புதன், 31 மே, 2017

கண்ணும் கண்சார்ந்த இடமும் -பகுதி 8 ( சங்க இலக்கியத்தில் கேசாதிபாதம் உண்டா? )

முன்னுரை:
கண்ணும் கண்சார்ந்த இடமும் என்ற ஆய்வுக் கட்டுரையின் முதல் ஆறு பகுதிகளில் அல்குல் முதல் வயிறு வரையிலான பெயர்ச்சொற்கள் குறிக்கும் பெண்களின் பல்வேறு உடல் உறுப்புக்களைப் பற்றிக் கண்டோம். இவற்றுள் முலையும் கொங்கையும் பெண்களின் மார்பகத்தை மிகச்சில இடங்களில் மட்டுமே குறிக்கும் என்றும் பெரும்பாலான இடங்களில் கண்களையே குறிக்கும் என்றும் கண்டோம். இதற்கு ஆதாரமாக, சங்ககாலப் பெண்கள் மேலாடை அணிந்து தமது மார்பகங்களை மறைத்து இருந்தனர் என்று ஏழாம் பகுதியில் பல சான்றுகளுடன் விரிவாகக் கண்டோம். இந்நிலையில், பொருநராற்றுப்படையில் கேசாதிபாதமாகப் பாடப்பட்டிருக்கும் பெண் உறுப்புக்கள் தொடர்பான சில பெயர்ச்சொற்களைச் சுட்டிக்காட்டி, அவை பெண்களின் அந்தரங்க உறுப்புக்களையே சுட்டுகின்றன என்று சிலர் வாதிடுகின்றனர். இவர்களது கருத்து எவ்வளவு தவறானது என்பதை இக் கட்டுரையில் பல ஆதாரங்களுடன் விரிவாகக் காணலாம்.

உறுப்புப் பெயர்களும் உணர்த்தும் பொருட்களும்:

இன்றைய தமிழ் அகராதிகள் பெண்களின் உடல் உறுப்புக்கள் தொடர்பாகக் கூறியிருக்கும் பொருட்களையும் அவை கூறாமல் விட்ட புதிய பொருட்களையும் கீழே அட்டவணையில் காணலாம்.



வ. உறுப்புப் அகராதிகள் காட்டும் அகராதிகள் காட்டாத
எண் பெயர் பொருட்கள் புதிய பொருட்கள்
1 அல்குல் பெண்குறி, இடுப்பு நெற்றி
2 அளகம் தலைமயிர் கண்ணிமை
3 ஆகம் உடல், மார்பகம் கண், கண்ணிமை
4 இறை கை, முன்கை கண்ணிமை
5 எயிறு பல் கண், கடைக்கண் ஈறு
6 ஓதி தலைமயிர் கண்ணிமை
7 கதுப்பு கன்னம், தலைமயிர் கண்ணிமை
8 குறங்கு தொடை கண்ணிமை
9 கூந்தல் தலைமயிர் கண்ணிமை
10 கொங்கை மார்பகம் கண், கண்ணிமை
11 சிறுபுறம் முதுகு, பிடர் கண், கண்ணிமை, கன்னம்
12 தோள் கையின் மேல் பகுதி கண், கண்விளிம்பு
13 நுசுப்பு இடுப்பு கண்ணிமை
14 நுதல் நெற்றி கண், கண்ணிமை
15 மருங்குல் இடுப்பு, வயிறு, உடல் கண், கண்ணிமை
16 முகம் தலையின் முன்பகுதி கண்
17 முறுவல் பல், சிரிப்பு கண்
18 முலை மார்பகம் கண், கண்ணிமை
19 மேனி உடல் கண், கண்ணிமை
20 வயிறு தொப்புள் உள்ள பகுதி கண், கண்ணிமை
   

பெண்களின் கண்களையும் கண்சார்ந்த இடங்களையும் குறிப்பதற்கு மட்டும் எத்தனைப் பெயர்களை பழந்தமிழ்ப் புலவர்கள் பயன்படுத்தி உள்ளனர் பாருங்கள். தமிழ் இலக்கணத்தில் இதனை ' ஒருபொருட் பன்மொழி ' என்று கூறுவர். பெண்களின் கண் மற்றும் கண்சார்ந்த இடங்களைக் குறிப்பதான ஒருபொருட் பன்மொழிகளும் அவற்றின் உவமை விளக்கங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

கண்: பெண்களின் கண்களைக் குறிப்பதற்கு மட்டும் ஆகம், எயிறு, கொங்கை, சிறுபுறம், தோள், நுதல், மருங்குல், முகம், முறுவல், முலை, மேனி, வயிறு என்று 12 வகையான பெயர்ச்சொற்களைப் பயன்படுத்தியுள்ளனர் புலவர்கள். அதுமட்டுமின்றி, வெண்ணிற ஒளிவீசும் பெண்களின் கண்விழிகளை நிலவுடனும் கடல்முத்துடனும் ஒளிவீசும் மணிகளுடனும் ஒப்பிடுவர். உருண்டு திரண்ட அவரது விழிகளின் மேல் கண்ணிமையில் வண்ணங்களைத் தீட்டி அழகுசெய்திருக்கும்போது அவரது கண்களை மூங்கில்காயுடனும் பனைநுங்குடனும் தென்னையின் இளநீர்க்காயுடனும் கலசத்துடனும் குங்குமச்சிமிழுடனும் தெப்பத்துடனும் ஒப்பிடுவர்.

கண்ணிமை: பெண்களின் கண்ணிமைகளைக் குறிப்பதற்கு மட்டும் அளகம், ஆகம், இறை, ஓதி, கதுப்பு, குறங்கு, கூந்தல், கொங்கை, சிறுபுறம், நுசுப்பு, நுதல், மருங்குல், முலை, மேனி, வயிறு என்று 15 வகையான பெயர்ச்சொற்களைப் பழந்தமிழ்ப் புலவர்கள் பயன்படுத்தி உள்ளனர். பெண்கள் மெல்லிய வரிகளை உடைய தமது இமைகளைக் கருப்புமையினால் பூசி இருக்கும்போது அவற்றைக் கார்மேகங்களுக்கும் யானையின் துதிக்கைக்கும் ஒப்பிடுவர்.  வண்ண மைகளாலோ சந்தன குங்குமத்தாலோ பூசியிருக்கும்போது அவற்றை வேங்கை, முல்லை, தாமரை முதலான பல்வேறு பூக்களின் இதழ்களுக்கும் பூங்கொடிகளுக்கும் மயில்தோகைக்கும் நத்தைகளின் வண்ணவண்ண மேலோட்டிற்கும் செவ்வானத்திற்கும் ஒப்பிடுவர். இவரது கண்ணிமைகள் மிகவும் மெலிந்திருப்பதால் இவற்றை நீர்க்குமிழிகளுடன் ஒப்பிடுவதும் வழக்கமே. வண்ணங்களைத் துறந்த இமைகள் ஆங்காங்கே வெளுத்திருக்கும்போது அவற்றை மரல்செடியின் இலைகளுக்கும் முழுமையாக வெளுத்திருக்கும்போது அவற்றை வெண்ணிறச் சிப்பிகளுக்கும் ஒப்பிடுவர். இமைகளில் உள்ள முடிகள் நரைத்திருக்கும்போது அவற்றை மீன்முள்ளுடனும் கொக்கின் தூவியுடனும் ஒப்பிடுவர்.

கடைக்கண்: பெண்களின் கடைக்கண்ணை எயிறு என்ற சொல்லால் குறித்தனர் புலவர். இமைகளில் மைபூசி கடைக்கண் ஈற்றில் கூரிய வரியினை எழுதியிருக்கும்போது அவற்றை முல்லை, முருக்கம் போன்ற மலர்களின் மொட்டுக்களுடனும் கிளி, நாரை போன்றவற்றின் தலையுடனும் ஒப்பிடுவர். மகிழ்ச்சியினால் கடைக்கண்ணில் இருந்து வழியும் கண்ணீரின் சுவையினை அமிழ்தம், நெல்லிக்காய், நுங்கு போன்றவற்றுடன் ஒப்பிடுவர்.  

நெற்றி: பெண்களின் நெற்றியினைக் குறிக்க அல்குல் என்ற சொல்லைப் பயன்படுத்தினர் புலவர். வண்ண வண்ணப் புள்ளிகளால் அழகுசெய்யப்பட்ட நெற்றியினை பாம்பின் படப்பொறியுடனும் வளைந்த வரிகளால் அழகு செய்திருக்கும்போது அவற்றைக் கடல்அலைகளுடனும் ஒப்பிடுவர். பல வண்ண மாலைகளை அணிந்திருக்கும் நெற்றியினைத் தேரின் நடுவில் உள்ள தட்டுடனும் ஆலவட்டத்துடனும் பூக்கூடையுடனும் ஒப்பிடுவர்.

பெண்களின் கண் மற்றும் கண்சார்ந்த இடங்களைக் குறிக்கப் புலவர்கள் பயன்படுத்திய மேற்கண்ட பல்வேறு சொற்களை ஒருபொருட் பன்மொழி என்று அறியாமல் இவை அனைத்தையும் பெண்களின் பல்வேறு உறுப்புக்களைக் குறிக்கப் பயன்படுத்தி உள்ளனர் என்று தவறாகக் கருதியதன் விளைவே சங்க இலக்கியத்தில் 'கேசாதிபாதம்' என்னும் உத்தி உள்ளது என்று இவர்கள் வாதிடுவதற்கு அடிகோலியது எனலாம்.

கேசாதிபாதம்:

தற்போதைய அழகியல் பெயர்வைப்பு முறைகளுள் ஒன்றுதான் கேசாதிபாதம் என்று கூறப்படுவதாகும். இதனை கேசம் + ஆதி + பாதம் என்று மூன்றாகப் பிரித்து ' முடிமுதலடி அழகியல் ' என்று தமிழ்ப்படுத்திக் கூறலாம். ஒரு பெண்ணுடைய உடலுறுப்புக்களின் அழகினைப் புகழ்ந்து பாடும்போது, அவரது தலைமுடியில் இருந்து துவங்கி அவரது அடி வரையிலும் உள்ள உறுப்புக்களை மேலிருந்து கீழாக வரிசையாக வருமாறு ஒவ்வொன்றாக அமைத்துப் பாடுவதை ' முடிமுதலடி அழகியல் ' என்று கூறுவர்.

முடிமுதல் அழகியல் என்பது சிற்றிலக்கியத்தைச் சேர்ந்த ஒரு இலக்கிய வகையாகும். வடமொழியில் பிரபந்தம் என்று அழைக்கப்படுவதே தமிழில் சிற்றிலக்கியம் என்று கூறப்படுகிறது. பிரபந்தம் என்ற சொல்லாகட்டும்; கேசாதிபாதம் என்ற சொல்லாகட்டும்; இரண்டுமே தமிழ்ச் சொற்கள் அல்லாத நிலையில், இவை இரண்டும் தமிழ் இலக்கியத்திற்கு மிகவும் பிற்காலத்தியவை என்று சொல்லாமலே விளங்கும் !

சங்க இலக்கியத்தில் கேசாதிபாதம் உண்டா?
முடிமுதலடி அழகியல் ஆகிய கேசாதிபாதம் என்னும் இலக்கிய வகை பற்றி தமிழின் மூத்த இலக்கண நூல்களான தொல்காப்பியமோ நன்னூலோ குறிப்பிடவில்லை. சங்க இலக்கியங்களில் இந்த இலக்கியவகை பயின்று வந்திருந்தால், தொல்காப்பியமோ நன்னூலோ கண்டிப்பாக அதைப் பற்றிக் கூறியிருக்கும். ஆனால், இந்த இலக்கண நூல்களில் முடிமுதலடி அழகியல் பற்றிய சிறுகுறிப்பு கூட இல்லை.!!!

சங்க இலக்கியங்களில் கேசாதிபாதம் ஆகிய முடிமுதலடி அழகியல் முறை பின்பற்றப்படவில்லை என்பதற்கு இதுவொன்றே சான்றாக அமையும். இருந்தாலும் பொருநராற்றுப்படையில் இருந்து சில பாடல்வரிகளை எடுத்துக்காட்டி அதில் கேசாதிபாத முறை பின்பற்றப் பட்டிருப்பதாகக் கூறுவார் உளர். இதுபற்றி ஆய்வுசெய்ததில், இந்தப் பொருநராற்றுப்படையில் காணப்படுகின்ற குறிப்பிட்ட சில வரிகள் அதன் ஆசிரியரால் எழுதப்பட்ட வரிசைமுறையில் இருந்து வேண்டுமென்றே பின்னாளில் வரிசை மாற்றி அமைக்கப்பட்டு இருக்கிறது என்பது தெரிய வந்தது. அதாவது, சங்க இலக்கியத்தில் கேசாதிபாத உத்தி கையாளப் பட்டுள்ளது என்று எடுத்துக் காட்டுவதற்காகவே இதை யாரோ செய்திருக்கிறார்கள். பொருநராற்றுப் படையில் வரும் அந்த சில வரிகளின் வரிசைமுறை செயற்கையானவை என்பதை உறுதிப்படுத்தும் முன்னர் பத்துப்பாட்டில் பெண்களின் உறுப்புப்பெயர்கள் எவ்வாறு அமைந்துள்ளன என்று காணவேண்டிய தேவை இருப்பதால் முதலில் அதைக் காணலாம்.

பத்துப்பாட்டில் உறுப்புப்பெயர் வரிசைமுறை:

பத்துப்பாட்டு நூல்களை ஆய்வு செய்ததில், திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி மற்றும் நெடுநல்வாடையில் பெண்களின் உறுப்புப்பெயர்கள் தொடர்ச்சியாக இடம்பெறுகின்ற பல வரிகள் இருப்பது கண்டறியப்பட்டது. அவை பற்றிய தகவல்கள் கீழே தொகுத்துத் தரப்பட்டுள்ளன.

1. திருமுருகாற்றுப்படையில் சூரர மகளிரின் உறுப்பு அழகியல் பற்றி வரி எண் 13 லிருந்து 41 வரை கூறுகிறது. இதில் கூறப்பட்டுள்ள உறுப்புப் பெயர்களின் அமைப்புமுறை பின்வருமாறு: அடி, நுசுப்பு, தோள், அல்குல், மேனி, ஓதி, நுதல், காது, ஆகம், முலை ஆக மொத்தம் 10 பெயர்ச்சொற்கள். இப் பெயர்ச்சொற்களின் அமைப்புமுறையினை நோக்கினால் எவ்வித வரிசைமுறையும் பின்பற்றப்படவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.

2. சிறுபாணாற்றுப்படையில் விறலியரின் அழகியல் பற்றி வரி எண் 13 லிருந்து 32 வரை கூறுகிறது. இதில் கூறப்பட்டுள்ள உறுப்புப் பெயர்களின் வரிசைமுறை பின்வருமாறு: கதுப்பு, அடி, குறங்கு, ஓதி, முலை, எயிறு, நுதல் ஆக மொத்தம் 7 பெயர்ச்சொற்கள். இப் பெயர்ச்சொற்களின் அமைப்புமுறையினை நோக்கினால் எவ்வித வரிசைமுறையும் பின்பற்றப்படவில்லை என்பதைத் தெளிவாக அறியலாம். 

3. மதுரைக்காஞ்சியில் பெண்களின் உறுப்பு அழகியல் பற்றி வரி எண் 410 முதல் 418 வரை கூறுகிறது. இதில் கூறப்பட்டுள்ள உறுப்புப் பெயர்களின் வரிசைமுறை பின்வருமாறு: கண், எயிறு, வாய், இறை, தோள், முலை, கூந்தல் ஆக மொத்தம் 7 பெயர்ச்சொற்கள். இப் பெயர்ச்சொற்களின் அமைப்புமுறையினை நோக்கினால் எவ்வித வரிசைமுறையும் பின்பற்றப்படவில்லை என்பது தெளிவு.

4. நெடுநல்வாடையில் பெண்களின் உறுப்பு அழகியல் பற்றி வரி எண் 136 முதல் 151 வரை கூறுகிறது. இதில் கூறப்பட்டுள்ள உறுப்புப் பெயர்களின் வரிசைமுறை பின்வருமாறு: முலை, ஆகம், நுதல், ஓதி, கண், காது, முன்கை, விரல், அல்குல், மேனி, தோள், முலை, நுசுப்பு, அடி ஆக மொத்தம் 13 பெயர்ச்சொற்கள். ( முலை என்ற சொல் இருமுறை வந்திருக்கிறது.). இப் பெயர்ச்சொற்களின் அமைப்புமுறையினை நோக்கினால் எவ்வித வரிசைமுறையும் பின்பற்றப்படவில்லை என்பது உள்ளங்கை நெல்லிக்கனி எனத் தெரிகிறது.

5. பொருநராற்றுப்படையில் பாடினியின் உறுப்பு அழகியல் பற்றி வரி எண் 25 லிருந்து 42 வரை கூறுகிறது. இதில் கூறப்பட்டுள்ள உறுப்புப் பெயர்களின் அமைப்புமுறை பின்வருமாறு: கூந்தல், நுதல், புருவம், கண், வாய், பல், காது, கழுத்து, தோள், முன்கை, விரல், உகிர், ஆகம், முலை, கொப்பூழ், நடு, அல்குல், குறங்கு, தாள், அடி ஆக மொத்தம் 20 பெயர்ச்சொற்கள். இப் பெயர்ச்சொற்களின் அமைப்புமுறையினை நோக்கினால், இவை இச்சொற்களுக்கான தற்போதைய பொருள்களின் அடிப்படையில் மிகச் சரியான வரிசைமுறையில் அமைக்கப்பட்டிருப்பதை அறியலாம்.

பொருநராற்றுப்படையில் கேசாதிபாதம் இல்லை:

பொருநராற்றுப்படையில் பெண்களின் உறுப்புப்பெயர்கள் கேசாதிபாத அதாவது முடிமுதலடி அழகியல் அமைப்புமுறைப்படிப் பாடப்பெறவில்லை என்பதைக் கீழ்க்காணும் கருத்துக்களின் அடிப்படையில் நிறுவலாம்.

1. பொருநராற்றுப்படையில் சிலவரிகளின் வரிசைமுறை செயற்கையானவை:

மேலே கண்டவாறு, ஆற்றுப்படை நூல்களில் திருமுருகாற்றுப்படையிலும் சிறுபாணாற்றுப்படையிலும் பெண்களின் உறுப்புப் பெயர்கள் எவ்வித வரிசைமுறையிலும் அமைக்கப்பெறாது பாடப்பெற்றிருக்க, ஏறத்தாழ ஒரே காலகட்டத்தில் இயற்றப்பட்ட ஒரேமாதிரியான அமைப்புமுடைய பொருநராற்றுப்படையில் மட்டும் வரிசைமுறையில் அமைத்துப் பாடப்பெற்றிருப்பது முரணாகத் தோன்றுகிறது. இப்பாட்டில் வரும் சில வரிகளின் வரிசைமுறை செயற்கையானவை என்று கூறுவதற்கு இதுவே அடிப்படையாக அமைகிறது.

2. பொருநராற்றுப்படையில் வரும் உறுப்புப்பெயர்கள் ஒருபெண்ணுக்குரியவை அல்ல:

திருமுருகாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி மற்றும் நெடுநல்வாடையில் வரும் பெண்களின் உறுப்புப்பெயர்கள் ஒரேஒரு பெண்ணுக்கானவை அல்ல. திருமுருகாற்றுப்படையானது சூரரமகளிர் பற்றியும், சிறுபாணாற்றுப்படையானது விறலியரைப் பற்றியும் மதுரைக்காஞ்சியும் நெடுநல்வாடையும் பல பெண்களைப் பற்றியும் பேசுகிறது. இந்நிலையில் பொருநராற்றுப்படை மட்டும் பாடினி என்று ஒரே ஒரு பெண்ணைப் பற்றி மட்டும் கூறுமா?. என்ற கேள்வி எழுகிறது. ஆய்வுசெய்ததில், பொருநராற்றுப்படையும் ஏனைய நூல்களைப் போலவே பாடினி என்று ஒரே ஒரு பெண்ணை மட்டும் பாடவில்லை. உண்மையில் அக் கூட்டத்தில் பல பாடினிகள் இருந்தனர் என்பதனை ' ஆடு பசி உழந்த நின் இரும் பேர் ஒக்கலொடு ' என்ற 61 ஆவது வரி விளக்கிநிற்கிறது. அத்துடன், பாடினி என்ற சொல்லானது ஒருபெண்ணை மட்டுமின்றி பல பெண்களைக் குறிக்கவும் பயன்படுத்தப் பட்டுள்ளது. சான்றாக, புறநானூற்றுப் பாடல் 361 ல் ' புரி மாலையர் பாடினிக்குப் பொலம் தாமரைப்பூ பாணரொடு ' என்ற சொற்றொடரில் பாடினி என்ற சொல்லானது பலரைக் குறிக்கப் பயன்பட்டுள்ளதை அறிந்துகொள்ளலாம். மேலும் 'பாடினியர்' என்ற தனிச்சொல்லாடலும் சங்க இலக்கியங்களில் இல்லை. இதிலிருந்து, பொருநராற்றுப்படையில் வரும் பெண்களின் உறுப்புப்பெயர்கள் ஒரே பெண்ணைக் குறிக்காமல் பல பெண்களைக் குறித்து வருபவையே என்பது உறுதியாகிறது.

முடிவுரை:

கேசாதிபாதம் எனப்படும் முடிமுதலடி அழகியல் உத்தியானது ஒரே பெண்ணைப் பாடுவதை அதாவது அவளது உறுப்புக்களின் அழகினை முடிமுதல் அடிவரையிலுமாக வரிசையாக வருமாறு அமைத்துப் பாடுவதனை அடிப்படையாகக் கொண்டது. ஆனால், பொருநராற்றுப் படையிலும் சரி ஏனை பத்துப்பாட்டு நூல்களிலும் சரி, உறுப்புப் பெயர்கள் ஒரே பெண்ணைப் பற்றிக் கூறாமல் பல்வேறு பெண்களைப் பற்றியே கூறுகிறது என்று மேலே கண்டோம். மேற்கண்ட கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும்போது, பொருநராற்றுப்படையில் வரும் பெண்களின் உறுப்புப் பெயர்கள் கேசாதிபாத முறையில் அமைத்துப் பாடப்பெறவில்லை என்பதும் அப் பெயர்ச்சொற்கள் பெண்களின் அந்தரங்க உறுப்புக்களைக் குறித்து வரவில்லை என்பதும் உறுதிசெய்யப்படுகிறது.



............. தொடரும்........

சனி, 27 மே, 2017

கண்ணும் கண்சார்ந்த இடமும் - பகுதி 7 ( சங்ககாலப் பெண்கள் மேலாடை அணிந்தார்களா? )

முன்னுரை:

கண்ணும் கண்சார்ந்த இடமும் என்ற ஆய்வுக்கட்டுரையின் முதல் ஆறு பகுதிகளில் அல்குல் முதல் வயிறு வரையிலான பல்வேறு பெயர்ச் சொற்கள் குறிக்கின்ற பெண்களின் உடல் உறுப்புக்களைப் பற்றி அறிந்துகொண்டோம். இவற்றில் குறிப்பாக முலை என்ற பெயரும் கொங்கை என்ற பெயரும் பெரும்பாலான இடங்களில் பெண்களின் கண்களையே குறிக்கும் என்று ஆதாரங்களுடன் விரிவாகக் கண்டோம். இந்த புதிய ஆய்வு முடிவுகளுக்கு ஆதரவாகக் கூறப்படுவது யாதெனில், சங்ககாலப் பெண்கள் தமது முலைகளிலும் கொங்கைகளிலும் சந்தனம், குங்குமத்தால் மெழுகுவதும் மைகொண்டு தொய்யில் எழுதுவதும் பூந்தாதுக்களைக் கொண்டு அப்பி அழகுசெய்வதும் ஆகிய செயல்களைச் செய்ததாக இலக்கியப் பாடல்கள் பலவும் கூறுகின்ற செய்திகளாகும்.

ஆனால் சிலர் இதை ஏற்க மறுத்து, முலையும் கொங்கையும் பெண்களின் மார்பகங்களையே குறிக்கும் என்று கூறுகின்றனர். இவர்கள் கூற்றுப்படி, முலையும் கொங்கையும் மார்பகத்தினைக் குறிப்பதாக இருந்தால், பெண்கள் இத்தகைய அழகூட்டும் செயல்பாடுகளை மூடி மறைக்கப்படுவதான தங்கள் மார்பகத்தில் ஏன் செய்யவேண்டும்?. இவ்வளவு அழகு செய்துவிட்டு அதனை ஆடைகொண்டு மூடிமறைத்து விட்டால் அதனை யாரும் கண்டு மகிழமுடியாது; பாராட்டவும் முடியாது. எனவே முலையும் கொங்கையும் மூடி மறைக்கப்படுவதான மார்பகங்களை அன்றி எப்போதும் எளிதாகக் காணப்படத்தக்க கண்களையே பெரும்பாலும் குறிக்கும் என்ற கருத்து வலுவாக முன்வைக்கப்பட்டது. ஆனால் இதையும் அவர்கள் ஏற்க மறுத்து, சங்க காலப் பெண்கள் யாரும் மேலாடை இன்றியே வாழ்ந்தனர் என்றும் தமது அழகூட்டும் செயல்கள் அனைத்தையும் மூடி மறைக்கப்படாத தமது மார்பகங்களிலேயே செய்துவந்தனர் என்றும் எவ்வித ஆதாரங்களும் இன்றி கூறிவருகின்றனர். இவர்களது தவறான எண்ணங்களுக்கும் பரப்புரைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், சங்ககாலப் பெண்கள் மேலாடை அணிந்தே வாழ்ந்து வந்தனர் என்ற கருத்தினை ஆணித்தரமாக உறுதிப்படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

பழந்தமிழர் ஆடைப் பெயர்கள்:

பழந்தமிழர்கள் அணிந்த பல்வேறு ஆடைகளின் பெயர்களாக தமிழ் விக்கிப்பீடியா கீழ்க்காண்பவற்றைக் காட்டுகிறது.

உடை, தழையுடை, துகில், கலிங்கம், அறுவை, சிதார், ஆடை, உடுக்கை, கச்சு, ஈரணி, தானை, காழகம், போர்வை,     கச்சை, வம்பு, மடி, பட்டு, சீரை, படம், படாம், பூங்கரைநீலம், உத்தரியம், கம்பலம், கம்பல், கவசம், சிதர்வை,     தோக்கை, வார், மெய்ப்பை, மெய்யாப்பு, புட்டகம், தூசு, ஒலியல், அரணம், சிதவல், நூல், வாலிது, வெளிது, கச்சம்,     கூறை, அரத்தம், ஈர்ங்கட்டு, புடைவை, பட்டம், உடுப்பு, கோடி, கஞ்சுகம், சிதர், சிதவற்றுணி, வட்டுடை, வடகம்,     மீக்கோள், வங்கச்சாதர், வட்டம், நீலம், குப்பாயம், கோசிகம், பஞ்சி, தோகை, கருவி, சாலிகை, பூண், ஆசு, வட்டு,   காம்பு, நேத்திரம், வற்கலை, கலை, கோதை, நீலி, புட்டில், சேலை, சீரம், கொய்சகம், காழம், பாவாடை, கோவணம்.

இவை அனைத்தையும் பற்றி இக்கட்டுரையில் குறிப்பிட இயலாது என்பதால் இவற்றுள் சில ஆடைப்பெயர்களை மட்டும் எடுத்துக்கொண்டு அவை தொடர்பான ஆதாரங்கள் மட்டுமே இங்கு முன்வைக்கப் படுகிறது.

சங்கத் தமிழரின் ஆடைக் கொள்கை:

சங்க காலத் தமிழர்கள் ஆடைகளின்மேல் சிறப்பான கவனம் செலுத்தினர் என்பதை மேலே குறிப்பிடப்பட்டுள்ள பல்வேறு ஆடைப்பெயர்களில் இருந்தே தெரிந்து கொள்ளலாம். ஆடை என்று வரும்போது ஆண்களுக்கும் பெண்களுக்கும் வேறுபாடுகள் இருக்கவே செய்யும். ஒரு ஆண் குறைந்தபட்சமாக தனது இடுப்பில் ஒரு ஆடையினை சுற்றிக் கொண்டுவிட்டால் போதுமானது. அதுவே அவனது மானத்தைக் காக்கப் போதுமானது என்று நாம் கருதுகிறோம். ஆனால் ஒரு பெண்ணுக்கு அது மட்டும் போதாது. குறைந்தது கீழாடை, மேலாடை என்ற இரண்டு ஆடைகளாவது வேண்டும். ஒரு சாதாரணப் பெண்ணாகட்டும் அல்லது அரசனின் மனைவியாகட்டும் இந்த இரண்டு உடைகள் அவசியமே. ஒரு ஆணுக்கோ பெண்ணுக்கோ இரண்டு ஆடைகளுக்கு மேல் தேவையில்லை என்றும் எஞ்சியிருக்கும் ஆடைகளை இல்லாதோருக்குக் கொடுத்து உதவலாம் என்றும் கீழ்க்காணும் பாடலில் அறிவுறுத்துகிறார் புலவர் நக்கீரனார்.

தெண் கடல் வளாகம் பொதுமை இன்றி
வெண்குடை நிழற்றிய ஒருமையோர்க்கும்
நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான்
கடுமா பார்க்கும் கல்லா ஒருவற்கும்
உண்பது நாழி உடுப்பவை இரண்டே
பிறவும் எல்லாம் ஓர் ஒக்கும்மே
செல்வத்து பயனே ஈதல்
துய்ப்பேம் எனினே தப்புந பலவே - புறம். 189

வேட்டையாடி உண்ணும் ஒருவனுக்கும் நாட்டை ஆளும் அரசனுக்கும் தேவையான உணவு மற்றும் உடை பற்றி இப் பாடலில் புலவர் குறிப்பிடுகிறார். ஒருநாள் உண்பதற்கு நாழி உணவும் உடுத்துவதற்கு மேலாடை, கீழாடை என்ற இரண்டு ஆடைகளும் இவ் இருவருக்குமே போதுமானது என்கிறார். கீழாடை மட்டும் போதும் மேலாடை தேவையில்லை என்று அவர் சொல்லவில்லை. ஒரு ஆணுக்கே குறைந்தது இரண்டு ஆடைகள் என்று கூறும்போது பெண்ணுக்கு எத்தனை என்று சொல்லத்தேவையில்லை. அவர்களுக்கும் குறைந்தபட்சமாக இரண்டு ஆடைகள் என்பது உறுதி. இதிலிருந்து, சங்க காலத்தில் ஆண்கள் குறைந்தது இரண்டு ஆடைகளை அணிந்திருந்தனர் என்றும் பெண்கள் இரண்டு முதல் மூன்றுவரையிலான ( மேலாடை, கீழாடை, உள்ளாடை உட்பட ) ஆடைகளை அணிந்திருந்தனர் என்றும் முடிவுக்கு வரலாம்.

ஈரணி என்னும் நீச்சலாடை:

சங்கத் தமிழ்ப் பெண்கள் கீழாடையும் மேலாடையும் அணிந்திருந்தனர் என்ற கருத்தை வலியுறுத்தும் வகையில் அவர்கள் அணியும் நீச்சல் உடுப்புக்கு ஈரணி என்று பெயர் வைத்திருக்கின்றனர். ஈரணி என்பது இரண்டு அணி அதாவது இரண்டு உடுப்பு என்ற பொருள் தரும். இளைஞர்களும் இளைஞிகளும் புனல் விளையாட்டில் ஈடுபடும்போது இந்த ஈரணி ஆகிய நீச்சலாடையினை அணிந்துகொண்டே விளையாடுவர். இது கீழாடை, மேலாடை என்று இரு பிரிவாக இருக்கும். தற்காலத்தில் நீச்சலின் போது அணியப்படும் டூபீஸ் ஆடை போன்றதாக இதைக் கருதலாம். இதுபற்றிக் கூறும் இலக்கியப் பாடல் கீழே: 

.... இளையரும் இனியரும் ஈரணி அணியின்
இகல் மிக நவின்று தணி புனல் ஆடும் ... - பரி. 6

புனல் விளையாட்டு முடிந்தபின்னர், தான் அணிந்திருந்த ஈரணியின் ஈரம் காயும்வரை தனது கண்களையும் இமைகளை அழகுசெய்யத் துவங்குகிறாள் ஒரு பெண். இதைப்பற்றிக் கூறும் இலக்கியப் பாடல்.

.... விரும்பிய ஈரணி மெய் ஈரம் தீர
சுரும்பு ஆர்க்கும் சூர் நறா ஏந்தினாள் கண் நெய்தல் ... பரி. 7

வைகை ஆற்றில் புனல் விளையாட்டுக்குச் செல்லும்போது பெண்கள் இந்த ஈரணியினை வரிசையாக ஏந்திச்செல்லும் காட்சியினை விவரிக்கிறது கீழ்க்காணும் பரிபாடல்.

....ஈரணிக்கு ஏற்ற நறவு அணி பூந்துகில் நன் பல ஏந்தி
பிற தொழின பின்பின் தொடர
செறி வினை பொலிந்த செம் பூங்கண்ணியர்.. - பரி. 22

சங்க காலத்தில் வைகை ஆற்றில் புனல் விளையாட்டு என்பது ஒரு பெரும் விழாவாகக் கொண்டாடப் பட்டிருக்கிறது என்ற செய்தியை மேற்காணும் பரிபாடல் விளக்கமாகக் கூறுகிறது. இதை உறுதிப்படுத்துவதைப் போல பெருங்கதையிலும் சில செய்திகள் காணக் கிடைக்கின்றன.  புனல் விளையாட்டுக்குரிய ஈரணி என்னும் ஆடையினை விற்பனை செய்தனர் என்றும் அதனை முதல்நாளே பலரும் வாங்கினர் என்றும் கீழ்க்காணும் பெருங்கதைப் பாடல் வரிகள் பறைசாற்றுகின்றன.

... நாள் நீராட்டணி நாளை என்று அறைதலும்
விளையாட்டு ஈரணி விற்றும் கொள்ளும்
தொலைவுஇல் மூதூர் தொன்றின மறந்து உராய்.... - உஞ்சை. 37

புனல் விளையாட்டுக்கென்றே சிறப்பாக தனி ஆடையினை அணிந்த பண்பாட்டினை உடையவர்கள் சங்கத் தமிழர்கள். இவ்வளவு உயர்ந்த பண்பாட்டினை உடைய இவர்கள் மேலாடை இன்றி வாழ்ந்தனர் என்ற செய்தி எவ்வளவு தவறானது என்பது தெள்ளிதின் விளங்கும்.

மங்கையும் மஞ்ஞையும்:

சங்கப் பாடல்கள் பலவற்றில் பெண்களை மயிலுடன் உவமைப் படுத்திப் புலவர்கள் கூறுகின்றனர். இதற்குக் காரணமாகத் தற்போது கூறப்படுகின்ற கருத்து யாதெனின், பெண்களின் தலைமயிர் பின்னால் தொங்குவதைப் போல மயிலுக்குத் தோகையானது பின்னால் தொங்குகிறது என்பதாகும். இது மிகத் தவறான கருத்தாகும். காரணம், கருமைநிறத்தில் அழகின்றி இருக்கும் தலைமயிரானது பலவண்ணங்களில் பல வடிவங்களில் அழகாகக் காணப்படும் மயில் தோகைக்கு ஒருபோதும் ஒப்புமையாக முடியாது.

சங்க கால இளம்பெண்கள் பலரும் பூவேலைப்பாடுகளை கரைகளில் அதாவது ஓரங்களில் உடைய நீலநிற ஆடையினை அணிந்திருந்தனர். இந்த ஆடையினைப் பூங்கரை நீலம் என்று இலக்கியம் குறிப்பிடுகிறது. பூங்கரை நீலம் = பூ + கரை + நீலம் = பூவேலைப்பாடுகளை ஓரங்களில் உடைய நீல ஆடை. ஆடையின் மேல்பகுதியில் நீல நிறமும் கீழ்ப்பகுதியில் பூவேலைப்பாடுகளும் இருக்கும். இந்த ஆடையைப் பற்றிக் கூறுகின்ற சில இலக்கிய இடங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

... தீம் பால் கறந்த கலம் மாற்றி கன்று எல்லாம்
தாம்பின் பிணித்து மனை நிறீஇ யாய் தந்த
பூங்கரை நீலம் புடை தாழ மெய் அசைஇ .... - கலி. 111

பசுக்களில் இருந்து பாலைக் கறந்தபின்னர் கன்றுகளை எல்லாம் தாம்புக் கயிற்றுடன் பிணித்து வீட்டில் இருத்திவிட்டு தனது அன்னை தந்த பூங்கரை நீல ஆடையினை பக்கங்களில் தாழ்ந்து தொங்குமாறு உடல்முழுவதும் உடுத்தியதாக மேற்காணும் பாடல் கூறுகிறது. இப்பாடலில் வரும் ' புடை தாழ மெய் அசைஇ ' என்ற சொற்றொடரே போதும் அக்காலத்தில் பெண்கள் தமது மார்பகங்களை மேலாடைகொண்டு மறைத்தே இருந்தார்கள் என்பதை உறுதி செய்வதற்கு.

... யானும் என் சாந்து உளர் கூழை முடியா
நிலம் தாழ்ந்த பூங்கரை நீலம் தழீஇ தளர்பு ஒல்கி
பாங்கு அரும் கானத்து ஒளித்தேன் .... - கலி. 115

நிலம் தாழ தான் அணிந்திருந்த பூங்கரை நீலமாகிய ஆடையினை மெய்யுடன் சேர்த்து அணைத்துக்கொண்டு தளர்வாக நடந்து சென்றாள் என்ற செய்தியினை மேற்காணும் பாடல் குறிப்பிடுகிறது. மயில் கழுத்து போலும் நீல வண்ணமும் பூவேலைப்பாடுகளும் கொண்ட ஆடையினை அணிந்த இளம்பெண்கள் வேங்கை மரத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்கும்போது அதைப் பார்க்கும் புலவருக்கு வண்ண மயில் ஒன்று வேங்கை மரத்தின் மேல் இருப்பதாகத் தோன்றுகிறது. காரணம், அப் பெண்கள் அணிந்திருக்கும் நீலநிற மேலாடையும் அதன் கீழ்ப்பகுதியில் இருக்கும் பூவேலைப்பாடுகளும். சான்றுக்குச் சில பாடல்வரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

அரும்பு அற மலர்ந்த கரும் கால் வேங்கை
மேக்கு எழு பெரும் சினை இருந்த தோகை
பூ கொய் மகளிரின் தோன்றும் நாடன் .. - குறு.26

விரிந்த வேங்கை பெரும் சினை தோகை
பூ கொய் மகளிரின் தோன்றும் நாட.... - ஐங்கு.297

எரி மருள் வேங்கை இருந்த தோகை
இழை அணி மடந்தையின் தோன்றும் நாட .. - ஐங்கு. 294

நாட்பட்ட பழச்சாற்றினை நீர் என்று கருதி பருகிய வண்ண மயிலொன்று போதையேறியதால் ஆடுமகள் கயிற்றின் மேல் இருபுறங்களிலும் மாறிமாறிச் சாய்ந்தவாறு நடப்பதைப் போல தள்ளாடித் தள்ளாடி நடப்பதைக் காட்டும் பாடல் வரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

.....பலவின் நெகிழ்ந்து உகு நறும் பழம் விளைந்த தேறல்
நீர் செத்து அயின்ற தோகை வியல் ஊர்
சாறு கொள் ஆங்கண் விழவுக்களம் நந்தி
அரி கூட்டு இன் இயம் கறங்க ஆடுமகள்
கயிறு ஊர் பாணியின் தளரும் சாரல் .... - குறி.190

இப்பாடலில் ஆடுமகளை மயிலுடன் ஒப்புமைப் படுத்தியன் காரணம், அவள் அணிந்திருந்த ஆடைகளின் வண்ணமே. மயில்கழுத்து போன்ற நீலநிற மேலாடையும் மயில்தோகை போன்று பூவேலைப்பாடுடைய கீழாடையும் அணிந்திருக்கும் பெண்ணைப் பார்த்தால் யாருக்குத்தான் மயிலின் நினைவு தோன்றாது?. எனவே புலவர் அப்பெண்ணை மயிலுடன் உவமைப்படுத்தியதில் வியப்பில்லை. அடுத்து இன்னொரு சான்று.

தலைவனைச் சந்திப்பதற்கு தலைவியானவள் நள்ளிரவில் மழைபெய்யும் நேரத்தில் வருகிறாள். அப்போது அவள் நுண்ணிய நூலினால் செய்யப்பட்ட ஆடையினை தனது உடல் முழுவதும் போர்த்தியவாறு காலில் அணிந்திருக்கும் சிலம்புகள் கூட ஒலிக்காதவண்ணம் மெதுவாக மழையில் நனையாமல் மறைந்து மறைந்து வருகிறாள். அவள் அணிந்திருக்கும் ஆடையினைப் பார்க்கின்ற புலவருக்குக் கார்மேகங்களைக் கண்டு தோகை விரித்தாடுகின்ற மயிலின் நினைவு வந்துவிட்டது. இதை அழகாக விவரிக்கும் பாடல்வரிகள் கீழே:

கூறுவம் கொல்லோ கூறலம்கொல் என
கரந்த காமம் கைந்நிறுக்க அல்லாது
நயந்து நாம் விட்ட நன் மொழி நம்பி
அரைநாள் யாமத்து விழு மழை கரந்து
கார் விரை கமழும் கூந்தல் தூ வினை
நுண் நூல் ஆகம் பொருந்தினள் வெற்பின்
இள மழை சூழ்ந்த மட மயில் போல ..... - அகம். 198

இப்பாடலில் வரும் ' நுண் நூல் ஆகம் பொருந்தினள் ' என்ற வரியானது ' நுட்பமான ஆடையினை உடலின்மேல் அணிந்திருந்தாள் ' என்ற செய்தியினைத் தாங்கி நிற்கிறது. மயிலுடன் இப் பெண்ணை உவமைப்படுத்தியதில் இருந்து இந்தப் பெண்ணும் முன்னர் கண்டதுபோல நீலநிற மேலாடையும் பூவேலைப்பாடுடைய கீழாடையும் அணிந்திருக்க வேண்டும் என்பது தெரிகிறது. மயிலுக்கு மஞ்ஞை என்று பெயர் வைத்ததுகூட மங்கையுடன் அதற்குள்ள இத் தொடர்பு கருதி இருக்கலாம் என்றே தோன்றுகிறது.

சமையலும் சங்ககாலப் பெண்களும்:

சங்க காலப் பெண்கள் சமையல் செய்யும் அழகினைப் பற்றி ஒருசில பாடல்கள் விரிவாகவே கூறியுள்ளன. அவற்றுள் நற்றிணை காட்டும் நளபாகத்தினை முதலில் காணலாம்.

தட மருப்பு எருமை மட நடை குழவி
தூண்தொறும் யாத்த காண்தகு நல் இல்
கொடும் குழை பெய்த செழும் செய் பேதை
சிறு தாழ் செறித்த மெல் விரல் சேப்ப
வாளை ஈர்ம் தடி வல்லிதின் வகைஇ       
புகை உண்டு அமர்த்த கண்ணள் தகைபெற
பிறை நுதல் பொறித்த சிறு நுண் பல் வியர்
அம் துகில் தலையில் துடையினள் நம் புலந்து
அட்டிலோளே அம் மா அரிவை
எமக்கே வருக தில் விருந்தே சிவப்பு ஆன்று       
சிறு முள் எயிறு தோன்ற
முறுவல் கொண்ட முகம் காண்கம்மே - நற். 120

எருமை மாட்டினை அதன் கன்றுடன் சேர்த்து தூணில் கட்டிவிட்டு வாளைமீனை சமைக்கிறாள் தலைவி. அப்போது அவள் கண்களில் புகை சூழ்ந்து கண்சிவந்து முகமெல்லாம் வியர்க்கிறது. அந்த வியர்வையினை தனது மேலாடையின் நுனி அதாவது முந்தானை கொண்டு துடைக்கிறாள். இப்பாடலில் வரும் ' சிறுநுண் பல்வியர் அம் துகில் தலையில் துடையினள் ' என்ற சொற்றொடர் அவள் மேலாடை அணிந்திருந்தாள் என்று மிகத் தெளிவாகக் காட்டுகிறது. காரணம், கீழாடை கொண்டு தலையில் உள்ள வியர்வையினைத் துடைப்பது கடினம் என்பதால் அப்படி யாரும் செய்வதில்லை.

இதேபோன்ற ஒரு காட்சி குறுந்தொகையிலும் உண்டு. அப் பாடல் கீழே தரப்பட்டுள்ளது.

முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல்
கழுவுறு கலிங்கம் கழாஅ துடைஇக்   
குவளை உண்கண் குய்ப்புகை கமழத்
தான் துழந்து அட்ட தீம்புளிப் பாகர்
இனிது எனக் கணவன் உண்டலின்
நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒண்நுதல் முகனே. - குறு. 167

கெட்டியாகிப்போன தயிரினைக் கைவிரல்களால் பிசைந்தவள் விரல்களைக் கழுவாமல் அப்படியே தனது ஆடையில் துடைத்துக் கொள்கிறாள். அத்துடன் தாளிக்கும்போது எழுந்த புகையினால் கலங்கிய தனது கண்களையும் வியர்த்த தனது முகத்தினையும் நீரில் கழுவாமல் அதே துணியினால் துடைத்துக் கொள்கிறாள். இப்பாடலில் வரும் ' கழுவுறு கலிங்கம் கழாது துடைஇ ' என்ற சொற்றொடரை இவ் இரண்டுக்குமே பொருத்திக் கொள்ளலாம். முன்கண்ட பாடலில் உள்ளதைப் போலவே இப்பாடலில் வரும் தலைவியும் தனது முகத்தினையும் கையினையும் தனது மேலாடையின் முந்தானையால் தான் துடைத்திருக்க வேண்டும். ஆக, சங்க காலத் தமிழ்ப் பெண்கள் மேலாடை அணிந்தனர் என்பதற்கு இவ் இரண்டு பாடல்களையும் சான்றாகக் கொள்ளலாம்.

கண்ணீரும் முந்தானையும்:

பெண்கள் அழும்போது கண்களில் பெருகும் கண்ணீரைத் தமது ஆடையின் முந்தானை கொண்டு துடைப்பது வழக்கம். இதேபோன்ற ஒரு காட்சியினை படம்பிடித்துக் காட்டுகிறது கீழ்க்காணும் பரிபாடல்.

.....கருங்கையின் ஆயத்தார் சுற்றும் எறிந்து
குரும்பையின் முலை பட்ட பூ நீர் துடையாள்
பெருந்தகை மீளி வருவானைக் கண்டே
இரும் துகில் தானையின் ஒற்றி .... - பரி. 16

பொருள்: கருங்கை உடைய ஆயத்தாராகிய கள்வர்களை அழித்து வென்று பெருமைகொண்ட படைத்தலைவனைப் போல வருபவனைக் கண்டு நுங்கினை ஒத்த தனது கண்களில் பொங்கிய ஆனந்தக்கண்ணீரைத் துடைக்காமல் அப்படியே இருந்த அவள் பின்னர் தனது மேலாடையின் முந்தானையால் ஒற்றி எடுத்து......

இப்பாடலில் வரும் ' இரும் துகில் தானை ' என்பது அப்பெண் அணிந்திருந்த ' ஆடையின் முந்தானை ' என்பது மிகத் தெளிவாகவே தெரிகிறது. ஆடையின் முன் பகுதி என்று பொருள்தருவதான முன்தானை என்பதே முந்தானை என்று மருவி வழங்கப்படுகிறது. முந்தானை என்று கூறப்படுவதில் இருந்தே அது மேலாடை தான் என்பது உறுதியாகிறது. சங்ககாலத் தமிழ்ப் பெண்கள் மேலாடை அணிந்தனர் என்பதற்கு இப்பாடலையும் ஒரு சான்றாகக் கொள்ளலாம்.

சங்ககாலப் பெண்களும் மேலாடையும்:

சங்ககாலப் பெண்கள் மேலாடை அணிந்தனர் என்பதற்கு மேலே பல சான்றுகளைக் கண்டோம். இருப்பினும் இன்னும் சில சான்றுகளைக் கீழே விரிவாகக் காணலாம்.

அகநானூற்றின் கீழ்க்காணும் பாடலானது சங்ககாலத் தமிழ்ச் சமுதாயத்தில் திருமணமும் முதலிரவும் எப்படி நடைபெற்றது என்பதை மிக விரிவாக விளக்குகிறது.


உழுந்து தலைப்பெய்த கொழும் களி மிதவை
...........................................................................
பேர் இற்கிழத்தி ஆக என தமர் தர
ஓர் இல் கூடிய உடன்புணர் கங்குல்
கொடும் புறம் வளைஇ கோடி கலிங்கத்து
ஒடுங்கினள் கிடந்த ஓர் புறம் தழீஇ
முயங்கல் விருப்பொடு முகம் புதை திறப்ப
அஞ்சினள் உயிர்த்தகாலை ..... - அகம்.86

முதலிரவின்போது மனைவியானவள் தனது உடல்முழுவதும் ஆடையினால் சுற்றி அணிந்து முகத்தையும் மறைத்து ஒடுங்கி இருக்கிறாள். அவளது முகத்தைக் காணும் ஆவல் கொண்ட கணவன் மெல்ல அவளது முகத்திரையினை விலக்கவும் அவள் அஞ்சி நடுங்குகிறாள். இப்பாடலில் வரும் ' கொடும்புறம் வளைஇ கோடி கலிங்கத்து ஒடுங்கினள் ' என்ற சொற்றொடரானது மிகத் தெளிவாக அவள் தனது உடல் முழுவதையும் ஆடைகொண்டு மறைத்திருப்பதைக் காட்டுகிறது. சங்ககாலப் பெண்கள் எப்போதுமே மேலாடை அணியாமல் இருந்திருந்தால், முதலிரவின்போது மட்டும் மேலாடை அணிவார்களா?. அவ்வாறு யாரும் செய்யமாட்டார்கள் என்பதால், சங்ககாலத்துத் தமிழ்ப் பெண்களுக்கு மேலாடை அணியும் வழக்கம் உண்டு என்பது உறுதியாகிறது.

இதேபோன்ற ஒரு காட்சி கீழ்க்காணும் பாடலிலும் வருகிறது.

மைப்பு அற புழுக்கின் நெய் கனி வெண் சோறு
...............................................................
தமர் நமக்கு ஈத்த தலை நாள் இரவின்
உவர் நீங்கற்பின் எம் உயிர் உடம்படுவி
முருங்கா கலிங்கம் முழுவதும் வளைஇ
பெரும் புழுக்கு உற்ற நின் பிறை நுதல் பொறி வியர்
உறு வளி ஆற்ற சிறு வரை திற என
ஆர்வ நெஞ்சமொடு போர்வை வவ்வலின்
உறை கழி வாளின் உருவு பெயர்ந்து இமைப்ப
மறை திறன் அறியாள் ஆகி ஒய்யென
நாணினள் இறைஞ்சியோளே .......... - அகம். 136

இப்பாடலிலும் முதலிரவின்போது தனது உடலையும் முகத்தையும் ஆடையினால் மறைத்திருந்த மனைவியைப் பார்த்து ' உனது முகமெல்லாம் வியர்த்திருக்கும்; கொஞ்சமாகத் திறந்தால் காற்று வரும் ' என்று கூறி அவளது முகத்திரையினை மெல்லத் திறக்கிறான் அவளது கணவன். உறையில் இருந்து எடுக்கப்பட்ட வாளினைப் போல ஒளிவீசும் அவளது கண்களைக் காண்கிறான். அவளோ தனது கண்களை மறைக்கும் வழி அறியாதவளாய், நாணம் மேலிடத் தலையைக் கவிழ்த்துக் கொள்கிறாள். இப்பாடலில் வரும் ' முருங்கா கலிங்கம் முழுவதும் வளைஇ ' என்ற சொற்றொடரானது அவள் தனது உடல் முழுவதையும் ஆடையினால் மறைத்திருந்தாள் என்பதனை மிகத் தெளிவாக விளக்குகிறது. அதுமட்டுமின்றி, அவள் தனது முகத்தையும் மூடி மறைத்திருந்தாள் என்பதனை ' பெரும்புழுக்கு உற்ற நின் பிறைநுதல் பொறிவியர் உறுவளி ஆற்ற சிறுவரை திற ' என்ற சொற்றொடர் உறுதிப்படுத்துகிறது.

பழந்தமிழ்ப் பெண்டிர் திருமணத்தின்போது புத்தாடை அணிவது வழக்கமே. அதிலும் குறிப்பாக தாமரை மலரின் வண்ணத்தில் அணிவது மரபு போலும். இதைப்பற்றிய சில பாடல் வரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

போது அவிழ் பனி பொய்கை புதுவது தளைவிட்ட
தாது சூழ் தாமரை தனி மலர் புறம் சேர்பு
காதல் கொள் வதுவை நாள் கலிங்கத்துள் ஒடுங்கிய
மாதர் கொள் மான் நோக்கின் மடந்தை தன் துணை ஆக .... - கலி. 69

திருமண நாளன்று மணமகளானவள் செந்தாமரை மலரின் நிறத்தில் ஆடை அணிந்திருந்ததை மேற்காணும் பாடல்வரிகள் கூறுகின்றன. அவள் தனது உடல் முழுவதையுமே ஆடையினால் மறைத்திருந்தாள் என்பதனை ' கலிங்கத்துள் ஒடுங்கிய ' என்ற சொற்றொடர் விளக்கி நிற்கிறது. செந்தாமரை நிறத்துப் புத்தாடையினை மகளிர் விரும்பி அணிகின்ற செய்தியினைக் கூறும் இன்னொரு பாடல் கீழே:

...கதிர் நிழற்கு அவாஅம் பதும நிறம் கடுக்கும்
புது நூல் பூம் துகில் அரு மடி உடீஇ ... - பெருங். உஞ்சை. 42

முடிவுரை:

இதுகாறும் கண்டவற்றில் இருந்து, சங்ககாலத் தமிழ்ப் பெண்கள் மேலாடை அணிந்தே வாழ்ந்தனர் என்ற கருத்து உறுதிசெய்யப் பட்டுவிட்டது. இவர்கள் மேலாடை கொண்டு தமது மார்பகங்களை மூடி மறைத்திருந்தனர் என்ற செய்தியும் இதிலிருந்து பெறப்படுகிறது. வள்ளுவரும் கூட கீழ்க்காணும் குறளில் இவ்வாறு கூறுகிறார்.

கடாஅ களிற்றின்மேல் கட்படாம் மாதர்
படாஅ முலைமேல் துகில் - குறள் - 1087.

இக்குறளில் வரும் முலை என்பதற்குக் கண் என்ற பொருளோ மார்பகம் என்ற பொருளோ எதைக் கொண்டாலும் அதன்மேல் ஆடை அணிந்து மறைத்திருந்தனர் என்ற செய்தி கூறப்பட்டுள்ளது கவனிக்கப்படத் தக்கதாகும்.

சங்ககாலப் பெண்கள் தமது மார்பகங்களை மேலாடை கொண்டு மூடி மறைத்திருந்தனர் என்ற கருத்து உறுதிசெய்யப் பட்டுவிட்ட நிலையில், அவர்கள் தமது மார்பகங்களில் தொய்யில் எழுதவோ சந்தன குங்குமத்தால் பூசவோ, பூந்தாதுக்களை அப்பவோ செய்திருக்க மாட்டார்கள் என்பதும் உறுதியாகிறது. முடிவாக, சங்க இலக்கியங்களில் பயன்படுத்தப்பட்டுள்ள முலை என்ற சொல்லானது பெரும்பாலும் கண் / கண்ணிமையினைக் குறிக்கவே பயன்படுத்தப் பட்டுள்ளது என்பதும் மிகச் சில இடங்களில் மட்டுமே மார்பகம் என்ற பொருளில் பயன்படுத்தப் பட்டுள்ளது என்பதும் ஆணித்தரமாக உறுதிசெய்யப் படுகிறது.

......... தொடரும்......

ஞாயிறு, 21 மே, 2017

கண்ணும் கண்சார்ந்த இடமும் - பகுதி 6 ( முறுவல் - முலை - மேனி - வயிறு )

முன்னுரை:

கண்ணும் கண்சார்ந்த இடமும் என்ற கட்டுரையின் ஆறாவது பகுதியான இதில் முறுவல், முலை, மேனி, வயிறு ஆகிய சொற்களைப் பற்றிச் சுருக்கமாகக் காணலாம்.


முறுவல்:

முறுவல் என்ற சொல்லானது பெண்களைப் பொருத்தமட்டில் கண் என்ற பொருளில் பல இடங்களில் பயன்படுத்தப் பட்டுள்ளது. பெண்களின் வெள்ளொளி வீசும் அழகிய விழிகளை உருண்டு திரண்ட பெரிய வெண்ணிறக் கடல் முத்துடன் ஒப்பிட்டுக் கூறுவது புலவர்களின் வழக்கம். அதைப் பற்றிய சில பாடல்வரிகள் கீழே:

முத்து உறழ் முறுவல் - நெடு - 36
தாழ் நீர முத்தின் தகை ஏய்க்கும் முறுவலாய் - கலி -131

பெண்களின் அழகிய விழிகளை மலர்களுடன் ஒப்பிட்டுப் பாடுவது இலக்கிய வழக்கம் என்று முன்னர் கண்டோம். அதைப்போலவே இங்கும் பெண்களின் முறுவல் ஆகிய விழிகளை முல்லை, ஆம்பல், குலிகம் (இலுப்பை) மலர்களுடன் ஒப்பிட்டுப் பல பாடல்களில் பாடியுள்ளனர் புலவர். ஒருசில பாடல் வரிகள் கீழே:

மாதரார் முறுவல் போல் மண மௌவல் முகை ஊழ்ப்ப - கலி -27
முருக்கு இதழ் குலிகம் ஊட்டிவைத்தன்ன முறுவல் - சிந்தா -1454

பெண்களின் உருண்டு திரண்ட விழிகளை மூங்கில் காய்களுடன் ஒப்பிடுவது பற்றி தோள் என்ற கட்டுரையில் முன்னர் கண்டோம். அதைப்போலவே இங்கும் பெண்களின் முறுவல் ஆகிய விழிகளை மூங்கில் காய்களுடன் ஒப்பிட்டுக் கூறுகின்ற சில பாடல்வரிகள் கீழே தரப்பட்டுள்ளன.

முளை நிரை முறுவல் ஒருத்தியொடு நெருநல் - ஐங் 369
முளை நிரை முறுவலார் ஆயத்துள் எடுத்து ஆய்ந்த - கலி - 15

பெண்களின் கண்களை ஒளிவீசும் நிலவுடன் ஒப்பிடுவது பற்றி நுதல், கொங்கை ஆகிய கட்டுரைகளில் கண்டோம். அதைப்போலவே இங்கும் பெண்களின் முறுவல் ஆகிய விழிகளை நிலவுடன் ஒப்பிட்டுக் கூறும் பாடல்வரிகள் சில:

வாள் நிலா முறுவல் - கம்ப. பால -6
வாள் நிலா முறுவலன் வயங்கு சோதியை - கம்ப. ஆர- 13

நிலவு மட்டும் தான் ஒளிருமா?. மணிகளும் ஒளிருமல்லவா?. அதனால்தான் பெண்களின் ஒளிமிக்க விழிகளை ஒளிவீசும் மணிகளுடன் ஒப்பிட்டுப் புலவர்கள் பாடியுள்ளனர். சான்றுக்குச் சில பாடல்வரிகள் கீழே:

தீம்கதிர் வாள்முகத்தாள் செவ்வாய் மணிமுறுவல் - சிலப்.புகார் 7
மணிமுறுவல் தோன்ற வந்தனை -சிந்தா - 1126

முறுவல் பற்றி அதிக தகவல்களைத் தெரிந்துகொள்ள முறுவல் என்றால் என்ன? என்ற கட்டுரையினைப் படிக்கலாம்.

முலை:

முலை என்ற சொல்லானது பெண்களைப் பொருத்தமட்டில் ஏராளமான இடங்களில் கண் மற்றும் கண்ணிமைகளைக் குறிக்கவும் மிகச்சில இடங்களில் மட்டுமே மார்பகம் என்ற பொருளிலும் பயன்படுத்தப் பட்டுள்ளது. பெண்களின் கண்களை மலர்களுடன் ஒப்பிடும் வழக்கத்தினை முன்னர் கண்டோம். அதைப்போல இங்கும் பெண்களின் முலை ஆகிய விழிகளை பல்வகை மலர்களுடன் ஒப்பிட்டுக் கூறும் சில பாடல்வரிகள்:

பொன் ஈன்ற கோங்கு அரும்பு அன்ன முலையாய் - நால -10
ஞாழல் பூவின் அன்ன சுணங்கு வளர் இள முலை - ஐங்கு -149
குளன் அணி தாமரை பாசரும்பு ஏய்க்கும் இள முலை - கலி -22

பெண்களின் விழிகள் உருண்டு திரண்டு வெண்ணிறத்தில் பளபளப்புடன் ஒளிர்வதால் அதனைப் பனைமரத்தின் நுங்குகளுடன் ஒப்பிட்டுக் கூறுவர் புலவர். இந்த நுங்கினைக் குரும்பை என்றும் இலக்கியங்கள் கூறும். சான்றுக்குச் சில பாடல்வரிகள் கீழே தரப்பட்டுள்ளன:

தீம் கண் நுங்கின் பணை கொள் வெம் முலை - நற் - 392
குரும்பை மென் முலை அரும்பிய சுணங்கின் - அகம் - 253

பெண்களின் அழகிய விழிகளை முத்துடன் ஒப்பிடுவது இலக்கிய வழக்கம் என்று முன்னர் பல கட்டுரைகளில் கண்டோம். இங்கும் அதைப்போல பெண்களின் முலை ஆகிய விழிகளை முத்துடன் ஒப்பிடுகின்ற சில பாடல்வரிகள்:

பரு முத்து உறையும் பணை வெம் முலை - சிந்தா -1518
கடல் நித்திலம் வைத்த கதிர் முலையின் .. - சிந்தா -1515

பெண்களின் மெல்லிய கண்ணிமைகளை மழைநீரில் தோன்றும் நீர்க்குமிழிகளுடன் ஒப்பிட்டுக் கூறும் பாடல்வரிகள் கீழே:

பெயல் துளி முகிழ் என பெருத்த நின் இள முலை - கலி - 56
மழை மொக்குள் அன்ன வரு மென் முலை மாதர் நல்லார் - சிந்தா - 1064

பெண்களின் கண்ணிமைகளை செந்நிறத்தில் மைபூசி இருக்கும்போது அவை பார்ப்பதற்கு குங்குமம் வைக்கும் சிமிழ் போலத் தோன்றும். அதைப்பற்றிக் கூறும் பாடல்வரிகள் சில கீழே:

செப்பு இணை அனைய செம் கேழ் வன முலை - சிந்தா - 1691
குலிக செப்பு அன கொம்மை வரி முலை - சிந்தா - 641

குதிரைக்குக் கண்பட்டி கட்டுவதைப் போல மதம் பிடித்த யானை பிறரைத் தாக்காமல் இருக்க அதன் கண்களுக்கு மேலாக கட்படாம் என்ற துணிகொண்டு மறைப்பது வழக்கம். அதைப்போல பெண்களின் வேல்விழிகளால் ஆடவர்கள் தாக்குறாமல் இருக்க, அவர்களது கண்களையும் முகத்திரை என்ற ஆடைகொண்டு மறைப்பது வழக்கம். இவ் இரண்டையும் ஒப்பிட்டுக் கூறும் குறள் கீழே:

கடாஅ களிற்றின் மேல் கண் படாம் மாதர்
படாஅ முலை மேல் துகில் - குறள் - 1087

பெண்கள் தமது இமைகளின்மேல் அழகுசெய்யும்போது பூந்தாதுக்களையும் பயன்படுத்துவர் என்று முன்னர் கண்டோம். அதைப்போலவே இங்கும் பெண்கள் தமது முலை ஆகிய இமைகளின் மேல் சுணங்கு எனப்படும் பூந்தாதுக்களைப் பயன்படுத்தியதைக் கூறும் பாடல்வரிகள் கீழே:

எதிர்த்த தித்தி ஏர் இள வன முலை விதிர்த்து விட்டு அன்ன அம் நுண் சுணங்கின்    - நற் - 160
அரும்பிய சுணங்கின் அம் பகட்டு இள முலை - குறு - 71

பெண்கள் தமது முலை ஆகிய இமைகளின்மேல் குங்குமத்தாலும் சந்தனக் குழம்பினாலும் பல வரிகளை எழுதுவர். இதனைத் தொய்யில் என்று இலக்கியம் கூறும். இதைப் பற்றிய பாடல்வரிகள் சில கீழே:

உருத்து எழு வன முலை ஒளி பெற எழுதிய தொய்யில் - குறு - 276
குங்குமமும் சந்தனமும் கூட்டி இடு கொடியா வெம் கண் இள முலையின் மிசை எழுதி விளையாடி - சிந்தா - 850
சாந்து கொண்டு இள முலை எழுதி - சிந்தா -1992

பெண்கள் அழும்போது கண்களில் தோன்றி ஒழுகும் கண்ணீர் பற்றிக் கூறும் பாடல்வரிகள் சில கீழே:

செம் சுணங்கின் மென் முலையாய் சேர் பசலை தீர் இஃதோ - திணை . ஐம் - 24
இள முலை மேல் பொன் பசலை பூப்ப - சிந்தா -2051

சிலப்பதிகாரத்தில் கண்ணகி அறுத்து எறிந்து மதுரை நகரை எரித்ததாகக் கூறப்படுகின்ற முலை என்பது அவளது கண்ணையே குறிக்கும். இதைப் பற்றிய முழுமையான தகவல்களை அறிந்துகொள்ள கண்ணகி மதுரையை எரித்தது எப்படி?. என்ற ஆய்வுக் கட்டுரையினைப் படிக்கலாம்.

மேனி:

மேனி என்ற சொல்லானது பெண்களைப் பொருத்தமட்டில் கண், கண்ணிமை ஆகிய பொருட்களைக் குறிக்கவே பெரிதும் பயன்படுத்தப் பட்டுள்ளது. பெண்கள் தமது கண்ணிமைகளைச் செந்நிறத்தில் மைபூசி அழகுசெய்திருக்கும்போது பார்ப்பதற்கு அவை மாமரத்தின் செந்நிறத்துத் தளிர் இலைகளைப் போலவே தோன்றும். இவை இரண்டையும் ஒப்பிட்டுக் கூறும் பாடல்வரிகளில் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

நோய் இன்று இயன்ற யாக்கையர் மாவின் அவிர் தளிர் புரையும் மேனியர் - திரு - 143
மாவின் தளிர் ஏர் அன்ன மேனி - மது - 706

பெண்களின் விழிகளை ஒளிவீசும் மணியுடன் ஒப்பிடுவதைப் பற்றி முன்னர் கண்டோம். அதைப்போலவே இங்கும் பெண்களின் மேனியாகிய விழிகளை மணியுடன் ஒப்பிடும் பாடல் வரி கீழே:

திரு மணி புரையும் மேனி மடவோள் - நற் -8

பெண்களின் மைபூசிய கண்ணிமைகளை மலர்களின் இதழ்களுடன் ஒப்பிட்டுக் கூறும் இலக்கிய வழக்கத்தினை முன்னர் கண்டோம். அதைப்போலவே இங்கும் பெண்களின் மேனி ஆகிய இமைகளை மலர் இதழ்களுடன் ஒப்பிட்டுக் கூறும் சில பாடல்வரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

குறிஞ்சி நாள்மலர் புரையும் மேனி - நற் - 301
வை விரி மலர் புரையும் மேனியை - பரி - 1

பெண்கள் துயரத்தில் அழும்போது கண்ணீர் பெருகி வழியும். இக் கண்ணீரை பசலை என்றும் பசப்பு என்றும் இலக்கியங்கள் கூறும். இதனைப் பற்றிக் கூறும் சில பாடல்வரிகள் கீழே:

மாஅத்து அம் தளிர் அன்ன நன் மா மேனி பசப்ப - குறு -331
மேனி மறைத்த பசலையள் ஆனாது - கலி -143
நெருநற்று சென்றார் எம் காதலர் யாமும் எழு நாளேம் மேனி பசந்து - குறள் -1288

பெண்களின் மையுண்ட கண்ணிமைகளை மின்னலுடன் ஒப்பிட்டுக் கூறுவதும் இலக்கிய வழக்கம் என்று முன்னர் பல கட்டுரைகளில் கண்டோம். இதை உறுதிசெய்கின்ற இன்னொரு பாடல் வரி கீழே:

உருவு கொண்ட மின்னே போல திருவில் இட்டுத் திகழ்தரு மேனியள் - மணி -6

இப்படி மின்னலைப் போல மினுக்குவதால் அதாவது விட்டுவிட்டு ஒளிர்வதால் தான் பெண்களின் கண்ணிமைகளுக்கு மேனி என்ற பெயர் ஏற்பட்டது. மேனியைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள மேனி என்றால் என்ன?. என்ற ஆய்வுக் கட்டுரையினைப் படிக்கலாம்.

வயிறு:

வயிறு என்ற சொல்லானது பெண்களைப் பொருத்தமட்டிலும் பல இடங்களில் கண், கண்ணிமை ஆகிய பொருட்களில் பயன்படுத்தப் பட்டுள்ளது. பெண்கள் தமது நெற்றியில் பல பொட்டுக்களை வரிசையாக வரைந்து அழகுசெய்வர் என்று அல்குல் என்ற கட்டுரையில் முன்னர் கண்டோம். நெற்றியில் மட்டுமின்றி இமைகளின் மேலும் பல பொட்டுக்களை வரைவது வழக்கமே. இப் பொட்டுக்களைத் திதலை என்றும் தித்தி என்றும் இலக்கியம் கூறுகிறது. இதைப் பற்றிய சில பாடல்வரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

புதல்வன் பயந்த திதலை அம் வயிற்று வால் இழை மகளிர் நால்வர் கூடி ... - அகம்.86
வரி கிளர் பணை தோள் வயிறு அணி திதலை அரியலாட்டியர் - அகம். 245

பெண்களின் கண்கள் உருண்டு திரண்டு மேல்புறம் குவிந்து தோன்றுவதால் அவற்றை மூங்கில்காய், பனைமரத்தின் நுங்கு, குங்குமச்சிமிழ், தென்னையின் இளநீர்க்காய், கலசம் போன்றவற்றுடன் ஒப்பிடுகின்ற வழக்கத்தினைப் பற்றி முன்னர் கண்டோம். அதைப்போல இங்கும் பெண்களின் வயிறு ஆகிய விழிகளை யாழ் எனும் இசைக்கருவியின் பத்தல் என்ற உருண்டு திரண்ட அடிப்பாகத்துடன் ஒப்பிட்டுக் கூறுகிறது கீழ்க்காணும் பாடல்.

செங்கோட்டு யாழின் பத்தர் அன்ன மெத்தென் அம் வயிற்று - பெருங்.உஞ்சை.40

பெண்களது கண்ணிமைகள் மிக மெல்லியவை என்பதால் அவற்றை நீர்க்குமிழி, பூ இதழ்கள், மாந்தளிர் போன்றவற்றுடன் இலக்கியங்கள் ஒப்பிட்டுக் கூறுவதைப் பற்றி முன்னர் கண்டோம். அதைப்போலவே இங்கு பெண்களின் வயிறு ஆகிய மெல்லிய இமைகளை ஆலமரத்தின் இலையுடன் ஒப்பிட்டுக் கூறுகிறது கீழ்க்காணும் பாடல்.

ஆல் இலை அன்ன வயிற்றினை .. - கம்ப.அயோத்.4

பெண்கள் துயரத்தினால் அழும்போது தமது கைகளால் இமைகளைக் கசக்கிப் பிசைந்து அழுவர். இவ்வாறு அழுவதனை வயிறு அதுக்குதல் என்றும் வயிறு அலைத்தல் என்றும் இலக்கியம் கூறுகிறது. இதைப் பற்றிக் கூறும் சில பாடல் வரிகள் கீழே:

வேல் நெடும் கண் நீர் மல்க ஆகுலத்து அரிவையர் அம் வயிறு அதுக்கினார் - சிந்தா: 1104
பூம் தெரிவையர் ஆ தகாது என கலங்கி அம் வயிறு அதுக்கினார் - சிந்தா: 1106
வந்தானை முகம் நோக்கி வயிறு அலைத்து மழை கண்ணீர் - கம்ப.ஆரண்.6
வான நாடியர் வயிறு அலைத்து அழுது கண் மழை நீர் - யுத்3:22 199/1

பெண்களின் வயிறு பற்றி மேலும் விரிவாகத் தெரிந்துகொள்ள வயிறு என்றால் என்ன? (யாழும் வயிறும்) என்ற ஆய்வுக் கட்டுரையினைப் படித்துத் தெரிந்து கொள்ளலாம்.

..... தொடரும் ............

சனி, 6 மே, 2017

கண்ணும் கண்சார்ந்த இடமும் - பகுதி 5 ( நுசுப்பு - நுதல் - மருங்குல் - முகம் )

முன்னுரை:

கண்ணும் கண்சார்ந்த இடமும் என்ற கட்டுரையின் ஐந்தாம் பகுதியாகிய இதில் நுசுப்பு, நுதல், மருங்குல், முகம் ஆகிய சொற்களைப் பற்றிச் சுருக்கமாகக் காணலாம். 

நுசுப்பு:

நுசுப்பு என்ற சொல்லானது பெண்களது கண்ணிமையினைக் குறிக்கவே புலவர்களால் பெரிதும் பயன்படுத்தப் பட்டுள்ளது. பெண்கள் தமது கண்ணிமைகளின்மேல் மைபூசும்போது காக்காய்ப்பொன் (மைக்கா) போன்ற மின்னும் பொருட்களையும் கலந்து பூசுவர் என்றும் இப்படிப் பூசியபின்னர் அவர்கள் இமைகளை மூடித்திறக்கும்போது மின்னல் வெட்டுவதைப் போல பளிச்சென்று ஒரு ஒளி தோன்றி மறையும் என்று முன்னர் ஓதி என்ற கட்டுரையில் கண்டோம். இதேபோல நுசுப்பு ஆகிய கண்ணிமை குறித்தும் பாடல்கள் உண்டு. சில சான்றுகள் கீழே:

மின் தெளித்து எழுதி அன்ன விளங்கும் நுண் நுசுப்பின் நல்லார் - சிந்தா:1 371/1
மின் பிறழ் நுசுப்பினார் தாமும் விம்மலால் - கம்பரா: பால:5 111/3 

வண்ண மையினால் பூசப்பட்ட கண்ணிமையானது வேங்கையின் பொன் நிறத்துப் புதுமலரைப் போல இருந்ததாகக் கீழ்க்காணும் பாடல் கூறுகிறது.

நுணங்கிய நுசுப்பின் நுண்கேழ் மாமைப் பொன்வீ வேங்கைப் புதுமலர் புரைய - அகம் - 318

மையினால் மட்டுமின்றி, பூக்களின் தாதுக்களாலும் ( சுணங்கு ) கண்ணிமையினை அலங்கரிப்பது பெண்களின் வழக்கம். கீழ்க்காணும் பாடல் அதை உறுதிசெய்கிறது.

அரும்பிய சுணங்கின் நுசுப்பு அழித்து ஒலிவரும் - அகம் - 253

பெண்கள் தமது கண்ணிமைகளின்மேல் பல வண்ணங்களில் மைபூசி அழகுசெய்வர் என்று முன்னர் கண்டோம். அதுமட்டுமின்றி, இமைகளுக்கு மேலாகவும் புருவங்களுக்குக் கீழாகவும் உள்ள பகுதியில் தாவரக்கொடிகளைப் போல வரைந்தும் அழகுசெய்வர். பல வண்ணங்களில் மையினால் வளைத்து வளைத்து வரையப்படும் கொடிகளில் இலைகளுடன் பூக்களையும் சேர்த்து வரைந்திருக்கும்போது மிக அழகாக இருக்கும். கொடிகள் வரையப்படுவதாலும் கொடிகளைப் போல மிக நுட்பமான தடிமன் கொண்டிருப்பதாலும் கண்இமைகளைக் கொடி நுசுப்பு என்று குறிப்பிடுகிறது இலக்கியம்.

குறவர் மட மகள் கொடி போல் நுசுப்பின் - திரு -101
கொடி புரையும் நுசுப்பினாய் - கலி 58
கொடி புரை நுசுப்பினாள் கொண்ட சீர் தருவாளோ - கலி 1/7

கொடி போன்ற அல்லது கொடிகள் வரையப்பட்ட கண்ணிமைகளை உடைய பெண்களைக் கொடிச்சி என்று கூறுகிறது இலக்கியம்.

பேர் அமர் மழை கண் கொடிச்சி - குறு 286, ஐங்கு. 282
அறல் வாழ் கூந்தல் கொடிச்சியர் பாடல் - மலை 304

பெண்களது கண்ணிமைகள் மிக மெல்லிய அல்லது நுட்பமான தடிமன் கொண்டவை என்பதால் அவற்றை மெல்லிய கொடிகளுடன் மட்டுமின்றி  ஆடையின் மெல்லிய நூலுடன் ஒப்பிட்டும் கூறுவர்.

துகில் நூலின் வாய்த்த நுண் கேழ் நுசுப்பின் மடவீர் - சிந்தா: 2346

பெண்களது கண்ணிமை எவ்வளவு மெல்லியது என்றால் அதன்மேல் சிறிய முல்லை மலர் மாலை அணிந்தால் கூட பாரம் தாங்காமல் முறிந்து விடும் என்று கூறுகிறது கீழ்க்காணும் பாடல்.

முல்லை அம் சூட்டு வேயின் முரிந்து போம் நுசுப்பின் நல்லார் - சிந்தா:13 3119/3

பெண்களின் நுசுப்பு ஆகிய கண்ணிமை பற்றித் திருவள்ளுவர் காட்டும் குறளோவியக் காட்சி மிக அழகானது. காதலன் ஒருவன் தனது காதலியின் கண்ணழகினைப் புகழ்கின்றபோது அவள் நெற்றியில் அணிந்திருந்த அனிச்சப் பூமாலையைப் பார்க்கின்றான். அவளோ அந்த அனிச்சப்பூக்களைக் காம்பு களையாமல் அப்படியே சூடியிருக்கிறாள். அனிச்சப் பூமாலை காற்றில் அசையும்போது அதன் காம்புகள் அவளது கண்ணிமையின்மேல் பட்டு பட்டு எழுகின்றன. இதைக்காணும் காதலனுக்குப் பறையினை கோல்கொண்டு அடிக்கும் நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது. கண்ணிமையினைப் பறையாகவும் அனிச்சப் பூவின் காம்பினைக் கோலாகவும் உவமைப் படுத்தி இவ்வாறு பாடுகிறான்.

அனிச்சப்பூ கால்களையாள் பெய்தாள் நுசுப்பிற்கு
நல்ல படாஅ பறை. - குறள் - 1115

பறையினைக் கோல்கொண்டு அடித்தால் ஒலி எழும். ஆனால் காதலியின் கண்ணிமை ஆகிய பறையிலோ எந்தவிதமான ஒலியும் எழவில்லை என்பதால் அதனை ' படாஅ பறை ' ( ஒலிக்காத பறை ) என்று கூறுகிறார் வள்ளுவர். நுசுப்பு பற்றி மேலும் அறிந்துகொள்ள கதுப்பு - ஓதி - நுசுப்பு என்ற ஆய்வுக் கட்டுரையினைப் படிக்கலாம்.

நுதல்:

நுதல் என்ற சொல்லானது பெண்களைப் பொருத்தமட்டில் கண்விழியினையும் கண்ணிமையினையும் குறிக்கவே பெரிதும் பயன்படுத்தப் பட்டுள்ளது. பசலை / பசத்தல் என்பது கண்ணீர் / அழுகையினைக் குறிக்கும் என்று பசலை என்றால் என்ன என்ற கட்டுரையில் கண்டோம். அழுகையின்போது கண்ணிலிருந்து கண்ணீர் வழிந்தோடுவதனைக் குறிப்பிடுகின்ற சில பாடல்வரிகள் கீழே:

பாஅய் பாஅய் பசந்தன்று நுதல் - கலி 36/12,13
வாள் நுதல் பசப்பு ஊர இவளை நீ துறந்ததை - கலி 127/17

நுதல் பற்றிக் குறிப்பிடும்போது வாள்நுதல் என்றும் ஒள்நுதல் என்றும் சுடர்நுதல் என்றும் பல இடங்களில் புலவர்கள் குறிப்பிட்டுள்ளனர். சான்றுக்கு சில பாடல்கள் கீழே:

ஒள்நுதல் பசப்பித்தோரே - ஐங்கு. 67
சுடர்நுதல் பசப்பச் சாஅய்ப் படர்மெலிந்து - ஐங்கு.107
வாள்நுதல் பசப்ப - ஐங்கு.423

இப்பாடல்களில் வரும் சுடர், வாள், ஒள் ஆகிய மூன்று முன்னொட்டுக்களும் கண்ணின் ஒளியைக் குறித்து வருவன ஆகும். பொதுவாக, பெண்களின் வெண்ணிற ஒளிவீசும் கண்ணினை வெள்ளொளி வீசுகின்ற பால்நிலவுக்கு ஒப்பிடுவது புலவர்களின் வழக்கமே. இதைப்பற்றி கொங்கை என்ற கட்டுரையிலும் முன்னர் கண்டோம். இங்கும் சில சான்றுகளைக் காணலாம்.

மதி இருப்பு அன்ன மாசு அறு சுடர் நுதல்- அகம் 192
திங்கள் வாள் நுதல் மடந்தையர் - சுந்:12 49/1

நிலா என்றாலே மேகம் அதனை அடிக்கடி மறைப்பதும் வழக்கமே. இந்த மேகத்தினைப் பாம்பு என்றும் அரவு என்றும் இலக்கியம் குறிப்பிடுகிறது. நிலவினை மேகம் மறைக்கும் நிகழ்வினைப் பெண்களின் கண்ணைக் கண்ணீர் மறைப்பதுடன் ஒப்பிட்டுக் கூறுகின்ற பாடல்வரிகளில் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

பாம்பு ஊர் மதியின் நுதல் ஒளி கரப்பவும் - நற் 128/2
அரவு நுங்கு மதியின் நுதல் ஒளி கரப்ப - அகம் 313/7

பெண்களின் கண்ணை வானத்தில் ஒளிவீசுகின்ற விண்மீனுடன் ஒப்பிட்டு கீழ்க்காணும் பாடல் கூறுகிறது.

பெரு நல் வானத்து வட வயின் விளங்கும்
சிறுமீன் புரையும் கற்பின் நறு நுதல் - - பெரும் 303,304

பெண்கள் தமது கண்களைச் சுற்றிலும் மையிட்டு அலங்கரிப்பது பொதுவான வழக்கம். ஆனால், சங்க காலப் பெண்கள் தமது கண்களை மீன் போல மையால் எழுதி அலங்கரித்த செய்திகளைக் கீழ்க்காணும் பாடல்களின் வழியாக அறியலாம்.

மகர வலயம் அணி திகழ் நுதலியர் - பரி -10
சுறவு வாய் அமைத்த சுரும்பு சூழ் சுடர் நுதல் - பெரும்.

பெண்கள் தமது கண்ணிமைகளைப் பூக்களின் இதழ்களைப் போல மையிட்டு அழகுசெய்வர் என்று முன்னர் பல கட்டுரைகளில் கண்டோம். அதைப்போல நுதல் ஆகிய இமைகளையும் அழகுசெய்வர் என்று கூறும் சில பாடல்கள்:

பூத்த முல்லை பசு முகை தாது நாறும் நறு நுதல் - குறு - 323
சினை ஒண் காந்தள் நாறும் நறு நுதல்- அகம் 338

இதில் வரும் நாறும் என்ற சொல்லானது தோன்றுகின்ற என்ற பொருளில் வந்துள்ளது. பெண்களின் கண்ணிமைகள் வளைந்திருப்பதுடன் அவரது கண்கள் பார்வை என்னும் அம்பினையும் எய்வதால், பெண்களின் இமைகளை வில்லுடன் ஒப்பிட்டுப் பல பாடல்களில் புலவர்களில் பாடியுள்ளனர். சான்றுக்குச் சில பாடல்கள் கீழே:

சிலை தொழில் சிறு நுதல் தெய்வ பாவை போல் - சிந்தா:3 657/1
வில் கொள் வாள் நுதல் விளங்கு இழை இளம் தளிர் கொழுந்தே - கம்ப.அயோ:10 17/1

பெண்கள் தமது இமைகளின்மேல் பூசுகின்ற மையணியினைத் தொய்யில், தொடி, கரும்பு என்று இலக்கியங்கள் குறிப்பிடுவதைப் பற்றி தோள் முதலான கட்டுரைகளில் முன்னர் கண்டோம். இதற்குத் திலகம் என்று இன்னொரு பெயரும் இருப்பதாகக் குறிப்பிடுகிறது இலக்கியம். சான்றுக்குச் சில பாடல்கள் கீழே:

திலகம் தைஇய தேம் கமழ் திரு நுதல் - திரு 24, நற் - 62
தேம் கமழ் திரு நுதல் திலகம் தைஇயும் - அகம் 389

கம்புள் என்ற பறவையின் கண்ணைச் சுற்றிலும் வெள்ளைநிற வளையம் இருப்பதால் அதனை வெண் நுதல் கம்புள் என்று குறிப்பிடுகிறது ஐங்குறுநூற்றின் 85 ஆம் பாடல். யானையின் கண்களைத் தீக்கங்குகளுடன் ஒப்பிட்டு பூ நுதல் என்றும் புகர்நுதல் என்றும் இலக்கியம் குறிப்பிடுகிறது. பெண்களின் கண்களுக்கு நுதல் என்ற பெயர் ஏற்படக் காரணம், அவை நுதலும் தன்மை அதாவது பேசும் தன்மை வாய்ந்தவை என்பதால் தான். நுதல் பற்றி மேலதிக தகவல்களுக்கு நுதலும் நுதலப்படாத கருத்துக்களும் என்ற ஆய்வுக் கட்டுரையினைப் படிக்கலாம்.

மருங்குல்:

மருங்குல் என்ற சொல்லானது பெண்களைப் பொருத்தமட்டிலும் கண்ணையும் கண்ணிமையினையும் குறிக்கவே பெரிதும் பயன்படுத்தப் பட்டுள்ளது. பெண்கள் தமது கண்ணிமைகளுக்கு மேலாகவும் புருவங்களுக்குக் கீழாகவும் உள்ள பகுதியில் கொடி போன்ற ஓவியங்களை வரைந்து அழகுசெய்வர் என்று நுசுப்பு என்ற கட்டுரையில் கண்டோம். அதைப்போலவே மருங்குல் ஆகிய இமையின் மேலும் கொடிகளை வரைந்து அழகுசெய்ததனைப் பற்றிக் கூறுகின்ற சில பாடல்கள் கீழே தரப்பட்டுள்ளன.

கொடி மருங்குல் விறலியருமே - புறம்.139
வள்ளி மருங்குல் வயங்கு இழை அணிய - புறம். 316
வஞ்சி போல் மருங்குல் - கம்ப.பால.3/9

பெண்களின் மையுண்ட கண்ணிமைகளை மின்னலுடன் ஒப்பிட்டுக் கூறும் பாடல்களைப் பற்றி ஓதி முதலான கட்டுரைகளில் கண்டோம். அதைப்போல மருங்குலை மின்னலுடன் ஒப்பிட்டுக் கூறும் பாடல்கள் கீழே:

மின் நேர் மருங்குல் குறுமகள் - அகம். 126
முகில் ஏந்து மின் மருங்குல் - சிந்தா: 3/679
மழைஉறா மின்னின் அன்ன மருங்குல் - கம்ப.பால. 21/9

மின்னுகின்ற தன்மைகொண்ட மைப்பூச்சுக்களில் பெரும்பான்மை பொன்போல மஞ்சள் நிறத்தில் இருப்பதால் அவற்றைப் பொலம் துடி ( பொன்போல மின்னுகின்ற ) என்று குறிப்பிடுகிறது இலக்கியம்.

பொலம் துடிக்கு அமை மருங்குல் - கம்ப.சுந்தர. 2/202
பொலம் துடி மருங்குலாய் - கம்ப. சுந்தர.3/32

பெண்களின் கண்ணிமைகள் மிக மெல்லிய தடிமன் கொண்டவை என்பதால் அவற்றின் நுட்பத்தைக் காட்ட அவற்றை ஆடையில் உள்ள நூலுடன் ஒப்பிட்டுக் கூறுவது இலக்கிய வழக்கம் என்று நுசுப்பு என்ற கட்டுரையில் முன்னர் கண்டோம். அதைப்போல மருங்குலையும் நூலுடன் ஒப்பிட்டுக் கூறுகின்ற பாடல்வரிகள் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

நூல் ஒக்கும் மருங்குலாள் - கம்ப. கிட்.13/46
இழை புரை மருங்குல் - கம்ப. சுந்தர. 3/88

பெண்களின் கண்ணிமைகள் மிக மென்மையானவை என்றும் அவை எவ்வளவு மென்மையானவை என்றால் மெல்லிய பூமாலையினைச் சூடினாலும் அதன் பாரம் தாங்காமல் முரிந்து அதாவது நைந்து போகும் என்று நுசுப்பு என்ற கட்டுரையில் முன்னர் கண்டோம். இதேபோல பெண்களின் மருங்குல் ஆகிய கண்ணிமையும் பாரம் தாங்காமல் முரிந்துபோகும் என்று கூறும் பாடல் வரிகள் கீழே:

இறும் மருங்குல் போது அணியின் என்று இனைந்து - சிந்தா: 7/1698
பூ மாலை சூடின் பொறை ஆற்றா நுண் மருங்குல் - சிந்தா: 7/1699

மருங்குல் என்பது பெண்களுக்கு மட்டுமின்றி யானைகளைப் பொருத்தமட்டிலும் சில இடங்களில் கண் என்ற பொருளில் பயன்பட்டு உள்ளது. சான்றாக ஒரு பாடலின் வரிகள் கீழே தரப்பட்டுள்ளன.

.... யானை மருங்குல் ஏய்க்கும் வண்தோட்டுத்
தெங்கின் வாடுமடல் வேய்ந்த - பெரும்.

யானையின் கண்களைப் பனைமரத்தில் காய்த்துள்ள நுங்குகளுடன் உவமைப் படுத்திக் கூறுகிறது மேற்காணும் பெரும்பாணாற்றுப் பாடல் வரிகள். கடும் கோடைகாலத்தில் தாகம் தீர்க்கத் தண்ணீரைத் தேடி அலைந்து கிடைக்காததால் இலைதழைகளை உண்ண மறுத்துக் கண்ணில் நீர்வழிய நிற்கின்ற யானைகளைப் படம்பிடித்துக் காட்டும் அகநானூற்றுப் பாடல் வரிகள் கீழே: 

... குளகு மறுத்து உயங்கிய மருங்குல் - அகம். 229

நீண்டநாள் கடும்பசியினால் வாடி உழந்த ஒரு கிணைமகளின் கண்களைப் பற்றிக் கூறுகிறது சிறுபாணாற்றுப் பாடல்.

.. ஒல்கு பசி உழந்த ஒடுங்கு நுண் மருங்குல் .... - சிறு.

பெண்களின் கண்ணிமைகளுக்கு மருங்குல் என்ற பெயர் ஏற்படக் காரணம், பெண்களுக்கு அவை மருங்கு போன்றவை என்பதால். மருங்கு என்பதற்குச் செல்வம் என்ற பொருள் உண்டு. பெண்கள் தமது கண்ணிமைகளையே தமது பெருஞ்செல்வமாகக் கருதுவதால் அதற்கு மருங்குல் என்ற பெயர் ஏற்பட்டது. மருங்குல் பற்றி மேலும் விரிவாகத் தெரிந்துகொள்ள மருங்குல் என்றால் என்ன என்ற கட்டுரையினைப் படிக்கலாம்.

முகம்:

முகம் என்ற சொல்லானது பெண்களைப் பொருத்தமட்டில் கண் என்ற பொருளிலும் பல இடங்களில் பயன்படுத்தப் பட்டுள்ளது. பெண்கள் அழும்போது கண்களில் இருந்து கண்ணீர் வழிவதனைக் கீழ்க்காணும் பாடல்வரிகள் காட்டுகின்றன.

பழி தபு வாள்முகம் பசப்பு ஊர - கலி: 100
மை இல் வாள்முகம் பசப்பு ஊரும்மே - கலி: 7

இப்பாடலில் வரும் பசப்பு என்பது கண்ணீரைக் குறிக்கும். இதைப்பற்றி விரிவாக அறிந்துகொள்ள பசப்பு என்றால் என்ன என்ற கட்டுரையைக் காணலாம். கண்ணீரால் மறைக்கப்பட்ட விழிகளை மேகத்தால் மறைக்கப்பட்ட நிலவுடன் ஒப்பிட்டுக் கூறுகின்ற பாடல் வரிகள் கீழே:

கயல் புரை உண்கண் அரிப்ப அரி வார
பெயல் சேர் மதி போல வாள் முகம் தோன்ற- கலி.145

பெண்களின் வெள்ளொளி வீசுகின்ற கண்களை வெண்ணிற ஒளிவீசுகின்ற நிலவுடன் ஒப்பிட்டுக் கூறுவது புலவர்களின் வழக்கம் என்று முன்னர் பல கட்டுரைகளில் கண்டோம். அதைப்போல பெண்களின் முகம் ஆகிய கண்களையும் நிலவுடன் ஒப்பிட்டுக் கூறுகின்ற பாடல் வரிகள் சில கீழே தரப்பட்டுள்ளன.

மை இல் மதியின் விளங்கும் முகத்தாரை - கலி: 62
திங்கள் அன்ன நின் திருமுகத்து - அக: 253
தீங்கதிர் மதி ஏய்க்கும் திரு முகம் - கலி: 15

தனது அருள்நிறைந்த பார்வையினால் தீயதை அழிப்பவனின் கண்களைப் போல இருளை அழித்து நிலவானது ஒளிவீசுவதாகக் கூறும் பாடல் வரிகள் கீழே:

அல்லது கெடுப்பவன் அருள்கொண்ட முகம் போல
மல்லல் நீர்த்திரை ஊர்பு மாலிருள் மதி சீப்ப - கலி: 148

தனக்குப் பின்புறமாக இருக்கின்ற பொருளைக் காட்டுகின்ற பளிங்குபோல மனதில் தோன்றும் விருப்பு வெறுப்பு முதலான எண்ணங்களை அப்படியே வெளிக்காட்டும் தன்மை வாய்ந்தவை கண்கள். அதைப்பற்றிக் கூறும் குறள் வரிகள் கீழே:

அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம்    --குறள்  706

முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ உவப்பினும்
காயினும் தான் முந்துறும். - குறள் - 707

அனிச்ச மலரைத் தொடவே வேண்டாம்; அருகில் சென்று மோந்து பார்த்தாலே வாடிவிடுகிற அளவுக்கு மென்மையானது அனிச்சப்பூ. அதுபோல விருந்தினர்களும் மென்மையானவர்களே. அவர்களை அருகில் சென்று திட்டவோ துன்புறுத்தவோ வேண்டாம்; நமது கண்களில் சிறிது வேறுபாட்டினைக் காட்டினாலும் அவர்கள் வாடிவிடுவார்கள் என்று கூறுகிறார் வள்ளுவர்.

மோப்பக் குழையும் அனிச்சம் முகம்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து. - குறள் -90

முகம் பற்றி மேலதிக தகவல்களை அறிந்துகொள்ள இன்னொரு முகம் என்ற ஆய்வுக் கட்டுரையினைப் படிக்கலாம்.






........... தொடரும்..........

செவ்வாய், 2 மே, 2017

கண்ணும் கண்சார்ந்த இடமும் - பகுதி 4 ( கூந்தல் - கொங்கை - சிறுபுறம் - தோள் )

முன்னுரை:

கண்ணும் கண்சார்ந்த இடமும் என்ற கட்டுரையின் நான்காம் பகுதியான இதில் கூந்தல், கொங்கை, சிறுபுறம், தோள் ஆகிய சொற்களைப் பற்றிச் சுருக்கமாகக் காணலாம்.

கூந்தல்:

கூந்தல் என்ற சொல்லானது பெண்களைப் பொருத்தமட்டிலும் கண்ணிமை என்ற பொருளைக் குறிக்கவே பெரிதும் பயன்படுத்தப் பட்டுள்ளது. பெண்களின் மையுண்ட கண்ணிமைகளை அறல், மரல், மயில், யானைத்துதிக்கை, மேகம், நாரத்தை, பறவைகள், பூக்கள், செவ்வானம் போன்ற பொருட்களுடன் ஒப்பிட்டு ஏராளமான பாடல்களில் புலவர்கள் பாடியுள்ளனர். ஒவ்வொரு ஒப்புமைக்கும் சான்றாகச் சில பாடல்வரிகள் மட்டும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

சாய் அறல் கடுக்கும் தாழ் இரும் கூந்தல் - பதி -74
அறல் என அவிர்வரும் கூந்தல் - அக -162

இப்பாடல்களில் வரும் அறல் என்பது நத்தை, சிப்பி முதலான மெல்லுடலிகளைக் குறிக்கும். இவற்றின் மேலோடுகள் குவிந்தும் பல வண்ணங்களை உடையதாகவும் இருப்பதால் பெண்களின் மையுண்ட வண்ண இமைகளை இவற்றுடன் ஒப்பிடுவர்.

கலி மயில் கலாவத்து அன்ன இவள் ஒலி மென் கூந்தல் - நற் - 265, குறு - 225
கொடிச்சி கூந்தல் போல தோகை அம் சிறை விரிக்கும் - ஐங்கு - 300

பெண்கள் தமது இமைகளுக்கு மைபூசி அழகுசெய்யும்போது மயில்தோகையில் உள்ள கண்களைப் போலவும் வரைந்து அழகூட்டிய செய்தியினை மேற்காணும் பாடல்வரிகள் கூறுகின்றன. இதைப்பற்றி கதுப்பு என்ற கட்டுரையிலும் முன்னர் கண்டோம்.

பிடிக் கை கூந்தல் - சிந்தா -2663

பெண்களின் கருமை உண்ட மெல்லிய வரிகளை உடைய இமைகளை யானையின் துதிக்கை வரிகளுக்கு ஒப்பிடும் வழக்கத்தினை மேலே உள்ள பாடல்வரி விளக்குகிறது. இதைப்பற்றி குறங்கு என்ற கட்டுரையிலும் முன்னர் கண்டோம்.

மழை போல் தாழ்ந்து இருண்ட கூந்தல் - கலி -147
புயல் என ஒலிவரும் தாழ் இரும் கூந்தல் - அக - 225

பெண்களின் கருநிற மைபூசிய இமைகளைக் கார்மேகங்களுக்கு ஒப்பிடுவது புலவர்களின் வழக்கம் என்பதனை மேலுள்ள பாடல்வரிகள் உறுதிசெய்கின்றன. இதைப்பற்றி கதுப்பு என்ற கட்டுரையிலும் முன்னர் கண்டோம்.

பெண்கள் தமது மெல்லிய பூவிதழ் போன்ற கண்இமைகளில் பல ஆண்டுகள் தொடர்ந்து மைபூசுவதால் இமையின் தோலானது நாளடைவில் தனது இயல்பான நிறத்தினை இழந்து வெளுக்கத் துவங்கி விடும். இமைகளில் தோன்றும் இந்த வெண்மையான நிறத்தினை நரை என்று குறிப்பிடுகிறது இலக்கியம். இந்த நரையினை வெண்ணிறம் கொண்ட கடல்சிப்பிகளுடனும் மரல்செடியின் இலைகளுடனும் ஒப்பிட்டுக் கூறுகிறது இலக்கியம்.

.. இரும் கடல் வான் கோது புரைய வாருற்று
பெரும் பின்னிட்ட வால் நரை கூந்தலர்           
நன்னர் நலத்தர் தொன் முது பெண்டிர்   - மது - 407

...நுண் அறல் போல நுணங்கிய ஐம் கூந்தல்
வெண் மரல் போல நிறம் திரிந்து வேறாய  - ஐந்.ஐம்-27

வயது ஏற ஏற, தலைமயிர் மட்டுமின்றி இமைகளில் உள்ள முடிகளும் நரைத்துவிடும். இமைகளில் உள்ள நரைத்த முடிகள் சிறியதாகவும் கூர்மையாகவும் இருப்பதால் அவற்றை மீன் உண்ணும் கொக்கின் தலையில் உள்ள தூவியுடனும் மீன் முள்ளுடனும் ஒப்பிட்டுக் கூறுவர். சில சான்றுகள் கீழே தரப்பட்டுள்ளன.

மீன் உண் கொக்கின் தூவி அன்ன வால் நரை கூந்தல் முதியோள் - புற -277
கயல் முள் அன்ன நரை முதிர் திரை கவுள் ... - புற - 195

பெண்கள் தமது கண்ணிமைகளுக்கு அழகூட்டும்போது தமது கடைக்கண் ஈற்றில் கூரிய வரியினை வரைவது வழக்கம் என்று எயிறு என்ற கட்டுரையில் கண்டோம். அப்படி வரையும்போது கண்ணிமையினை நாரையின் தலை போன்றும் கிளியின் தலை போலவும் வரைந்தபின்னர், கடைக்கண் ஈற்றினை நாரையின் கூர்வாய் போலவும் கிளியின் மூக்கு போலவும் செந்நிறத்தில் வரைவது வழக்கம். இதைப்பற்றிக் கூறும் பாடல்வரிகள் கீழே:

நாரை நல் இனம் கடுப்ப மகளிர் நீர் வார் கூந்தல் உளரும் துறைவ - ஐங்கு -186
கிள்ளை பிறங்கிய பூ கமழ் கூந்தல் கொடிச்சி - ஐங்கு -290

பெண்கள் தமது கண்ணிமைகளை மைபூசி அழகுசெய்யும்போது பார்ப்பதற்கு அவை பூக்களின் மெல்லிய இதழ்களைப் போலத் தோன்றும் என்று கதுப்பு, ஓதி, ஆகம், குறங்கு போன்ற பல கட்டுரைகளில் முன்னர் கண்டோம். அதைப்போல பெண்களின் கூந்தல் ஆகிய கண்ணிமைகளையும் பூ இதழ்களுடன் ஒப்பிட்டுக் கூறும் பாடல்வரிகள் கீழே;

வேங்கை வென்ற சுணங்கின் தேம் பாய் கூந்தல் மாஅயோளே - ஐங்கு -324
குவளை குறும் தாள் நாள்மலர் நாறும் நறு மென் கூந்தல் - குறு -270
எல்உறு மௌவல் நாறும் பல் இரும் கூந்தல் - குறு -19

பெண்களின் இமைகளில் செந்நிறம் கொண்டு பூசியிருக்கும்போது பார்ப்பதற்கு அவை மேற்கில் தோன்றும் செவ்வானம் போன்று அழகுடன் திகழும். இதைப் பற்றிக் கூறும் பாடல்வரிகள் கீழே:

குட திசைச் செக்கரின் சேந்த கூந்தலாள் - கம்ப - ராவணன் அணங்குறு.
செக்கர் வார் கூந்தல் - கம்ப - படைத்தலைவர்.

கூந்தலைப் பற்றிக் கூறுவதற்கு இன்னும் பல செய்திகள் உள்ளநிலையில், அவற்றை அறிந்துகொள்ள பெண்களின் கூந்தலுக்கு இயற்கையில் மணம் உண்டா? என்ற ஆய்வுக் கட்டுரையினைப் படித்துத் தெரிந்துகொள்ளலாம்.

கொங்கை:

பெண்களைப் பொறுத்தமட்டிலும் கொங்கை என்ற சொல்லானது கண்ணையும் கண்ணிமையினையும் குறிக்கவே பெரிதும் பயன்படுத்தப் பட்டுள்ளது. பெண்களின் வெண்ணிற ஒளிவீசும் கண்களை நிலவுடன் ஒப்பிட்டுக் கூறுவது புலவர்களின் வழக்கமே. கம்பனும் அவ் வழக்கத்திற்கேற்ப சீதையின் விழிகளை நிலவுடன் ஒப்பிடுகிறார்.

எங்கு நின்று எழுந்தது இந்த இந்து வந்து என் நெஞ்சு உலா
அங்கு இயன்று அனங்கன் எய்த அம்பின் வந்த சிந்தை நோய்
பொங்குகின்ற கொங்கை மேல் விடம் பொழிந்தது என்னினும்
கங்குல் வந்த திங்கள் அன்று அகம் களங்கம் இல்லையே - கம்ப.பால.13/51

பெண்கள் என்று சொன்னாலே கண்ணீருக்குப் பஞ்சமிருக்காது. அதுவும் துன்பப்படும்போது அவர்களால் அழுகையைக் கட்டுப்படுத்த இயலாது. கண்களில் கண்ணீர்த் துளிகள் கோர்த்துக்கொண்டு கீழே விழத் தயாராக நிற்கும். அப்படிப்பட்ட ஒரு காட்சியினைப் படம்பிடித்துக் காட்டுகிறார் கம்பர்.

....கொண்ட நெடும் கணின் ஆலி கொங்கை கோப்ப ... - கம்ப.அயோ.3/10
....மஞ்சு என வன் மென் கொங்கை வழிகின்ற மழை கண் நீராள் - கம்ப.சுந்த.14/40

வருத்தத்தாலும் சினத்தினாலும் கண்கள் கொதிப்புற்றுச் சிவப்படையும். இதைப்பற்றிக் கூறும் பாடல்வரிகள் கீழே:

கொதி அழல் சீற்றம் கொங்கையின் விளைத்தோய் -சிலப்.புகார்.8
நோவொடு குழைவன பிரிந்தவர் கொதிக்கும் கொங்கையே - கம்ப.ஆரண். 3/46

பெண்களின் செவ்வண்ணம் தீட்டப்பட்ட கண்ணிமைகளை குங்குமச் சிமிழுடன் ஒப்பிட்டுக் கூறுவது இலக்கிய வழக்கமாகும். காரணம், செப்பினால் செய்யப்பட்ட குங்குமச் சிமிழானது செவ்வண்ணத்தில் கண்போன்ற வடிவில் இமைபோல மூடித் திறக்கும் வகையில் அமைக்கப்பட்டு இருக்கும். இதைப்பற்றிக் கூறும் பாடல்வரி:

கொமை உற வீங்குகின்ற குலிக செப்பு அனைய கொங்கை - கம்ப.பால. 22/10

பெண்களின் குவிந்த கண்களைத் தென்னையின் இளநீர்க் காய்களுடன் ஒப்பிட்டுக் கூறுகிறார் கம்பர். காரணம், தென்னங்காய்கள் கண்போன்ற வடிவத்தில் குவிந்தும் திரண்டும் உள்ளே நீர் உடையதாய் இருக்கும். கண்விழியினைப் போலவே வெண்ணிறத்தில் உள்ளே நெற்றும் அதாவது தேங்காயும் இருக்கும். சான்றாக சில பாடல்வரிகள்:

தேரிடை கொண்ட அல்குல் தெங்கிடை கொண்ட கொங்கை - கம்ப.பால.18/17
பொங்கு இளம் கொங்கைகள் புதுமை வேறு இல தெங்கு இளநீர் என தெரிந்த காட்சிய - கம்ப.அயோ.12/3

குவிந்து திரண்ட கண்களின் மேலிருக்கும் இமைகளைப் பொன் நிறத்தில் பூசியிருக்கும்போது பார்ப்பதற்கு அவை பொற்கலசங்கள் போலத் தோன்றும். இதைப் பற்றிக் கூறுகின்ற பாடல்வரிகள் கீழே:

வார் ஆழி கலச கொங்கை வஞ்சி போல் மருங்குலாள்தன்  - கம்ப.கிட்.13/37
கொங்கைகள் செவ்விய நூல் புடை வரிந்த பொன் கலசங்களை மானவே - கம்ப.பால.18/27
கொங்கையின் நிரைந்தன கனக கும்பமே - கம்ப.அயோ.2/37

பெண்கள் தமது கண்ணிமைகளின்மேல் சந்தனக்குழம்பினாலும் குங்குமக் கலவையினாலும் பலவரிகளை வரைந்தும் பூசியும் அழகுசெய்வர். இதைப்பற்றிக் கூறுகின்ற பாடல்வரிகள் கீழே:

மங்கையர் கொங்கையில் பூசும் குங்குமமும் புனை சாந்தமும் - பெரியபு.திருமலை.8
கோதை மடவார் தம் கொங்கை மிசை திமிர்ந்த சீத களப செழும் சேற்றால் - நள. 20
கொங்கை வெயர்த்த போது இழிந்த சாந்தும் - கம்ப.பால.21/18
குங்கும வருணம் கொங்கையின் இழைத்து - சிலப்.மது.14

பெண்களின் கண்ணிமைக்குக் கொங்கை என்ற பெயர் ஏற்படக் காரணம், அதில் கொங்கு எனப்படுகின்ற பூந்தாதுக்களைப் பூசியிருப்பதே. கொங்கினை உடையதால் கொங்கை எனப்பட்டது. கொங்கையினைப் பற்றி மேலும் விரிவாக அறிந்துகொள்ள கொங்கை என்றால் மார்பகமா? என்ற ஆய்வுக் கட்டுரையினைப் படிக்கலாம்.

சிறுபுறம்:

பெண்களின் சிறுபுறம் என்பது பெரும்பாலும் அவர்களுடைய கண் மற்றும் கண்ணிமையினைக் குறிக்கவும் சில இடங்களில் மட்டும் கன்னத்தினைக் குறிப்பதற்கும் புலவர்களால் பயன்படுத்தப்பட்டுள்ளது. பெண்களின் வரியுடைய கண்ணிமைகளில் கருமை பூசியிருக்கும்போது அது பார்ப்பதற்கு யானையின் துதிக்கை வரிகளைப் போலத் தோன்றும் என்று முன்னர் குறங்கு, கூந்தல் ஆகிய கட்டுரைகளில் கண்டோம். இதேபோல பெண்களின் சிறுபுறம் ஆகிய கண்ணிமைகளையும் யானையின் துதிக்கையுடன் ஒப்பிட்டுக் கூறும் பாடல்வரிகள் கீழே:

பிடி கை அன்ன பின்னு வீழ் சிறு புறத்து – சிறுபாண்.
சிறுபுறம் கடுக்கும் பெரும் கை வேழம் – நற். 228

பெண்களின் வண்ணவண்ண மைகளால் பூசப்பட்ட அழகிய கண்ணிமைகளை நத்தை, சிப்பி போன்றவற்றின் மேலோட்டுடன் ஒப்பிடுவது இலக்கிய வழக்கம் என்று கூந்தல் என்ற கட்டுரையில் கண்டோம். இங்கும் பெண்களின் சிறுபுறமாகிய கண்ணிமையினை மெல்லுடலிகளின் மேலோட்டுடன் ஒப்பிடும் பாடல்வரிகள் கீழே:

 ………பின்னுவிட சிறுபுறம் புதைய நெறிபு தாழ்ந்தனகொல்.......
வாணன் சிறுகுடி வடாஅது தீம் நீர் கான்யாற்று அவிர் அறல் போன்றே – அகம் -117

குழந்தைகளின் கன்னத்தினைச் செல்லமாகக் கிள்ளுவது போல பெண்களின் கன்னத்தினை விரல்களால் செல்லமாய்ப் பற்றுவதுண்டு. இதனை சிறுபுறம் கவைத்தல் என்று இலக்கியம் குறிப்பிடுகிறது. சான்றுக்கு சில பாடல்வரிகள்:

....ஏனல் காவலின் இடை உற்று ஒருவன் கண்ணியன் கழலன்
தாரன் தண்ணென சிறுபுறம் கவையினனாக ... – நற். -128

...சூரர மகளிரின் நின்ற நீ மற்று யாரையோ எம் அணங்கியோய்
உண்கு என சிறுபுறம் கவையினன் ஆக …  - அகம் -32

ஒருதாய் தனது குழந்தைக்கு முலைப்பால் ஊட்டும்போது அக் குழந்தையானது தனது பிஞ்சுக் கைகளால் தாயின் கன்னங்களை வருடிக் கொடுக்கிறது. இதைப்பற்றிக் கூறும் பாடல்வரி கீழே:

வாள் நுதல் அரிவை மகன் முலை ஊட்ட
தான் அவள் சிறுபுறம் கவையினன் - ஐங்கு - 404

பெண்கள் தமது இமைகளைப் பூவிதழ்களைப் போல அழகுசெய்வர் என்று முன்னர் கண்டோம். அதைப்போல இங்கும் தமது சிறுபுறமாகிய இமைகளை செங்கழுநீர்ப் பூவிதழ்களைப் போல அழகுசெய்திருந்ததைக் கூறும் பாடல்வரி:

..தண் நறும் கழுநீர் செண் இயல் சிறுபுறம் தாம் பாராட்டிய.. – அகம் – 59

இப்படிப் பூவிதழ்களைப் போல அழகுசெய்யப்பட்ட கண்ணிமைகளில் அமர்ந்து கள்குடிக்க வண்டினங்கள் விரும்பிச் சுற்றிச்சுற்றி வரும் என்று முன்னர் அளகம் என்ற கட்டுரையில் கண்டோம். அதைப்போலவே இங்கும் சிறுபுறமாகிய இமைகளில் அமர்ந்து தும்பியானது கள்குடிக்கும் காட்சியினைக் கீழ்க்காணும் பாடல் கூறுகிறது.

சேடரின் சென்று புல்லி சிறுபுறம் தழீஇய தும்பி – சிந்தா – 852

சிறுபுறம் என்ற சொல்லானது சிறு + புறம் எனப் பிரிந்து சிறிய புறத்துறுப்பு என்று பொருள்தரும். பெண்களின் புறத்துறுப்புக்களில் மிகச் சிறியதும் புலவர்களால் பெரிதும் பாடப்படுவதும் கண்ணிமையே என்று அறிவோம். பெண்களின் கண்ணிமைக்குச் சிறுபுறம் என்ற பெயர் வந்ததன் காரணம் இதுவே ஆகும். இதைப்பற்றி குறங்கு என்ற கட்டுரையிலும் கண்டோம். சிறுபுறம் பற்றி மேலும் விரிவாக அறிந்துகொள்ள சிறுபுறம் என்பது.. என்ற கட்டுரையைப் படிக்கலாம்.

தோள்:
தோள் என்ற சொல்லானது பெண்களைப் பொருத்தமட்டில் அவர்களது கண்ணைக் குறிக்கவே பெரிதும் பயன்படுத்தப் பட்டுள்ளது. பெண்களின் தோள் ஆகிய கண்களைப் புணை ஆகிய தெப்பங்களுடனும் மூங்கிலின் காய்களுடனும் ஒப்பிட்டுப் பாடுவது புலவர்களின் வழக்கம். இதைப் பற்றிய சில பாடல்வரிகள் கீழே:

வேய் மருள் பணைத்தோள் - ஐங்கு.-318, நற்.-85,188
வேய் உறழ் பணைத்தோள் - பதி.-21

பெண்கள் இமைகளில் மையிட்டுக் கடைக்கண்ணைக் கூராக வரைந்து மூடியிருக்கும்போது உருண்டு திரண்ட அவரது கண்கள் பார்ப்பதற்கு மூங்கிலின் உருண்டு திரண்ட கூரிய முனையுடைய காய்களைப் போலவே தோன்றும். அதனால் தான் பல இடங்களில் தோள் என்ற சொல்லினை பணை (பருத்த) என்ற அடையுடன் சேர்த்துக் கூறுவர். 

முழங்குநீர்ப் புணை என அமைந்த நின் தடமென் தோள் - கலி.-56
எம்மொடு கொண்மோ எம் தோள் புரை புணையே - ஐங்கு.-78

பெண்களின் கண்ணானது புணை எனப்படுகின்ற தெப்பம் போலவே வடிவத்தைக் கொண்டிருப்பதுடன் அதைப்போலவே நீரில் தத்தளிக்கும் இயல்புடையது என்பதால் பெண்களின் கண்களைப் புணைக்கு உவமையாக்கினர் புலவர்.

பெண்கள் பிரிவுத்துயரின்போது கண்கலங்கி அழுவர். இதனை தோள் நெகிழ்தல் என்றும் தோள் பசத்தல் என்றும் இலக்கியம் கூறுகிறது. பசத்தல் / பசலை என்பது அழுகை / கண்ணீரைக் குறிக்கும் என்று பசத்தல் என்றால் என்ன? என்ற கட்டுரையில் விரிவாகக் காணலாம். சான்றுக்குச் சில பாடல்வரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

திருந்து இழை பணைத்தோள் நெகிழ - ஐங்கு-39
வேய் புரை மெல் தோள் பசலையும் - கலி.-39
தாம் பசந்தன என் தடமென் தோளே - குறு.-121

பெண்கள் தமது கண்களின்மேல் மையிட்டு அழகுசெய்வர் என்று முன்னர் பல கட்டுரைகளில் கண்டோம். அதைப்போலவே, தமது தோள் ஆகிய கண்களைச் சுற்றிலும் வட்டமாக மையினால் வரைந்து அழகுசெய்வர். இந்த வட்டமான மையணியினைக் கரும்பு என்றும் தொய்யில் என்றும் தொடி என்றும் இலக்கியம் கூறுகிறது.

என் தோள் எழுதிய தொய்யிலும் - கலி.-18
எல்லா நல் தோள் இழைத்த கரும்புக்கு நீ கூறு - கலி.-64
தொடியொடு தோள்நெகிழ நோவல் - குறள் - 1236

பெண்கள் அழும்போது கண்ணில் பூசியிருந்த இந்த தொடி அணியானது கசங்கி அழிந்து கண்ணீருடன் இழியும். இதைப்பற்றிக் கூறும் சில பாடல்வரிகள் கீழே:

பணைநீங்கிப் பைந்தொடி சோரும் துணைநீங்கித்
தொல்கவின் வாடிய தோள். - குறள் - 1234

தொடியொடு தோள்நெகிழ நோவல் அவரைக்
கொடியர் எனக்கூறல் நொந்து. - குறள் - 1236

ராமனின் அழகிய கண்களைக் கண்ட பெண்களின் கண்கள் அதிலேயே குத்திட்டு நின்றன. அங்கிங்கு அசைய முடியவில்லையாம். மெய்மறத்தல் என்று சொல்வார்களே அதுபோன்ற நிலையினை அவர்கள் அடைந்தார்கள் என்று கம்பர் கீழ்க்காணும் பாடலில் கூறுகிறார். 

தோள்கண்டார் தோளே கண்டார் தொடுகழல் கமலம் அன்ன
தாள்கண்டார் தாளே கண்டார் தடக்கை கண்டாரும் அஃதே .

தோள் பற்றி மேலும் தகவல்களை அறிந்துகொள்ள தோள் என்றால் என்ன?. என்ற கட்டுரையினைப் படிக்கலாம்.

............. தொடரும் ............