சங்ககாலம் தொட்டு இன்றுவரை பயன்படுத்தப் பட்டுவரும் பல தமிழ்ச் சொற்களில் நூல் என்ற பெயர்ச்சொல்லும் ஒன்று என்பதை நாமறிவோம். இச்சொல்லுக்கு இன்றைய அகராதிகள் பல்வேறு பொருட்களைக் கூறியுள்ளன. இருந்தாலும் ஒருசில பாடல்களில் இப் பொருட்கள் எவையுமே பொருந்தாத நிலை காணப்பட்டது. இது இச் சொல்லுக்குப் புதிய பொருள் ஏதேனும் இருக்குமோ என்ற ஐயத்திற்கு வழிவகுத்தது. அதைப் பற்றிய ஆய்வே இந்தக் கட்டுரை. அதுமட்டுமின்றி அகராதிகள் கூறுகின்ற பொருட்களுக்கு வேர் என்ன என்பதைப் பற்றியும் அப்பொருட்கள் அந்த வேரிலிருந்து எவ்வாறு கிளைத்தன என்பதைப் பற்றியும் இக் கட்டுரையில் காணலாம்.
தற்போதைய பொருட்கள்:
நூல் என்ற பெயர்ச்சொல்லுக்கு தற்போது அகராதிகள் கூறும் பொருட்கள் கீழே தரப்பட்டுள்ளன.
கழகத் தமிழ்க் கையகராதி: பஞ்சி நூல், தாலிக்கயிறு, ஆகமம், ஆலோசனை, கல்வி.
சென்னைத் தமிழ்ப் பேரகராதி: பஞ்சிநூல், தாலிக்கயிறு, ஆண்குறியிலுள்ள நரம்பு, ஆண்குறி, மரத்தை (24 சதுர அடி அளவு), ஆலோசனை.
வின்சுலோ அகராதி: இழை, யாப்பு(புத்தகம்), சாத்திரம், எண்ணம்.
இன்றைய பயன்பாடு:
இன்றைய காலத்தில் நூல் என்ற சொல் யாப்பினையும் (புத்தகத்தையும்) இழையினையும் குறிக்கவே பெரும்பாலும் பயன்படுத்தப் படுகிறது. பொதுவாக பல பொருட்களைத் தருகின்ற ஒரு சொல்லானது அது பயன்படுத்தப்படுகின்ற இடத்திற்கு ஏற்றாற்போல பொருள் கொள்ளப்படும். அதன்படி,
'அந்த நூலைப் படி' என்ற தொடரில் நூல் என்னும் சொல் யாப்பு என்ற பொருள்பெறுகிறது.
'இந்த நூலால் கட்டு' என்ற தொடரில் நூல் என்னும் சொல் இழை என்ற பொருள் பெறுகிறது.
பொருள் முரண்பாடு:
திருக்குறளில் வரும் கீழ்க்காணும் குறள்களை ஆய்வு செய்யும்போது அகராதிகள் கூறும் பொருட்களே அன்றி புதியதோர் பொருளும் இச் சொல்லுக்கு இருப்பதாகத் தோன்றியது.
ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின். - குறள் எண்: 560.
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை. - குறள் எண்: 322.
மேற்காணும் குறள்களில் வரும் நூல் என்ற சொல் எப் பொருளை உணர்த்துகிறது?. இன்றைய அகராதிகள் கூறும் பொருட்களில் ஒன்றைக் கூட அவை உணர்த்தவில்லை என்பது நன்றாகவே நமக்குப் புரிகிறது இல்லையா?. என்றால் அதன் பொருள் என்ன என்று பார்ப்போம்.
புதிய பொருள்:
நூல் என்ற சொல் மேற்காணும் குறள்களில் உணர்த்தும் புதிய பொருள் 'ஏர், நுகம் அல்லது கலப்பை' என்பதாகும். இது எவ்வாறு என்பதையும் இதற்கான சில ஆதாரங்களையும் கீழே காணலாம்.
நிறுவுதல்:
நூல் என்ற சொல் கீழ்க்காணும் பாடல்களில் எல்லாம் 'கலப்பை' என்னும் பொருளையே உணர்த்துகிறது.
ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின். - குறள் எண்: 560.
மேற்காணும் குறளில் அறுதொழிலோர் என்பது அறுவடைத் தொழில் செய்வோராகிய வேளாண்மக்களைக் குறிக்கும். நூல் என்பது அவரது முழுமுதல் கருவியாகிய கலப்பையினைக் குறிக்கும். இதன்படி இக் குறளின் சரியான பொருளானது ' நாட்டு மன்னன் தன் நாட்டு மக்களைச் சரியாக காக்காவிட்டால் அந் நாட்டில் உள்ள பசுக்களின் பயனாகிய பாலின் அளவு குறையத் துவங்கும். வேளாண்மக்களும் தமது கலப்பையினை எடுத்து உழவு செய்ய இயலாமல் மென்மெல உழவுத் தொழிலையே மறந்து விடுவார்கள்.' என்பதாகும். ஒரு மன்னனின் கொடுங்கோல் ஆட்சி எவ்வளவு பெரிய பாதிப்பினை நாட்டிற்கு உண்டாக்கும் என்பதனை இக் குறளின் மூலம் அரசர்களுக்கு உணர்த்துகிறார் வள்ளுவர். இக் கருத்தின் பின்னணி என்ன என்று பார்ப்போம். பொருட்செல்வத்தின் மேல் பேராசை கொண்ட ஒரு மன்னன் தன் நாட்டு மக்களிடம் இருந்து அதிகமான வரியினை வசூல் செய்யும்போது அம் மக்கள் சொல்லொணாத் துயரத்திற்கு ஆளாகின்றனர். மனம் வெம்பி அவர்கள் விடும் கண்ணீர் அம் மன்னனின் செல்வத்தை அழிப்பது மட்டுமின்றி அந் நாட்டின் மழைவளத்தையும் குறைக்கிறது. 555 மற்றும் 559 ஆம் குறள்களில் இக் கருத்துக்களைக் காணலாம். மழைவளம் இன்மையினால் பசும்புற்கள் தோன்றுவது குறைகிறது. பசும்புற்களின் பற்றாக்குறையினால் பசுக்களின் பயனாகிய பால்வளம் குறைகிறது. மழைவளம் இன்மையால் வேளாண் மக்களும் கலப்பை எடுத்து உழவு செய்ய இயலாமல் உழவினை மறந்து விடுவர் என்கிறார் வள்ளுவர். முற்றிலும் உண்மையன்றோ?.
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை.
- குறள் எண்: 322
மேற்காணும் குறளில் 'தொகுத்தவற்றுள்' என்பது 'தொகுத்தவாற்றுள்' என்று வரவேண்டும். இங்கு நூலோர் என்பது கலப்பை உடைய மக்களாகிய வேளாண் மக்களைக் குறிக்கும். 'தொகுத்தவாற்றுள்' என்பது 'தொகுத்த ஆற்றுள்' எனப் பிரிக்கப்பட்டு 'தொகுத்த முறைகளுள்' எனப் பொருள்கொள்ளப் படும். இதன்படி இக் குறளின் சரியான பொருளானது ' வேளாண் மக்கள் பலமுறைகளால் உணவுப் பொருட்களைத் தொகுத்தாலும் தாம் ஈட்டிய பொருட்களைப் பலருடன் பங்கிட்டு உண்டு பல்லுயிர் காப்பதுவே அம் முறைகள் யாவற்றிலும் தலையானது ஆகும்.' என்பதாம். இக் கருத்தின் பின்னணி என்ன என்று பார்ப்போம். ஒரு காலத்தில் காடாக விளங்கிய இடங்களே பிற்காலத்தில் திருத்தப்பட்டு விளைநிலங்கள் ஆகின்றன. அவ்வாறு திருத்தப் படும்போது அவ் இடத்தில் வாழ்ந்த பல உயிர்கள் மடிந்து விடுகின்றன. இச் செயல் கொலைக்குச் சமமாகும் என்பது திருவள்ளுவரின் கருத்தாகும். அதற்காக வேளாண்மை செய்யாமலும் இருக்க முடியாது. எனவே ஒரு நெறிமுறை வகுக்கிறார் வள்ளுவர். பல உயிர்களைக் கொன்று வேளாண்மை செய்ததற்கு ஈடாக வேளாண் மக்கள் பல உயிர்களுக்கு உணவளித்து வாழவைக்க வேண்டும் என்பதே அவர் வகுத்த நெறிமுறை ஆகும். அதுதான் நீதியும் கூட என்பதனால் தான் வள்ளுவர் இக் கருத்தினை கொல்லாமை என்னும் அதிகாரத்தின் கீழ் இட்டுள்ளார். முற்றிலும் சரியன்றோ?.
..........செந்நூல் கழி ஒருவன் கைப்பற்ற அந்நூலை
முந்நூலாக் கொள்வானும் போன்ம்!
இகுளை! இஃது ஒன்று கண்டை; இஃது ஒத்தன்
கோட்டினத்து ஆயர் மகன் அன்றே மீட்டொரான்
போர்புகல் ஏற்றுப் பிணர் எருத்தில் தத்தபு.........
- முல்லைக்கலி: 3
கலித்தொகை முல்லைக்கலியின் மூன்றாவது பாடலில் வரும் 30 முதல் 35 வரையிலான பாடல் வரிகள் மேலே காட்டப் பட்டுள்ளன. இவற்றில் வரும் நூல் என்ற சொல் அனைத்து இடங்களிலும் கலப்பை என்ற பொருளையே உணர்த்தி நிற்கின்றது. இது எவ்வாறு என்று காண்பதற்கு முன்னால் இப் பாடலில் வரும் வீர விளையாட்டு ஒன்றினைப் பற்றியும் அறிந்து கொள்ளலாம். ஜல்லிக்கட்டு என்றும் மஞ்சுவிரட்டு என்றும் இக் காலத்தில் கூறப்படுகிற இந்த வீர விளையாட்டினை ஏறுதழுவுதல் என்று சங்க இலக்கியம் கூறுகிறது. ஏறுதழுவுதலானது பழங்கால தமிழர்களின் வீரத்தினை வெளிப்படுத்தும் இன்றியமையாத நிகழ்வாக இருந்து வந்துள்ளது. கட்டிளங்காளைகளும் (இளைஞர்கள்) முட்டிளங்காளைகளும் (எருதுகள்) கட்டிப் புரள்கின்ற அந்த வீர விளையாட்டினை நேராகக் காணும்போது நமக்கு மயிர்க் கூச்செறிவது திண்ணம். ஆம், தன்மீது பாய்ந்து தன்னை அடக்கத் துணியும் இளைஞர்களைத் தனது கொம்புகளால் குத்தி அலேக்காகத் தூக்கி வீசி எறியும்போது ........ அப்பப்பா! எவ்வளவு குருதி!. இப்படி ஒரு வீர நிகழ்ச்சி தான் இந்தப் பாடல் வரிகளிலும் கூறப்பட்டுள்ளது. பல இளைஞர்களைக் குத்திய குருதியால் சிவப்பு வண்ணம் பெற்ற கொம்புகளை உடைய ஒரு காளை மாட்டின் மீது துணிந்து பாய்கிறான் காளை ஒருவன். அதன் கழுத்தின் மேல் அமர்ந்து கொண்டு அதன் இரண்டு கொம்புகளையும் தன் கைகளால் பற்றிக் கொள்ள அக் காளையோ சீறிப் பாய்கிறது. இந்தத் துணிகரமான நிகழ்ச்சியைக் கண்ணுற்ற புலவருக்கு வேறு ஒரு கற்பனை தோன்றுகிறது.
குருதி தோய்ந்த காளைமாட்டின் கொம்புகள் இரண்டும் சிவப்பு வண்ணம் கொண்ட கலப்பையாகத் தோன்றுகிறது அவருக்கு. கொம்புகளைப் பற்றியவாறு அந்த இளைஞன் காளைமாட்டின் மேல் பயணம் செய்யும் நிகழ்ச்சியானது அவருக்கு உழவன் ஒருவன் சிவப்பு வண்ணம் கொண்ட கலப்பையினைத் தன் கைகளால் பற்றிக் கொண்டு முன்நோக்கிச் செல்வதைப் போலத் தோன்றுகிறதாம். என்ன ஒரு அரிய கற்பனை!. இப்பாடலில் வரும் செந்நூல் கழி என்பது செம்மண்ணில் உழுததால் சிவப்பு வண்ணம் பெற்ற கலப்பையினை உடைய நுகத்தடியினைக் குறிக்கிறது. ஒருவன் என்பது இங்கு ஏர் உழுகின்ற காளை மாட்டினைக் குறிக்கிறது. முந்நூல் என்பது முன்னால் உள்ள கலப்பை என்று பொருள் பெறும். எனவே இங்கும் நூல் என்பது கலப்பையைத் தான் குறிக்கிறது என்று தெளியலாம்.
இக்காலத்தில் 'நூல் பிடித்தது போல' என்ற ஒரு சொல்வழக்கு உள்ளது. இதற்கு வழங்கப்படும் பொருளானது 'ஒரே நேர்கோட்டில்' என்பதாகும். இவ் வழக்கில் வரும் நூல் என்னும் சொல் இழையினைக் குறிக்காது; கலப்பையைத் தான் குறிக்கும். ஏனென்றால் இழையைப் பிடித்துக் கொண்டு யாரும் நடக்க மாட்டார்கள் என்பதுடன் இழை வளையும் தன்மை கொண்டது ஆகும். ஏர் பிடித்து நடக்கும்போது மட்டுமே வளைவுநெளிவு இல்லாமல் ஒரே நேர்கோட்டில் செல்ல முடியும். இதைத்தான் 'நூல் பிடித்தது போல' என்ற தொடராகப் பயன்படுத்துகின்றனர். மேற்கண்ட சான்றுகளில் இருந்து நூல் என்னும் சொல் கலப்பையினையும் குறிக்கும் என்பதை அறியலாம்.
முடிவுரை:
நூல் என்ற சொல் ஆதியில் கலப்பையைத் தான் குறித்திருக்க வேண்டும். இந்த வேர்ப்பொருளில் இருந்தே யாப்பு, இழை முதலான பிற பொருட்கள் கிளைத்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. கீழ்க்காணும் பொருள்வளர்ச்சிப் படிநிலைகளை நோக்கினால் இக் கருத்து உண்மை என்பது புலப்படும்.
நூல் ----> கலப்பை -----> கூரிய ஆக்க ஆயுதம்----> எழுதுகோல் , பஞ்சு நூற்கும் கருவி ----> யாப்பு (புத்தகம்), இழை.
கலப்பை என்பது ஒரு கூரிய ஆயுதம். அதுமட்டுமின்றி உணவுப் பயிர்களை விளைவிக்கின்ற வேளாண்மை என்னும் ஆக்கப் பணிக்கு பயன்படுவது. கலப்பையின் கூர்மைப் பண்பே அதனை உழுவதற்கு ஏற்ற கருவியாக அமைத்தது. ஆதியில் கலப்பைப் பொருளைக் குறித்து வந்த நூல் என்ற சொல் நாளடைவில் கலப்பையின் தன்மைகளைக் கொண்ட பிற பொருட்களையும் குறிக்கப் பயன்படலாயிற்று. கலப்பையானது எவ்வாறு கூர்மைப் பண்புடன் ஆக்கப் பணிக்குப் பயன்படுகிறதோ அதேபோன்ற தன்மைகளைக் கொண்ட எழுதுகோலுக்கும் பஞ்சி நூற்கும் கருவிக்கும் நூல் என்ற சொல் வழக்குச்சொல்லாக பயன்படலாயிற்று. நூல் என்பது எழுதுகோலினைக் குறித்ததுடன் நிற்காமல் எழுதுகோலினால் இயற்றப்படும் யாப்பினையும் (புத்தகத்தினையும்) குறிக்கப் பயன்படலாயிற்று. அதேபோல நூல் என்பது நூற்கும் கருவியினைக் குறித்ததுடன் நிற்காமல் அக் கருவியின் பயனாகிய இழையினையும் குறிக்கப் பயன்படலாயிற்று. இதுவே இக் கட்டுரையின் ஆய்வு முடிபாகும்.