குறள்:
செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின்
ஆன்றாரோ டொப்பர் நிலத்து.
- 413
தற்போதைய பொருள்:
கலைஞர் உரை: குறைந்த உணவருந்தி நிறைந்த அறிவுடன் விளங்கும் ஆன்றோர்க்கு ஒப்பாகக் கேள்வி ஞானம் எனும் செவியுணவு அருந்துவோர் எண்ணப்படுவர்.
மு.வ உரை: கற்றவரின் செவியுணவாகிய கேள்வி உடையவர் நிலத்தில் வாழ்கின்றவரே ஆயினும் அவி உணவைக் கொள்ளும் தேவரோடு ஒப்பாவார்.
சாலமன் பாப்பையா உரை: செவி உணவாகிய கேள்வியைப் பெற்றிருப்பவர் இப்பூமியில் வாழ்பவரே என்றாலும், வேள்வித் தீயில் கொடுக்கப்படும் நெய் முதலிய உணவைப் பெறும் விண்ணுலகத் தேவர்க்குச் சமமாவர்.
உரைத் தவறுகள்:
மேற்காணும் உரைகளில் கலைஞர், வழக்கம் போல, குறளில் இல்லாத சொற்களைக் கொண்டு விளக்கம் கூறி இருப்பதால் அவ் விளக்கத்தினை உண்மை விளக்கமாகக் கொள்ள முடியவில்லை. இனி மற்ற இரண்டு விளக்கங்களைப் பார்ப்போம்.
மு.வ.வும் சரி, சாலமன் பாப்பையாவும் சரி, இருவருமே 'அவியுணவின் ஆன்றோர்' என்னும் சொல்லுக்கு 'விண்ணுலகத் தேவர்கள்' என்ற பொருளைக் கொள்கின்றனர். இச் சொல்லுக்கு இப் பொருள் பொருந்துமா என்றால் பொருந்தாது. ஏனென்றால் தேவர்கள் என்று ஒரு சாரார் இருப்பதை வள்ளுவர் எந்த குறளிலும் கூறவில்லை. இந்த உண்மையினை பல குறள்களின் வாயிலாக நாம் கண்டுள்ளோம். தேவர்கள் என்னும் கற்பனைப் படைப்பினைப் பற்றி இதுகாறும் ஒரு இடத்திலும் கூறாத வள்ளுவர் இக் குறளில் மட்டும் கூறி இருக்க முடியுமா?. முடியாது. ஏனென்றால் வள்ளுவர் ஒரு கற்பனாவாதி அல்ல. இதை நாம் பல குறள்களின் வாயிலாகக் கண்டுள்ளோம். எனவே இக்குறளில் வரும் அவியுணவின் ஆன்றோர் என்பது யாக குண்டத்தில் இடப்படும் உணவினைக் கொள்ளும் தேவர்களைக் குறிக்காது என்பது தெளிவு.
இதை இன்னொரு கோணத்தில் இருந்தும் பார்க்கலாம். செவிச்செல்வமாகிய கேள்வி ஞானத்தினை உடையோரும் வானுலகத் தேவர்களும் எவ்வாறு ஒப்பாக முடிய்ம்?. வானுலகத் தேவர்களோ நினைத்த செயலை நினைத்த கணத்தில் முடிக்கும் வல்லமை பெற்றவர்களாம். நினைத்த உருவினை நினைத்த பொழுதே அடையும் திறன் பெற்றவர்களாம். இவர்களுக்கு தூரம் என்பது ஒரு பொருட்டே அல்ல. விரும்பிய இடத்தில் விரும்பிய கணத்தில் இருப்பார்களாம். இப்படி தேவர்களிடத்தில் இருப்பதான எந்த ஒரு திறமையும் மண்ணில் வாழும் மனிதர்களிடத்தில் இல்லையே. கேள்வி ஞானம் பெற்றுவிட்டால் மட்டும் தேவர்களின் திறமைகளை ஒருவர் பெற்று விட முடியுமா?. முடியாது அல்லவா?. ஆக, இக் குறளில் வரும் அவியுணவின் ஆன்றோர் என்ற சொல்லுக்கு தேவர்கள் என்ற பொருளைக் கொண்டால் அது முழுக்க முழுக்கக் கற்பனையாக அமைவதுடன் குறளின் பொருளும் பொருத்தமாக அமையவில்லை. எனவே இந்த இரண்டு உரைகளும் தவறானவையாகக் கொள்ளப்படுகிறது.
என்றால் இக் குறளில் வரும் அவியுணவின் ஆன்றோர் என்பதற்கு வள்ளுவர் கூற விழையும் மெய்யான பொருள் என்ன? இதைப் பற்றிப் பார்ப்போம்.
திருந்திய பொருள்:
இக் குறளில் வரும் அவியுணவின் ஆன்றோர் என்பதற்கு அவித்த உணவினை மிகுதியாக உடையோர் என்பது பொருள்.
இப்புதிய பொருளின் படி, இக் குறளுக்கான புதிய விளக்கமானது,
செவிக்கு உணவாகிய கேள்வி ஞானத்தை நிறையப் பெற்ற (வறுமை நிலையில் இருக்கும் புல) வர்களும் அவித்த உணவாகிய நெல்சோற்றினை நிறையப் பெற்ற செல்வந்தர்களும் இப் பூமியில் ஒருவருக்கொருவர் ஒப்பானவர்களே ஆவர்.
நிறுவுதல்:
முதலில் இக்குறளில் வரும் ஆன்றோர் என்ற சொல்லுக்கு நிறையப் பெற்றோர் அல்லது மிகுதியாகப் பெற்றோர் என்ற பொருள் எவ்வாறு பொருந்தும் என்று பார்ப்போம்.
'ஆன்று, ஆன்றல் ' என்ற சொற்களுக்கு கீழ்க்காணும் பொருட்களைத் தருகிறது சென்னை இணையத் தமிழ்ப்பேரகராதி.
ஆன்று āṉṟu , vbl. pple. < அகன்று. 1. Having been full or filled; நிறைந்து. பாடான் றவிந்த பனிக்கடல் (மதுரைக். 629)
ஆன்றல்² āṉṟal , n. < ஆல்-. < சால்-. 1. Greatness, dignity; மாட்சிமை. (திவா.) 2. Abundance, copiousness; மிகுதி. (திவா.)
இதிலிருந்து 'அவியுணவின் ஆன்றோர்' என்னும் சொல்லுக்கு 'அவித்த உணவினை நிறைவாகக் கொண்டோர்' அல்லது 'மிகுதியாகப் பெற்றோர்' என்ற பொருள் தோன்றுவதை நன்கு அறிய முடியும்.
அடுத்து, இக் குறளில் வரும் அவியுணவு என்பது அவித்து உண்ணப்படும் உணவாகிய நெற்சோற்றினைத் தான் குறிக்குமா? வேறு உணவினைக் குறிக்காதா? என்ற கேள்வி தோன்றலாம். இதைப் பற்றிக் கீழே பார்ப்போம்.
பொதுவாக இன்றைய தமிழக உணவு என்று எடுத்துக் கொண்டால் அதில் முதலிடம் பிடித்திருப்பது நெல்லரிசி உணவு என்பது நம் அனைவருக்கும் தெரியும். இக் காலத்தில் மட்டுமல்ல, சங்க காலத்திலும் கூட நெல்லரிசி உணவினை மக்கள் பெரிதும் விரும்பி உண்டுள்ளனர். பல சங்கப் பாடல்களில் நெல்லரிசிச் சோறு பற்றிக் கூறப்பட்டுள்ளது. மேலும் நெல்லரிசிச் சோறானது கம்பு, கேழ்வரகு, தினை போன்ற உணவுகளைக் காட்டிலும் உயர்வகை உணவாகக் கருதப்பட்டது. ஒருவர் நெல்லரிசிச் சோற்றினை நிறைவாகக் கொண்டிருப்பது அவரது செல்வ மிகுதியின் அடையாளமாகக் கொள்ளப்பட்டது. பழங்காலத்தில் இந்த நெல்லரிசிச் சோற்றினை நிறைவாகப் பெற்றோர் யாவர்?. வேளாண் நிலக்கிழார்களும் மன்னர்களும் தானே.
இவர்களைப் பாடித்தான் அக் காலத்தில் புலவர்கள் பரிசு பெற்றார்கள். ஒருவன் புலவனாக வேண்டுமென்றால் பல நூல்களைக் கற்க வேண்டும். ஆனால் கற்பதற்கு நூல் வாங்கப் பணம் வேண்டுமே, என்ன செய்வது? இதற்கும் ஒரு வழி சொல்கிறார் வள்ளுவர்.
கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்கு
ஒற்கத்தின் ஊற்றாந் துணை. - 414
'நூல்களில் இருந்து கல்லாவிடினும் ஆசிரியர் சொல்வதைக் கேளுங்கள்' என்று வள்ளுவர் மேற்காணும் குறளில் கூறுகிறார். இதிலிருந்து, பணமில்லாத வறிய நிலையிலும் கூட ஒருவன் கேள்வி ஞானத்தைக் கொண்டு கற்றுப் புலவனாக முடியும் என்னும் கருத்து பெறப்படுகிறது. வறுமை நிலையில் உள்ள மக்கள் கேள்வி ஞானம் பெற்றாவது வாழ்வில் உயர்நிலை அடைய வேண்டும் என்னும் அவரது ஆவலை வெளிப்படுத்தும் விதமாகத் தான் 'கேள்வி' என்னும் அதிகாரத்தினையே வள்ளுவர் இயற்றியுள்ளதாகத் தெரிகிறது.
இருந்தாலும் வள்ளுவருக்கு ஒருசார் மக்கள் கூட்டம் மீது கடுஞ்சினம் வருகிறது. இம் மக்கள் உருவத்தால் மக்களைப்போல் இருந்தாலும் பண்பினால் விலங்குகளைப் போல இருக்கின்றனர். எங்கே அன்னதானம் நடந்தாலும் அங்கே முதல் ஆளாய்ச் சென்று சோற்றினை உண்ணத் துவங்குகின்றது இக் கூட்டம். ஒருவேளைச் சோற்றை உண்டு கொண்டிருக்கும்போதே ' ஐயா, அடுத்து எப்ப ஐயா சோறு போடுவீங்க?" என்று அடுத்த வேளைச் சோற்றுக்கு ஆலாய்ப் பறக்கின்றது இக் கூட்டம். இந்த அன்னதானக் கூடத்தின் அருகிலேயே ஒரு மேடையில் ஒரு அருமையான சொற்பொழிவு நடந்து கொண்டிருக்கின்றது. அச் சொற்பொழிவினை வெகுசிலர் மட்டுமே அமர்ந்து கேட்டுக்கொண்டிருக்கின்றனர். பக்கத்திலேயே நடந்தாலும் அந்த சொற்பொழிவினைக் கேட்க இந்த மக்கள் கூட்டம் போகவில்லை. இப்போது மட்டுமில்லை எப்போதுமே போவதில்லை. ஏனென்றால் இந்த மக்கள் கூட்டத்திற்கு செவியின் சுவை தெரியாது; விலங்குகளைப் போல வாயின் சுவை மட்டுமே தெரியும். எனவே தான் இக் கூட்டத்தினை மாக்கள் என்று ஏசுகிறார் வள்ளுவர். இப்படி செவியின் சுவை அறியாமலும் அறிய விரும்பாமலும் வாயின் சுவை மட்டுமே கொண்டு வாழும் இம் மாக்கள் உலகில் ஏன் வாழ வேண்டும்? இவர்கள் இறந்தால் தான் என்ன? என்று கீழ்க் காணும் குறளில் சாடுகிறார் வள்ளுவர்.
செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்
அவியினும் வாழினும் என். - 420
அதே சமயம் சொற்பொழிவினை ஆவலுடன் கேட்டுக் கொண்டிருந்த மக்கள் சொற்பொழிவு முடிந்த பின்னர் எழுந்து அன்னதானக் கூடம் சென்று உணவு உண்ணத் துவங்குகின்றனர். அதைக் கண்டு வள்ளுவர் பாடுவதாக அமைகிறது கீழ்க்காணும் பாடல்.
செவிக்குண வில்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப் படும். - 412
இப்படி வயிற்றுக்குத் தேவையான உணவினை விட மிக உயர்வானதாகக் கருதப்பட்ட கேள்வி ஞானத்தினை செல்வங்களில் தலைசிறந்த செல்வம் என்றும் கூறுகிறார்.
செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்து ளெல்லாந் தலை. - 411
மேலும் நூல்களின் மூலமாகப் பெறப்படும் அறிவுக்கும் கேள்வியின் மூலமாகப் பெறப்படும் அறிவுக்கும் ஒரு வேறுபாடு உண்டு. நூல்களின் மூலமாகக் கற்கும் பொழுது ஏற்படும் ஐயப்பாடுகளுக்கு விடை கிடைப்பது அரிதாகையால் அந்த அறிவு முழுமையாக பக்குவப்படாத அறிவாக அமைகிறது. இந்த நூல் அறிவினை சமைக்கப்படாத நெல்லுடன் ஒப்பிடலாம். ஏனென்றால் இவ் இரண்டையுமே ஒருவர் பக்குவப்படுத்தாமல் உட்கொள்ள முடியாது. ஆனால் கற்றறிந்த அனுபவசாலிகளான ஆசிரியர்கள் கூறும் சொற்களில் ஐயம் திரிபற இருப்பதால் அது முழுமையாக பக்குவப்பட்ட அறிவாக அமைகிறது. இந்த கேள்வி ஞானத்தினை சமைக்கப்பட்ட அரிசிச்சோற்றுடன் ஒப்பிடலாம். ஏனென்றால் கேள்வி ஞானமும் சரி அரிசிச்சோறும் சரி இரண்டையும் ஒருவர் அப்படியே உட்கொள்ள முடியும். இத்தகைய ஒரு ஒப்பீட்டைத் தான் நமது தலைப்புக் குறளில் கூறுகிறார் வள்ளுவர்.
நிலக் கிழார்களையும் மன்னர்களையும் பற்றிக் கூறுமிடத்து, நெல்லின் மிகுதியை உடையவர்கள் என்று கூறாமல், அவித்த உணவாகிய அரிசிச்சோற்றினை மிகுதியாக உடையவர்கள் என்று கூறியிருப்பதில் இருந்து, புலவர்களிடத்தில் இருக்கும் கேள்வி ஞானத்தினை புரவலர்களிடத்தில் இருக்கும் அரிசிச்சோற்றுடன் ஒப்பிட்டிருக்கும் உவமை நயத்தினை அறிந்து இன்புறலாம். மேலும் என்னதான் புலவர்கள், தமது நல்வாழ்வுக்காக புரவலர்களைப் பாடிப் பரிசில் பெற்று வாழ்ந்தாலும் அவர்கள் எவ்வகையிலும் புரவலர்களை விடத் தாழ்ந்தவர் அல்லர். இருநிலமாகிய இப் பூமியிலே இவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் ஒப்பானவர்களே என்கிறார்.
ஆம்,
புலவர்கள் மக்களுக்கு அறிவினைப் புகட்டுகின்றனர்.
புரவலர்கள் மக்களுக்கு உணவினைப் புகட்டுகின்றனர்.
இப்போது சொல்லுங்கள், இருவரும் ஒப்பானவர்கள் தானே?.
......................................தமிழ் வாழ்க!.............................................