செவ்வாய், 27 செப்டம்பர், 2011

நான்கு கடவுள் - பகுதி 1 (நிலமும் தெய்வமும்)


முன்னுரை:

தொல்காப்பிய பொருளதிகாரத்தில் அகத்திணை இயலில் கூறப்படும் நால்வகைக் கடவுளரை பற்றிய விரிவான செய்திகளை ஆய்வுசெய்வதே இக் கட்டுரையின் நோக்கம் ஆகும். இருந்தாலும் அவற்றுடன் தொடர்புடைய பல வரலாற்று உண்மைகளையும் இங்கே காணப் போகிறோம். முதலில் நால்வகைக் கடவுளரைப் பற்றிக் கூறும் தொல்காப்பியப் பாடலைக் காணலாம்.

மாயோன் மேய கானுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமதில் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலென
சொல்லிய முறையான்
சொல்லவும் படுமே.
- தொல்காப்பியம்-பொருளதிகாரம்-
அகத்திணை இயல்-பாடல் எண்:5

(பி.கு: இப்பாடலில் வரும் கானுறை, பெருமதில் என்ற சொற்கள் நமது 'மாயோன் மேய' என்ற ஆய்வுக் கட்டுரையின் படி திருத்தம் செய்யப்பட்டுள்ளது.)

இப் பாடலில் மாயோன், சேயோன், வேந்தன், வருணன் என்ற நால்வகைக் கடவுளரைக் குறிப்பிடுகிறார் தொல்காப்பியர். இந்த நால்வகைக் கடவுளரும் யார் யார்? என்பதை ஆராய்வதே இக் கட்டுரையின் முதல் நோக்கமாகும்.

தற்போதைய விளக்கம்:

மாயோன் என்றால் மாமை (இளங்கருப்பு) நிறமுள்ளவன் என்று அகராதிகள் பொருள் கூறுகின்றன. வண்ணத்தின் அடிப்படையில் இச்சொல் மாமை நிறங்கொண்ட கடவுளாகிய திருமாலைக் குறிக்கிறது. பலவகையான பூக்களின் கலவையான மணத்தை எப்போதும் உடையதாயிருக்கும் காடு மற்றும் காடு சேர்ந்த நிலங்களை ஆளும் தெய்வமாகத் திருமால் கூறப்படுகிறார்.

சேயோன் என்றால் செம்மை (இளஞ்சிவப்பு) நிறமுள்ளவன் என்று அகராதிகள் பொருள் கூறுகின்றன. வண்ணத்தின் அடிப்படையில் இச்சொல் செம்மை நிறங்கொண்ட கடவுளாகிய (செவ்வேள்) முருகவேளைக் குறிக்கிறது. மேகங்கள் படிந்திருக்கும் மலை மற்றும் மலை சார்ந்த இடங்களை ஆளும் தெய்வமாக முருகவேள் கூறப்படுகிறார்.

வேந்தன் என்றால் இந்திரன் (தேவர் கோமான்) என்று அகராதிகள் பொருள் கூறுகின்றன. இனிய சுவை உடைய ஆற்றுநீர், ஊற்றுநீர்  போன்ற நீர்வளங்கள் நிறைந்த வயல் மற்றும் வயல் சார்ந்த இடங்களை ஆளும் தெய்வமாக இந்திரன் கூறப்படுகிறார்.

வருணன் என்றால் மழைக்கடவுள் என்று அகராதிகள் பொருள் கூறுகின்றன. பெரிய மணற்பரப்பையும் எப்போதும் ஒலித்துக் கொண்டிருக்கும் அலைகளையும் உடைய கடல்  மற்றும் கடல் சார்ந்த நிலங்களை ஆளும் தெய்வமாக வருணன் கூறப்படுகிறார்.

இயற்கையே கடவுள்:

தொல்காப்பியத்தில் வரும் மாயோன், சேயோன், வேந்தன், வருணன் என்ற சொற்களில் ஆண்பாலுக்குரிய 'அன்' விகுதி சேர்ந்து வருவதால் அவை பொதுவாக ஆண்மக்களை அல்லது ஆண்பால் கடவுளரைக் குறிப்பது போல ஒரு தோற்றம் உருவாகிறது. இதுவே பின்னாளில் பலப்பல கற்பனைகளுக்கு இடமளித்து ஆண்மக்களின் உருவம் கொண்ட கடவுளாக எண்ணுவதற்கு அடிகோலி இருக்கிறது. உண்மையில் இந்த நான்கு சொற்களும் எதைக் குறிக்கிறது?

உண்மையில் இந்த நான்கு சொற்களும் ஆண்மக்களை அல்லாமல் இயற்கைப் பொருட்களையே குறிக்கிறது. ஆம் இயற்கை வழிபாடே பழந்தமிழர்களின் முதன்மை வழிபாடாகும். தன்னைச் சுற்றியுள்ள இயற்கையை உற்றுநோக்குவதும் அதன் சிறப்பைப் போற்றிப்பாடி மகிழ்வதுமே பழந்தமிழரின் வழிபாடாகும். தமக்கு உதவியாய் இருந்து தம்மைப் பாதுகாத்து வருகின்ற இயற்கையினை தமது வாழ்வின் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் அவன் நினைவுகூற மறக்கவில்லை. மகிழ்ச்சி, வீரம், துயரம், அழுகை போன்ற எந்த உணர்ச்சி நிலையிலும் அவன் இயற்கையைப் பற்றி பாடுவதற்கு மறக்கவில்லை. நமது சங்க இலக்கியங்களே இதற்குச் சான்றாக இருக்கின்றன.

மழை:

இயற்கையின் பல்வேறு நிகழ்வுகளில் 'மழை' ஒரு மிகமிக இன்றியமையாத நிகழ்வாகும். நீரின்றி அமையாது உலகு என்ற வள்ளுவனின் வாக்கிற்கேற்ப மழையே உலகின் தன்மையினை நிர்ணயிக்கிறது. மாந்தரின் பண்புகளையும் அரசனின் ஆட்சியினையும் மாற்றியமைக்க வல்லது இந்த மழை. பயிர்களின் பிறப்பிற்கு உறுதுணையாய் இருப்பது மட்டுமின்றி பல உயிர்களின் வாழ்விற்கும் ஆதாரமாய் அமைந்திருப்பது இம் மழையாகும்.

இம் மழையுடன் தொடர்புடையவை நான்கு. அவை கடல், கதிரவன், கார்மேகம் மற்றும்  குறிஞ்சி (மலை).

கதிரவனின் வெப்பத்தால் கடல் நீர் ஆவியாகி கார்மேகங்கள் உருவாகின்றன. விண்ணில் தவழும் இம் மேகங்கள் மலைகளின் மேல் தவழ்ந்து விளையாடும் அழகைப் பாடாத புலவர் இல்லை எனலாம். பின்னர் இம் மேகங்கள் மழையாய்ப் பொழிந்து மலைகளையும் மண்ணையும் குளிரச் செய்கின்றன.

நான்கு கடவுள்:

இந்த மழை நிகழ்ச்சியுடன் தொடர்புடைய நால்வகை இயற்கைப் பொருட்களையே பழந்தமிழர்கள் போற்றிப்பாடி மகிழ்ந்து வந்துள்ளனர் என்பது இங்கே குறிப்பிடத்ததக்கது. ஆம், பழந்தமிழர்கள் வழிபட்டு வந்த இந்த நால்வகை இயற்கைப் பொருட்கள் இந்த கடல், கதிரவன், கார்மேகம் மற்றும் மலையே ஆகும்.

மழை தரும் மேகங்கள் கருநிறமுடையவை. இந்த மேகங்களையே மாயோன் என்று குறிப்பிடுகிறார் தொல்காப்பியர்.
மேகங்கள் உருவாகக் காரணமாய் இருப்பது கதிரவன். இக் கதிரவனையே வேந்தன் என்று குறிப்பிடுகிறார் தொல்காப்பியர்.
மேகங்களின் பிறப்பிற்கு அடிப்படையாய் இருப்பது கடல். இக் கடலையே வருணன் என்று குறிப்பிடுகிறார் தொல்காப்பியர்.
மழையின் பயனை நுகர்வது மலை அதாவது நிலம் ஆகும். இந்த நிலத்தையே சேயோன் என்று குறிப்பிடுகிறார் தொல்காப்பியர்.

முருகன் வள்ளித் திருமணம்:.

என்றால் இந்த மழை என்பது யாரைக் குறிக்கிறது?. அது தான் வள்ளி. பல்வேறு வளங்களைத் தருவதால் மழைக்கு வள்ளி (வள்ளன்மையுடையவள்) என்று பெயர். வாரி வழங்குவதில் மாரிக்கு நிகர் உண்டா?. கைம்மாறு கருதாமல் உலக உயிர்கள் அனைத்திற்கும் பயன் தருவது மழை. பாரிவள்ளலைப் போற்றும் ஒரு புலவர் அவனை மாரியுடன் (மழையுடன்) ஒப்பிட்டுக் கூறுகிறார்.

பாரி பாரி என்று பல ஏத்தி
ஒருவர் புகழ்வர் செந்நாப் புலவர்
பாரி ஒருவனும் அல்லன்
மாரியும் உண்டு ஈண்டு உலகு புரப்பதுவே.  - புறநானூறு:

இந்த மழைநீர் பூமியில் விழும் முதல் இடம் மலையே ஆகும். மலை என்பதும் ஒருவகை நிலமே. பொதுவாக மலைகளில் உள்ள மண் செம்மண்ணாகத் தான் இருக்கும். இந்த செம்மண் நிலமானது மழைநீருடன் இரண்டறக் கலந்திருக்கும் நிலையே முருகு புணர்ந்து இயன்ற வள்ளி (நற்றிணை: 82) என்னும் தொடரால் குறிப்பிடப்படுகிறது. மண்ணிற்கு பல நிறங்கள் உண்டென்றாலும் செந்நிறமே மண்ணுக்குரிய பொதுவான நிறம். இந்த செம்மண் நிலத்தைத்தான் செவ்வேள் என்று கூறுவர். வேள் என்றால் மண், நிலம் என்ற பொருளும் உண்டு. வேளாண்மை என்பது மண்ணை ஆளுதல் என்ற பொருளில் விவசாயத்தைக் குறிப்பதாகும்.  இனி,

மங்குல் (மேகம்) ஆகிய திருமால் மாமனாய் இருந்து
மழை ஆகிய வள்ளி மகளை
மலை ஆகிய முருகனுக்கு

மணம் செய்விப்பதே மழை நிகழ்வாகும் என்றால் அது சாலப் பொருத்தமாய் உள்ளது அல்லவா?

சரி, திருமணம் என்றால் சாட்சிகள் அதாவது பார்வையாளர்கள் இல்லாமலா?. குறைந்தது இருவராவது வேண்டுமே. அவ்வகையில் இத் திருமணத்திலும் இரண்டு சாட்சிகள் உண்டு. ஒருவர் சூரியன். இவர் பூமியாகிய முருகவேளைத் தோற்றுவித்த தந்தை. இன்னொருவர் சந்திரன். ஆகமொத்தம், சூரிய சந்திரர் சாட்சியாக இத் திருமணம் இனிதே நடைபெறுகிறது.

தொல்காப்பியத்தில் வள்ளி:

மழை என்ற பொருளில் வள்ளி என்ற சொல்லை தொல்காப்பியரும் பயன்படுத்தியுள்ளார்.

கொடிநிலை கந்தழி வள்ளி என்ற
வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றும்
கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே. (தொல்.புற - 33)

இதில் வரும் வள்ளி என்பது மழையினைக் குறிக்கும். கந்தழி என்பது பற்றறுத்த தன்மையினைக் குறிக்கும். கொடிநிலை என்பது கொடிபோல உயர்ந்த நிலையில் பறந்தவாறு இறைவனின் புகழை பறைசாற்றிக் கொண்டிருக்கும் அறத்தைக் குறிக்கும்.

தொல்காப்பியர் கூற்றுப்படி, கடவுள் வாழ்த்தினை அடுத்து அறமும், அதனையடுத்து பற்றின்மையும், அதனையடுத்து மழையின் சிறப்பும் பாடப்பெற வேண்டும். ஏனென்றால் இறைவனுக்கு மிக அணுக்கமாக இருப்பது அறம் தானே. அதன்படி திருக்குறளில் கடவுள் வாழ்த்தை அடுத்து அறன் வலியுறுத்தலும், அதையடுத்து நீத்தார் பெருமையும் அதையடுத்து வான்சிறப்பும் வந்திருக்க வேண்டும். ஆனால் இன்று நாம் காணும் திருக்குறளில் கடவுள் வாழ்த்து, வான்சிறப்பு, நீத்தார்பெருமை, அறன் வலியுறுத்தல் என்று முறை வைக்கப்பட்டுள்ளது. அதாவது கடவுளுக்கு அடுத்த படியாக மழை வைக்கப்பட்டுள்ளது. இம் முறைவைப்பினை வள்ளுவர் தான் செய்தாரா அல்லது பின்னால் வந்த உரையாசிரியர்கள் செய்தனரா எனத் தெரியவில்லை.

ஆனால் வள்ளுவரே இந்த முறை மாற்றத்தினை செய்திருக்கலாமோ என்று எண்ணும் வகையில் ஒரு குறள் இருக்கிறது.

தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்
வானம் வழங்கா தெனின்.  - குறள்: 19.

அறச்செயல்களான தானமும் தவமும் மழை இல்லையேல் இவ் உலகில் நிலைபெறாது என்கிறார் வள்ளுவர். இது உண்மைதான். ஏனென்றால் மழை இல்லையேல் உலகில் உணவுவளம் இல்லை. உணவு இல்லையேல் மனிதப் பண்புகளே இல்லை. பசி வந்தால் பத்தும் பறந்து போவதைப்போல மனிதன் மனிதப்பண்பினையே மறந்து உணவுக்காக உயிர் வாழ்வதற்காக எதையும் செய்யத் துணிவான். இதை நாம் கண்கூடாகக் காண்கிறோம். ஆகவே அறத்தைவிட இன்றியமையாதது மழை என்றால் அது மிகையாகாது.

நிலமும் தெய்வமும்:

காடும் காடுசார்ந்த இடமுமாகிய முல்லைநிலத்திற்குத் தெய்வம் மாயோன் என்றார் தொல்காப்பியர். அதைப்போல மலையும் மலைசார்ந்த இடமாகிய குறிஞ்சி நிலத்திற்குத் தெய்வம் சேயோன் என்றார். இனிய நீர்வளங்களை உடைய வயலும் வயல் சார்ந்த மருத நிலத்திற்குத் தெய்வம் வேந்தன் என்றும் கடலும் கடல்சார்ந்த நெய்தல் நிலத்திற்குத் தெய்வம் வருணன் என்றும் கூறுகிறார். இந்த நிலங்களுக்கும் தெய்வங்களுக்கும் என்ன தொடர்பு? எதன் அடிப்படையில் இன்ன நிலத்திற்கு இன்ன தெய்வம் என்று வகுத்தனர் பெரியோர்?. இதைப் பற்றி இங்கே காணலாம்.

முல்லை நிலத்தின் மக்கள் இடையர், இடைச்சியர், ஆயர், ஆய்ச்சியர் ஆகியோர். இவர்களின் முதன்மைத் தொழில் ஆடு, மாடுகளை மேய்த்தல் ஆகும். காலையில் மேய்ப்புக்குச் செல்லும் ஆண்மக்கள் மாலையில் வீடு திரும்பும் வரை அவர்களது வரவுக்காக இல்லத்தில் காத்திருப்பர் அவரது இல்லத்தரசிகள். இந்த இருத்தல் (காத்திருத்தல்) நிமித்தம் மாலைநேரத்தில் (பிற்பகல் 6 மணி முதல் பிற்பகல் 10 மணி வரை) நிகழ்வதால் மாலைப் பொழுதே முல்லைக்குரிய சிறுபொழுதாக வைக்கப்பட்டது. முல்லைநிலத்துக் கால்நடைகளின் முதன்மை உணவான பசும்புற்கள் நன்கு செழித்து வளர்வது கார்காலமே ஆகும். அதனால் தான் முல்லைநிலத்துக்குரிய பெரும்பொழுதாக கார்காலத்தை வைத்தனர். இந்த கார்காலத்தில் தான் கரியநிற மேகங்கள் கூட்டம் கூட்டமாகத் திரிந்து கொண்டிருக்கும். எனவே தான் மேகத்தினை (மாயோன்) முல்லைநிலத்தின் தெய்வமாகக் கொண்டனர் பெரியோர்.

குறிஞ்சி நிலத்தின் மக்கள் குறவர், குறத்தியர் ஆவர். இவர்களின் முதன்மைத் தொழில் செந்தினைப் பயிர்செய்தல் ஆகும். தினைகளை மலைச்சாரல்களில் பயிரிட்டு வளர்க்கும்பொழுது இப் பயிர்களுக்கு யானைகள் போன்ற விலங்குகளால் தொல்லை ஏற்படும். பகல் நேரத்தில் பெற்றோரும் சகோதரர்களும் தினைப்புனங்களில் வேலைசெய்த அலுப்பினால் இரவில் தினைப்புனங்களில் காவல் இருக்க தமது கன்னிப் பெண்களை அவளது தோழிமாருடன் காவலுக்கு வைப்பர். என்னதான் காவல் இருந்தாலும் நள்ளிரவு நேரத்தில் கண்ணயராமல் இருக்க முடியாதே! தோழிகள் கண்ணுறங்க நள்ளிரவாகிய சாமத்தில் காதல் கொண்ட தலைவனும் தலைவியும் சந்திப்பர். குறிஞ்சி நிலத்துக்குரிய கூடல் நிமித்தம் இந்த நேரத்தில் நிகழ்வதால் யாமப்பொழுதே (பிற்பகல் 10 மணி முதல் முற்பகல் 2 மணி வரை) குறிஞ்சிக்குரிய சிறுபொழுதாக வரையறுக்கப்பட்டது. மேலும் ஆண்டுமுழுவதும் மலைச்சரிவுகளில் பயிர் செய்யமுடியாது. மழைக்காலத்தில் மழைநீரானது சரிவான நிலங்களில் விளைந்துள்ள பயிர்களை எளிதாக அடித்துச்சென்று விடும். மழை குறைந்த குளிர் காலம் மற்றும் முன்பனிக் காலங்களில் தான் தினைப்பயிர் செய்ய முடியும். எனவே இந்த காலங்கள் தான் குறிஞ்சிக்குரிய பெரும்பொழுதாகக் கொள்ளப்பட்டன. குறிஞ்சி நில மக்களின் முதன்மை உணவு செந்தினை மாவும் செந்தேனும் ஆகும். இவற்றை விளைவித்துத் தருகின்ற மலைநிலமும் ஒரு செம்மண் பூமியாவதால் செம்மண் நிலமான மலையினை (சேயோன்) குறிஞ்சி நிலத்தின் தெய்வமாகக் கொண்டனர் முன்னோர்.

மருத நிலத்தின் மக்கள் உழவர், உழத்தியர் ஆவர். இவர்களின் முதன்மைத் தொழில் நெல் சாகுபடி ஆகும். பொன்னி, சம்பா போன்ற பலவகையான அரிசி வகைகளை வயல்நிலங்களில் பயிரிட்டு வளர்ப்பர். ஓர் ஆண்டுக்கு முப்போகம் நெல் சாகுபடி செய்வர். எனவே மருத நிலத்திற்கு (ஆண்டு முழுவதும்) ஆறு பருவங்களும் பெரும்பொழுதாகக் கொள்ளப்பட்டன. மருத நிலத்துக்குரிய நிமித்தம் ஊடல் ஆகும். தலைவியை விட்டு பரத்தையரிடம் சென்று இரவு முழுவதும் கழித்த தலைவன் அதிகாலையில் (வைகறையில்) தனது இல்லம் திரும்புவான். வாசல் கதவைத் திறக்காமல் தலைவனுடன் சண்டை இடுவாள் தலைவி. இந்த ஊடல் நடைபெறுவது வைகறை என்பதால் வைகறையே (முற்பகல் 2 மணி முதல் முற்பகல் 6 மணி வரை)  மருதநிலத்தின் சிறுபொழுதாகக் கொள்ளப்பட்டது. நெல் சாகுபடிக்கு மழை மட்டும் இருந்தால் போதாது. அதை அறுவடை செய்ய வெயிலும் வேண்டும். மழைமேகங்களைத் தோற்றுவித்து மழைக்குக் காரணமாய் இருப்பதுடன் பயிர்கள் வளரவும் அறுவடை செய்யவும் தேவையான வெயிலும் வெப்பமும் தருவதால் கதிரவனே (வேந்தன்) மருத நிலத்துக்குரிய தெய்வமாகக் கொள்ளப்பட்டான்.

நெய்தல் நிலத்தின் மக்கள் நுளையர், நுளைச்சியர் ஆவர். இவர்களின் முதன்மைத் தொழில் கடலில் மீன் பிடித்தல் ஆகும். மீன்பிடித் தொழில் ஆண்டுமுழுவதும் நடைபெறுவதால் நெய்தல் நிலத்திற்கு ஓராண்டின் ஆறு பருவங்களும் பெரும்பொழுதாகக் கொள்ளப்பட்டன. பெற்றோரும் சகோதரர்களும் மீன்பிடிக்கச் சென்றுவிட கடற்கரை மணல் மேடுகளில் மீன்களை காயவைக்கும் வேலையில் தம் வீட்டுக் கன்னிப்பெண்களை அமர்த்தியிருப்பர். இச்சமயத்தில் அங்குவரும் தலைவன் தலைவியை சந்திப்பான். காதலில் மகிழ்ந்திருக்கும் பொழுது நேரம் போவதே தெரியாதே!. திடீரென்று அந்திசாயத் துவங்கிவிடும். கடலில் மீன்பிடிக்கச் சென்ற பரதவ மக்கள் அந்திசாயும் பொழுதாகிய எற்பாட்டில் தான் கரைக்குத் திரும்புவார்கள். இதனால் தலைவன் தலைவியைப் பிரிந்து சென்று விடுவான். பிரிந்து சென்ற தலைவனை நினைத்து இரங்கி (வருந்தி) இருப்பாள் தலைவி. இப்படி இரங்கல் நிமித்தம் நிகழ்கின்ற இந்த எற்பாடே (பிற்பகல் 2 மணி முதல் பிற்பகல் 6 மணி வரை) நெய்தல் நிலத்தின் சிறுபொழுதாக வரையறுக்கப்பட்டது. கடலை நம்பியே வாழ்ந்து வந்த நெய்தல்நில மக்கள் கடலையே (வருணன்) தெய்வமாகக் கொண்டனர்.

நில வைப்பு முறை:

தலைப்பில் கண்ட நூற்பாவில் முல்லைநிலத்தை முதலிலும் அதற்கடுத்து குறிஞ்சியும் அதனையடுத்து மருதமும் இறுதியாக நெய்தலையும் வைத்துப் பாடியுள்ளார் தொல்காப்பியர். இது ஏன் என்று காண்போம்.

பழந்தமிழர் வாழ்க்கை நெறியினை கற்பு, களவு என்று இரண்டாக வகுத்திருந்தனர். இதில் கற்பு எனப்படுவது பல்லோரறிய திருமணம் புரிந்து இல்லறத்தில் ஈடுபடுவது. களவு என்பது யாரும் அறியாமல் காதல் செய்வது. நால்வகை நிலங்களில் முல்லை நிலத்தில் மட்டுமே கற்புநெறி வாழ்க்கையைக் காட்டியுள்ளனர் சான்றோர். முல்லையில் ஏன் களவு நடைபெறவில்லை? காரணம் முல்லைநில மக்களின் வாழ்க்கை முறைதான். ஏனை நிலங்களைப் போலன்றி முல்லைநிலத்தில் ஆண்மக்கள் மட்டுமே ஆடு, மாடுகளை மேய்ப்பிற்கு ஓட்டிச் செல்வர். அவரது பெண்டிரும் பிள்ளைகளும் வீட்டில் இருந்துகொண்டு கன்றுக்குட்டிகளையும் ஆட்டுக் குட்டிகளையும் பராமரிப்பர். கன்னிப் பெண்களுடன் அவரது தாயாரும் மற்றோரும் எப்போதும் உடன் இருப்பதால் இங்கு களவில் சந்திக்க வாய்ப்பு அமைவதில்லை. இருந்தாலும் பெண்கள் தமது விருப்பப்படி கணவரைத் தேர்ந்தெடுக்க ஒரு வழிமுறையும் அவர்களிடத்தில் இருந்திருக்கிறது. அதுதான் ஏறு தழுவுதல் விளையாட்டு. இவ் விளையாட்டில் வெற்றிபெறும் காளையரையே பலர் முன்னிலையில் பெண்கள் மணந்து கொள்வர். ஆக முல்லை நிலத்தின் காதல் மற்ற நிலங்களின் காதலைப் போலன்றி பல்லோரறிய நிகழ்வது. எனவே இது களவாகாது. களவினை விட கற்பு உயர்ந்தது என்பதால் கற்புநெறியை பின்பற்றும் முல்லை நிலத்தை முதலில் வைத்தார் தொல்காப்பியர்.

இந்த முல்லைநிலத்திற்கு உரிய சிறுபொழுது மாலைப் பொழுதாகும். இந்த மாலைப் பொழுதை அடுத்து யாமமும் அதனையடுத்து வைகறையும் அதனையடுத்து காலை, பகல், எற்பாடு என்று வரிசையாக வரும். இந்த ஆறு சிறுபொழுதுகளின் வரிசைக்கேற்பவே நிலங்களையும் அமைத்துப் பாடியுள்ளார் தொல்காப்பியர். கீழ்க்காணும் படம் இதனை விளக்கும்.

மாலை------> யாமம் -------> வைகறை -------> காலை -------> பகல் ----------> எற்பாடு
(6 -10)            (10 - 2)                        ( 2 - 6)                  (6 - 10)            (10 - 2)              ( 2 - 6)

முல்லை ------> குறிஞ்சி ------> மருதம் -------> திணை இல்லை ------------> நெய்தல்

சிறுபொழுதினைப் போலவே பெரும்பொழுதிலும் கார்காலத்தை அடுத்தே கூதிரும் முன்பனியும் வரும். அவ்வகையிலும் கார்காலத்துக்குரிய முல்லை முன்னதாகவும் கூதிர் மற்றும் முன்பனிக் காலங்களைக் கொண்ட குறிஞ்சி பின்னதாகவும் வைக்கப்பட்டது. ஆறு பருவங்களையும் பெரும்பொழுதுகளாகக் கொண்ட மருதமும் நெய்தலும் இவற்றின் பின்னால் வைக்கப்பட்டன. கீழ்க்காணும் படம் இதனை விளக்கும்.

கார்காலம் -------> கூதிர்,முன்பனி -------> ஆறு பருவங்கள்
முல்லை ---------> குறிஞ்சி -------------------> மருதம், நெய்தல்


                                                                             தொடரும்....

5 கருத்துகள்:

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.