வெள்ளி, 8 மே, 2009

பசப்பும் பசலையும்
முன்னுரை:

பசப்பு என்ற சொல் சங்ககாலத்தில் இருந்து இன்றுவரை பயன்படுத்தப்பட்டுவரும் பல சொற்களில் ஒன்று. ஆனால் இச்சொல்லுக்கு நாம் கொண்டிருக்கும் பொருள்தான் தவறாக உள்ளது. இச் சொல்லின் உண்மையான பொருள் பற்றியும் அது எவ்வாறெல்லாம் திரிந்து வேறுபல பொருட்களுக்கு இடமளித்தது என்பது பற்றியும் இக் கட்டுரையில் காணலாம்.

சொல்வடிவங்கள்:

பசப்பு என்ற சொல் இலக்கியங்களில் பல்வேறு வடிவங்களில் பயன்படுத்தப் பட்டுள்ளது. அவற்றைக் கீழ்க்காணுமாறு வகைப்படுத்தலாம்.

1.        பசலை            2.  பசப்பு,           3.  பசத்தல்   4. பயலை.    5.. பயப்பு.

அகராதிகள் காட்டும் பொருட்கள்:

தமிழ் அகராதிகள் பசப்பு என்ற சொல்லின் பல்வேறு வடிவங்களுக்கு என்ன பொருள் கூறுகின்றன என்று கீழே காணலாம்.

சென்னை தமிழ்ப் பேரகராதி

பசப்பு     : பாசாங்கு, பச்சை நிறம், நிறமாற்றம்,ஈரப்பற்று, சுகநிலை, வளம்.
பசப்புதல்  : ஏமாற்றுதல், அலப்புதல்.
பசலை    : அழகுத் தேமல்; பொன் நிறம், நிறவேறுபாடு, 
            இளமை, கவலையின்மை,சஞ்சலம், வருத்தம்.
பயப்பு     : பயன், கிருபை, நிறம்வேறுபடுகை, பொன்னிறம்.
பயலை   : தலைவன் பிரிவால் தலைவிக்கு உண்டாகும் நோய்.

தற்போதைய நடைமுறைப் பொருள்:

இக்காலத்தில் 'பசப்பு' என்ற சொல்லை ஒரே ஒரு பொருளில் பயன்படுத்துகின்றனர். 'சும்மா அழுது பசப்பாதே', 'அவள் ஒரு பசப்புக்காரி' ஆகிய தொடர்கள் நடைமுறையில் உள்ளவையே. இத்தொடர்களில் வரும் பசப்பு என்ற சொல் 'நடித்தல், ஏமாற்றுதல்' ஆகிய பொருட்களில் பயன்படுத்தப் பட்டு உள்ளது.

சொல் பயன்பாடு:

பசப்பு, பசலை, பசத்தல், பயப்பு, பயலை ஆகிய சொற்கள் நூற்றுக்கும் அதிகமான பாடல்களில் பயின்று வந்துள்ளன. அத்தனை பாடல்களையும் ஈண்டு விரித்தால், கட்டுரை பெரிதாகும் என்பதால் சில பாடல்கள் மட்டும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

பாடு இன்றி பசந்த கண் பைதல பனி மல்க - கலி 16/1
பசந்த மேனியொடு படர் அட வருந்தி - புறம் 159/6
பல்லோர் அறிய பசந்தன்று நுதலே - ஐங் 55/4
பாஅய் பாஅய் பசந்தன்று நுதல் - கலி 36/12
தாம் பசந்தன என் தட மென் தோளே - குறு 121/6
அளியவோ அளிய தாமே ஒளி பசந்து - ஐங் 455/3,4
நன் மா மேனி பசப்ப நம்மினும் சிறந்த அரும் பொருள் தரற்கே - குறு 331/7,8
சிறு மெல் ஆகம் பெரும் பசப்பு ஊர - நற் 358/2
நுதல் பசப்பு இவர்ந்து திதலை வாடி - குறு 185/1
பல் இரும் கூந்தல் பசப்பு நீ விடின் - ஐங் 429/1
மை இல் வாள் முகம் பசப்பு ஊரும்மே - கலி 7/8
பாம்பு சேர் மதி போல பசப்பு ஊர்ந்து தொலைந்த_கால் - கலி 15/17
பழி தபு வாள் முகம் பசப்பு ஊர காணும்_கால் - கலி 100/18
ஆக மேனி அம் பசப்பு ஊர - அகம் 333/2
சிறு தாம்பு தொடுத்த பசலை கன்றின் - முல் 12
அடு பால் அன்ன என் பசலை மெய்யே - நற் 175/9
பாசி அற்றே பசலை காதலர் - குறு 399/2
மெல் இறை பணை தோள் பசலை தீர - ஐங் 459/1
பசலை நிலவின் பனி படு விடியல் - புறம் 392/3
மென் முலை மேல் ஊர்ந்த பசலை மற்று என் ஆம்கொல் - திணை50:3 22/1
செம் சுணங்கின் மென் முலையாய் சேர் பசலை தீர் இஃதோ - திணை50:3 24/1
அந்தி என்னும் பசலை மெய்யாட்டி - மணி 5/140
பனி கொள் மா மதி போல் பசப்பு ஊர யான் - சிந்தா:6 1510/3
பரந்து மீன் அரும்பிய பசலை வானகம் - அயோ:5 6/1
இல் நிற பசலை உற்று இருந்த மாதரின் - கிட்:10 116/2
நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும் பசந்து பனி வாரும் கண் - குறள் 124:2
உவக்காண் எம் காதலர் செல்வார் இவக்காண் என் மேனி பசப்பு ஊர்வது - குறள் 119:5

பசப்பு - புதிய பொருள்:

பசத்தல் என்னும் சொல் குறிக்கும் முதன்மைப் பொருள் ' கலங்குதல் / நெகிழ்தல் ' என்பது ஆகும்.

பசலை, பசப்பு ஆகிய சொற்கள் குறிக்கும் முதன்மைப் பொருள்கண்ணீர்ஆகும்.

இந்த முதன்மைப் பொருட்களிலிருந்து ‘ ஒளி மழுங்குதல் / குறைதல் ‘, ‘ வாடுதல் ‘ ‘நிறம் மாறுதல்’ ஆகிய இரண்டாம் நிலைப் பொருட்களும் தோன்றும். இது எவ்வாறெனில், கண்கலங்கி தொடர்ந்து அழும்போது கண்களின் ஒளியானது மழுங்கி அதில் ஒரு வாட்டமும் நிறமாற்றமும் தோன்றும்.

இப் புதிய பொருட்கள் எவ்வாறு சரி என்பதைக் கீழே ஆதாரங்களுடன் காணலாம்.

நிறுவுதல்:

மேலே காட்டப்பட்ட பாடல்கள் அனைத்தையும் நோக்கினால் ஏறத்தாழ அவை அனைத்தும் காதல் பற்றிய பாடல்கள் என்று அறியலாம். அதிலும் குறிப்பாக காதலன் காதலியை விட்டுப் பிரிகின்ற அல்லது பிரிந்த சூழலைப் பற்றிப் பாடுபவை. காதலன் காதலியை விட்டுப் பிரியும் போது அல்லது பிரிந்த போது காதலி என்ன செய்வாள்?. அழுது புலம்புவாள். இது தான் உலகெங்கும் இன்றளவும் நடக்கின்ற நிகழ்ச்சி. இதைத் தான் பல சொற்களால் பலவிதமாகப் புலவர்கள் பாடி உள்ளனர்.

இதை விடுத்து காதலனின் பிரிவினால் காதலியின் மேனியில் நிறம் மாறியது என்பதோ பசுமையாகியது என்பதோ பொன்னிறமானது என்பதோ அழகுத் தேமல் உண்டானது என்பதோ நாம் எங்குமே காணாதவைகளாகும். இத்தகைய நிகழ்வுகள் உலக மாந்தர் எவருக்கும் ஒவ்வாதவை என்பதுடன் இப்படிப்பட்ட நம்பிக்கைகள் சங்க காலத் தமிழ்ப் பெண்களை ஏதோ வேற்றுக்கிரகவாசிகள் போல நினைக்கச் செய்துவிடும்.

ஆக, பசப்பு, பசலை, பசத்தல் ஆகிய சொற்கள் யாவும் கண்கள் கலங்குவதை அதாவது அழுகையினைத் தான் குறித்து வந்திருக்கும் என்று முடிவு செய்யலாம். இக் கருத்தினை நிறுவும் முன்னர் பசலையின் தன்மைகளாக இலக்கியங்கள் காட்டும் கருத்துக்களையும் காணலாம்.

கண்ணுடன் தொடர்புடையது பசலை:

பசலையானது கண் என்னும் உறுப்புடன் தொடர்புடையது என்று கீழ்க்காணும் பாடல்கள் கூறுகின்றன.

ஆய்மலர் உண்கண் பசலை - அகநா.பா.எண்:52
என்செயப் பசக்கும் தோழி என் கண்ணே - ஐங்கு.பா.எண்.169
ஏதிலாளர்க்கு பசந்த என் கண்ணே - ஐங்கு.பா.எண்: 34
கொன்றைப் பூவின் பசந்த உண்கண் - ஐங்கு.பா.எண்: 500
ஆய்மலர் உண்கண் பசப்ப - ஐங்கு.பா.எண்: 242
உண்கண் பசப்பது எவன்கொல் அன்னாய் - ஐங்கு.பா.எண்: 24
பசப்பு அணிந்தனவால் மகிழ்ந என் கண்ணே - ஐங்கு.பா.எண்: 45
பல்இதழ் உண்கண் பசத்தல் மற்று எவனோ - ஐங்கு.பா.எண்: 170
பசக்குவ மன்னோ என் நெய்தல் மலர் அன்ன கண் - கலி.பா.எண்: 142
பொன்எனப் பசந்த கண் போது எழில்நலம் செல - கலி.பா.எண்: 77
பல்இதழ் மலர் உண்கண் பசப்ப - கலி.பா.எண்: 45
அரிமதர் உண்கண் பசப்ப - கலி.பா.எண்: 82
ஆய் இதழ் உண்கண் பசப்ப - கலி.பா.எண்: 112
பசலை ஆர்ந்தன குவளையங் கண்ணே - குறு.பா.எண்: 13
காமம்கொல் இவள் கண் பசந்ததுவே - நற்.பா.எண்: 35
பூப்போல் உண்கண் பசந்து - புற.பா.எண்:96
பசப்புற்றன பேதைப் பெருமழைக் கண் - திருக்குறள் பா.எண்: 1239
கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றே - திருக்குறள் பா.எண்: ௧௨௪0

தம் மீது அன்புடையோர் தம்மைவிட்டுப் பிரியும்போது கண்கள் என்ன செய்யும்?. பொசுக்கென்று கலங்கி கண்ணீர் விடுமன்றோ. இதைத்தவிர இச் சூழலில் கண்கள் செய்யும் பணி வேறெதுவும் இல்லை. அதுவும் பெண்களைப் பொறுத்தமட்டிலும் கண்கள் அதிகம் துன்புறுவது அழுகையினால் தான். எனவே இப் பாடல்களில் வரும் பசலை / பசப்பு / பசத்தல் என்பவை அழுகையைத் தான் குறிக்கும் என்பதை உறுதியாகக் கூறலாம். இதனை மேலும் உறுதிப்படுத்த கீழ்க்காணும் சான்றுகளையும் காணலாம்.

பசத்தல் வினையின் பயன் என்ன?

மேற்பாடல்களில் கண்களானவை பசத்தல் தொழிலுடன் தொடர்புடையவை என்று கண்டோம். இனி, இத் தொழிலினால் விளையும் பயன் என்ன என்று அறிவதன் மூலம் பசத்தலின் உண்மைப் பொருளை உறுதிசெய்து கொள்ளலாம்.

பாடு இன்றி பசந்த கண் பைதல பனி மல்ககலி – 16
(பொருள்: உறக்கமின்றி அழுத கண்களில் கண்ணீர் நிறைய .........)

நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும் பசந்து பனி வாரும் கண் - குறள் 124:2
( பொருள்: எம் காதலர் எமக்கு அருளாமையினை பிறர்க்கு உரைப்பது போல எம் கண்கள் அழுது நீர் சொரிகின்றன. )

நயந்தோர் உண்கண் பசந்து பனிமல்க - ஐங்கு.பா.எண்: 37
( பொருள்: காதலித்தாரின் மையுண்ட கண்கள் அழுது கண்ணீர் நிறைய .....)

பனி மலர் நெடும் கண் பசலை பாய – ஐங்கு. 477
( பொருள்: பனிநீர் நிறைந்த மலர் போல நெடிய கண்களில் இருந்து கண்ணீர் பாயவும்….)

மேற்காணும் பாடல்களில் வரும்பனிஎன்ற சொல்லுக்கு நீர் என்ற பொருள் மட்டுமின்றி கண்ணீர்என்ற பொருள் இருப்பதாகவும் அகராதிகள் கூறுகின்றன. அதுமட்டுமின்றி, கண்கள் பசக்கும்பொழுது கண்களில் கண்ணீர் பெருகுவதாக மேற்காணும் பாடல்கள் அனைத்தும் கூறுவதைக் காணலாம். இதிலிருந்து, கண்களின் பசத்தலாகிய தொழில் என்பது அழுகையினையே அன்றி வேறெதையும் குறிக்காது என்பது உறுதியாகிறது. இதை மேலும் சில உவமை விளக்கங்களின் மூலம் உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.

பாசி போன்றது பசலை:

கீழ்க்காணும் குறுந்தொகைப் பாடல் பசலையினை பாசியுடன் ஒப்பிட்டுக் கூறுகிறது.

ஊர் உண் கேணி உண்துறை தொக்க பாசி அற்றே பசலை காதலர்
தொடுவுழி தொடுவுழி நீங்கி விடுவுழி விடுவுழி பரத்தலானே - குறு - 399.

பொருள்: ஊர் உண்ணும் நீரினை உடைய கிணற்றுக்கருகிலே தேங்கிய நீரில் படர்ந்திருக்கும் பாசியினைப் போல காதலர் என்னைத் தொடும்போதெல்லாம் நீங்கி, விடும்போதெல்லாம் கண்ணை மூடி மறைக்கின்றது கண்ணீர்.

இப்பாடலில் இருக்கும் அழகான உவமைகளைப் பாருங்கள். நீரினை கண்ணுக்கும், நீரின் மேல் படர்ந்திருக்கும் பாசியினை கண்ணின் மேல் ஊரும் கண்ணீருக்கும் ஒப்பிட்டுக் கூறுகிறார் புலவர். எவ்வாறெனில், ஏடு போல நீரின்மேல் மெலிதாகப் படர்ந்திருக்கும் பாசியினை விரலால் தொட்டால் பாசி விலகி தெளிவான நீர் தெரியும். விரலை எடுத்துவிட்டால், மறுபடியும் அந்த நீரை பாசி மூடி மறைத்துக்கொள்ளும். அதைப்போல, காதலன் காதலியைத் தனது விரலால் தொடும்போது, காதலியின் கண்ணீர் விலகி கண்கள் மகிழ்ச்சியால் ஒளிர, விரலை எடுத்தவுடன், மறுபடியும் கண்ணீர் பெருகி கண்ணை மறைத்ததாம். என்ன அழகான உவமை!.

இதே கருத்தினை கீழ்க்காணும் கலித்தொகைப் பாடலும் கூறுவதைப் பாருங்கள்.

விடுவழி விடுவழி சென்று ஆங்கு அவர் தொடுவழி தொடுவழி நீங்கின்றால் பசப்பேகலி - 130

இப் பாடல்களில் இருந்து இன்னொரு கருத்தும் தெரிந்துகொள்ள வேண்டும். அதாவது, பெண்களின் கண்களில் கண்ணீர் எப்போது வரும் எப்போது போகும் என்று யாராலுமே எதிர்பார்த்துச் சொல்லமுடியாது. காரணம், பெண்களுக்குப் பொதுவாக ஆண்களைக் காட்டிலும் இளகிய மனம் என்பதால் அவர்களால் பிரிவுத் துயரம் உள்பட எந்த ஒரு துயரத்தையும் தாங்க முடியாது. துன்பத்தின்போது கண்களில் குபுக்கென்று தோன்றி பெருக்கெடுத்து ஓடும் கண்ணீர், சமாதானமாகிவிட்டாலோ, மகிழ்ச்சி வந்துவிட்டாலோ, இருந்த இடம் தெரியாமல் மாயமாய் மறைந்துவிடும். பெண்களுக்கே உண்டான இச் சிறப்புப் பண்பினை திருவள்ளுவரும் உறுதிப்படுத்துகிறார். அதனைக் கீழே காணலாம்.

 இருள் போன்றது பசலை:

விளக்கு அற்றம் பார்க்கும் இருளே போல் கொண்கன்
முயக்கு அற்றம் பார்க்கும் பசப்பு - குறள் 119:6

பொருள்: விளக்கு அணைவதை எதிர்பார்க்கும் இருளினைப் போல, காதலனின் தீண்டல் நீங்குவதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது கண்ணீர்.

இப் பாடலில் வரும் அழகான உவமைகளைப் பாருங்கள். விளக்கினை கண்ணுக்கும், விளக்கினைச் சூழும் இருளுக்குக் கண்ணைச் சூழ்கின்ற கண்ணீருக்கும், விளக்கின் ஒளியினை அன்பினுக்கும் உவமையாக்கி இருக்கிறார் வள்ளுவர். எவ்வாறெனில், விளக்கை ஏற்றியதும் விளக்கில் தோன்றும் ஒளியானது இருளைத் தூரமாக ஓட்டிவிடும். சற்றுநேரம் கழித்து, விளக்கின் ஒளி அணைந்ததும், விளக்கினை மீண்டும் இருள் சூழ்ந்துவிடும். அதைப்போல காதலரின் அன்புமிக்க தீண்டலால் காதலியின் கண்ணீர் நீங்கி, கண்கள் மகிழ்ச்சியால் விளக்கு போல ஒளிர, அன்பு நீங்கியதும் மறுபடியும் இருளாகிய கண்ணீர் பெருகி கண் ஆகிய விளக்கு அணைந்துவிடும். எவ்வளவு அழகான உவமை இல்லையா ?

இதை இன்னொரு கோணத்தில் இருந்துபார்த்தால் ஒரு புதிய கருத்து முகிழ்க்கும். அதாவது, விளக்கினை இருள் சூழ்வது இயல்புதான் என்றாலும் விளக்கு எப்போது அணைந்தது இருள் எப்போது சூழ்ந்தது என்று பிரித்துக் கூறமுடியாத அளவில் இரண்டு செயல்களுமே ஒரே நேரத்தில் நடக்கும் இல்லையா?. இதனை பெண்களின் கண்ணீருடன் ஏற்றிக் கூறியதில் இருந்து, பெண்களுக்குத் துயர எண்ணம் தோன்றிய அளவிலேயே கண்ணீரும் தோன்றிவிடும் என்னும் கருத்து பெறப்படுகிறது..

இக் கருத்தினை கீழ்க்காணும் குறளின் மூலம் அவரே உறுதிப்படுத்துவதைப் பாருங்கள். 

புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ் அளவில்
அள்ளி கொள்வு அற்றே பசப்பு - குறள் 119:7

பொருள்: காதலருடன் சேர்ந்து இருந்தேன். சற்றே நகர்ந்தேன். அம்மாத்திரையில், கண்ணீர் என்னை அள்ளிக் கொண்டது.

காதலரை விட்டு நகர்ந்த அந்த மாத்திரையிலேயே கண்ணீர் தோன்றியதாகக் கூறுகிறாள். இச் செயல், பெண்கள் தமது காதலரின் / கணவரின் மேல் வைத்திருக்கும் அளவிறந்த அன்பினைக் காட்டுகிறது. அன்பு நிறைந்த மனதில் அழுகையும் உண்டு என்று இதன்மூலம் உறுதியாகிறது. இதை ஏற்கெனவே அன்புடைமை அதிகாரத்தில் கீழ்க்காணும் குறளில் வள்ளுவர் கூறிவிட்டார்.

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்.

மேகம் போன்றது பசலை:

பெண்களின் கண்களில் தோன்றும் கண்ணீரை மேகத்துடன் ஒப்பிட்டுக் கூறுகிறது சிந்தாமணியின் கீழ்க்காணும் பாடலொன்று.

பனி கொள் மா மதி போல் பசப்பு ஊர யான் - சிந்தா:6 1510/3

பொருள்: மேகம் மறைத்த நிலவினைப் போல கண்ணீர் பெருக நான் ...........

இப் பாடலில், நிலவினைக் கண்ணுக்கும், நிலவை மறைக்கும் மேகத்தினை கண்ணை மறைக்கும் கண்ணீருக்கும் உவமையாகக் கூறியிருக்கிறார் திருத்தக்கத் தேவர். நிலவினை மேகங்கள் அடிக்கடி மூடி மறைப்பதும் பின்னர் அம் மறைப்பு விலகுவதும் வழக்கம். அதைப்போல அப் பெண், தனது துயரத்தை நினைத்து நினைத்து விட்டுவிட்டு அழும்போது கண்ணீர் பெருகி கண்ணை மறைப்பதும் விலகுவதுமாக இருப்பதாக இப்பாடல் கூறுகிறது.

பாலாடை போன்றது பசலை:

கீழ்க்காணும் நற்றிணைப் பாடலொன்று, பசலையினை பாலின் மேல் தோன்றும் ஆடையுடன் ஒப்பிட்டுக் கூறுவதைப் பாருங்கள்.

அடு பால் அன்ன என் பசலை மெய்யே - நற் 175/9
( பொருள்: காய்ச்சும் பாலின் மேல் தோன்றும் ஆடையினைப் போல கண்களின் மேல் தோன்றும் கண்ணீர்....)

இப் பாடலில் கண், ஆடை போன்ற சொற்களை நேரடியாகக் கூறாமல் உய்த்துணர வைத்துள்ளார் புலவர். பாலினைக் கண்ணுக்கும், பாலின் மேல் தோன்றும் ஆடையினைக் கண்ணின் மேல் தோன்றும் கண்ணீருக்கும், பாலாடை தோன்றக் காரணமான வெப்பத்தினை கண்ணீர் தோன்றக் காரணமான துயரத்திற்கும் உவமையாக்கிக் கூறியுள்ளார். அதாவது, வெப்பமூட்டும் பொழுது பாலின்மேல் ஆடை தோன்றிப் படர்வதைப் போல, துயரத்தின்போது கண்ணின் மேல் கண்ணீர் தோன்றிப் பரவுவதாக இப்பாடல் கூறுகிறது. மிக அழகான உவமைதான் இல்லையா?.

நிறமற்றது பசலை:

பசலை என்பது கண்ணீரையே குறிக்கும் என்று முன்னர் பல பாடல்களின் மூலமாகக் கண்டோம். இக் கண்ணீர் நிறமற்றது என்று நம் அனைவருக்கும் தெரியும். இதைக் கீழ்க்காணும் கம்பராமயாணப் பாடலும் உறுதிசெய்கின்றது.

இல் நிற பசலை உற்று இருந்த மாதரின் - கிட்:10 116/2

இதனை, நிறம் இல் பசலை என்று மாற்றிப் பொருள்கொள்ள வேண்டும். அதன்படி இதன் பொருளானது, ‘ நிறம் அற்ற கண்ணீரைக் கொண்டிருந்த பெண்களின்.....’

கண்ணீருக்கு வண்ணம் இல்லை என்றால், கீழ்க்காணும் பாடல்களில் பொன் போன்ற பசலை, பீர் மலர் போன்ற பசலை, கொன்றைப் பூ போன்ற பசலை என்ற உவமைகள் கையாளப்பட்டுள்ளனவே, இது ஏன்? என்ற கேள்வி எழலாம். இக் கேள்விக்கான விடையினைக் கீழே காணலாம்.

கொன்றை பூவின் பசந்த உண்கண் - ஐங் 500/1
பொன் என பசந்த கண் போது எழில் நலம் செல - கலி 77/12
பீர் அலர் போல பெரிய பசந்தன - கலி 143/49,50
பீர் இவர் மலரின் பசப்பு ஊர்ந்தன்றே - நற் 197/2
பொன் நேர் பசலை பாவின்று-மன்னே - அகம் 172/18
பொன் ஏர் பசலை ஊர்தர பொறி வரி - அகம் 229/13
பொன் தெளித்து எழுதி அன்ன பூம் புற பசலை மூழ்கி - சிந்தா:1 371/2
பொன் ஊறி அன்ன பசப்பு - முத்தொள் 3/4

பொதுவாக, பெண்கள் தம் கண்களைப் பல வண்ணங்களால் மை பூசி அலங்காரம் செய்திருப்பர் என்பது நம் அனைவருக்கும் தெரியும். இவ் வண்ணங்களில் அதிகம் பயன்படுத்தப் படுவது மஞ்சள் நிறம் என்பதே உண்மை. இதைப் பற்றி ஏராளமான பாடல்கள் உள்ளன. இம் மஞ்சள் நிறத்தினை தங்கத்துடனும், பீர்க்கங்கொடியின் மஞ்சள் பூவுடனும், கொன்றை மரத்தின் மஞ்சள்நிறப் பூவுடனும் ஒப்பிடுவது இலக்கிய வழக்கம். இப்படிப் பொன்நிறம் பூசப்பட்ட கண்களில் அரும்பும் கண்ணீரானது, தனக்கென ஓர் நிறமும் இன்மையால், தன்னைச் சுற்றியுள்ள மஞ்சள் வண்ணத்தினை தனக்குள் பிரதிபலித்து தன்னையும் அதே வண்ணத்தில் காட்டும். வெளியில் இருந்து காண்போருக்கு, பொன் நிறத்தில் கண்ணீர் பூப்பதாகத் தோன்றும். இதைத்தான் கொன்றைப் பூவுடனும், பீர்க்க மலருடனும், பொன்னுடனும் ஒப்பிட்டு மேற்காணும் பாடல்களில் பாடியுளளனர்.

பசலையால் நிறம் மாறும் கண்:

பசலைக்கு நிறம் இல்லை என்று மேலே கண்டோம். ஆனால் தொடர்ச்சியான பசலையால் அதாவது தொடர்ந்து அழுவதால் கண்களுக்கு என்னாகும்?. கண்கள் சிவப்படையும். இதைக் கீழ்க்காணும் பாடல்வரி உணர்த்துகின்றது.

பசந்தனள் பெரிதெனச் சிவந்த கண்ணை - ஐங்கு.பா.எண்: 366
( பொருள்: அழுது அழுது பெரிதாய்ச் சிவந்த கண்ணினை....)

பசப்பு / பசலையின் இரண்டாம்நிலைப் பொருட்கள்:

தொடர்ந்து கண்ணைக் கசக்கி அழுவதால் கண்ணின் நிறம் மாறுவது மட்டுமின்றி கண்ணின் ஒளியானது குன்றி ஒரு வாட்டம் தோன்றும். இதிலிருந்து ஒளி குறைதல், வாடுதல், நிறம் மாறுதல் போன்ற இரண்டாம்நிலைப் பொருட்கள் தோன்றின. இனி, பசலை, பசப்பு ஆகிய சொற்கள் குறிப்பதான இரண்டாம் நிலைப் பொருட்களைச் சில சான்றுகளுடன் காணலாம்.

அளியவோ அளிய தாமே ஒளி பசந்துஐங். 455/3,4 – ஒளி குறைதல் என்னும் பொருளில்
சிறு தாம்பு தொடுத்த பசலை கன்றின்முல். 12 – வாடுதல் என்ற பொருளில்
பசலை நிலவின் பனி படு விடியல்புறம். 392/3 – ஒளி குறைதல் என்ற பொருளில்
அந்தி என்னும் பசலை மெய்யாட்டிமணி. 5/140 – ஒளி குறைதல் என்னும் பொருளில்
பரந்து மீன் அரும்பிய பசலை வானகம்கம்பரா.அயோ:5 6/1 – ஒளி குறைதல் என்னும் பொருளில்

பசப்புதலும் ஏமாற்றுதலும்:

இதுவரை கண்டவற்றில் இருந்து, பசப்பு என்பது துயரத்தால் கண் கலங்கி அழுவதைக் குறிக்கும் என்று அறிந்தோம். இப் பொருளில் இருந்துஏமாற்றுதல்என்ற புதிய பொருள் எவ்வாறு பிறந்தது என்று இங்கே காணலாம். நீர்நில வாழ்வனவற்றில் முதலைகள் ஆற்றல் மிக்கவை. இவை பிற உயிரினங்களை வேட்டையாடும் போது சில தந்திரங்களைச் செய்யுமாம். குழந்தை அழுவதுபோல ஓசை எழுப்புவதும், வாயைத் திறந்துவைத்துக்கொண்டு கண்ணீர் விடுவதும் அத் தந்திரங்களில் அடங்கும். இதை உண்மை என்று எண்ணி யாரேனும் அருகில் சென்றால் அவர்கள் கதை முடிந்துவிடும். இப்படித்தான் முதன்முதலில் துயரத்துடன் கூடிய அழுகையினையே குறித்துவந்த பசப்பு என்னும் சொல் நாளடைவில் முதலைகளால், துயரமற்ற ஒரு பொய்யான அழுகையினையும் ஏமாற்றுதலையும் குறிக்கப் பயன்படலாயிற்று.   

முடிவுரை:

பசப்பு, பசலை, பசத்தல், பயலை, பயப்பு ஆகிய சொற்கள் பயன்படுவதான பல பாடல்களை மேலே கண்டோம். இவற்றில் பசலை என்னும் சொல்லானது பயலை என்றும் பசப்பு என்பது பயப்பு என்றும் மிகச்சில இடங்களில் மட்டுமே வரும். மேலும், தமிழில் 'அழுகை, கண்ணீர்ஆகிய பொருட்களில் பயன்பட்டு வந்த பசப்பு என்ற சொல் கன்னடத்தில் 'வடிதல்' என்ற பொதுப்பொருளில் பயன்படுத்தப் படுகிறது. கண்ணில் இருந்து நீர் வடிதலை ' கண்ணீரு பசத்தே' என்று கூறுவர். சோறு சமைத்த பின்னர் அதிலிருந்து வடித்த நீரை 'பசகஞ்சி' (வடித்த கஞ்சி) என்று சொல்கின்றனர். இப்படி வடித்த நீர் கெட்டியானதும் ஒட்டும் தன்மை பெற்றுவிடும். இதுவே பின்னாளில் 'பசை' என்றானது.


3 கருத்துகள்:

 1. பசலை என்பது அழுவதோ அல்லது ஒழுகுவதோ என்று எப்படி அகும்? கலங்குவது என்று வேண்டுமானால் கொள்ளலாம்.

  உ-ம் குறுந்தொகை 399-ல் பாசியற்றே பசலை காதலர் என்ற சொற்றொடர் அழுவதை சுட்டுவதல்ல ஆனால் கண்கள் கலங்குவதை சுட்டுவது. பாசி என்பது கேணியின் அழுகையல்லவே? பாசியுற்றால் தண்ணீர் கலங்கியிருப்பதாக அல்லவா அறிகிறோம்?

  பதிலளிநீக்கு
 2. கிருஷ்ணன் ஐயா, குறுந்தொகை 399 இன் பொருள்: தொடும்போதெல்லாம் பாசி விலகி நீர் தெரிய விடும்போதெல்லாம் பாசி மூடி நீரை மறைப்பதைப் போல என் காதலர் என்னைத் தொடும்போதெல்லாம் என் கண்ணை மறைத்திருந்த கண்ணீர் விலகி அவர் என்னை விட்ட போதெல்லாம் கண்ணீர் மூடி என் கண்ணை மறைக்கிறது. பசலை என்றால் அழுகை அல்லது கண்ணீர் என்ற பொருள் இப்போது பொருந்துகிறதா?

  பதிலளிநீக்கு
 3. அன்பு வேந்தன்சரவணன் அவர்களுக்கு,
  பண்டைக்கால வழக்கில் "நாற்றம் எங்கிருந்து வருகிறது?" என்பது பொதுவில் சுட்டப்பட்டது. ஆனால்
  இன்று வழக்கில் கெட்டநாற்றம் என ஒரு பொருளில் மட்டும் பயின்று வரும் சொல்லாக மாறிவிட்டது.
  முன்பு இலக்கியதில் பசப்பு என்ற சொல், அழுகை,கண்ணீர் என்று சுட்டிவந்தாலும் இன்று அதற்கு பொய்மை என்றும் பொருள் கொள்ளலாம்.
  எ.கா.:முதலைப்பசப்பு(முதலைக்கண்ணீர். எனவே இந்நாளில் அகராதி சுட்டும் பாசாங்கு, ஏமாற்று சரியே.
  நாட்டு வழக்கில் வயல்வெளிகளில் இன்றும் பயின்று
  வருகிறது பசப்பு.பயிரின் செழுமையான வளர்ச்சியை
  "பயிர் பசப்பாக உள்ளதே" எனும் பேச்சும், பச்சை குன்றி நோய்வாய்ப்பட்ட பயிரை, "என்ன பயிர் பசலையாக் உள்ளதே" எனும் பேச்சும் வேளாண்மக்கள் கூறுவதுண்டு.
  சொல்வழக்கு முந்தியது, அகராதி பிந்தியது.சொல்வழக்கு காலத்தால் தாக்கம் பெரும், அதற்கு ஏற்ப அகராதி ஆக்கம் பெரும்.
  எனவே இலக்கிய வழக்கில் பசப்பு ஓர் பொருளைச் சுட்டினாலும் காலத்தால் சொல்வழக்கு புதுப்பொருள்
  பெருவது வளர்ச்சியே.
  முடிவாக, இலக்கியப்பசப்பும், இற்றையபசப்பும் தமிழுக்குத் தேவையே.
  அன்புடன்,
  மீ.க.

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.