சனி, 18 மார்ச், 2017

மருங்குல் என்றால் என்ன?


முன்னுரை:

சங்ககாலம் உட்பட பல காலங்களாகப் பயிலப்பட்டு இன்றைய நாளிலே வழக்கற்றுப் போன பல தமிழ்ச்சொற்களுள் ஒன்றுதான் ' மருங்குல் ' என்பதாகும். இச்சொல்லுக்குப் பல பொருட்களை இன்றைய தமிழ் அகராதிகள் காட்டி இருந்தாலும் அவற்றில் ஒன்றுகூட பொருந்தாத நிலை பல இலக்கியப் பாடல்களில் காணப்படுகின்றது. இது இச்சொல்லுக்குப் புதிய பொருள் இருப்பதையே காட்டுகின்றது. இச் சொல் குறிக்கும் புதிய பொருள் என்னவென்றும் அது எவ்வாறு பொருந்துமென்றும் பல ஆதாரங்களுடன் விளக்கமாக இக் கட்டுரையில் காணலாம்.

மருங்குல் - சொல் பயன்பாடும் தற்போதைய பொருட்களும்:

மருங்குல் என்ற சொல்லானது நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பயன்படுத்தப் பட்டுள்ளது. இச்சொல்லின் இலக்கியப் பயன்பாட்டு விவரங்கள் இதுவரை அறியப்பட்ட நிலையில் கீழ்க்காணுமாறு கொடுக்கப்பட்டுள்ளன.

கம்பராமாயணம் - 43
பெருங்கதை - 32
சங்க இலக்கியம் - 14
சீவகசிந்தாமணி - 13
பெரியபுராணம்  - 5
பதினெண்கீழ்கணக்கு - 2
நளவெண்பா - 2
திருவாசகம் - 2
மணிமேகலை - 1

மொத்தம் 114 இடங்களில் பயன்பட்டுள்ள மருங்குல் என்னும் சொல்லுக்குத் தற்போதைய தமிழ் அகராதிகள் கூறியுள்ள பொருட்கள் பின்வருமாறு.

மருங்குல் maruṅkul , n. < மருங்கு. 1. Waist, especially of women; இடை. (திவா.) கொம் பரார் மருங்குன்மங்கை கூற (திருவாச. 5, 67). 2. See மருங்குற்பக்கம். 3. Stomach, abdomen; வயிறு. பசிபடு மருங்குலை (புறநா. 260). 4. Body; உடம்பு. யானை மருங்குலேய்க்கும் வண்டோட்டுத் தெங்கின் (பெரும்பாண். 352).

மருங்குலும் சில உவமைகளும்:

பெண்களின் மருங்குலை தாவரக்கொடி, மின்னல், நூல் போன்றவற்றுடன் ஒப்பிட்டுப் பல பாடல்களில் புலவர்கள் பாடியுள்ளனர். தாவரக்கொடிகளில் வள்ளிக்கொடியும், வஞ்சிக் கொடியும் அடங்கும். சான்றுக்கு சில பாடல்களின் வரிகள் மட்டும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

கொடி மருங்குல் விறலியருமே - புறம்.139
வள்ளி மருங்குல் வயங்கு இழை அணிய - புறம். 316
மின் நேர் மருங்குலாய் - பழமொழி.191
வஞ்சி போல் மருங்குல் - கம்ப.பால.3/9
நூல் உறு மருங்குல் - கம்ப.பால.10/41

இப்பாடல்களில் வரும் மருங்குல் என்பதற்கு இடுப்பு என்று பொருள்கொண்டு, கொடி போன்ற இடுப்பு, மின்னல் போன்ற இடுப்பு, நூல் போன்ற இடுப்பு என்று விளக்கங்கள் கூறுகின்றனர். இது பொருந்துமா என்று பார்ப்போம்.

பொருத்தமற்ற உவமைகள்:

ஒரு பொருளை இன்னொரு பொருளுடன் ஒப்பிட்டுக் கூறுவதற்கு முன்னால், அவ் இரு பொருட்களுக்கும் இடையில் என்னென்ன ஒற்றுமைக் கூறுகள் இருக்கின்றன என்று சரிபார்ப்பதைவிட அந்த இரண்டு பொருட்களும் மக்களால் எளிதில் கண்டு அறியக்கூடிய பொருட்களாக இருக்கிறதா என்று சரிபார்ப்பது மிகவும் இன்றியமையாத ஒன்றாகும்.  

அவ்வகையில் இங்கே, பெண்களின் உறுப்பாகிய மருங்குலைப் பற்றிப் புலவர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பாடியிருப்பதில் இருந்து மருங்குல் என்பது மக்களால் மிக எளிதாகக் கண்டு களிக்கத்தக்கதோர் உறுப்பு என்பது தெளிவாகிறது. இந்நிலையில், மருங்குல் என்பதற்கு இடுப்பு என்று பொருள்கொண்டால், பெண்களின் இடுப்பினை யாவரும் எளிதில் கண்டுகளித்தார்கள் என்பது போல ஒரு செய்தியே கிடைக்கிறது. ஆனால், உண்மையில் பெண்கள் அவ்வாறு தம் இடுப்பினை வெளிக்காட்ட விரும்புவார்களா என்றால் இல்லை. ஏனென்றால், பெண்களின் இடுப்பானது காண்பவர்க்கு காம இச்சையைத் தூண்டிவிட வல்லதாகும். இதை எந்தப் பெண்ணும் விரும்பமாட்டார் என்பதுடன் அது தமிழரின் பண்பாடும் அல்ல. எனவே பெண்கள் தமது ஆடைகொண்டு இடுப்பினை மறைத்தே இருப்பர். மறைக்கப்பட்ட நிலையில் இருக்கும்போது இடுப்பினைப் பற்றி புலவர்கள் யாரும் பாடவும் மாட்டார்கள்.

இனி, ஒற்றுமைக் கூறுகளைப் பற்றிப் பார்ப்போம். பெண்களின் இடுப்புக்கும் கொடிக்கும் மின்னலுக்கும் நூலுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது?. கொடிபோல மின்னல்போல நூல்போல மெலிந்த இடுப்பு என்று மென்மையினை ஓர் ஒற்றுமையாகக் கூறுவார் பலர். இவ்வாறு கூறுபவர்கள் கொடியின் தடிமனையோ நூலின் தடிமனையோ மின்னலின் தடிமனையோ அறிவார்கள் அல்லர். கொடியின் தடிமனையோ நூலின் தடிமனையோ கூட அளந்து விடலாம். ஆனால் கண்ணிமைக்கும் நேரத்தில் தோன்றி மறையும் மின்னலின் தடிமனை இதுவரை யார் அளந்திருக்கின்றார்கள்?. அளக்கவே முடியாத அளவே அறியப்படாத மின்னலுடன் இடுப்பினை ஒப்பிடுவது எந்த வகையில் அறிவுடைமை ஆகும்?. அன்றியும், கொடியின் தடிமனிலோ நூலின் தடிமனிலோ ஒரு பெண்ணுக்கு இடுப்பு இருக்குமா?. ஒருக்காலும் இருக்க முடியாது. காரணம், இடுப்புக்குப் பின்புறமாக முதுகெலும்பு இருக்கின்றது. இந்த முதுகெலும்பு நிலையாக இருக்க வேண்டுமெனில், இடுப்பும் பலமாக இருக்கவேண்டும். இந்நிலையில், எந்த ஒரு பெண்ணுக்கும் கொடியின் தடிமனிலோ நூலின் தடிமனிலோ இடுப்பு இருக்க வாய்ப்பேயில்லை.

இல்லை இல்லை, இதை அறிவியல் ரீதியாக ஆராயாமல் கலையுணர்வாக கற்பனையாகக் காணவேண்டும் என்று கூறுவாரும் உளர். இவ்வாறு கூறுவதற்கு முன்னால் அவர்கள் ஒன்றைச் சிந்திக்கவேண்டும். ஏன் பெண்களின் இடுப்பினை கொடியுடன் மின்னலுடன் நூலுடன் மட்டும் ஒப்பிடவேண்டும்?. ஏன் மரக்கிளைகளுடனோ செடியின் குச்சிகளுடனோ ஒப்பிடவில்லை?. ஏன் கயிறுகளுடன் ஒப்பிடவில்லை?. இவையும் மெலிவினை உடையவை தானே !. இவ்வளவு ஏன், வானத்தில் தோன்றும் வானவில்லானது மெலிதாகவும் அழகாகவும் இருப்பதுடன் வளைந்தும் இருக்கின்ற நிலையில், பெண்களின் இடுப்பினை வானவில்லுடன் ஒப்பிட்டுப் புலவர்கள் ஒரு பாடலில் கூட ஏன் பாடவில்லை?. மரக்கிளை போன்ற இடுப்பு, குச்சி போன்ற இடுப்பு, கயிறு போன்ற இடுப்பு, வானவில் போன்ற இடுப்பு என்று புலவர்கள் பாடாதது ஏன்? என்று சிந்திக்க வேண்டும். அவ்வாறு சிந்தித்து இருந்தால் மருங்குல் என்பதனை இடுப்பு என்ற பொருளில் புலவர்கள் ஏன் பாடவில்லை என்பது தெளிவாகப் புரிந்திருக்கும்.

மருங்குல் என்பது இடுப்பு அல்ல:

மருங்குல் என்பது இடுப்பினைக் குறிக்காது என்பதற்கு இன்னொரு சான்று கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கரும் குழல் பாரம் வார் கொள் கன முலை கலை சூழ் அல்குல்
நெருங்கின மறைப்ப ஆண்டு ஓர் நீக்குஇடம் பெறாது விம்மும்
பெரும் தடம் கண்ணி காணும் பேர் எழில் ஆசை தூண்ட
மருங்குலின் வெளிகள் ஊடே வள்ளலை நோக்குகின்றாள் - கம்ப. பால. 21/17

( பொருள்: மேகம் போல் கருமை பூண்ட இமைகளையும் திரண்ட கண்களையும் நெற்றியில் அணிந்திருந்த மேகலை முதலான அணிகள் நெருக்கி மறைக்க இமைகளைத் திறக்க இடமின்றி வருந்துகின்ற பெரிய கண்களை உடைய அவள்,  காணும் வேட்கை மிகுதலால் மருங்குலின் இடைவெளியின் வழியாக வள்ளலை நோக்குகின்றாள்.)

இமைகளின் மேலாக நெற்றியில் அணிந்து இருந்த மேகலை முதலான அணிகளின் பாரம் தாங்கமாட்டாமல் இமைகளைத் திறந்து பார்க்க அவளால் முடியவில்லை. இந்நிலையில் இராமனைப் பார்க்கின்ற ஆவல் அவளது உள்ளத்தில் மிக்கு எழ, மருங்குலின் இடைவெளி வழியாக இராமனின் அழகைக் காண்கின்றாள். இப்பாடலில் வரும் மருங்குல் என்பதற்கு இடுப்பு என்று பொருள்கொண்டால், இடுப்பின் இடைவெளி வழியாக இராமனைக் கண்டாள் என்று பொருத்தமில்லாத நகைச்சுவையான விளக்கம் வரும். காரணம், இமைகளையே திறக்க இயலாத நிலையில் அதாவது அருகிலிருக்கும் படத்தில் உள்ளதைப்போல இமைகள் தாழ்ந்திருக்கும்போது அப்பெண் குனிந்து அவளுக்கு முன்னால் இருப்போரின் இடுப்புகளின் இடைவெளியில் ராமனைப் பார்க்க முடியாது அல்லவா?. எனவே இப்பாடலில் வரும் மருங்குல் என்பது இடுப்பினைக் குறித்து வரவில்லை என்பது தெளிவு.

மருங்குல் - புதிய பொருள் என்ன?

மருங்குல் என்ற சொல் குறிக்கும் புதிய பொருட்கள்;

கண் மற்றும் கண்ணிமை.

நிறுவுதல்:

மருங்குல் என்பதற்குக் கண் மற்றும் கண்ணிமை ஆகிய பொருட்கள் எவ்வாறு பொருந்தும் என்று கீழே காணலாம். மருங்குல் என்பதன் புதிய பொருட்களைப் புரிந்துகொள்ள அதனுடன் ஒப்பிட்டுக் கூறப்படுகின்ற பொருட்களைப் பற்றித் தெரிந்துகொள்வது அவசியமாகின்றது. எனவே முதலில் மருங்குலுக்கான உவமைகள் பற்றி விரிவாகக் காணலாம்.

மருங்குலும் துயரமும்:

நோய்களிலே மிகக் கொடிய நோய் பசிப்பிணி ஆகும். வறுமையால் உண்டாகக் கூடிய இந்நோய்க்கு உணவே மருந்தாகும். சங்க காலத்தில் பாணர்கள், பொருநர்கள் போன்றோர் உண்ண உணவின்றி பல நாட்கள் தொடர்ச்சியான பசிக்கொடுமையால் வாடியிருக்கின்றனர். பெண்கள் தமது வறுமைநிலையினை எண்ணி அழுது அழுது அவரது கண்கள் மிகவும் வறண்டு ஒளியிழந்து ஒடுங்கிய நிலையில் காணப்பட்டது. அவரது துயரநிலையினை வெளிக்காட்டும் கண்ணாடியாய் அவரது ஒடுங்கிய கண்களே விளங்கியது எனலாம். சங்ககாலக் கிணைமகளின் வறுமைநிலையினை விளக்கும் பாடல் வரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

....ஒல்கு பசி உழந்த ஒடுங்கு நுண் மருங்குல்
வளை கை கிணைமகள் வள் உகிர் குறைத்த
குப்பை வேளை உப்பு இலி வெந்ததை - சிறு.

( பொருள்: தணியாத பசியினால் வாடிய ஒடுங்கிய கண்களையுடைய கிணைமகள் குப்பைமேட்டில் வளர்ந்திருந்த வேளைக்கீரையினைத் தனது நகங்களால் கிள்ளியெடுத்து உப்பில்லாமல் அவித்து.....)

இங்கே கிணைமகளின் வறுமை அவலத்தைப் பாருங்கள். பசிக்கொடுமை தாங்கமுடியாமல் அழுதழுது கண்கள் வறண்டு சிறுத்துப்போய் இருக்கின்றன. உப்புவாங்கக் கூடப் பணம் இல்லை. குப்பையில் வளர்ந்திருக்கும் வேளைக்கீரையினை அப்படியே பறித்துவிட்டால் மீண்டும் கிடைக்காது என்பதால் இலைகளை மட்டும் நகங்களால் கிள்ளியெடுத்துச் சமைக்கிறாள். சங்ககாலப் பாணர்களின் வறுமைநிலை தான் என்னே என்னே !

இப்பாடலில் வரும் மருங்குல் என்பதற்கு இடுப்பு என்றோ வயிறு என்றோ பொருள் பொருந்தாது. காரணம் ' ஒடுங்கு நுண் மருங்குல் ' என்ற சொல்லாடல். இடுப்பும் வயிறும் நுட்பமானவை அல்ல; பெரியவை. மேலும் எந்த ஒரு தமிழ்ப் பெண்ணும் வறுமைநிலையில் உழன்ற போதிலும் தனது இடுப்பையோ வயிறையோ வெளியே தெரியுமாறு காட்டமாட்டாள். இது எக்காலத்துக்கும் பொருந்தும். எனவே இப்பாடலில் வரும் மருங்குல் என்பது கண்ணையே குறிக்கும் என்று தெளியலாம். துயரம் என்பது மாந்தர்க்கு மட்டுமின்றி மாக்களுக்கும் பொதுவானதே அன்றோ !. இதோ யானைகளின் துயரநிலையினை விளக்குகின்ற அகநானூற்றுப் பாடல்வரிகள்.

..நீர் அற வறந்த நிரம்பா நீள் இடை
கயம் தலை குழவி கவி உகிர் மட பிடி
குளகு மறுத்து உயங்கிய மருங்குல் பல உடன்
பாழ் ஊர் குரம்பையின் தோன்றும் ஆங்கண் - அகம். 229

( பொருள்: நீரின்றி வறண்டிருந்த முடிவில்லாத நீண்ட காட்டுவழியில் குட்டிகளுடன் சென்ற பெண்யானைகள் பலவும் தாகத்தினால் வருந்தி வாடிய கண்களுடன் இலைகளையும் உண்ணவிரும்பாமல் பாழடைந்ததோர் ஊரின் குடிசைகளுடன் சேர்ந்து தோன்றும் அப் பகுதியில்......)

கடுமையான கோடை வெப்பத்தால் யானைகள் குடிக்க நீரின்றி மிகுந்த துன்பத்தில் வாடுகின்றன. அவை துயரத்தில் இருப்பது அவற்றின் கண்களின் கீழே கண்ணீரின் வடுவாகத் தெரிகிறது. நீர் வறட்சியால் இலைகளைக் கூட உண்ண விரும்பாமல் நீரைத் தேடி நடந்து நடந்து இறுதியில் ஒரு பாழடைந்த ஊருக்குள் புகுகின்றன. அப்போது அந்த ஊரில் இருந்த குடிசைகள் எது யானைகள் எது என்று தெரியாத வண்ணம் இருந்ததாகப் புலவர் கூறுகிறார்.

இப்பாடலில் வரும் மருங்குல் என்பதற்கு வயிறு என்றோ இடுப்பு என்றோ பொருள்கொள்ள முடியாது. காரணம், யானைகள் உண்ண உணவின்றி வருந்தவில்லை; குடிக்க நீரின்றி தான் வாடுகின்றன. எனவே அவற்றின் வயிறோ இடுப்போ பார்த்தால் தெரியும் அளவுக்குப் பெரிதாகச் சுருங்கி இருக்காது. ஆனால், அவற்றின் துயரநிலையினை அவற்றின் கண்களைப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம். எனவே புலவர் இப்பாடலில் மருங்குல் என்பதனைக் கண் என்ற பொருளில்தான் பாடியுள்ளார் என்பது தெளிவு.

மருங்குலும் நுங்கும்:

யானையின் கண்களைப் பனைமரத்தின் நுங்குகளுடன் ஒப்பிட்டுப் பாடும் பெரும்பாணாற்றுப் பாடல் வரிகள் கீழே:

..... யானை மருங்குல் ஏய்க்கும் வண்தோட்டுத்
தெங்கின் வாடுமடல் வேய்ந்த - பெரும்.

( பொருள்: யானையின் கண்களைப் போன்ற திரண்ட நுங்குகளையுடைய பனைமரத்தின் வாடிய மடல்களால் வேய்ந்த....)

இப்பாடலில் வரும் தெங்கு என்பது பனைமரத்தைக் குறிப்பதாகும். வண்தோடு என்பது வளப்பம் மிக்க நுங்குகளின் தொகுதியினைக் குறிக்கும். யானையின் கண்களில் நடுவில் கருநிறமும் அதைச் சுற்றிலும் செம்மஞ்சள் அல்லது கபில நிறமும் இருக்கும். அதைப்போலவே நுங்குகளின் அடிப்பகுதியில் மையத்தில் கருநிறமும் அதைச்சுற்றிலும் செம்மஞ்சள் நிறமும் இருக்கும். வடிவம் மற்றும் நிற ஒற்றுமைகளால் யானையின் கண்களை நுங்குகளுடன் ஒப்பிட்டுக் கூறினார் புலவர். அருகில் விளக்கப் படம் இணைக்கப்பட்டுள்ளது.

இப்பாடலில் வரும் மருங்குல் என்பதற்கு உடல் என்று பொருள்கொண்டு யானையின் உடலைப் போன்ற தென்னையின் வாடிய மடல் என்று இவ்வரிகளுக்கு விளக்கம் கூறுகின்றனர். யானையின் உடலுக்கும் தென்னையின் வாடிய மடலுக்கும் ஒரு ஒற்றுமையும் இல்லாத நிலையில், இவ் விளக்கம் பொருத்தமற்றுப் போவதுடன் மருங்குல் என்பது இப்பாடலில் கண்களையே அன்றி உடலைக் குறிக்காது என்பதும் உறுதியாகிறது.

மருங்குலும் கொடியும்:

பெண்களின் மருங்குல் ஆகிய இமையினைத் தாவரக்கொடிகளுடன் உவமைப்படுத்திப் பல பாடல்களில் புலவர்கள் பாடியுள்ளனர். இக் கொடிகளில் வள்ளிக்கொடியும் வஞ்சிக் கொடியும் அடங்கும். சான்றுக்குச் சில பாடல்களின் வரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

கொடி மருங்குல் விறலியருமே - புறம்.139
வள்ளி மருங்குல் வயங்கு இழை அணிய - புறம். 316
வஞ்சி போல் மருங்குல் - கம்ப.பால.3/9

தாவரக்கொடிகளுக்கும் பெண்களின் கண்ணிமைகளுக்கும் என்ன தொடர்பு?. ஏன் பெண்களின் கண்ணிமைகளைத் தாவரக் கொடிகளுடன் உவமைப்படுத்திப் புலவர்கள் பாடியிருக்கிறார்கள் என்னும் கேள்விக்கு அருகில் உள்ள படமே போதுமான சான்றாக இருந்து விளக்கும். ஆம், பெண்கள் தமது இமைகளுக்கு மேலாகவும் புருவங்களுக்குக் கீழாகவும் உள்ள பகுதியில் தாவரக் கொடிகளைப் போல பல வண்ணங்களைக் கொண்டு ஓவியங்கள் வரைந்து அழகு செய்திருப்பர். வண்ண வண்ணப் பூக்களுடனும் இலைகளுடனும் வளைத்து வளைத்து இமைகளின் மேல் அழகாக வரையப்பட்டு இருக்கும் அந்த ஓவியங்களைக் காண்பவர்களுக்குத் தாவரக்கொடிகள் நினைவுக்கு வருவது இயற்கைதானே. அதனால் தான் புலவர்கள் இப்படி ஓவியங்கள் வரையப்பட்டிருக்கும் இமைகளைக் கொடிகளுக்கு உவமையாக்கிப் பாடியிருக்கின்றனர்.

தாவரங்களில் கொடிகள் மட்டுமே அதிக நீளமாகவும் பல வளைவுகளுடனும் ஆங்காங்கே வண்ண வண்ணப் பூக்களை நேர்கோட்டிலும் கொண்டிருப்பதால் பெண்கள் தமது இமைகளின் மேலாகக் கொடிகளையே ஓவியங்களாக வரைந்தனர் எனலாம்.  பெண்களின் கண்ணிமைகளுக்குக் கொடிகளை உவமையாகக் கூறியதற்கு கொடிகளின் தடிமனும் ஒரு காரணம் ஆகும். அதாவது, கொடிகள் மிக மெல்லியவை என்பதால் கண்ணிமைகளின் மென்மைக்கு அதாவது நுட்பத் தன்மைக்கு ஓர் காட்டாகக் கொடிகளை உவமையாக்கிக் கூறினர் புலவர். தாவரங்களிலேயே கொடிகள் தான் மிக மெல்லியவை என்பதால் தான் புலவர்களின் பாடல்களில் மரக்கிளைகளோ செடிகளோ பெண்களின் இமைகளுக்கு உவமைகளாகப் பாடப்பெறவில்லை. 

மருங்குலும் மின்னலும்:

பெண்களின் இமைகளை மின்னலுடன் ஒப்பிட்டுக் கூறும் சில பாடல்களின் வரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

மின் நேர் மருங்குல் குறுமகள் - அகம். 126
முகில் ஏந்து மின் மருங்குல் - சிந்தா: 3/679
மெலிவு உடை மருங்குல் மின்னின் அலமர - கம்ப. சுந்தர.2/108
மழைஉறா மின்னின் அன்ன மருங்குல் - கம்ப.பால. 21/9
மின்வயின் மருங்குல் கொண்டாள் - கம்ப. ஆரண். 10/67

மின்னலுக்கும் பெண்களின் கண்ணிமைக்கும் என்ன தொடர்பு?. ஏன் புலவர்கள் இவ் இரண்டையும் உவமைப்படுத்திப் பாடியிருக்கின்றனர் என்னும் கேள்விக்கான விடை: ஒளிர்ந்து மறைதல் என்ற வினையால் ஆன உவமம். வானத்திலே மின்னல் வெட்டும்போது அதன் ஒளியினை நாம் கண்ணிமைக்கும் நேரத்திற்குள் தான் பார்க்கமுடிகிறது இல்லையா?. பெண்கள் தமது மையுண்ட இமைகளை மூடித்திறக்கும்போது அதைப் பார்ப்பவர்களுக்கும் இதைப்போன்ற ஒரு அனுபவமே ஏற்படுகிறது. அருகில் உள்ள படத்தில் ஒரு பெண் தனது இமைகளை ஒளிரும் பொருட்களைக் கொண்டு அழகு செய்திருக்கிறாள். இப்பெண் இமைக்கும்பொழுதெல்லாம் மின்னல்போல ஒரு ஒளி அந்த இமைகளில் இருந்து தோன்றி மறையும் இல்லையா?. இதனால் தான் புலவர்கள் பெண்களின் மையுண்ட இமைகளை மின்னலுடன் ஒப்பிட்டுப் பாடியிருக்கின்றனர்.

மருங்குலும் நூலும்:

பெண்களின் கண்ணிமைகளை நூலுடன் ஒப்பிட்டுக் கூறும் பாடல் வரிகள் கீழே:

நூல் உறு மருங்குல் - கம்ப.பால.10/41
நூல் ஒக்கும் மருங்குலாள் - கம்ப. கிட்.13/46
இழை புரை மருங்குல் - கம்ப. சுந்தர. 3/88
இழைக்கும் நுண்ணிய மருங்குலாள் - கம்ப. சுந்தர. 3/6

பெண்களின் கண்ணிமைகள் மிக மெல்லியவை என்று முன்னர் கண்டோம். கண்ணிமைகளின் நுட்பத் தன்மைக்கு அதாவது மென்மைத் தன்மைக்குச் சான்றாக அவற்றை மெல்லிய தாவரக் கொடிகளுடன் ஒப்பிடுவர் என்று மேலே கண்டோம். அதைப்போல பெண்களின் மெல்லிய கண் இமைகளை மிக மெல்லிய தடிமன் கொண்ட நூலுடன் ஒப்பிட்டும் புலவர்கள் பாடி இருக்கின்றனர்.  அதாவது ஆடைகளில் காணப்படும் மிக மெல்லிய நூலினைப் போன்ற தடிமனை உடைய மெல்லிய கண்ணிமைகள் என்ற பொருளில் பாடியுள்ளனர். இப்பாடல்களில் வரும் இழை என்பதும் நூல் என்பதும் ஒரே பொருளையே குறித்து வந்துள்ளன.

மருங்குலும் துடியும்:

பெண்களின் கண்ணிமைகளைத் துடியுடன் ஒப்பிட்டுக் கூறும் பாடல் வரிகள் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

பொலம் துடிக்கு அமை மருங்குல் - கம்ப.சுந்தர. 2/202
பொலம் துடி மருங்குலாய் - கம்ப. சுந்தர.3/32

இப்பாடல் வரிகளில் வரும் துடி என்பதற்கு உடுக்கைப்பறை என்ற பொருள்கொண்டு பெண்களின் இடுப்பினை உடுக்கைப் பறையுடன் ஒப்பிட்டு விளக்கம் கூறுகின்றனர். இது தவறான விளக்கமாகும். காரணம், இங்கே துடி என்பதுடன் பொலம் என்னும் அடைமொழி சேர்த்துக் கூறப்பட்டுள்ளது. பொலம் என்ற சொல்லுக்கான பொருட்கள் 'பொன், அழகு, ஆபரணம், பொன்னிறம் ' என்பதாகும். இவற்றில் எதுவும் உடுக்கைப்பறைக்கு அடைமொழியாகப் பொருந்தாது என்பதால் இங்கே துடி என்பது உடுக்கைப் பறை அல்ல என்பதும் மருங்குல் என்பது இடுப்பு அல்ல என்பதும் உறுதியாகிறது.

இப்பாடல்களில் வரும் துடி என்பது துடித்தல் என்னும் வினையினை அடிப்படையாகக் கொண்டதாகும். துடித்தல் என்னும் வினைச்சொல்லுக்கு மின்னுதல் என்ற பொருளை அகராதிகள் கூறுகின்றன. அவ்வகையில், துடி என்னும் சொல்லானது வினைச்சொல்லாக வரும் இடங்களில் மின்னுதல் / ஒளிர்தல் பொருளையும் பெயர்ச்சொல்லாக வரும் இடங்களில் மின்னல் என்ற பொருளையும் குறிக்கும். இப்பாடல்களில் வரும் துடி என்பது வினைச்சொல்லாக வருவதால், ' பொலம் துடி மருங்குல் ' என்பது ' பொன்னிறத்தில் மின்னும் / ஒளிரும் இமைகள் ' என்று விளக்கம் பெறும். பெண்கள் தமது கண்ணிமைகளுக்கு அழகூட்டும்போது மிகவும் விரும்பி பொன்னிறத்தில் மைபூசி மகிழ்வர் என்று முன்னர் பல கட்டுரைகளில் கண்டுள்ளது இங்கே நினைவுகூரத்தக்கது.

மருங்குலும் நுண்மையும்:

பெண்களின் கண்ணிமைகளைக் குறிப்பிடும்போது அவற்றின் நுட்பத்தினை அதாவது மென்மைத் தன்மையினைப் பாடாத புலவர்களே இல்லை என்று கூறலாம். நுண் மருங்குல் என்ற சொல்லாடல் பயின்று வரும் சில பாடல்வரிகள் மட்டும் கீழே சான்றுக்குக் கொடுக்கப்பட்டுள்ளன.

அகன்ற அல்குல் அம் நுண் மருங்குல் - மணி.3
பூமாலை சூடின் பொறை ஆற்றா நுண் மருங்குல் - சிந்தா: 7/1699
ஐய நுண் மருங்குல் நங்கை - கம்ப. ஆரண். 11/61
நோக்கினால் நமை நோக்கு அழி கண்ட நுண் மருங்குல் - கம்ப.கிட்.10/38
தோன்றாத நுண் மருங்குல் தோன்ற சுரி குழலாள் - நள. 208

இப்பாடல்களில் வரும் நுண் மருங்குல் என்பதற்கு நுட்பமான இடுப்பு என்று விளக்கம் கூறுவாருளர். இவ் விளக்கம் தவறென்று யாவரும் அறிவர். காரணம், யாருடைய இடுப்பும் நுட்பமானது அல்ல; மிகப் பெரியதே ஆகும். கைவிரல்களைக் காட்டிலுமோ காது மடல்களைக் காட்டிலுமோ யாருடைய இடுப்பும் நுட்பமானது அல்ல. மேலும் மனித உடல் உறுப்புக்களிலேயே மிகவும் நுட்பம் வாய்ந்தது அதாவது மென்மைத் தன்மை கொண்டது எதுவென்றால் அது கண்ணிமை தான். இது மிகவும் நுட்பமாக இருப்பதால் தான் இதனை நீட்டிச் சுருக்க முடிகிறது அதாவது கண்களை மூடித் திறக்க முடிகிறது. இதன் மென்மைத் தன்மையைக் குறிப்பிடுமிடத்து அதனை நீர்க்குமிழியுடன் ஒப்பிட்டுக் கூறுவதுண்டு. கண்ணிமைகள் எவ்வளவு மெல்லியதென்றால், இமைகளுக்கு மேலாக நெற்றியில் பூமாலைகளை அணிந்தால் அதன் எடை தாங்க மாட்டாமல் மெல்லிய இமைகள் துவண்டுவிடும் என்று கூறும் சிந்தாமணிப் பாடல் வரிகள் கீழே:

இறும் மருங்குல் போது அணியின் என்று இனைந்து - சிந்தா: 7/1698
பூ மாலை சூடின் பொறை ஆற்றா நுண் மருங்குல் - சிந்தா: 7/1699

மருங்குல் - பெயர்க் காரணம்:

மருங்குல் என்னும் சொல்லுக்கு இமை என்ற பொருள் ஏற்படக் காரணம் என்ன என்று கீழே காணலாம்.

மருங்கு என்ற சொல்லுக்குச் செல்வம் என்ற பொருளைத் தமிழ் அகராதிகள் காட்டுகின்றன.

 மருங்கு maruṅku , 11. Wealth; செல்வம். மண்மேன் மருங்குடையவர்க் கல்லால் (சீவக. 2924).

பழந்தமிழ்ப் பெண்கள் தமது பெருஞ்செல்வமாகக் கருதியது அவர்தம் இமைகளே ஆகும். அதனால் தான் அவர்கள் தமது இமைகளை அழகுசெய்வதில் அவ்வளவு ஆர்வமுடையவர்களாக இருந்திருக்கிறார்கள். இப்படிப் பெண்களால் பெருஞ்செல்வமாகக் கருதப்பட்டு வந்தபடியால், அவர்தம் கண்ணிமைகளுக்கு மருங்குல் என்பது பெயராயிற்று.

மருங்கு போன்றது மருங்குல். அதாவது செல்வம் போன்றது இமைகள்.

பெண்களின் இமைகளைச் செல்வம் என்று கூறும் கம்பராமாயணப் பாடல்:

.... கொங்கை ஏந்திய செல்வம் என்னும் நெறி இரும் கூந்தல்... - கம்ப.அயோ.6/5

இதன் பொருள்: கொங்கை ஆகிய கண்கள் ஏந்திய செல்வமாகிய நெறித்த கரிய இமைகள் .....

இப்பாடலில் வரும் கொங்கை என்பது கண்களையும் கூந்தல் என்பது இமைகளையும் குறிக்கும் என்று முன்னர் பல கட்டுரைகளில் ஆதாரங்களுடன் கண்டுள்ளோம். கண்ணிமைகளைக் குறித்துவந்த மருங்குல் என்ற சொல்லானது ஆகுபெயராகக் கண்களையும் குறிக்கப் பயன்படலாயிற்று.

முடிவுரை:

இதுவரை கண்டவற்றில் இருந்து மருங்குல் என்பதற்கு அகராதிகள் கூறும் பொருட்கள் நீங்கலாக கண், கண்ணிமை ஆகிய பொருட்களும் உண்டென்பது உறுதியாகி விட்டது. மருங்குலைப் போலவே கதுப்பு, ஓதி, நுசுப்பு ஆகிய சொற்களும் கண்ணிமையினைக் குறிக்கும். இதைப்பற்றி கதுப்பு - ஓதி - நுசுப்பு என்ற கட்டுரையில் பல ஆதாரங்களுடன் விளக்கமாகக் காணலாம்.