சனி, 28 மார்ச், 2009

' கண்ணீரும் கடல்நீரும் '


பாடல்:

'அதுகொல் தோழி காம நோயே?
வதிகுருகு உறங்கும் இன் இலைப் புன்னை
உடைதிரைத் திவலை அரும்பும் தீநீர்
மெல்லம் புலம்பன் பிரிந்தென
பல்லிதழ் உண் கண்பாடு ஒல்லாவே.'
- குறுந்தொகை 5 ஆம் பாடல்.

பொருள்:

இது தானோ தோழி காம நோய் என்பது? தன்னிடத்தே தங்கும் நாரை துயில் கொள்ளும் இனிய இலைகளை உடைய புன்னையின் கிளை மீது உடைந்து போகும் இயல்பின ஆகிய அலைகளின் நீர்த் திவலைகள் தோன்றும் தீய நீரை உடைய மெல்லிய கடல் துறைவன் பிரிந்ததால் என்னுடைய பல்லிதழ்ப் பூவை ஒத்த மையுண்ட கண்கள் துயில் பொருந்தாவாயினவே!.
நன்றி: குறுந்தொகை மூலமும் உரையும், திரு.இராமரத்தினம்,கங்கை புத்தக நிலையம், சென்னை, 2002.

தவறுகள்:

இப்பாடலில் இரண்டு தவறுகள் உள்ளன. முதல் தவறு இரண்டாம் அடியில் உள்ளது. 'வதிகுரு குறங்கு மின்னிலைப் புன்னை' என்ற சொற்றொடரை 'வதி குருகு உறங்கும் இன் இலைப் புன்னை' என்று பதம்பிரித்து 'நாரை உறங்கும் இனிய இலைகளை உடைய புன்னை' என்று பொருள் கூறுகிறார். இப் பொருள் பொருந்துமா என்றால் பொருந்தாது. ஏனென்றால் தலைவனைப் பிரிந்த துயரத்தில் இருக்கும் தலைவி புன்னையின் இலைகளை இனிமையானவை என்று ஒருபோதும் கூறமாட்டாள். அப்படி அவள் கூறுவதற்கு அந்த இலைகள் இனிப்பான சுவை உடையனவும் அல்ல தலைவிக்கு நன்மை செய்தனவும் அல்ல. எனவே 'இன் இலைப் புன்னை' என்று கூறியிருப்பது தவறு என்பது உறுதியாகிறது.

இரண்டாவது பிழை பாடலின் இறுதி அடியில் வருகிறது. 'கண்பாடு ஒல்லாவே' என்ற சொற்றொடருக்கு 'தூக்கம் பொருந்தவில்லை' என்று பொருள் கூறப்பட்டுள்ளது. இது தவறான பொருளாகும். 'தூக்கம் வரவில்லை' என்று சொல்வது தான் காதலியின் நோக்கம் என்றால் புன்னை மரத்தையும் கடல் அலைகளையும் இங்கே அவள் குறிப்பிட மாட்டாள். ஏனென்றால் அவை இங்கே தேவையே இல்லை. தொடர்பே இல்லாத பொருட்களைப் பற்றி வலிந்து கூற வேண்டிய தேவை தலைவிக்கு என்ன இருக்கிறது?. அன்றியும் ஒரு பெண் வீட்டுக்குள் இருந்துகொண்டு தூக்கம் வரவில்லை என்று சொன்னால் ஏற்புடையதாக இருக்கும். ஆனால் இங்கே தலைவி இருப்பதோ கடற்கரையில் ஒரு புன்னை மரத்தடியில். இந்த இடத்தில் நின்றுகொண்டு தூக்கம் வரவில்லை என்று தலைவி கூறுவதாகக் கொள்வது நகைப்புக்கே இடமளிக்கும். எனவே தலைவி கூற வரும் கருத்து 'தூக்கம் வரவில்லை' என்பது அல்ல என்பது தெளிவாகிறது.


திருத்தங்கள்:

இரண்டாம் அடியில் வரும் 'இன் இலைப் புன்னை' என்பதற்குப் பதிலாக 'மின் இலைப் புன்னை' (மின்னுகின்ற இலைகளை உடைய புன்னை) என்று வருவதே சரி ஆகும். இறுதி அடியில் வரும் 'கண்பாடு ஒல்லாவே' என்னும் சொற்றொடருக்கு 'கண்ணீர் ஆறாதாயினவே' என்பதே சரியான பொருள் ஆகும். இவை எவ்வாறு சரி என்பதைக் காணும் முன்னர் நெய்தல் நிலத்தைப் பற்றிக் கொஞ்சம் புரிந்து கொள்ளலாம். இந்த நிகழ்ச்சி நடைபெறும் இடம் ஒரு நெய்தல் நிலம் அதாவது கடலும் கடல் சார்ந்த நிலமும் ஆகும். நெய்தல் நிலத்தின் முதன்மைத் தொழில் மீன் பிடித்தல். கடல் அலைகளின் வீச்சு அதிகமாக இருக்கும் முழுநிலா நாளில் குறிப்பாக இரவு நேரத்தில் மீன்பிடித் தொழில் நடைபெறாது. மீனவர்கள் யாவரும் தொழில் இன்றி உண்டு உறங்கி விடுகின்ற இந்த இரவினைத் தான் காதலர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ளப் பயன்படுத்துவர். மாதம் ஒருமுறை முழுநிலா நாளில் காணும் காதலனை அடுத்த முழுநிலா நாளன்று தான் தலைவியால் மறுபடியும் காணமுடியும் என்பதால் இப் பிரிவு காதலர்க்கு குறிப்பாக காதலிக்கு மிகப் பெரிய துயரம் ஆகும்.

இங்கே பாடலில் வரும் தலைவியும் அதேபோல ஒரு முழுநிலா நாளன்று வழக்கமாக சந்திக்கும் ஒரு மரத்தின் அடியில் (இங்கே புன்னை மரம்) தலைவனின் வருகைக்காக தனது தோழியுடன் காத்திருக்கிறாள். அவன் வருவதில் தாமதம் ஏற்படுவதை அறிந்த தலைவி அழத் துவங்குகிறாள். கண்ணீர் இடையறாது சொட்டிக் கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் கடற்கரையில் இருக்கும் அந்த புன்னை மரக் கிளைகளின் மேல் கடல் அலைகளின் நீர் தெறித்து விழுகின்றன. அப்படித் தெறித்து விழும் நீர்த் திவலைகள் புன்னை இலைகளில் இருந்து சொட்டிக் கொண்டே இருக்கின்றன. கூடவே முழுநிலா ஒளியும் இலைகளின் மேல் பட அந்த இலைகள் இரவு நேரத்தில் மின்னுகின்றன. இதைக் காணும் தலைவி தோழியிடம் கீழ்க்காணுமாறு அழுது புலம்புகிறாள்:

'இது தானோ தோழி காம நோய் என்பது? தன்னிடத்தே தங்கும் நாரை துயில் கொள்ளும் மின்னுகின்ற இலைகளை உடைய புன்னையின் கிளை மீது உடைந்து போகும் இயல்பின ஆகிய அலைகளின் நீர்த் திவலைகள் தோன்றும் தீய நீரை உடைய மெல்லிய கடல் துறைவன் பிரிந்ததால் என்னுடைய பல்லிதழ்ப் பூவை ஒத்த மையுண்ட கண்களில் கண்ணீர் ஆறாதாயினவே!.'

இதுவே பாடலின் சரியான பொருள் ஆகும். இது கீழே ஆதாரங்களுடன் நிறுவப்பட்டுள்ளது.

நிறுவுதல்:

கண்பாடு என்ற சொல்லிற்கு தூக்கம் என்று பொருள் கொண்டதால் தான் பிழை நேர்ந்தது. படுதல் என்றால் விழுதல் என்று பொருள். பாடு என்றால் வீழ்வது என்று பொருள். எற்பாடு என்பது கதிரவன் விழும் அதாவது மறையும் நேரத்தைக் குறிப்பதைப் போல (எற்பாடு = எல்+பாடு; எல் = கதிரவன்; பாடு = வீழ்ச்சி.) கண்ணிமை தாழ்வது அல்லது வீழ்வது என்ற பொருளில் எடுத்துக் கொண்டால் கண்பாடு என்பது தூக்கத்தைக் குறிக்கும். அதே சமயம் இது கண்களில் இருந்து விழும் நீர் என்ற பொருளில் கண்ணீரையும் குறிக்கும். இப் பாடல் தூக்கத்தைப் பற்றியது அல்ல என்பதால் கண்ணீர் என்ற பொருளே இப்பாடலுக்குப் பொருத்தமானது என்பது தெளிவாகிறது. உப்புச்சுவை கொண்ட இந்த கண்ணீரை அதே தன்மைத்தான கடல்நீருடன் ஒப்பிட்டுக் கூறி இருக்கும் நயம் இங்கே உணர்ந்து மகிழத் தக்கது.

தலைவியின் கண்கள் சிந்தும் கண்ணீரைப் போலவே புன்னையின் இலைகளில் இருந்து கடல் நீர்த் திவலைகள் சொட்டிக் கொண்டிருக்கிறது. அதே சமயம் முழுநிலாவின் ஒளி இந்த இலைகளின் மேல் பட்டுக் கொண்டிருக்கிறது. இச் சூழ்நிலையில் அந்தப் புன்னை இலைகளைக் குறித்து 'மின்னுகின்ற இலைகளை உடைய புன்னை' என்று தான் தலைவி சொல்லி இருக்க முடியுமே அன்றி 'இனிய இலைகளை உடைய புன்னை' என்று கூறி இருக்க முடியாது அல்லவா?. எனவே 'மின் இலைப் புன்னை' என்பதே சரியான சொற்றொடர் ஆகும்.

சரியான பாடல்:

'அதுகொல் தோழி காம நோயே?
வதிகுருகு உறங்கும் மின் இலைப் புன்னை
உடைதிரைத் திவலை அரும்பும் தீநீர்
மெல்லம் புலம்பன் பிரிந்தென
பல்லிதழ் உண் கண்பாடு ஒல்லாவே.'
---------------------------------------வாழ்க தமிழ்!------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.