வியாழன், 16 ஏப்ரல், 2009

யார் வித்தகர்?


பாடல்:


நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும்
வித்தகர்க் கல்லால் அரிது.
- குறள் எண்: 235

பொருள்:

கலைஞர் உரை: துன்பங்களுக்கிடையேகூட அவற்றைத் தாங்கும் வலிமையால் தமது புகழை வளர்த்துக் கொள்வதும், தமது சாவிலும்கூடப் புகழை நிலை நாட்டுவதும் இயல்பான ஆற்றலுடையவருக்கே உரிய செயலாகும்.
மு.வ உரை:புகழுடம்பு மேம்படுதலாகும் வாழ்வில் கேடும், புகழ் நிலை நிற்பதாகும் சாவும் அறிவில் சிறந்தவர்க்கு அல்லாமல் மற்றவர்க்கு இல்லை.
சாலமன் பாப்பையா உரை:பூத உடம்பின் வறுமையைப் புகழுடம்பின் செல்வமாக்குவதும், பூத உடம்பின் அழிவைப் புகழுடம்பின் அழியாத் தன்மை ஆக்குவதும், பிறர்க்கு ஈந்து, தாம் மெய் உணர்ந்து, அவா அறுத்த வித்தகர்க்கு ஆகுமே அன்றி மற்றவர்க்கு ஆவது கடினம். (நன்றி: திருக்குறள்.காம்)

தவறு:

நத்தம் என்ற சொல்லுக்கு 'நத்தை, சங்கு, ஆக்கம், ஊர்,வாழை,இரவு, இருள்' என்று தான் அகராதிகள் பொருள் கூறுகின்றன. ஆனால் மேற்காணும் மூன்று உரைகளிலும் இந்தப் பொருட்கள் பயன்படுத்தப் படவில்லை. இப்பாடலில் கூறப்படாத பொருட்களை எல்லாம் (வலிமை,புகழுடம்பு,பூத உடம்பு,வறுமை,அழியாத்தன்மை முதலாயின) வலிந்து சேர்த்துக் கொண்டு அவரவர் விருப்பம்போல ஒரு சப்பைக்கட்டு கட்டி இருக்கிறார்கள். பாடலில் கூறப்பட்டுள்ள பொருட்களை விடுத்து இவர்களே கற்பனையால் வேறுபல பொருட்களைச் சேர்த்துக் கொண்டு உரை கூறி இருப்பதில் இருந்தே இந்த உரைகள் அனைத்தும் தவறு என்பது புலப்படும்.

சரி, இந்தத் தவறுகளுக்குக் காரணம் என்ன?. முதல் அடியில் உள்ள ஒரே ஒரு எழுத்துப் பிழை தான். இந்தப் பிழையினால் தான் பலரும் பலவாறாகப் பொருள் கூற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது. 'கேடும்' என்ற சொல்லில் தான் அந்தப் பிழை இருக்கிறது.

திருத்தம்:

முதல் அடியில் வரும் 'கேடும்' என்ற சொல்லுக்குப் பதிலாக 'கோடும்' என்று வரவேண்டும். கோடு என்னும் சொல்லுக்குப் பல பொருட்கள் உண்டு. இங்கே 'கோடு' என்னும் சொல் 'சங்கினை அதாவது நத்தையின் கூட்டினைக்' குறிக்கும்.

நிறுவுதல்:

' பிறந்தவர் யாவரும் ஒருநாள் இறப்பது திண்ணம் என்றாலும் மிகச்சிலரே இறந்த பின்னும் தம் புகழை புவியினில் நிலைநாட்டிச் செல்கின்றனர்' என்னும் உயரிய கருத்தினை உணர்த்த நத்தையின் வாழ்க்கையை இக்குறளில் எடுத்துக் காட்டாகக் கூறுகிறார் வள்ளுவர். நத்தையின் வாழ்க்கை நாம் அறிந்த ஒன்று தான். செல்லும் இடமெல்லாம் தனது கூட்டினைத் (சங்கினை) தானே தாங்கிச் செல்லும் இந்த அற்புதப் பிறவி இறந்த பின்னர் தனது கூட்டினை தனது அடையாளமாக விட்டுச் செல்கிறது. மனிதரிலும் இப்படிச் சிலர் இருக்கிறார்கள். இவர்கள் செல்லும் இடமெல்லாம் 'இவரது புகழ்' என்னும் கூட்டினை இவர்கள் அறியாமலே சுமந்து கொண்டு செல்கிறார்கள். இவர்கள் இறந்த பின்னரும் 'இவரது புகழ்' என்னும் கூடாகிய சங்கு இப்பூவுலகில் நிலைபெற்று விடுகிறது.

இவ்வளவு பெருமை வாய்ந்த இறப்பு அதாவது இறந்தபின்னரும் 'நத்தையின் சங்கு போல' எஞ்சி நிற்கும் புகழை புவியினில் விட்டுச் செல்லும் இறப்பு எல்லோருக்குமா வாய்க்கிறது? இல்லையே. மிகச் சிலருக்குத் தானே வாய்க்கிறது. ஓரறிவு உள்ள முல்லைக் கொடியின் துயரத்தைக் கண்டு மனமிரங்கி தனது தேரினைக் கொடுத்த பாரி போன்ற வள்ளல்களைத் தான் வள்ளுவர் 'வித்தகர்' என்று கூறுகிறார்.

வித்து என்ற சொல் நீர் அல்லது ஈரப்பசையைக் குறிக்கும். இதைப் பற்றி ' வித்தும் இடல் வேண்டும் கொல்லோ ' என்ற ஆய்வுக் கட்டுரையில் ஆதாரங்களுடன் காணலாம். இந்த ஈரத்தை நெஞ்சில் உடையவர்களையே வித்தகர் ( வித்து + அகர்) என்று வள்ளுவர் கூறுகிறார்.

இந்த வித்தகர் என்போர் செயற்கரிய செயல் செய்த பெரியோர்; தன்னலம் கருதாத கருணை உள்ளம் கொண்ட ஆன்றோர் ஆவர். இத்தகைய மக்கள் இறந்த பின்னரும் இவர்களது புகழ் என்னும் சங்கு இப்பூமியில் ஒலித்துக் கொண்டே இருக்கும் என்ற அற்புதமான கண்ணோட்டத்தினால் தான் புகழை சங்கோடு ஒப்புநோக்குகிறார் வள்ளுவர்.

இனி வள்ளுவர் கூறவரும் சரியான கருத்து இது தான்: ' நத்தையின் கூட்டினைப் போல எஞ்சி நிற்கும் புகழைத் தருகின்ற இறப்பும் வித்தகர்களுக்கே அன்றி மற்றவருக்கு இல்லை.'

சரியான பாடல்:

' நத்தம்போல் கோடும் உளதாகும் சாக்காடும்
வித்தகர்க் கல்லால் அரிது.'
-------------------------------வாழ்க தமிழ்!-----------------------------------------

8 கருத்துகள்:

 1. உண்மை தான். இல்லாத கருத்துக்களைத் தங்களின் புலமை வாயிலாக சேர்த்திருக்கிறார்கள் என்பது தெளிவாகப் புலனாகின்றது.

  பதிலளிநீக்கு
 2. மேற்படிக் கருத்தில் உள்ள பிழை:
  //இல்லாத கருத்துக்களைத் தங்களின் புலமை வாயிலாக சேர்த்திருக்கிறார்கள்//

  திருத்தம்:
  இல்லாத கருத்துக்களைத் தங்களின் புலமை வாயிலாக சேர்த்திருக்கிறீர்கள்.

  மேற்சொன்ன கருத்தில் மேற்படி ஒரேஒரு எழுத்துதான் பிழை.

  பதிலளிநீக்கு
 3. ஐயா பெயரில்லாதவரே கட்டுரையை முழுமையாகப் படித்துவிட்டு கருத்துரை கூறலாமே. அது சரி, இன்னுமா தங்களுக்குப் பெயர் வைக்கவில்லை? கஷ்ட காலம்!

  பதிலளிநீக்கு
 4. சரவணன்,
  இப்போது தான் தெரிகிறது "ஏன் தமிழ் அறிஞர்கள் யாரும் இத்தகைய ஆராய்ச்சியை மேற்கொள்வதில்லை " என்று. கடின முயற்சியின் பலனாக இத்தகைய அறிய பொருளை விளக்கினாலும், பெயரில்லாத சிலர் வந்து அதை நகைப்புக்குள்ளாக்கி விடுவர் என்று தெரிந்து தான் சர்வ சாதாரணமாக எதாவது ஒரு உரையை சொல்லி விட்டு விடுகிறார்கள்.

  பதிலளிநீக்கு
 5. சரவணன் தங்கள் ஆய்வு வியக்க வைக்கிறது. காலம் காலமாக..பழகி வந்த ஒரு விஷயத்தை உடனே ஏற்கவில்லை ஆயினும் யோசிக்கவாவது செய்யலாம். அதுவும் செய்யாமல் தங்கல் முயற்சியை இகழ்வதுபோல் யாரேனும் செயல்பட்டால் மனதில்கொள்ள வேண்டாம்.
  உலகை ஒருகாலத்தில் தட்டை என்றுதான் சொன்னார்கள். பின் உருண்டையாகவில்லையா..?
  வளர்க தங்கள் ஆய்வு.

  பதிலளிநீக்கு
 6. செய்யுளில் எந்தக் குறையும் இல்லை. ஏற்கனவே கூறப்பட்ட பொருளிலும் எந்தக் குறையும் இல்லை. எதையாவது கண்டுபிடித்தே ஆகவேண்டும் என்ற ஆர்வத்தின் காரணமாக நீங்கள் இது போன்று எதையாவது சொல்கிறீர். இது ஒருவகையான ஆர்வக்கோளாறு. தமிழ் மொழியின் மீதுள்ள பகைமையின் காரணமாகவும் சுஜாதா போன்ற சிலர் இவ்வாறு எழதுவது உண்டு. அது உள் நோக்கம் கொண்டது. கேடும் உளதாகும் எவ்வாறு என்பதைப் சிந்தித்துப் புரிந்து கொள்ளவும். பிறகு அதனை வித்தகர்க்கு ஒப்பிட்டு கொள்ளவும். கேடும் என்பதில் உள்ள உம்மைக்கு என்ன பொருள் கொண்டீர்? திருத்தும் செய்கின்ற அளவுக்கெல்லாம் உடனே வந்துடாதீங்க. எல்லா அரைகுறைகளும் ரொம்பவும் அவசரப்படுவாங்க. அதிலும் இப்ப தமிழ் மொழி கேப்பார் இல்லாத மொழியாகிப் போச்சா.... அப்புறம் என்ன ...! உங்கள மாதிரி ஆளுங்க எல்லாம் பொறப்பட்டு வந்திடுவாங்க. அப்படி வந்த ஒருவன்தான் திருவிளையாடல் புராணம் குறிப்பிடும் தருமி என்ற பிராமணன்.
  - தமிழ்ச்சுடர்

  பதிலளிநீக்கு
 7. தமிழ்ச்சுடரே! உங்கள் எண்ணம் மிகத் தெளிவாகப் புரிந்துவிட்டது. முதலில் நான் தருமி போல் பிராமணன் அல்லன். தருமி கொண்டுவந்த தமிழில் பிழை இருப்பதை அறிந்து சினம் கொண்ட நக்கீரன் நான். சொன்ன கருத்துக்களைச் சிறிதும் புரிந்துகொள்ளாமல் இத்தகைய நச்சு எண்ணங்களுடன் தயவுசெய்து எங்கேயும் கருத்துரைகளை வெளியிடவேண்டாம்.

  பதிலளிநீக்கு
 8. தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
  தோன்றலின் தோன்றாமை நன்று

  பிறர் அறியுமாறு அறிமுகமானால் புகழ் மிக்கவராய் அறிமுகம் ஆகுக; புகழ் இல்லாதவர் உலகு காணக் காட்சி தருவதிலும், தராமல் இருப்‌பதே நல்லது.

  240 வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய
  வாழ்வாரே வாழா தவர்

  தம்மீது பழி இன்றிப் புகழோடு வாழ்பவரே உயிர‌ோடு வாழ்பவர்; புகழ் இன்றிப் பழியோடு வாழ்பவர் இருந்தும் இல்லாதவரே.

  Mohamed meaning "praised, commendable, laudable"

  37: 78. பின் வருவோரிடம் அவரது புகழை நிலைக்கச் செய்தோம்.
  79. அகிலத்தாரில் நூஹ் மீது ஸலாம் உண்டாகும்!
  80. நல்லோருக்கு இவ்வாறே நாம் கூலி கொடுப்போம்

  37:108. பின்வருவோரில் அவரது புகழை நிலைக்கச் செய்தோம்.
  109. இப்ராஹீமின் மீது ஸலாம்159 உண்டாகும்!
  110. நன்மை செய்வோருக்கு இவ்வாறே கூலி வழங்குவோம்

  37:119. பின்வருவோரில் அவ்விருவரின் புகழை நிலைக்கச் செய்தோம்.
  120. மூஸாவின் மீதும், ஹாரூன் மீதும் ஸலாம் உண்டாகும்!
  121. நன்மை செய்வோருக்கு இவ்வாறே நாம் கூலி வழங்குவோம்

  37:129. பின்வருவோரில் அவரது புகழை நிலைக்கச் செய்தோம்.
  130. இல்யாஸீன் மீது ஸலாம் உண்டாகும்!
  131. நன்மை செய்வோருக்கு இவ்வாறே நாம் கூலி கொடுப்போம்.

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.