முன்னுரை:
ஒரு மொழி வாழ வேண்டுமென்றால்
மக்களால் அது பேசப்பட வேண்டும். அது வளர்ந்து
பரவ வேண்டுமென்றால் அதில் புதிய சொற்களை உருவாக்கிப் பெருக்க வேண்டும். இவை தமிழ் உட்பட அனைத்து மொழிகளுக்கும் பொருந்தக்கூடிய விதிகளே. சொற்களை உருவாக்கிச் சேர்ப்பதிலும் கட்டுப்பாடுகள் அல்லது விதிமுறைகள் அவசியம்.
ஆனால், சொல் அறிஞர்கள் தன்னிச்சையாகச் சொற்களை
உருவாக்கும்போது பெரும்பாலும் இந்தக் கட்டுப்பாடுகள் மீறப்படுகின்றன. அதுமட்டுமின்றி, சொற்களைப் படைக்கும் வேகமும் மாறுபடுகின்றது.
எனவே, கட்டுப்பாடுகளுடன் கூடிய அதேசமயம் விரைந்து சொற்களை உருவாக்கித் தரக்கூடிய ஒரு செயலியை தமிழ் மொழிக்காக
உருவாக்க வேண்டும் என்பது காலத்தின் கட்டாயமாகத் தோன்றியது. அதன்
விளைவாகப் பல ஆண்டுகளுக்கு முன்னரே திட்டமிடப்பட்டு எளிய முறையில் பல வசதிகளுடன்
உருவாக்கப்பட்டதே திபொச என்னும் இந்த உலகத் தமிழ்ச் செயலி ஆகும்.
திபொச – பெயர் விளக்கம்:
திபொச - என்பது திறங்களைப் பொருத்திச் சமைப்பது என்ற சொற்றொடரில் உள்ள மூன்று சொற்களின் முதல் எழுத்துக்களைக் கூட்டி உருவாக்கப் பட்டது ஆகும். அதாவது,
திபொச = திறங்களைப் பொருத்திச் சமைப்பது
திறம் என்றால் சொல் என்று
பொருள். சமைத்தல் என்றால் உருவாக்குதல்
என்று பொருள். சொற்களைப் பொருத்தி உருவாக்குவது என்பதே திபொச
என்பதன் விளக்கமாகும்.
திபொச – பகுதிகள்:
திபொச செயலியில் மூன்று
வகையான செயல்பாட்டுப் பகுதிகள்
உண்டு.
ஆங்கிலம் – தமிழ் அகராதி
தமிழ் ஆசான்
கலைச்சொல் ஆக்கி
ஒவ்வொரு பகுதியையும் விரிவாகக்
கீழே பார்க்கலாம்.
ஆங்கிலம் – தமிழ் அகராதி:
திபொச செயலியின் “முகப்பு”ப் பகுதியாக
வருவதே இந்த ஆங்கிலம் – தமிழ் அகராதி ஆகும். மேலே முதல் கட்டத்தில் ஆங்கிலச் சொல்லை அடித்துச் “சொல் தேடு”
என்ற புடனை அழுத்தினால் கீழ்க்காணும் தகவல்கள் வரிசையாகக் கீழே தோன்றும்.
கலைச்சொல்: ஆங்கிலச் சொல்லுக்கு உண்டான தமிழ்க்
கலைச்சொல்லை இங்கே காணலாம். சில சமயங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட
கலைச்சொற்களும் தோன்றும்.
புணர்ச்சி: தமிழ்க் கலைச்சொல் உருவாகிய முறையினை
இங்கே காணலாம். அதாவது, எந்தெந்த சொற்களை
இணைத்து இச் சொல் உருவாக்கப் பட்டது என்பதை அறியலாம்.
விளக்கம்: தமிழ்க் கலைச்சொல் எதைக் குறிக்கின்றது,
எப்படிக் குறிக்கின்றது என்ற தகவல்களை இங்கே காணலாம்.
ஆக்குநர்: தமிழ்க் கலைச்சொல்லை உருவாக்கி வழங்கியவரின்
பெயர் மற்றும் அவரது செல்பேசி எண்ணை இங்கே காணலாம்.
மேற்கண்ட தகவல்களைத் தவிர, கீழ்க்காணும் புடன்களையும் இப்
பகுதியில் காணலாம்.
உருவாக்கு: இந்தப் புடனை அழுத்தினால் கலைச்சொற்களைப்
புதிதாக உருவாக்குவதற்கான “கலைச்சொல் ஆக்கி” என்னும் மூன்றாவது பகுதிக்கு நம்மை இட்டுச் செல்லும்.
தமிழ் ஆசான்: இந்தப் புடனை அழுத்தினால்,
மூன்று தமிழ் அகராதிகளைக் கொண்ட “தமிழ் ஆசான்”
எனும் இரண்டாவது பகுதிக்கு நம்மை இட்டுச் செல்லும்.
விதிகள் அறி: இந்தப் புடனை அழுத்தினால் “திருத்தம்” என்னும் புதிய இணைய பக்கம் திறக்கும்.
இச் செயலியில் என்னென்ன விதிமுறைகள் பின்பற்றப் பட்டுள்ளன என்ற தகவல்களை
அப் பக்கத்தில் காணலாம். சொல்லை உருவாக்குவோர் இந்த விதிமுறைகளை
முதலில் அறிந்து கொள்வது அவசியமாகும்.
விளக்கம் காண்: இந்தப் புடனை அழுத்தினால்,
யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள ஒரு மிண்டியம் தோன்றும்.
திபொச செயலியைப் பயன்படுத்தும் முறை பற்றிய காட்சி விளக்கத்தை அதில் காணலாம்.
தமிழ் ஆசான்:
திபொச செயலியின் இரண்டாவது பகுதியான இதில் மூன்று வகையான அகராதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த அகராதிகளைப் பயன்படுத்தும் முன்னர், வலது மேல் மூலையில் உள்ள “தொடங்கு” புடனை அழுத்த வேண்டும். இனி, இந்த அகராதிகளைப் பற்றிக் கீழே பார்க்கலாம்.
அ. சொற்பிறப்பியல் அகராதி:
தமிழ்ச் சொற்களின் பிறப்பியல் முறைகளை விளக்கமாகக் காட்டும் அகராதி இது. இடப்புற கட்டத்தில் தேடவிரும்பும் சொல்லின் முதல் எழுத்தினை இட்டு “சொற்பிறப்பியல் தேடு” என்ற புடனை அழுத்தினால், அந்த முதல் எழுத்தில் தொடங்கும் அத்தனைத் தமிழ்ச் சொற்களும் அவற்றுக்குரிய சொற்பிறப்பியல் முறைகளுடன் ஒரு தொகுதியாக அகர வரிசையில் கீழே தோன்றும். உயிர்முதல் சொற்கள் மட்டுமே தற்போதுவரை ஏற்றப்பட்டு உள்ளன. ஏனைச் சொற்களும் விரைவில் ஏற்றப்படும்.
ஆ. குழந்தைப் பெயர் அகராதி:
தமிழ்க் குழந்தைகளுக்குப் பிறமொழிப் பெயர்களைச் சூட்டுவதைத் தவிர்த்து நவீன தமிழ்ப் பெயர்களைச் சூட்டுவதற்காக உருவாக்கப் பட்ட அகராதி இது. இதில் 30000 ++ ஆண் குழந்தைப் பெயர்களும் 30000 ++ பெண் குழந்தைப் பெயர்களும் அவற்றின் பொருட்களுடன் உள்ளன. இடப்புறக் கட்டத்தில் பெயருக்கான முதல் எழுத்தை இட்டு “ஆண் பெயர்” புடனை அழுத்தினால் ஆண் பெயர்களும் “பெண் பெயர்” புடனை அழுத்தினால் பெண் பெயர்களும் அகர வரிசையில் கீழே தோன்றும்.
இ. எதிர்ச்சொல் அகராதி:
தமிழ்ச் சொற்களுக்கு உரிய எதிர்ச்சொற்களை உடனடியாக இதில் காணலாம். இடப்புறக் கட்டத்தில் தமிழ்ச் சொல்லை அடித்து அடுத்துள்ள பெருக்கல் குறியை அழுத்தினால் அச் சொல்லுக்குரிய எதிர்ச்சொல் வலது கட்டத்தில் தோன்றும்.
இப் பகுதியில் கீழே உள்ள “முகப்பு” புடனை அழுத்தினால் திபொச செயலியின் முதல் பகுதியான ஆங்கிலம் தமிழ் அகராதி தோன்றும்.
கலைச்சொல் ஆக்கி:
திபொச செயலியின் மூன்றாவது பகுதியான இதில் பல வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்தப் பகுதியிலும் முதலில் வலது மேல் மூலையில் உள்ள “தொடங்கு” புடனை அழுத்த வேண்டும். இனி, இதிலுள்ள வசதிகளைப் பற்றிக் கீழே பார்க்கலாம்.
அ. புரசி & சபசி வழங்கி:
ஆங்கிலத்தில் உள்ள புரசி(prefix) மற்றும் சபசி(suffix) களுக்கான தமிழ்ச் சொற்களை வழங்கக் கூடியது இது. முதலில் தேட விரும்பும் ஆங்கிலச் சொல்லை மேல் இடப்புறக் கட்டத்தில் இட்டுத் “தேடு” புடனை அழுத்த வேண்டும். “கலைச்சொல் இல்லை. உருவாக்கலாம்” என்ற செய்தி தோன்றி மறைந்தால் மட்டும் ஆங்கிலச் சொல்லுக்கு அருகில் உள்ள கட்டத்தில் அந்த சொல்லுக்கு புரசிகள் & சபசிகள் ஏதேனும் இருந்தால் அவற்றை ஆங்கிலத்தில் காற்புள்ளிகளால் பிரித்து இடவேண்டும். இப்போது மீண்டும் “தேடு” புடனை அழுத்தினால், ஆங்கில புரசி & சபசிகளுக்குரிய தமிழ்ச் சொற்கள் கீழே உள்ள நீண்ட வெள்ளைக் கட்டத்தில் வரிசையாக அடைப்புக் குறிகளுக்குள் தோன்றும்.
ஆ. ஒருபொருட் பன்மொழி அகராதி:
திபொச செயலியின் சிறப்புப் பண்பே “சொற்களைத் தொகுத்தலும் ஒப்பிடுதலும்” ஆகும். ஒரே பொருளைக் குறிக்கக்கூடிய அத்தனைத் தமிழ்ச் சொற்களையும் ஒரு தொகுதியாக அகர வரிசையில் காட்டக் கூடிய அகராதி இது. கலைச்சொல் உருவாக்க வேண்டிய ஆங்கிலச் சொல்லுக்கான தமிழ் விளக்கத்தை வெள்ளைக் கட்டத்தின் கீழே அடித்த பின்னர், அந்த விளக்கத்தில் உள்ள முக்கிய சொற்களைப் பிரித்து அதன் கீழே இடவேண்டும். பின்னர், அச் சொற்களுக்குக் கீழே உள்ள “பெறு” புடனை அழுத்தினால், அச் சொல்லுக்குரிய ஒருபொருட் பன்மொழிச் சொற்கள் அனைத்தையும் ஒரு தொகுதியாக அகர வரிசையில் அதன் கீழே காணலாம். இச் செயலியில் ஒரே நேரத்தில் மூன்று சொற்களுக்குரிய ஒருபொருட் பன்மொழித் தொகுதிகளைக் காணமுடியும். அத்துடன், “ஒப்பிடு” புடனை அழுத்துவதன் மூலம், அந்த தொகுதிகளுக்கு இடையில் பொதுவாக வரும் சொற்களையும் அந்தத் தொகுதிகளுக்குக் கீழே உள்ள ஒப்பீட்டுக் கட்டத்தில் காணலாம்.
இ. சொல் உருவாக்கி:
தமிழ் மொழியின் இலக்கணப் புணர்ச்சி விதிகளின் படி, இரண்டு சொற்களைப் புணர்த்திப் புதிய கலைச்சொல்லை உருவாக்கித் தர வல்லது இது. இதில் இரண்டு மட்டுமின்றி, எத்தனை சொற்களை வேண்டுமானாலும் தொடர்ச்சியாகப் புணர்த்திப் புதிய சொல் பெறலாம்.
ஒப்பீட்டுக் கட்டத்தில் தோன்றும் சொற்களில் இருந்தும் ஒருபொருட் பன்மொழிச் சொற்களில் இருந்தும் பொருத்தமானவற்றைத் தெரிவுசெய்து கொள்ள வேண்டும். இத் தெரிசொற்கள் ஆங்கிலச் சொல்லுக்கு நெருக்கமாக அமைதல் சிறப்பு. இதனால், தமிழ்க் கலைச்சொற்களை நினைவு கூர்தல் எளிதாவதுடன் தமிழ்ச் சொல்லில் இருந்தே ஆங்கிலச் சொல் உருப்பெற்றது என்னும் கருத்தியலுக்கு ஆதாரமாகவும் அமையும்.
அடுத்ததாக, ஒப்பீட்டுக் கட்டத்தின் கீழே உள்ள நான்கு கட்டங்களில் நாம் முடிவு செய்து வைத்துள்ள தெரிசொற்களையும் புரசி & சபசிகளையும் இட வேண்டும். பின்னர் முதல் “சேர்” புடனை அழுத்தினால், முதலிரண்டு சொற்கள் புணர்த்தப்பட்டுப் புதிய சொல்லானது முதல் “சேர்” புடனுக்குக் கீழே தோன்றும். இரண்டாவது “சேர்” புடனை அழுத்தி முதல் மூன்று சொற்களைப் புணர்த்தலாம். மூன்றாவது “சேர்” புடனை அழுத்தினால் நான்கு சொற்களும் புணர்த்தப்பட்டுப் புதிய சொல் கிடைக்கும். “சேர்” புடன்களை வரிசையாக ஒருமுறை மட்டுமே அழுத்த வேண்டும்.
புணர்த்திப் பெற்ற புதிய சொல்லை அப்படியேவோ தேவைப்பட்டால் திருத்தம் செய்தோ அருகில் உள்ள பதிலிக் கட்டத்தில் இடவேண்டும். பதிலிக் கட்டத்தில் உள்ள சொல்லே கலைச்சொல்லாக நமக்குக் கிடைக்கும். அடுத்துள்ள “அணை” புடனை அழுத்தினால் பதிலிச் சொல்லானது அடுத்த கட்டத்திற்குப் போய்விடும். “இணை” புடனை அழுத்தினால் மேலே இட்ட தெரிசொற்கள் யாவும் கூட்டல் குறிகளுடன் “இணை” புடனுக்குக் கீழுள்ள கட்டத்தில் தோன்றும்.
அடுத்ததாக, சொல்லை உருவாக்குபவர் தமது பெயரை இடப்புறக் கட்டத்திலும் செல்பேசி எண்ணை வலப்புறக் கட்டத்திலும் இடவேண்டும். இறுதியாக, “சேமி” புடனை அழுத்தினால் மேலே இடப்பட்ட அத்தனை தகவல்களும் சேமிக்கப்பட்டு “சொல் சேமிக்கப்பட்டது” என்ற செய்தி தோன்றி மறையும். ஏற்கெனவே அந்த ஆங்கிலச் சொல் “ஆங்கிலம் தமிழ் அகராதி” யில் இருந்தால் கலைச்சொல் சேமிக்கப்படாது.
சேமிக்கப்பட்ட கலைச்சொற்கள் யாவும் திபொசவின்
சொல்லாய்வுக் குழுவின் ஒப்புதலுக்குப் பின்னரே ஆங்கிலம் தமிழ் அகராதியில்
கிடைக்கும். சேமிக்கும்போது
“பிழைகள் உள்ளது” என்ற செய்தி தோன்றி
மறைந்தாலோ “பெறு” புடனை அழுத்தும்போது
“சொல் இல்லை” என்ற செய்தி வந்தாலோ முதல்
பகுதியில் உள்ள “விதிகள் அறி” புடனை
அழுத்தி விதிமுறைகளை அறிந்து பிழைகளைத் திருத்திக் கொள்ளலாம்.
முடிவுரை:
தமிழ்மொழியில் இன்றைய நாளில் உருவாக்கப்பட வேண்டிய கலைச்சொற்கள் பல இலக்கங்களில் உள்ளன. தமிழ் அறிஞர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆர்வலர்கள் பலரும் இணைந்து புதிய கலைச்சொற்களை உருவாக்கினால் மட்டுமே இந்த இலக்கினை நாம் விரைவில் அடைய முடியும். கலைச்சொல்லை உருவாக்குவதால் தமிழுக்கு நாம் பங்களிப்பு செய்தோம் என்ற மனநிறைவு மட்டுமின்றி, உருவாக்கியவரின் பெயர் இந்த செயலியின் வழியாக உலகம் முழுவதும் பரவி பெரும் புகழும் கிடைக்கும்; அருமையான சொல் எனில், அழைக்கப்பட்டுப் பாராட்டப் பெறுவர். எதிர்காலத்தில் கலைச்சொல்லை உருவாக்குவதற்கு ஊக்கத் தொகை வழங்கும் திட்டமும் விரைவில் தொடங்கப்படும்.
இணைப்புக்கள்:
திபொச செயலியானது கூகுள் பிலாத்தொறு (playstore) வில் கிடைக்கிறது. திபொச, திபொச(thiposa), thiposa - இவற்றில் ஏதேனும் ஒன்றை அடித்துத் தேடிப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.
செல்பேசியில் இறக்கம் செய்தபின்னர், அதனை மற்றவர்களுக்கு வாட்சப் மூலமாகவும் பரிமாறிக் கொள்ள முடியும். திபொச செயலியைப் பயன்படுத்தும் முறை பற்றிய யூடியூப் மிண்டியத்தைக் காண்பதற்கான இணைப்பு கீழே:
https://www.youtube.com/watch?v=vHnkjWoGBdU