புதன், 30 அக்டோபர், 2013

திருவள்ளுவர் சாதிசமயங்களை ஆதரித்தாரா? ( வள்ளுவரும் பார்ப்பனரும் )

முன்னுரை:

திருக்குறள் என்பது வள்ளுவர் மனு தர்மத்தைத் தழுவி எழுதிய நூல் என்றும் வள்ளுவர் சாதி சமயங்களை ஆதரித்தார் என்றும் தவறான கருத்துக்கள் உலாவருகின்றன. இக் கருத்துக்களுக்கு ஆதாரமாக சிலர் சில குறள்களை எடுத்துக்காட்டி வருகின்றனர். இக் கருத்துக்கள் முற்றிலும் தவறு என்பதையும் அந்த ஆதாரங்கள் பிழையானவை என்பதையும் பல்வேறு ஆதாரங்களுடன் உறுதி செய்வதே இக் கட்டுரையின் தலையாய நோக்கமாகும்.

வள்ளுவர் கூறும் பார்ப்பான் யார்?

முதலில் ஒழுக்கமுடைமையில் வரும் பார்ப்பான் என்ற சொல் பயன்பாடு பற்றிக் காணலாம். 

மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்.  - 134

இக் குறளுக்கு தற்போது கூறப்பட்டு வரும் விளக்க உரைகள் கீழே தரப்பட்டுள்ளன.

கலைஞர் உரை: பார்ப்பனன் ஒருவன் கற்றதை மறந்துவிட்டால் மீண்டும் படித்துக் கொள்ள முடியும்; ஆனால், பிறப்புக்குச் சிறப்பு சேர்க்கும் ஒழுக்கத்திலிருந்து அவன் தவறினால் இழிமகனே ஆவான்.

மு.வ உரை: கற்ற மறைபொருளை மறந்தாலும் மீண்டும் அதனை ஓதிக் கற்றுக் கொள்ள முடியும்; ஆனால் மறை ஓதுபவனுடைய குடிப்பிறப்பு, ஒழுக்கம் குன்றினால் கெடு்ம்.

சாலமன் பாப்பையா உரை: பார்ப்பான் தான் கற்ற வேதத்தை மறந்து போனாலும் பிறகு கற்றுக் கொள்ளலாம்; ஆனால், அவன் பிறந்த குலத்திற்கு ஏற்ற மேலான ஒழுக்கத்திலிருந்து தாழ்ந்தால் அவன் குலத்தாலும் தாழ்வான்.

பரிமேலழகர் உரை: ஓத்து மறப்பினும் கொளலாகும் - கற்ற வேதத்தினை மறந்தானாயினும் அவ் வருணம் கெடாமையின் பின்னும் அஃது ஓதிக்கொள்ளலாம், பார்ப்பான் பிறப்பு ஒழுக்கம் குன்றக் கெடும்.- அந்தணனது உயர்ந்த வருணம் தன் ஒழுக்கம் குன்றக் கெடும். (மறந்தவழி இழிகுலத்தனாம் ஆகலின், மறக்கலாகாது என்னும் கருத்தான், 'மறப்பினும்' என்றார். சிறப்புடை வருணத்திற்கு மொழிந்தமையின், இஃது ஏனைய வருணங்கட்கும் கொள்ளப்படும்.).

மணக்குடவர் உரை: பிராமணன் வேதத்தினை ஓதி மறந்தானாயினும் பின்னும் ஓதிக் கொள்ளலாம்: ஒழுக்கங் குறையுமாயின் குலங்கெடும். இஃது ஒழுக்கம் கல்வியிலும் வலிதானவாறு கூறிற்று.

உரைத் தவறுகள்:

மேலே கூறப்பட்டுள்ள விளக்க உரைகள் யாவும் 'பார்ப்பான்' என்பதற்கு 'பிராமணன்' என்றும் 'அந்தணன்' என்றும் கூறி அதை ஒரு சாதிப் பெயராகக் கற்பிக்கிறது. இக் கருத்து முற்றிலும் தவறான ஒன்றாகும். இதற்கான காரணங்கள் கீழே முன்வைக்கப்படுகின்றன.

1. இக் குறளில் ஒரு குறிப்பிட்ட சாதியினைப் பற்றிக் கூற வேண்டிய கட்டாயமோ தேவையோ முதலில் வள்ளுவருக்கு இல்லை எனலாம். காரணம் எச் சாதியினராக இருந்தாலும் கற்ற கல்வியை மறந்து விட்டால் மீண்டும் படித்துக் கொள்ளலாம்.

2. மக்களுக்குக் கல்வியின் தேவையினையும் அதனால் உண்டாகும் சிறப்பினையும் விரிவாகப் பல குறள்களில் கூறியுள்ள வள்ளுவர் அக் கல்வியினை ஒரே ஒரு குறிப்பிட்ட சாதியினருக்கு மட்டுமே உரிய பொருளாகத் தோன்றும் வகையில் ஒரு கருத்தினை ஒருபோதும் கூறமாட்டார்.

3. ஒழுக்கம் கெட்டு நடந்தால் பிராமணர் மட்டுமல்ல எச் சாதியினரின் பெருமையும் கெட்டுவிடும் என்பது வள்ளுவர் மட்டுமல்ல நாம் அனைவருமே அறிந்த உண்மை. அவ்வாறிருக்க பார்ப்பான் என்ற சொல்லின் மூலம் ஒரு குறிப்பிட்ட சாதியின் பெருமை மட்டுமே கெடும் என்று வள்ளுவர் கூறுவதாகப் பொருள் கொண்டால் அது வள்ளுவரின் நுண்மாண் நுழைபுலத்திற்கும் சான்றாண்மைக்கும் இழுக்காய் அமைந்து விடும் என்பது வெளிப்படை.

4. வள்ளுவர் இதே போல பார்ப்பார் என்ற சொல்லை குறள் 285 லும் கையாண்டுள்ளார். ஆனால் அங்கு அச் சொல் எந்த சாதியினையும் குறிப்பிடுவதான பொருளில் வரவில்லை.

அருள்கருதி அன்புடைய ராதல் பொருள்கருதிப்
பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல்.

இதிலிருந்து வள்ளுவர் கூறும் பார்ப்பான் என்ற சொல் ஒரு குறிப்பிட்ட சாதியினரைக் குறித்து வரவில்லை என்பது தெளிவாகிறது. என்றால் இதன் உண்மையான பொருள் என்ன என்று பார்க்கலாம்.

திருத்தமும் புதிய பொருளும்:

இக் குறளில் வரும் பார்ப்பான் என்ற சொல் ஆசிரியன் / குரு  என்ற பொருளிலும் பிறப்பு என்ற சொல் வாழ்க்கை என்ற பொருளிலும் பயின்று வந்துள்ளது. இப் புதிய பொருட்களின்படி, இக்  குறளுக்கான திருந்திய பொருளானது:  

ஒரு ஆசிரியர் தனது கல்வி அறிவை மறந்தாலும் மறுபடியும் கற்றுக் கொள்ளலாம். ( இதனால் அவரது ஆசிரிய வாழ்க்கை முற்றிலும் அழியாது. ) ஆனால் அவர் தனக்குரிய ஒழுக்கத்தை மறந்து நடப்பாராயின் அவரது ஆசிரிய வாழ்க்கை முற்றும் அழியும்.

நிறுவுதல்:

இக் குறளுக்கான புதிய பொருளினை ஆதாரங்களுடன் இங்கு நிறுவலாம். முதலில் பார்ப்பான் என்ற சொல்லின் புதிய பொருள் பற்றிக் காணலாம்.

பார்த்தல் என்ற வினைக்கு கீழ்க்காணும் பொருட்களை சென்னை இணையத் தமிழ்ப் பேரகராதி காட்டுகிறது.

 பார்¹-த்தல் pār- , 11 v. tr. [K. pāru, M. pārkka.] 1. To see, look at, view, notice, observe; கண்ணால்நோக்குதல். பாராக்குறழா (கலித். 65). 2. To examine, inspect, search into, scrutinise; ஆராய்தல். படுபயனும் பார்த்துச் செயல் (குறள், 676). 3. To know; அறிதல். காலம்பார்த் துள்வேர்ப்ப ரொள்ளியவர் (குறள், 487). 4. To look for, expect; எதிர்பார்த்தல். வருவிருந்து பார்த்திருப் பான் (குறள், 86). 5. To desire, long for; விரும்பு தல். புதுமை பார்ப்பார் (கம்பரா. பூக்கொய். 9). 6. To search for, seek; தேடுதல். ஆட்பார்த் துழலு மருளில் கூற்று (நாலடி, 20). 7. To worship; வணங்குதல். (சூடா.) 8. To estimate, value; மதித்தல். அவன் வயிரம் பார்ப்பதில் கெட்டிக்காரன். Colloq. 9. To heed, pay attention to; கவனித் தல். 10. To look after, take care of, manage, superintend; மேற்பார்த்தல். பண்ணை பார்க்கிறான். 11. To peruse, look through, revise; பார்வையிடு தல். இந்தப் பத்திரத்தைப் பாருங்கள். 12. To treat, administer medicine; மருந்து முதலியன கொடுத்தல். யார் வைத்தியம் பார்த்துக் கொண்டிருக் கிறார். 13. To charm away by incantations, exorcise; மந்திரித்தல். இந்த விஷக்கடிக்கு மாந்திரி கன் பார்க்கவேணும். 14. To intend, design, attempt, purpose, aim at; கருதுதல். 15. To look at with compassion; கடைக்கணித்தல். பார்த் தொருகா லென்கவலை தீராயோ (தாயு. பராபர. 663).

பார்த்தல் என்ற வினைச்சொல்லுக்கு மேலே கூறப்பட்டுள்ள பொருட்களை நோக்கினால் அவற்றுள் மேற்பார்வையிடுதல், மதித்தல், ஆராய்தல், அறிதல், கவனித்தல், கருதுதல், எதிர்பார்த்தல் போன்ற செயல்பாடுகள் யாவும் ஒரு ஆசிரியர் / குருவுக்கானவை என்று தெளிவாகப் புரியும். பார்த்தலாகிய வினைகளைச் செய்வோரையே பார்ப்பார் என்று இக் குறளில் கூறுகிறார் வள்ளுவர். இதை ஆங்கிலத்தில் மாஸ்டர் என்றும் கூறுவார்கள்.

அடுத்து, பிறப்பு என்ற சொல்லுக்கான புதிய பொருள் பற்றிக் காணலாம். பிறப்பு என்பதற்கு கீழ்க்காணும் பொருட்களை அகராதிகள் முன்வைக்கின்றன.

பிறப்பு piṟappu , n. < பிற-. [M. piṟappu.] 1. Birth, nativity; சனனம். விழிப்பது போலும் பிறப்பு (குறள், 339). 2. Origin, production; உற்பத்தி. பிறப்பி னாக்கம் வேறுவேறியல (தொல். எழுத். 83). 3. Order or class of beings including animals and vegetables; caste; சாதி. இழுக்க மிழிந்த பிறப்பாய் விடும் (குறள், 133). 4. Beginning, commencement, as of a month or a year; தொடக்கம். வருஷப்பிறப்பு, மாசப்பிறப்பு. 5. Brother or sister; உடன்பிறந்த வர். (W.) 6. Necklace of small seed-like gold pieces; மகளிரணியும் முளைத்தாலி. காசும் பிறப் புங் கலகலப்ப (திவ். திருப்பா. 7). 7. (Pros.) A formula of a foot of one nirai-y-acainēr-acaiu, occurring as the last foot of a veṇpā; வெண்பாவின் இறுதி யில் நிரையசையொன்றுடன் உகரமான நேரசை கூடி வரும் வாய்பாடு. (காரிகை, செய். 5.) 8. Fear, alarm; அச்சம். (பிங்.) 9. Confusion, bewilderment; மயக்கம். (பிங்.) 10. Closeness, thickness, denseness; நெருக்கம். (பிங்.)

மேற்காணும் பொருட்களில் ஒன்றாக வரும்  ' தொடக்கம் ' என்பது இக் குறளில் ' வாழ்க்கையின் துவக்கம் ' என்ற பொருளில் பயன்படுத்தப் பட்டுள்ளது. மனிதர்கள் அனைவரும் ஒரே பிறப்புடையவரே; அதாவது மனிதப் பிறவியென்பது ஒன்றுதான். ஆனால் இந்த ஒரே பிறவியில் ஒருவர் எத்தனையோ வாழ்க்கையினைத் தொடங்கி வாழமுடியும்.  ஆசிரியராய், பொறியாளராய், மருத்துவராய், வழக்கறிஞராய், பாடகராய், ஓவியராய் .....

ஒவ்வொரு வாழ்க்கையிலும் சில கடமைகளும் கட்டுப்பாடுகளும் உண்டு. அதேபோல ஆசிரிய வாழ்க்கையிலும் கடமைகளும் கட்டுப்பாடுகளும் உண்டு. மாணவர்களுக்குக் கல்வி அறிவு மட்டுமின்றி நல்ல ஒழுக்கத்தையும் சேர்த்தே கற்பிக்க வேண்டிய கடமை ஆசிரியருக்கு உண்டு. அப்படி கற்பிக்கின்ற ஆசிரியர் முதலில் ஒழுக்கமுடையவராக வாழவேண்டும் என்பது அவருக்கான கட்டுப்பாடுகளில் ஒன்றாகும். தானே ஒரு சான்றாக இருந்து மாணவர்களுக்கு நல்ல ஒழுக்கத்தைக் கற்றுத் தரவேண்டிய ஆசிரியர்,  ஒழுக்கங்கெட்டு நடக்கும்போது அவரிடம் கல்வி பயிலும் மாணவர்களின் கல்வி அறிவினைப் பற்றியோ நடத்தையைப் பற்றியோ சொல்லத் தேவையில்லை.

பொதுவாக, மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையிலான தொடர்பு மிக நுட்பமானது. ஆசிரியரைப் பார்த்தே மாணவர்கள் தங்களது ஒழுக்கத்தைக் கற்றுக் கொள்கின்றனர். நல்ல ஒழுக்கமான ஆசிரியரிடம் கற்றுக்கொள்ளும் மாணவர்களும் நல்ல ஒழுக்கமுடையவர்களாகவே இருப்பர் என்பதில் ஐயமில்லை. பாடங்களின் பொருள் நன்கு விளங்குமாறு மாணவர்களுக்குக் கற்றுத்தந்த ஆசிரியர் திடீரென்று ஒருநாள் தனது ஞாபகமறதியால் சரியாக கற்றுத்தராமல் போனால் பெரிதாக ஒன்றும் ஆகிவிடாது. மறுநாள் அதனைத் தான் கற்றுவந்து மாணவர்களுக்கு நன்றாக சொல்லிக் கொடுத்துவிடலாம். ஆனால், அதுநாள்வரையிலும் நல்ல ஒழுக்கத்துடன் இருந்துவந்த ஆசிரியர் திடீரென்று தனது கட்டுப்பாட்டை மீறி ஒழுக்கங்கெட்டு நடக்கத் துவங்கினால், அவரது மாணவர்களுக்கு அது மிகுந்த அதிர்ச்சியைத் தரும்; அவர்களது மனதில் பெரும் குழப்பத்தை விளைவிக்கும். ஆசிரியரது நடத்தையில் ஏற்பட்ட மாறுபாட்டுக்கான காரணம் விளங்காமல் அவர்களால் பாடத்தில் கவனம் செலுத்த முடியாமல் முதலில் அவர்களது கல்வி பாதிக்கப்படும். ஆசிரியரின் கெட்ட ஒழுக்கத்தினால் அவர் மேல் மாணவர்கள் வைத்திருந்த அன்பும் மதிப்பும் கடுமையாகப் பாதிக்கப்படும். விளைவு?.

ஆசிரிய - மாணவ உறவில் விரிசல் ஏற்பட்டுப் பெரிதாகத் துவங்கும். இந்த உறவின் விரிசலால் ஏற்படுகின்ற விபரீதங்கள் பலவற்றை இப்போது நாம் கண்கூடாகவே பார்க்கிறோம். மாணவர்களை ஆசிரியர்கள் கடுமையாகத் தண்டிப்பதும், பதிலுக்கு மாணவர்கள் ஆசிரியர்களைத் தாக்குவதுமாக ஊடகங்களில் தொடர்செய்திகளாக வந்துகொண்டே இருக்கின்றன. இதற்கெல்லாம் என்ன காரணம்?. யார் காரணம்?. ஆசிரியர்களின் ஒழுக்கக்கேடு தான்.

ஆசிரியர்கள் தமது கடமைகளை மட்டுமின்றி தமக்குரிய கட்டுப்பாடுகளையும் சரியாகப் புரிந்துவைத்திருத்தல் வேண்டும். ஆண் ஆசிரியர்கள் மாணவிகளிடம்  எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதும், ஆசிரியைகள் ஆண் மாணவர்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதும் அத்தகைய கட்டுப்பாடுகளில் உள்ளவையாகும். கட்டுப்பாட்டை மீறி ஒருவர் நடக்கும்போதுதான் உறவில் விரிசல் ஏற்படுகிறது. அதுவே சிக்கலாக உருமாறுகிறது.

ஆசிரியர்களின் நல் ஒழுக்கமே அவர்களுக்கான கட்டுப்பாடாகும். கட்டுப்பாட்டை மீறுகின்ற ஆசிரியரது தவறான நடத்தையானது மாணவர்களது ஒழுக்கத்தை மட்டுமின்றி கல்வியையும் பாதிப்பதால்தான் அத்தகைய ஆசிரியர் இனிமேல் ஆசிரியராகவே வாழத் தகுதியற்றவர் என்ற பொருளில் அவரது ' ஆசிரிய வாழ்க்கை முற்றிலும் அழியும் ' என்று இக் குறளில் கூறுகிறார் வள்ளுவர். 

முடிவுரை:

இதுவரை கண்டவற்றிலிருந்து, பார்ப்பான் என்று வள்ளுவர் இக் குறளில் குறிப்பிடுவது ஒரு சாதியினர் அல்லர் என்பதும் பார்த்தலாகிய தொழிலைச் செய்வோரையே என்பதும்  விளங்கும்.  இதே பொருளில் குறள் 285 லும் கூறுகிறார்.

அருள்கருதி அன்புடைய ராதல் பொருள்கருதிப்
பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல்.

( பொருள்: பிறரது பொருளைக் களவாடக் கருதி அவரது மறதியை எதிர்பார்த்து இருப்பவரிடத்தில் அருளோ அன்போ எதுவுமிருக்காது.)

இங்கும் பார்ப்பார் என்பது சாதியை அன்றி எதிர்பார்த்தலாகிய தொழிலைச் செய்வோரையே குறிப்பதை அறியலாம். அதுமட்டுமின்றி ஒரு சாதியினைக் குறிப்பிடுவதாகக் கருதப்படும் அந்தணர் என்ற சொல்லையும் அறுதொழிலோர் என்ற சொல்லையும் வள்ளுவர் சாதிப் பொருளில் எங்கும் கூறவில்லை என்று கீழ்க்காணும் ஆய்வுக் கட்டுரைகளில் சான்றுகளுடன் காணலாம்.

http://thiruththam.blogspot.in/2012/02/blog-post.html ( அறவாழி அந்தணன் - யார் அந்தணர் ?)

http://thiruththam.blogspot.in/2009/11/blog-post_28.html ( நூல் என்றால் என்ன? - அறுதொழிலோர் யார் ? )

சாதியை மட்டுமின்றி எந்த ஒரு சமயத்தினையும் வள்ளுவர் ஆதரிக்கவில்லை என்பதைக் கீழ்க்காணும் பல்வேறு கட்டுரைகளில் ஆதாரங்களுடன் காணலாம்.

http://thiruththam.blogspot.in/2012/05/blog-post.html ( அவியுணவின் ஆன்றோர் யார் ? )

http://thiruththam.blogspot.in/2012/01/blog-post.html ( திருக்குறள் காட்டும் தேவர் யார் ?)

http://thiruththam.blogspot.in/2012/01/3.html ( திருக்குறளில் தெய்வம் - பசு வழிபாடு )

http://thiruththam.blogspot.in/2012/01/2.html ( திருக்குறளில் தெய்வம் - பகுதி 2 )

http://thiruththam.blogspot.in/2011/12/1.html ( திருக்குறளில் தெய்வம் - பகுதி 1 )

http://thiruththam.blogspot.in/2011/11/blog-post_25.html ( அடியளந்தான் யார்? - திருமாலா? )

http://thiruththam.blogspot.in/2011/08/blog-post.html ( மாமுகடி = மூதேவி ? )

http://thiruththam.blogspot.in/2011/01/blog-post.html ( செய்யவள் தவ்வை யார் ? )

http://thiruththam.blogspot.in/2010/09/blog-post_22.html ( தாமரைக் கண்ணான் உலகு - தாமரைக் கண்ணான் யார்? )

http://thiruththam.blogspot.in/2009/09/blog-post_17.html ( இந்திரனே சாலும் கரி - இந்திரன் யார் ? )

http://thiruththam.blogspot.in/2009/04/blog-post_19.html ( மலர்மிசை ஏகினான் யார் ? )


இதிலிருந்து வள்ளுவர் சாதி சமயங்களை ஆதரிக்கவில்லை என்பதும் திருக்குறள் மனு தர்மத்தைத் தழுவி எழுதப்பட்ட நூல் அல்ல என்பதும் உறுதி செய்யப்படுகிறது.

( பி.கு: இக் கட்டுரை குறித்த ஐயங்கள் இருந்தால் தாராளமாய்க் கேட்கலாம். மாற்று / மறுப்புக் கருத்துக்கள் இருப்பினும் அதை ஆதாரங்களுடன் முன் வைக்கலாம். )

===========================================

7 கருத்துகள்:

 1. ”பார்ப்பார் “ என்ற சொல்லுக்கு ஆராய்ச்சியாளர் என்று பொருள். மெய்ஞானி என்றும் கொள்ளலாம். எப்பொருளையும் மேலோட்டமாய் பாராது அதன் உண்மையான நிலையைக் காண்பவன் பார்ப்பார் எனப்படுகின்றது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பரே நீங்கள் கூறிய பொருளும் அச் சொல்லுக்குக் கொள்ளலாம் தான்.

   என்றாலும் அப் பொருள் இக் குறளுடன் பொருந்தவில்லை.

   கருத்துக்கு நன்றி.

   அன்புடன்
   தி.பொ.ச.

   நீக்கு
  2. மிக அருமையான விளக்கம்..! ஆசிரியர் அவர்களுக்கு நன்றி..!

   நீக்கு
 2. 1.ஓத்து என்றால் வேதம்-வேதம் படிப்பவன் பார்ப்பனர்தானே?
  2.சிறப்புடை வருணத்திற்குக் கூறியது பிறவருணங்களுக்கும் பரிமேலகர் உரை சரியானது
  3.இன்றும் ஒழுக்கம் நிறைந்த பண்புடையவர்கள் பார்ப்பனரே மறப்பீரோ?
  4.285ஆம் குறள் சாதியைக் குறிக்கவில்லை.பார்ப்பவன் என்ற பொருளில் வருகிறது.அப்படியால் 134ஆம்குறளில் சாதிப்பெயர் இல்லாவிடில் வேறு எந்தப் பொருளில் கையாள்கிறார்,?அல்லது அந்தக் காலத்தில் சாதியே இல்லையா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நண்பரே, வள்ளுவர் காலத்தில் சாதிகள் இருந்திருக்கவில்லை. அவர்காலத்தில் வேதங்களோ அதை ஓதுவதாகக் கூறப்படுகின்ற பார்ப்பனர்கள் என்று தனிச்சாதியாரோ இருந்திருக்கவில்லை. இருந்திருந்தால் அவர் வேறு குறள்களிலும் கண்டிப்பாகக் கூறியிருப்பார். ஆனால் அவர் அப்படிக் கூறவில்லை. நிற்க,

   இக் குறளில் வரும் ஓத்து என்பது பெயர்ச்சொல் அல்ல; வினையெச்சம். ஓத்து = கற்று. ஓத்துக்கொளல் = கற்றுக்கொளல்.

   நீக்கு

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.