வியாழன், 8 பிப்ரவரி, 2018

சங்க இலக்கியத்தில் விலங்கியல் - 7 - பூனை



முன்னுரை:

பூனை - என்றதும் குறுகுறு மீசைமுடிகளுடன் கண்களைச் சுருக்கிக்கொண்டு மியாவ் என்று கத்தும் அந்த அழகிய குட்டி விலங்கினை யாருக்கும் நினைவு வராமல் இராது. இரவு நேரத்தில் திருட்டுத்தனமாக வீட்டிற்குள் நுழைந்து பாலைக் குடித்துவிடும் பூனை இப்போதெல்லாம் பகலிலும் அந்த வேலையைச் செய்கிறது. பாலுக்குக் காவல் பூனையா? என்று கேட்ட காலமெல்லாம் போய் இப்போது பூனைகளை வீட்டிலேயே செல்லமாக வளர்க்கிறார்கள். நாயினைப் போலவே பூனைக்கென்று தனிப்பட்ட உணவுவகைகளும் வந்துவிட்டன. நாயினைப் போலன்றி, வீட்டுக்குள்ளேயே அடைந்துகிடக்கும் செல்ல விலங்கான பூனைகளைச் சங்க காலத்தில் தமிழர்கள் தங்கள் வீட்டில் வளர்த்தார்களா என்பதைப் பற்றியும் சங்க இலக்கியங்களில் பூனைகளைப் பற்றிக் கூறப்பட்டுள்ள பல்வேறு செய்திகளையும் இக் கட்டுரையில் விரிவாகக் காணலாம்.

பூனை - பெயர்களும் காரணங்களும்:

பூனை என்னும் விலங்கினைக் குறிக்க வெருகு, வெருக்கு, பிள்ளை, பூசை ஆகிய பெயர்களே சங்க இலக்கியத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. நாம் தற்போது புழங்கிவரும் பெயரான பூனை என்ற பெயர் சங்க இலக்கியத்தில் பதிவு செய்யப்படவில்லை என்பது வியப்புக்குரியது. ! இவற்றுள்,

வெருகு, வெருக்கு ஆகிய பெயர்கள் இவ் விலங்கின் வெருவுதல் அதாவது அஞ்சுதல் பண்பினாலும்
பிள்ளை என்ற பெயர் குழந்தையைப் போல இரவில் ஓசையெழுப்பும் பண்பினாலும்
பூசை என்ற பெயர் பூப்போல பலமற்ற உடலினை உடையது என்ற பொருளிலும் ஏற்பட்டிருக்கலாம்.

பூசை என்னும் பெயரே பின்னாளில் பூஞை என்றும் பூனை என்றும் மருவியிருக்க வேண்டும். பல்வேறு இந்திய மொழிகளில் பூனைகளைக் குறிக்கும் பெயர்கள் சங்க இலக்கியத் தமிழ்ப் பெயர்களை ஒட்டியே அமைந்துள்ளது இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.

இந்தி - பில்லி - சங்ககாலப் பெயரான பிள்ளை என்ற பெயரில் இருந்தும்
மலையாளம் - பூச்சா - சங்ககாலப் பெயரான பூசை என்ற பெயரில் இருந்தும்
தெலுங்கு - பில்லி - சங்ககாலப் பெயரான பிள்ளை என்ற பெயரில் இருந்தும்
கன்னடம் - பெக்கு - சங்ககாலப் பெயரான வெருகு என்ற பெயரில் இருந்தும் மருவியிருக்கலாம் என்று தோன்றுகிறது.

சங்க இலக்கியத்தில் பூனை:


சங்க இலக்கியத்தில் பேசப்பட்டுள்ள பூனை காட்டுப்பூனை ஆகும். பாலூட்டி இனத்தைச் சேர்ந்த இந்த காட்டுப்பூனையின் விலங்கியல் பெயர் ஃபெலிஸ் சாவஸ் ( Felis Chaus ) ஆகும். காடுகளில் மட்டுமின்றி காடுகளுக்கு அருகில் உள்ள ஊர்களிலும் இவை வசித்தன. காட்டுப்பூனையின் கடைவாயில் உள்ள கோரைப்பற்கள் நீண்டு கூரிதாய் இருந்ததாகவும் பார்ப்பதற்கு இவை முல்லைமலரின் கூரிய மொட்டுக்களைப் போலத் தோன்றியதாகவும் இலக்கியம் கூறுகிறது. காட்டுப்பூனையின் காலடி விரல்கள் குவிந்தநிலையில் இருந்ததாகவும் அது இலுப்பைப் பூவினைப் போலத் தோன்றியதென்றும் கூறப்பட்டுள்ளது. காட்டுப்பூனையின் கண்கள் இரவிலும் ஒளிரும் தன்மை கொண்டவை என்று கூறுகிறது. இரவு நேரங்களில் எலியினை வேட்டையாடி உண்ணும் காட்டுப்பூனையானது சில நேரங்களில் வீடுகளில் வளர்க்கப்பட்ட கோழிகளையும் வேட்டையாடிக் கொன்றுண்ட செய்திகள் கூறப்பட்டுள்ளன. காட்டுப்பூனையின் உடலில் பல நிறங்கள் உண்டென்றும் வரையப்பட்ட ஓவியம் போல அது இருந்ததாகவும் கூறுகிறது. காட்டுப்பூனையின் குட்டிகளின் உடலில் இருந்த மயிர் வெள்ளைநிறத்தில் புசுபுசுவென்று இலவம் பஞ்சு போல இருந்ததாகவும் தாயினைச் சுற்றி குட்டிகள் இருந்தபோது பார்ப்பதற்கு வானத்தில் நிலவினைச் சுற்றி விண்மீன்கள் இருந்ததைப் போலத் தோன்றியதாகவும் இலக்கியம் குறிப்பிடுகிறது. சங்ககாலத் தமிழர்களின் வீட்டில் பூனை வளர்க்கப்பட்டதாகச் செய்திகள் எதுவும் சங்க இலக்கியங்களில் பதிவு செய்யப்படவில்லை.

சங்க இலக்கியத்தில் காட்டுப்பூனை குறித்துப் பதிவு செய்யப்பட்டுள்ள செய்திகளைக் கீழ்க்காணும் தலைப்புக்களில் விரிவாகக் காணலாம்.

1. பூனையின் மயிர்
2. பூனையின் பல்
3. பூனையின் கண்கள்
4. பூனையின் காலடி
5. பூனையின் உணவு
6. பூனையும் குட்டிகளும்

1. பூனையின் மயிர்:

பூனையின் பல சிறப்பு அம்சங்களில் அதன் மயிரும் ஒன்று. புசுபுசுவென்று பஞ்சினைப் போல மென்மையான மயிர் அதன் உடல் முழுவதும் மூடியிருக்கும். பூனையை வளர்ப்பவர்கள் அடிக்கடி அதனைத் தூக்கி மடியில் வைத்துக்கொண்டு கொஞ்சுவதற்கான காரணங்களில் பூனையின் மென்மயிரும் ஒன்று. பூனையின் உடல் மயிரில் பல நிறங்கள் உண்டு. உடல் முழுவதும் அழகிய வண்ணத்தில் நேர்த்தியான பல கோடுகளைக் கொண்டிருந்த ஒரு காட்டுப்பூனையானது பார்ப்பதற்கு வரையப்பட்ட ஒரு ஓவியம் போலத் தோன்றியதாகக் கீழ்க்காணும் பாடல் கூறுகிறது.

எழுதி அன்ன கொடி படு வெருகின் - அகம். 297

காட்டுப்பூனையின் குட்டிகளின் உடலில் புசுபுசுவென்று பொலிந்திருந்த மென்மையான வெண்ணிற மயிரினை இலவ மரத்தின் பஞ்சுடன் ஒப்பிட்டுக் கூறுகிறது கீழ்க்காணும் அகப்பாடல்.

பூளை அன்ன பொங்கு மயிர்ப் பிள்ளை - அகம். 297

இப்பாடலில் வரும் பூளை என்பது இலவ மரத்தின் பஞ்சினைக் குறிக்கும்.

2. பூனையின் பல்:

பூனையின் வாய்க்குள் பார்த்தால், சிறிய கோரைப்பற்கள் சிலவற்றுடன் மேல்தாடையில் நீண்ட கோரைப்பற்கள் இரண்டும் கீழ்த்தாடையில் நீண்ட கோரைப்பற்கள் இரண்டும் இருக்கும். இரையினைக் கிழித்துச் சாப்பிட இந்த நீண்ட கோரைப்பற்கள் உதவுகிறது. வெண்ணிறத்தில் கூர்மையுடன் விளங்கும் இந்த நீண்ட கோரைப்பற்களுக்கு உவமையாக வெண்ணிறத்தில் பூத்திருக்கும் முல்லை மலரின் கூரிய மொட்டுகளைச் சங்கப் புலவர்கள் பல பாடல்களில் பாடியுள்ளனர். அவற்றுள் சிலவற்றை மட்டும் இங்கே சான்றாகக் காணலாம்.

வெருக்கு பல் உருவின் முல்லையொடு கஞலி - குறு.240

பார்வல் வெருகின் கூர் எயிற்று அன்ன
வரி மென் முகைய நுண் கொடி அதிரல் - அகம். 391

பிள்ளை வெருகின் முள் எயிறு புரைய
பாசிலை முல்லை முகைக்கும் - புறம். 117

பூத்த முல்லை வெருகு சிரித்து அன்ன
பசு வீ மென் பிணி குறு முகை அவிழ்ந்த - குறு. 220

முல்லையின் மலராத கூரிய மொட்டுக்களைப் பார்த்த போதெல்லாம் புலவர்களுக்குப் பூனையின் கூரிய நீண்ட கோரைப்பற்களே நினைவுக்கு வந்ததனை மேற்பாடல் வரிகள் கூறாநிற்கின்றன. அருகில் உள்ள படத்தில் முல்லையின் கூரிய மலர் மொட்டும் பூனையின் நீண்ட கோரைப்பல்லும் ஒப்பிட்டுக் காட்டப்பட்டுள்ளது.

3. பூனையின் கண்கள்:

பூனையின் சிறப்பு அம்சமே அதன் கண்கள் தான். பூனையின் கண்கள் மற்றும் பார்வையினைப் பற்றி விக்கிபீடியா இவ்வாறு கூறுகிறது: " பூனைகள் சிறந்த இரவுப்பார்வையைக் கொண்டுள்ளன. குறைந்த அளவிலான ஒளியை டபீட்டம் லூசிடம் என்ற இமைப்பானது கண்ணின் விழித்திரைக்குப் பின்னால் குவிப்பதால் குறைந்த அல்லது மங்கலான ஒளியிலும் துள்ளியமான பார்வைத்திறன் கொண்டுள்ளன. இவை மனிதனுக்குப் பார்க்கத் தேவைப்படும் ஒளியில் ஆறில் ஒரு பங்கு ஒளியிலேயே பார்க்கக்கூடிய திறன் படைத்தவை. "

விக்கிபீடியா கூறுவதைப் போலவே நள்ளிரவு நேரத்திலும் பூனையின் கண்கள் ஒளிர்வதைக் கீழ்க்காணும் சங்கப்பாடலும் உறுதிசெய்கிறது.

வெருகு இருள் நோக்கி அன்ன கதிர் விடுபு
ஒரு காழ் முத்தம் இடை முலை விளங்க - அகம். 73

இரவிலும் ஒளிவீசும் பூனையின் கண்களைப் போல ஒளிவீசுகின்ற பெரிய முத்துப் போன்ற கண்கள் இமைகளுக்கு இடையில் விளங்க .. என்பது மேற்பாடல் வரிகளின் பொருளாகும். இவ்வாறு புலவர் கூறுவதன் காரணம், தலைவனைச் சந்திக்கத் தலைவியானவள் நள்இரவு நேரத்திலும் புறப்படத் தயாராகி விட்டாள். தலைவனைச் சந்திக்கப் போகும் ஆவலினால் பூனையின் கண்களைப்போல அவளது முத்துப் போன்ற பெரிய கண்கள் இரவிலும் ஒளிர்கின்றனவாம். என்ன ஒரு உவமை !. இப்பாடலில் வரும் முலை என்பது மார்பகங்களைக் குறிக்காமல் கண்ணிமைகளைக் குறிக்கும். இதைப்பற்றி கண்ணகி மதுரையை எரித்தது எப்படி?. என்ற ஆய்வுக் கட்டுரையில் விரிவாகக் காணலாம்.

மேற்பாடலைப் போலவே, எலிவேட்டை ஆடிய வேட்டுவச் சிறுவர்களின் கண்களும் ஆண் காட்டுப்பூனையின் கண்களைப் போல இருளில் ஒளிர்ந்ததாகக் கீழ்க்காணும் புறப்பாடல் கூறுவதைப் பாருங்கள்.

வெருக்கு விடை அன்ன வெருள் நோக்கு கயம் தலை
......... வெள் வாய் வேட்டுவர் வீழ் துணை மகாஅர்
...... பருத்தி வேலி கருப்பை பார்க்கும் - புறம். 324

4. பூனையின் காலடி:

பூனையின் காலடியானது விரிந்து பரந்திராமல் குவிந்தநிலையில் காணப்படும். நடக்கும்போது ஓசையேதும் கேட்காத வண்ணம் இருக்க இத்தகைய குவிந்த காலடி அமைப்பு உதவுகிறது. இதனால் பூனை தனது இரையினை மிக அருகில் நெருங்க முடிகிறது. பூனையின் காலடி விரல்கள் குவிந்திருப்பதைக் கூறும் சங்கப்பாடல் கீழே:

குவி அடி வெருகின் பைம் கண் ஏற்றை - அகம். 367

வீடுகளில் பூனை வளர்ப்பவர்கள் ஒரு பாதுகாப்பிற்காகப் பூனையின் கால்விரல் நகங்களை வெட்டிவிடுவர். ஆனால் காட்டுப்பூனையின் கால் விரல்கள் உருண்டு திரண்டு கூரிய நீண்ட நகங்களுடன் காணப்படும். இவை பார்ப்பதற்கு நீண்ட கூரிய மருப்புடன் கூடிய இலுப்பைப்பூவின் குவிந்த மலர் மொட்டுக்களைப் போலத் தோன்றியதாகக் கீழ்க்காணும் அகப்பாடல் கூறுகிறது.

வெருக்கு அடி அன்ன குவிமுகிழ் இருப்பை - அகம். 267

அருகில் உள்ள படத்தில் பூனையின் காலடித்தடமும் இலுப்பைப் பூவின் வடிவமும் ஒப்பிடப்பட்டுக் காட்டப்பட்டுள்ளது.

5. பூனையின் உணவு:

காட்டுப்பூனையின் முதன்மை உணவுகளாகக் குழிமுயல், எலி போன்ற சிறு விலங்குகளை விக்கிபீடியா கூறுகிறது. விக்கிப்பீடியா கூறுவதைப் போலவே கீழ்க்காணும் குறுந்தொகைப் பாடலும் நள்ளிரவில் பூனையானது வீட்டில் திரியும் எலியினை வேட்டையாடி உண்பதைப் பற்றிக் கூறுகிறது.

நள்ளிருள் யாமத்து இல் எலி பார்க்கும்
பிள்ளை வெருகிற்கு - குறு.107

காடுகளில் குழிமுயல், எலி போன்றவை கிடைக்காதபோது காட்டுப்பூனைகள் வீடுகளில் வளர்க்கப்படும் சேவல் மற்றும் பெட்டைக்கோழிகளை வேட்டையாடிக் கொன்றுண்ணும். காதலி ஒருத்தி தனது காதலனுடன் இரவில் சேர்ந்து மகிழ்ந்திருக்கும்போது திடீரென்று கூவி துயில் எழுப்பிய சேவலுக்கு " காட்டுப்பூனையின் வாய்ப்பட்டு ஒழிவாயாக " என்று சாபம் விடுவதாகக் கீழ்க்காணும் பாடல் அமைந்துள்ளது.

தொகு செம் நெற்றி கணம்கொள் சேவல்
..... பிள்ளை வெருகிற்கு அல்கு இரை ஆகி
..... யாணர் ஊரனொடு வதிந்த
ஏம இன் துயில் எடுப்பியோயே - குறு.107

காட்டுப்பூனை ஒன்று வீட்டில் வளர்க்கப்பட்ட சேவல்கோழியைக் கொன்றுண்ண, அது கண்மூடி அயரும் வேளையினை எதிர்பார்த்துக் காத்திருக்கும் காட்சியினை கீழ்க்காணும் அகப்பாடல் அப்படியே நம் கண்முன்னால் கொண்டுவருகிறது.

கரும் கால் வேங்கை செம் சுவல் வரகின்
மிகு பதம் நிறைந்த தொகு கூட்டு ஒரு சிறை
குவி அடி வெருகின் பைம் கண் ஏற்றை
ஊன் நசை பிணவின் உயங்கு பசி களைஇயர்
தளிர் புரை கொடிற்றின் செறி மயிர் எருத்தின்
கதிர்த்த சென்னி கவிர் பூ அன்ன
நெற்றி சேவல் அற்றம் பார்க்கும்
புல்லென் மாலையும் - அகம். 367

வேங்கை மரத்தருகில் வரகின் கதிர்கள் பெரும் போராகக் குவித்து வைக்கப்பட்டிருக்க, அதன் பின்னால் இருந்தவாறு குவிந்த அடிகளை உடைய ஆண் காட்டுப்பூனையானது, தனது பெண் துணையின் பசியினைப் போக்குவதற்காக, முருக்கம்பூப் போன்ற உச்சிக்கொண்டையினை உடைய சேவல் கோழியானது கண் அயரும் வேளையினை எதிர்நோக்கிக் காத்திருந்ததாக மேற்பாடல் வரிகள் கூறுகின்றன.

சங்ககாலத் தமிழர்கள் தமது வீட்டில் வளர்க்கப்பட்ட சேவல் கோழி மற்றும் பெட்டைக் கோழிகளைக் காட்டுப்பூனைகள் தாக்கிக் கொல்லாதிருக்கச் சுற்றிலும் வேலி அமைத்திருந்தனர். ஆனால் காட்டுப்பூனைகள் இரவு நேரத்தில் இந்த வேலிகளின் மேலிருந்தவாறு கோழிகளை நோட்டம் விட்டு வேட்டையாடின. இதனால் இவற்றை 'வேலி வெருகு' என்று இலக்கியம் குறிப்பிடுகிறது. இதைப்பற்றிய ஒருசில பாடல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

மனை உறை கோழி குறும் கால் பேடை
வேலி வெருகு இனம் மாலை உற்று என - குறு. 139

ஊர் முது வேலிப் பார்நடை வெருகின்
இருள் பகை வெரீஇய நாகு இளம் பேடை - புறம். 326

6. பூனையும் குட்டிகளும்:

பெரிய பூனையைக் காட்டிலும் அதன் குட்டிகள் தான் மிக அழகாக இருக்கும். வீட்டுப்பூனையோ காட்டுப்பூனையோ எதுவானாலும் தாய்ப்பூனைக்கும் அதன் குட்டிகளுக்கும் இடையிலான பாசம் அதிகம். பல சமயங்களில் தனது சிறிய குட்டியினைப் பூனைத் தன் வாயினால் கவ்வியவாறு தூக்கிச் செல்வதைப் பார்த்திருக்கிறோம். தாய்ப்பூனை எங்கு சென்றாலும் அதன் பின்னாலேயே அதன் குட்டிகள் தொடர்ந்து செல்லும். இதனை ஒரு அழகான உவமையுடன் கீழ்க்காணும் பாடலில் புலவர் கூறுவதைப் பாருங்கள்.

பூளை அன்ன பொங்கு மயிர்ப் பிள்ளை
மதி சூழ் மீனின் தாய் வழிப்படூஉம் - அகம். 297

காட்டுப்பூனையின் குட்டிகள் தன் தாயினைச் சூழ்ந்தநிலையில் இருந்ததனை வானத்தில் விண்மீன்கள் நிலவினைச் சூழ்ந்து இருந்ததனைப் போலத் தோன்றியதாக மேற்பாடலில் கூறுகிறார் புலவர். இதிலிருந்து, அந்த காட்டுப்பூனை மற்றும் குட்டிகளின் உடலில் வெண்மை நிறம் மிக்கிருந்ததனை அறியமுடிகிறது.

முடிவுரை:

சங்க இலக்கியங்களில் காட்டுப்பூனைகளைப் பற்றிக் கூறப்பட்டுள்ள பல்வேறு செய்திகளைக் கண்டோம். சங்ககாலத் தமிழர்கள் வீடுகளில் பூனை வளர்க்கவில்லை என்றே தெரிகிறது. அப்படி வளர்த்திருந்தால் வீட்டில் வளர்க்கப்பட்ட ஆடு, மாடு, நாய், கோழிகளைப் பற்றிக் கூறியதைப்போல வீட்டுப்பூனைகளைப் பற்றியும் பதிவுசெய்திருப்பர். ஆனால் காலம் மாறமாற தமிழர்களுக்குத் தமது வீடுகளிலும் பூனைகளை வளர்க்கவேண்டிய தேவை ஏற்பட்டது. காரணம், அறுவடை செய்து சேமித்து வைத்திருந்த நெல் முதலான தினைகளை எலிகளும் பெருச்சாளிகளும் கவர்ந்து சென்றுண்டன. இவற்றைக் கொல்வதற்காகவே வீடுகளில் பூனைகளை வளர்க்கலாயினர். ஆனால் வளர்ப்புப் பூனைகளுக்கும் காட்டுப்பூனைகளுக்கும் குணவேறுபாடுகள் உண்டு; இரண்டின் விலங்கியல் பெயரும் வேறுவேறு. வீட்டுப்பூனைகள் எலிகளையும் பெருச்சாளிகளையும் வேட்டையாடியதே ஒழிய வீட்டில் வளர்க்கப்பட்ட கோழிகளைத் தாக்காமல் நட்புடன் பழகத் துவங்கின. இப்படியாக மனித சமுதாயத்துடன் பூனைகள் இயைந்து வாழ்ந்த நிலையில், பூனை தொடர்பாகப் பல பழமொழிகளும் உருவாயின. " ஆனைக்கு ஒரு காலம்; பூனைக்கு ஒரு காலம் " என்பது அவற்றுள் ஒன்று. இதைப்பற்றி விரிவாக " ஆனைக்கொரு காலம் " என்ற கட்டுரையில் படிக்கலாம்.


வியாழன், 1 பிப்ரவரி, 2018

சங்க இலக்கியத்தில் விலங்கியல் - 6 - மான்



முன்னுரை:

மான் - என்றவுடன் நம் எல்லோரின் நினைவுக்கு வருவது அழகான கொம்புகளையும் செந்நிறத்து உடல்முழுவதும் வெள்ளைநிறப் பொட்டுக்களையும் உடைய புள்ளிமான் / கலைமான் தான். அழகும் இளமையும் மிக்க விலங்காகக் கருதப்படும் மானுக்கென்று பல பெருமைகள் உண்டு. எவையெல்லாம் மான்களுக்கு அழகினைத் தந்ததோ அவையெல்லாம் மான் இனம் அழிவதற்குக் காரணமாகி விட்டது. தோலுக்காகவும் கொம்புக்காகவும் இறைச்சிக்காகவும் தொடர்ந்து வேட்டையாடப் படுவதால் மான் இனமே வேகமாக அழிந்து வருகிறது. 3000 ஆண்டுகளுக்கு முன்னால் இந்தியக் காடுகளில் வாழ்ந்துவந்த பலவகை மான் இனங்கள் இருந்த இடம் தெரியாமல் அழிந்தே விட்டன. அழிவின் பிடியில் இருந்து உடனடியாகக் காப்பாற்றப் படவேண்டிய அழகிய விலங்கான மானைப் பற்றிச் சங்க இலக்கியங்கள் கூறியுள்ள பல்வேறு செய்திகளை இக்கட்டுரையில் விரிவாகக் காணலாம்.

மான் - பெயர்களும் காரணங்களும்:

மான் என்னும் விலங்கினைக் குறிக்கும் பல்வேறு பெயர்களாக மான், கலை, இரலை, புல்வாய், உழை, நவ்வி, கவரி, மரை, கடமா(ன்), ஆமா(ன்) ஆகியவற்றைச் சங்க இலக்கியங்கள் பதிவு செய்துள்ளன. இவற்றில்,

மான் என்னும் பெயர் இவ் விலங்கு உட்பட குதிரை, சிங்கம் முதலான விலங்குகளையும் குறிக்கப் பயன்படுத்தப் பட்டாலும் இவ் விலங்கிற்கே அப்பெயர் மிகப் பொருத்தமானதாகத் தோன்றுகிறது. காரணம், பெருமைக்குரிய பல பண்புகள் இவ் விலங்கிற்கு உண்டு. இதைப்பற்றி விரிவாக இக்கட்டுரையில் காணலாம்.

கலை என்னும் பெயர் இதன் உடலில் காணப்படும் கலைநயம் மிக்கப் புள்ளிகளாலும்
இரலை என்னும் பெயர் இவ் விலங்கின் இருள்நிற (கருமை) முதுகினாலும்
புல்வாய் என்பது புல்லைத் தின்பது என்ற பொருளிலும்
உழை என்னும் பெயர் உழுதல் அதாவது துள்ளிக்குதிக்கும் பண்பினாலும்
நவ்வி என்னும் பெயர் இளமையும் அழகும் மிக்க விலங்கு என்ற பொருளிலும்
கவரி என்ற பெயர் கவர்த்த அதாவது இரண்டாகப் பிரிந்த கொம்புகளை உடையது என்ற பொருளிலும்
மரை என்பது மரம்போலப் பலவாகக் கிளைத்த மருப்புக்களைக் கொண்டது என்ற பொருளிலும்
கடமா(ன்) என்பது கடகடவென விரைந்து ஓடும் விலங்கு என்ற பொருளிலும்
ஆமா(ன்) என்பது பசுவைப் போலத் தோன்றும் மான் என்ற பொருளிலும் உண்டாகியிருக்கலாம்.

சங்க இலக்கியத்தில் மான்:

செர்விடே (Cervidae) என்னும் குடும்பத்தைச் சேர்ந்த பாலூட்டியான மான்கள் இந்தியா முழுவதிலும் பல இனங்களாக அறியப்படுகின்றன. சங்ககாலத் தமிழகக் காடுகளில் வாழ்ந்துவந்த பலவகையான மான் இனங்களைப் பற்றியக் குறிப்புக்கள் சங்க இலக்கியங்களில் காணக் கிடைக்கின்றன. உடல்முழுவதும் வெள்ளைப் புள்ளிகளை உடைய புள்ளிமானைப் பற்றிக் கூறும்போது அப்புள்ளிகள் அரிசிப்பொரி போலவும் நிழலில் தெரியும் வெளிச்சப் பொட்டுகளைப் போலவும் இருந்ததாகக் கூறுகிறது. சிலவகை மானின் தலையில் இருக்கும் கொம்புகள் உள்ளீடற்றதாகவும் சிலவகைக் கொம்புகள் முற்றிய நிலையில் இருந்ததாகவும் கூறப்படுள்ளது. மானின் கொம்புகளைக் கவைமருப்பு என்றும் திரிமருப்பு என்றும் இலக்கியம் இரண்டாகக் கூறுகிறது. மானின் கவைத்த மருப்புக்கள் பார்ப்பதற்கு மரக்கிளைகளைப் போலத் தோன்றியதாகவும் தாழம்பூவின் பூங்கொம்புகளைப் போலத் தோன்றியதாகவும் கூறப்பட்டுள்ளது. மானின் திரிந்த மருப்புக்கள் பார்ப்பதற்குத் திருகிய இரும்புக்கம்பியைப் போலவும் வாழைப்பூக்குலையின் ஒழிந்த தண்டு போலவும் தோன்றியதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மானின் காலடித் தடங்கள் அடும்பின் இலைபோலத் தோன்றியதென்றும் யாழின் பத்தல் போல இருந்ததென்றும் கூறுகின்றது. மானின் காதானது மூங்கில் முளையினை மூடியிருக்கும் பாளையினைப் போல இருந்ததாகக் கூறுகிறது. மானின் கண்களில் எப்போதும் ஒருவித மருட்சி தெரிவதால் அதனைப் பெண்களின் கண்களுடன் ஒப்பிட்டுக் கூறுகிறது. மிகுதியான அச்சத்தால் மானின் கண்கள் சிவக்கும்போது பார்ப்பதற்கு அது எறுழ் மரத்தின் செந்நிறப் பூக்களைப் போலத் தோன்றியதென்று கூறப்பட்டுள்ளது.

புல், பதவு, மிளகுக்கொடி, அறுகைக்கொடி, வேங்கைப்பூக்கள், வேளைப்பூக்கள், மூங்கில்நெல், வரகு, உழுந்து, நெல்லிக்காய், மரல் இலை போன்றவற்றை மான்கள் உண்டதாகச் சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. கவரிமான்கள் என்பவை நரந்தம் என்னும் புல்லையே உண்டு வாழ்ந்ததாகவும் அவை இமயமலையில் காணப்பட்டதாகவும் கூறுகிறது. ஆமான் எனப்படும் மான் இனம் பார்ப்பதற்குப் பசுக்களைப் போலவே இருந்ததால் பசுவும் சிறுவர்களும் ஆமானின் குட்டியைப் பசுவின் கன்றாகக் கருதியதும் சுவைபடக் கூறப்பட்டுள்ளது. ஆண்மானுக்கும் பெண்மானுக்கும் இடையிலான அன்பினைப் பற்றியும் குடும்பத்தின் தலைவனாகிய ஆண்மான் தனது பெண்துணைக்காகவும் குட்டிக்காகவும் எப்ப்டியெல்லாம் விட்டுக்கொடுத்து வாழ்ந்தது என்பதைப் பற்றியும் பல பாடல்களில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. சங்க இலக்கியத்தில் மானைப் பற்றிக் கூறப்பட்டுள்ள செய்திகளைக் கீழ்க்காணும் தலைப்புக்களின் கீழ் விரிவாகக் காணலாம்.  

1. மானின் நிறம்
2. மான் கொம்பு
3. மான் செவி
4. மானின் கண்கள்
5. மானின் காலடி
6. மானின் உணவு
7. மானின் குடும்பம்
8. கவரிமான்
9. ஆமான்

1. மானின் நிறம்:

மான் என்று சொன்னவுடன் புள்ளிமான் தான் அனைவரின் நினைவுக்கு வரும். காரணம், பொன்னிற / செம்பொன் நிற உடல் முழுவதும் வெள்ளைநிறப் புள்ளிகளுடன் துள்ளிக் குதிக்கின்ற அழகான புள்ளி மான்களின் உருவத்தினை யாராலும் மறக்க இயலாது. சிவப்பு, செம்பொன், பழுப்பு, சாம்பல், வெள்ளை முதலான பல நிறங்களில் மான்கள் காணப்பட்டாலும், புள்ளி மான்களின் அழகிய புள்ளிகளே சங்கப் பாடல்களில் அதிகம் பேசப்பட்டுள்ளன.

புள்ளிமான்களின் உடலில் காணப்பட்ட வெண்ணிறப் புள்ளிகளைப் பற்றிக் கூறும்போது, மலர்ந்த அரிசிப் பொரி போலத் தோன்றியதாகக் கீழ்க்காணும் பாடல்வரிகள் கூறுகின்றன.

பொரி மலர்ந்து அன்ன பொறிய மட மான்
திரி மருப்பு ஏறொடு தேர் அறற்கு ஓட - கலி.13

கோடைகாலத்தில் காட்டில் கடும் வெயில் நிலவியது. கடும் வெப்பக் காற்றினால் பல மரங்கள் தங்கள் இலைகளை உதிர்த்து நின்றன. இந்நிலையில் அந்த மரங்களின் கீழ் இருந்த நிழல் எப்படித் தோன்றும்?. புள்ளிமானின் உடல்மேல் இருக்கும் வெண்புள்ளிகளைப் போல ஆங்காங்கே கதிரவனின் வெளிச்சப் பொட்டுக்கள் தரையில் தோன்றியதாகக் கீழ்க்காணும் அகப்பாடல் கூறுகிறது.

கனை எரி நிகழ்ந்த இலை இல் அம் காட்டு
உழை புறத்து அன்ன புள்ளி நீழல் - அகம். 379

2. மான் கொம்பு:

மான் என்றவுடனே முதலில் நினைவுக்கு வருவது அதன் அழகான கொம்புகள் தான். பெண் மானைக் கவர்வதற்கும் பிற விலங்குகளிடம் இருந்து தன்னைத் தற்காத்துக் கொள்வதற்கும் ஆண் மான்களால் ஆயுதமாகப் பயன்படுத்தப் படுவதான கொம்புகளை இயற்கை அன்னையானவள் மான்களுக்கு அளித்த அருமையானதொரு கொடை என்றே கூறலாம். ஆனால், இந்த அழகான கொம்புகளே மான் இனங்களை மனிதர்கள் வேட்டையாடி அழிப்பதற்கும் ஒரு பெருங்காரணமாக அமைந்து விட்டதனையும் மறுக்க இயலாது.

கொம்புகளின் வலிமையின் அடிப்படையில் மான் கொம்புகளை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று: உள்ளீடற்றது. இரண்டு: முற்றியது. இதைப்பற்றிக் கூறும் சில சங்கப் பாடல்களைக் கீழே காணலாம்.

புழல் தலை புகர் கலை - புறம். 152

மேற்பாடலில் வரும் புழல் தலை என்பது மானின் உள்ளீடற்ற கொம்புகளைக் குறிப்பது.

இறுகு புனம் மேய்ந்த அறு கோட்டு முற்றல் - நற்.265

மேலே உள்ள பாடலில் வரும் அறுகோட்டு முற்றல் என்பது அறுந்தநிலையில் இருக்கும் முற்றிய கொம்புகளை அதாவது உள்நிறைந்த கொம்புகளைக் குறிப்பதாகும். இவ் இரண்டு வகைகளில் முற்றிய கொம்புடைய மான்களே அதிகம் பேசப்பட்டுள்ளன.

சங்ககாலத் தமிழகத்தில் இருந்த காடுகளில் பல்வகை மான் இனங்கள் வாழ்ந்திருக்க வேண்டும். ஆனால், அவற்றுக்கு வேறுவேறு பெயர்களைச் சூட்டாமல் கலை, மான், இரலை, நவ்வி முதலான பெயர்களை அனைத்துக்குமே பொதுவாகத் தான் புலவர்கள் சூட்டியுள்ளனர். இந்நிலையில், சங்ககாலத் தமிழகக் காடுகளில் வாழ்ந்த மான்களை அவற்றின் கொம்புகளின் வடிவ அடிப்படையில் கவைமருப்பு மான் என்றும் திரிமருப்பு மான் என்றும் இரண்டு வகைகளாகப் பிரித்துக் கீழே காணலாம்.

அ. கவைமருப்பு மான்கள்:

கவைத்தல் என்றால் கிளைத்தல் என்ற பொருள் உண்டு. அதன் அடிப்படையில், கவை மருப்பு என்றால் கிளைத்த கொம்புகள் என்று பொருள்படும். மரத்தின் கிளைகளைப் போலக் கொம்புகளில் பல கிளைகளையுடைய பல்வகை மான் இனங்கள் சங்ககாலத்தில் வாழ்ந்திருக்கின்றன. அவற்றுள் சில இனங்களாகப் புள்ளிமான் (விலங்கியல் பெயர் : ஆக்ஸிஸ் ஆக்சிஸ் Axis Axis ), கடமான் ( விலங்கியல் பெயர் ருஸா யுனிகலர் Rusa Unicolor ) ஆகியவற்றைச் சொல்லலாம். சங்ககாலத்தில் வாழ்ந்த மானின் கிளைத்த கொம்புகளை எப்படியெல்லாம் பிற பொருட்களுடன் உவமைப்படுத்திச் சங்கப் புலவர்கள் பாடியிருக்கிறார்கள் என்பதனைச் சில சான்றுகளுடன் கீழே காணலாம்.

கலைமான் தலையின் முதன்முதல் கவர்த்த
கோடல் அம் கவட்ட குறும் கால் உழுஞ்சில் -அகம். 151

கலைமானின் தலையில் முளைத்திருந்த கொம்புகளானவை, குட்டையாக வளர்ந்த உழிஞ்சில் மரத்தில் முதன்முதலில் தோன்றிய வளைந்த சிறிய கிளைகளைப் போலத் தோன்றியதாக மேற்பாடல் வரிகள் கூறுகின்றன. இன்னொரு புலவருக்கு மானின் கிளைத்த கொம்புகளைப் பார்க்கும்போது கோடையில் இலைகளை எல்லாம் உதிர்த்துவிட்டு நிற்கும் வற்றல் மரம் நினைவுக்கு வந்துவிட்டது. அதனை அப்படியே பாடுகிறார் கீழ்க்காணும் பாடலில்.

வறல் மரத்து அன்ன கவை மருப்பு எழில் கலை  - அகம். 395

தற்காப்புக்காகப் பிற விலங்குகளுடன் போரிடும்போது மான்கள் தங்களது கவைமருப்புக்களைக்கொண்டு எதிரியைத் தாக்கும். அத்தாக்குதலில் அதன் கொம்புகள் முறிந்து போவதுண்டு. அப்படி முறிந்தபின்னர், அந்த இடத்தில் புதிய கொம்புகள் தோன்றும். இப்புதிய கொம்புகள் தோன்றும்போது அவற்றின்மேல் வெல்வெட்டுத் துணியைப் போல மென்மையான தோல் மூடி இருக்கும். இதைப்பற்றிக் கூறும் சங்கப்பாடல் வரிகள் கீழே:

அறு மருப்பு ஒழித்த தலைய தோல் பொதி
மறு மருப்பு இளம் கோடு அதிர  - அகம்.291

மென்மையான தோலால் மூடப்பட்டிருக்கும் இந்த இளம் கொம்புகளைத் தாழம்பூக்களுடன் ஒப்பிட்டுக் கீழ்க்காணும் பாடலில் புலவர் கூறும் விதத்தைப் பாருங்கள்.

இறவு புறத்து அன்ன பிணர் படு தடவு முதல்
சுறவு கோட்டு அன்ன முள் இலை தாழை
பெரும் களிற்று மருப்பின் அன்ன அரும்பு முதிர்பு
நன் மான் உழையின் வேறுபட தோன்றி - நற்.19

சுறாமீனின் பற்களைப் போலக் கூரிய முட்களைக் கொண்ட இலைகளையுடைய தாழம்பூவின் மடல்கள் சிறியதாக இருந்தபோது இறால்மீனின் முதுகுபோலத் தோன்றியதாகவும் பின்னர் அம் மடல்கள் வளர்ந்து நீண்டவுடன் களிற்றுயானையின் நீண்ட வெண்ணிறத் தந்தங்களைப் போலத் தோன்றியதாகவும் அம்மடல்கள் விரிந்து முழுவதும் மலர்ந்து தோல் உதிர்ந்தவுடன் அவற்றுள் இருந்த பூக்களின் நீண்ட கோல்கள் உழைமானின் கிளைத்த புதிய கொம்புகளைப் போலத் தோன்றியதாகவும் கூறுகிறார் புலவர். அருகில் உள்ள படத்தில் தாழம்பூவின் கோல்களும் மானின் கொம்புகளும் ஒப்பிட்டுக் காட்டப்பட்டுள்ளன.

ஆ. திரிமருப்பு மான்கள்:

திரிதல் என்றால் வளைதல், சுற்றுதல் என்று பொருள். திரி மருப்பு என்பது வளைந்த / சுற்றிய கொம்புகளைக் குறிக்கும். திரிந்த கொம்புகளை உடைய பல்வகை மான் இனங்கள் சங்ககாலத் தமிழகக் காடுகளில் வாழ்ந்திருக்கின்றன. அவற்றுள் சில இனங்களாகப் புல்வாய்மான் ( விலங்கியல் பெயர்: ஆண்டெலோப் செர்விகாப்ரா Antilope Cervicapra ), இரலைமான் ( விலங்கியல் பெயர்: கசெல்லா பென்னட்டி Gazella Bennettii ) ஆகியவற்றைச் சொல்லலாம். சங்ககாலத்தில் வாழ்ந்த இவ்வகை மான்களின் திரிந்த மருப்புக்களைப் பிற பொருட்களுடன் ஒப்பிட்டுச் சங்ககாலப் புலவர்கள் எப்படியெல்லாம் பாடியுள்ளனர் என்பதைக் கீழே சில சான்றுகளுடன் காணலாம்.

இரும்பு திரித்து அன்ன மா இரு மருப்பின் - அகம். 4

மானின் தலையில் இருந்த திரிந்த கொம்புகள், முறுக்கிய இரும்புக் கம்பியைப் போலத் தோன்றியதாக மேற்பாடல் வரி கூறுகின்றது. தோல்செருப்பு அணிந்த கானவன் சுமந்து திரிகின்ற நீண்ட கவைக்கோலினைப் போல மானின் திரிந்த கொம்புகள் தோன்றியதாகக் கீழ்க்காணும் பாடல்வரிகள் கூறுகின்றன.

தொடுதோல் கானவன் கவை பொறுத்து அன்ன
இரு திரி மருப்பின் அண்ணல் இரலை  - அகம். 34

மேற்காணும் இரண்டு உவமைகளைக் காட்டிலும் கீழ்க்காணும் உவமையானது இரலையின் திரிந்த மருப்புக்களின் தோற்றத்தினை அப்படியே கண்முன்னால் கொண்டுவந்து நிறுத்துவதைப் பாருங்கள்.

குவி முகை வாழை வான் பூ ஊழுறுபு உதிர்ந்த
ஒழி குலை அன்ன திரி மருப்பு ஏற்றொடு  - அகம். 134

வாழைமரத்தின் குலையில் இருந்து பூக்களின் இதழ்கள் முற்றி உதிர்ந்தபின்னால் இருக்கும் குலையின் தண்டினைப் போல இரலையின் தலையில் திரிந்த மருப்புக்கள் தோன்றியதாக மேற்பாடல் வரிகள் கூறுகின்றன. அருகில் உள்ள படத்தில் இவ் இரண்டும் ஒப்பிடப்பட்டுக் காட்டப்பட்டுள்ளன. சங்ககாலப் புலவர்கள் இயற்கைப் பொருட்களை எந்த அளவுக்கு உற்றுநோக்கிப் பாடியுள்ளனர் என்பதற்கு இதை ஒரு காட்டாகக் கூறலாம். அதுமட்டுமின்றி, இரலையின் கொம்புகள் வலப்புறமாகத் திரிந்திருந்ததாகக் கீழ்க்காணும் பாடல் கூறுகிறது.

வலம் திரி மருப்பின் அண்ணல் இரலையொடு - அகம். 304

3. மான் செவி:

மானின் செவிகளின் அமைப்பானது உட்குழிந்த நிலையில் நடுவில் அகன்று மேலே சுருங்கிச்சென்று இறுதியில் ஏறத்தாழ கூரிய முனையுடன் விளங்கும். மானின் செவிகளைப் பற்றிக் கூறும் கலித்தொகைப் பாடல்வரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

நுண் பொறி மான் செவி போல வெதிர் முளை
கண் பொதி பாளை கழன்று உகும் பண்பிற்றே - கலி. 43

மூங்கிலின் முளைகளின்மேல் மூடியிருக்கும் பாளையானது முளைகள் வளர வளர உதிரும் தன்மையது. வெண்ணிறத்தில் கூர்மையுடன் கூடிய தோல்போன்ற இது பார்ப்பதற்கு மானின் செவிகளைப் போலத் தோன்றியதாக மேற்பாடல் வரிகள் கூறுகின்றன. மூங்கில் முளைத்தோலும் மானின் செவியும் அருகில் உள்ள படத்தில் ஒப்பிட்டுக் காட்டப்பட்டுள்ளது.

4. மானின் கண்கள்:

மான் என்றவுடன் அதன் கொம்புகளுக்கு அடுத்தபடியாக நினைவுக்கு வருவது அதன் கண்கள் தான். பொதுவாக, பார்ப்பதற்கு முழுமையான கருமை நிறத்தில் காணப்படும் மானின் கண்களில் ஒருவித மருட்சி தெரியும். அதாவது, எங்கிருந்து எந்த விலங்கு தன்னைத் தாக்குமோ என்ற ஒருவித அச்சம் அதன் கண்களில் எப்போதும் குடிகொண்டிருப்பதைப் பார்க்கலாம். அச்சத்துடன் காணப்பட்டாலும் அந்தக் கண்களில் அழகும் ஈர்ப்பும் இல்லாமல் இல்லை. பெரிய கண்களால் மருட்சியுடன் நோக்கும் மானைப் பெண்களுடன் ஒப்பிட்டுப் பாடுவது இன்றுவரையிலும் தொடர்ந்து வருவதான ஒரு இலக்கிய மரபு ஆகும். சங்க இலக்கியத்தில் மானின் கண்களைப் பெண்களின் கண்களுடன் ஒப்பிட்டுக் கூறுகின்ற சில பாடல்வரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

மடமான் நோக்கின் வாள் நுதல் விறலியர் - சிறு.31
மான் அமர் நோக்கம் காணா ஊங்கே- நற்.101
மான் அமர்ப்பு அன்ன மையல் நோக்கமொடு - நற்.179
வலைமான் மழைக்கண் குறுமகள் - நற்.190

சில நேரங்களில் மானின் கண்கள் சிவந்தும் காணப்படுகிறது. காட்டுவாசிகள் உண்டாக்கும் வில்லின் ஓசை போன்றவற்றால் திடீரென்று ஏற்படும் அதிக அச்சத்தால் மானின் கண்கள் சிவப்பதனை எறுழ் மரத்தின் சிவந்த மலருடன் ஒப்பிட்டுக் கீழ்க்காணும் கலிப்பாடல் கூறுகிறது.

எருத்து வலிய எறுழ் நோக்கு இரலை - கலி.15
சிலை ஒலி வெரீஇய செம்கண் மரை விடை    - மலை.406

5. மானின் காலடி:

ஒவ்வொரு விலங்கிற்கும் தனிப்பட்ட ஒரு காலடி அமைப்பினை இயற்கை அளித்திருக்கிறது. அவ்வகையில் மானின் காலடித்தடமும் மற்ற விலங்குகளிடம் இருந்து வேறுபட்டுத் தனித்துக் காணப்படுகிறது. காட்டுப் பாதையில் காணப்படுகின்ற மானின் தனித்துவமான காலடித்தடங்கள், வேடுவர்களும் புலி முதலான வேட்டை விலங்குகளும் அவற்றைப் பின்தொடர்ந்து சென்று மான்களை வேட்டையாடிக் கொல்வதற்குத் துணைசெய்கின்றன. இதைப்பற்றிக் கூறும் சில சங்க இலக்கியப் பாடல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

காட்டுமான் அடிவழி ஒற்றி வேட்டம் செல்லுமோ நும்இறை -அகம்.388
மான் அடி பொறித்த மயங்கு அதர் மருங்கின் - பெரும். 106.

மானின் காலடி அமைப்பினைப் பற்றிக் கூறுமிடத்து, அது அடும்பின் இலைகளைப் போல இரண்டாகக் கவைபட்டு இருந்ததாகக் கீழ்க்காணும் பாடல் கூறுகிறது. மான் குளம்பின் படமும் அடும்பு இலையின் படமும் ஒப்பிடப்பட்டு அருகில் காட்டப்பட்டுள்ளது.

மான்அடிஅன்ன கவட்டுஇலைஅடும்பின் - குறு.243

பாணர்களும் பொருநர்களும் பயன்படுத்திய சங்ககால யாழின் பத்தல் என்னும் உறுப்பானது மானின் குளம்பு போல கவடுபட்டு இருந்ததாகக் கூறுகிறது கீழ்க்காணும் பாடல்வரி. யாழின் பத்தலைப் பற்றி மேலும் தகவல்களை அறிந்துகொள்ள வயிறு என்றால் என்ன?. என்ற ஆய்வுக் கட்டுரையைப் படிக்கலாம்.

குளப்பு வழி அன்ன கவடு படு பத்தல்  - பொருந.     

6. மானின் உணவு:

இயற்கைச் சூழலைக் கட்டுப்படுத்தும் பல்வேறு விலங்கினங்களில் ஒன்றாக மானையும் கருதலாம். காரணம், ஏறத்தாழ அனைத்து விதமான புல், செடி, கொடி, மரங்களின் இலைகள், பூக்கள், காய்கள், கனிகள் மற்றும் தினைவகைகளையும் மான் இனங்கள் உண்கின்றன. சங்ககாலத்தில் வாழ்ந்த மான் இனங்கள் என்னவெல்லாம் உண்டன என்று சங்க இலக்கியங்கள் பதிவு செய்துள்ளவற்றைக் கீழே காணலாம்.

எத்தனை உணவுகள் இருந்தாலும் மானின் முதன்மை உணவு புல் தான். புல்லில் பலவகை உண்டு. மான்கள் புல் உண்டதனைப் பற்றிக் கூறும் சங்கப்பாடல் வரிகள் கீழே:

திரி மருப்பு இரலை புல் அருந்து உகள - அகம். 14
செறிஇலை பதவின் செம்கோல் மென் குரல்    
மறி ஆடு மருங்கின் மட பிணை அருத்தி - அகம். 34
பதவு அருந்து வெண்புறக்கு உடைய திரிமருப்பு இரலை - அகம். 139

புல்லைத் தவிர, மிளகு, அறுகை போன்ற படர்கொடிகளின் பசிய இலைகளையும் மான்கள் உண்டதாகக் கூறும் பாடல்கள் கீழே:

அதிர் குரல் முது கலை கறி முறி முனைஇ - அகம். 182
மணி வார்ந்து அன்ன மா கொடி அறுகை ...
பிணையொடு மாந்தி மான் ஏறு உகளும் - குறு.256

வேளைச்செடி, வேங்கை மரம் போன்றவற்றின் பூக்களை மான் இனங்கள் விரும்பி உண்டதாகக் கூறும் பாடல்வரிகள் கீழே தரப்பட்டுள்ளன.

மட பிணை பூளை நீடிய வெருவரு பறந்தலை             
வேளை வெண் பூ கறிக்கும் -  புறம்.23

பெரு வரை வேங்கை பொன் மருள் நறு வீ
மான் இன பெரும் கிளை மேயல் ஆரும் - ஐங்கு.217

கோடைகாலத்தில் புற்கள் கருகிவிடுவதுடன் மரங்களும் இலைகளை உதிர்த்து விடும். இதனால் மான்களுக்குப் புற்களும் இலைகளும் பூக்களும் உண்ணக் கிடைக்காமல் போவதுடன் குடிக்க நீரும் இல்லாமல் அவை வாடும். அதனால் அவை மரல் செடிகளின் இலைகளையும் நெல்லிக்காய்களையும் தின்று உயிர்வாழும். இதைப்பற்றிக் கூறும் சங்கப் பாடல்கள் சில கீழே தரப்பட்டுள்ளன.

மரல் புகா அருந்திய மா எருத்து இரலை - குறு.232
வரிமரல் கறிக்கும் மட பிணை திரி மருப்பு இரலைய - அகம்.133
நெல்லி மரை இனம் ஆரும் முன்றில் - குறு.235
நெல்லிப் பைங்காய் அருந்தி மெல்கிடு மடமரை - அகம்.399

காடுகளில் இருக்கும் மூங்கில் மரங்களின் இலைகள் கோடைகாலத்தில் சருகாக உதிர்ந்து விடும். அச்சமயத்தில் அம்மரங்களில் இருந்து மூங்கில் அரிசி எனப்படும் விதைகளும் உதிரும். அதைக்கண்ட ஆண் மானானது சேர்ந்து உண்பதற்காகத் தனது பெண்மானையும் அழைத்ததாகக் கூறும் பாடல்வரிகள் கீழே:

புல் மறைந்து அலங்கல் வான் கழை உதிர் நெல் நோக்கி
கலை பிணை விளிக்கும் கானத்து ஆங்கண் - அகம். 129

காடுகளில் உண்பதற்கு எதுவும் கிடைக்காதபொழுது தோட்டங்களில் புகுந்து அங்கே பயிரிடப்படும் வரகு, உழுந்து போன்றவற்றின் முற்றிய காய்களையும் மான்கள் உண்டதைப் பற்றிக் கீழ்க்காணும் பாடல்கள் கூறுகின்றன.

செழும் பயறு கறிக்கும் புன்கண் மாலை - குறு.338
ஈரிலை வரகின் கவைக்கதிர் கறித்த காமர் மட பிணை  - நற்.121
உழுந்தின் ஊழ்ப்படு முதுகாய் உழைஇனம் கவரும் - குறு.68

வரகு பயிரிட்ட தோட்டத்தில் களை எடுத்தவர்கள், தலையில் கொம்புகளைக் கொண்ட தொப்பி (தலைக்குடை) போன்ற ஒன்றினை அணிந்தவாறு பறையொலிக்கு ஏற்ப ஆடிக்கொண்டே களை எடுத்தபோது பார்ப்பதற்கு கொம்புடைய மான் கூட்டம் ஒன்று அத்தோட்டத்தில் பரந்து மேய்வதைப் போலத் தோன்றியதாகக் கீழ்க்காணும் பாடல் கூறுகிறது.

இரலை நன் மான் இனம் பரந்தவை போல்
கோடு உடை தலைக்குடை சூடிய வினைஞர்
கறங்கு பறை சீரின் இரங்க வாங்கி
களை கால் கழீஇய பெரும்புன வரகின் - அகம். 194

புல்லுணவு உண்ணும் ஆடுகளும் மாடுகளும் உண்டபின்னர் அவற்றை அசைபோடுவதைப் பார்த்திருக்கிறோம். மான்களும் அவ்வாறே உண்ட உணவினை மெல்கிடும் அதாவது அசைபோடும் தன்மை கொண்டவைதான். இதைப்பற்றிக் கூறும் சில பாடல்வரிகள் கீழே சான்றாகக் கொடுக்கப்பட்டுள்ளன.

மெல்கிடு கவுள துஞ்சு புறம் காக்கும் - அகம். 34
பல்கோள் நெல்லி பைம்காய் அருந்தி மெல்கிடு மடமரை - அகம்.399

7. மானின் குடும்பம்:

மானைப் பற்றிக் கூறுமிடத்து, அதன் குடும்பத்தைப் பற்றியும் கண்டிப்பாகச் சொல்லியாக வேண்டும். காரணம், காட்டு விலங்குகளில் மான்கள் ஒரு கட்டுப்பாடான குடும்ப அமைப்பினைப் பின்பற்றுவதுடன் கணவன் - மனைவிக்குள் எப்படிப்பட்ட அன்பு இருக்கவேண்டும் என்பதற்கு முன்மாதிரியாகவும் விளங்குகின்றன. சங்க இலக்கியங்களில் மானின் குடும்ப அமைப்பு முறை பற்றிக் கூறப்பட்டுள்ள பல்வேறு செய்திகளை இங்கே காணலாம்.

ஒரு மானின் குடும்பத்தில் ஆண்மான், பெண்மான் மற்றும் அதன் குட்டி(கள்) அடங்கும். இவற்றில் ஆண்மான் தான் குடும்பத்திற்குத் தலைவன் ஆகும். குடும்ப அமைப்பில் இல்லாத பிற ஆண்மான்களிடம் இருந்து குடும்பத்தில் இருக்கும் தலைமைப்பண்புடைய ஆண்மானை வேறுபடுத்திக்காட்ட 'அண்ணல்' என்ற சொல்லால் இலக்கியங்கள் குறிப்பிடும். ஆண்மானின் பெண்துணையினைப் 'பிணை' என்றும் குட்டியை 'மறி' என்றும் குறிப்பிடும். அண்ணலும் பிணையும் மறியுடன் கூடியிருந்த நிலையினைப் பற்றிக் கூறும் சங்கப்பாடல் கீழே:

சிறுமறி தழீஇய தெறிநடை மடப்பிணை
வலம் திரி மருப்பின் அண்ணல் இரலையொடு
அலங்கு சினை குருந்தின் அல்கு நிழல் வதிய - அகம். 304

குடும்பத்தில் வயது முதிர்ந்த ஆண் என்ற ஒரே காரணத்திற்காக மட்டும் அண்ணலானது ஒரு குடும்பத் தலைவனாக அறியப்படவில்லை. குடும்ப உறுப்பினர்களான தனது பெண் துணை மற்றும் குட்டிக்காக எதையும் தியாகம் செய்யும் உயர்ந்த பண்பும் பிற விலங்குகளிடம் இருந்து அவற்றைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்புணர்ச்சியும் அண்ணலுக்கு நிறையவே இருந்ததனை சங்கப் பாடல்களின் வழி அறிந்துகொள்ள முடிகிறது. ஆண்மானானது தனது பெண்துணை மற்றும் குட்டியின் மீது கொண்டிருந்த அன்பினை வெளிப்படுத்திக் காட்டுகின்ற சில பாடல்களை மட்டும் சான்றாகக் கீழே காணலாம்.

இன் நிழல் இன்மையான் வருந்திய மட பிணைக்கு
தன் நிழலை கொடுத்து அளிக்கும் கலை - கலி.11

கோடைகாலத்தில் எங்கும் நிழல் காணப்படாமையால், ஆண்மானானது சுடும்வெயிலைத் தன்மேல் தாங்கிக்கொண்டு தனது நிழலில் தனது பெண் துணையை இருக்கச் செய்ததை மேற்பாடல் வரிகள் கூறுகின்றன. பெண்மானுக்கு மட்டுமின்றி, தனது குட்டிக்கும் வெயில்படாமல் நிழலை அளித்ததைக் கீழ்க்காணும் பாடல்வரிகள் கூறுகின்றன.

தெறித்து நடை மரபின் தன் மறிக்கு நிழல் ஆகி
நின்று வெயில் கழிக்கும் - குறு. 213

மணல்நிறைந்த ஆற்றங்கரையோரமாக வளர்ந்திருந்த புல்லினைத் தான் உண்ணாமல் தனது பெண்துணையை முதலில் உண்ணச்செய்து அது உண்டபின் அசைபோட்டவாறு படுத்துக்கிடக்க ஆண்மானானது காவலாக இருந்ததனை கீழ்க்காணும் பாடல் வரிகள் கூறுகின்றன.

இரு திரி மருப்பின் அண்ணல் இரலை
செறி இலை பதவின் செம் கோல் மென் குரல்  
மறி ஆடு மருங்கின் மட பிணை அருத்தி
தெள் அறல் தழீஇய வார் மணல் அடைகரை
மெல்கிடு கவுள துஞ்சு புறம் காக்கும் - அகம். 34

ஆண்மானுக்கும் பெண்மானுக்கும் இடையிலான அன்பு அளப்பரியது. சங்கப் பாடல்களில் அதிகம் பேசப்பட்டிருப்பது இந்த மான்களுக்கு இடையிலான அன்புதான். இந்த இரண்டு மான்களும் ஒன்றையொன்று பிரியாமல் எப்போதும் இணைந்தே இருக்கும். இவற்றில் ஏதேனும் ஒரு மானை வேடுவர்களோ புலி முதலான விலங்குகளோ வேட்டையாடிக் கொன்றுவிட்டால் எஞ்சியிருக்கும் மான் படும் துன்பம் அளவற்றது. அப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சியினை நமது கண்முன்னே கொண்டுவந்து காட்டுகின்ற ஒரு அகப்பாடல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அம் விளிம்பு உரீஇய விசை அமை நோன் சிலை
செம் வாய் பகழி செயிர் நோக்கு ஆடவர்
கணை இட கழிந்த தன் வீழ் துணை உள்ளி
குறு நெடும் துணைய மறி புடை ஆட
புன்கண் கொண்ட திரி மருப்பு இரலை
மேய் பதம் மறுத்த சிறுமையொடு நோய் கூர்ந்து
நெய்தல் அம் படுவில் சில் நீர் உண்ணாது
எஃகு உறு மாந்தரின் இனைந்து கண்படுக்கும்
பைது அற வெம்பிய பாழ் சேர் அத்தம் - அகம். 371

கானவர்களின் அம்புபட்டு இறந்த தனது பெண்துணையை நினைத்து மனம் வருந்திய ஆண்மானானது, தாய் இறந்ததை அறியாத தனது குட்டியானது துள்ளிக்குதிக்க, எதையும் உண்ணாமல் நீரும் அருந்தாமல் மார்பில் வேல்பாய்ந்த மனிதரைப் போல துன்புற்று வருந்தியவாறு சோர்ந்து படுத்த நிகழ்வினை மேற்பாடல் வரிகள் கூறுகின்றன.

மேலே கண்டவாறு பெருமைக்குரிய பல நல்ல பண்புகள் மானுக்கு இருப்பதால்தான், மான் என்ற சொல்லுக்குப் பெருமை என்ற பொருளும் பிற்பாடு தோன்றியிருக்க வேண்டும்.

8. கவரிமான்:

சங்க இலக்கியங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள பல்வேறு மான் இனங்களில் கவரிமானும் ஒன்றாகும். இதை மட்டும் இங்கே தனியாகக் கூறுவதன் காரணம், இவ்வகை மான்கள் இமயமலையில் மட்டுமே வாழ்ந்ததாகச் சங்க இலக்கியங்கள் பதிவு செய்துள்ளன. கவரிமான் பற்றிச் சங்க இலக்கியங்கள் கூறும் செய்திகளை இங்கே காணலாம்.

கவரிமான்கள் நரந்தம் எனப்படும் ஒருவகையான நறுமணப் புல்லையே உண்டுவாழ்ந்ததாக அறியப்படுகிறது. புல்லை உண்டபின்னர், அருவிநீரையும் சுனைநீரையும் குடித்துவிட்டு முருக்கமரங்கள் மற்றும் தகரமரங்களின் நிழலில் தன் துணையுடன் தங்கும். இம்மான்கள் இமயமலையில் மட்டுமே வாழ்ந்து வந்ததைக் கீழ்க்காணும் சங்கப் பாடல்களின் வழி அறியமுடிகிறது.

கவிர்ததை சிலம்பில் துஞ்சும் கவரி
பரந்து இலங்கு அருவியொடு நரந்தம் கனவும்
ஆரியர் துவன்றிய பேர் இசை இமயம் - பரி.11

நரந்தை நறும்புல் மேய்ந்த கவரி
குவளை பைம்சுனை பருகி அயல
தகர தண் நிழல் பிணையொடு வதியும்
வட திசையதுவே வான் தோய் இமயம் - புறம். 132

இந்தக் கவரிமான் இனம் முற்றிலும் அழிந்துபோய் விட்டது. தற்போது இமயமலையில் காணப்படும் கத்தூரி மானும் கவரிமானும் அடிப்படையில் வேறுவேறானவை. 

9. ஆமான்:

ஆமான் என்பது தோற்றத்தில் ஒரு ஆவினைப் போல அதாவது பசுமாட்டினைப் போலவே காணப்படுகின்ற ஒருவகை மான் இனத்தைக் குறிப்பதாகும். நீலான் என்றும் நீலக்காளை என்றும் அழைக்கப்படுகின்ற இதன் விலங்கியல் பெயர் போசிலாபஸ் டிராகோகேமலஸ் ( BOSELAPHUS TRAGOCAMELUS ) ஆகும். இதன் ஆங்கிலப்பெயரில் வரும் Bos என்பது பசுவினையும் Elaphus என்பது மானையும் குறிக்கின்ற சொற்களாகும். ஆக, Boselaphus என்பது பசுவைப் போலத் தோன்றும் மான் என்ற பொருளில் சங்ககாலத் தமிழ்ப்பெயரான ஆமான் போலவே இருப்பது வியப்புக்குரியது. !!
சங்ககாலத்தில் வாழ்ந்துவந்த இவ்வகை மான்களைப் பற்றிச் சங்க இலக்கியங்கள் கூறுகின்ற செய்திகளைக் கீழே காணலாம்.

ஆமானின் தலையில் இருந்த கொம்புகள், மாடுகளுக்கு இருப்பதைப் போலவே உள்ளீடற்ற கொம்புகளாக இருந்ததனைக் கீழ்க்காணும் பாடல் கூறுகிறது.

புழல் கோட்டு ஆமான் புகல்வியும் - குறி.253

புலியால் கொல்லப்பட்ட ஒரு ஆமானின் கைவிடப்பட்ட குட்டியினைத் தனது குட்டியாகக் கருதிய ஒரு பசுமாடு தனது பிற கன்றுகளுடன் சேர்த்துப் பாலூட்டியதாகக் கீழ்க்காணும் பாடல் கூறுகிறது.

புலிபால் பட்ட ஆமான் குழவிக்கு
சினம் கழி மூதா கன்று மடுத்து ஊட்டும் - புறம். 323

பசுக்கள் மட்டுமின்றி சிறுவர்களும் கூட, நடுங்குகின்ற தலையினை உடைய ஆமானின் சிறிய குட்டியைப் பசுவின் கன்றாகக் கருதி மாட்டுத் தொழுவத்தில் பூட்டிய செய்தியைக் கீழ்க்காணும் பாடல்வரிகள் கூறுகின்றன.

கொடும் கோட்டு ஆமான் நடுங்கு தலைக் குழவி
புன் தலை சிறாஅர் கன்று எனப் பூட்டும் - புறம். 319

காட்டுவாசிகள் வேட்டையாடியபோது அஞ்சி ஓடிய ஒரு ஆமானின் குட்டியானது வழிதவறி ஒரு ஊருக்குள் புகுந்துவிட, அவ்வூர் இளைஞர்கள் அதனைப் பிடித்து ஒரு மாட்டினைப்போல வீட்டில் வளர்த்த செய்தியைக் கீழ்க்காணும் பாடல் கூறுகிறது.

அமர் கண் ஆமான் அம் செவி குழவி
கானவர் எடுப்ப வெரீஇ இனம் தீர்ந்து
கானம் நண்ணிய சிறுகுடி பட்டு என
இளையர் ஓம்ப மரீஇ அவண் நயந்து - குறு.322

ஆமான்களை அடர்ந்த காடுகளுக்குள் அல்லாமல் பரந்த தோட்டங்கள் மற்றும் புல்வெளிகளில் அதிகம் காணலாம் என்று விக்கிப்பீடியா கூறுகிறது. அதைப்போலவே அவரைத் தோட்டத்தில் இலைகளை மேய்ந்துகொண்டிருந்த ஆமான்களைக் காட்டுவாசிகள் கூச்சலிட்டு விரட்டிய செய்தியினை மதுரைக்காஞ்சி பதிவுசெய்துள்ளது.

மணிப்பூ அவரை குரூஉ தளிர் மேயும்
ஆமா கடியும் கானவர் பூசல் - மது.293

முடிவுரை:

சங்ககாலத்தில் வாழ்ந்துவந்த மான் இனங்களைப் பற்றிச் சங்க இலக்கியங்கள் கூறியுள்ள பல்வேறு செய்திகளை மேலே விரிவாகக் கண்டோம். இவைதவிர இன்னும் பல சுவையான தகவல்களும் கூறப்பட்டுள்ளன. அவற்றுள், கானவச் சிறுவர்களின் நிறமிழந்த தலைமயிரானது குட்டிமானின் நெற்றிமயிரைப் போலச் செம்பொன் நிறத்தில் இருந்ததாகவும் காட்டுவாசிகளின் திரிந்து முறுக்குண்ட தாடியானது மானின் திரிந்த கொம்புகளைப் போலிருந்ததாகவும் கூறப்பட்டுள்ள செய்திகள் சுவைமிக்கவை. இறுதியாக, சங்க இலக்கியங்கள் இமயமலையில் வாழ்ந்ததாகக் கூறியுள்ள கவரிமானும் திருக்குறளில் கூறப்பட்டுள்ள கவரிமாவும் வேறானவை என்பது குறிப்பிடத்தக்கது.