செவ்வாய், 10 பிப்ரவரி, 2009

'களவும் கற்று மற'


தவறாகப் பொருள் கொள்ளப்பட்டுள்ள தமிழகப் பழமொழிகளில் இதுவும் ஒன்று. இதிலும் ஒரே ஒரு எழுத்துப் பிழையால் தான் பொருள் தவறு நேர்ந்துள்ளது. அதைப் பற்றிக் காணும் முன்னர் இதன் பொருள் என்ன என்று காணலாம்.

' திருட்டுத் தொழிலைக் கூட கற்றுக்கொண்டு பின்னர் மறந்துவிடு.' - இதுவே இதன் பொருள் ஆகும்.

எப்படி இருக்கிறது பொருள்?. மிகவும் ஆச்சர்யப்படுத்துகிறது அல்லவா?. எப்படி இதுபோன்ற பொருளில் பழமொழிகள் உலாவருகின்றன என்பதே தெரியவில்லை. இப்படித் தவறான பழமொழிகள் புழங்குவதால் தான் சமுதாயத்தில் ஒழுக்கம் குன்றி தவறுகள் அதிகரித்து விட்டன. 'ஏன் தவறு செய்கிறாய்?' என்று கேட்டால், 'களவும் கற்று மற' என்று பெரியவர்கள் சொல்லி இருக்கிறார்களே அதனால் நானும் இந்தத் தவறை ஒருமுறை செய்துவிட்டு பின்னர் மறந்துவிடுகிறேன் என்று சாக்கு சொல்லுகிறார்கள். இப்படி இளைய சமுதாயத்தினருக்கு ஒரு தவறான வழியைக் காட்டுவதாக ஒரு பழமொழி இருக்கலாமா?. கூடவே கூடாது. அதை ஒரேயடியாக நீக்கவேண்டும் இல்லையேல் அதன் உண்மைப் பொருளைக் கண்டறிந்து அதனை மக்களுக்கு உணர்த்த வேண்டும். முன்னோர்கள் சொல்லிவிட்டுச் சென்ற இப்பழமொழியை நீக்குவதை விட இதன் உண்மைப் பொருள் என்ன என்று கண்டறிந்து அதை மக்களுக்கு உணர்த்தினால் நன்றாக இருக்கும் என்னும் ஆவலில் ஏற்பட்டது தான் இந்த ஆய்வு.

பழமொழிகளின் பல்வேறு பயன்பாடுகளில் ஒன்று தான் ' இளையோரை வழிநடத்துதல்' ஆகும். பெரியோர்கள் தாம் அனுபவத்தால் பெற்ற அறிவை இளையோருக்குக் கூறி அதன்படி நடந்தால் நன்மைகள் பெறலாம் என்னும் உயர்ந்த நோக்கத்தில் உருவானவை பல பழமொழிகள். அத்தகைய பழமொழிகளுள் ஒன்று தான் இந்தப் பழமொழியும். 'தவறுகளைச் செய்யாதே' என்று தான் பெரியவர்கள் அறிவுரை கூறுவார்களே ஒழிய ' தவறுகளைப் பழகிக்கொள் பின்னர் மறந்துவிடு' என்று ஒருபோதும் சொல்லமாட்டார்கள். இனி இப் பழமொழியின் உண்மையான பொருள் என்ன என்று காண்போம்.

அக்காலத்திலும் சரி இக்காலத்திலும் சரி செய்யக்கூடாத தவறுகள் பட்டியலில் 'திருட்டு, சூது' ஆகியவை அடங்கும். இந்த இரண்டு தவறுகளும் ஒரு மனிதனை எந்த நிலைக்குக் கொண்டுசெல்லும் என்பதை இங்கே சொல்லத் தேவையில்லை. ஏனென்றால் அது உலகறிந்த உண்மை. திருட்டு என்பது பிறருக்கு உரிமை உடைய பொருளை அவருக்குத் தெரியாமல் தான் எடுத்துக் கொள்வது ஆகும். சூது என்பது பிறருக்குச் சொந்தமான பொருளை தந்திரத்தால் ஏமாற்றித் தான் கொள்வதாகும். தாயக்கட்டைகளை உருட்டி விளையாடும் இந்த விளையாட்டிற்கு 'சூதாட்டம்' என்று பெயர். இந்த தந்திரமான விளையாட்டின் அடிப்படையில் தானே 'மகாபாரதம்' உருவானது. துரியோதனன் துகில் உரிப்பதற்கும் பாஞ்சாலி சபதம் செய்ததற்கும் அடிப்படையே இந்த விளையாட்டு தானே.
இதைப் பற்றி ' சூது' என்னும் தலைப்பில் பத்து குறள்களில் மிக அருமையாக விளக்கியுள்ளார் திருவள்ளுவர். சூது விளையாடியவனின் நிலை பற்றி ஒரு குறளில் வள்ளுவர் இவ்வாறு கூறுகிறார்.

' கவறும் கழகமும் கையும் தருக்கி
இவறியார் இல்லாகி யார்.' - குறள் எண்: 935.

இங்கே 'கவறு' என்பது 'சூதாடும் கருவியையும்', 'கழகம்' என்பது 'சூதாடும் இடத்தையும்' குறிக்கும். ' சூதாடும் கருவியையும் சூதாடும் இடத்தையும் தம் கைகளையும் நம்பி மேல்சென்றவர்கள் ஒன்றும் இல்லாதவராய் ஆவர்.' என்பதே இக்குறளின் பொருள் ஆகும். சூதாடும் கருவியைக் குறிக்கும் இந்த 'கவறு' என்னும் சொல்லை 'கற்று' என்று பழமொழியில் பிழையாக எழுதியதால் தான் தவறான பொருள்கோளுக்கு வழிவகுத்து விட்டது. களவுத்தொழிலைக் கையால் தான் செய்யவேண்டும். அதேபோல சூது விளையாட்டையும் முழுக்க முழுக்க கைகளால் தான் ஆடவேண்டும். ' இந்த இரண்டையும் கையில் தொடாமல் இரு' என்பதே இப்பழமொழியில் பெரியவர்கள் கூற வரும் அறிவுரை ஆகும். இனி சரியான பழமொழி இது தான்:

' களவும் கறு மற.'
(கவறு மற = கவறும்+அற; அற - தவிர்)

பி.கு: சூதாடும் இடத்தைக் குறிக்கின்ற 'கழகம்' என்ற சொல்லை தமிழக அரசியல் கட்சிகள் பல தங்களது பெயருடன் இணைத்து வைத்துள்ள நோக்கம் என்னவோ?. சூதாடும் கழகத்தைச் சேர்ந்தவர்கள் ஏமாற்றுக்காரர்களாக இருப்பதுபோலவே அரசியல் கட்சிகளும் மக்களை ஏமாற்றி வருவதன் மறைபொருள் இப்போது தான் புரிகிறது.
-----------------------------------------வாழ்க தமிழ்!---------------------------------------

36 கருத்துகள்:

 1. அய்யாவுக்கு வணக்கம்,
  மிக ஆழமான விளக்கம்.இதே தலைப்பில் சனவரி'30 ல் ஒரு விளக்கததை நான் எனது இழையில் பதிவு செய்திருக்கிறேன்.தங்களின் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்

  பதிலளிநீக்கு
 2. வள்ளுவனையும்,கம்பனையுமே திருத்தும் தாங்கள் சமகாலத்தில் உள்ளவர்களின் மற்றுக் கருத்துக்களை ஏற்றுக்கொள்வீர்கள் என எதிர்பார்ப்பது தவறுதான்


  ////சூதாடும் கழகத்தைச் சேர்ந்தவர்கள் ஏமாற்றுக்காரர்களாக இருப்பதுபோலவே அரசியல் கட்சிகளும் மக்களை ஏமாற்றி வருவதன் மறைபொருள் இப்போது தான் புரிகிறது.////

  தங்களின் இந்த பொதுவான கருத்துக்கு எந்த வகையான சான்று வைத்திருக்கிறீர்கள்?
  கழகத்தின் அர்த்தம் இப்போதுதான் புரிகிறது என்று வேறு சொல்லியிருக்கிறீர்கள்.அப்படி என்றால் தங்களுக்குப் புரியாத சில சங்கதிகளும் உண்டு என்பதை ஒத்துக்கொள்கிறீர்கள் தானே!

  பதிலளிநீக்கு
 3. ஐயா பெயரில்லாதவரே! பின்குறிப்பில் நான் நக்கலாகச் சொன்னதற்கெல்லாம் சான்றுகள் வேண்டும் என்று கேட்டால் நான் எங்கே போவேன்?. நான் திருத்தியது வள்ளுவரை அல்ல. நம் மக்கள் அவர் எழுதிய குறளில் செய்த தவறுகளை. சரி, கம்பர் எங்கிருந்து வந்தார்?. இன்னும் அதை நான் கையில் தொடவில்லையே!. தயவுசெய்து உங்கள் முகம் காட்டுகிறீர்களா?

  பதிலளிநீக்கு
 4. களவும் கத்தும் மற - கத்து என்றால் சூது என்றும் களவும் சூதும் மற என்று பொருள் என்றும் எங்கோ படித்த ஞாபகம்.

  பதிலளிநீக்கு
 5. என்கருத்து.

  "கசடறக் கல்" என்பதின் மூலம் வள்ளுவர் உனக்கு தவறு ( களவு) என்பதை அற்று பிறதைக் கல் என்றார். ஆனால் சில விஷயங்கள் நாம் தவறு என்பதை அறியாமலேயே கற்கிறோம். "களவும் கற்று மற" என்பது கற்றது களவென தெரிந்தபின் அதை மற எனப்போருளாகும் என்பது என் தாழ்மையான கருத்து.

  கிருஷ்ணமாச்சாரி அவ்வை தமிழ்ச் சங்கம்

  பதிலளிநீக்கு
 6. எனப்போருளாகும் என்பதை " எனப் பொருளாகும். " என்று படிக்கவும். தவறுக்கு வருத்தங்கள்
  கிருஷ்ணமாச்சாரி அவ்வை தமிழ்ச் சங்கம்

  பதிலளிநீக்கு
 7. களவு என்பதற்கு காதல் என்று பொருள் கொள்ளலாமா என்பதை விளக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். டாக்டர்.வ.க.கன்னியப்பன்

  பதிலளிநீக்கு
 8. கன்னியப்பன் ஐயா, நீங்கள் சொல்வது போல களவு என்பதற்கு காதல் என்று பொருள் கொண்டால் களவும் அதாவது காதலும் கற்று மற என்றல்லவா பொருள் வரும்.

  அப்படியென்றால் காதலைக் கற்பது மறக்கவா?

  யார் செய்வார்கள் இப்படி?

  யாரால் முடியும் இது?

  அன்புடன்,

  தி.பொ.ச

  பதிலளிநீக்கு
 9. பயனுள்ள பதிவு...வாழ்த்துகள் பல

  ஐயா ஒரு சந்தேகம்...

  அதென்ன இளமுனைவர் பொன்.சரவணன்

  ஐயா "இளமுனைவர்" என்பது "ஆய்வியல் நிறைஞர்" பட்டடத்தைத்தானே குறிக்கிறது?

  அப்படித்தான் குறிக்கிறது என்றால் "இளமுனைவர்" என்று இனி பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். காரணம் "இளமுனைவர்" என்ற பட்டம் இன்றைய ஆய்வியல் - ஆராய்ச்சி நெறிமுறைப்படி "ஆய்வியல் நிறைஞர்" என்றுதான் குறிப்பிடப்பட வேண்டும் என்கிறது பல புத்தகங்களும். "முனைவர்" பட்டத்துக்கு முன்னர் செய்வது என்பதால் "இளமுனைவர்" என்று போட்டுக் கொள்ளக் கூடாது."ஆய்வியல் நிறைஞர்" என்றுதான் குறிப்பிடப்பட வேண்டும்.

  என் கருத்தை ஏற்றுக்கொள்வீர்கள் என்று நினைக்கிறேன். நன்றி

  பதிலளிநீக்கு
 10. திரு. ரமேஷ், நீங்கள் கூறியுள்ளதை நானும் அறிவேன். முதலில் இளமுனைவர் என்று தான் அழைத்தார்கள். பின்னர் தான் ஆய்வியல் நிறைஞர் என்று கூறத் துவங்கினார்கள். நான் இளமுனைவர் என்று போடுவதையே விரும்புகிறேன். ஆய்வியல் நிறைஞர் என்ற சொல்லாடலை நான் விரும்பவில்லை. ஏற்கவுமில்லை. தங்கள் கருத்துக்கு நன்றி.

  அன்புடன்,
  தி.பொ.ச.

  பதிலளிநீக்கு
 11. களவியல் கற்பியல் என்று தொல்காப்பியம் கூறும். அது குறிப்பிடும் களவு என்பது ஒரு தலைவன் ஒரு தலைவியை மணப்பதற்கு முன் கொள்ளும் காதல் உறவு ஆகும். தமிழர் பண்பாட்டின்படி ஒருவனுக்கு ஒருத்தி தான் என்பதால் களவைக் கற்று மற என்றனர்

  வணக்கம் சுப்பு

  பதிலளிநீக்கு
 12. வணக்கம் சுப்பு, கற்கப்பட வேண்டிய விசயமா களவு?

  யாராவது காதலிப்பதற்கு முன்னர் எங்காவது சென்று அதைப் பற்றிப் படித்துவிட்டுத் தான் வருகிறார்களா?.

  உங்கள் கருத்துப்படி,களவு என்பது ரகசியக் காதல் என்றால் அதை ஏன் ஒருவர் கற்க வேண்டும்? தானே தோன்றும் உணர்வல்லவா அது?. இப் பழமொழியில் வரும் கள்வு என்பதற்கு காதல் என்னும்பொருள் பொருந்தாது நண்பரே.

  அன்புடன்,
  தி.பொ.ச.

  பதிலளிநீக்கு
 13. இரகசியக் காதலைக் களவு என்று நான் ஒருபோதும் குறிப்பிடவில்லை. களவுக்கும் வரைமுறைகள் கண்டவன் தமிழன் என்பதால் களவும் கற்கப்பட வேண்டிய ஒன்று தானே
  ஐயா

  பதிலளிநீக்கு
 14. அய்யா, கழகம் என்ற சொல்லுக்கு பல பொருட்கள் உள்ளன. அவற்றில் சில,
  1. கல்வி பயிலும் இடம்
  2. அரசால் ஏற்படுத்தப்படும் தன்னாட்சி நிறுவனம்
  3. குறிப்பிட்ட நோக்கத்துக்காக பலர் கூட்டாக நடத்தும் அமைப்பு
  4. அரசியல் கட்சி
  ஆகியவை.
  இவற்றோடு நீங்கள் குறிப்பிட்ட பொருளும் உண்டு. இடத்திற்கு ஏற்ப பொருள் கொள்வது நன்று.

  பதிலளிநீக்கு
 15. இது பொருத்தமன்று
  சொலவடைகள் மக்கள் மொழி அதில் வலிந்து பொருள் கொள்ளவோ சொல்லவோ ஒன்றுமில்லை
  மொழி குழந்தைகளால் உருவானது
  பண்டிதர்களால் கொல்லப் படுவது
  அறு என்றால் சரி
  அற என்பது ?
  ரொம்ப சாதாரணம் தெரியாத விஷயம் ஒன்றும் இருக்கக் கூடாது அது கேட்ட விஷயமாக இருந்தாலும் கூட - என்ற பொருள் நம்மிடம் என்ன பாடு படுகிறது
  கவறு என்பது வழக்குச் சொல்லன்று

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கள்ளம் கபடமற்ற என்ற சொல் கேள்விபட்டு இருக்கிறோம். கவறு = கபடு ஆனது

   நீக்கு
 16. அறு = நீங்கு ( தன்வினை) / நீக்கு ( பிறவினை)
  அற = நீங்கியிருக்க. ( செயப்பாட்டு வினை)

  களவும் கவறும் அற = களவும் சூதும் நீங்கியிருக்க. விளக்கம் தெளிவாகத்தானே உள்ளது. வழக்குச்சொற்கள் மட்டுமே பழமொழிகளில் இருப்பதில்லை. வழக்கிழந்தவையும் உண்டு.

  பதிலளிநீக்கு
 17. வணக்கம் சுப்பு அவர்கள் சொல்வது சரியே.எனது உயர் கல்வி தமிழ் ஆசிரியர் எல்லோராலும் பாராட்ட கூடியவர் அவர் சொன்ன விளக்கமும் அதுதான்.

  பதிலளிநீக்கு
 18. தங்களின் விளக்கம் அருமை

  நான் இதை இப்படி எண்ணிப் பார்க்க விழைகிறேன்

  களவும் அற்று மற

  அதாவது களவு என்பது இல்லாது மற


  தங்களின் கருத்தை எதிர்நோக்குகிறேன்

  நெல்லை ஆடலரசன்

  பதிலளிநீக்கு
 19. நண்பரே, இத்தகைய மாற்றுக் கருத்துக்களை எப்போதும் நான் வரவேற்கிறேன். மகிழ்ச்சி. ஆனால்,

  களவும் என்று கூறும்போது அதில் உள்ள உம்மை வேறு ஒன்றையும் கூட இழுத்து வருகிறது இல்லையா?. அது என்ன என்று சொல்லவேண்டுமே.

  அந்த உம்மை எண்ணும்மையா, முற்றும்மையா என்னவென்றும் நீங்கள் விளக்கவேண்டும்.

  பதிலளிநீக்கு
 20. களவும் அகத்து மற;
  களவும் கத்து மற;
  களவும் கற்று மற.
  களவு முதலானவற்றையும் அகத்திலிருந்து மறைத்து வை.

  மறச்சு வை - ஒளித்து வை என்பது பேச்சு வழக்கு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நண்பரே, அகம் என்பதே மறைப்புடையது தான். எனவே அகத்திலிருந்து மறைத்துவை என்பது பொருத்தமாகத் தோன்றவில்லை. நீங்கள் சொல்வதுபோல் இருந்தால் களாவும் அகத்து வை என்றுதான் பழமொழி இருந்திருக்க வேண்டும்.

   நீக்கு
  2. அகம்-உள்ளம் உள்ளிருந்தும் நீக்கி விடுங்கள்.

   நீக்கு
 21. பழமொழிகள் மொத்தம் எத்தனை இருக்கும்? பழகிய மொழிகள் இவை எனவும் அதன் உண்மைப் பொருளை சொற்களை மீட்டு வருவதாக கி.ரா ஒரு உரையாடலில் கேட்டேன்.நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கி.ராஜநாராயணன்?. நல்ல முயற்சி. பாராட்டத்தக்கது. சில தளங்களில் பழமொழிகளைத் தொகுத்துக் கொடுத்திருக்கிறார்கள். அவற்றில் பெரும்பாலும் சரியாகத் தான் உள்ளன. :))

   நீக்கு
 22. நீரசம் என்றால் தாமரை, மாதுளை, சுவை யற்றது.பங்கஜம் என்பது பங்கயம் ஆனால் நீரஜம் என்பது நீரயம் என்றல்லவா வரவேண்டும்? பின் கஜம் என்பதை கயம் என்றில்லாமல் கசம் என்றும் எழுதலும் சரியா?

  பதிலளிநீக்கு
 23. நீரின் மேல் தோன்றும் தீ = நீரழல் என்பதே வடமொழியில் நீரச^ம் ஆயிற்று. அதைப்போல பொங்கழல் என்பது பங்கச^ம் என்றும் கயம் என்பது கச^ம் என்றும் ஆனது.

  பதிலளிநீக்கு
 24. களவும் அகத்தே மற ..இது தான் உண்மையான வார்த்தை அப்படினு என் ஆசிரியர் எனக்கு சொல்லி கொடுத்தார்

  பதிலளிநீக்கு
 25. எனக்கு ஓர் ஐயம். பிள்ளை-குட்டி என்று சேர்த்துச்ொல்வதின்
  ோக்கம் என்ன?
  நாற்று, கேசம், பிள்ளை இம்மூன்றுக்கும்
  ொடர்பு உண்டா?

  பதிலளிநீக்கு
 26. தமிழில் நச்செழுத்துக்கள் என்பன யாவை?
  அந்தப்பெயர் வரக் காரணம் என்ன?

  என் நண்பர் ஒருவர் சில இன்னிசை
  வெண்பாக்களை இயற்றியிருக்கிறார்.
  எடுத்துக்காட்டுகள்:
  யோகி ராம்சுரத்குமார் (இன்னிசை வெண்பா)

  நமசிவாய போற்றிநம் நாதன்தாள் போற்றி
  அமரர்கோ போற்றி அருணையே போற்றி
  இமயமே ஈசனே வேதமே போற்றியென்
  ராம்சுரத்கு மாராபோற் றி

  தென்னாடு டைய சிவகுரு போற்றியே
  எந்நாட்ட வர்க்கு மிறைவனே போற்றியே
  இன்பமே ஆரமு தேபிரம்மா போற்றியே
  ராம்சுரத்கு மாராபோற் றி

  இவை சரியாக அமைந்திருக்கின்றனவா?

  பதிலளிநீக்கு
 27. "களவும் கவறு மற"
  இங்கே கவறும்+மற = கவறு மற என்று சொல்கிறீர்கள். இது சரியெனக் கொண்டால், களவும் + கவறும் = களவுங்கவறு மற
  என்று வந்திருக்க வேண்டுமே. ஏன் இல்லை?

  தாங்கள் தந்திருக்கும் புறக்குறட்கள் பலவற்றில், சில சொற்றொடர்கள் நன்கு புணர்ந்தும் சில புணராமலும் இருப்பதற்கு என்ன காரணம்?
  அந்தக் காலத்தில் அவர்கள் எழுதிய சரியான முறை இன்று வரை சரியாக எங்களுக்குக் கடத்தப்பட்டுள்ளதா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. களவும் கவறு மற = களவும் கவறும் அற.
   அற = தவிர்த்திரு.மறக்கச் சொல்லவில்லை; தவிர்க்கச் சொல்கிறது.

   புறக்குறள் வடிவங்கள் குறள் வெண்பா இலக்கணப்படி அமைக்கப்பட்டவை அல்ல. ஏனென்றால், சங்க காலத்தில் குறள் வெண்பா என்ற ஒன்றே இல்லை. இதெல்லாம் பிற்காலத்திய உருவாக்கங்கள்.

   நீக்கு
 28. என் கேள்வி புணர்ச்சி பற்றியது.
  கவறும் + அற = கவறு மற -- இது சரியே
  களவும்+கவறும் என்பது களவுங் கவறும் என்று வந்திருக்க வேண்டாமா?

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.