செவ்வாய், 23 ஆகஸ்ட், 2011

திங்களைப் பாம்பு கொண்டற்று


குறள்:

கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்
திங்களைப் பாம்புகொண் டற்று.

- எண்: 1146

தற்போதைய உரை விளக்கங்கள்:


கலைஞர் உரை: காதலர் சந்தித்துக் கொண்டது ஒருநாள்தான் என்றாலும், சந்திரனைப் பாம்பு விழுங்குவதாகக் கற்பனையாகக் கூறப்படும் "யயகிரகணம்" எனும் நிகழ்ச்சியைப் போல அந்தச் சந்திப்பு ஊர் முழுவதும் அலராகப் பரவியது.

மு.வ உரை: காதலரைக் கண்டது ஒருநாள் தான், அதனால் உண்டாகிய அலரோ, திங்களைப் பாம்பு கொண்ட செய்தி போல் எங்கும் பரந்து விட்டது.

சாலமன் பாப்பையா உரை: நான் அவரைப் பார்த்ததும் பேசியதும் கொஞ்சமே! ஆனால் இந்த ஊரார் பேச்சோ நிலவைப் பாம்பு பிடித்ததுபோல் ஊர் முழுக்கப் பரவிவிட்டதே!.

உரைத்தவறுகள்:


மேற்காணும் உரைகள் அனைத்திலும் சந்திரனைப் பாம்பு கொள்ளும் நிகழ்ச்சியானது தவறான பொருளில் கூறப்பட்டுள்ளது. அதாவது நிலவைப் பாம்பு கொள்ளும் நிகழ்ச்சி என்பது சந்திர கிரகணத்தைக் குறிக்கும் என்ற பொருளில் இந்த விளக்கங்கள் அமைந்துள்ளன. இவ் விளக்கம் இக்குறளுக்குப் பொருந்துமா என்று பார்ப்போம். அதற்குமுன் சந்திர கிரகணத்தைப் பற்றிய சில அறிவியல் உண்மைகளைத் தெரிந்து கொள்வோம்.

சந்திர கிரகணம் என்பது ஒரு இயற்கை நிகழ்வாகும். இது எவ்வாறு, ஏன், எப்போது நிகழ்கிறது என்பதைத் துல்லியமாக இன்றைய அறிவியலாளர்கள் கணித்துக் கூறுகின்றனர். பூமிக்குப் பின்னால் முழுவதுமாய்ச் சென்று சந்திரன் மறையும்போது சூரியனின் கதிர்கள் சில நிமிடங்கள் வரையிலும் சந்திரனின் மேல் அறவே படாமல் இருக்கும் நிகழ்வே சந்திரகிரகணம் என்று சொல்லப்படுகிறது. 15, ஜூன் 2011ல் நடைபெற்ற சந்திர கிரகணம் சில இடங்களில் 100 நிமிடங்கள் வரையில் முழுமையாகப் பிடித்திருக்கிறது. சில இடங்களில் 220 நிமிடங்கள் வரை அரைகுறையாகப் பிடித்திருக்கிறது. ஆக, அறிவியலின் படி, சந்திர கிரகணம் என்பது சந்திரனின் மேல்விழும் பூமியின் நிழல் என்பதே சரியான கூற்றாகும்.

அறிவியல் உண்மை இவ்வாறு இருக்க, சந்திர கிரகணம் என்பது சந்திரன் என்னும் கோளை ராகு என்னும் பாம்பு விழுங்குவதால் உருவாகிறது என்றும், கிரகணம் நீங்குதல் என்பது விழுங்கிய நிலவினை அப் பாம்பானது வெளியே உமிழும் நிகழ்ச்சி என்றும் கூறுவது அறிவியலுக்குப் புறம்பான ஒரு கற்பனையே என்பதை அனைவரும் அறிந்து கொள்ளலாம். வள்ளுவர் காலத்தில் இத்தகைய கற்பனை நிலவியது என்பதற்கோ அப்படியே நிலவியிருந்தாலும் வள்ளுவர் அக் கற்பனையினை ஏற்றுக்கொண்டார் என்பதற்கோ எவ்வித ஆதாரங்களும் குறளில் எங்குமே இல்லை.

அதுமட்டுமின்றி இக் கருத்து ஒரு கற்பனையே என்பதை கற்றறிந்தோர் நன்கு அறிவார். ஏனென்றால் எந்த ஒரு கோளையும் ஒரு பாம்பினால் அது தற்காலத்தின் மிகப் பெரிய பாம்பான அனகோண்டாவாகவே இருந்த போதிலும்.விழுங்க முடியாது என்பது ஒரு அறிவியல் உண்மை. இதை மாமேதை வள்ளுவர் அறிய மாட்டாரா?. இல்லை இல்லை, வள்ளுவர் இதை ஒரு எடுத்துக்காட்டுக்குத் தான் இக்குறளில் பயன்படுத்தி உள்ளார் என்று உரைப்போரும் உளர். அவ்வாறு அவர்கள் கூறினாலும் அது தவறே ஆகும். ஏனென்றால் தவறான ஒரு கருத்தை, இல்லாத ஒரு கற்பனையை, மூடநம்பிக்கையை மக்களிடையே வளர்க்கும் ஒரு வழிமுறையினை வள்ளுவர் ஏன் இங்கு பயன்படுத்த வேண்டும்?. அவருக்குத் தெரியாத எடுத்துக்காட்டுகளா?. கல்வியைப் பற்றியும் அறிவைப் பற்றியும் தெளிந்து செயலாற்றும் தன்மையைப் பற்றியும் பல இடங்களில் வலியுறுத்திக் கூறும் வள்ளுவன் உறுதியாக இத்தகைய பொருளில் இதைக் கையாண்டிருக்க மாட்டார்!

இங்கே இன்னொரு கோணத்திலும் நாம் சிந்திக்க வேண்டும். தான் விரும்பாத அல்லது ஏற்காத ஒரு கருத்தினை எந்த ஒரு புலவனும் தனது நூலில் எடுத்தாள மாட்டான். இது நூலாசிரியனுக்கே உரிய மனப்பாங்கு ஆகும். அவ் வகையில் இக் கருத்து தவறு என்பதை நன்கு அறிந்த வள்ளுவனும் இக் குறளில் அக் கருத்தினை எடுத்தாண்டிருக்க முடியாது என்பது தெளிவு. அதாவது வள்ளுவன் இக்குறள் மூலம் உணர்த்த வருவது மேலே கூறப்பட்ட கருத்தே அல்ல. இனி இக்குறளில் வள்ளுவன் கூற வரும் கருத்து என்ன என்பதை ஆதாரங்களுடன் காணலாம்.

திருந்திய பொருள்:

இக்குறளில் வரும் பாம்பு என்ற சொல்லினை வள்ளுவர் 'மேகம்' என்ற பொருளில் பயன்படுத்தியுள்ளார். இக்குறளின் திருந்திய பொருள் இதுதான்:

" என் காதலனை நான் ஒருநாள் தான் சந்தித்தேன். ஆனால் எங்கள் சந்திப்பைப் பற்றிய அலரோ திங்களை மேகம் மறைப்பது போல (நாள்தோறும் நிகழ்ந்து கொண்டு) உள்ளதே."

நிறுவுதல்:

பாம்பு என்ற சொல்லுக்கு கீழ்க் காணும் பொருட்களை சென்னைத் தமிழ் இணையப் பேரகராதி வழங்குகின்றது.

, n. perh. பா²-. 1. [T. pāmu, K. Tu. pāvu, M. pāmpu.] Snake, serpent; ஊர்ந்து செல்லும் செந்துவகை. பாம்போ டுடனுறைந்தற்று (குறள், 890). 2. Ascending or descending node of the moon; இராகு அல்லது கேது. பாம் பொல்லை மதிய மறைய (பரிபா. 11). 3. The ninth nakṣatra. See ஆயிலியம். (பிங்.) 4. (Astrol.) A mukūrttam

ஆனால் பாம்பு என்னும் சொல்லுக்கு மேகம் என்ற பொருளும் உண்டு என்பதைக் கீழ்க்காணும் பாடல்களின் வாயிலாக நாம் நிறுவலாம். பாம்பு என்ற சொல் மட்டுமின்றி அதன் ஒருபொருட் பன்மொழிச் சொல்லான அரவு என்ற சொல்லும் மேகத்தையே குறிக்கும் என்பதற்கும் கீழே சான்றுகள் தரப்பட்டுள்ளன.

மேகம் மறைத்த நிலாப் போல கண்களின் ஒளி (அழுகையினால்) மங்கியதாகக் கீழ்க்காணும் பாடல்கள் கூறுகின்றன.

அரவு நுங்கு மதியின் நுதல் ஒளி கரப்ப - அக: 314
பாம்பு ஊர் மதியின் நுதல் ஒளி கரப்பவும் - நற்: 128

நுதல் என்றால் கண் என்னும் பொருளுண்டு என்பதை நுதல் என்றால் என்ன? என்ற கட்டுரையில் நாம் ஏற்கெனவே ஆதாரங்களுடன் கண்டுள்ளோம்.

கரிய நிறத்தில் கட்டிளங்காளை ஒருவன் வெள்ளை நிறத்து எருதின் கழுத்தினைக் கட்டியணைத்துக் கொள்ள அந்த எருதோ அவனை இழுத்துக் கொண்டு முன்னோக்கிப் பாய்ந்து செல்கிறது. இந் நிகழ்ச்சியை வானத்தில் வெண்ணிலவினை கருமேகம் மூடி மறைக்க, அம் மேகத்தை இழுத்துக் கொண்டு செல்வதைப்போல வெண்ணிலா முன்னோக்கிப் பாய்கிற நிகழ்ச்சியுடன் ஒப்பிட்டுக் கூறும் கலித்தொகை வரிகள் கீழே:

இடைப்பாய்ந்து எருத்தத்துக் கொண்டானோடு எய்தி
மிடைப்பாயும் வெள் ஏறு கண்டைகா
வாள்பொரு வானத்து அரவின்வாய்க் கோட்பட்டுப்
போதரும் பால்மதியும் போன்ம் - கலி: 105

மேகத்திற்கு மழை, பெயல், முகில் என்ற பெயர்களும் உண்டென்று அறிவோம். இம்மேகங்கள் நிலவினை மறைக்கும் நிகழ்ச்சியைக் கீழ்க்காணும் பாடல்கள் கூறுகின்றன.

அரவு நுங்கு மதியின் ஐயென மறையும் சிறுபுன் மாலை - அக: 115
பாம்பு சேர் மதி போல - கலி: 15
பெயல் சேர் மதி போல - கலி: 145
மழை நுழை திங்கள் போல் தோன்றும்- கலி:42
திங்கள் அரவு உறின் தீர்க்கலார் ஆயினும் - கலி: 140
அரவு நுங்கு மதியினுக்கு - குறு: 395
மழைமாய் மதியின் தோன்றுபு மறைய - மதுரை:452
அகலிரும் விசும்பின் அரவுக் குறைபடுத்த பசுங்கதிர் மதியத்து - நற்: 377
முகில் அகடு கழி மதியின் - பரி: 10
அரவு செறி உவவு மதியென - பரி: 10
மதி உண் அரமகளென - பரி: 10
பாம்பு ஒல்லை மதியம் மறைய - பரி: 11
குழவித் திங்கள் கோள் நேர்ந்தாங்கு - பெரும்பாண்: 384
மதி சேர் அரவின் மானத் தோன்றும் - சிறுபாண்: 185

வானத்து நிலவினை மேகங்கள் அடிக்கடி மூடி மறைப்பது இயல்பாக நாள்தோறும் நடக்கும் நிகழ்வாகும். இவ்வாறு இயல்பாகக் கண்முன்னர் நடக்கும் நிகழ்வினைத் தான் பெரும்பாலும் புலவர்கள் பாடுவார்கள். ஆகவே மேற்காணும் பாடல் வரிகள் எல்லாம் இந் நிகழ்வினைத் தான் கூறுகிறதே அன்றி சந்திர கிரகணத்தைக் கூறவில்லை என்று தெளியலாம். ஏனென்றால் சந்திர கிரகணம் என்பது அடிக்கடி நடைபெறும் நிகழ்வல்ல; பெரும்பாலும் ஆண்டிற்கு இருமுறை மட்டுமே நடைபெறுகிறது. அதுமட்டுமல்ல, சந்திர கிரகணத்தின் தோற்றம் இடத்திற்கு இடம் மாறுபடுகிறது. ஒரு இடத்தில் முழுமையான மறைப்பும், இன்னொரு இடத்தில் பாதி மறைப்பும், சில இடங்களில் சிறிது மட்டுமே மறைப்பும் நிகழ்கிறது. கிரகணம் பிடிக்கும் கால அளவும் இடத்திற்கு இடம் மாறுபடுவதால் இலக்கியத்தில் இதை ஒரு பாடுபொருளாகவோ உவமையாகவோ கொள்ள முடியாது.

இனி, பாம்பு அல்லது அரவு என்ற சொல் எவ்வாறு மேகத்தைக் குறிக்கும் என்று பார்ப்போம்.

பாம்பானது ஊர்ந்து செல்லும் தன்மையுடையது - மேகமும் வானில் ஊர்ந்து செல்லும்.
பாம்புக்கு சீறும் குணமுண்டு - மேகமும் கருத்து இடியோசை எழுப்பும்.
பாம்பு தனது பிளவுபட்ட நீண்ட நாக்கை நீட்டும் -  மேகமும் பிளவுபட்ட நீண்ட மின்னலை வெளிப்படுத்தும்.

இதுபோன்ற ஒப்புமைகளால் பாம்பும் அரவும் மேகத்தைக் குறித்து வந்திருக்கலாம் என்று எண்ணத் தோன்றுகிறது.

இங்கு இன்னொரு ஆச்சர்யமான செய்தியையும் சொல்ல வேண்டும். நாகம் என்ற சொல்லும் மேகத்தைக் குறிப்பதாக சென்னைத் தமிழ் இணையப் பேரகராதி கூறுகிறது.

நாகம்¹ nākam
, n. < nāka. 1. Visible heavens, sky; ஆகாயம். (பிங்.) நீடுநாக மூடுமேக மோட (கம்பரா. கலன்காண். 37). 2. Indra's paradise; சுவர்க்கம். (திவா.) எம்மை நாகமே லிருத்து மாற்றால் (கந்தபு. திருவிளை. 99). 3. Cloud; மேகம். நாகமே லாயுலவென் னாகமே (கொண்டல்விடு.). 4. Sound; ஒலி. (யாழ். அக.)

இனி, மேகங்கள் தோன்றுவதற்கு கடல் ஒரு இன்றியமையாத காரணி என்று நாம் அறிவோம். இக் கடலுக்கு மேலே பஞ்சுப் பொதி மேகங்கள் தவழ்ந்து செல்லும் அழகினை ரசிக்காதவர் மனிதரே இல்லை எனலாம். அழகு மிக்க இந்த மேகப் பஞ்சணையில் துயில் கொள்பவன் தான் திருமால். அதனால் தான் அவனுக்கு அரவணையான், பாம்பணையான், பாம்பாடி என்று பெயர்கள் வழங்கப்படுகின்றன.

பாம்பாடி pāmpāṭi
, n. < id. + ஆடு-. Viṣṇu; திருமால். (நாமதீப. 51.)
சென்னை இணையத் தமிழ்ப்பேரகராதி

இவற்றில் வரும் அரவணை, பாம்பணை என்பது மேகப்பஞ்சணையைக் குறிக்கும். ஆம், திருப்பாற்கடலின் மேல் மேகப்பஞ்சணையில் பள்ளி கொள்பவனே திருமால் எனலாம். அதனால் தான் கார்மேக வண்ணன் என்று திருமாலை அவரது அன்பர்கள் விளிக்கின்றனர். ஆனால் எந்தக் காலத்தில், எப்படி, இந்த மேகப்பஞ்சணை, ஐந்துதலை நாகத்தின் படுக்கையாக மாறியதோ தெரியவில்லை. எல்லாம் அந்த திருமாலுக்கே வெளிச்சம்!

மேகத்திற்கும் (அரவுக்கும்) இந்த நீலவண்ணக் கண்ணனுக்கும் உள்ள தொடர்பினை விளக்கும் கலித்தொகைப் பாடல்:

பால்மதி சேர்ந்த அரவினைக் கோள்விடுக்கும்
நீலநிற வண்ணனும் போன்ம் - கலி: 104

மேகங்கள் ஒன்றை ஒன்று தழுவி இரண்டறக் கலக்கும் காட்சி அழகானது. அரவணைத்தல் என்ற சொல்லாடல் இதைத்தான் நமக்கு நினைவூட்டுகிறது. தற்காலத்தில் இச்சொல் கட்டிப்பிடித்தல், பாதுகாத்தல் அல்லது ஆதரித்தல் என்ற பொருளில் வழங்கப் படுகிறது.

சரி, வள்ளுவர் ஏன் அலர் பரப்புவதை, திங்களை மேகங்கள் மறைக்கும் நிகழ்வுக்கு ஒப்பிடுகிறார் என்று பார்ப்போம். பொதுவாக காதலர்கள் களவில் சந்திப்பது இரவுநேரத்தில் நிலா வெளிச்சத்தில் தானே. எனவே நிலவுக்கு தெரியாத காதல் ரகசியங்கள் உண்டா?. இல்லையே. இப்படி தான் பார்த்த காதல் ரகசியங்களை எல்லாம் நிலவானது தன்னை வந்து உரசிச் செல்லும் மேகங்களின் காதுகளில் போட்டுக் கொடுக்கிறதாம். நிலவு இப்படிச் செய்வதாக எண்ணி அதனை நயத்துடன் ஊரார் அலர் பரப்பும் நிகழ்வுடன் ஒப்பிட்டுக் கூறியுள்ள வள்ளுவனின் கவியுள்ளம் தான் என்னே! 

முடிவுரை:

பாம்பு, அரவு, நாகம் என்ற சொற்கள் ஊர்ந்து செல்லும் ஒரு நச்சுயிரியை மட்டும் குறிக்காமல் மேகத்தையும் குறிக்கும் என்று நாம் மேலே கண்டோம். இதில் பாம்பு என்ற சொல் பாப்பு என்றும் வழங்கப்பெறும். இனி,

பாப்பு (மேகம்) --> பாப = கருமை, குற்றம், பழி என்று தோன்றியிருக்க இடமுண்டு.
.................................................... வாழ்க தமிழ்!.......................................

சனி, 6 ஆகஸ்ட், 2011

மாமுகடி = மூதேவி ?


குறள்:
மடியுளான் மாமுகடி என்ப மடியிலான்
தாளுளான் தாமரை யினாள்
                          - குறள் எண்: 617

தற்போதைய உரை விளக்கங்கள்:

பரிமேலழகர் உரை: கரிய சேட்டை ஒருவன் மடியின் கண்ணே உறையும்; திருமகள் மடியிலாதானது முயற்சிக்கண்ணே உறையும் என்று சொல்லுவர் அறிந்தோர்.
கலைஞர் உரை: திருமகள், மூதேவி எனப்படும் சொற்கள் முறையே முயற்சியில் ஊக்கமுடையவரையும், முயற்சியில் ஊக்கமற்ற சோம்பேறியையும் சுட்டிக் காட்டிப் பயன்படுவனவாகும்.
மு.வ உரை: ஒருவனுடைய சோம்பலில் கரிய மூதேவி வாழ்கின்றாள், சோம்பல் இல்லாதவனுடைய முயற்சியிலே திருமகள் வாழ்கின்றாள்.
சாலமன் பாப்பையா உரை: சோம்பி இருப்பவனிடம் மூதேவி தங்குவாள். சோம்பாதவனின் முயற்சியில் திருமகள் தங்குவாள் என்பர்.

உரைத் தவறுகள்:

மேற்காணும் உரைகள் அனைத்தும் 'மாமுகடி' என்ற சொல்லிற்கு 'கரிய சேட்டை ஆகிய மூதேவி' என்றும் 'தாமரையினாள்' என்ற சொல்லிற்கு 'திருமகள்' என்றும் பொருள் கூறுகின்றன. மற்றவர்கள் இவ்வாறு பொருள் கூறியிருப்பதில் ஆச்சர்யமில்லை. ஆனால்  இறைவனின் இருப்பினையே மறுக்கின்ற கொள்கையை உடையவர் கலைஞர். திருக்குறளின் கடவுள் வாழ்த்திற்கு இவர் எழுதியுள்ள உரை விளக்கங்களே இதற்குப் போதுமான சான்றுகளாகும். இவர் எப்படி, ஏன் இப் பொருள்களைக் கூறியுள்ளார் என்பது அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்!.

இது ஒருபுறமிருக்க,  மூதேவியும் திருமகளும் ஒரு குறிப்பிட்ட சமயத்தைச் சேர்ந்த கடவுள்களின் பெயர்கள் என்னும் உண்மையினை நாம் நன்கு அறிவோம்.  திருவள்ளுவர் சமயச்சார்பற்றவர் என்றும் எந்த ஒரு குறிப்பிட்ட மதம் அல்லது சமயம் சார்ந்த கருத்துக்களையும் அவர் கூறுவதில்லை என்னும் உண்மையினையும் நாம் முன்பே 'ஆதிபகவன் யார்', 'தாமரைக் கண்ணான் உலகு', இந்திரனே சாலும் கரி', 'செய்யவள் தவ்வை', 'பொறிவாயில் ஐந்தவித்தான்' போன்ற கட்டுரைகளில் ஆதாரங்களுடன் கண்டுள்ளோம்.  அவ் வகையில், இக் குறளிலும் அவர் ஒரு குறிப்பிட்ட சமயம் சார்ந்த கருத்துக்களைக் கூறி இருக்க முடியாது அல்லவா?.  எனவே இக் குறளுக்கு மேலே கூறப்பட்டுள்ள உரை விளக்கங்கள் யாவும் தவறானவையாகவே கொள்ளப்படுகின்றன.


அதுமட்டுமின்றி மேலேகண்ட உரைவிளக்கங்களில் சொல்லப்படுவதான  'சோம்பல் இல்லாமல் முயல்பவனிடத்தில் திரும்கள் தங்குவாள். சோம்பேறியிடத்திலே மூதேவி தங்குவாள்' என்னும் கருத்தைப் போலவே கீழ்க்காணும் குறள் உள்ளது.

முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும். - எண்: 616

இதன் பொருள்: சோம்பல் இன்றி முயல்பவனிடத்தில் செல்வம் (திருமகளின் அருள்) பெருகும். முயற்சியற்ற சோம்பேறியிடத்திலே வறுமையே (மூதேவியின் அருள்) மிகும்.

616 ம் குறளின் பொருளுக்கும் 617 ம் குறளின் விளக்கத்திற்கும் என்ன வேறுபாடு உள்ளது?. ஒன்றுமே இல்லை அல்லவா?. ஒரே கருத்தினை அடுத்தடுத்த இரண்டு குறள்களில் வள்ளுவர் ஏன் கூற வேண்டும்?. அவ்வாறு கூறுவது 'கூறியது கூறல்' குற்ற்மாகி விடும் என்பதை வள்ளுவர் நன்கு அறிவார். எனவே வள்ளுவர் 617 ம் குறளில் மேலே கண்ட கருத்தினைக் கூற விழையவில்லை என்பது பெறப்படுகிறது.


அதுமட்டுமின்றி, இக்குறளுக்கு பல பாடபேதங்கள் காணக் கிடைக்கின்றன. 'மடியுளான் மாமுகடி' என்றும் ' மடியுளாள் மாமுகடி' என்றும் ' தாளுளான்  தாமரையினாள்' என்றும் ' தாளுளாள் தாமரையினாள்' என்றும் பலவாறாகக் கூறப்படுகின்றன. இது இக்குறள் சிதிலமடைந்த  நிலையில் கிடைத்திருக்குமோ என்று கருத இடமளிக்கிறது. இனி இக் குறளின் திருந்திய பொருளை ஆதாரங்களுடன் காணலாம்.

திருந்திய பொருள்:

இக் குறளில் வரும் 'மாமுகடி' என்ற சொல் எருமைமாட்டினைக் குறிக்கும். அடுத்து, 'தாமரையினாள்' என்பதைக் கீழ்க் காணும் வகையில் பிரித்துப்பொருள் கொள்ள வேண்டும்.

 தாமரையினாள் = தா + மரையின் + ஆள்
                                      = தாவிச் செல்லும் மான் போன்றவன்.

தாளுளான் என்பதற்கு முயற்சி அல்லது வினையாற்றுபவன் என்று பொருள் கொள்ளவேண்டும். இனி இக்குறளின் திருந்திய பொருள் இதுதான்:

சோம்பல் மிகுதியால் செயல் புரியாமல் கிடப்பவனை எருமை மாடு என்று  சொல்வார்கள். சோம்பல் இல்லாதவனாய் (ஓடித் திரிந்து) வினையாற்றுபவன் தாவிச் செல்லும் மான் போன்றவன் ஆவான்.'

நிறுவுதல்:

சோம்பல் கூடாது என்று மடியின்மை என்ற அதிகாரத்தில் வலியுறுத்திக் கூறிய வள்ளுவர் ஆள்வினை உடைமை என்ற இந்த அதிகாரத்தில் சோம்பேறியின் தன்மை பற்றியும் சோம்பல் அற்றவனின் தன்மை பற்றியும் விளக்குகிறார். அதற்கு நாம் நன்கு அறிந்த இரண்டு விலங்குகளை எடுத்துக் காட்டாகக் கூறியுள்ளார் இக்குறளில்.

இந்தக் காலத்தில் மட்டுமல்ல வள்ளுவர் காலத்துக்கு முன்பாகவும் செயலேதும் புரியாத சோம்பேறிகளை 'எருமை மாடு' என்று குறிப்பிடுவது வழக்கம் போலும். அதனால் தான் இக்குறளில் வள்ளுவர் 'மாமுகடி என்ப' என்று கூறுகிறார். இந்த 'மாமுகடி' என்ற சொல் எவ்வாறு எருமை மாட்டினைக் குறிக்கும் என்று பார்க்கலாம்.

முகடி என்ற சொல்லுக்கு அறிவின்மை / அறியாமை என்ற பொருளும் உண்டு. ஆனால் இது அகாராதிகளில் கூறப்படவில்லை. கீழ்க்காணும் குறளில் வள்ளுவரே அப் பொருளில் பயன்படுத்தி இருப்பதைக் காணலாம்.
 
அகடாரார் அல்லல் உழப்பர் சூதென்னும்
முகடியான் மூடப் பட்டார். - குறள்: 936
 
மா என்றால் மிகுதி, கருமை, விலங்கு என்ற பொருட்கள் உண்டு. எனவே மாமுகடி என்பது அறியாமை மிக்க கரிய விலங்கு என்ற பொருளில் எருமை மாட்டினைக் குறித்தது.


இனி சோம்பல் உடையவனை எருமைமாடு என்று சொல்லும் வழக்கம் எதனால் உண்டானது என்று பார்க்கலாம். இங்கு பேசப்படும் எருமை மாடானது கரிய நிறமுள்ள ஆசிய கண்டத்து நீர் எருமை ஆகும். இது நன்றாகப் புல்லை மேய்ந்துவிட்டு சேற்றுநீரில் சென்று படுத்துக்கொண்டு பொழுதைக் கழிக்கும். பெரும்பாலான நேரம் நீரிலேயே இருப்பதால் இதன் வாசனை முகரும் திறன்  மிகவும் குறைவாக இருக்கிறது. கேட்புத் திறனோ மிக மிகக் குறைவாகும். மந்தமாக இயங்குவது இதன் தனிச்சிறப்பாகும்.  சோம்பல் மிகக் கொண்டு செயல்புரியாமல் இருப்பவனின் நிலையும் ஏறத்தாழ எருமை மாட்டின் நிலை தான். ஊக்கமும் செயலும் இன்மையால் இவரது புலன்களும் சோம்பல் கொண்டு சரியாக இயங்குவதில்லை. காது சரியாகக் கேளாது. மூக்கு சரியாக முகராது. பார்வை சரியாகத் தெரியாது. இயக்கம் இல்லாமல் எப்போதும் சோம்பிப் படுத்திருக்கும் இத்தகைய மனிதரை எருமை மாடு என்று பெரியோர்கள் சொன்னதில் தவறில்லை தானே?

சோம்பல் உடையவனை எருமை மாட்டிற்கு ஒப்பிட்ட வள்ளுவர் சோம்பலில்லாமல் ஓடித் திரிந்து வினையாற்றுபவனை தாவித் திரியும் மானுடன் ஒப்பிடுகிறார். ஏனென்றால் மான் எப்போதும் சுறுசுறுப்பாகத் திரியும் இயல்பினது. இதற்கு நல்ல கேட்புத் திறனும் வாசனை முகரும் திறனும் உண்டு.  சோம்பலில்லாமல் வேலை செய்பவனின் புலன்களும் எழுச்சி பெற்று இருக்கும் என்பதற்கு மானை ஒரு காட்டாகக்கூறுகிறார் இக்குறளில்.

எருமையும் மானும் புல்லைத் தின்னும் விலங்குகளே ஆனாலும் இரண்டின் செயல்பாடுகளில் எவ்வளவு வேறுபாடுகள் இருக்கிறது பாருங்கள்.  இவ் இரண்டின் தன்மைகளைக் கொண்டு ஒரு அரிய கருத்தினை குறளில் புகுத்திய வள்ளுவனின் நுண்மாண் நுழைபுலம் வியந்து பாராட்டத் தக்கதன்றோ!
............................................... வாழ்க தமிழ்!...................................................