ஞாயிறு, 3 அக்டோபர், 2010

பந்திக்கு முந்து

முன்னுரை:

' பந்திக்கு முந்து படைக்குப் பிந்து ' என்றொரு பழமொழி தமிழ்நாட்டில் மிகப் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இப் பழமொழிக்குத் தற்போது வழங்கப்படும் பல்வேறு விளக்கங்களைப் பற்றியும் அவ் விளக்கங்கள் எந்த அளவிற்குப் பொருத்தமாக உள்ளன என்பதைப் பற்றியும் இப் பழமொழிக்கு இன்னொரு கோணத்தில் ஒரு புதிய விளக்கத்தையும் இக் கட்டுரையில் காணலாம்.

தற்போதைய விளக்கங்கள்:

இப் பழமொழிக்கு மூன்று விதமான விளக்கங்கள் இதுவரை அறியப்பட்டுள்ளன. அவை அனைத்தும் கீழே தொகுத்துத் தரப்பட்டுள்ளன.

விளக்கம் 1: 'பந்திக்கு முந்து' என்றால் உணவு இடப்படும் பந்தியில் முதல் ஆளாகச் சென்று உண்ண வேண்டும். இல்லையேல் உணவு முழுமையாகவும் சுவையுடனும் கிடைப்பது அரிது. 'படைக்குப் பிந்து' என்றால் போருக்குப் போகும்போது படையில் கடைசி ஆளாகச் சேர வேண்டும். இல்லையேல் போரில் இறந்துபடுவது உறுதி.

விளக்கம் 2: இப் பழமொழியை ' பந்திக்கு முந்தும் படைக்குப் பிந்தும்'  என்று சற்று மாற்றி இதனை விடுகதையாகக் கொள்கின்றனர். இவ் விடுகதையின் விடை 'வலது கை' ஆகும். இது எவ்வாறெனில், வலது கையானது உணவு உண்ணும்போது முன்னால் செல்லும்; வில் மற்றும் வாள் படையை இயக்கும்போது பின்னால் செல்லும்.

விளக்கம் 3: இப் பழமொழியை 'பந்திக்கு முன் தீ படைக்குப் பின் தீ' என சற்றே மாற்றிக் கொண்டு பின்வருமாறு விளக்கம் கூறுகின்றனர்: பந்தியில் உணவு இடுவதற்கு முன்னால் தீயிட்டு உணவு சமைப்பர். படைகொண்டு போரில் வென்ற பின்னர் எதிரியின் நாட்டை தீயிட்டு அழிப்பர்.

இப் பழமொழி விளக்கங்கள் சரியா?

மேலே நாம் கண்ட பழமொழி விளக்கங்கள் எந்த அளவிற்கு பொருந்தி வருகின்றன என்பதை இங்கே காணலாம்.

முதல் விளக்கத்தில் உணவு உண்பதற்கு 'முதலிடமும்' போருக்குச் செல்வதற்கு 'கடைசியிடமும்' தரவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இக் கருத்து சிறிதேனும் பொருந்துமா என்றால் பொருந்தாது. ஏனென்றால் பழமொழிகளின் நோக்கமே இளைய தலைமுறையினருக்கு நல்ல வாழ்வியல் கருத்துக்களைத் தெரிவித்து நல்வழிப் படுத்தவேண்டும் என்பது தான். ஆனால் இவ் விளக்கத்தில் கூறப்பட்டுள்ள கருத்தோ ஒருவனை சாப்பாட்டு ராமனாகவும் தொடை நடுங்கியாகவும் இருக்கவேண்டும் என்று அறிவுறுத்துவதாக அமைகிறது. இப்படிப்பட்ட அறிவுரைகளை மக்கள் பின்பற்றினால் விளைவு என்னாகும்?. நாட்டுப்பற்று பின்தள்ளப்பட்டு சோற்றுப்பற்று முன்வந்து விடும். பழமொழியின் நோக்கத்திற்கு மாறாக இக் கருத்து அமைவதால் இக் கருத்து தள்ளப்பட வேண்டிய ஒன்றாகும்.

இரண்டாம் விளக்கத்தில் இது பழமொழியே இல்லை என்றும் இது ஒரு விடுகதை என்றும் கூறப்பட்டுள்ளது. இதை ஒரு விடுகதையாகவே கொண்டாலும் இதற்கான விடையாக 'வலது கை' யினைக் கொள்வது பொருத்தமாகத் தோன்றவில்லை. ஏனென்றால் இடதுகை வலதுகை என்பது அவரவர் பயன்பாட்டைப் பொறுத்தது. சிலர் வலதுகைப் பழக்கம் உள்ளவர்கள். சிலர் இடதுகைப் பழக்கம் உள்ளவர்கள். இடதுகைப் பழக்கம் உள்ளவர்கள் அனைத்து வேலைகளுக்கும் (உணவு உண்பது உள்பட) இடது கையினையே பயன்படுத்துகின்றனர்.  ஏன் வலதுகைப் பழக்கம் உள்ளவர்கள் கூட சில நேரங்களில் நீர், தேநீர், பால் போன்ற நீர்ம உணவுகள் பருகும்போதோ சிறுசிறு நொறுக்குத் தீனிகளை உண்ணும்போதோ இடதுகையினை பயன்படுத்துகின்றனர். பந்தியிலும் உணவு வகைகள் இரண்டு புறங்களிலும் பரிமாறப் பட்டிருக்கும். வாழைப்பழத்தை பெரும்பாலும் இடப்புறமாகவே வைப்பர். இப் பழத்தை இடதுகையால் எடுத்து வலது கையால் உரித்து உண்பதை நடைமுறையில் பார்க்கலாம். எனவே 'பந்திக்கு முந்துவது வலதுகையே' என்று பொத்தாம் பொதுவாகச் சொல்வது விடுகதைக்கு அழகல்ல என்றே தோன்றுகிறது.

மூன்றாவது விளக்கம் மிக மிக இட்டுக் கட்டுப்பட்ட ஒரு விளக்கமாக உள்ளது. பந்திக்கு முன்னால் தீ என்றால் அங்கே யாராவது உட்கார்ந்து சாப்பிடுவார்களா?. படைக்குப் பின்னால் தீ என்றால் படை பயந்தல்லவா ஓடும்?. நேரடியாகத் தோன்றும் இப் பொருள்களை விடுத்து பந்தியில் சோறு இடுவதற்கு முன்னால் தீயிட்டுச் சமைப்பர் என்பதும் படையில் வெற்றி பெற்ற பின்னர் எதிரி நாட்டைத் தீயிட்டுப் பொசுக்குவர் என்பதும் தேவையற்ற மிகையான கற்பனையாகத் தோன்றுகிறது. மேலும் 'முந்து' பிந்து' என்ற சொல் வடிவங்களே பழமொழி வழக்கில் உள்ளன. இவற்றை 'முன் தீ' என்றும் 'பின் தீ' என்றும் திரித்துக் கொண்டு பலவாறாகப் பொருள் கொள்வது வேடிக்கையாக இருப்பதுடன் பழமொழிகளுக்குரிய சீரிய நோக்கமின்றி இருப்பதால் இவ் விளக்கம் தள்ளப்பட வேண்டிய ஒன்றே ஆகும்.

இன்னொரு கோணம்:

இப் பழமொழியை இன்னொரு கோணத்தில் ஆராய்ந்த போது புதியதோர் விளக்கம் கிடைத்தது. இக் கோணத்தின்படி இப் பழமொழியின் வடிவம் கீழ்க்கண்டவாறு இருக்கவேண்டும்.

பந்திக்க முந்து படைக்கப் பிந்து

இங்கே பந்தித்தல் என்றால் திருமணம் செய்தலைக் குறிக்கும். படைத்தல் என்றால் குழந்தை பெற்றுக் கொள்ளுதலைக் குறிக்கும். ஆக இப் பழமொழியின் இன்னொரு கோண விளக்கமானது ' திருமணம் செய்துகொள்வதை தள்ளிப் போடக்கூடாது. ஆனால் குழந்தை பேற்றினை சற்று தள்ளிப் போடவேண்டும்.' என்பதாகும்.

இப் புதிய விளக்கம் சரியா?

மேலே கண்ட புதிய விளக்கமானது எந்த அளவிற்குப் பொருத்தமானது என்று இங்கே பார்க்கலாம்.

பந்தித்தல் என்ற சொல்லுக்கு 'கட்டுதல்', 'கூடுதல்' என்ற பொருட்களை சென்னைத் தமிழ் இணையப் பேரகராதி கூறுகிறது. கட்டுதல் என்ற பொதுவான பொருள் விரிவாக்கமாக இங்கே தாலி கட்டுதலைக் குறிப்பதாகவும் கூடுதல் என்பது மணவாழ்வில் கூடுதலைக் குறிப்பதாகவும் கொள்ளலாம். ஆக பந்தித்தல் என்ற சொல்லிற்கு பந்தத்தில் (உறவில்) ஈடுபடுதல் அதாவது திருமணம் செய்தல் என்ற பொருளைக் கொள்வது சாலவும் பொருந்தக் கூடிய ஒன்றே. அடுத்து, படைத்தல் என்பதற்கு 'உயிர்களைப் படைத்தல்' அதாவது 'குழந்தை பெற்றுக் கொள்ளுதலைப்' பொருளாகக் கொள்வதும் பொருந்தக் கூடிய ஒன்றேயாகும். இனி இப் பழமொழி உருவாக்கப் பட்டதன் நோக்கம் என்ன என்று காணலாம்.

இல்லற வாழ்க்கையின் இன்றியமையாமையையும் அதை எவ்வாறு முறையோடு செய்ய வேண்டும் என்பதைப் பற்றியும் இளைய தலைமுறையினருக்கு பெரியவர்கள் சொல்லும் அறிவுரையாக இப் பழமொழி அமைந்துள்ள பாங்கு முதலில் கவனிக்கத் தக்கதாகும். இன்றைய காலகட்டத்தில் பல இளைஞர்களும் இளைஞிகளும் காலாகாலத்தில் திருமணம் செய்துகொள்வதில்லை. மேற்படிப்பு, வேலை, குடும்ப சூழ்நிலை போன்ற பல்வேறு காரணங்களால் பருவ வயதுக்கு வந்த பின்னரும் திருமணம் செய்து கொள்ளாமல் (அ) கொள்ள முடியாமல் இருந்து விடுகின்றனர். இதன் பக்க விளைவாக சமுதாயத்தில் பாலியல் சிக்கல்கள் உள்பட பல தீய பழக்க வழக்கங்களுக்கு இவர்கள் ஆளாக நேரிடுவதை நாம் காண்கிறோம். மேலும் இளமையில் நுகர வேண்டிய இல்லற இன்பத்தையும் இவர்கள் இழந்து விடுகின்றனர். இதைக் கருத்தில் கொண்டே பெரியவர்கள் 'திருமணத்தைத் தள்ளிப் போடவேண்டாம்' என்று கூறியுள்ளனர்.

மேலும் திருமணம் செய்த அனைவரும் உடனுக்குடன் குழந்தை பெற்றுக் கொண்டால் மக்கள் தொகை மிகவும் பெருகி விடும். மக்கள்தொகை பெருக்கத்தினால் வரக்கூடிய சமுதாயச் சிக்கல்கள் பற்றி நாம் நன்கு அறிவோம். அதுமட்டுமின்றி குழந்தை பிறந்ததும் மனைவியின் கவனம் முழுவதும் குழந்தை வளர்ப்பில் திரும்பி விடுகிறது. குழந்தை பெற்ற தாயின் உடலில் பல மாற்றங்கள் உண்டாவதால் அவருக்கு இல்லற இன்பத்தில் நாட்டம் குறைகிறது. இதனால் கணவன்-மனைவியிடையே உள்ள நெருக்கமானது தளர ஆரம்பித்து அவர்களுக்கிடையேயான இல்லற இன்பத்திலும் குறுக்கீடு நேர்கிறது. இதனால் அவர்களுக்கிடையில் புரிதல் குறைய ஆரம்பித்து பிணக்குகள் தோன்றத் துவங்குகின்றன. இதுவே பின்னாளில் மணமுறிவு வரை கொண்டுசென்று விடுகிறது. இதை நாம் பல குடும்பங்களில் நடைமுறையில் காணலாம். குழந்தை பெற்றுக் கொள்வதை 2 லிருந்து 3 ஆண்டுகள் வரை தள்ளிப் போடுவதால் மக்கள்தொகையானது ஓரளவுக்குக் கட்டுப்பாட்டுக்குள் வருவதுடன் கணவன்-மனைவியிடையே புரிதல் ஏற்பட்டு நல்ல இல்வாழ்க்கை அமைவது சாத்தியமாகிறது. இதைக் கருத்தில் கொண்டே பெரியவர்கள் 'குழந்தை பெற்றுக் கொள்வதை சற்று தள்ளிப் போடுங்கள்' என்று கூறியுள்ளனர்.

முடிவுரை:

பெருகி வரும் மக்கள்தொகை ஒவ்வொரு நாட்டிற்கும் மிகப் பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. ஒவ்வொரு நாட்டு அரசாங்கமும் மக்கள்தொகையைக் கட்டுப்படுத்த பல நடவடிக்கைகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளது. நம் நாட்டில் மகாராட்டிர மாநிலம் தற்போது ஒரு புதிய நடைமுறையைக் கொண்டு வந்துள்ளது. குழந்தை பிறப்பை 2 ஆண்டுகள் வரை தள்ளிப் போடுவோருக்கு ரூ.5000 பரிசளிப்பதாக அம் மாநில அரசு அறிவித்துள்ளது. ஆனால் நமது பெரியவர்கள் குழந்தை பெறுவதைத் தள்ளிப் போடுவதின் இன்றியமையாமையை உணர்ந்து அக் காலத்திலேயே இப் பழமொழியின் வாயிலாகக் கூறிச் சென்றுள்ளனர். இனியேனும் இப் பழமொழியை நம் மக்கள் பின்பற்றினால் நாடு வளம்பெறும்.
......................................................................................................

11 கருத்துகள்:

 1. நல்ல ஆய்வு முயற்சி. கருத்தும் ஆற்றுக்கொள்ளத்தக்கதாக உள்ளது . இருந்தாலும் அந்தப் பழமொழி யாரால் எந்த காலகட்டத்தில் உருவாக்கப்பட்டது ?, அன்றைய காலகட்டத்தில் வாழ்ந்த மக்களின் பேச்சு மொழி வழக்கு எப்படி இருந்தது என்பதையும் சேர்த்து ஆய்வு செய்தால் இன்னும் அதிகமான விளக்கங்களைப்பெறலாம் என்பது என் கருத்து.
  வாழ்த்துகளுடன்
  புலியூரான் .

  பதிலளிநீக்கு
 2. பந்திக்கு முன் நின்றும் படைக்கு பின் நின்றும் செயல்பட வேண்டும். அதாவது பந்திக்கு முன் நின்று உபசரிக்க வேண்டும். படைக்கு பின் நின்று ஊக்குவிக்க வேண்டும். என்று கிருபானந்த வாரியார் விளக்கியதாக நினைவு. இருப்பினும் இதுவும் நல்ல விளக்கமே. காலத்திற்கு ஏற்ப பொருள் கொள்வது நன்மை பயக்கும்.

  பதிலளிநீக்கு
 3. நன்றி திரு.ராஜா.

  நன்றி திரு.வீரராகவன்.

  அன்புடன்,

  தி.பொ.ச.

  பதிலளிநீக்கு
 4. திரு.வீரராகவ்ன

  வாரியார் விளக்கப்படி திருமண வீட்டாரின் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்களே பந்திக்கு முன்னால் சென்று பரிமாறுவார்கள். படையிலும் தலைவன் முன்னால் சென்று வழிநடத்தியே போர் புரிவான். எந்த தலைவனும் படைக்குப் பின்னால் இருக்க மாட்டான். அப்படி இருந்தால் அவன் தலைவனே அன்று.

  மேலும் பழமொழிகள் மக்கள் அனைவருக்கும் பொதுவானவை. ஒருசாரருக்கு அதாவது மணவீட்டாரின் உறவினருக்கும் நண்பர்களுக்கும் மட்டுமே பொருந்துவாதாக ஒரு கருத்தை பழமொழிகள் கூறாது என்பது என் கருத்து.

  அன்புடன்,

  தி.பொ.ச.

  பதிலளிநீக்கு
 5. பந்திக்கு முந்து - தலைவன் பந்தியில் எப்பொழுதும் முன்னுக்கு நின்றே செயற்பட வேண்டும்
  அப்பொழுதுதான் குற்றம் குறைகளை நிவர்த்தி செய்ய முடியும்.
  படைக்கு பிந்து -தலைவன் போரில் எப்பொழுதும் பின்னுக்கு நின்றே செயற்பட வேண்டும்
  அப்பொழுதுதான் போரை சரியாக வழி நடத்த முடியும்.

  பதிலளிநீக்கு
 6. உங்கள் பழமொழி விளக்கத்தை நான் முகநூலில் பகிர்ந்து கொள்ளலாமா..

  பதிலளிநீக்கு
 7. தாராளமாகப் பகிர்ந்து கொள்ளலாம் நண்பரே.

  அன்புடன்,

  தி.பொ.ச.

  பதிலளிநீக்கு
 8. ஒரு சிறு சந்தேகம் -
  "பிழையின்றித் தமிழ்" - இந்த தொடரில் "த்" என்ற ஒற்று இடம்பெறுமா? விளக்கம் தேவை

  பதிலளிநீக்கு
 9. வாத்தியார் பிள்ளை மக்கு வைத்தியன் பிள்ளை சீக்கு - இதற்கு ஏதேனும் விளக்கம் உண்டா

  பதிலளிநீக்கு
 10. திரு பொன்.சரவணன் ஐயா.. இதில் 'படைக்குப் பிந்து' பற்றிய விளக்கத்தில் மக்கட்தொகை பெருக்கம் கட்டுப்படுத்துதல் பற்றியும், குடும்ப உறவு மேம்படுதல் பற்றியும் குறிப்பிட்டிருந்தீர்கள். மக்கட்தொகை பெருக்கம் கட்டுப்படுத்துதல் பற்றிய அறிவு வெகு சமீபமாகத்தான் (அதிகப்பட்சம் ஒரு நூற்றாண்டு) நம் மக்களிடையே விழிப்புணர்வு உள்ளது. இஃது பழமொழியாதலால், அந்தப் பழங்காலத்திலேயே மக்கட்தொகை பெருக்கம் கட்டுப்படுத்துதல் பற்றிய அவசியத்தை இவ்வாறு பழமொழியில் சொல்லியிருப்பரோ என்பது ஐயத்திற்குரியதாகின்றது. வேறு எவ்விடமாவது இத்தகு விழிப்புணர்வு பற்றி பேசப்பட்டிருப்பது அறியக்கிடைத்தால் இவ்வையம் தீரும்.

  நன்றியுடன்,
  லோகநாதன்.

  பதிலளிநீக்கு
 11. https://www.scientificjudgment.com/2019/06/proverbs-and-some-understanding-panthiku-munthu-tamil.html

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.