செவ்வாய், 25 ஆகஸ்ட், 2009

ஆத்துல ஒரு கால்


பழமொழி:
ஆத்துல ஒரு கால்; சேத்துல ஒரு கால்.

தற்போதைய கருத்து:
ஆற்றுநீரில் ஒருகாலையும் சேற்றுமண்ணில் ஒருகாலையும் வைப்பதைப் போல.

தவறு:
இப் பழமொழியின் பயன்பாட்டில் தவறேதும் இல்லை அதாவது ஒரே நேரத்தில் இரண்டு வேலைகளில் கவனம் வைத்தால் ஒரு செயலைக் கூட உருப்படியாய் செய்துமுடிக்க இயலாது என்பதென்னவோ உண்மைதான். ஆனால் இப் பழமொழிக்குக் கூறப்படும் பொருள்விளக்கம் அதாவது ஆற்றுநீரில் ஒருகால் சேற்றுமண்ணில் ஒருகால் என்பதுதான் தவறாகும். இது எவ்வாறு தவறாகும் என்று காண்போம். நம்மில் பலருக்கு ஆற்றைப் பற்றியும் குளத்தைப் பற்றியும் தெரியும். ஆற்றுநீரானது எப்போதும் ஓடிக்கொண்டிருக்கும் இயல்பினது என்பதால் ஆற்றங்கரையில் மணல் நிறைந்து இருக்கும். இதற்கு மாறாக குளத்து நீரானது தேங்கி நிற்கும் இயலபினது. ஆகையால் குளத்தங்கரையில் தான் சேறு நிறைந்து இருக்கும். ஆற்றங்கரையில் சேறு இல்லை எனும்போது ஆற்றுநீரில் தனது ஒருகாலை வைத்த ஒருவன் இன்னொருகாலை சேற்றுமண்ணில் எப்படி வைக்க முடியும்?. ஒருபோதும் முடியாது அல்லவா?. இப்படி நடைமுறையில் சாத்தியமில்லாத ஒரு கருத்தை உணர்த்துவதால் இப் பழமொழிக்குக் கூறப்பட்ட மேற்காணும் பொருள்விளக்கம் தவறு என்பதை அறியலாம்.

மேற்காணும் பொருள்விளக்கத்தில் தவறு நேர்ந்ததற்குக் காரணம் என்ன என்று ஆராய்ந்த போது 'ஆத்துல' மற்றும் 'சேத்துல' ஆகிய கொச்சைச்சொற்களே என்று புலப்பட்டது. ஆத்துல என்ற கொச்சைச்சொல் ஆற்றுநீரைக் குறிப்பதாகவும் சேத்துல எனும் கொச்சைச்சொல் சேற்றுமண்ணைக் குறிப்பதாகவும் புரிந்து கொண்டதே தவறான பொருள்விளக்கத்திற்கு அடிகோலி இருக்கிறது. இனி இவற்றின் சரியான பொருட்கள் என்ன என்று பார்ப்போம்.

திருத்தம்:
ஆத்துல என்னும் கொச்சைச் சொல்லின் தூய தமிழ் வடிவம் அயத்தில் என்பதாகும். அயம் என்னும் சொல்லுக்குப் பல பொருட்கள் உண்டெனினும் இங்கு இச்சொல் குதிரையைக் குறிக்கும். சேத்துல என்னும் கொச்சைச் சொல்லின் தூய தமிழ் வடிவம் செயத்தில் என்பதாகும். செயம் என்ற சொல் இங்கு பூமி அல்லது நிலத்தைக் குறிக்கும். இவையே இப் பழமொழிக்கான திருத்தங்கள் ஆகும்.

நிறுவுதல்:
கற்றறிந்த மக்களின் வாய்வழக்காக மட்டும் முதலில் இருந்தவந்த பழமொழிகள் காலப்போக்கில் கல்லாத பாமர மக்களின் வாயில் நுழைந்தபோது பலவிதமான மாற்றங்களை அடைந்தன. அவற்றுள் ஒன்றே கொச்சை மாற்றம் ஆகும். அகத்தில் என்னும் தூயதமிழ்ச் சொல் கொச்சையாக ஆத்துல என்று எவ்வாறு வழங்கப்பெறும் என்று முன்னர் ஒரு கட்டுரையில் கண்டோம். இப் பழமொழியில் வரும் அயத்தில் மற்றும் செயத்தில் ஆகிய தூய தமிழ்ச் சொற்கள் எவ்வாறு திரியும் என்பதைக் கீழே சான்றுகளுடன் காணலாம்.

அயம் (நீரைக் குறிக்கும் தூயதமிழ் வடிவம்) ---> ஆம் (நீரைக் குறிக்கும் திரிபு வடிவம்)
மயல் (மயக்கத்தைக் குறிக்கும் தூயதமிழ் வடிவம்) ----> மால் (மயக்கத்தைக் குறிக்கும் திரிபு வடிவம்)
பெயர் (தூய தமிழ்வடிவம்) ----> பேர் (திரிபு வடிவம்)
வெயர்வு (சினத்தைக் குறிக்கும் தூயதமிழ் வடிவம்) --> வேர்வு (சினத்தைக் குறிக்கும் திரிபு வடிவம்)

மேற்கண்ட சான்றுகளில் இருந்து மொழிமுதலாய் வரும் குற்றெழுத்துக்கள் திரிபின்போது யகரத்தை இழந்து நெடிலாக மாற்றமடையும் என்று அறியலாம். இவ் இலக்கணப் படியே

அயத்தில் --> ஆத்தில் ---> ஆத்துல என்றும்
செயத்தில் --> சேத்தில் --> சேத்துல என்றும்

கொச்சை வழக்கில் மாற்றமடையும் என்பதை அறியலாம்.

அயம் என்பதற்கு குதிரை என்ற பொருள் அகராதிகளில் காணப்படுகிறது. இதனால் தான் குதிரையில் ஏறிவரும் சாமியை அய்யனார் என்கிறோம். செயம் என்ற சொல்லுக்கு வெற்றி என்ற பொருள் மட்டுமே கொடுக்கப் பட்டுள்ளது. ஆனால் உண்மையில் வெற்றி என்பது இரண்டாம் நிலைப் பொருள் ஆகும். பூமி என்பதே முதல்நிலைப் பொருள் ஆகும். ஏனென்றால் போருக்குச் செல்லும் மன்னனின் முதல் நோக்கம் எதிரி நாட்டு மன்னனின் பூமியைக் கைப்பற்றுவதே ஆகும். பூமியைக் கைப்பற்றினாலே வெற்றி பெற்றுவிட்டதாகவே பொருள் கொள்ளப்படும்.

ஒரு சான்றாக செயம்கொண்டான் என்னும் பெயரை எடுத்துக் கொள்வோம். இப் பெயரின் பொருளை வெற்றிகொண்டான் என்று விரிப்பதைவிட பூமிகொண்டான் என்று விரிப்பதே மிகப் பொருத்தமாக இருக்கும். ஏனென்றால் வெற்றியை உடையவன் என்பதைவிட பரந்த பூமியை உடையவன் என்பதே மன்னருக்குச் (முதலாம் இராசராச சோழன்) சிறப்பு தரும் பெயராகும். செயம் என்னும் சொல் முதல்நிலையில் பூமியைத் தான் குறிக்கும் என்பதற்கு மேலும் சில ஆதாரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

செய் என்னும் சொல்லுக்கு விளைநிலம் என்று அகராதிகள் பொருள்கூறுகின்றன. இது செயம் என்னும் சொல்லில் இருந்து தோன்றியதாகும். இதிலிருந்து செயம் என்பது நிலப்பொருளையே குறிக்கும் என்பதை அறியலாம்.செய்யாள்,செய்யவள்,செய்யோள் என்ற சொற்களுக்கு இலக்குமி என்று அகராதிகள் பொருள் கூறுகின்றன. பூமியே அனைத்து செல்வங்களின் இருப்பிடம் என்பதால் பூமித்தாயே இலக்குமி ஆவாள். செய்யாள் என்பது செய்யை உடையவள் என்று விரிந்து பூமித்தாயைக் குறிப்பதால் இங்கும் செய் என்பது நிலத்தையே குறிக்கிறது என்று அறியலாம். இனி இப் பழமொழி உணர்த்தும் கருத்தினை ஒரு சிறுகதையுடன் காணலாம்.

குதிரை ஏற்றம் பயில விரும்பினான் ஒருவன். ஆனால் அவனுக்குக் குதிரை மீது ஏறவே பயம் எங்கே குதிரை அவனை மேலிருந்து கீழே தள்ளிவிடுமோ என்று. ஆனால் அவனுக்கோ கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை. அதாவது குதிரையின் மீதும் ஏறவேண்டும்; அதேசமயம் குதிரையும் அவனைத் தள்ளிவிடக்கூடாது. அதற்காக ஒரு தந்திரம் செய்தான். வலதுகாலைத் தூக்கி குதிரையின் மேலே போட்டுவிட்டு இடதுகாலைத் தரையில் ஊன்றிக் கொண்டான். இப்படிச் செய்தால் பாதுகாப்பாகக் குதிரைப்பயணம் செய்யலாம் என்ற நினைப்பு அவனுக்கு. இப்போது குதிரையைப் பின்னால் இருந்து உசுப்பினான். உடனே குதிரை பாய்ந்து ஓடத் துவங்கியது. இதனால் நிலைதடுமாறிக் கீழே விழுந்து காலை உடைத்துக் கொண்டான்.

அப்போதுதான் அவனுக்குப் புரிந்தது " குதிரைமேல் ஒருகாலையும் தரையில் ஒருகாலையும் வைத்துக் கொண்டால்" குதிரைப் பயணமும் செய்ய முடியாது; நடக்கவும் முடியாது என்று. அதாவது ஒரு நேரத்தில் இரண்டு செயல்களில் கவனத்தை வைத்தால் ஒரு செயலும் உருப்படியாய் நடக்காது. இதுவே இப் பழமொழி உணர்த்தவரும் உண்மையான கருத்தாகும்.

சரியான பழமொழி:
அயத்தில்
ஒரு கால்; செயத்தில் ஒரு கால்.

5 கருத்துகள்:

 1. திரு சரவணன்

  நீங்கள் ”ஆத்துல ஒரு கால்; சேத்துல ஒரு கால்” என்பது ‘கொச்சை` என்கிறீர்கள் - அதாவது `தூய தமிழில்` ஆற்றில்... சேற்றில் என எழுதவேண்டும் என்கிறிரகள்.

  தமிழர்கள் பேச்சு பழக்கத்தில் ற்ற => த்த என மாறி பல நூத்தாண்டுகள் ஆகி விட்டன. ஆனால் நம் எழுதுவது பேச்சை ஒத்து போகாமல், ஒரு தொல் தமிழின் மேலுள்ள மரியாதையால் இன்னும் ஆற்றில்.. சேற்றில் என எழுதிக் கொண்டு வருகிறோம்.

  அது தவறு . ற்ற இருக்கும் இடத்தில் எல்லாம் த்த போட வேண்டும் - அப்பொழுதுதான் அது பேச்சை பிரதிபலிக்கும். தமிழர்கள் பேச்சில் த்த தான் இருக்கு.

  பஸ்ஸில் தொத்திக் கொண்டு போனேன்
  வயத்தை கலக்காதே
  சட்டையை மாத்திக் கொள்
  எவ்வளவு நேரம் காத்துக் கொண்டிருப்பது

  சரியான தமிழ் ஆத்தில், சேத்தில். ஆற்றில், சேற்றில் தவறு

  விஜயராகவன்

  http://vijvanbakkam.blogspot.com/

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பேச்சுவழக்கு வேறு இலக்கிய வழக்கு வேறு, நல்ல சொற்களை உங்களுக்கு தெரியாது என்பதற்காகவோ பேச முடிவில்லை என்பதற்காகவோ, கொச்சபாபடுத்தி இலக்கணத்தை சிதைக்க வேண்
   டாம்,

   இயற்சொல் ,திரிசொல், திசைச்சொல் என இலக்கண அமைதியை காணலாம்..... தமிழ் சொற்களை ஊன்றிக் கற்காது மயங்க வேண்டா....

   நீக்கு
 2. திரு விஜி, உங்கள் வலைப்பூ சென்று தமிழ் எழுத்துச் சீராக்கம் பற்றிய உங்கள் கட்டுரை கண்டேன். உங்களின் எண்ணங்களை நாடிபிடித்தேன்.நீங்கள் சொல்வதுபோல் ஆத்துல/சேத்துல என்பதை ஆற்றில்/சேற்றில் என்று எழுத நான் சொல்லவில்லை. அயத்தில்/செயத்தில் என்ற சொல்லே ஆத்துல/சேத்துல என்று மருவி இருக்கிறது என்று சுட்டிக் காட்டி இருக்கிறேன் அவ்வளவே.

  பதிலளிநீக்கு
 3. செயம், என்பது தமிழ் சொல்லா என்ற ஐயம், ஜெயம், என்பதன் திரிபே செயம், இது சுத்தமான வடசொல்.
  அயம், செயம் என்று வசதயாக எடுத்துக்கொண்டது சரியாகப்படவில்லை ஆற்றங்கரையில் சேறு இருக்காது என்பதே முதலில் பிழை.
  ஒரே நேரத்தில் இரண்டு செயல்களை செய்ய இயலாது, ஆற்றைக்கடக்க நீந்த வேண்டும் கரையில் நடக்க வேண்டும் அங்கொருகால் இங்கொருகால்னு வைத்து எதுவும் ஆகாது ஏதைவது ஒன்றை செய்ய வேண்டும், ஒரு சிலர் இரண்டு கட்சிகளின் பக்கமும் இருப்பர் அவர்கலின் நிலைப்பாட்டை ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒருகால் எனக்குறிக்கலாம்....இரண்டு முரண்பட்ட கருத்துக் கொண்டோரையும், இரு எதிரும் புதிருமான செயலை செய்யமுற்படு வோரையும் குறிக்கும் பழமொழி இது....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. திரு. ஈஸ்வர், செயம் தமிழ்ச்சொல் தான் என்பதற்கு பல ஆதாரங்கள் காட்டிய பின்னரும் வடசொல் என்று நீங்கள் சொன்னால் நான் என்ன செய்ய? :))

   எந்த ஆற்றங்கரையில் நீரை ஒட்டி சேறு உள்ளது என தயவுசெய்து எனக்கு புகைப்படம் எடுத்து அனுப்புவீர்களா?.

   நான் சொல்ல வந்ததும் அதைத்தானே. எதிரும் புதிருமான இரண்டு விசயங்களில் ஒரே நேரத்தில் ஈடுபடக்கூடாது. அதாவது ஒரு கால் குதிரையின் மேலும் இன்னொரு கால் கீழே தரையிலுமாக.

   நீக்கு

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.