சனி, 7 மே, 2011

அறத்தாறு எது? (பல்லக்கு தூக்குவது பாவமா?)


குறள்:

அறத்தாறு இதுவென வேண்டா சிவிகைப்
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.  - 37

தற்போதைய விளக்க உரைகள்:

கலைஞர் உரை: அறவழியில் நடப்பவர்கள் பல்லக்கில் உட்கார்ந்து செல்பவர்களைப் போல வாழ்க்கையில் வரும் இன்ப துன்பங்கள் இரண்டையும் எளியவாகக் கருதி மகிழ்வுடன் பயணத்தை மேற்கொள்வார்கள். தீய வழிக்குத் தங்களை ஆட்படுத்திக் கொண்டவர்களோ பல்லக்கைத் தூக்கிச் சுமப்பவர்களைப் போல இன்பத்திலும் அமைதி கொள்ளாமல், துன்பத்தையும் தாங்கிக் கொள்ளும் மனப்பக்குவமின்றி வாழ்வையே பெரும் சுமையாகக் கருதுவார்கள்.

மு.வ உரை: பல்லக்கை சுமப்பவனும் அதன்மேலிருந்து ஊர்ந்து செல்லுவோனுமாகிய அவர்களிடையே அறத்தின் பயன் இஃது என்று கூறவேண்டா.

சாலமன் பாப்பையா உரை: அறத்தைச் செய்வதால் வரும் பயன் இது என்று நூல்களைக் கொண்டு மெய்ப்பிக்க வேண்டியது இல்லை. பல்லக்கைத் தூக்கிச் செல்பவனையும் அதில் பயணிப்பவனையும் கண்ட அளவில் பயனை அறியலாம்.

உரைத்தவறுகள்:

மேற்காணும் மூன்று உரைகளிலும் பொருள் தவறுகள் உள்ளன. வழக்கம்போல எழுத்துப் பிழைகளால் தான் தவறான விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளன. இப் பிழைகள் எதேச்சையாய் உண்டானவையா அல்லது வேண்டுமென்றே திருத்தப்பட்டு திசைமாற்றப் பட்டவையா தெரியவில்லை. ஆனால் இவ் உரைகள் இக் குறளுக்கு சற்றும் பொருந்தாமல் இருப்பதை மட்டும் நன்கு உணர முடிகிறது.

முதலில் கலைஞர் உரையைப் பார்ப்போம். குறளில் கூறப்பட்டுள்ள சொற்களுக்கும் அதற்கு அவர் கூறியுள்ள பொருட்களுக்கும் தொடர்பே இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. இது இவ் உரையானது முழுக்க முழுக்க அவரது சொந்தக் கற்பனையே என்பதைத் தெளிவாகக் கூறுகிறது. மு.வ.வும் பாப்பையாவும் பல்லக்கில் பயணம் செய்வதற்கு ஏதோ புண்ணியம் செய்திருக்க வேண்டும் என்றும் பல்லக்குத் தூக்குபவன் பாவம் செய்திருக்க வேண்டும் என்றும் பொருள்பட உரை எழுதியிருக்கிறார்கள். இதற்குக் காரணம் அறத்தாறு என்ற சொல்லுக்கு அறத்தின் பயன் என்று இவர்கள் பொருள் விரித்துக் கொண்டமையே ஆகும். இப் பொருள் இச் சொல்லுக்குப் பொருந்தாது. இது எவ்வாறு என்று காண்போம்.

இக் குறளில் வரும் அறத்தாறு (அறத்து+ஆறு) என்பது அறநெறி, அறவழி என்பதைப் போல அறச்செயலை மட்டுமே இங்கு குறிக்கும்; அதன் பயனைக் குறிக்காது. ஏனென்றால் அறத்தாறு என்னும் சொல்லுக்கு அறச்செயல் என்பதே நேரடிப் பொருளாகும். அறத்தால் வரும் பயன் என்னும் விளக்கமானது இரண்டாம்நிலைப் பொருளே ஆகும்.  பொதுவாக பல்லக்கில் பயணம் செய்பவர் உயர்நிலையில் உள்ளோராக அதாவது செல்வந்தராக இருப்பர். அவருக்கு தான் விரும்பிய இடத்திற்கு வசதியாகச் செல்ல விருப்பம். பல்லக்கு தூக்கிக்கு பல்லக்கு தூக்குவது வேலை ஆகும். பணத்திற்காக அவர் பல்லக்கைத் தூக்குகிறார். இதில் அறத்தின் பயன் எங்கே வருகிறது?. பணத்திற்காக ஒருவர் பல்லக்கு தூக்கினால் அது எப்படி துன்பமாகும்? பல்லக்குத் தூக்குவது என்பது எப்படி பாவச்செயலால் விளைந்த பயனாகும்?. அது மட்டுமின்றி பல்லக்கைத் தூக்கும் வேலையில் மட்டும் தான் துன்பம் என்றில்லை; எல்லா வேலைகளிலும் தான் இன்ப துன்பங்கள் உள்ளன. எனவே பணத்திற்காகப் பல்லக்கைத் தூக்குபவரைப் பாவி (பாவம் செய்தவன்) என்றும் செல்வம் இருப்பதால் பல்லக்கில் பயணம் செய்பவரைப் புண்ணியவான் (புண்ணியம் செய்தவன்) என்றும் கூறுவது எவ்வகையிலும் பொருத்தமற்ற கருத்தாகும்.

அதுமட்டுமின்றி, பல்லக்கில் ஒருவர் பயணம் செய்துகொண்டு இருக்கும்போது அதைப் பார்ப்பவர்களில் யாரேனும் அங்கு சென்று  'அறத்தின் பயனால் விளைந்தது இது' என்று கூறுவார்களா என்ன?. 'பல்லக்கில் செல்லும் செல்வந்தர் யார்?' என்று வேடிக்கை பார்ப்பார்களே ஒழிய தேவையின்றி தலையிட்டு கருத்து கூற மாட்டார்கள். அப்படிக் கூறுவதற்கு மிகப் பெரிய துணிச்சல் தேவை. அவ்வாறு கூறுவது அறிவுக்குப் புறம்பானதும் ஆகும். ஏனென்றால் பல்லக்கில் பயணம் செய்வதோ பல்லக்கைத் தூக்குவதோ அவரவர் விருப்பத்தால் விளையும் செயல். யாரும் இங்கே கட்டாயப் படுத்தப் படவில்லை. அறத்தின் பயனாய் அச் செயல் நிகழவில்லை. எனவே 'பல்லக்கு தூக்குதல் என்பது அறத்தின் பயனாய் விளைந்த செயல்' என்று மு.வ.வும் பாப்பையாவும் உரை கூறி இருப்பது ஏற்புடையதன்று என்பது தெளிவுபடுத்தப் படுகிறது.

மேலும் இன்னொரு கோணத்திலும் நாம் சிந்திக்க வேண்டும். வள்ளுவர் காலத்தில் பல்லக்கு தூக்கிகள் இருந்தார்களா? அதாவது மனிதனை மனிதனே சுமக்கும் நிலைமை இருந்ததா? என்பதும் இங்கே ஆய்வுக்குரியதாகும். ஏனென்றால் 'சிவிகை' என்ற சொல் திருக்குறளில் வேறெங்கும் காணப்படவில்லை. இக் குறளில் கூட சிவிகை என்ற சொல் உருமாறியுள்ளது. இச்சொல்லே மேற்காணும் தவறான பொருள் விளக்கங்களுக்கு காரணமாக அமைந்து விட்டது. அதைப் பற்றிக் கீழே காணலாம்.


திருந்திய குறள்:

மேற்காணும் பொருட்பிழைகளுக்குக் காரணம் இக் குறளின் முதல் அடியில் உள்ள சொற்பிழையே ஆகும். இக் குறளின் உண்மையான வடிவம் கீழ்க்காணுமாறு இருந்திருக்க வேண்டும்.

அறத்தாறு இதுவென வேண்டா செவிகைப்
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.

இதன் பொருளானது: " செவிகளைக் கைகளால் பிடித்தவாறு மன்னிப்பு கேட்டுப் பொறுத்திருப்பவனுக்கும் அவனை மன்னிக்காமல்  கடுஞ்சொற்களால் சாடுபவனுக்கும் இடையே சென்று 'அறச்செயலே இது' எனக் கூறவேண்டா. (எவ்வகையானும் இது அறச்செயல் ஆகாது.)"

நிறுவுதல்:

வள்ளுவர் இக் குறளில் 'சிவிகை' என்ற சொல்லைப் பயன்படுத்தாமல் 'செவிகை' என்றே எழுதியிருப்பார் என்பதை எவ்வாறு உறுதிசெய்வது? இதைப்பற்றி இங்கே காணலாம்.

சிவிகை என்ற சொல் இக் குறளில் பொருந்தவில்லை என்பதை மேலே ஆதாரங்களுடன் கண்டோம். அதே சமயம் 'செவிகை' என்ற சொல்லே அதற்குப் பதிலாக வந்திருக்க வேண்டும் என்பதற்குக் கீழ்க்காணும் கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.

1)  'சிவிகை' யும் 'செவிகை' யும் ஓசை ஒத்த சொற்கள் என்பதுடன் மிகச் சிறிதளவே எழுத்து வேறுபாடு உடையவை.

2)  ' செவிகைப்ப' என்ற சொல் குறள் எண் 389 ல் வருகிறது.

      ' செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்
    கவிகைக்கீழ் தங்கும் உலகு.'
 
இக் குறளில் 'செவிகைப்ப' என்னும் சொல்லும் 'பொறுத்தல்' என்னும் சொல்லும் தலைப்பில் உள்ள குறளில் வருவதைப் போலவே இணையாக வந்துள்ளது.

3) தவறு செய்தவர்கள் மன்னிப்புக் கோரும் விதமாகத் தமது செவிகளைக் கைகளால் பிடித்துக் கொள்வது பொதுவான வழக்கம்.

மேற்சொன்ன கருத்துக்களின் அடிப்படையில் 'செவிகை' என்ற சொல்லே பொருத்தமானதாகத் தெரிகின்றது. இச் சொல்லே இக் குறளுடன்  நன்கு பொருந்தி 'அறன் வலியுறுத்தல்' என்ற இந்த அதிகாரத்திற்கேற்ற நல்லதொரு விளக்கத்தையும் தந்து நிற்கிறது. இதைப் பற்றிக் கீழே விரிவாகக் காணலாம்.

அறத்தின் தன்மை இதுவெனக் கூற விரும்பிய வள்ளுவர் எவை எவை அறம் ஆகாது என்று 35 ஆம் குறளில் கூறுகிறார்.

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்.

இக் குறளில் வரும் இன்னாச்சொல் என்பது மனதைப் புண்படுத்தக் கூடிய கொடிய சொற்களைக் குறிக்கும். கொடிய சொற்களால் பிறர் மனதை ஒருபோதும் காயப்படுத்தக் கூடாது. அவ்வாறு செய்வது எந்த சூழ்நிலையிலும் அறச்செயலாகாது என்பதே வள்ளுவரின் கொள்கை ஆகும். ஏனென்றால் தீயினால் சுட்டபுண் என்றேனும் ஒருநாள் உள்ளாறும். ஆனால் நாவினால் சுட்ட வடு ஒருபோதும் ஆறாது. இக் கருத்தை இன்னும் தெளிவாக விளக்கவே வள்ளுவர் இக் குறளை இயற்றினார் என்று கூறலாம். இக் குறளில் வள்ளுவர் கூற வருகின்ற கருத்தினை ஒரு கற்பனையான நிகழ்ச்சி விளக்கத்தின் மூலம் அறியலாம்.


" ஓரிடத்தில் பயங்கரமான ஓசை தொடர்ந்து கேட்டது. என்னவென்று அறிந்துகொள்ள பலர் அங்கே ஓடினார்கள். அங்கே ஒருவர் இன்னொருவரை கொடிய சொற்களால் பலமாகத் திட்டிக் கொண்டிருந்தார். அவரோ மன்னிப்புக்கோரும் விதமாக தமது செவிகளைக் கைகளால் பிடித்துக்கொண்டு அமைதியாகக்  கடுஞ்சொற்களைக் கேட்டுக்கொண்டு இருந்தார். இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்களில் ஒருவர் ஆர்வம் தாங்காமல் " ஏன் அவரை இப்படித் திட்டுகிறீர்கள்?' என்று கேட்டார். அதற்கு திட்டியவர் ஏதோ ஒரு காரணம் கூறினார். அதைக் கேட்ட வேடிக்கை கூட்டம் " ஓ, தவறு செய்துவிட்டாரா?. அப்படி என்றால் நீங்கள் திட்டுவது நியாயம் தான் (அறச்செயல் தான்)" என்று ஏற்றுக் கொண்டு கலைந்து செல்கிறது."

வேடிக்கை மனிதர்களின் இக் கருத்தினை வன்மையாகக் கண்டிக்கிறார் வள்ளுவர். மனிதரை மனிதர் கொடிய சொற்களால் ஏசுவது மனிதநேயமற்ற செயல் மட்டுமன்று அறச்செயலுமாகாது என்கிறார். ஒருவர் தவறே செய்திருந்தாலும் அவரைத் தண்டிப்பதற்கு பிற உகந்த வழிமுறைகளைக் கையாளலாமே ஒழிய கொடிய சொற்களால் மனதைக் கிழித்துக் காயப்படுத்தக் கூடாது. அப்படி யாரேனும் கொடிய சொற்களால் ஏசினால் அதை எந்தச் சூழ்நிலையிலும் ஆதரித்துப் பேச வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறார். ஆம், தவறு செய்தவருக்கும் நன்மை செய்வதே அவர் செய்த தவறுக்கான சரியான தண்டனை என்று கூறிய மனிதநேயம் மிக்க மாமேதை அல்லவா அவர்!.

மேலே நாம் கண்ட கருத்துடன் 'செவிகை' என்ற சொல் எவ்வளவு சரியாகப் பொருந்தி வருகின்றது பாருங்கள். செய்த தவறுக்காக வருந்தி தம் செவிகளை கைகளால் பிடித்துக்கொண்டு மன்னிப்புக் கோருவோரை மன்னிக்காமல் கடுஞ்சொற்களால் ஏசுவது ஒருபோதும் அறமாகாது. இப்படிப்பட்ட ஒரு அறங்கெட்ட சூழ்நிலையில், கடுஞ்சொற்களைக் கேட்டுப் பொறுத்துக்கொண்டு இருப்பவரிடம் ' நீங்கள் செய்த தவறுக்கு இத் தண்டனை சரியானதே ' என்று இடைபுகுந்து கூறுவது  கடுஞ்சொல் கூறுவதைக் காட்டிலும் மிகக் கொடுமையான செயல் ஆகும்.

அடுத்து,  இக் குறளில் வரும் ஊர்தல் என்ற சொல்லுக்கு 'ஏறுதல், மேற்செல்லுதல்' என்ற பொருட்களை அகராதிகள் கூறுகின்றன. விரிவாக்கமாக இங்கே இச்சொல் 'வன்முறையால் ஆளுதலை' அதாவது வன்சொற்களால் அடக்குமுறை செய்வதைக் குறிப்பதாகக் கொள்ளலாம். ஏனென்றால் பிறர் மேல்செல்லுதல் என்பது பிறரை வன்முறையால் ஆளுதல் அதாவது அடக்குதலைக் குறிப்பதாகும். இதே கருத்தில் குறள் எண்: 250 அமைந்திருப்பதும் இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.

வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின்
மெலியார்மேல் செல்லு மிடத்து.

இக் குறளிலும் 'மேற்செல்லுதல்' என்னும் சொல் வன்முறையால் ஆளுவதையே குறிக்கிறது. இன்று நாம் கூட 'ஏறுதல்' என்னும் சொல்லை ' திட்டுதல்' என்ற பொருளில் பயன்படுத்திக் கொண்டுதான் இருக்கிறோம்.

' இன்று என் முதலாளி என்னை ஒரேயடியாக ஏறிவிட்டார் (திட்டிவிட்டார்).'

இனி இக் கட்டுரையைப் படித்தபின்னர் முதலாளிகள் தொழிலாளிகளை ஏற (திட்ட) மாட்டார்கள் என்று நம்புவோமாக! :))