வியாழன், 26 ஏப்ரல், 2018

தமிழில் மொழிபெயர்ப்புச் சிக்கல்களும் தீர்வும்


தமிழில் மொழிபெயர்ப்புச் சிக்கல்களும் தீர்வும்
****************************************************
திருத்தம் பொன்.சரவணன்.



முன்னுரை:

தம்மொழியில் இல்லாத புதிய கருத்துக்கள் வேறு எம்மொழியில் இருந்தாலும் அதனைத் தம் மொழியில் கொண்டுவரவேண்டிய தேவை அனைவருக்கும் இருக்கிறது. அப்படிக் கொண்டுவந்தால்தான் அம்மொழி சாகாவரம் பெற்று வாழ்வதுடன் மக்களும் அம்மொழியைப் பேச விரும்புவர். இது தமிழுக்கும் பொருந்தக்கூடியதே. எனவே பிற மொழிகளில் உள்ள புதிய கருத்துக்களை / சொற்களைத் தமிழில் மொழிமாற்றம் செய்து கொண்டுவர வேண்டிய தேவை பன்னெடுங்காலமாகவே இருந்து வருகிறது. ஆனால் அப்படி மொழிமாற்றம் செய்வதில் சில சிக்கல்கள் இருக்கின்றன.

ஒருமொழியில் உள்ள ஒலிக்குறிப்புகள் அனைத்தும் பிற மொழியில் அப்படியே இருப்பதில்லை. ஒவ்வொரு மொழிக்கும் என்றே தனியாக சிறப்பு ஒலிக்குறிப்புக்களும் உண்டு. இந்நிலையில் பிற மொழியில் இருக்கும் சிறப்பு ஒலிக்குறிப்புக்களைத் தமிழில் எவ்வாறு காட்டுவது? என்ற சிக்கல் முன்னால் இருக்கிறது. காரணம், பிறமொழிகளில் உள்ள பல சிறப்பு ஒலிக்குறிப்புக்கள் தமிழில் இல்லை. ஆம், செம்மொழி என்று உலகோரால் பெருமையுடன் கொண்டாடப்பட்டு வரும் நம் இனிய தமிழ்மொழியில் பல புதிய ஒலிகளுக்கான எழுத்துக்கள் இல்லை என்ற குறை நெடுநாட்களாக இருந்து வருகிறது. ஏன், கிரந்த எழுத்துக்களான ஸ, ஷ, ஜ, ஹ இல்லையா என்று சிலர் நினைக்கலாம். ஆனால், தமிழ் மொழிபெயர்ப்பில் உள்ள மொத்தச் சிக்கல்களில் கால்வாசியைக் கூட இந்த கிரந்த எழுத்துக்களால் தீர்த்துவைக்க இயலாது என்பதே உண்மை.

சான்றாக, GEORGE BUSH என்ற ஆங்கிலப் பெயரை எப்படித் தமிழில் எழுதுவது?

தற்போது நாம் ஜார்ஜ் புஷ் என்று எழுதிக்கொண்டு வருகிறோம். இதில் ஜா, ஜ், ஷ் ஆகியவை தமிழ் எழுத்துக்களே அல்ல. இவை கிரந்த எழுத்துக்கள். அதுமட்டுமின்றி, ஆங்கிலப் பெயரில் வரும் BU என்பதற்கான சரியான ஒலிக்குறிப்பு அல்லது எழுத்தும் நம்மொழியில் இல்லை. இதேபோல bhu, du, dhu, gu, ghu போல பல ஒலிகளுக்கான தமிழ் எழுத்துக்கள் இல்லை.

வடமொழி அல்லது பிறமொழி எழுத்துக்களை எப்படித் தமிழ்ப்படுத்துவது என்று தொல்காப்பியம், நன்னூல் உட்பட பல இலக்கண நூல்கள் கூறியிருந்தாலும் அவ்விதிகள் இக்காலத்திற்குப் பொருந்தாமல் போய்விட்டன. இதனால் பல புதிய ஒலிக்குறிப்புக்களைத் தமிழ்ப்படுத்தும் வழியின்றி கிரந்த எழுத்துக்களை ஆங்காங்கே பயன்படுத்தி சிலர் அரைகுறையாக தமிழில் எழுதி வருகின்றனர்.

புதிய ஒலிகளைத் தமிழ்ப்படுத்துவதில் இருவிதமான சிக்கல்கள் உள்ளன.

1. கிரந்த எழுத்துக்கள் அறவே கூடாது.
2. புதிய வரிவடிவங்களும் கூடாது.

என்பதே பெரும்பான்மைத் தமிழ்ப் பற்றாளார்களின் விருப்பமாகும். அதாவது தற்போது இருக்கும் தமிழ் எழுத்துக்களைக் கொண்டே புதிய ஒலிகளை எவ்வாறு தமிழ்ப்படுத்துவது?. என்பதே இப்போது நம் முன்னால் இருக்கும் கேள்வியாகும். இச்சிக்கலை ஆறுரூபாயின் உதவியுடன் எளிதில் தீர்த்துவிடலாம். அதென்ன ஆறுரூபாய்?. வாங்க பார்க்கலாம்.

ஆறுரூபாய் முறை:

இந்திய ரூபாயின் புதிய குறியீடு வெளியிடப்பட்ட பின்னால் வெளிவந்த புதிய கணினி விசைப்பலகையில் இரண்டாம் வரிசையில் இடது ஓரமாக ரூபாய்க்கான குறியீடு தாங்கிய பொத்தான் இருக்கும். இதில் ரூபாயின் குறியீட்டுடன் `, ~ ஆகிய குறியீடுகளும் இருக்கும். அதேவரிசையில் எண் 6 க்கான பொத்தானில் ^ என்ற குறியீடும் இருக்கும். ஆறு மற்றும் ரூபாய்க்கான பொத்தான்களில் இருக்கும் `, ~, ^ ஆகிய குறியீடுகளைப் பயன்படுத்தியே தமிழ் எழுத்துக்களின் சிக்கல்களுக்கான தீர்வைக் காணப்போகிறோம்.

எப்படி க, த ஆகிய எழுத்துக்களுடன் துணைஎழுத்துக்களைச் சேர்த்து கா, கே, கோ, தா, தே, தோ போல பல புதிய எழுத்துக்களை உருவாக்கிப் பயன்படுத்துகிறோமோ அதைப்போல தமிழ் எழுத்துக்களுடன் `, ~, ^ ஆகியவற்றைத் துணைக்குறியீடுகளாகச் சேர்த்துப் புதிய ஒலிக்குறிப்புக்களை எழுதலாம். இதை எப்படிச் செய்வது என்று விளக்கமாகப் பார்க்கலாம். `, ~, ^ ஆகிய மூன்று குறியீடுகளில்,

^ என்பது மேல்நோக்கி இருப்பதால் வல்லோசையைக் குறிக்கவும்
` என்பது சிறியதாகக் கீழே இருப்பதால் மெல்லோசையைக் குறிக்கவும்
~ என்பதை இடைப்பட்ட ஓசையைக் குறிக்கவும்
^^ என்பதை மேல்வல்லோசையைக் குறிக்கவும்
^` என்பதைக் கீழ்வல்லோசையைக் குறிக்கவும் பயன்படுத்தலாம். 

இந்த ஒலிக்குறிப்புக்களைக் கணினி விசைப்பலகையில் தட்டச்சுவதும் மிக எளிது. ஆறு மற்றும் ரூபாய்க்கான பொத்தான்களின் உதவியுடன் இது செயல்படுத்தப் படுவதால் இந்த முறைக்கு 'ஆறுரூபாய்' முறை என்று பெயரிடப்படுகிறது. 

வல்லின ஒலிகளும் வரிவடிவங்களும்:

பிறமொழிச் சொற்களை ஒலிபெயர்க்கும்போது உண்டாகும் சிக்கல்கள் யாவும் வல்லின எழுத்துக்களிலேயே அமைந்துள்ளதை அறியலாம். எனவே, வல்லின எழுத்துக்களுக்கு மட்டும் அந்த எழுத்துக்களின் ஒலிப்புமுறைப்படி அவற்றின் வரிவடிவங்களைக் கீழ்க்கண்டவாறு குறிக்கலாம்.

குறியீடு
`
~
^
^^
^`
^~
HA
GA
GHA



SA
SHA
JA
JHA
ZA
KSHA
DA

DDA



DHA

DDHA



BA

BHA

FA






































சில சான்றுகளும் விளக்கங்களும்:

ஆறுரூபாய் முறையைப் பயன்படுத்தி இப்போது GEORGE BUSH என்பதைக் கீழ்க்கண்டவாறு தமிழில் எழுதலாம்.

GEORGE BUSH  - சா^ர்ச்^ பு`ச்~

மேலே உள்ளதில் புதிய வரிவடிவங்களோ பிறமொழி எழுத்துக்களோ எதுவும் இல்லாததைக் கவனியுங்கள். இதேபோல பல பிறமொழிப் பெயர்ச்சொற்களை இந்த மூன்றேமூன்று துணைக்குறியீடுகளின் உதவியுடன் தமிழ்ப்படுத்தி எழுதலாம். இன்னும் சில சான்றுகள் கீழே தரப்பட்டுள்ளன.

STALIN                        - ச்`டாலின்
SUBASH CHANDRA BOSE         - சு`பா`ச்~ சந்த்`ர போ`ச்`
RAMESH                       - ரமேச்~
BILL CLINTON                  - பி`ல் க்ளிண்டன்
ANSUI ZEN                    - அன்சூ`ய் செ^`ன்
MAHATMA GANDHI               - மகா`த்மா கா~ந்தி`
JAWAHARLAL NEHRU             - ச^வக`ர்லால் நேரு
BHAGAVAT SINGH               - ப^க~வத் சி`ங்
BUDDHA                       - பு`த்தா^
LAKSHMAN                     - லச்^~மண்
FEROZ                        - பெ^`ரோச்^` அல்லது ஃபெரோச்^`

மேலே உள்ள சில பெயர்களைத் தமிழ்ப்படுத்துகிறேன் என்று கூறி, சுடாலின் என்றும் சுபாசு சந்திர போசு என்றும் இரமேசு என்றும் எழுதுகின்றனர். இப்படி எழுதுவது சரியா என்றால் இல்லை. காரணம், இதனால் பெயர்களின் ஒலிப்புமுறையே மாறிவிடுவதுடன் அப்பெயரினை உடையவர்களும் பிறர் தம் பெயரை மாற்றி எழுதுவதை விரும்புவதுமில்லை. பிறமொழிப் பெயர்களை அதன் ஒலிப்புமுறை மாறாமல் சரியாகப் பலுக்கினால் தான் கேட்பவரும் அதனைச் சரியாகப் புரிந்துகொள்ள முடியும். மாற்றி ஒலிப்பதால் குழப்பமே ஏற்படும்.

இத்தகைய ஒலிப்புச் சிக்கல்களைத் தீர்க்கவே ஆறுரூபாய் என்னும் புதியமுறை முன்மொழியப்படுகிறது. இது புதியமுறை என்பதால் துவக்கத்தில் அச்சடிக்கச் சற்று கடினமாக இருக்கும். பழகினால் மிகமிக எளிதாகிவிடும். இந்த முறையைப் பயன்படுத்திக் கிரந்த எழுத்துக்கள் மட்டுமின்றி, ஆங்கில எழுத்துக்களையும் தவிர்த்து தூய தமிழில் எழுதலாம்.

உண்மையில் மொழிபெயர்ப்பின்போது ஏற்படும் சிக்கல்கள் பல. அவற்றைப் புரிந்துகொள்ளும் முன்னர் மொழிபெயர்ப்பின் வகைகளைப் பற்றி அறிதல் அவசியம். பொதுவாக, ஒரு மொழியில் இருக்கும் சொற்களை இன்னொரு மொழிக்கு பெயர்த்து எழுதுவதனை இருவகையாகப் பிரிக்கலாம்.

1. பொருள்பெயர்ப்பு:

இது ஒரு மொழியில் உள்ள சொல்லுக்கு நிகரான பொருளைத்தரும் சொல்லைத் தம் மொழியில் புதிதாய்ச் சமைப்பது.

சான்றுகள்:  BODYLANGUAGE = மெய்ப்பாடு, TWO WHEELER = ஈருருளி

இதனைக் கலைச்சொல் ஆக்கம் என்றும் கூறுவர்.

2. ஒலிபெயர்ப்பு:

இது ஒரு மொழியில் உள்ள சொல்லின் பலுக்கலை அப்படியே தம் மொழியில் உள்ள எழுத்துக்களைக் கொண்டு குறிப்பிடுவது.

சான்றுகள்:    CAR = கார்,   AIM = எய்ம்

தமிழ் மொழிபெயர்ப்புச் சிக்கல்களில் பெரும்பான்மை ஒலிபெயர்ப்புச் சிக்கல்களே ஆகும். காரணம், மேலே கண்டதைப்போல பல ஒலிக்குறிப்புக்கள் தமிழில் இல்லாத நிலையில் சிலர் ஏதோ ஒப்புக்காக ஒலிபெயர்ப்புச் செய்து எழுதிவிடுகின்றனர். இப்படி எழுதுவதால் உண்டாகும் மயக்கநிலைகளை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம்.

1. மொழி மயக்கம்
2. பொருள் மயக்கம்

இந்த இரண்டுநிலைகளைப் பற்றியும் விரிவாகக் காணலாம்.

1. மொழி மயக்கம்:

ஒரு சொல்லைப் பார்த்தவுடனே அது தமிழ்ச்சொல்லா பிறமொழிச் சொல்லா என்று படிப்பவர் அறிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் அச் சொல்லின் சரியான பொருளை அவரால் அறிந்துகொள்ள முடியும். அப்படி அறிய முடியாவிட்டால் ஏற்படும் மயக்கமே மொழிமயக்கம் ஆகும். இதனைச் சில சான்றுகளுடன் காணலாம்.

பேடி என்ற சொல் தமிழிலும் ஆங்கிலத்திலும் இந்தியிலும் உண்டு.
தமிழில் வரும் பேடி என்பது மனதில் ஊக்கமற்றவனைக் குறிக்கும்.
ஆங்கிலத்தில் வரும் பேடி என்பது நெல்லையும் குலப்பெயரையும் குறிக்கும்.
இந்தியில் வரும் பேடி என்பது ஒரு குலப்பெயரைக் குறிக்கும்.

'பேடி வந்தார்' என்று ஒருவர் எழுதினார் என்றால்
இதில் வரும் பேடி என்ற சொல் எந்த மொழியைச் சேர்ந்தது?
அதற்கு எவ்வாறு பொருள் காண்பது?
என்ற குழப்பங்கள் தான் மிஞ்சும் இல்லையா?. இதுதான் மொழிமயக்கம்.

அதேசமயம், நாம் முன்னால் கண்ட ஆறுரூபாய் முறையைப் பயன்படுத்திப் பேடி என்பதை

பேடி` என்று எழுதினால் அது paddy என்ற ஆங்கிலச் சொல்லைக் குறிக்கும் என்றும்
பே`டி` என்று எழுதினால் அது bedi என்ற இந்திச்சொல்லைக் குறிக்கும் என்றும்
பேடி என்று எழுதினால் அது தமிழ்ச்சொல்லைக் குறிக்கும் என்றும் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும் அல்லவா?

இதுபோல மொழிமயக்கம் ஏற்படுத்தக்கூடிய சொற்கள் பல உண்டு. அவற்றின் பலுக்கல்முறைப்படி அவற்றைக் குறிப்பிடாவிட்டால் கண்டிப்பாக மொழிமயக்கம் ஏற்படும். இன்னும் சில சான்றுகள் கீழே:

சாம்பார் = உணவுப்பொருள் - தமிழ்
சா`ம்பா`ர் = ஒருவகை மான் - ஆங்கிலம்

காய் = காய்கறிகள் - தமிழ்
கா~ய் = பசு - இந்தி

பந்தர் = பந்தல் - தமிழ்
ப`ந்த`ர் = குரங்கு - இந்தி

2. பொருள் மயக்கம்:

மொழி மயக்கம் நீங்கலாக பொருள் மயக்கம் தரக்கூடிய சொற்களும் உண்டு. ஒலிபெயர்ப்புச் செய்யும்போது தவறு நேர்ந்துவிட்டால் பொருள் மயக்கநிலை ஏற்பட்டுத் தவறான பொருள்கொள்ள நேரிடும். இதைச் சில சான்றுகளுடன் காணலாம்.

கோபால் கற்றுக்கொண்டான்

என்று ஒருவர் எழுதினால் இதைப் படிப்பவர் என்ன பொருள்கொள்வார்?.
கோபால் என்பவர் எதையோ கற்றுக்கொண்டார் என்றுதான் அனைவருமே நினைப்போம் இல்லையா?.
அப்படி நினைத்தால் அது தவறு. காரணம், இதில்வரும் கோபால் என்பது மாந்தப்பெயர் அன்று. அது ஒரு கணினிமொழி ஆகும்.
ஆங்கிலத்தில் COBOL என்று எழுதுவதைத் தமிழில் கோபால் என்று அரைகுறையாக ஒலிபெயர்த்து எழுதியதின் விளைவே இது.
இதுதான் பொருள்மயக்கம் எனப்படும்.

இப்போது இச்சொல்லை ஆறுரூபாய் முறைப்படி எழுதிப் பார்ப்போம்.

கோ~பால் = GOPAL - மாந்தப்பெயர்.
கோபா`ல் = COBOL - கணினி மொழி.

இப்போது இச்சொற்களை மிகத் தெளிவாகப் புரிந்துகொள்ள முடிகின்றது அல்லவா?.

வேறுவேறு மொழிகளில் இல்லாமல் ஒரேமொழியிலேயே பொருள்மயக்கம் தரக்கூடிய சொற்களும் உண்டு.
ஆங்கிலத்தில் இருந்து சில சான்றுகள்.

GHAT - கா^ட் = மலைத்தொடர்
GOD - கா~ட்` = கடவுள்

LAMP - லேம்ப் = விளக்கு
LAMB - லேம்ப்` = ஆட்டுக்குட்டி

பிறமொழிச் சொற்களை ஒலிபெயர்த்து எழுதும்போது உண்டாகக் கூடிய இதுபோன்ற மொழிமயக்கம் மற்றும் பொருள்மயக்கங்களைத் தவிர்க்க வேண்டுமென்றால் பிறமொழிச் சொற்களை அவற்றின் பலுக்கல்களுக்கு ஏற்ப சரியான எழுத்துக்களைக் கொண்டு எழுதிட வேண்டும். அத்தகைய எழுத்துக்கள் தமிழ்மொழியில் இல்லாத குறையினை நீக்க வேண்டியே ஆறுரூபாய் என்ற முறை முன்மொழியப்படுகிறது.

ஆறுரூபாய் முறையின் நன்மைகள்:

இந்த முறையினால் கிடைக்கும் பயன்களில் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

1. எந்த ஒரு பிறமொழிக் கலப்புமின்றி தூய தமிழில் பிறமொழிச் சொற்களை எழுதமுடியும்.
2. ஆங்கிலம் உள்பட வேறு எந்த மொழியையும் கற்காமலேயே தமிழைக் கொண்டே பிறமொழிச் சொற்களைச் சரியாகப் பலுக்கிக் கற்றுக்கொள்ளவும் உரையாடவும் முடியும்.
3. ஒரு சொல்லுக்கான பொருளை மயக்கம் இன்றித் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும்.
4. பிறமொழி பேசுவோர் பெயர்களையும் இடப்பெயர்களையும் ஆங்கிலமொழி அறியாதவரால் கூடப் பிழையின்றிச் சரியாகப் பலுக்க முடியும். சில சான்றுகள் கீழே:

JAPAN                              - ச^ப்பான்
CHARLES BABBAGE                   - சார்லச்` பா`பே^ச்^
BHUTAN                            - பூ^டான்
ASSAM                             - அசா`ம்
JHARKHAND                         - சா^^ர்க்கண்ட்`

5. தனிம அட்டவணையில் உள்ள தனிமங்களின் பெயர்களை ஆங்கில மொழியே அறியாத ஒருவரால் கூடச் சரியாகப் பலுக்கவும் உணர்த்தவும் முடியும். சில சான்றுகள் கீழே:

HYDROGEN - கை`ட்`ரச^ன்
OXYGEN   - ஆக்சி`ச^ன்
BORON    - போ`ரான்
SILICON    - சி`லிகான்
SODIUM    - சோ`டி`யம்
ZIRCONIUM  - சி^`ர்கோனியம்

6. அறிவியல் ஆய்வுகள் மற்றும் கட்டுரைகளைத் தமிழிலேயே இயற்றிடுவதற்கு இந்த ஆறுரூபாய் முறைப் பெரிதும் துணைநிற்கும்.

முடிவுரை:

இதுபோல இன்னும் பல நன்மைகளை நாம் பெறமுடியும். இந்த ஆறுரூபாய் முறையின் இன்றியமையாத சிறப்பு யாதெனில், இது மூன்றே மூன்று ஒலிக்குறிப்புக்களின் உதவியுடன் செய்யப்படுவதால், இதனை நினைவில் கொண்டு எழுதுவது மிகவும் எளிதாகும். இவ்வாறு புதிய ஒலிக்குறிப்புக்களைத் துணைக்குறியீடுகளின் உதவியுடன் தமிழ் எழுத்துக்களுடன் சேர்ப்பதால் மொழிச்சிதைவு ஏற்படாது. காரணம், இதுபோன்ற ஒட்டுவேலைகள் இதற்கு முன்னரும் நடைபெற்றுள்ளது. ப வின் மேல் கொக்கியைப் போட்டு பி ஆக்கினோம். ப வின் கீழ் காலை இழுத்துவிட்டு பு ஆக்கினோம். ப வின் அருகில் கால்போட்டு பா ஆக்கினோம். இப்படியான ஒட்டுவேலைகளை ஏற்றுக்கொண்டதால்தான் இன்று நம் தமிழால் தொடர்ந்து தலைநிமிர்ந்து நிற்க முடிகிறது. இந்த ஒட்டுவேலைகளை நம் தமிழன்னை மனமுவந்து ஏற்றுக்கொண்டதைப்போலவே நாம் இப்போது அவளுக்கு அணிவித்திருக்கும் தோடு, மூக்குத்திகளையும் மனமுவந்து ஏற்றுக்கொள்வாள். இன்னும் சொல்லப்போனால் இந்த நகைகள் அவளுக்கு ஒரு புதிய பொலிவைத்தரும்; புன்னகையைத் தரும்.

வாழ்க தமிழன்னை !                   வளர்க தமிழ்மொழி !!