
'அகர முதல எழுத்தெல்லாம்' என்பது ஐயன் வள்ளுவன் வாக்கு. இந்த 'அ'கரம் முதல் 'ன'கரம் ஈறாக உள்ள எழுத்துக்கள் தம்முள் பல்வகையானும் புணர்ந்து உருவாக்கும் சொற்களோ கணக்கில் அடங்காது. எழுத்துக்கள் புணர்ந்து சொற்களைப் பிறப்பிக்க சொற்கள் புணர்ந்து சொற்றொடர்கள் உருவாகின்றன. இத் தொடர்களை செய்யுளில் பயன்படுத்தும்போது ஓசை இனிமைக்காகவும் பொருள் நயத்திற்காகவும் வகுக்கப்பட்ட ஒரு இலக்கண வகையே தொடை ஆகும். சிறுசிறு பூக்களைக் கொண்டு அலங்காரமாக ஒரு மாலை தொடுத்தல் போல சொற்களை ஒரு முறைப்படி தொடுத்து பா இயற்றும்போது பாடலுக்கு அது மெருகூட்டுகிறது. இத் தொடைகள் எண்வகைப்படும் என்று இலக்கண விளக்கம் கூறுகிறது. ஆய்வு முயற்சியால் ஒன்பதாவதாக ஒரு தொடையும் இலக்கியங்களில் பரவலாகப் பயன்படுத்தப் பட்டுள்ளது தெரிய வந்தது. அது என்ன தொடை என்பதைப் பற்றி விளக்கமாகக் கூறுவதே இக் கட்டுரையின் நோக்கமாகும்.
தொடை வகைகள்:
கீழ்க்காணும் நூற்பா தொடை வகைகளைப் பற்றிக் கூறுகிறது.
' அடிஇணை பொழிப்புஒரூஉக் கூழை மேல்கீழ்க்
கதுவாய் முற்றுஎன எட்டொடும் மோனை
இயைபே எதுகை முரணே அளபே
எனஐந்து உறழ எண்ணைந்து ஆகி
அடிஅந் தாதி இரட்டைச் செந்தொடை
எனஇம் மூன்றும் இயையத் தொடையும்
விகற்பமும் எண்ணைந்து ஒருமூன்று என்ப.'
- இலக்கண விளக்கம் -தொ.வி.218, வைத்தியநாத தேசிகர்.
மேற்காணும் நூற்பாவின்படி எண்வகைத் தொடைகள்: மோனை, இயைபு, எதுகை, முரண், அளபெடை (அளபு), அந்தாதி, இரட்டை மற்றும் செந்தொடை ஆகும். அடி, இணை, பொழிப்பு, ஒரூஉ, கூழை, மேல்கதுவாய், கீழ்க்கதுவாய், முற்று என்ற எட்டும் தொடை விகற்பங்கள் ஆகும். எண்வகைத் தொடைகளில் மோனை, இயைபு, எதுகை மற்றும் அளபெடைத் தொடைகள் சொல்லில் உள்ள எழுத்துக்களை அடிப்படையாகக் கொண்டு இயற்றப்படுபவை. முரண் தொடை, அந்தாதித் தொடை மற்றும் இரட்டைத் தொடைகள் சொற்களை அடிப்படையாகக் கொண்டு இயற்றப் படுபவை. ஒன்பதாவதாக வருகின்ற இப் புதிய தொடையும் சொற்களின் அடிப்படையில் அமைக்கப் படுவதே ஆகும்.
சரவெண் தொடை:
ஒன்பதாவதாக வருகின்ற இப் புதிய தொடையின் பெயர் சரவெண் தொடை ஆகும். இதன் விளக்கத்தைக் கீழே காணலாம்.
சரவெண் = சரம் + எண்
= தொடுக்கப்படுவது + எண்
= தொடுக்கப்படும் எண்
ஒன்று, இரண்டு, மூன்று முதலான எண்ணுப் பெயர்களைக் கொண்டு அடிதோறும் விகற்பத்துடனோ விகற்பமின்றியோ அமைக்கப்படும் தொடை சரவெண் தொடை ஆகும். சான்றாக கீழ்க்காணும் பாடல் வரியைக் காணலாம்.
இருதலைப் புள்ளின் ஓருயிர் அம்மே - அகநா-13
இவ் வரியில் உள்ள 'இருதலை' என்ற சொல்லிலும் 'ஓருயிர்' என்ற சொல்லிலும் எண்ணுப் பெயர்கள் (இரண்டு, ஒன்று) பயின்று வந்துள்ளதால் இது சரவெண் தொடைக்குக் காட்டாயிற்று. இனி இத் தொடையின் இலக்கியப் பயன்பாடுகள் குறித்துக் காணலாம்.
சரவெண் தொடையின் பயன்பாடுகள்:
சரவெண் தொடையானது சங்க இலக்கியங்களிலும் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களிலும் பரவலாகப் பயன்படுத்தப் பட்டுள்ளது. சான்றாக திருக்குறளில் இத் தொடை பயின்று வரும் பாடல்கள் சில கொடுக்கப் பட்டுள்ளன.
ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து - குறள் - 126
ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப
கோடியும் அல்ல பல. - குறள் - 337
ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து. - குறள் - 398
ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும் உண்டாங்கொல்
நன்றெய்தி வாழ்வதோர் ஆறு. - குறள் - 932
இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு
நோய்நோக்கொன் றந்நோய் மருந்து. - குறள் - 1091
ஒருதலையான் இன்னாது காமம்காப் போல
இருதலை யானும் இனிது. - குறள் -1196
ஒருநாள் எழுநாள்போல் செல்லும்சேண் சென்றார்
வருநாள்வைத்து ஏங்கு பவர்க்கு. - குறள் - 1269
சங்க இலக்கியங்களில் இத் தொடை பயிலும் சில இடங்களைக் கீழே காணலாம்.
இருதலைப் புள்ளின் ஓர்உயிரம்மே - அகநா-13 (ஒன்று, இரண்டு)
எழுவர் நல்வலம் அடங்க, ஒருபகல் - அகநா - 37
இருபாற் பட்ட சூழ்ச்சி ஒருபால் - அகநா- 53
ஒருநாள் ஒருபகற் பெறினும், வழிநாள் - அகநா -128
'இருபெரு வேந்தர் மாறுகொள் வியன்களத்து
ஒருபடை கொண்டு, வருபடை பெயர்க்கும் - அகநா -174
மூவேறு தாரமும் ஒருங்குடன் கொண்டு - அகநா - 283
இருதலைக் கொள்ளி இடைநின்று வருந்தி
ஒருதலைப் படாஅ உறவி போன்றனம் - அகநா - 340
அறுசில் கால அஞ்சிறைத் தும்பி
நூற்றிதழ்த் தாமரைப் பூச்சினை சீக்கும் - ஐங்கு - 20
ஒருநாள் நம்மில் வந்ததற்கு எழுநாள் - ஐங்கு - 32
ஒருபகல் எல்லாம் உருத்து எழுந்து ஆறி
'இருவர் கண் குற்றமும் இல்லையால் என்று - கலி - 39
குறுந்தொகையில் 24 ஆம் பாடலில் இத் தொடை பயின்று வந்துள்ளதை அறியாமல் வேறுவிதமான விளக்கம் கொடுத்துள்ளனர் உரையாசிரியர்கள்.
கருங்கால் வேம்பின் ஒண்பூ யாணர்
என்னை யின்றியுங் கழிவது கொல்லோ
ஆற்றயல் எழுந்த வெண்கோட் டதவத்
தெழுகளிறு மிதித்த ஒருபழம் போலக்
குழையக் கொடியோர் நாவே
காதலர் அகலக் கல்லென் றவ்வே. -குறு.- 24
மேற்பாடலில் நான்காவது வரியில் சரவெண் தொடை பயின்று வந்துள்ளது. இதன்படி இப் பாடலின் புதிய விளக்கமானது ' கருநிறக் காலுடைய வேப்ப மரம் பூக்கின்ற இந்த இளவேனில் காலம் என் தலைவன் இன்றியே கழியுமோ?. பாதையின் ஓரமாக வளர்ந்த வெண்ணிற கிளைகளுடைய அத்திமரத்தில் இருந்து உதிர்ந்த ஒரு அத்திப் பழத்தை ஏழு யானைகள் மிதித்தால் அப் பழத்தின் நிலை என்னவாகுமோ அது போலக் குழைந்து கெடுக அலர் தூற்றி என் காதலரை என்னிடமிருந்து பிரித்த கொடியவரின் நாக்குகள்.'
காதலியின் சாபம் கடுமையாக உள்ளதல்லவா?. குறுந்தொகையில் இருந்து மேலும் சில சான்றுகள் கீழே தரப்பட்டுள்ளன.
இருவேம் ஆகிய உலகத்து
ஒருவேம் ஆகிய புன்மை நாம் உயற்கே. - குறு.-57
ஏழூர்ப் பொதுவினைக் கோரூர் யாத்த - குறு- 172
திருமுருகாற்றுப்படையிலும் பரிபாடலிலும் இத் தொடை சிறப்பாக பயின்று வந்துள்ளது.
இருபே ருருவின் ஒருபே ரியாக்கை
அறுவேறு வகையின் அஞ்சுவர மண்டி - திருமு.-57-58
இருமூன்று எய்திய இயல்பினின் வழாஅது
இருவர்ச் சுட்டிய பல்வேறு தொல்குடி
அறுநான்கு இரட்டி இளமை நல்லியாண்டு
ஆறினிற் கழிப்பிய அறன்நவில் கொள்கை
மூன்றுவகைக் குறித்த முத்தீச் செல்வத்து
இருபிறப் பாளர் பொழுதறிந்து நுவல,
ஒன்பது கொண்ட மூன்றுபுரி நுண்ஞாண் - திருமு.-177-183
முக் கை முனிவ! நாற் கை அண்ணல்!
ஐங் கைம் மைந்த! அறு கை நெடு வேள்!
எழு கையாள! எண் கை ஏந்தல்!
ஒன்பதிற்றுத் தடக் கை மன் பேராள!
பதிற்றுக் கை மதவலி! நூற்றுக் கை ஆற்றல்!
ஆயிரம் விரித்த கைம் மாய மள்ள!
பதினாயிரம் கை முதுமொழி முதல்வ!
நூறாயிரம் கை ஆறு அறி கடவுள்! - பரி.-3
இவை தவிர இன்னும் பல இலக்கியங்களில் இத் தொடை பயின்று வந்துள்ளது. கட்டுரையின் விரிவஞ்சி அவை இங்கே கூறப்படவில்லை.
முடிவுரை:
சரவெண் தொடையைச் சேர்த்து செய்யுள் தொடைகள் இப்போது ஒன்பதாகின்றன. இன்னும் இதுபோல அறியப்படாத செய்யுள் தொடைகள் இருக்கலாம். சரியான ஆய்வு மேற்கொண்டால் நம் முன்னோர்கள் பயன்படுத்திய புதிய யாப்பு முறைகளைக் கண்டறிந்து உலகிற்குத் தெரிவிக்கலாம்.