வெள்ளி, 23 ஜூலை, 2010

நுதல் என்றால் என்ன?

முன்னுரை:

நுதல் என்னும் சொல் சங்க காலத்தில் மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு இன்று வழக்கிழந்த நிலையில் உள்ள பல சொற்களுள் ஒன்றாகும். இச் சொல்லுக்குச் சில பொருட்களை தற்கால அகராதிகள் கூறி இருந்தாலும் அப் பொருட்கள் பல இடங்களில் குறிப்பாக பெண்களைப் பொருத்த மட்டில் பொருந்தாத நிலையே காணப்படுகிறது. இது இச் சொல்லுக்கு வேறு சில பொருட்களும் உள்ள நிலையினையே எடுத்துக் காட்டுகிறது.  இக் கட்டுரையில் இச் சொல் குறிக்கும் வேறு பொருட்களைப் பற்றிக் காணலாம்.

தற்போதைய பொருட்கள்:

நுதல் என்னும் சொல்லுக்குத் தற்கால அகராதிகள் கூறும் பொருட்கள் கீழே தரப்பட்டுள்ளன.

இணையத் தமிழ்ப் பேரகராதி: சொல், நெற்றி, புருவம், தலை, மேலிடம்.
கழகத் தமிழ்க் கையகராதி: நெற்றி, தலை, புருவம், சொல்.


பொருள் பொருந்தாமை:

மேற்காணும் பொருட்களில் ஏதேனும் ஒரு பொருளாவது கீழ்க்காணும் பாடல்களில் பொருந்துகின்றதா என்று பார்ப்போம்.

ஒள் நுதல் பசப்பித்தோரே - ஐங்கு. 67
பல்லோர் அறியப் பசந்தன்று நுதலே.- ஐங்கு-55
ஒள் நுதல் பசப்பித்தோரே - ஐங்கு. 67
சுடர்நுதல் பசப்பச் சாஅய்ப் படர்மெலிந்து -ஐங்கு.107
என் நுதல் பசப்பதுவே. - ஐங்கு.222
திருநுதல் பசப்பவும் - ஐங்கு.230
வாள்நுதல் பசப்ப - ஐங்கு.423
ஒள்நுதல் பசப்பது எவன்கொல் - ஐங்கு.219
ஒள்நுதல் பசத்தல் - ஐங்கு.225
நல்நுதல் பசப்பவும் - ஐங்கு.227
நல்நுதல் பசத்தல் - ஐங்கு.234
ஒள்நுதல் பசப்ப - ஐங்கு.424
சுடர்நுதல் பசலை - கலி.125
வாள்நுதல் பசப்பு ஊர - கலி.127
ஆய்நுதல் பசப்பே - கலி.144
பாராட்டாக்கால் பசக்கும் நுதல் - கலி.25
நுதல் ஊரும் பசப்பு - கலி.28
பசந்தன்று நுதல் - கலி.36
நுதல் பசப்பு ஊர - கலி.99. அக.-205

மேற்காணும் பாடல்கள் அனைத்தும் காதலி அழுதுநின்ற நிலையைக் கூறுகின்றன. பசப்பு, பசத்தல், பசலை ஆகிய சொற்கள் யாவும் அழுகையைக் குறிக்கும் என்று ஏற்கெனவே நாம் பசப்பு என்றால் என்ன? என்ற கட்டுரையில் ஆய்வுசெய்து நிறுவியுள்ளோம். இந் நிலையில், அழுகையுடன் தொடர்புடைய உறுப்பாக மேற்காணும் பாடல்கள் அனைத்திலும் குறிப்படப்படும் 'நுதல்' என்ற சொல்லுக்குப் பொருளாக நெற்றியோ புருவமோ தலையோ பொருந்தாது. ஏனென்றால் நெற்றியோ புருவமோ தலையோ அழுவதில்லை.

அடுத்து 'சிறுநுதல்' என்ற சொல்லானது ஐங்குறுநூறு.394, 179. குறுந்தொகை-129. அகநானூறு.-57,334, 307. புறநானூறு.-166 ஆகிய இடங்களில் பயின்று வந்துள்ளது. சிறு என்றால் சிறிய அளவினது என்ற பொருள்நிலையில் இங்கும் நுதல் என்னும் சொல்லுக்கு முற்சொன்ன ஐந்து பொருட்களும் பொருந்தாது. இது எவ்வாறெனில் நெற்றியும் தலையும் அகன்ற பரப்புடையவை; புருவமோ நீளமானது ஆகும். சொல்லுக்கும் மேலிடத்திற்கும் சிறுமைப் பண்பு பொருந்தாது.

அடுத்து சுடர்நுதல், வாள்நுதல், ஒள் நுதல், நறுநுதல் ஆகிய சொற்கள் சங்க இலக்கியங்களிலும் கீழ்க்கணக்கு நூல்களிலும் பல இடங்களில் பயின்று வந்துள்ளன. இச் சொற்களில் நுதல் என்னும் சொல்லுடன் அடைமொழியாய் வருகின்ற சுடர், வாள், ஒள் ஆகிய சொற்கள் யாவும் ஒளிரும் பண்பைக் குறிப்பவை என்று நாம் நன்கு அறிவோம். அதேபோல நறு (நறிய) என்னும் சொல்லும் ஒளிரும் பண்பையே குறிக்கும் என்று ஏற்கெனவே நாம் கூந்தலுக்கு மணம் உண்டா என்ற கட்டுரையில் ஆய்வு செய்து நிறுவியுள்ளோம். இந்த நான்கு சொற்களும் ஒளிரும் பண்பையே குறிக்கின்ற நிலையில் இவற்றை அடைமொழியாகக் கொண்ட நுதல் என்னும் சொல்லுக்குப் பொருளாக சொல், நெற்றி, புருவம், தலை, மேலிடம் என்ற பொருட்களில் எதுவும் பொருந்தாது. ஏனென்றால் இவற்றில் எதற்குமே ஒளிரும் பண்பு இல்லை.

இவற்றில் இருந்து நுதல் என்னும் சொல்லுக்கு அகராதிகள் கூறியுள்ள பொருட்கள் நீங்கலாக பிற பொருட்களும் உண்டு என்று தெளியலாம்.

புதிய பொருட்கள்:

நுதல் என்னும் பெயர்ச்சொல் குறிக்கும் புதிய பொருள் 'கண்விழி ' ஆகும்.

நிறுவுதல்:

நுதல் என்னும் சொல்லானது எவ்வாறு கண்விழியினைக் குறிக்கும் என்பதை இங்கே பார்ப்போம். உடல் உறுப்புக்களில் கண்விழிக்கு சில சிறப்புப் பண்புகள் உண்டு. அவை: சிறுமைப் பண்பு, ஒளிரும் பண்பு மற்றும் கலங்கி நீர்வார்க்கும் (அழும்) பண்பு ஆகியன. இந்தப் பண்புகளை விளக்கும் சங்க இலக்கிய மற்றும் கீழ்க்கணக்குப் பாடல்களைக் கீழே காணலாம்.

சிறுமைப் பண்பு:

சிறுநுதல் - ஐங்கு.394, 179. குறு-129. அக.-57,334, 307. புற.-166.

ஒளிரும் பண்பு:

ஒள் நுதல் - ஐங்கு.73, 168,123,449,322, கலி - 105,110,35,142,147,4,97. குறு-167,22,292,70,273. அக-5,50,84,116,306,325,344. நற்.-77,240,283,339,377. பரிபா.தி-1. பதிற்.-30,48,57,74,81. புற.-25. குறள்-1088,1240. கார்.-34. நாலடி.-379,380
சுடர்நுதல் - ஐங்கு.94, 474, 466,254,375,443. கலி-13,58. அக.-192. குறி.-182. நற்.-208,245. பதிற்.-16,51,70. பெரும்பாண்.-385. பட்டின.-21
வாள்நுதல் - ஐங்கு.404, 408,420,447. குறு-135. அக.-9,33,179,230,386. பரிபா.-8. பதிற்.-19,38,89. புற.-105,211,314. நான்மணி.-22
நறுநுதல் - கலி.105,17,37,47,92,12,14,21,53,60,61. குறு.-259,323,362. அக.-43,90,93,173,338,238. நற்.-50. பரிபா.-11. பதிற்.-65. பெரும்பாண்.-303. நாலடி.-381. கார்.-21.

கலங்கி நீர்வார்க்கும் (அழும்) பண்பு:

ஒள் நுதல் பசப்பித்தோரே - ஐங்கு. 67
பல்லோர் அறியப் பசந்தன்று நுதலே.- ஐங்கு-55
நலம்பெறு சுடர்நுதல் தேம்ப - ஐங்கு.56
ஒள் நுதல் பசப்பித்தோரே - ஐங்கு. 67
சுடர்நுதல் பசப்பச் சாஅய்ப் படர்மெலிந்து -ஐங்கு.107
என் நுதல் பசப்பதுவே. - ஐங்கு.222
திருநுதல் பசப்பவும் - ஐங்கு.230
வாள்நுதல் பசப்ப - ஐங்கு.423
ஒள்நுதல் பசப்பது எவன்கொல் - ஐங்கு.219
ஒள்நுதல் பசத்தல் - ஐங்கு.225
நல்நுதல் பசப்பவும் - ஐங்கு.227
நல்நுதல் பசத்தல் - ஐங்கு.234
ஒள்நுதல் பசப்ப - ஐங்கு.424
சுடர்நுதல் பசலை - கலி.125
வாள்நுதல் பசப்பு ஊர - கலி.127
ஆய்நுதல் பசப்பே - கலி.144
பாராட்டாக்கால் பசக்கும் நுதல் - கலி.25
நுதல் ஊரும் பசப்பு - கலி.28
பசந்தன்று நுதல் - கலி.36
நுதல் பசப்பு ஊர - கலி.99. அக.-205
நுதல் பசப்பு இவர்ந்து - குறு.-185
நுதல் ஊர்தரும் பசப்பே - குறு.-205
நல்நுதல் பசலை - குறு.-48
பசந்தன்று நுதலே - குறு.-87
நல்நுதல் பசப்பவும் - அக.-77,85
ஒள்நுதல் பசப்பே - அக.-102
திருநுதல் பசப்ப - அக.-186
நுதல் பசந்தன்றே - அக.-227
ஒள் நுதல் பசலையும் - அக.-251
சிறு நுதல் பசந்து - அக.-307
நுதல் பாய பசலை - அக.-317
திருநுதல் பசப்பே - அக.-354
பசந்தன்று கண்டிசின் நுதலே - அக.-376
பசலை பாய்ந்த நுதலேன் - அக.-135
பசந்தன்று நுதலும் - அக.-95
நறுநுதல் பசத்தல் - நற்.-1
நுதல் கவின் அழிக்கும் பசலையும் - நற்.-73
சுடர்புரை திருநுதல் பசப்ப - நற்.-108
நுதலும் பசலை பாயின்று - நற்.-133
நல்நுதல் பசப்பினும் - நற்.-151
திருநுதல் பாய பசப்பே - நற்.-167
நுதலே ..... பசப்பு ஊர்ந்தன்றே - நற்.-197
நுதல் பரந்த பசலை - நற்.-288
நல்நுதல் பசந்த - நற்.-322
பசலை பாய்தரு நுதலும் - நற்.-368
பசந்தது பைந்தொடிப் பேதை நுதல் - குறள்.-1238

வெள்ளைக்கண் கம்புள்:

ஐங்குறுநூற்றில் 85 ஆம் பாடலில் ' வெண்நுதல் கம்புள் அரிக்குரல் பேடை' என்ற வரி உள்ளது. இதில் குறிப்பிடப்படும் கம்புள் என்ற பறவைக்கு வெள்ளை நிறத்தில் நெற்றியோ தலையோ இருந்ததாகக் கொள்ளலாமா என்றால் கொள்ள முடியாது. ஏனென்றால் வெள்ளை நிறத் தலையோ நெற்றியோ பறவை இனங்களில் பரவலாகக் காணப்படும் பண்பாகும். அன்றியும் ஒரு பறவையைப் பாடலில் குறிப்பிடும் புலவர் அதன் சிறப்புத் தன்மையையே கூறுவார் என்பதால் நுதல் என்ற சொல் இங்கும் நெற்றி அல்லது தலையைக் குறித்து வந்திருக்காது என்பது தெளிவு.

அதே சமயம் வெள்ளை நிறக் கண்களானது பறவை இனங்களில் அரிதாகவே காணப்படும் பண்பாகும்.  பறவைக் குடும்பங்களில் ஜோஸ்டெரோபிடே என்ற குடும்பம் ஒன்று உண்டு. இக் குடும்பத்தைச் சேர்ந்த அனைத்துப் பறவைகளின் கண்களைச் சுற்றிலும் பெரிய வெள்ளை நிற வளையம் ஒன்று காணப்படுகிறது. இது இப் பறவைகளின் தனிச் சிறப்பாகும். இக் குடும்பத்தைச் சேர்ந்த பறவை ஒன்றின் படம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. இப் பறவைகளைப் பற்றி மேலும் அறிந்துகொள்ள விக்கிபீடியாவில் தேடலாம். ஆக இங்கும் 'நுதல்' என்பது 'கண்விழி' என்ற பொருளில் தான் வந்துள்ளது என்பது பெறப்படுகிறது. கண்களைச் சுற்றிலும் வெள்ளை நிறத்தில் பெரிய வளையத்தைக் கொண்ட இப் பறவைகளை சங்க காலத்தில் கம்புள் என்று அழைத்தனர் என்பது இதன் மூலம் தெரிய வருகிறது.

முடிவுரை:

இன்றைய தமிழ் அகராதிகளில் பல சொற்களுக்குத் தவறான பொருட்கள் கொடுக்கப் பட்டுள்ளன என்பதை நாம் முன்னரே கண்டுள்ளோம். இந்த அகராதிப் பொருட்களின் அடிப்படையில் பல சங்க இலக்கியப் பாடல்களில் பயின்றுவரும் 'நறுநுதல்' என்ற சொல்லுக்கு' மணம் வீசும் நெற்றி' என்றே உரையாசிரியர்கள் பொருள் கூறியுள்ளனர். ஆனால் நெற்றி எங்காவது மணம் வீசுமா?. சந்தனம் பூசினாலும் இன்ன பிற திரவியங்களைப் பூசிக் கொண்டாலும் நெற்றி சிறிது நேரம் மட்டும் தானே மணக்கும்; மணம் வீசிக்கொண்டே இருக்க முடியுமா?. அதிலும் பெண்கள் நெற்றியில் எப்போதும் சந்தனத்தையோ வாசனைத் திரவியங்களையோ பூசிக் கொண்டே இருப்பார்களா?. ஒருவரிடம் இருந்து மணம் வீசுகிறது என்றால் அது அவருடைய நெற்றியிலிருந்து தான் வீசுகிறது என்று எவ்வாறு உறுதியாகச் சொல்ல முடியும்?. என்றெல்லாம் உரையாசிரியர்கள் சிந்திக்காமல் உரை எழுதியுள்ளது வேதனையளிக்கிறது. நாம் அறிந்தவரையில் பெண்கள் வாசனைத் திரவியங்களைத் தலைமுடியில் பூசிக் கொள்வார்கள்; சிலர் உடலெங்கும் (முகம் தவிர) பூசிக் கொள்வார்கள். இந் நிலையில் 'மணம் வீசும் நெற்றி' என்ற பொருள் எவ்வகையில் பொருத்தமாகும் அல்லது சாத்தியமாகும் என்று ஏன் உரையாசிரியர்கள் சிந்திக்கவில்லை என்பது புரியாமலே உள்ளது. எது எப்படியோ இனி 'நறுநுதல்' என்பது பாரதியார் சொன்னதுபோல் 'ஒளி படைத்த கண்'  ணையே குறிக்கும் என்பது தெளிவு.

13 கருத்துகள்:

 1. இங்கே ஒன்றை நாம் கவன்ப்படுத்திக்கொள்ள வேண்டுகிறேன் அதாவது ஒன்பது தொண்ணூறு தொள்ளாயிரம் என்று நாம் வழங்குவதில் ஒரு நெருடல் இருக்கிறது ஒன பத்து என்பது இயல்பாக ஒன்பதாகிவிடும் அப்படியானால் இது நமது எண்ணிலக்கனத்திற்கு ஒத்து வராது என்பது எனது கருத்து . மாற்று என்ன என்று நான் யோசித்துக்கொண்டு எனது நண்பர்களிடம் விவாதித்த காலங்களில் தமிழரின்ஜர் தொன்று என்பது தான் கையாளப்பட்டது என்று கூறியிருந்தார். அடுத்து ஒரு சிந்து வெளியில் முந்து தமிழ் என்ற புத்தகத்தில் பண்டைய செப்பேடுகள் போந்தார வற்றில் தொன்று என்பதே குறிக்கப்பட்டுள்ளது அப்படியாயின் நாம் தொன்று என்பதை எப்படி இழந்தோம்
  தொன்று 9
  தொன்பது 90
  தொண்ணூறு 900
  தொள்ளாயிரம் 9000
  தொண்ணூறாயிரம் 90000
  எத்தனை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது கைக்கொள்வது என்று தமிழரின்ஜர் கள் சிந்திக்க வேண்டும்.
  அடுத்த செம்மொழி தமிழ் மாநாட்டில் ஒரு விடிவு கிடைக்கும் என்று நம்புகிறேன் .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. 'தொன்று' அல்ல; தொண்டு என்பதே சரி;
   பரிபாடல் போன்ற சங்க இலக்கியங்களிலும் வேறு சில சிற்றிலக்கியங்களிலும் இந்தச் சொல் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.
   தொண்டு (9), தொண்பது (90) தொண்ணூறு (900), தொள்ளாயிரம் (9000), தொண்பதாயிரம் (90000), தொண்ணூறாயிரம் (900000)

   நீக்கு
 2. இனியன் ஐயா, இது மிக எளிதான செயலே. தொள் என்பதே அனைத்திற்கும் முன்னொட்டு ஆகும்.
  தொள்+பத்து = தொம்பத்து (கன்னடத்தில்)
  = தொமிதி (தெலுங்கில்)
  தமிழில் மட்டுமே தகரத்தை இழந்து ஒன்பது என்று வழங்கப் படுகிற்து. அதைப் போலவே

  தொள்+நூறு = தொண்ணூறு
  தொள்+ஆயிரம் = தொள்ளாயிரம்

  இதே பாணியில் சென்றால், தொண்ணூறு ஆயிரத்தை தொளட்சம் (தொள்+லட்சம்), தொண்ணூறு லட்சத்தை தொட்கோடி (தொள்+கோடி) என்று வழங்கலாம். நன்றி.

  அன்புடன்,

  தி.பொ.ச.

  பதிலளிநீக்கு
 3. நுதல் பற்றிய ஆய்வு ,தெளிவு,நன்றி.
  எட்டு ,ஒட்டு ,பத்து என்பது,ஒன்பது,நூறு என்பதாக அறிந்திருக்கிறேன்,

  பதிலளிநீக்கு
 4. நுதல் பற்றிய ஆய்வு ,தெளிவு,நன்றி.
  எட்டு ,ஒட்டு ,பத்து
  ஒன்பது,நூறு
  என்பதாக அறிந்திருக்கிறேன்,

  பதிலளிநீக்கு
 5. thamizhil eNkaLai kuRippida ethenum (symbols) uLLathaa. Example: Sanskrit language has symbols to represent numbers

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. "கண்நுதலான் தன் கருணை கண் காட்ட வந்த " மாணிக்கவாசகரின் சிவபுராணம் இதில் வரும் "கண்நுதலான்" என்ற சொல்லுக்கு விளக்கம் சொல்லுங்கள் ஐயா இதில் நுதல் என்பது நெற்றியை குறிக்கிறது

   நீக்கு
 6. "கண்நுதலான் தன் கருணை கண் காட்ட வந்த " மாணிக்கவாசகரின் சிவபுராணம் இதில் வரும் "கண்நுதலான்" என்ற சொல்லுக்கு விளக்கம் சொல்லுங்கள் ஐயா இதில் நுதல் என்பது நெற்றியை குறிக்கிறது

  பதிலளிநீக்கு
 7. "கண்நுதலான் தன் கருணை கண் காட்ட வந்த " மாணிக்கவாசகரின் சிவபுராணம் இதில் வரும் "கண்நுதலான்" என்ற சொல்லுக்கு விளக்கம் சொல்லுங்கள் ஐயா இதில் நுதல் என்பது நெற்றியை குறிக்கிறது உங்கள் பொருள்படி "கண்கண்விழி " என்றுதானே பொருள் வரும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பரே,

   கண் என்பதற்கு கருணை / அருள் என்றொரு பொருளும் உண்டு.

   கண் kaṇ
   , n. Grace; அருள். (அக. நி.)

   ஆக, கண்நுதலான் = கருணை நிறைந்த விழிகளை உடையவன்.

   இதையே தான் மாணிக்கவாசகர் 'கருணை நிறைந்த விழிகளை உடைய சிவன் தனது கருணைக் கண்களைக் காட்ட வந்து' என்கிறார்.

   விளக்கம் போதுமா? :))

   அன்புடன்,

   தி.பொ.ச.

   நீக்கு
  2. மிக்க நன்றி உங்கள் சேவை தொடர வாழ்த்துகள் தொடர்ந்து எழுதுங்கள் ஆவலுடன் இருக்கிறேன்....

   நீக்கு
  3. கண்நுதலான் = நெற்றியிலே கண்ணுடையவன் என்று சொல்லக் கூடாதா? கண்நுதலான் = நெற்றியிலே கண்ணுடைய நெற்றிக்கண்ணன் என்பதே சரி என்று என் சிற்றறிவுக்கு புலப் படுகிறதே....

   நீக்கு

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.