பாடல்:
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடு வாழ்வார் - குறள் 6
தற்போதைய விளக்கங்கள்:
கலைஞர் உரை: மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐம்பொறிகளையும் கட்டுப்படுத்திய தூயவனின் உண்மையான ஒழுக்கமுடைய நெறியைப் பின்பற்றி நிற்பவர்களின் புகழ்வாழ்வு நிலையானதாக அமையும்.
மு.வ உரை: ஐம்பொறி வாயிலாக பிறக்கும் வேட்கைகளை அவித்த இறைவனுடைய பொய்யற்ற ஒழுக்க நெறியில் நின்றவர், நிலை பெற்ற நல்வாழ்க்கை வாழ்வர்.
சாலமன் பாப்பையா உரை: மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்து பொறிகளின் வழிப் பிறக்கும் தீய ஆசைகளை அழித்து கடவுளின் பொய்யற்ற ஒழுக்க வழியிலே நின்றவர் நெடுங்காலம் வாழ்வார்.
உரைகளில் உள்ள தவறுகள்:
இரண்டாவது உரையில் இறைவனை 'ஐம்புலன்களை அடக்கியவன்' என்று கூறியுள்ளனர். இது சற்றும் பொருத்தமில்லாத கருத்தாகும். ஏனென்றால் இறைவனுக்கு மெய், வாய், கண், மூக்கு, காது போன்ற புலன்களே இல்லை. புலன்களே இல்லாதபோது அவற்றை அடக்குதல் எவ்வாறு?. 'இல்லை, இல்லை, இறைவனுக்கும் ஆதியில் ஐம்புலன்கள் இருந்தன. பின்னர் இறைவன் அவற்றை தன் தவத்தால் அவித்து இல்லாமல் செய்துவிட்டான்.' என்று கூறுவோரும் உளர். இந்தக் கூற்றும் தவறானதே ஆகும். ஏனென்றால் ஆதியில் இறைவனுக்கு ஐம்புலன்கள் இருந்ததாகக் கொண்டால் அதை 'இறைநிலை' யாகக் கொள்ள முடியாது; 'மனிதநிலை'யாகத் தான் கொள்ள முடியும்.
ஆம், இறைவனும் ஒருகாலத்தில் மனிதனாக அவதரித்துப் பின்னர் தான் இறைநிலைக்கு உயர்ந்தார் என்று விளக்கம் கூறுவோரும் உளர். இவ் விளக்கம் திருவள்ளுவரைப் பொறுத்தமட்டில் ஏற்புடையதன்று. ஏனென்றால் 'தனக்கு உவமை இல்லாதவன் இறைவன்' என்று இன்னொரு குறளில் கூறியிருக்கிறர்ர் வள்ளுவர். இக் குறட்பாவின்படி 'இறைவன் ஒருவனே ஆவான். இறைவனுக்கு ஈடு இணை யாரும் இல்லை' என்னும் கருத்து பெறப்படுகிறது. இதில் இருந்து மனிதர்களாகப் பிறந்தோர் ஒருகாலத்திலும் இறைவனுக்கு நிகராக உயர முடியாது என்னும் கருத்து உறுதிசெய்யப் படுகிறது.
முதல் மற்றும் மூன்றாவது உரைகளில் முற்றிலும் முரண்பாடான கருத்து கூறப்பட்டுள்ளது. கடவுளைப் பற்றிக் கூறாமல் ஐம்புலன்களை அடக்கி வாழும் மனிதர்களை அதாவது நீத்தார் பெருமையை முன்னிறுத்திப் பொருள் கூறியுள்ளனர். இக் கருத்தானது 'கடவுள் வாழ்த்து' என்னும் அதிகாரத்திற்குப் பொருத்தமில்லாமல் இருக்கிறது. அதுமட்டுமின்றி, இவருடைய உரைவிளக்கப்படி, 'பொறிவாயில் ஐந்தவித்தான்' என்னும் தொடர் ஐம்புலன் அடக்கும் மனிதரைக் குறிக்கிறதென்றால் இக் குறளில் எந்த சொல் கடவுளைக் குறிக்கிறது?. சொல்லே இல்லாதநிலையில் இவருடைய உரைவிளக்கத்தில் கடவுள் எங்கிருந்து வந்தார்?. குறளின் முக்கிய பொருளான கடவுள் என்ற பொருளே இவ் உரையில் இட்டுக்கட்டப் பட்டுள்ளமையால் இவ் விளக்க உரைகள் தவறாகக் கொள்ளப்படுகிறது.
மேற்காணும் தவறான பொருள் உரைகளுக்கு மூலகாரணமாக அமைந்தது 'ஐந்தவித்தான்' என்ற சொல்லே ஆகும். இச் சொல் இக் குறளில் வேண்டுமென்றே தருவிக்கப்பட்ட சொல்லாகும். குறிப்பிட்ட ஒரு சமயத்தார் திருவள்ளுவரை தமது சமயத்தைச் சேர்ந்தவராகக் காட்டிக்கொள்ள திருக்குறளில் முன்னர் இருந்த சொல்லைத் திருத்தி இவ்வாறு எழுதி விட்டனர். இனி இச் சொல்லின் உண்மையான வடிவம் என்ன என்பதையும் இக் குறளுக்கு உண்மையான பொருள் என்ன என்பதனையும் காணலாம்.
திருந்திய குறள்:
ஐந்தவித்தான் என்ற சொல்லுக்குப் பதிலாக அந்தணன்தாள் என்று வரவேண்டும். இனி இக்குறளின் திருந்திய வடிவம் இது தான்:
பொறிவாயில் அந்தணன்தாள் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடு வாழ்வார்
இக் குறளுக்குப் பொருள் கொள்ளுமிடத்து 'பொறிவாயில்' என்பதனை 'பொறி+வாய்+இல்' என மூன்றாகப் பிரித்துப் பொருள் கொள்ள வேண்டும். பொறி என்னும் சொல் இங்கே அடையாளம் அல்லது உருவத்தைக் குறிக்கும். வாய் என்னும் சொல் இங்கே மொழியைக் குறிக்கும். நெறிதல் என்றால் வளைதல் என்று பொருள். நெறிநிற்றல் என்பது வளைந்து நிற்றல் அதாவது பணிந்து வணங்குதலைக் குறிக்கும். இனி இக்குறளின் திருந்திய பொருள் இதுதான்:
உருவமும் மொழியும் (பெயரும்) இல்லாத அந்தணனாகிய இறைவனின் திருவடிகளைக் கள்ளமில்லாத ஒழுக்கத்துடன் பணிந்து நிற்பவர்கள் (புகழால்) நெடுங்காலம் நிலைத்து வாழ்வர்.
நிறுவுதல்:
கடவுளின் திருவடிச் சிறப்புகளைப் போற்றுவதே கடவுள் வாழ்த்தின் நோக்கமாகும். அவ் வகையில் இக் குறளிலும் இறைவனின் திருவடிச் சிறப்பினையே கூறியுள்ளார் வள்ளுவர். சரி, திருவள்ளுவர் பொறிவாயில் ஐந்தவித்தான் என்று எழுதாமல் பொறிவாயில் அந்தணன்தாள் என்று தான் எழுதியிருப்பார் என்பதற்கு என்ன ஆதாரங்கள் உள்ளன?. அவற்றைப் பார்ப்போம்.
1. இறைவனுக்கு ஐம்புலன்கள் இல்லை எனும்போது ஐம்புலன்களை அடக்கவேண்டிய தேவையும் இல்லை. எனவே ஐந்தவித்தான் என்ற சொல் கடவுளுக்கு சற்றும் பொருந்தாது. ஆனால் அந்தணன்தாள் என்ற சொல் கடவுளின் திருவடியைக் குறிக்கும் சொல்லாகும்.
2. ஐந்தவித்தான் என்ற சொல்லும் அந்தணன்தாள் என்ற சொல்லும் எழுத்துக்களின் எண்ணிக்கையாலும் (ஏழு) ஓசை அமைப்பாலும் சீர் அமைப்பாலும் (நேர்நிரைநேர்) ஒத்த சொற்கள். எனவே ஒன்றுக்கொன்று பதிலீடாகப் பயன்படுத்தப் பட்டுள்ளன.
3. முதல் குறள் நீங்கலாக ஒவ்வொரு குறளிலும் இறைவனின் திருவடிகளைக் குறிக்கின்ற தாள், அடி, புகல் போன்ற சொற்கள் பயன்படுத்தப் பட்டுள்ளன. அவ் வகையில் இக் குறளிலும் இம் மூன்று சொற்களில் ஏதேனும் ஒன்று கண்டிப்பாக வரவேண்டும். அவ் வகையிலும் அந்தணன்தாள் என்ற சொல் பொருத்தமாக உள்ளது.
4. கடவுள் வாழ்த்தில் எட்டாவதாக வரும் குறளிலும் அந்தணன்தாள் என்ற சொல் இதே பொருளில் பயின்று வந்துள்ளது. 'அறவாழி அந்தணன்தாள் சேர்ந்தார்க் கல்லால் பிறவாழி நீந்தல் அரிது.' எனவே இந்த ஆறாவது குறளிலும் அந்தணன்தாள் என்ற சொல்லைப் பயன்படுத்தியிருக்க அதிக வாய்ப்புண்டு.
5. முதல் குறள் நீங்கலாக அனைத்து குறள்களிலும் இறைவனின் பண்பினைக் கூறிய பின்னர் திருவடிகளைக் குறிப்பிடும் முறை உள்ளது. அம் முறைப்படி இக் குறளிலும் இறைவனின் பண்புகளைக் குறிக்கும் பொறிவாயில் என்ற சொல்லை அடுத்து திருவடிகளைக் குறிக்கும் சொல்லே வரவேண்டும். அவ் வகையில் அந்தணன்தாள் என்ற சொல் பொருத்தமானதே ஆகும்.
மேலே கண்ட ஆதாரங்களின் அடிப்படையில் திருவள்ளுவர் இக் குறளில் ஐந்தவித்தான் என்று எழுதாமல் அந்தணன்தாள் என்றே எழுதியிருப்பார் என்று முடிவு செய்கிறோம். மேலும் இறைவனின் திருவடிச் சிறப்பினை ஒவ்வொரு குறளிலும் போற்றுகின்ற வள்ளுவர் இக் குறள் மூலம் உருவ வழிபாடுகளுக்கும் மொழி வேறுபாடுகளுக்கும் அப்பாற்பட்டவன் இறைவன் என்பதனை வலியுறுத்துகிறார். ஒவ்வொரு சமயத்தாரும் இறைவனுக்கென்று ஒரு அடையாளம் அல்லது உருவத்தைப் படைத்து வழிபடுகின்றனர். ஒவ்வொரு மொழியினரும் அந்த இறைவனுக்குப் பல பெயர்களைச் சூட்டி மகிழ்கின்றனர். இச் செயல்களெல்லாம் அம் மக்களுக்கு ஒருவிதத்தில் மகிழ்ச்சியைக் கொடுப்பதாக இருக்கலாம். ஆனால் இறுதியில் இவற்றால் மக்களிடையே சண்டை சச்சரவுகளே மிகுதியாகிறது. இதை நாம் இன்று கண்கூடாகக் காண்கிறோம். பெருநாவலராகிய வள்ளுவர் 'எதிர்காலத்தில் இவ்வாறெல்லாம் இறைவனின் பெயரால் சண்டைகள் நடக்கும்' என்பதனை முன்கூட்டியே அறிந்தார் போலும். அதனால் தான் அவரது காலத்திலேயே ' உருவமும் மொழியும் இல்லாத இறைவன்' என்று கூறி இறைவனை 'உருவத்தாலும் மொழியாலும்' பிரிக்க வேண்டா என்னும் கருத்தை மறைமுகமாக நமக்கு இக் குறள் மூலம் உணர்த்திச் சென்றுள்ளார். இதிலிருந்து நாம் அறிந்து கொள்ள வேண்டிய உண்மை யாதெனில்:
இறைவன்
அனைத்து மதத்தினருக்கும்
அனைத்து மொழியினருக்கும்
பொதுவானவன்.
இக் கருத்தானது இக் குறளின் மூலம் ஆணித்தரமாக உறுதிசெய்யப் படுகிறது.
ஆதாரங்கள்:
பொறி = அடையாளம் - சென்னை இணையத் தமிழ்ப் பேரகராதி.
வாய் = மொழி - சென்னை இணையத் தமிழ்ப் பேரகராதி
நெறி = வளைவு - சென்னை இணையத் தமிழ்ப் பேரகராதி