திங்கள், 3 செப்டம்பர், 2018

இந்திய மொழிகளின் தாய் தமிழே !!! - பகுதி 7 - மாடு - பால் - வேளாண்மை


முன்னுரை:

இந்திய மொழிகளின் தாய் தமிழே - என்ற தொடர் ஆய்வுக் கட்டுரையின் முதல் ஆறு பகுதிகளில் மனித உடலின் புற உறுப்புக்கள், விலங்குகள், தீ, வெப்பம், சினம், சிவப்பு, ஒளி தொடர்பான பல தமிழ்ச்சொற்கள் பிற மொழிகளில் திரிந்து வழங்கும் விதங்களைப் பற்றி விரிவாகக் கண்டோம். ஆய்வுக் கட்டுரையின் ஏழாவது பகுதியான இதில், மாடுகள், பால் மற்றும் வேளாண்மை தொடர்பான தமிழ்ச்சொற்கள் பிறமொழிகளில் எவ்வாறெல்லாம் திரிந்து வழங்கப்படுகின்றன என்பதைப் பல சான்றுகளுடன் விரிவாகக் காணலாம்.

மாடுகளின் பொதுப்பெயர்கள்:

தமிழ் மொழியில் மாடுகளைக் குறிப்பதற்குப் பல பெயர்களைப் பயன்படுத்தி வருகிறோம். காளை, எருது, பகடு, ஏறு, ஆன், மூரி, கோட்டுமா, புகல்வி முதலான பெயர்களைக் கொண்டு ஆண்மாடுகளைக் குறிக்கிறோம். பசு, மாடு, பாண்டியம், ஆ, கோ, சேதா முதலான பெயர்களால் பெண் மாடுகளைக் குறிக்கிறோம். மாடுகளின் கூட்டத்தினைத் தொறு, ஆயம், ஆக்கள் போன்ற சொற்களால் குறிப்பது வழக்கம். மாடுகளுடன் தொடர்புடைய இத் தமிழ்ப் பெயர்கள் அனைத்தும் பிறமாநில மொழிகளில் எவ்வாறு திரிந்து வழங்கப்படுகின்றன என்பதைக் கீழே விரிவாகக் காணலாம்.

காளை >>> காள - மலையாளம்
எருது >>> யெத்து^ - தெலுங்கு
எருது >>> எத்து - கன்னடம்
எருது >>> வ்ருச~ >>> வ்ருச~ப^ - மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி, செங்கிருதம், மராத்தி, கு~ச்^ராத்தி, வங்காளம், பஞ்சாபி`, ஒரியா.
புகல்வி >>> புங்க~வ - செங்கிருதம், கு~ச்^ராத்தி, வங்காளம்
பாண்டியம் >>> ப^ரண்ட - செங்கிருதம்
மாடு >>> மாடா` - இந்தி
ஆன் + ஆயம் = ஆனாயம் >>> அக்^ன்ய - செங்கிருதம்
பகடு >>> வாக` (செங்கிருதம்) >>> வகி`ரகா - பஞ்சாபி`
பகடு >>> பா`கு`லேய >>> ப`கு`லா - செங்கிருதம்
மூரி >>> மூரி - மலையாளம்
மூரி >>> ஊரி >>> உச்`ரிய >>> உச்`ர - செங்கிருதம்
ஆ+மூரி = ஆமூரி >>> ஆம்ர >>> சா`ம்ர - வங்காளம்
ஆ+மூரி = ஆமூரி >>> ஆம்ர >>> எம்ரே - வங்காளம்
சேதா >>> ச`தா^ (பஞ்சாபி`) >>> ச`தி^, சா~த்`வல - செங்கிருதம்
கோட்டுமா >>> கோ~ட்டு^ - தெலுங்கு
ஆ >>> ஆவு - தெலுங்கு
ஆக்கள் >>> ஆக்களோ - கு~ச்^ராத்தி
ஆக்கள் >>> ஆக்களு - கன்னடம்
ஆயம் >>> கா~ய் - இந்தி, மராத்தி, கு~ச்^ராத்தி, வங்காளம், பஞ்சாபி`, ஒரியா.
தொறு >>> ச்`தூர >>> தூ^ர்ய - செங்கிருதம்

ஆண்மாடு:

ஆண்மாடுகளில் பொலியெருது / பொலிகாளை என்றொரு வகையுண்டு. இவற்றை உழவுத் தொழில் மற்றும் இழுவைத் தொழிலில் அதிகம் பயன்படுத்தாமல் மாடுகளின் இனப்பெருக்கத்திற்காகவே வளர்ப்பார்கள். நல்ல உடல் வலிமையுடன் கொழுத்திருக்கும் இம்மாடுகள் செழிப்புடன் பொலிந்து தோன்றும். தற்போது அரியானா மாநிலத்தைச் சேர்ந்த யுவராச்^ என்ற காளை மிகப் புகழ்பெற்றுள்ளது. காரணம், இதன் விந்தணுக்களின் விலை இந்திய ரூபாய் மதிப்பில் இரண்டு இலட்சத்திற்கும் மேல் என்பதால். இக்காளையின் விலை ரூபாய் 9.5 கோடிகளுக்கும் மேல் என்று விக்கிபீடி`யா கூறுகிறது. பொலிதல், நந்துதல் ஆகிய தமிழ்ச் சொற்கள் செழித்தல் / பெருகுதல் / மிகுதல் என்ற பொருளைத் தருபவை. இச்சொற்கள் பிறமாநில மொழிகளில் திரிந்து பயன்படும் விதங்களைக் கீழே காணலாம்.

பொலி >>> பை`ல் - இந்தி
பொலி >>> பே`ல - கு~ச்^ராத்தி
பொலியெருது >>> ப`லிவர்த` - செங்கிருதம், கு~ச்^ராத்தி, வங்காளம்
நந்து >>> நந்தி` >>> நந்தினி - மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி, செங்கிருதம், மராத்தி, கு~ச்^ராத்தி, வங்காளம், பஞ்சாபி`, ஒரியா.

பசுமாடுகளைக் காட்டிலும் காளைமாடுகள் உயரத்திலும் வலிமையிலும் பெரியவை. காளைமாடுகளின் உயரமான கூர்மையான கொம்புகள் உடல் சதையினைக் குத்திக் கிழிக்க வல்லவை. ஏறுதழுவுதலின்போது காளைமாடுகளின் கொம்புகளால் குத்தப்பட்டு ஆண்டுதோறும் உயிர்மாய்ப்போர் பலர். உயிரைத் துச்சமாகக் கருதிப் பாயும் வீரர்களை காளைமாடுகள் தமது கொம்புகளால் குத்தித் தூக்கி எறியும். சங்க இலக்கியம் இந்த மாடுபிடி வீரர்களைப் 'பொதுவர்' என்று கூறுகிறது. காளைமாடுகள் இந்தப் பொதுவர்களைத் தமது கொம்புகளால் குத்தித் தாக்குவதனைச் சாடுதல் என்ற சொல்லால் குறிப்பிடும் சில சங்கப் பாடல் வரிகள் கீழே சான்றாகக் கொடுக்கப்பட்டுள்ளன.

கொல் ஏறு சாட இருந்தார்க்கு எம் பல் இரும் - கலி 101
விடரி அம் கண்ணி பொதுவனை சாடி குடர் சொரிய குத்தி - கலி 101
கதன் அஞ்சான் பாய்ந்த பொதுவனை சாடி நுதி நுனை கோட்டால் குலைப்பதன் - கலி 101
நிரைபு மேற்சென்றாரை நீள் மருப்பு உற சாடி - கலி 105

மேற்கண்ட சான்றுகளில் இருந்து சாடுதல் என்பதற்குக் கொம்புகளால் குத்தித் தாக்குதல் என்ற பொருளும் இருப்பதனைப் புரிந்து கொள்ளலாம். சாடுதல் என்ற தமிழ்ச்சொல்லில் இருந்து சாடுதல் வினையைச் செய்யும் காளைமாட்டினைக் குறிக்கும் பெயர்ச்சொல் பிறமொழிகளில் எவ்வாறு உண்டானது என்று கீழே பார்க்கலாம்.

சாடு >>> சா`ண்ட்` - இந்தி, மராத்தி, ஒரியா
சாடு >>> சா`ண்ட` (கு~ச்^ராத்தி) >>> சா`ண (பஞ்சாபி`) >>> உக்சா`ண - செங்கிருதம்
சாடு >>> ச`ண்ட` - வங்காளம்

மாடுகளில் காளைமாடுகள் வலிமை மிக்கவை என்பதால் அவை வண்டி இழுக்கும் தொழிலுக்குப் பெரிதும் பயன்படுத்தப் படுகின்றன. ஒற்றைக்காளை வண்டி, இரட்டைக் காளைவண்டி என்று பாரத்தின் எடையினைப் பொறுத்து இருவிதமாகப் பயன்படுத்தப்படும். நிலத்தில் வாழும் விலங்குகளில் காளைமாடுகளைப் போலப் பெரும்பாரம் ஏற்றிய வண்டிகளைத் தளராமல் நெடுந்தூரம் இழுத்துச் செல்லும் வலிமை வேறு எந்த ஒரு விலங்கிற்கும் இல்லை என்றே சொல்லலாம். காளைமாடுகளைக் காட்டிலும் யானைகள் வலியவையாக இருந்தாலும் யானைகளை வளர்ப்பதும் அவற்றைத் தமது கட்டுப்பாட்டில் கொண்டுவந்து பாரமிழுக்கப் பயன்படுத்துவதும் கடினமான செயல் என்பதால் காளைமாடுகளே பலராலும் பெரிதும் பயன்படுத்தப் பட்டன. இப்படி வலிமைக்குப் பெயர் போன காளைமாடுகளைக் குறிக்க, வலிது என்ற சொல்லே பிறமாநில மொழிகளில் சற்று திரிந்து எப்படி வழங்கப்படுகின்றது என்று பாருங்கள்.

வலிது >>> ப`லத` - செங்கிருதம், வங்காளம், பஞ்சாபி`, ஒரியா
வலிது >>> வலூ - மராத்தி

காளைமாடுகள் பூட்டிய வண்டிகளில் இரண்டு சக்கரங்கள் இருக்கும். இந்த சக்கரம் என்ற சொல்லை வடமொழி என்று தவறாகக் கூறுவார் பலர். அதைப்போல சக்தி என்ற சொல்லையும் வடமொழி என்றே தவறாகக் கருதுவார்கள். காரணம், அது சகடு என்ற தமிழ்ச்சொல்லின் திரிபுதான் என்பதை அறிந்திருக்க மாட்டார். மாட்டுவண்டியையும் அவ் வண்டியில் இருக்கும் ஆழிகளையும் குறிக்கும் சகடு என்ற தமிழ்ச்சொல்லானது பிறமாநில மொழிகளில் எப்படியெல்லாம் திரிந்து வண்டியின் சக்கரத்தினையும் வண்டியை இழுக்கும் காளைமாட்டினையும் வண்டியை இழுப்பதற்குத் தேவையான வலிமையையும் குறிக்கிறது என்பதைக் கீழே பார்க்கலாம். 

சகடு >>> சக்ர - பொருள்: வண்டிச் சக்கரம் - மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி, செங்கிருதம், மராத்தி, கு~ச்^ராத்தி, வங்காளம், பஞ்சாபி`, ஒரியா
சகடு >>> ச`க`ரி >>> ச~க்கரி >>> ச~க்வர - பொருள்: காளைமாடு - செங்கிருதம்.
சகடு >>> ச`க்தி - பொருள்: வலிமை, ஆற்றல் - மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி, செங்கிருதம், மராத்தி, கு~ச்^ராத்தி, வங்காளம், பஞ்சாபி`, ஒரியா

பெண்மாடு:

சக்தி என்ற சொல்லை வடமொழி என்று தவறாகக் கருதியதைப் போலவே, மாட்டினைக் குறிக்கும் கோ என்ற சொல்லையும் வடமொழி என்றே நினைப்பர். மாட்டினைக் குறிக்கும் கோ என்ற சொல் தூய தமிழ்ச்சொல்லே. சங்க இலக்கியங்களில் இச்சொல் தனித்து வழங்காமல் தொகைச்சொல்லாக வழங்கப்பட்ட காரணத்தினால் அதன் பொருளை அறியமாட்டாமல் போயிற்று எனலாம். சங்க இலக்கியத்தில் கோவலர் என்ற சொல் மாடுகளை ஓட்டும் ஆயர்களைக் குறித்து ஏராளமான பாடல்களில் வருகிறது. கீழே சில சான்றுகள் தரப்பட்டுள்ளன.

ஆர்கலி முனைஇய கொடுங்கோல் கோவலர் ஏறுடை இனநிரை வேறுபுலம் பரப்பி - நெடு 3
பல் ஆ தந்த கல்லா கோவலர் - நற் 364
ஆ பெயர் கோவலர் ஆம்பலொடு அளைஇ - அகம் 214
முல்லை கண்ணி பல் ஆன் கோவலர் - பதி 21

மேற்காணும் பாடல்களில் வரும் கோவலர் என்ற சொல்லானது உண்மையில் ஒரு தொகைச்சொல் ஆகும். அதாவது கோ, வலர் ஆகிய சொற்களின் தொகையே கோவலர் ஆகும். இதில் வலர் என்பது வலத்தல் தொழிலைச் செய்வோர் என்ற பொருள்படும். வலத்தல் என்பதற்குப் பல பொருட்களைக் கூறிய தமிழ் அகராதிகள் ஓட்டுதல் என்ற பொருளைக் கூறத் தவறிவிட்டன. வலத்தல் ஆகிய ஓட்டுதல் தொழிலைச் செய்வோரை வலவன் என்று இலக்கியங்கள் குறிப்பிடும். குதிரை(கள்) பூட்டிய தேரை ஓட்டும் தேரோட்டியினை வலவன் என்று கூறும் சங்க இலக்கியப் பாடல்கள் சிலவற்றைச் சான்றாகக் கீழே காணலாம்.

வலவன் வண் தேர் இயக்க நீயும் - அகம் 340
வலவன் வள்பு ஆய்ந்து ஊர - நற் 11
நெடும் தேர் ஊர்-மதி வலவ - அகம் 244

மேற்காணும் பாடல்களில் வரும் வலவர் என்பது வலர் என்று சுருங்கியநிலையில், கோவலர் என்பது மாடுகளை ஓட்டும் ஆயர்களைக் குறிக்கப் பயன்பட்டுள்ளதில் இருந்து கோ என்ற சங்கத் தமிழ்ச் சொல்லானது மாடுகளைக் குறிக்கப் பயன்பட்டு வந்துள்ளதை தெளிவாகப் புரிந்து கொள்ளலாம். மாடுகளைக் குறிக்கும் கோ என்ற தமிழ்ச்சொல்லானது பிறமாநில மொழிகளில் திரிந்து பசுவைக் குறிக்கப் பயன்படும் விதங்களைக் கீழே காணலாம்.

கோ >>> கோ~வு (தெலுங்கு) >>> க~வ (செங்கிருதம்) >>> கா~வ் (பஞ்சாபி`) >>> கா~வடி`, கா~வலடி` - கு~ச்^ராத்தி
கோ >>> கோ~ - இந்தி, செங்கிருதம், கு~ச்^ராத்தி, மராத்தி, வங்காளம், பஞ்சாபி`, ஒரியா

பசு என்ற சொல்லானது தமிழ் உட்பட அனைத்து இந்திய மொழிகளிலும் மாடுகளைக் குறிக்கப் பயன்பட்டு வருகின்றது. பசு என்ற சொல்லையும் தமிழ் என்று அறியாது வடமொழி என்று பலர் தவறாக நினைக்கின்றனர். காரணம், பசு என்னும் சொல்லானது பயம் என்ற தமிழ்ச்சொல்லின் திரிபே என்று அறியாதது தான். பயம் என்ற தமிழ்ச் சொல்லுக்குப் பல பொருட்களைத் தமிழ் அகராதிகள் கூறியிருந்தாலும் பால் என்ற பொருளும் அதில் உண்டு. பயம் என்ற சொல்லானது பால் என்ற பொருளில் வரும் சங்கப் பாடல்வரிகள் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

பயநிரைக்கு எடுத்த மணி நீர் பத்தர் - நற் 92
படு மணி மிடற்ற பயநிரை ஆயம் - அகம் 54
பயநிரை சேர்ந்த பாழ் நாட்டு ஆங்கண் - அகம் 155
கன்று தன் பயமுலை மாந்த முன்றில் - குறு 225

மேற்பாடல்களில் வரும் பயநிரை என்பது பால்தரும் மாட்டுக் கூட்டத்தைக் குறித்து வந்துள்ளது. பயமுலை என்பது பால்கொண்ட முலை என்ற பொருளில் வந்துள்ளது. இவ்வாறு பல பாடல்களில் பால் என்னும் பொருளைக் குறித்து வரும் பயம் என்ற தமிழ்ச்சொல்லானது பிறமாநில பொழிகளில் சற்றே திரிந்து 'பால்தருவது' என்ற பொருளில் பெண்மாட்டினைக் குறிக்கக் கீழ்க்காணுமாறு பயன்படுகின்றது.

பயம் >>> பசு` - மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி, செங்கிருதம், மராத்தி, கு~ச்^ராத்தி, வங்காளம், பஞ்சாபி`, ஒரியா.
பயம் >>> பயச்`வினி - செங்கிருதம்

மாடுகளின் உணவு என்று எடுத்துக்கொண்டால், பசும்புல் தான் அவற்றின் முதன்மை உணவென்று அனைவரும் அறிவோம். மாடுகளின் முதன்மை உணவாகிய புல்லைக் குறிப்பதற்குப் பஞ்சாய், பைஞ்சாய், சாய், பதவு முதலான பல பெயர்கள் உண்டு. இவற்றில் பதவு என்பது சிறிய புல்வகையைக் குறிக்கும். பதவு ஆகிய புல்லை மாடுகள் உண்ட செய்திகளைக் கூறும் சில பாடல்கள் கீழே:

பதவு மேயல் அருந்து மதவு நடை நல் ஆன் - அகம் 14
தண் நறும் படு நீர் மாந்தி பதவு அருந்து - அகம் 139
பதவு மேயல் அருந்து துளங்கு இமில் நல் ஏறு - அகம் 341

புல் என்ற பொருளைத் தரும் பதவு என்ற தமிழ்ச்சொல்லைச் சற்றே திரித்து 'புல்லை உண்பது' எனும் பொருளில் மாட்டினைக் குறிப்பதற்குப் பிறமொழிகள் பயன்படுத்தும் விதங்களைக் கீழே காணலாம்.

பதவு >>> ப^த்`ர - செங்கிருதம், கு~ச்^ராத்தி
பதவு >>> பை`தே`கி` >>> வைதே`கி` - செங்கிருதம்

ஆடு, எருமைகளைக் காட்டிலும் பசுமாடுகளின் பால்மடியானது எப்போதும் சற்று பெருத்தே இருக்கும். பால் நிறைந்திருக்கும் மாடுகளின் மடிகளை நிரம்பகம் என்று கூறுவது வழக்கம். நிரம்பகம் என்பது நிரம்பு + அகம் என்று விரிந்து பால்நிரம்பிய மடியகம் என்ற பொருளைத் தருவதாகும். நிரம்பகம் என்ற தொகைச்சொல்லானது பிறமொழிகளில் எவ்வாறு திரிந்து பால்மடி கொண்ட மாடுகளைக் குறிக்கப் பயன்படுகின்றது என்று கீழே காணலாம்.

நிரம்பு + அகம் = நிரம்பகம் >>> நிலிம்பிகா >>> நிலிம்ப - செங்கிருதம்

தமிழில் கலித்தல் என்ற பழஞ்சொல்லுண்டு. இச்சொல்லுக்கு செழித்தல் / பெருகுதல் என்ற பொருளுமுண்டு. யாணர் என்ற சொல், வளம் அல்லது வருவாயைக் குறிப்பதாகும். கலியும் யாணரும் இணைந்து கலியாணர் என்ற சொல்லாகி 'செழித்துப் பெருகும் வருவாய்' / 'வருவாயைத் தரும் மாடு' என்ற பொருளில் பிற மொழிகளில் எப்படிப் பயன்படுத்தப் படுகின்றது என்று பாருங்கள்.

கலி+யாணர் = கலியாணர் >>> கல்யாண் = செழிப்பு - பன்மொழிகள்
கலி+யாணர் = கலியாணர் >>> கல்யாண் >>> கல்யாணி = பசுமாடு - மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி, செங்கிருதம், மராத்தி, கு~ச்^ராத்தி, வங்காளம், பஞ்சாபி`, ஒரியா.

மாடு என்றால் தமிழில் செல்வம் என்றொரு பொருளுண்டு. காரணம், மாடுகள் இருந்தாலே அங்கே உணவுக்கோ பொருள்வளத்திற்கோ குறைவிருக்காது. பசுமாட்டுக்குக் கல்யாணி என்ற பெயர் சூட்டப்பட்டதும் இவ்வகையில்தான்.

குழந்தைகளுக்குப் புகட்டப்படும் தாய்ப்பாலானது அமுதம் போல நன்மை பயப்பது. தாய்ப்பால் ஊறாத தாய்மார்கள் தமது பச்சிளம் குழந்தைகளுக்கு மாட்டுப்பாலினைப் புகட்டியே வளர்ப்பார்கள். இந்நிலையில் அக்குழந்தைக்கு இன்னொரு தாயாக விளங்குவது பசுமாடே ஆகும் அல்லவா?. இதனால் தான் பசுமாட்டினைத் 'தாயைப் போன்றது' என்ற பொருளில் மாத்ரு என்று வடமொழியில் அழைப்பர். இந்த மாத்ரு என்ற சொல்லானது மாதர் என்ற தமிழ்ச் சொல்லில் இருந்து தோன்றியதே ஆகும். அதாவது,

மாதர் >>> மாத்ரு - செங்கிருதம், இந்தி, வங்காளம், கு~ச்^ராத்தி, மராத்தி, பஞ்சாபி`, ஒரியா.

மாதர் என்ற தமிழ்ச்சொல்லுக்குப் பெண் என்று பொதுவான பொருளையே தமிழ் அகராதிகள் கூறியிருந்தாலும் திருமணமான பெண் /  குழந்தை பெற்றெடுத்த பெண்ணைக் குறிக்கவும் மாதர் என்ற சொல்லைக் கீழ்க்காணும் பாடல்வரிகளில் பயன்படுத்தி இருக்கின்றனர்.

மாதர் உண்கண் மகன் விளையாட - ஐங்கு. 406.
மடமொழி மாதர் மனைமாட்சியாள் - நால.39/2

மாதர் என்ற தமிழ்ச்சொல்லானது மாத்ரு என்ற வடமொழிச் சொல்லுக்கு மட்டுமின்றி, தாயைக் குறிக்கின்ற ஆங்கிலச் சொல்லான மதர் என்பதற்கும் மூலமாக அமைந்திருப்பது எண்ணி எண்ணி வியக்கத்தக்கதாய் உள்ளது. !!!

தேன் என்னும் தமிழ்ச்சொல்லுக்கு இனிமை, பூந்தேன், கள், சாறு, தேனீ உட்பட பல பொருட்களைத் தமிழ் அகராதிகள் கூறியிருக்கின்றன. ஆனால், தேன் என்ற சொல்லுக்குப் பால் என்ற பொருளைக் கூறாமல் விட்டுவிட்டன. பசுக்களில் இருந்து கறக்கப்பட்ட பாலை அப்படியே குடிக்கும்போது அது தேன் போல இனிமை மிக்கதாய் இருக்கும். அதேபாலைக் காய்ச்சினால் அதன் இனிமை குறைந்து சப்பென்றாகி விடும். சப்பென்று இருக்கும் காய்ச்சிய பாலைக் குழந்தைகள் குடிக்கமாட்டார்கள் என்பதால் அதனுடன் பூந்தேனைக் கலந்துக் குடிக்கக் கொடுப்பது சங்ககால வழக்கம். இதைப்பற்றிய பாடல்வரிகள் கீழே:

யானும் தாயும் மடுப்ப தேனொடு தீம்பால் உண்ணாள் - நற் 179
பாலொடு தேன் கலந்து அற்றே பணிமொழி - குறள்:1121.

தேன் என்ற சொல்லுக்குப் பால் என்ற பொருள் தமிழ் அகராதிகளில் இல்லை என்றாலும் கீழ்க்காணும் குறுந்தொகைப் பாடலில் பால் என்ற பொருளில் வருவதைக் காணமுடிகிறது.

நீர் நீடு ஆடின் கண்ணும் சிவக்கும்
ஆர்ந்தோர் வாயில் தேனும் புளிக்கும் - குறு.354

'நீண்ட நேரம் நீராடினால் கண்கள் சிவக்கும்; அதிகமாகக் குடித்தால் தேனும் புளிக்கும்' என்பது இப்பாடல் வரிகளின் பொருளாகும். இப்பாடலில் வரும் தேன் என்பதற்குப் பூந்தேன் என்ற அகராதிப் பொருள் பொருத்தமாகத் தோன்றவில்லை. காரணம், தேன் கெட்டியாய் இருப்பதால் அதனை நீரைப் போல யாராலும் குடிக்க முடியாது; கொஞ்சம் கொஞ்சமாக நக்கி உண்ணத்தான் முடியும். மேலும் தேனை அதிகமாக உண்ணவும் முடியாது; இனிப்பு மிகுதியால் திகட்டிவிடும்; திகட்டினாலும் தேன் ஒருபோதும் புளிப்புச்சுவை தராது. ஆனால் அதிகமாக உண்டால் தேனும் புளிக்கும் என்று பாடலில் கூறப்பட்டுள்ளது. இதிலிருந்து, இப்பாடலில் வரும் தேன் என்பது பூந்தேனாக இருக்க வாய்ப்பில்லை என்று உறுதியாகிறது.

மேற்பாடலில் வரும் தேன் என்பது பால் என்ற பொருளில்தான் வந்திருக்க வேண்டும். காரணம், பாலானது நீர்போல இருப்பதால் அதனை அதிகமாக உட்கொள்ள முடியும் என்பதுடன் தொடர்ந்து பாலைக் குடிக்கக் குடிக்க அதன் சுவை குன்றி லேசாகப் புளிப்பதைப் போலத் தோன்றும். இவ்வாறு தோன்றுவதற்கு அறிவியல் காரணம் உண்டு. பாலுண்ணும் குழந்தைகளின் நாக்கைப் பார்த்தால் அதன்மீது வெள்ளையாய் ஒரு படலம் காணப்படும். பாலில் உள்ள லேக்டோசு` என்னும் திணையானது நாக்கின் சுவையரும்புகளின்மீது தொடர்ந்து படிவதால் உண்டாகும் படலம் இது. தொடர்ந்து பாலைக் குடிக்கும்போது இப்படலமானது பாலின் சுவையை அறியவிடாமல் சுவையரும்புகளைத் தடுத்து விடும். இதனால் பாலின் சுவைகுன்றி லேசாகப் புளிப்பதைப் போலத் தோன்றுவதால் தொடர்ந்து குடிக்கும் விருப்பம் தடைபடுகிறது. பழகப் பழகப் பாலும் புளிக்கும் என்ற பழமொழி கூட இதன் அடிப்படையில் எழுந்ததே. இதிலிருந்து, இப்பாடலில் வரும் தேன் என்பது பூந்தேனைக் குறிக்காமல் பால் என்ற பொருளையே குறித்து வந்துள்ளது என்பதை உறுதி செய்யலாம்.

மேலே கண்டவாறு, பால் என்னும் பொருளைக் குறிக்கின்ற தேன் என்னும் தமிழ்ச்சொல்லில் இருந்து, பாலைத் தருவது என்ற பொருளில் பசுமாட்டினைக் குறிக்கும் பெயர்ச்சொல்லானது பிறமொழிகளில் தோன்றிப் பயன்படும் விதத்தினைக் கீழே காணலாம்.

தேன் >>> தே`னு - செங்கிருதம், இந்தி, கு~ச்^ராத்தி, மராத்தி, வங்காளம்.

பால் தொடர்புடைய பெயர்கள்:

பால் என்று எடுத்துக்கொண்டால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையிலும் அதிகம் பயன்படுத்துவது மாட்டுப்பால் தான். பாலைக் குறிப்பதற்குத் தமிழில் பால், பயம், அமுதம் முதலான பல பெயர்கள் உண்டு. இவற்றில் பயம் என்ற தமிழ்ச்சொல்லானது பால் என்ற பொருளில் சங்க இலக்கியங்களில் பயன்படுத்தப் பட்டதைச் சான்றுகளுடன் மேலே கண்டோம். இம்மூன்று தமிழ்ச் சொற்களும் பிறமாநில மொழிகளில் எவ்வாறு திரித்துப் பாலைக் குறிக்கப் பயன்படுத்தப் படுகின்றன என்று கீழே காணலாம்.

பால் >>> பாலு - மலையாளம், தெலுங்கு
பால் >>> கா`லு - கன்னடம்
அமுதம் >>> அம்ருத - கன்னடம்
பயம் >>> பய (கு~ச்^ராத்தி) >>> பயச்` - மலையாளம், கன்னடம், இந்தி, செங்கிருதம்.

பயம் என்ற தமிழ்ச்சொல் பயச என்று திரிந்து பால் என்ற பொருளில் பிறமொழிகளில் பயன்பட, அத் திரிசொல்லை வடசொல் என்று நினைத்த நாம் பாயசம் என்று தமிழ்ப்படுத்திப் பால்கலந்து செய்யப்படும் நீர்ம உணவினைக் குறிக்கப் பயன்படுத்தி வருகிறோம். இதிலிருந்து, பாயசம் என்னும் உணவுப் பெயருக்கும் பயம் என்ற தமிழ்ச்சொல்லே மூலம் என்பதை அறிந்துகொள்ளலாம்.

மாடுகளின் பால்தரும் மடியினைக் குறிக்க சுரை என்ற சங்கத் தமிழ்சொல் உண்டு. பால் சுரக்கும் இடம் என்ற பொருளில் சுரை என்ற சொல் மிகப் பொருத்தமாக அமைந்துள்ளது. இச்சொல்லைச் சற்றே திரித்துப் பாலைக் குறிப்பதற்கும் பால்தரும் பசுமாட்டைக் குறிப்பதற்கும் பிறமொழிகள் பயன்படுத்திக் கொள்ளும் விதங்களைக் கீழே காணலாம்.

சுரை >>> க்சீ~ர - மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி, செங்கிருதம், மராத்தி, கு~ச்^ராத்தி, வங்காளம், பஞ்சாபி`, ஒரியா.
சுரை >>> க்சீ~ர >>> கீரா, கீர் - இந்தி, கு~ச்^ராத்தி.
சுரை >>> சு`ரபி` (பசுமாடு) - செங்கிருதம்

சங்க இலக்கியத்தில் துருத்தி என்ற சொல்லுண்டு. தமிழ் இலக்கியங்கள் இச்சொல்லுக்குப் பல பொருட்களை உரைத்தாலும் உலையூது கருவி என்ற பொருளும் அவற்றில் உண்டு. காற்றை ஊதி உலைக்குள் செலுத்துவதற்காகச் சுருங்கி விரியும் வகையில் தோலினால் செய்யப்பட்ட பெரிய பையாகிய இதன் முனையில் நீண்ட காம்பு போன்ற அமைப்புகள் உண்டு. பசுமாடுகளின் பால்நிரம்பிய பெரிய மடியும் கிட்டத்தட்ட இந்த துருத்தியின் அமைப்பை ஒத்திருக்கும். அருகில் உள்ள படத்தில் மாடுகளின் மடியினையும் காற்றுத் துருத்தியினையும் ஒப்பிட்டுக் காட்டப்பட்டுள்ளது. இத் துருத்தியானது துதி என்றும் இலக்கியங்களில் வழங்கப்பெறும். வடிவ அமைப்பில் மட்டுமின்றி சொல் அமைப்பிலும்  ஒப்புமை உண்டு. இது எவ்வாறெனில், துருத்தி என்பது முன்னால் துருத்திக் கொண்டிருக்கும் தொந்தி வயிற்றையும் குறிக்கும் என்ற நிலையில், பசுக்களின் அடிவயிற்றில் இருந்து துருத்தியவாறு தொங்குகின்ற பால்நிறைந்த பெருத்த மடியினையும் துருத்தி என்ற சொல் குறிக்கும். இவ்வாறு, பசுக்களின் பால்மடியினைக் குறிப்பதான துருத்தி / துதி என்ற தமிழ்ச் சொல்லானது பிறமாநில மொழிகளில் கீழ்க்கண்டவாறு திரிந்து பாலைக் குறிக்கப் பயன்படுவதைக் காணலாம்.

துருத்தி >>> துதி >>> து`த^ (பஞ்சாபி`, ஒரியா) >>> தூ`த்^ - இந்தி, கு~ச்^ராத்தி, மராத்தி, வங்காளம்
துருத்தி >>> துதி >>> து`க்~த^ - மலையாளம், இந்தி, செங்கிருதம், மராத்தி.

வேளாண்மை தொடர்புடைய சொற்கள்:

பசுமாடுகள் பாலுக்காக வளர்க்கப்படுபவை என்றால் காளைமாடுகள் உழவுத் தொழிலுக்கும் இழுவைத் தொழிலுக்கும் பெரிதும் பயன்படுத்தப் படுகின்றன. இதில், மாடுகளின் இழுவைத் தொழில் சார்ந்த சொற்களைப் பற்றி மேலே கண்டோம். இங்கே, வேளாண்மை சார்ந்த சொற்களைப் பற்றிக் காணலாம். 

வேளாண்மைத் தொழிலைக் குறிக்கும் பல தமிழ்ச் சொற்களில் வேளாண்மை என்னும் சொல் உள்பட உழவு, செஞ்சால் முதலானவையும் அடங்கும். இம்மூன்று சொற்களும் பிறமாநில மொழிகளில் திரிந்து வேளாண்மை / ஏர் என்ற பொருளில் வழங்கும் விதங்களைக் கீழே காணலாம்.

வேளாண்மை >>> வெள்ளாய்ம - மலையாளம்
உழவு >>> உழுக, உழவ், உழல் - மலையாளம்
உழவு >>> உழுமெ - கன்னடம்
செஞ்சால் >>> செ^ஞ்சா`லி - கு~ச்^ராத்தி.

வேளாண்மை என்னும் உழவுத் தொழிலின் முதலும் அடிப்படையுமான வினையே ஏர் / கொழுவினைக் கொண்டு நிலத்தைக் கீறுவதுதான். கீறுதல் என்றும் கொழுதுதல் என்றும் அழைக்கப்படும் இவ்வினையைக் குறிக்கும் தமிழ்ச்சொற்கள் பிற மாநில மொழிகளில் சற்றே திரிந்து வேளாண்மையைக் குறிக்கப் பயன்படுத்தப் படுவதைக் கீழே பார்க்கலாம்.

கீறு >>> க்ருசி~ >>> க்ருசா`ண >>> கிரசா`னி >>> கர்ச`ன >>> ச`ங்கர்ச`ன
கொழுது >>> கோத்` >>> கேதி >>> கேதிபா`ரி, கேதிவாடி`
கொழுது >>> கோத்` >> சோ^த் >>> சோ^தாயி
கொழுது >>> குந்தல

சொல்வடிவம்        பேசப்படும் மொழிகள்

க்ருசி~               மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி,
                     செங்கிருதம், கு~ச்^ராத்தி, மராத்தி,
வங்காளம், பஞ்சாபி`, ஒரியா.
க்ருசா~ண            செங்கிருதம்
கிரசா`னி             பஞ்சாபி`
கர்ச`ன               கு~ச்^ராத்தி, வங்காளம், செங்கிருதம்
ச`ங்கர்`சன           இந்தி
கோத்`               இந்தி, மராத்தி, கு~ச்^ராத்தி
கேதி                 இந்தி, கு~ச்^ராத்தி, வங்காளம், பஞ்சாபி`.
கேதிபா`ரி, கேதிவாடி` இந்தி, பஞ்சாபி`, கு~ச்^ராத்தி
சோ^த்               இந்தி, ஒரியா
சோ^தாயி            இந்தி
குந்தல               செங்கிருதம், கு~ச்^ராத்தி

வேளாண்மை செய்யப்படும் வயல்நிலத்தினைக் குறிக்கக் கழனி, பழனம், செறு, ஞாங்கர் முதலான பல சொற்கள் தமிழில் உண்டு. இவற்றில் ஞாங்கர் என்ற சொல்லுக்கு வயல்நிலம் என்ற பொருளைக் காட்ட தமிழ் அகராதிகள் தவறிவிட்டாலும் இடம் என்ற பொருளைக் கூறியுள்ளன. ஆனால், கீழ்க்காணும் பாடல்களில் வரும் ஞாங்கர் என்ற சொல்லானது இடம் என்று பொதுவாகச் சுட்டாமல் விளைநிலத்தைக் குறிப்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.

இன்சுவை மூரல் பெறுகுவிர் ஞாங்கர் குடிநிறை வல்சி செஞ்சால் உழவர் - பெரும் 196
காவல் மறந்த கானவன் ஞாங்கர் கடியுடை மரம்தொறும் படுவலை மாட்டும் - குறு 342

வயல்நிலங்களைக் குறிக்கும் செறு, ஞாங்கர் ஆகிய தமிழ்ச்சொற்கள் பிறமாநில மொழிகளில் சற்றே திரிந்து வயல்நிலங்களை உழுவதற்குப் பயன்படும் கருவியான ஏரினைக் குறிக்கப் பயன்படும் விதங்களைக் கீழே காணலாம்.

செறு >>> சீ`ர >>> சீ`ல
ஞாங்கர் >>> நாங்க~ர >>> லாங்க~ல

வயலைக் குறிக்கும் செறு என்ற சொல்லில் இருந்தே சேறு என்ற சொல் உருவாகிறது. காரணம், வயல்நிலம் என்றாலே அங்கு சேறு நிறைந்து காணப்படும். அதுமட்டுமின்றி, சேறு என்ற சொல்லில் வரும் றகரம் மக்கள் நாவில் தகரமாக மாறி சேத்து என்று வழங்குவதும் இயல்புதான். இனி, செறு / சேறு என்ற சொல் பிறமொழிகளில் சற்றே திரிந்து வேளாண்மையைக் குறிக்கப் பயன்படுவதைக் கீழே காணலாம்.

செறு >>> சேறு >>> சே`தி >>> சே`த்யமு
செறு >>> ச்`ருத >>> ப்ரச்`ருத

சொல்வடிவம்        பேசப்படும் மொழிகள்

சீ`ர, சீ`ல             செங்கிருதம்
நாங்க~ர              மராத்தி
லாங்க~ல            வங்காளம்
சே`தி                மராத்தி
சே`த்யமு            தெலுங்கு
ப்ரச்`ருத             செங்கிருதம்          

வேளாண்மையில் பயன்படுத்தப்படும் ஏரினைக் குறிக்கப் பல சொற்கள் தமிழில் உண்டு. இவற்றில் நுகம், நாஞ்சில், கலப்பை ஆகிய சொற்கள் பிறமாநில மொழிகளில் சற்றே திரிந்து ஏர் / வேளாண்மையைக் குறிக்கப் பயன்படுவதனைக் கீழே காணலாம்.

நுகம் >>> உக்கெ - கன்னடம்
நாஞ்சில் >>> நாக~லி >>> நெகி~லு
கலப்பை >>> கலப்ப
கலப்பை >>> க`ல், க`ல, க`லி >>> க`ல்ய, க`லதி, க`லவத

சொல்வடிவம்        பேசப்படும் மொழிகள்

நாக~லி              தெலுங்கு
நெகி~லு              கன்னடம்
கலப்ப               மலையாளம்
க`ல், க`ல            இந்தி, செங்கிருதம், கு~ச்^ராத்தி,
வங்காளம், பஞ்சாபி`, ஒரியா
க`லி, க`ல்ய, க`லதி   செங்கிருதம்
க`லவத              கு~ச்^ராத்தி

இக்காலத்தில் வேளாண்மையானது நுகத்தேர் (டிராக்டர்) கொண்டே பெரும்பாலும் செய்யப்படுகிறது. ஆனால், அண்மைக்காலம் வரையிலும் மாடுகளே வயலை உழுவதற்குப் பயன்படுத்தப் பட்டன. இப்போதும் சில இடங்களில் பயன்படுத்தப் படுகின்றன. வேளாண்மையில் ஏர் என்னும் உழுகருவியானது மாடுகளுடன் பூட்டப்பட்டு வயலில் உழப்படும். தமிழில் மாடுகளைக் குறிக்கும் பெயர்ச்சொற்கள் பிறமாநில மொழிகளில் திரிந்து மாடுகளுடன் சேர்த்துப் பூட்டப்படும் ஏரினைக் குறிக்கக் கீழ்க்காணும் முறைகளில் பயன்படுகின்றன. 

மாடு >>> மடி`கெ - கன்னடம்
கோ >>> கோ~கில - செங்கிருதம்
பகடு >>> வக~ட`, வக~டி` >>> வக~டி`ரம் - பஞ்சாபி`

இறுதியாக, வேளாண்மையின் பயனாகிய விளைபொருட்களைப் பற்றிப் பார்ப்போம். வேளாண்மையில் விளைவிக்கப்படும் முதன்மை உணவுவகைகளான நெல், கரும்பு, தினைவகைகள் ஆகிய யாவும் புல்வகையைச் சேர்ந்தவையே. ஆனால், இவ்வகைப் புற்களின் இலைகள் சிறியதாக அன்றி அகலமாகவும் உயரமாகவும் வளரும். உயர மிகுதியால் இவை சாய்ந்த நிலையில் இருப்பதால் இவற்றைச் சாய் என்ற சொல்லால் குறிப்பர். பசுமையுடன் இருப்பதால் பைஞ்சாய் என்றும் பஞ்சாய் என்றும் இவற்றைக் குறிப்பிடுவர். வேளாண்மையின்போது வயலெங்கும் பச்சைப்பசேலென இப்புற்கள் வளர்ந்திருக்கும் காட்சி கண்கொள்ளாக் காட்சியாகும். இப்படி வேளாண் நிலங்களில் பசும்புற்கள் உயரமாக வளர்ந்து எங்கெங்கும் காணப்பட்டதன் அடிப்படையில் சாய்க்காடு, சாய்க்கானம் என்றெல்லாம் சங்ககாலத்தில் ஊர்ப்பெயர்கள் அமைக்கப்பட்டிருந்தன என்பது சங்க இலக்கியங்களில் இருந்து தெரியவருகிறது. நெல் முதலான பசும்புற்களைக் குறிப்பதான இத் தமிழ்ச்சொற்கள் திரிந்து பிறமாநில மொழிகளில் வேளாண்மையைக் குறிக்கப் பயன்படுவதைப் பற்றிக் கீழே காணலாம்.

பைஞ்சாய் >>> பே`சா`ய >>> வ்யவசா`ய, வ்யவசாய`மு
சாய் >>> சாச` >>> சாச`ணி

சொல்வடிவம்        பேசப்படும் மொழிகள்

பே`சா`ய             கன்னடம்
வ்யவசா`ய           கன்னடம்
வ்யவசா`யமு        தெலுங்கு
சாச`                 வங்காளம்
சாச`ணி              கு~ச்^ராத்தி

முடிவுரை:

மாடு, பால் மற்றும் வேளாண்மை தொடர்புடைய தமிழ்ச்சொற்கள் பலவும் பிறமொழிகளில் எவ்வாறெல்லாம் திரிந்து வழங்கப்படுகின்றன என்பதனை விரிவாக மேலே கண்டோம். தமிழர்கள் நடைமுறையில் பயன்படுத்தும் பல சொற்கள் தமிழ்மொழியா பிறமொழியா என்ற மயக்கம் அடிக்கடி பலருக்கு ஏற்படுவதுண்டு. இவற்றில் சக்தி, கல்யாணி முதலான சில சொற்களைப் பற்றி மேலே கண்டோம். இதைப்போல கல்யாணம் என்ற சொல்லும் ஒன்றாகும். திருமணம் என்ற சொல்லே தமிழென்றும் கல்யாணம் என்ற சொல் வடமொழி என்றும் பலர் கருதுகின்றனர். இது தவறான கருத்தாகும். கல்யாணம் என்னும் சொல் தூய தமிழ்ச்சொல்லே ஆகும். ஆணம் என்ற தமிழ்ச்சொல்லுக்கு அன்பு என்ற அகராதிப் பொருளுண்டு. இச்சொல்லானது நாம் மேலே கண்ட கலி (கலித்தல் = பெருகுதல்) என்ற சொல்லுடன் இணைந்து கலியாணம் என்ற சொல்லாகிப் 'பெருகும் அன்பு' என்ற பொருளில் திருமணத்தைக் குறிக்கப் பயன்பட்டு வருகின்றது. காதலர்கள் இருவரும் சேர்ந்து ஒன்றாக வாழ்ந்து தமக்குள் அன்பினைப் பெருக்கிக் கொள்வதற்காகப் பெரியோர்களால் செய்து வைக்கப்படும் பொதுவழக்கான திருமணத்தைக் குறிப்பதற்குக் கல்யாணம் என்ற சொல் மிகப் பொருத்தமாகவே அமைந்துள்ளது.

கலி+ஆணம் = கலியாணம் >>> கல்யாணம்

..... தொடரும் ...........

1 கருத்து:

  1. உங்கள் பதிவுகளை http://valaippookkal.com தமிழ் திரட்டியில் இணைத்து உங்கள் எண்ணங்களையும், கருத்துகளையும் உலகமெங்கும் வாழும் தமிழர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டுகிறோம்

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.