திங்கள், 25 மே, 2009

இடம் கொடுத்தால் மடம் பிடுங்குவான்

பழமொழி:

இடம் கொடுத்தால் மடம் பிடுங்குவான்

தற்போதைய பொருள்:

தங்குவதற்கு மடத்தில் (அ) வீட்டில் சிறிது இடம் கொடுத்தால் நாளடைவில் மடம் (அ) வீடு முழுவதையும் பறித்துத் தனதாக்கிக் கொள்வான்.

தவறு:

முதலில் நாம் அறிந்துகொள்ள வேண்டியது மேற்காணும் தொடர் ஒரு பழமொழியே அல்ல; ஒரு விடுமொழி என்னும் உண்மையினை. விடுமொழி என்றால் என்ன என்று அறியும் முன்னர் இக் கருத்து எவ்வாறு தவறாகும் என்று பார்ப்போம். மடம் என்றால் தங்கும் விடுதி போல ஒரு பொது இடம். பழங்காலத்தில் மக்கள் பெரும்பாலும் கால்நடையாகவே பயணம் செய்து அயலூருக்குச் செல்வர். அப்படிச் செல்லும்போது நடந்துவந்த களைப்பு தீரவும் மறுபடியும் பயணத்தைத் தொடர்வதற்குத் தேவையான புத்துணர்ச்சியைப் பெறவும் இந்த மடத்தில் வந்து சிலநாட்கள் தங்குவார்கள். இக்காலத்திலும் பேருந்து, நாலாழி போன்ற ஊர்திகளில் பயணம் செய்கிற வெளியூர்க்காரர்கள் இந்த மடத்தில் வந்து தங்குகிறார்கள். இப்படித் தங்குகிற பயணிகளில் ஒருசிலர் அந்த மடத்தையே மெல்லமெல்ல தனக்குச் சொந்தமாக்கிக் கொள்கிறார்கள். அதுவும் எப்படி?. மடத்திற்குச் சொந்தக்காரர்களிடம் இருந்து வலுக்கட்டாயமாகப் பறித்துக் கொள்கிறார்கள் என்று பொருள் உரைக்கிறது இந்தத் தொடர். இக் கருத்து பொருத்தமானதா என்றால் பொருந்தாது. இது எவ்வாறு என்று பார்ப்போம்.

பொதுவாக மடம் என்பது பலருக்கும் இடமளிக்கக் கூடிய வகையில் ஒரு சாதாரண வீட்டைவிட பெரிய அளவில் தான் இருக்கும். இங்கே பலரும் தங்கள் குடும்பத்துடன் தாராளமாகப் பலநாட்கள் தங்கிச் செல்லலாம். இப்படி வருகிற பயணிகள் யாவருக்கும் ஒரு குடும்பமும் இருக்கும் ஒரு வீடும் இருக்கும். எனவே இவர்கள் இந்த மடத்தைத் தமது சொந்தமாக்கிக் கொள்ள விரும்ப மாட்டார்கள். சரி, குடும்பமும் வீடும் இல்லாத ஒருவன் மடத்தை பிடுங்கிக் கொள்ள விரும்புவானா?. அவனும் விரும்பமாட்டான். ஏனென்றால் குடும்பமும் வீடும் இல்லாதவன் யார்? ஒரு துறவி தானே. முற்றும் துறந்த துறவிக்கு மடத்தைப் பிடுங்கும் ஆசை மட்டும் ஏன் வரப்போகிறது?. அன்றியும் மடத்தைப் பிடுங்குவது ஒன்றும் அவ்வளவு எளிதான செயல் அல்ல. அதற்கு முதலில் அந்த மடத்தில் தங்கி இருக்கும் பயணிகளை எல்லாம் துரத்தவேண்டும். உடல்வலிமையும் தீய எண்ணங்களும் கடுமையும் மிக்க கொடியவன் ஒருவனால் அன்றி ஒரு துறவியால் இத்தகைய கொடிய செயலைச் செய்யவே இயலாது. இப்படிப்பட்ட கொடியவர்களும் மடத்தில் இடம்கொடுத்தால் மெல்லமெல்ல அந்த மடத்தில் தங்கியுள்ளோரின் பொருட்களைத் தான் அடைய விரும்புவார்களே ஒழிய மடத்தையே பிடுங்க விரும்பமாட்டார்கள். 

மடத்துக்குப் பதிலாக வீடு என்று எடுத்துக் கொண்டாலும் இக் கருத்து பொருந்தாது. ஏனென்றால் நன்கு தெரிந்தவர்களுக்குத் தான் வீட்டில் நாட்கணக்கில் தங்க இடம் கொடுப்பார்களே அன்றி அறிமுகம் இல்லாதவர்களுக்குப் பெரும்பாலும் கொடுப்பது இல்லை. அப்படியே கொடுத்து அவர்கள் தீயவர்களாய் இருந்தால் அந்த வீட்டில் இருக்கும் பொருட்களைத் தான் களவாடிச் செல்வார்களே ஒழிய அந்த வீட்டையே பிடுங்க முயலமாட்டார்கள். எனவே இத் தொடருக்கு மேற்கண்ட நேரடியான பொருளைக் கொள்வது தவறு என்று அறியலாம். இனி இத் தொடர் உணர்த்தும் மறைமுகமான பொருள் என்ன என்று காணலாம்.

திருத்தம்:

மேற்காணும் தொடர் உண்மையில் ஒரு விடுமொழி ஆகும். ஒரு காலத்தில் விடுகதையாய் இருந்து இன்னொரு காலத்தில் பழமொழியாய் மாறியவைகளே விடுமொழிகள் ஆகும். மேற்காணும் தொடர் ஒரு காலத்தில் 'இடம் கொடுத்தால் மடம் பிடுங்குவான். அவன் யார்?' என்று விடுகதையாகப் பயன்படுத்தப்பட்டது. இந்த விடுகதைக்குப் பதில் 'நோய்க்கிருமி' ஆகும். காலப்போக்கில் இந்த விடுகதை பழமொழியாக மாறிவிட்டது. இது எவ்வாறு என்று கீழே காணலாம்.

நிறுவுதல்:

விடுகதைகளும் பழமொழிகளும் நாட்டுப்புற மக்களின் வாழ்வுடன் பின்னிப் பிணைந்தவை என்பதை நாம் நன்கு அறிவோம். விடுகதைகளுக்கு என்று ஒரு தனிவடிவமும் பழமொழிகளுக்கென்று ஒரு தனி வடிவமும் உண்டு. என்றாலும் சில தொடர்களில் இவை இரண்டும் ஒன்றே போலத் தோன்றுவதும் உண்டு. இதற்குக் காரணம் விடுகதைகளில் வருகின்ற கேள்விகளான 'அவன் யார்?, அது என்ன?, அவள் யார்?' போன்றவை அவற்றில் விடுபட்டிருப்பதே ஆகும். இத்தகைய தொடர்களே 'விடுமொழிகள்' என்று அழைக்கப்படும். இந்த விடுமொழிகளில் ஒன்று தான் மேற்கண்ட தொடர் ஆகும். இதுபோலப் பல விடுமொழிகள் வழக்கில் உள்ளன. அவற்றில் சில மட்டும் கீழே காட்டப்பட்டு உள்ளன. 

'இடம் கொடுத்தால் மடம் பிடுங்குவான்.'
'சொல்லாது பிறவாது அள்ளாது குறையாது.'
'எடுக்கிறது பிச்சை; ஏறுகிறது பல்லக்கு.'
'அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியிலும் குடை பிடிப்பான்.'

இனி நாம் மேற்கொண்டிருக்கும் விடுமொழி எவ்வாறு 'நோய்க்கிருமி' யைக் குறிக்கும் என்று பார்ப்போம். நோய்கள் யாவும் அழையா விருந்தாளிகள் என்று நாம் அறிவோம். ஏனென்றால் நம்மில் யாரும் நோயை விரும்பி வரவழைத்துக் கொள்வதில்லை. உணவு, நீர், காற்று ஆகியவற்றின் மூலம் நோய்க்கிருமிகள் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்குப் பரவுகிறது. இப்படிப் பரவுகிற கிருமிகள் நம் உடம்பில் புகுந்தவுடன் நம் உடம்பில் ஒரு எதிர்ப்பாற்றல் இல்லாத பகுதியைத் தேர்ந்தெடுத்து அங்கே தங்கி பல்கிப்பெருகத் துவங்கிறது. இப்படிப் பெருகும் கிருமிகள் நாளடைவில் உடல்முழுவதும் பரவுகின்றன. இதனால் நோய் முற்றி நம் உடல் நம் வசம் இல்லாமல் நோயின் வசமாகிறது. விளைவு மரணம்.

கிருமிகள் நம் உடலில் புகவே புகாத வண்ணம் காப்பது என்பது நடைமுறையில் இயலாத செயல் ஆகும். ஆனால் புகுந்த கிருமிகளை நம் உடலில் தங்க அனுமதிக்காமல் இருப்பது நம் கையில் தான் இருக்கிறது. தங்குவதற்கு உடலில் சிறிது இடம் கொடுத்தாலும் நாளடைவில் கிருமிகள் நமது உடலையே நம்மிடம் இருந்து பிடுங்கித் தன் வசப்படுத்தி விடும். இதனால் தான் ஔவையாரும் தனது ஆத்திச்சூடியில் 'நோய்க்கு இடம் கொடேல்' என்று அறிவுறுத்துகிறார்.கிருமிகளின் இத் தன்மையினை அடிப்படையாகக் கொண்டு எழுந்ததே இந்த விடுகதை ஆகும். 


இந்த விடுகதையே நாளடைவில் தனது 'அவன் யார்?' என்ற கேள்வித் தொடரினை இழந்து பழமொழியாகி விட்டது. இறுதியாக ஒரு உண்மையினையும் நாம் இங்கே அறிந்து கொள்ளவேண்டும். விடுமொழிகளை விடுகதைகளாக மறுபடியும் மாற்றமுடியும் என்பதே அந்த உண்மை ஆகும்.

...............................வாழ்க தமிழ்!.......................

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.