சங்கத் தமிழில் அகர எதிர்முறை முன்னொட்டு
முன்னுரை:
ஒரு சொல்லுக்கு முன்னால் அகர எழுத்தினை ஒட்டாக வைத்து எதிர்முறைப் பொருளில் வழங்கும் முறையானது தமிழில் இல்லை என்றும் வடமொழியில் தோன்றிய முறையே அது என்றும் தமிழ் ஆய்வாளர்களால் இதுவரை கருதப்பட்டு வந்தது. தற்போது நடந்து முடிந்த ஆய்வு முடிவுகள் அக் கருத்துக்களைப் பொய்யாக்கித் தகர்த்தெறிந்துள்ளன. இன்னும் சொல்லப் போனால், வடமொழிக்கு வெகு காலத்திற்கு முன்னரே இந்த முறையானது தமிழில் தோன்றி இருக்க வேண்டும் என்பதே இக் கட்டுரையின் துணிபாகும். இதைப் பற்றி விளக்கமாகக் கீழே காணலாம்.
எதிர்முறை முன்னொட்டு:
எதிர்முறை முன்னொட்டு என்பது எதிர்முறைப் பொருளில் ஒரு சொல்லுக்கு முன்னால் ஒட்டாகப் பயன்படும் எழுத்து அல்லது சொல் ஆகும். ஆங்கிலம் முதலான ஐரோப்பிய மொழிகள் பலவற்றிலும் பலவிதமான எதிர்முறை முன்னொட்டுக்கள் உள்ளன. தமிழில் அல், இல் என்ற இரண்டு எதிர்முறை முன்னொட்டுக்கள் இதுவரை அறியப்பட்டுள்ளன. சான்றுக்குச் சிலவற்றைக் கீழே காணலாம்.
a + sexual = asexual
il + legal = illegal
அல் + திணை = அஃறிணை
அல் + மொழி = அன்மொழி
இல் + ஆன் = இல்லான்
இல் + மை = இன்மை
தமிழில் மேற்காணும் இரண்டு முன்னொட்டுகளைத் தவிர அ என்னும் எழுத்தும் எதிர்முறை முன்னொட்டாக அறியப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த முன்னொட்டு சங்க இலக்கியப் பாடல்களில் அதிகம் பயன்படுத்தப் பட்டுள்ளது.
சங்க இலக்கியத்தில் அகர எதிர்முறை முன்னொட்டு:
தமிழ் இலக்கியங்களிலே காலத்தால் முற்பட்ட சங்க இலக்கியங்களில் அகரத்தை முன்னொட்டாகக் கொண்ட சொற்கள் பயன்படுத்தப் பட்டுள்ளன என்பது புதிய செய்தி. அதிலும் அவை எதிர்முறைப் பொருளைக் குறிக்கவே கையாளப் பட்டுள்ளன என்பது வியப்பூட்டும் செய்தி. அந்த சொற்கள் எவை எவை என்று முதலில் காணலாம்.
- அகளம்
- அச்சிரம்
- அசோகம்
- அந்தரம்
- அமரர்
- அமிர்தம்
- அமிர்து
- அவலம்
- அவுணர்
- அனந்தர்
- அனந்தல்
மேற்காணும் சொற்கள் அனைத்திலும் அகர முன்னொட்டு எவ்வாறு எதிர்மறைப் பொருளில் பயன்படுத்தப் பட்டுள்ளது என்பதை அறிய இச் சொற்களின் பிறப்பியல் முறைகளைக் காண வேண்டும். இச் சொற்களின் பிறப்பியல் முறைகளை அவற்றின் பொருட்கள் மற்றும் இலக்கியப் பயன்பாட்டு இடங்களுடன் வரிசையாகக் கீழே காணலாம்.
1. அகளம்:
பிறப்பியல்: அ (எதிர்முறை ஒட்டு) + களம் (=கழுத்து, மேடு) = அகளம் = கழுத்தில்லாமல் குழி உடையது அதாவது கழுத்தில்லாத பாத்திர வகைகள்.
பொருளியல்: வாளி, அண்டா, தொட்டி போன்ற பாத்திரங்கள், யாழின் பத்தர் என்னும் கழுத்தற்ற பானை போன்ற உறுப்பு.
வழக்கியல்: சிறுபாணாற்றுப்படை - 224, 225, மலைப்படுகடாம் - 104.
2. அச்சிரம்:
பிறப்பியல்: அ (எதிர்முறை ஒட்டு) + சுரம் (=வெப்பம்) = அச்சுரம் > அச்சிரம் = வெப்பமற்ற நிலை.
பொருளியல்: குளிர்ச்சி, பனி, பனிக்காலம்.
வழக்கியல்: பரிபாடல் - 18, ஐங்குறுநூறு - 223.
3. அசோகம்:
பிறப்பியல்: அ (எதிர்முறை ஒட்டு) + சோகம் (=வாட்டம்) = அசோகம் = வாட்டமின்மை, செழிப்பானது.
பொருளியல்: கவலையின்மை, எப்போதும் பசுமையான இலைகளைக் கொண்ட மரவகைகள், பிண்டி, வாழை.
வழக்கியல்: கலித்தொகை - 57.
4. அந்தரம்:
பிறப்பியல்: அ (எதிர்முறை ஒட்டு) + தரம் (=பூமி, கீழ்ப்பகுதி) = அந்தரம் = கீழ்ப்பகுதி அற்றது.
பொருளியல்: மேலிடம், வெளி, ஆகாயம், தேவலோகம்.
வழக்கியல்: திருமுருகாற்றுப்படை - 119, 174, ஐங்குறுநூறு - 76, பரிபாடல் - 24, அகநானூறு - 68, புறநானூறு - 392, பதிற்றுப்பத்து - 51.
5. அமரர்:
பிறப்பியல்: அ (எதிர்முறை ஒட்டு) + மரி (=இற) + அர் (விகுதி) = அமரர் = இறப்பு இல்லாதவர்.
பொருளியல்: வானோர், தேவர்.
வழக்கியல்: பட்டினப்பாலை - 184, 200, பரிபாடல் - 1, 2, 3, 5, 8, 11, கலித்தொகை - 108, புறநானூறு - 0, 55, 99.
6. அமிர்தம்:
பிறப்பியல்: அ (எதிர்முறை ஒட்டு) + மிருது (=இறப்பு) + அம் (விகுதி) = அமிருதம் > அமிர்தம் = இறவாமையைத் தருவது, மரணத்தை ஒத்தி வைப்பது.
பொருளியல்: நல்லுணவு, இனிய உணவு.
வழக்கியல்: பரிபாடல் - 2, 8.
7. அமிர்து:
பிறப்பியல்: அ (எதிர்முறை ஒட்டு) + மிருது (=இறப்பு) = அமிருது > அமிர்து = இறவாமையைத் தருவது, மரணத்தை ஒத்தி வைப்பது.
பொருளியல்: நல்லுணவு, இனிய உணவு.
வழக்கியல்: மதுரைக்காஞ்சி - 532, பதிற்றுப்பத்து - 16, பரிபாடல் - 3,8,12.
8. அவலம்:
பிறப்பியல்: அ (எதிர்முறை ஒட்டு) + வலம் (=வெற்றி, வலிமை) = அவலம் = வெற்றி மற்றும் வலிமையின் எதிர்.
பொருளியல்: தோல்வி, வீண், பலவீனம், கேடு, நோய்.
வழக்கியல்: நற்றிணை - 58, குறுந்தொகை - 159, கலித்தொகை - 28,103, அகநானூறு - 285, புறநானூறு - 210 மற்றும் பலப்பல.
9. அவுணர்:
பிறப்பியல்: அ (எதிர்முறை ஒட்டு) + ஒண்மை (=அழகு, நற்செயல், நல்லறிவு, ஒழுக்கம்) + அர் (விகுதி) = அவொணர் > அவுணர் = அழகும் நற்செயலும் நல்லறிவும் ஒழுக்கமும் அற்றவர்.
பொருளியல்: அரக்கர், அசுரர்.
வழக்கியல்: திருமுருகாற்றுப்படை - 59, மதுரைக்காஞ்சி - 590, குறுந்தொகை - 1, பதிற்றுப்பத்து - 11, பரிபாடல் - 3,5,8, புறநானூறு - 174, கலித்தொகை - 2.
10. அனந்தர்:
பிறப்பியல்: அ (எதிர்முறை ஒட்டு) + நந்தம் (=முயற்சி, ஊக்கம்) + அர் (விகுதி) = அனந்தர் = முயற்சியின்மை, ஊக்கமின்மை.
பொருளியல்: சோம்பல், மந்தம், மயக்கம், தூக்கம்.
வழக்கியல்: பொருநராற்றுப்படை - 94, அகநானூறு - 37, புறநானூறு - 316.
11. அனந்தல்:
பிறப்பியல்: அ (எதிர்முறை ஒட்டு) + நந்தம் (=முயற்சி, ஊக்கம்) + அல் (விகுதி) = அனந்தல் = முயற்சியின்மை, ஊக்கமின்மை.
பொருளியல்: சோம்பல், மந்தம், மயக்கம், தூக்கம்.
வழக்கியல்: மலைப்படுகடாம் - 173, புறநானூறு - 62.
முடிவுரை:
மேலே கண்ட சொற்களுக்கான பிறப்பியல் முறைகளில் இருந்து அவை அனைத்தும் அகர முன்னொட்டை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டவையே என்றும் அவை யாவும் எதிர்முறைப் பொருளில் அமைந்தவையே என்றும் அறியலாம். ஆக, அகரத்தை முன்னொட்டாகக் கொண்டு உருவாக்கிய சொல்லை எதிர்முறைப் பொருளில் வழங்கும் வழக்கம் சங்ககாலம் அல்லது அதற்கும் முற்பட்ட காலத்து நடைமுறையே அன்றி வடமொழிக்கானது அல்ல என்று தெளியலாம். எனவே இனி கீழ்வருவன போன்ற பல சொற்களை வடமொழியோ என்று சந்தேகிக்காமல் தமிழெனவே துணிந்து பயன்படுத்தலாம்.
அ + சாதாரணம் = அசாதாரணம்
அ + பூர்வம் = அபூர்வம்
அ + பயம் = அபயம்
இது போன்ற ஏராளமான சொற்களின் பிறப்பியல் முறைகளை அவற்றின் பொருட்கள் மற்றும் மேற்கோள் பாடல்களுடன் அறிந்துகொள்ள கீழ்க்காணும் இணைய தளம் உதவுகிறது. குறிப்பாக ஒரு சொல் தமிழா சமக்கிருதமா என்று தெளிந்தகொள்ள கீழ்க்காணும் தளத்தைப் பயன்படுத்தலாம். வாழ்க தமிழ்!.
.jpg)