெரியுமாறு ஆடை அணிந்திருந்தனர் என்றுதானே பொருள் வருகிறது?. இற்றை உரையாசிரியர்கள் கூறும் விளக்கத்தினைப் படிப்பவர்கள் சங்ககாலத்தில் தமிழ்ப் பெண்கள் யாரும் மானத்தை மறைப்பதற்காக ஆடை அணிந்திருக்கவில்லை என்றே முடிவுகட்டி விடுவார்கள் அன்றோ !!!.

அடுத்து, தித்தி என்ற சொல்லை எடுத்துக்கொண்டால் அதையும் அல்குலுடனும் முலையுடனும் தொடர்புறுத்திக் கீழ்க்காணும் பாடல்கள் கூறுகின்றன.

தித்தி ஒழுகிய மெத்தென் அல்குலர் - பெருங். உஞ்ஞை 41/97
எதிர்த்த தித்தி ஏர் இள வன முலை - நற் 160/4
எதிர்த்த தித்தி முற்றா முலையள் - நற் 312/7

திதலை என்ற சொல்லுக்குச் சொன்னதைப் போலவே தித்தி என்ற சொல்லுக்கும் தேமல் என்ற பொருளைக்கொண்டு பெண்குறியின் மேலும் மார்பகத்திலும் தேமல் இருந்ததாக மேற்காணும் பாடல்வரிகளுக்கு உரைகூறியுள்ளனர். இதைவிடக் கொடுமையாக, பெண்கள் தமது தொடையினையும் காட்டிக்கொண்டு திரிந்ததாகக் கீழ்க்காணும் பாடல் வரிகளுக்கு உரைகூறியுள்ளனர்.

தித்தி குறங்கின் ஊழ் மாறு அலைப்ப - குறு 293/6
தித்தி குறங்கில் திருந்த உரிஞ - அகம் 385/10

மேற்காணும் பாடல்களில் வரும் குறங்கு என்பதற்கு தொடை என்றும் தித்தி என்பதற்கு தேமல் என்றும் பொருள்கொண்டு ' தித்தி குறங்கு ' என்பதற்கு ' தேமல் மிக்க தொடை ' என்று விளக்கம் கூறியுள்ளனர் இற்றை உரைகாரர்கள்.

ஆக, இந்த உரைகாரர்களைப் பொறுத்தமட்டில் சங்கப் பெண்கள் யாரும் தாம் மறைக்கவேண்டிய பெண்குறி, மார்பகம், தொடை என்று எதையுமே மறைக்காமல் தான் வாழ்ந்துவந்தனர் என்பது பொருளாகிறது. தமிழ் இலக்கியத்திற்கு இவர்களால் இயற்றப்பட்ட உரைகளில் இதுபோல தவறான மலிவான உரைகள் எவ்வளவு இருக்கும் என்று எண்ணிப் பாருங்கள்.!!!. சங்கத் தமிழ்ப் பெண்களின் மானத்தைக் கப்பலேற்றும் விதமாக தமிழ்ப் பண்பாட்டுக்கே ஒவ்வாத இப்படியொரு கேவலமான பொருளைக் கூற எப்படித்தான் முடிகிறதோ இவர்களுக்கு?. இது தமிழ்ப் பெண்களை இழிவுசெய்யும் நோக்கில் கூறப்பட்ட கருத்து மட்டுமின்றி தமிழ்ப் புலவர்களின் கண்ணியத்தையே கேள்விக்குறியாக்கி இருக்கிறது. இப்படி தமிழ்ப் பெண்களையும் தமிழ்ப் புலவர்களையும் அவமானப்படுத்துவதில் இவர்களுக்கு அப்படி என்னதான் மகிழ்ச்சியோ தெரியவில்லை.!!! இப்படி உரை எழுதியவர்களும் தமிழர்கள் தானே?. இதுபோன்று தவறான உரையினை எழுதுவதற்குப் பதிலாக ' இச்சொற்களுக்குச் சரியான பொருட்கள் விளங்கவில்லை. மேலாய்வு செய்யப்பட்ட பின்னர் இதனை முடிவுசெய்யலாம் ' என்று எழுதிவிட்டு ஒதுங்கி இருக்கலாமே. இதுபோன்ற தவறான உரைகளை எழுதும் முன்னர், தமிழ் இலக்கியம் படிக்கின்ற கல்லூரி மற்றும் பள்ளி மாணவ மாணவியரின் உள்ளத்தில் இது எத்தகைய தாக்கத்தினை ஏற்படுத்தும் என்பதைப் பற்றியோ தமிழ் இலக்கியம் படிக்கின்ற பிறமொழி பேசுவோர் தமிழ்ப் பண்பாட்டினைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்றோ சிறிதும் சிந்திக்காமல் உரை எழுதியிருப்பவர்களை என்ன தான் சொல்வது?.

இத்தகைய தவறான மலிவான உரைவிளக்கங்களுக்குக் காரணம், அல்குல், முலை, குறங்கு, திதலை, தித்தி போன்ற பல சொற்களுக்கு நிகண்டுகளும் அகராதிகளும் கூறியுள்ள பொருட்களை அப்படியே ஏற்றுக்கொண்டதே. எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு என்பதை மறந்து அகராதிப் பொருட்களை ஆய்வுசெய்யாமல் அவற்றின் அடிப்படையில் உரை இயற்றியது பெரும் தவறாகும். இனி, திதலை மற்றும் தித்தி ஆகிய சொற்களுக்கான சரியான பொருட்கள் எவை என்று காணலாம்.

திதலையும் தித்தியும் - புதிய பொருட்கள்:

திதலை என்பதும் தித்தி என்பதும் புள்ளி / பொட்டு என்றே பொருள்பெறும். இலக்கியப் பயன்பாட்டில்,

திதலை என்பது புருவங்களுக்கு மேலாக வரிவடிவத்தில் வைக்கப்பட்ட புள்ளி / பொட்டுக்களையும்

தித்தி என்பது கண்ணிமைகளின் மேலாக தெளித்துவிட்டாற்போல வைக்கப்பட்ட புள்ளி / பொட்டுக்களையும்

குறிக்கவே பெரும்பான்மை பயன்படுத்தப் பட்டுள்ளது. சில இடங்களில் அவ்வாறில்லாமல் மாறி இருப்பதுமுண்டு.

நிறுவுதல்:
திதலைக்கும் தித்திக்குமான புதிய பொருட்கள் எப்படி பொருந்தும் என்பதனை இங்கே பல ஆதாரங்களுடன் நிறுவலாம். முதலில் திதலை பற்றிக் காணலாம்.

திதலை என்னும் சொல்லானது 18 இடங்களில் அல்குல் என்ற சொல்லுடன் பயின்று வந்துள்ளதை மேலே கண்டோம். இந்த அல்குல் என்பது பெண்களின் நெற்றிப் பகுதியினை குறிப்பாக புருவங்களின் மேல் பகுதியினைக் குறிக்கும் என்று ' அழகின் மறுபெயர் அல்குல் என்ற ஆய்வுக் கட்டுரையில் விரிவாகப் பல ஆதாரங்களுடன் கண்டுள்ளோம். பெண்கள் தமது கண்ணிமைகளைப் பல வண்ண மைகொண்டு தீட்டி அழகுசெய்வர் என்று முன்னர் பல கட்டுரைகளில் கண்டுள்ளோம். அத்துடன், இந்த அல்குல் பகுதியிலும் அதாவது புருவங்களுக்கு மேலாகவும் பல வண்ணங்களில் சிறு புள்ளிகள் அல்லது பொட்டுக்களை வரிசையாக ஒருநேர்கோட்டில் வரைவார்கள். இப் பொட்டுக்களை ஒரு வரியாகவோ பல வரிகளாகவோ மைகொண்டு வரைவர். சிலர் மை கொண்டு வரையாமல் இயற்கையாகக் கிடைக்கின்ற வண்ணப் பூந்தாதுக்களை அப்படியே வரிசையாக ஒட்டிக்கொள்வார்கள். இவ்வாறு ஒட்டிய பூந்தாதுக்கள் சில நேரங்களில் உதிர்ந்து கீழே இருக்கும் கண்ணிமைகளின் மேல் படிந்திருப்பதுமுண்டு. மைதீட்டி அழகு செய்யப்பட்ட கண்ணிமைகளின் மேல் திதலையின் தாதுக்கள் உதிர்ந்துகிடக்கின்ற காட்சியினைக் கீழ்க்காணும் பாடல்கள் கூறுவதைக் காணலாம்.

மா ஈன்ற தளிர் மிசை மாயவள் திதலை போல்
ஆய் இதழ் பன் மலர் ஐய கொங்கு உறைத்தர - கலி 29

செந்நிற மாந்தளிரின் மேலாக மாம்பூக்களின் அழகிய தாதுக்கள் உதிர்ந்துகிடக்கின்ற காட்சியினை பெண்களின் செவ்வண்ணம் தீட்டிய கண்ணிமைகளின் மேலாக திதலையின் தாதுக்கள் உதிர்ந்து கிடக்கும் காட்சியுடன் ஒப்பிட்டுக் கூறுகிறார் புலவர். இதே உவமையினைக் கீழ்க்காணும் பாடலும் கூறுவதைப் பாருங்கள்.

ஈன்றவள் திதலை போல் ஈர் பெய்யும் தளிரொடும் - கலி 32

ஈனுதல் என்பதற்குக் கருவுயிர்த்தல் என்ற அகராதிப் பொருளும் உண்டு. அவ்வகையில், இப்பாடலில் வரும் ஈன்றவள் என்பது கருவுயிர்த்தவள் அதாவது சூல்நிறைந்த பெண்ணைக் குறிக்கும். சூல்நிறைந்த பெண்ணுக்கு ஏழு அல்லது ஒன்பதாம் திங்களில் தற்காலத்தில் வளைகாப்பு விழா நடத்தி மகிழ்விப்பர். இவ் விழாவின்போது, அப் பெண்ணை மிக அழகாக அலங்காரம் செய்வர். அதைப்போல அலங்காரம் செய்யப்பட்ட ஒரு சூல்நிறைந்த பெண்ணுடைய செவ்வண்ணம் பூசிய கண்ணிமைகளின் மேலாக உதிர்ந்துகிடக்கும் திதலைப் பொட்டுக்களைப் போல மஞ்சள் வண்ணப் பூந்தாதுக்கள் மாமரத்தின் செந்தளிர் இலைகளின்மேல் உதிர்ந்து கிடக்கின்றனவாம். இப்பாடலில் வரும் ஈர் என்பது நுண்மை என்னும் அகராதிப்பொருளில் நுண்ணிய பூந்தாதுக்களைக் குறிக்கும்.

பெண்கள் வரையும் திதலை வரிகள் பெரும்பாலும் பொன்வண்ணத்தில் தான் இருக்கும்போலும். அதனால்தான் இதனை மாம்பூக்களின் தாதுக்களுடன் ஒப்பிட்டு மேலுள்ள பாடல்கள் கூறுகின்றன. கீழுள்ள பாடலும் இதனை உறுதிசெய்கிறது.

பொன் உரை கடுக்கும் திதலையர் இன் நகை - திரு 145

பொன்னின் உரை அதாவது துகள்போலத் தோன்றும் திதலை என்று மேற்காணும் பாடல் கூறுகிறது. பெண்கள் தமது நெற்றிப் பகுதியில் திதலையினை வரையுமிடத்து ஈர்க்குச்சியைக் கொண்டு வரைவர் என்று கீழ்க்காணும் பாடல் கூறுகிறது.

ஈர்க்கின் அரும்பிய திதலையர் கூர் எயிற்று - மது 708

திதலை வரிகளின் அமைப்பினை இதைவிடத் தெளிவாகக் கூறமுடியுமா என்று தெரியவில்லை. திதலை வரிகள் எவ்வாறு இருக்கும் என்பதனை அழகான உவமையுடன் கீழ்க்காணும் பாடல் கூறுவதைப் பாருங்கள்.

கடல் கண்டு அன்ன கண் அகன் பரப்பின்
நிலம் பக வீழ்ந்த வேர் முதிர் கிழங்கின்
கழை கண்டு அன்ன தூம்பு உடை திரள் கால்
களிற்று செவி அன்ன பாசடை மருங்கில்
கழு நிவந்து அன்ன கொழு முகை இடையிடை
முறுவல் முகத்தின் பன் மலர் தயங்க
பூத்த தாமரை புள் இமிழ் பழனத்து
வேப்பு நனை அன்ன நெடும் கண் நீர் ஞெண்டு
இரை தேர் வெண்குருகு அஞ்சி அயலது
ஒலித்த பகன்றை இரும் சேற்று அள்ளல்
திதலையின் வரிப்ப ஓடி விரைந்து தன்
நீர் மலி மண் அளை செறியும் ஊர ... - அகம். 176

பொருள்: கடல்போலத் தோன்றும் பெரும்பரப்பில் நிலத்தினின்று பறிக்கப்பட்ட வேரில் முதிர்ந்த கிழங்குகளையும் மூங்கில்போலும் துளையினை உடைய தடித்த தண்டினையும் யானையின் காதுகளைப் போன்று பெரிய இலைகளையும் உடைய சேம்பின் தோட்டத்துக்கு அருகில் கழுமரம் போல உயரமாக வளர்ந்த பல மொட்டுகளும் முகம்போல மலர்ந்திருந்த பல தாமரை மலர்களும் நிறைந்திருந்த அந்த சேற்றுவயலில் வேப்பமரத்தின் மலர்மொக்குப் போன்ற கண்களை உடைய நீர்நண்டானது இரைதேடும் வெண்நாரைக்குப் பயந்து அருகில் வளர்ந்திருந்த பகன்றைமலர்களின் மீது திதலை வரிகளைப் போல சேற்றுப்புள்ளிகள் விழுமாறு ஓடி தனது வளைக்குள் சென்று ஒளிந்துகொள்ளும் ஊரனே.....

இப்பாடலில் தான் எத்தனை உவமைகள்.!!!. சேப்பங்கிழங்கின் தோட்டத்தினைக் கடலுக்கு உவமையாகவும் அதன் தண்டினை மூங்கிலுக்கு உவமையாகவும் அதன் இலையினை யானையின் காதுக்கு உவமையாகவும் தாமரையின் மலராத மொக்குகளை கழுமரத்திற்கு உவமையாகவும் மலர்ந்த மலர்களைப் பெண்களின் மகிழ்ச்சி நிறைந்த முகத்திற்கு ஒப்பாகவும் நண்டின் கண்களை வேப்பமரத்தின் மலர்மொக்குகளுக்கு உவமையாகவும் பகன்றைமலர்களின் மீது நண்டுகள் உருவாக்கிய சேற்றுப்புள்ளிகளைப் பெண்களின் திதலை வரிகளுக்கு உவமையாகவும்.... அடடா !. புலவர் ஒரு கலக்கு கலக்கிவிட்டார்.

பொதுவாக நண்டுகள் பக்கவாட்டு இயக்கம் உடையவை. இவை நகர்ந்து செல்லும் அழகே தனிதான். மணல்மீது இவை நகர்ந்துசெல்லும்போது உண்டாக்கும் சில வரிபோன்ற அமைப்புகளைப் படத்தில் பாருங்கள். சேற்றுவயலில் இருந்த நண்டுகள் நாரைக்குப் பயந்து உதிர்ந்துகிடக்கும் வெண்ணிறப் பகன்றை மலர்களின்மீது ஓடும்போது அவற்றின் கால்நுனிகளில் ஒட்டியிருந்த சேறானது புள்ளிகளாகப் படிந்து பல வரிகளை உருவாக்க, அவ் வரிகள் பார்ப்பதற்குப் பெண்களின் திதலை வரிகளைப் போலத் தோன்றியதாக இப் புலவர் கூறுகிறார்.

இன்னொரு புலவரோ, புருவங்களின் மேல் திதலை வரைந்திருந்த ஒரு தாயுடன் அவளது குழந்தை விளையாடும் காட்சியினை நம் கண்முன்னால் கொண்டுவருகிறார் கீழ்க்காணும் பாடலில்.

நெய்யும் குய்யும் ஆடி மெய்யொடு
மாசு பட்டன்றே கலிங்கமும் தோளும்
திதலை மென் முலை தீம் பால் பிலிற்ற
புதல்வன் புல்லி புனிறு நாறும்மே.... - நற். 380

தாய் தனது குழந்தைக்கு நெய்ச்சோறு ஊட்டியபோது அவளது முகத்தைத் தனது பிஞ்சுக்கைகளால் தடவியும் வாயிலிருந்து சோற்றினைத் துப்பியும் விளையாடுகிறது குழந்தை. இதனால் தாயின் கண்மை அணியும் இமையிலிருந்த திதலை வரிகளும் அழிந்து உடலும் ஆடையும் மாசுபடுகிறது. சோறு சாப்பிடாததால் பாலூட்ட முயல்கிறாள். அப்போதும் அது பாலைத் துப்பி விளையாடுகிறது. இதனால் அவளது உடலிலும் அவளது குழந்தையைப் போலவே ஒரு மணம் வீசுவதாகப் புலவர் கூறுகிறார். இப்பாடலில் வரும் திதலை என்பது திதலை வரிகளையும் முலை என்பது கண்ணிமைகளையும் குறிக்கும்.

அடுத்து, தித்தி என்னும் சொல்லுக்கான புதிய பொருள் எவ்வாறு பொருந்தும் என்று பார்ப்போம். தித்தி என்பது நுட்பமானதும் பலவாகிய தன்மையும் கொண்டது என்பதனைக் கீழ்க்காணும் பாடல்கள் கூறுகின்றன.

நுண் பல் தித்தி மாஅயோளே - நற் 157/10
நுண் பல் தித்தி மாஅயோயே - குறு 300/4
நுண் பல் தித்தி மாஅயோளே - அகம் 41/16

தித்தி என்பது கண்ணிமைகளின் மேல் ஆங்காங்கே வரையப்பட்டது / தெளிக்கப்பட்டதுபோன்ற நுண்ணிய பல புள்ளிகளைக் குறிக்கும். இதனைக் கீழ்க்காணும் பாடல்வரிகளால் அறியலாம்.

ஊரல் அம் தித்தி ஈர் இதழ் மழை கண் - பதி 52
ஊரல் அம் வாய் உருத்த தித்தி பேர் அமர் மழை கண் - அகம் 326

இப்பாடல்களில் வரும் ஊரல் என்பது சிப்பி என்னும் அகராதிப் பொருளைக் குறிக்கும். சிப்பிகளின் மேலோட்டில் காணப்படும் வண்ணப் புள்ளிகளைப் போல மைதீட்டப்பட்ட அழகிய இமைகளைக் கொண்ட கண் என்பது இவற்றின் பொருளாகும்.

முலை என்பது கண் / கண்ணிமையைக் குறிக்கும் என்றும் குறங்கு என்பது கண்ணிமையைக் குறிக்கும் என்றும் முன்னர் கட்டுரைகளில் விரிவாகக் கண்டுள்ளோம். பெண்கள் தமது முலையிலும் குறங்கிலும் அதாவது கண்ணிமைகளில் அழகிய புள்ளிகளை வரைந்திருந்ததையே கீழ்க்காணும் பாடல்கள் கூறுகின்றன.

எதிர்த்த தித்தி ஏர் இள வன முலை - நற் 160/4
எதிர்த்த தித்தி முற்றா முலையள் - நற் 312/7
தித்தி குறங்கின் ஊழ் மாறு அலைப்ப - குறு 293/6
தித்தி குறங்கில் திருந்த உரிஞ - அகம் 385/10

திதலையும் தித்தியும் வயிறும்:

திதலையும் தித்தியும் தேமல் என்ற பொருளைக் கொள்ளும் என்று உரைகாரர்கள் தவறாகக் கருதக் காரணம் என்னவென்று ஆய்ந்ததில், வயிறு என்ற சொல்லே அதற்குக் காரணம் என்று தெரியவந்தது.

பசலை பாய்ந்த திதலை தித்தி அசைந்த அம் வயிறு - உஞ்ஞை 43/128,129
திதலை அம் வயிறு அங்கையின் அதுக்கி - உஞ்ஞை 44/25
புதல்வன் பயந்த திதலை அம் வயிற்று - அகம் 86/11
வரி கிளர் பணை தோள் வயிறு அணி திதலை அரியலாட்டியர் - அகம் 245/8,9

மேலே உள்ள பாடல்களில் திதலையும் தித்தியும் வயிறு என்ற சொல்லுடன் சேர்ந்து வந்துள்ளதைக் காணலாம். இப் பாடல்களில் வரும் வயிறு என்ற சொல்லுக்கு அகராதிகள் காட்டுகின்ற 'உடலின் மையப்பகுதியாகிய உதரம்' என்று பொருள்கொண்டதே திதலைக்கும் தித்திக்கும் கருவுற்ற பெண்களுக்கு அடிவயிற்றில் தோன்றும் தேமல் என்ற பொருளைக் கொள்ள வைத்துவிட்டது என்று தோன்றுகிறது. உண்மையில், இப்பாடல்களில் வரும் வயிறு என்ற சொல்லானது கண்ணிமையினைக் குறிக்கும். பெண்கள் தமது இமைகளின்மேல் திதலை அல்லது தித்தியினை வரைவர் என்று மேலே கண்டோம். இதைப்பற்றிய முழுமையான ஆய்வுக் கட்டுரையினைத் தனியாக ஆதாரங்களுடன் காணலாம்.

முடிவுரை:

இதுகாறும் கண்டவற்றில் இருந்து, தித்தி என்பதோ திதலை என்பதோ தோல்நோயான தேமலைக் குறிக்காது என்பதனைக் கண்டோம். காரணம், புலவர்கள் எப்போதுமே அழகினைப் போற்றுபவர்கள். அந்த அழகு இயற்கையாக இருக்கலாம்; பெண்கள் கூட்டும் செயற்கை அழகாகவும் இருக்கலாம். ஆனால், அழகுணர்ச்சி கண்டிப்பாக இருக்கவேண்டும். அப்போதுதான் அதைப் பாடுவார்கள். இதில் மிகவும் அருமையாக சில விதிவிலக்குகள் இருக்கக்கூடும்.

இறுதியாக ஒரு வேண்டுகோள் !. இலக்கியங்களில் பயிலும் சொற்களின் பொருளைப் புரிந்துகொள்வதற்கு அவசரப்படுவது கூடாது. அவசரப்பட்டுப் புரிந்துகொள்ள முயன்றால் பொருள் தவறாகிப்போவது மட்டுமின்றி, புலவர்கள் பாடலை இயற்றிய உன்னத நோக்கத்தினை அறிந்துகொள்ள முடியாமலும் போய்விடக்கூடும். உயர்ந்ததோர் பண்பாட்டினை உலகுக்கேக் கற்றுக்கொடுத்தவன் சங்கத் தமிழன். அத்தகைய உயர்ந்த பண்பாட்டில் வந்தவனைப் பிறமொழியினர் தவறாகப் புரிந்துகொள்ளும் வகையில் தவறான உரைகளை இனியேனும் எழுதாமல் பரப்பாமல் இருப்பது நலம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.