வியாழன், 8 மார்ச், 2012

மாசில் வீணை (75 ஆம் கட்டுரை)

முன்னுரை:

ஒளியின் வடிவாய் அண்டவெளி எங்கும் நிறைந்திருக்கும் சிவபரம்பொருளைப் போற்றிப்பாடிய பலருள்ளும் தேவார நால்வராகிய அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகியோர் குறிப்பிட்டுச் சொல்லத் தக்கவர்கள். ஏனென்றால் இவர்களது பாடல்கள் கற்போரையும் பாடுவோரையும் நெஞ்சம் கரைந்துருகச் செய்து சிவபக்தனாக்கி விடும் தன்மை கொண்டவை. இவர் நால்வருள்ளும் வயதில் மூத்தவரும் இறை அனுபவம் மிக்கவருமாகிய அப்பரின் பாடல்கள் மிகவும் இனிமையானவை.

மருள்நீக்கியார் என்ற இயற்பெயர் கொண்ட இவர் துவக்கத்தில் சமண சமயம் தழுவி தருமசேனர் என்ற பட்டப்பெயர் பெற்றார். பின்னர் சூலைநோயினால் சிவ பக்தனாக மாறினார். சிவபக்தனாக மாறியமைக்காக அவர் பட்ட துன்பங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.. சமணர்கள் செய்த சூழ்ச்சியால் அரசனால் சுண்ணாம்புக் காளவாசலுக்குள் (நீற்றறை) சிறை வைக்கப்பட்டார். கடுமையான வெப்பமும் சுண்ணாம்பின் கார நெடியும் எந்த ஒரு சாதாரண மனிதனையும் சிலமணி நேரம் கூட உயிரோடு விட்டு வைக்காது. என்ன ஆச்சரியம்! சிவன் அருளால் திருநாவுக்கரசர் ஏழு நாட்களுக்குப் பின்னும் நீறறறையில் இருந்து உயிரோடு வெளி வந்தார். சொக்கலிங்கத்தின் அருளால் நீற்றறை அவருக்கு சொர்க்கலோகம் ஆனது. திருநாவுக்கரசர் நீற்றறைக்குள் தனது அனுபவம் எப்படி இருந்தது என்று கூறுவதைப் பாருங்கள்.

இறையருள் தந்த இன்பங்கள்:

மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நீழலே.

இப்பாடலுக்குத் தற்போது கூறப்படும் பொருள் இதுதான்: " மாசில் வீணை காதிற்கு இன்பம். மாலை மதியம் கண்ணிற்கின்பம். வீசு தென்றல் மூக்கிற்கு நறுமணம் சேர்த்து இன்பம் நல்கும். வண்டு அறை பொய்கை நாவிற்கு இன்பம். (நீரினால்) இளவேனில் மெய் உடலுக்கு இன்பம். இவ்வாறு ஐம்பொறிகளாகிய மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐம்பொறிகளின் வாயிலாக சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்னும் ஐம்புல இன்பம் நுகர்தல் உலகியல், இதேபோன்று பொறி புலன் இன்றி உயிர் நேரே அனுபவிக்கும் இன்பமே இறையின்பம். சிற்றின்பம் சிறுகாலை இன்பம். பேரின்பம் - என்றும் மாறுபாடு இல்லாது நிலைத்திருப்பது. அதற்கு உலகியல் சிற்றின்பங்களைக் காட்டித்தான் சாதாரண மக்கட்கு இறை இன்பத்தை உணர்த்த இயலும். அந்தமுறையில் அப்பர் நீற்றறையில் தாம் அனுபவித்த இறையின்பத்தை உலகியலோடு இணைத்துச் சுவைபட அருளியுள்ளமை அறிந்து இன்புறத்தக்கது. "

உரைத்தவறுகள்:

மேற்காணும் உரையில் சில தவறுகள் உள்ளன. அவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

மாசில் வீணை காதிற்கு இன்பம். - இக்கருத்து சரியானது.

மாலை மதியம் கண்ணிற்கு இன்பம் - இதுவும் சரியானதே.

வீசு தென்றல் மூக்கிற்கு இன்பம் (நறுமணத்தால்) - இது சரியல்ல. ஏனென்றால் தென்றல் காற்று தனது மென்மைத் தன்மையினால் உடலை வருடும்போது உடலுக்கு ஒரு சுகத்தைக் கொடுக்குமே அல்லாமல் மூக்கிற்கு நறுமணத்தைக் கொண்டு வராது. நறுமணமோ துர்நாற்றமோ அது தென்றல் கடந்து வரும் பாதையைப் பொருத்ததே அன்றி தென்றலுக்குரிய பொதுவான பண்பல்ல. மேலும் பாடலில் 'வீசு தென்றல்' என்று தான் உள்ளதே ஒழிய 'நறுமணம்' என்ற பொருளைக் குறிப்பதாக எந்த ஒரு சொல்லும் அதனுடன் இல்லாதது குறிப்பிடத்தக்கது. ஆக, வீசு தென்றல் மூக்கிற்கு நறுமணம் தரும் என்ற கருத்து ஏற்புடையதல்ல.

மூசு வண்டு அறை பொய்கை நாவிற்கு இன்பம் (நீரினால்) - இந்தக் கருத்தும் ஏற்புடையதல்ல. ஏனென்றால் பொய்கை என்பது தேங்கி நிற்கும் நீரை உடைய சிறுகுளத்தைக் குறிப்பதாகும். 'மூசு வண்டு அறை பொய்கை' என்று கூறி இருப்பதால் அப் பொய்கையில் வண்டுகள் மொய்ப்பதான பல பூக்கள் பூத்துள்ளமை அறியப்படுகிறது. ஆக, நீர் தேங்கி இருப்பதாலும் அதில் பல மலர்கள் பூத்திருப்பதாலும் பொய்கை நீரானது நாட்பட்ட தன்மையினால் நிறமும் சுவையும் மாறி இருக்கும். மேலும் பொய்கையில் பாம்பு, தவளை, பூச்சிகள் போன்றவையும் வாழ்வதால் பொய்கை நீரினை யாரும் அருந்த மாட்டார்கள். எனவே மூசு வண்டறை பொய்கை நாவிற்கு இன்பம் என்னும் கருத்து தவறு என்பது பெறப்படுகிறது.

வீங்கு இளவேனில் மெய் உடலுக்கு இன்பம் - இக் கருத்தும் பொருத்தமற்றதே. ஏனெனில் இப்பாடலில் வரும் இளவேனில் என்பது பருவ காலத்தைக் குறித்து வந்திருக்க வாய்ப்பில்லை. இது எவ்வாறு என்று பார்ப்போம்.

வீங்குதல் என்ற சொல்லுக்குக் கீழ்க்காணும் பொருட்கள் இருப்பதாக சென்னை இணையத் தமிழ்ப் பேரகராதி கூறுகின்றது.

வீங்கு-தல் vīṅku- , 5 v. intr. [K. bīgu.] 1. To increase in size; to become enlarged; பருத் தல். (நாமதீப. 710.) 2. To swell; பூரித்தல். மணந்தநாள் வீங்கிய தோள் (குறள், 1233). 3. To become morbidly inflamed and swollen; வீக்க முறுதல். (பொரு. நி.) 4. To grow; வளர்தல். (அக. நி.) 5. To be copious or excessive; to increase; மிகுதல். வளம் வீங்கு பெருக்கம் (பதிற்றுப். 24, 17). 6. To be close, crowded; நெருங்குதல். (சூடா.) 7. To become tight and pressing; இறுகுதல். வீங்கிறை தடக்கையின் (குறிஞ்சிப். 123). 8. To be taut and not slack; விறைப்பாய் நிற்றல். விளரூன் றின்ற வீங்குசிலை மறவர் (அகநா. 89, 10). 9. To go up; மேனோக்கிச் செல்லுதல். நாவிளிம்பு வீங்கி (தொல். எழுத். 96). 10. To become emaciated; மெலிதல். அவன் வீங்கலா யிருக்கிறான். 11. To have morbid desires; ஏக்கங்கொள்ளுதல். 12. To sleep; தூங்கு தல். (யாழ். அக.)

மேற்காணும் பொருட்களுள் ஏதேனும் ஒரு பொருளாவது இளவேனில் பருவத்தின் தன்மைகளுடன் பொருந்தி வருகின்றதா என்று பார்த்தால் ஒன்றும் பொருந்தாத நிலையே காணப்படுகிறது. இதிலிருந்து, 'வீங்கு இளவேனில்' என்ற சொல்லில் வரும் இளவேனில் என்ற சொல் பருவகாலத்தைக் குறித்து இங்கு வரவில்லை என்பது பெறப்படுகிறது. என்றால், இளவேனில் என்பது இப்பாடலில் எதைக் குறிக்கும் என்பதைக் காணலாம்.

வேனில் என்றால் என்ன?

வேனில் என்ற சொல்லுக்குத் தற்போதிய அகராதிகள் கீழ்க்காணும் பொருளைத் தருகின்றன.

வேனில்¹ veṉil, n. prob. வே-. 1. See வேனிற்காலம். வேனிலாயினுந் தண்புனலொழுகுந் தேனூர் (ஐங்குறு. 54). 2. Spring season; இள வேனில். 3. Heat; வெப்பம். வேனி னீடிய சுர னிறந்தோரே (அகநா. 201). 4. Mirage; கானல். (பிங்.)
வேனில்² vēṉil. , n. prob. வேய்¹-. (பிங்.) 1. Decoration; ஒப்பனை. 2. Beauty; அழகு. 3. Splendour; பொலிவு.

திருநாவுக்கரசர், மேற்காணும் பொருட்களில் அல்லாமல், புதிய பொருளில் 'வேனில்' என்ற சொல்லைக் கையாண்டுள்ளார். அதுதான் 'பனைமரத்தின் நுங்கு' ஆகும். ஆம், வேனில் அதாவது கோடைகாலம் என்றதும் நம் எல்லோருக்கும் உடனே நினைவுக்கு வருவது 'பனைமரத்தின் நுங்கு' தானே?. இன்சுவையும் குளிர்ச்சியும் மிக்க நுங்கினை விரும்பி உண்ணாதவர் யாரே இருக்க முடியும் இவ் உலகில்?.

வேனில் என்பது முதலில் பனைமரம் என்ற பொருளிலும் பின்னர் அதன் பயனாகிய நுங்கினையும் குறிக்கப் பயன்படலாயிற்று. பனைமரம் என்ற பொருளில் இலக்கியத்தில் கீழ்க்காணும் இடங்களில் பயன்படுத்தப் பட்டுளளது.

வேனில் அருஞ்சுரம் தண்ணிய இனிய வாக - ஐங்கு: 303
தண்பத வேனில் இன்ப நுகர்ச்சி - ஐங்கு: 368

மள்ளர் அன்ன மரவந் தழீஇ மகளிர் அன்ன ஆடுகொடி நுடக்கும்
அரும்பதம் கொண்ட பெரும்பத வேனில்.. - ஐங்கு: 400

மேற்காணும் பாடல்களில் வரும் வேனில் என்பது பனைமரத்தினையும் பதம் என்பது நுங்கினையும் குறித்து வந்துள்ளன. ஐங்குறுநூற்றின் 400 ஆவது பாடலில் வரும் உவமை மிக அழகானது. கருமை நிறங்கொண்ட வீரர்களைத் தழுவி நிற்கும் மகளிரைப் போல கரிய பனைமரத்தினைச் சுற்றி மெல்லிய கொடிகள் பரந்துள்ளதைக் கூறுகின்றன அவ் வரிகள். மேலும் சில பாடல்கள்:

வேனில் ஓரிணர் தேனோடு ஊதி ஆராது பெயருந் தும்பி - - குறு. 211
நிழலுரு இழந்த வேனில் குன்றத்து - மதுரை.: 313

எரியணிந்த விளம்பிண்டி யிணரார்ந்த விடமெல்லாம்
பொரியணிந்த புன்குதிர்ந்து பூநாறுந் துறையெல்லாம்
வரியணிந்து வண்டூத வளர்கின்ற இளவேனில்
புரியணிந்த குழலீர்நுஞ் செல்வம்போற் பொலிந்ததே
- சூளாமணி

அகநானூற்றின் 333 ம் பாடல் பனைமரத்தின் மேலுள்ள வரிகள் யானையின் கரிய துதிக்கையில் உள்ள வரிகளைப் போல இருப்பதை நமக்கு நினைவூட்டுகிறது.

வேனில் வெளிற்றுப்பனை போலக் கையெடுத்து
யானைப் பெருநிரை வானம் பயிரும்....

பனைமரத்தின் அருகில் இருந்த ஒரு மரத்தில் அமர்ந்திருந்த பறவை ஒன்று எதையோ உண்டுகொண்டு இருந்தது. அப்போது திடீரென காற்று வீசவும் பனைமரத்தின் நடுவில் இருந்த காய்ந்த ஓலையானது காற்றில் அசைந்து சடசடவென்று ஒலியெழுப்ப, அதைக்கேட்டு அஞ்சிய பறவை உணவை உண்ணாமல் மரத்தைவிட்டுப் பறந்துசென்ற காட்சியைக் கண்முன்னர் காட்டும் சங்கப்பாடல் வரிகள் கீழே:  

வேனில் அரையத்து இலையொலி வெரீஇ
போகில் புகா உண்ணாது பிறிதுபுலம் படரும் .. - ஐங்கு. 325


மேற்காணும் சான்றுகளில் இருந்து வேனில் என்பதற்கு தற்போதைய அகராதிகள் கூறி இருக்கும் பொருட்களைத் தவிர,

பனைமரம், நுங்கு போன்ற பொருட்களும் உண்டென்பது உறுதியாகிறது.

திருந்திய பொருள்:

மேற்கண்ட புதிய பொருட்களின் அடிப்படையில், இப்பாடலின் புதிய பொருள் பின்வருமாறு:

குற்றமிலாத வீணையின் இன்னிசையும், மாலை நேரத்து சந்திரனின் தண்ணொளியும், வீசுகின்ற தென்றலின் குளிர்ச்சியும், பருத்த இள நுங்குகளின் இன்சுவையும், மொய்க்கும் வண்டுகளின் ஆரவார மிக்க மலர்ப் பொய்கையின் வாசமும் போல எந்தையாகிய ஈசனின் திருவடி நீழல் எமக்கு (நீற்றறைக்குள்) இன்பம் நல்கியது.

நிறுவுதல்:

திருநாவுக்கரசருக்கு நீற்றறையில் நேர்ந்த அனுபவத்தினை இப்பாடல் மிக அழகான உவமைகளுடன் கூறுகிறது. பொதுவாக சுண்ணாம்பு சுடப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு நீற்றறைக்குள் சிறை வைக்கப்படும் ஒருவரது ஐந்து புலன்களும் சொல்லொணாத வேதனைகள் அடையும் என்பது அனைவரும் அறிந்த உண்மை. ஆனால், இங்கே சிவபெருமானின் அருளால் திருநாவுக்கரசருக்கு எவ்வித வேதனைகளும் ஏற்படவில்லை. மாறாக, ஐந்து புலன்களுக்கும் நல்ல விருந்து கிடைத்ததாகச் சொல்கிறார் அவர். இந்த ஐம்புல விருந்துகளைப் பற்றியும் ஒவ்வொன்றாகக் கீழே காணலாம்.

முதலில், இப்பாடலில் வரும் வேனில் என்னும் சொல்லுக்கு நுங்கு என்ற பொருள் எவ்வளவு பொருத்தமாயுள்ளது என பார்ப்போம.

வீங்கு இள வேனில் = பருத்த இள நுங்கின் சுவை

நுங்கில் இள நுங்கு, கல் நுங்கு என இருவகை உண்டு. இதில் இள நுங்கானது தொட்டால் மெதுவாக இருக்கும். உள்ளே இன்சுவையுடைய நீரைக் கொண்டிருக்கும். கல் நுங்கானது முதிர்ந்த தன்மையுடன் தொட்டால் கல் போல கடினமாக இருக்கும். இதில் நீர் இருக்காது. கடித்தால் தேங்காயைப் போன்ற சுவையுடன் இருக்கும். மக்கள் பெரும்பாலும் விரும்பிச் சுவைப்பது இள நுங்கினையே. ஏனென்றால் இதன் நீரானது மிக இனிய சுவையுடன் கோடைகாலத்தில் உண்டாகும் உடல் சூட்டைக் குறைக்கும் அளவுக்கு குளிர்ச்சியும் கொண்டிருக்கும். திருநாவுக்கரசர் நீற்றறையில் இருக்கும்போது சுண்ணாம்பின் காரநெடியால் அவரது நாக்கில் கொப்புளங்களோ புண்களோ உண்டாகவில்லை; மாறாக ஈசனின் அருளால் அவரது நாக்கில் இள நுங்கின் இன்சுவை உடைய நீர் ஊறிற்றாம். என்னே ஈசனின் அருள்!.

மாசில் வீணை = குற்றமில்லாத வீணையின் இசை

இசைக்கருவிகள் பலவற்றுள்ளும் வீணைக்கென்று தனிச்சிறப்பு உண்டு. இதன் இசை கேட்பவர் நெஞ்சை நெகிழ்த்தி விடும். கலைமகள் கையிலும் இந்த வீணையே உள்ளது. வீணையிலும் குற்றமில்லாத வீணை அதாவது பிசிறில்லாமல் தெளிவாக இசைக்கும் வீணையின் இசை செவிக்கு பேரின்பம் தருவதாகும். பொதுவாக ஒரு சுண்ணாம்புக் காளவாசலில் சுண்ணாம்பு சுடப்படும் போது வெடிக்கும் சப்தமும், கொதிக்கும் சப்தமும் கலந்த நிலையில் கேட்பவரது காதும் மனதும் புண்ணாகி விடும். ஆனால், திருநாவுக்கரசருக்கோ அப்படி ஒரு நிலை ஏற்படவில்லை. இறைவனின் அருளால் அவரது காதில் குற்றமில்லாத வீணையின் இனிய இசையே கேட்டதாம். என்னே பரமனின் அருள்!

மாலை மதியம் = மாலை நேரத்து சந்திர ஒளி

அதென்ன மாலை நேரத்து சந்திர ஒளி?. சந்திரனின் ஒளியானது இரவு முழுக்க நமக்குக் கிடைத்தாலும் மாலை நேரத்தில் ( 6 மணி முதல் 10 மணி வரை) கிடைக்கும் முதல் ஒளியினையே நாம் பெரும்பாலும் காண்கிறோம. நிலாச்சோறு காட்டி ஊட்டுவதில் இருந்து காதலர்கள் ஒன்றாகக் கூடி கண்ணுற்று மகிழ்வது வரை நிகழும் நிகழ்ச்சிகள் எல்லாம் 10 மணிக்குள் முடிந்துவிடும். அதன்பின்னர் சாமப்பொழுது ( 10 மணி முதல் 2 மணி வரை) துவங்கி விடுவதால் பெரும்பாலும் தூங்கச் சென்று விடுவர். எனவே தான் மாலை நேரத்து சந்திரன் இங்கு பேசப்படுகிறான். பொதுவாக சுண்ணாம்புக் காளவாசலில் ஒருவர் மாட்டிக் கொண்டால், அதிலிருந்து வெளிப்படும் வெப்பம் மிகுந்த புகையினால் கண்களைத் திறந்து பார்க்கவே முடியாது. ஆனால் திருநாவுக்கரசருக்கோ வேறு மாதிரியான காட்சி தெரிகிறது. அவருக்கு புகை மண்டலம் தெரியவில்லை. மாறாக, கண்ணிற்கினியதாய் மாலை நேரத்து சந்திரனின் ஒளியைப்போல தெளிவான இனிமையான காட்சி தெரிகிறது. என்னே ஈசனின் அருள்!

வீசு தென்றல் = வீசுகின்ற தென்றல் காற்றின் குளுமை

கொண்டல், கோடை, தென்றல், வாடை என்ற நால்வகைக் காற்றுள்ளும் தென்றல் காற்று இதமானது மட்டுமின்றி குளுமையானதும் கூட. இதைப்பற்றி தொல்தமிழகம் - பகுதி 1 என்ற ஆய்வுக் கட்டுரையில் விரிவாகக் கண்டுள்ளோம். இனி, நீற்றறையில் சிக்கிக்கொண்ட ஒருவருக்கு அதிலிருந்து வரும் வெப்பக் காற்றினால் அவரது உடல் படும்பாடு சொல்லொணாதது. ஆனால் திருநாவுக்கரசருக்கோ அந்த நீற்றறையில் வெப்பமே தெரியவில்லையாம். மாறாக நீற்றறைக்குள் தென்றல் வீசுவதைப் போல இதமாகவும் உடலுக்குக் குளுமையாகவும் இருந்ததாகச் சொல்கிறார். அட, இதல்லவா ஈசனின் அருள்!

மூசு வண்டறை பொய்கை = மொய்க்கும் வண்டுகள் ஆரவரிக்கும் குளத்து வாசனை

பொதுவாக பொய்கை என்றாலே அதில் அல்லி, தாமரை முதலான பல நீர்ப்பூக்கள் பூத்திருக்கும். இப் பூக்களினால் கவரப்பட்ட வண்டுகள் அப்பூக்களைச் சுற்றிப் பறந்தவாறு அங்குமிங்கும் திரிந்து கொண்டு ஒலி எழுப்பிக் கொண்டிருக்கும். பலவிதமான பூக்களின் நறுமணக் கலவையால் பொய்கைக்கு அருகில் சென்றாலே ஒருவித நறுமண வாசனையை அறிய முடியும். பொதுவாக நீற்றறைக்குள் சுண்ணாம்பின் காரநெடிதான் இருக்கும். இந்தக் காரநெடியால் மூக்கு புண்ணாகி எரிவதுடன் மூச்சடைப்பும் ஏற்படும். ஆனால், திருநாவுக்கரசருக்கோ நீற்றறைக்குள் ஒரு பொய்கையின் மலர் வாசனையே கிடைத்ததாம். நறுமணமிக்க பல பூக்களின் வாசனையை முகர்ந்ததாகக் கூறுகிறார். என்னே சிவனருள்! என்னே சிவனருள்!

முடிவுரை:

இப்படி ஐந்து புலன்களும் வெந்து போகும்படியான ஒரு சுண்ணாம்புக் காளவாசலுக்குள் தள்ளப்பட்ட திருநாவுக்கரசருக்கோ இறையருளால் ஐந்து புலன்களும் மகிழ்ந்து இன்புறுமாறு ஒரு பெரிய விருந்து கிடைத்தது. சுண்ணாம்புக் காளவாசல் அன்றி வேறு ஒரு சாதாரண சிறைக்குள் அவரை அடைத்திருந்தாலும் இப்படி ஒரு ஐம்புலன் விருந்து கிடைத்திருக்காது என்றே சொல்லலாம். ஏனென்றால் சுண்ணாம்புக் காளவாசலில் தான் ஐந்து புலன்களுக்கும் தீங்கு விளைவிப்பதான புகையும் வெப்பமும் ஒலியும் ஒருங்கே இருக்கும். இந்த நீற்றறையில் என்ன நடந்திருக்கும் என்பதை சற்று கற்பனை செய்து தான் பார்ப்போமே.

நீற்றறைக்குள் சிறைவைக்கப்பட்டதும் திருநாவுக்கரசர் திடுக்கிட்டுப் போகிறார். வெப்பமிக்க சுண்ணாம்புப் புகையினால் அவரால் கணகளையே திறக்க இயலவில்லை. கண்களை மூடிக் கொள்கிறார். உடல் சுடுகிறது. நா வறள்கிறது. மூக்கில் சுண்ணாம்புப் புகை புகுந்து துன்புறுத்துகிறது. சுண்ணாம்பு வெடிக்கும் ஒலியும் கொதிக்கும் ஒலியும் காதில் புகுந்து வேதனைப் படுத்துகிறது. இனி சிவனே கதி என்று கண்களை மூடிய நிலையிலேயே அமர்ந்து ஈசனின் ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதத் துவங்குகின்றார். நேரம் கடக்கிறது. எவ்வளவு நேரம் சிவ மந்திரத்தில் ஈடுபட்டிருந்தாரோ அவருக்கே தெரியவில்லை. திடீரென்று இதுவரை கேட்டுக் கொண்டிருந்த வெடியொலியும் கொதியொலியும் அடங்கி விட்டிருந்தது. எங்கிருந்தோ இனிமையான வீணையின் இசை அவரது காதில் கேட்கிறது. துணுக்குற்ற அவர் கண்களைத் திறந்து பார்க்கிறார். என்னே ஆச்சர்யம்! அவர் முன் இருந்த புகை மண்டலம் போய் இப்போது நிலா ஒளிவீசிக் கொண்டிருந்தது. அந் நிலவொளியைக் கண்டு அவர் மகிழ்ந்திருக்கும் நேரத்தில் தென்றல் அவரை 'சுகமா?' என்று நலம் விசாரித்துச் செல்கிறது. திருநாவுக்கரசரின் உடல் குளிர்கிறது. சூழல் முற்றிலும் மாறிப்போன மகிழ்ச்சியில் அவரது நாவில் நீர் ஊறுகிறது. அட, இந்த உமிழ்நீர் ஏன் இன்று இளநுங்கின் நீரைப் போல் இனிக்கிறது? என்று மயங்குகிறார் திருநாவுக்கரசர். ஈசன் நமக்கு அருளிவிட்டானோ? என்ற ஐயம் தோன்றுகிறது அவர் மனதில். ஆம் என்று அவருக்குப் பதிலளிப்பதைப் போல அவரது மூக்கிற்குள் நுழைகிறது பூக்களின் நறுமண வாசம். ஈசனின் அருளால் திக்குமுக்காடிப் போகிறார் திருநாவுக்கரசர். மீண்டும் கண்களை மூடிக்கொண்டு சிவ மந்திரத்தை ஓதத் துவங்குகிறார் நீற்றறையின் கதவுகள் திறக்கப்படும் வரை.

ஓங்குக திருநாவுக்கரசர் புகழ்!          ஓங்கி வளர்க அவர்தம் தமிழ்!
...............................................................................................................................

10 கருத்துகள்:

 1. திபொச, உங்களோடு கருத்து மாறுபடுவதுதான் எனக்கு வழக்கமாகிப் போன ஒன்றாயிற்றே! மாலை மதியம், வீங்கிள வேனில் காலத்து மூசு வண்டறைப் போதில் வீசும் தென்றல் மணக்காமல் வேறெப்படி இருக்கும்? செய்யுள் காட்டும் காட்சியை ஒட்டு மொத்தமாகக் காணவேண்டும். அப்படி மொத்தமாகப் பார்த்தாலும் ஐம்புல இன்பம் விளையத்தானே செய்யும்? உயரமான டம்ளரில் பல வண்ண அடுக்குகளாக இருக்கும் ஐஸ்க்ரீம். பார்க்க, மோக்க, உணர. ருசிக்க என்று நான்கு புலன்களுக்கு ஒரே நேரத்தில் இன்பமளிப்பதில்லையா? அது போன்றதே இந்த வீசு தென்றல் என்று கருத இடமிருக்கிறதல்லவா?

  பதிலளிநீக்கு
 2. இல்லை ஹரியண்ணா.
  வீங்கு இளவேனில் என்பதில் வீங்கு என்பது இளவேனில் பருவத்துடன் எப்படிப் பொருந்தும்?.விளக்குங்கள்.
  மூசு வண்டறைப் பொய்கையின் நீர் (நாட்பட்ட நீர்) இன்சுவையாக இருக்குமா?

  அன்புடன்,
  தி.பொ.ச.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஐயா ஒரு சந்தேகம் தென்றல் எப்போதுவீசும் வசந்த காலத்திலா இளவேனிர்காலத்திலா மூசு என்ற சொல்லுக்கு சிறு என்றும் பொருள்படும் மூசு வண்டறை (சிறுவண்டுகள் ) எறும்பின் ஒரு வகைக்கு மூசு என்று பெயர் உண்டு (சர்க்கரையில் மிக சின்னதாக கருப்பாக ஒரு வகை எறும்பு மொய்க்கும் )

   நீக்கு
  2. திரு. சாமிசம், தென்றல் எல்லா காலத்திலும் வீசத்தான் செய்கிறது. நாம் தான் அதை உணர்வதில்லை.:)))

   திரு. லோகநாதனுக்கு நன்றி.

   அன்புடன்,

   தி.பொ.ச

   நீக்கு
 3. அருமையான இடுகை.. எல்லாவற்றையும் விட இறுதியில் தந்த முடிவுரை மிக அருமை..! :)

  பதிலளிநீக்கு
 4. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 5. காண்பிக்கப்பட்ட எவ்விடத்திலும் வேனில் பனை எனவோ நுங்கு எனவோ பொருள் காணகூடவில்லையே

  வீங்கிளவேனில் என்பதை போலவே காண்பிக்கப்பட்ட சூளாமணி வளர்கின்ற இளவேனில் என கூறியிருப்பது, வீங்கு என்பது வளர்கின்ற என்ற பொருளை செவ்வனே தந்தொத்து போகின்றதே. ஐம்புலன் ஒப்புமை தவறாக இருக்கலாம், ஆயின் அதற்கு வேனிலை நுங்கு ஆக்குவதில் பயன்யாதோ

  மீள்பார்வையில் சங்க இலக்கியத்தில் நுங்கு என்பது பனைப்பொருளான பயன்பாட்டை காணகிடைக்காதே

  பதிலளிநீக்கு
 6. மலைபோல் விறகுகள் அடுக்கப்பட்டிருந்தாலும் ஒரு துளி நெருப்பு போதும் எல்லாவற்றையும் எரித்து சாம்பலாக்க அதுபோலவே நமசிவாய எனும் திருவைந்தெழுத்து சிறியதாக இருந்தாலும் அதன் வீரியமும்,பெருமையும் எப்படிப்பட்ட துன்பங்களையும் தவிடுபொடியாக்கிவிடும்***********

  பதிலளிநீக்கு
 7. மலைபோல் விறகுகள் அடுக்கப்பட்டிருந்தாலும் ஒரு துளி நெருப்பு போதும் எல்லாவற்றையும் எரித்து சாம்பலாக்க அதுபோலவே நமசிவாய எனும் திருவைந்தெழுத்து சிறியதாக இருந்தாலும் அதன் வீரியமும்,பெருமையும் எப்படிப்பட்ட துன்பங்களையும் தவிடுபொடியாக்கிவிடும்***********

  பதிலளிநீக்கு
 8. மலைபோல் விறகுகள் அடுக்கப்பட்டிருந்தாலும் ஒரு துளி நெருப்பு போதும் எல்லாவற்றையும் எரித்து சாம்பலாக்க அதுபோலவே நமசிவாய எனும் திருவைந்தெழுத்து சிறியதாக இருந்தாலும் அதன் வீரியமும்,பெருமையும் எப்படிப்பட்ட துன்பங்களையும் தவிடுபொடியாக்கிவிடும்***********

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.