வியாழன், 30 ஜனவரி, 2020

ல, ர – வில் தொடங்கும் சமக்கிருதச் சொற்களைத் தமிழில் எழுதுவது எப்படி?


முன்னுரை:

தமிழர்கள் சமக்கிருத மொழியின் சொற்களைப் பயன்படுத்துவது சரியா?. என்ற ஒரு ஆய்வுக் கட்டுரையை முன்னர் கண்டோம். சமக்கிருத மொழியில் உள்ள நேரடித் தமிழ்ச் சொற்களையும் மூலத் தமிழ்ச் சொற்களையும் தமிழர்கள் பயன்படுத்துவதில் தவறில்லை என்ற முடிவானது அக் கட்டுரையில் பல விளக்கங்களுடன் மிக விரிவாகக் கூறப்பட்டிருந்தது. அக் கட்டுரையின் தொடர்ச்சியாக, சமக்கிருத மொழியில் உள்ள பல்வேறு சொற்களில் லகரம் மற்றும் ரகரத்தில் தொடங்கும் பல சொற்களைத் தமிழில் எவ்வாறு எழுதலாம் என்பதைப் பற்றி இக் கட்டுரையில் விளக்கமாகக் காணலாம்.

மொழிமுதல் வாரா எழுத்துக்கள்:

தமிழ்ச் சொற்களின் முதல் எழுத்தாக இன்னின்ன எழுத்துக்களே வரவேண்டும் என்று தமிழ் இலக்கண நூல்கள் வரையறுத்துள்ளன. அதன்படி, உயிர் எழுத்துக்கள் பன்னிரெண்டும் க, ச, த, ப, ஞ, ந, ம, ய, வ ஆகிய மெய்யெழுத்துக்களுடன் புணர்ந்த உயிர்மெய்களும் ( சில உயிர்மெய்கள் நீங்கலாக )  மட்டுமே சொல்லுக்கு முதலாக வரவேண்டும் என்று கூறியுள்ளன.

மேற்காணும் தமிழ் இலக்கண விளக்கப்படி, லகர உயிர்மெய் மற்றும் ரகர உயிர்மெய் எழுத்துக்களை முதலாகக் கொண்டு தமிழ்ச் சொற்கள் அமையாது என்பது உறுதியாகிறது. ஆனால் இன்றைய காலகட்டத்தில் லகர ரகரத்தை முதலாகக் கொண்ட பல்வேறு பிறமொழிச் சொற்களைத் தமிழர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இவற்றில் ஆங்கிலமொழிச் சொற்களுக்குத் தமிழில் புதிய கலைச்சொற்களைப் படைத்து விடுவதால் இலக்கணச் சிக்கல் எழுவதில்லை. ஆனால் சமக்கிருத மொழிச் சொற்களைத் தமிழில் எழுதும்போது இலக்கணச் சிக்கல் உண்டாகிறது. இதைப்பற்றிக் கீழே விரிவாகக் காணலாம்.

லகர ரகர முதலுக்கான தற்போதைய நடைமுறை:

சமக்கிருத மொழியாக அறியப்படும் பல சொற்களில் ரகர லகர முதல் சொற்களும் அடங்கும். இச் சொற்களைத் தமிழில் எழுதும்போது அவற்றின் முன்னால் ஏதேனும் ஒரு உயிர் எழுத்தினைப் போட்டு எழுதி வருகிறோம். இதுதான் இன்றுவரையிலும் பயன்பாட்டில் உள்ள நடைமுறை. இப்போது இங்கே எழுப்பப்படும் கேள்வி என்னவென்றால் - எந்த சொல்லுக்கு எந்த உயிரெழுத்தை முன்னால் போட்டு எழுத வேண்டும்?. என்பதே.

சிலர் சகட்டுமேனிக்கு எல்லா ரகர, லகர முதல் சொற்களுக்கும் இகர உயிர் எழுத்தை முன்னால் போட்டு எழுதுகின்றனர். சான்றாக, ரத்து என்பதனை இரத்து என்றும் லட்டு என்பதனை இலட்டு என்றும் ருசி என்பதனை இருசி என்றும் எழுதி வருகின்றனர். இப்படி எழுதுகின்ற நடைமுறை சரியா?. எல்லா சொற்களுக்கும் முன்னால் இகர உயிர் போட்டு எழுதுவது முறையா?. என்றால் தவறு என்பதே விடையாகும். இந்த தவறான பழக்கத்தினால் தான் தமிழ் எது?. சமக்கிருதம் எது?. என்று பிரித்தறிய முடியாமல் போனது என்பதுடன் தமிழுக்கும் சமக்கிருதத்திற்கும் இடையே மோதல் உண்டாவதற்கும் காரணமாக அமைந்து விட்டது.  

லகர ரகர முதல் சொற்களுக்கான புதியமுறை:

இந்த தலைப்பினைப் பார்த்தவுடன், லகர ரகர முதல்கொண்ட சமக்கிருத சொற்களைத் தமிழில் எழுத புதிய முறைக்கு என்ன  தேவை?. ஆங்கிலச் சொற்களுக்குத் தமிழில் புதிய சொற்களைப் படைப்பதைப் போல சமக்கிருத சொற்களுக்கும் புதிய சொற்களைத் தமிழில் படைக்க வேண்டியது தானே?. என்ற கேள்விகள் தாம் முதலில் எழும். எனவே இக் கேள்விகளுக்கான விடையினை முதலில் காணலாம்.

இன்றைய சமக்கிருத மொழி என்பது ஏறத்தாழ 2800 ஆண்டுகளுக்கு முன்னால் தமிழ்ப் புலவர்களால் உருவாக்கப்பட்ட தமிக்ருதம் என்னும் மொழியில் இருந்து உருவானதே என்றும் சமக்கிருத மொழியில் உள்ள நேரடித் தமிழ்ச் சொற்களையும் மூலத் தமிழ்ச் சொற்களையும் தமிழர்கள் பயன்படுத்தலாம் என்றும் தமிழர்கள் சமக்கிருத மொழியின் சொற்களைப் பயன்படுத்துவது சரியா?. என்ற கட்டுரையில் விரிவாகக் காணப்பட்டது. தமிழ்ப் புலவர்களின் உழைப்பினைத் தேவையின்றி வீணாக்கக் கூடாது என்ற நோக்கம் முதன்மையாய் இருந்தாலும் தமிழ் இலக்கண விதிகளையும் மீறக்கூடாது என்ற வரையறையை அடிப்படையாகக் கொண்டு இந்த புதியமுறை இங்கே சுட்டப்படுகிறது.  

இம்முறைப்படி, ஒவ்வொரு லகர ரகர முதல் சமக்கிருதச் சொல்லுக்கும் தமிழ் மூலச் சொல் கண்டறியப்பட்டு அதன் அடிப்படையிலேயே புதிய தமிழ்ச்சொல் முன்மொழியப் பட்டுள்ளது. இவற்றில், தமிழர்கள் அதிகமாக பயன்படுத்தும் லகர ரகர முதல் சமக்கிருதச் சொற்கள் மட்டும் ஆய்வுசெய்யப்பட்டு அவற்றுக்கான தமிழ்ச் சொற்கள் என்ன?. அவை எப்படித் தோன்றின? என்று கீழே பட்டியலில் காட்டப்பட்டுள்ளது. 
 
பிறசொல்
தமிழ்ச்
சொல்
பொருள்
தோன்றும் முறை
ரகளை
ஆர்கலி
சண்டை
ஆர் (=எதிர்) + கலி (=ஒலி) = ஆர்கலி >>> ரகலை >>> ரகளை =எதிர்த்து ஒலிப்பு    
ரகசியம்
அரகசியம்
வெளிப்படா சொல்
அறை (=இன்மை, சொல்) + கசியம் (=வெளிப்பாடு) = அறய்கசியம் >>> அரகசியம் >>> ரகசியம் =வெளிப்பாடுஅற்ற சொல்    
ரங்கம்
அரங்கம்
மேடை
அரங்கம் (=மேடு)  >>> ரங்கம்
ரசம்
இறசம்
சாறு
இறு (= வடி) + அயம் (=நீர்) = இறயம் >>> இறசம் >>> ரசம்வடிக்கப்பட்டநீர்
ரசி
இறசி
விரும்பு
இறைச்சி (=விருப்பம்) >> இறச்சி >>> இறசி >>> ரசி = விரும்பு
ரசனை
இறசனை
விருப்பம்
இறைச்சி (=விருப்பம்) >> இறச்சனை >>> இறசனை >>> ரசனை
ரசீது
உறுசீட்டு
ஒப்புகைச் சீட்டு
உறு (=பெறு) + சீட்டு (=குறிப்பு) = உறுசீட்டு = பெற்றுக்கொண்டதற்கான குறிப்பு
ரஞ்சிதம்
இறஞ்சிதம்
இனிமை
இறைச்சி (=விருப்பம்) >> இறஞ்சி >>> இறஞ்சிதம் >>> ரஞ்சிதம் = விரும்பத்தக்கது
ரட்சி
இரங்கு
கருணைசெய்
இரங்கு (=கருணை செய்) >>> இரக்கம் >>> ரக்சா~ >>> ரட்சி
ரட்சை
இரக்கம்
கருணை
இரக்கம் (=கருணை) >>> ரக்சா~ >>> ரட்சை
ரணம்
அறுணம்
புண்
அறு (=கீறு) + உண் + அம் = அறுணம் (= கீறுவதால் உண்டாவது) >>> ரணம்
ரத்தம்
இரத்தம்
குருதி
இறுத்து (=கொல், வடியச்செய்) >>> இறுத்தம் >>> இரத்தம் = கொல்லும்போது வடிவது
ரத்தினம்
அரத்தினம்
மணி
அரம் + தினம் = அரந்தினம் >>> அரத்தினம் = அரத்தினால் தின்னப்பட்டவை
ரத்து
அறாத்து
தொடர்பறுதி
அறு (=நீக்கு) + ஆத்து (=தொடர்பு) = அறாத்து (= தொடர்பை நீக்குகை) >>> ரத்து
ரதம்
ஊரதம்
வண்டி
ஊர் + அதம் (=வழி) >>> ஊரதம் >>>  ரதம் = வழியில் ஊர்வது
ரதி
ஈரத்தி
இனியது
ஈர் (=இனிமை) + அத்து (=பொருந்து) + = ஈரத்தி >>> ரதி = இனிமை பொருந்தியது
ரம்பம்
அரம்பம்
அரவாள்
அரம் >>> அரம்பு (=பற்களால் அறு) >>> அரம்பம் = பற்களால் அறுப்பது
ரம்மியம்
அரமியம்
அழகு, இனிமை
அரமியம் (=நிலவொளி) >>> ரமியம் = நிலவொளி போல இனிமையும் அழகும் கொண்டது
ரவி
அறவி
சூரியன்
அறம் >>> அறவி >>> ரவி = அறத்தை நிலை நாட்டுபவன்
ரவிக்கை
இறவுக்கை
மார்புக் கச்சு
இறுவு + ஆக்கை (=மார்பு) = இறுவாக்கை >> இறவுக்கை >>> ரவிக்கை = மார்பை இறுக்குவது
ரவுடி
அராவடி
தீயவன்
அராவு (=தாக்கு) + அடு (=கொல்) + >>> அராவடி = தாக்கிக் கொல்பவன் >>> ரவுடி
ரவை
அரவை
பொடி, துண்டு
அரை >>> அரைவை (=அரைக்கப்பட்டது) >>> அரவை >>> ரவை
ராகம்
இரங்கம்
இசை
இரங்கு (=ஒலி, பாடு) >>> இரங்கம் >>> ராகம்
ராகு
உரகம்
பாம்பு
ஊர் + அகம் (=வயிறு) = ஊரகம் >>> உரகம் (= வயிற்றால் ஊர்வது) >>> ராகு
ராச்`தா
அறத்தம்
சாலை
அறு + அத்தம் (=வழி) = அறத்தம் (= அறுத்துச்செய்த வழி) >>> ராச்`தா
ராச்சியம்
அரசியம்
நாடு
அரசு + இயம் = அரசியம் (= அரசு இயங்கும் இடப் பரப்பு) >>> ராச்சியம்
ராசராசன்
அரசரசன்
பேரரசன்
அரசு + அரசன் = அரசரசன் (=அரசர்க்கெல்லாம் அரசன்) >>> ராசராசன்
ராசா
அரசன்
அரசன்
அரசன் >>> ராசா
ராசாங்கம்
அரசாங்கம்
அரசாங்கம்
அரசு + அங்கம் (=இடம்) = அரசங்கம் >>> அரசாங்கம் >>> ராசாங்கம் = அரசுக்குரிய இடம்
ராசாத்தி
அரசாத்தி
அரசனின் துணை
அரசு + ஆத்து (=துணை) + = அரசாத்தி (=அரசனின் துணை) >>> ராசாத்தி
ராசி
இறஞ்சி
வீடு
இறைஞ்சு (=தாழ், வீழ்) >>> இறைஞ்சி >>> இறஞ்சி >>> ராசி = வீழும் இடம் = வீடு
ராட்சதன்
அராக்கதன்
அரக்கன்
அராவு (=தாக்கு) + கதன் = அராக்கதன் = தாக்கும் சினமுடையவன்
ராட்டிரம்
அரசிடம்
நாடு
அரசிடம் >>> ராச்~ட்ர >>> ராட்டிரம்
ராட்டினம்
உருட்டினம்
உருட்டப்படுவன
உருட்டு + இனம் = உருட்டினம் >>> ராட்டினம் = உருட்டக் கூடிய பொருள்வகை
ராட்டை
உருட்டை
உருட்டப்படுவது
உருட்டு >>> உருட்டை >>> ராட்டை = உருட்டப்படுவது
ராணி
அரணி
அரசனின் துணை
அரண் (=அரண்மனை) >>> அரணி (= அரண்மனையில் வசிப்பவள்) >>> ராணி
ராணுவம்
அரணுவம்
படைத்தொகுதி
அரண் (=பாதுகாப்பு) >>> அரணுவம் (= பாதுகாக்கும் படை) >>> ராணுவம்
ராத்திரி
இராத்திறம்
இரவு
இரா (=இருள்) + திறம் (=மிகுதி) = இராத்திறம் = இருளின் மிகுதி
ராமன்
இராமன்
கருநிறத்தவன்
இரா (=இருள், கருமை) >>> இராமன் = கருநிறத்தவன்
ராயன்
அரையன்
அரசன்
அரையன் (=அரசன்) >>> ராயன்
ராவணன்
அராவுநன்
அரக்கன்
அராவு (=தாக்கு) >>> அராவுநன் = தாக்குபவன் >>> ராவணன்
ரிசபம்
ஏரிசுவம்
எருது
ஏர் + இழுவம் = ஏரிழுவம் >>> ஏரிசுவம் >>> ரிசபம் = ஏரினை இழுப்பது
ரிசி
எரிசி
முனிவர்
எரி (=தீ) >>> எரிச்சு (= தீ வளர்) >>> எரிச்சி >>> எரிசி >>>  ரிசி = தீ வளர்க்கும் முனிவர்
ரீதி
இறுதி
வரையறை
இறுதி (=வரையறை) >>> றீதி >>> ரீதி
ருசி
இருசி
இனிமை
ஈர் (=இனிமை) >>> ஈர்ச்சி >>> இருசி
ருத்ரம்
உருத்திறம்
பெருஞ்சினம்
உரு (=சிவப்பு) + திறம் (=நிலை) = உருத்திறம் = கண்கள் சிவந்த நிலை
ருத்ராட்சம்
உருத்திருக்கம்
சிவப்புக் கொட்டை
உரு (=சிவப்பு) + திருக்கு (=கண்) + அம் = உருத்திருக்கம் = சிவந்த கண்போன்ற கொட்டை
ருது
இறுது
பருவம்
இறு (=அழி, கழி) >>> இறுது (= கழியக்கூடியது, பருவம்) >>> ருது
ரூபம்
உருவம்
வடிவம்
உருவம் >>> ரூபம்
ரூபாய்
உருவை
பணம்
உரு (=படம், முத்திரை) >>> உருவை = அரசின் முத்திரை கொண்டது
ரேகை
இரிகை
விரல் வரிகள்
இரி (=ஓடு) + கை = இரிகை (= கையில் ஓடுவது) >>> ரேகை
ரொக்கம்
உரோக்கம்
பணம்
உரு (=முத்திரை) + அக்கம் (=நாணயம்) = உருவக்கம் >>> உரோக்கம் >>> ரொக்கம்
ரொட்டி
உருட்டி
உணவு
உருட்டு >>> உருட்டி >>> ரொட்டி = உருட்டிச் செய்யப்படும் உணவு
ரோகம்
உறுகண்
நோய்
உறுகண் (=நோய்) >>> றோகம் >>> ரோகம்
ரோசம்
உரசம்
கோபம்
உரசு (=பற்றவை) >>> உரசம் (=பற்றவைக்கப்படுவது) >>> ரோசம் = சினம், தீ
ரோதனை
ஆரோதனை
அழுகை
அரி + ஓதனை = அரியோதனை = அரிக்கும் ஒலி >>> ஆரோதனை >>>  ரோதனை
ரோமம்
ஒருவம்
முடி
ஒருவு (=கழி, நீக்கு) >>> ஒருவம் >>> ரோமம் = நீக்கப்படுவது. .நோ: மழி >>> மயிர்
ரௌத்திரம்
உருத்திறம்
பெருஞ்சினம்
உரு (=சிவப்பு) + திறம் (=நிலை) = உருத்திறம் = கண்கள் சிவந்த நிலை >>> ரௌத்திரம்
லக்கினம்
இலக்கினம்
தோன்றும் பகுதி
இலங்கு (=தோன்று) + இனம் (=பகுதி) = இலங்கினம் >>> இலக்கினம் >>> லக்கினம்
லக்ச்~மி
இலக்குமி
திருமகள்
இலக்கு (=விளங்கச்செய்) >>> இலக்குமி = விளங்கச்செய்பவள் >>> லக்ச்~மி
லச்சினை
இழச்சினை
பொறி, உருவம்
இழை >>> இழைச்சு (=வரை) >>> இழச்சினை = வரையப்பட்டது
லஞ்சம்
அளிஞ்சம்
கையூட்டு
அளி >>> அளிஞ்சு (=கொடுக்கச்செய்) >>> அளிஞ்சம் >>> லஞ்சம் = பிறர்மூலம் கொடுத்தல்
லட்சணம்
இலக்கணம்
அழகு
இலங்கு (=ஒளிர்) >>> இலக்கு (=ஒளி) >>> இலக்கணம் (=அழகு) >>> லட்சணம்
லட்சம்
இலக்கம்
நூறாயிரம்
இலக்கம் (=ஒளிரும் விண்மீன்களின் எண்ணிக்கை) >>> லட்சம்
லட்சியம்
தீர்மானம், குறிக்கோள்
இழச்சியம்
இழை >>> இழைச்சு (=தீர்மானி, பூணு) >>> இழைச்சியம் >>> இழச்சியம் >>> லட்சியம்
லட்டு
அளட்டு
உருண்டை
அள் (=செறிவு) + அட்டு (=உணவு)  = அளட்டு = திரட்டிச் செய்யப்பட்ட உணவு
லத்தி
உலுத்தி
மலம்
உலுத்து (=உதிர், கழி) >>> உலுத்தி >>> லத்தி = உதிர்க்கப் / கழிக்கப்படுவது
லப்பம்
இளப்பம்
இளகியபொருள்
இளப்பம் (=இளகியது) >>> லப்பம்
லம்பு
அலம்பு
தடுமாறு
அலம்பு (=தடுமாறு) >>> லம்பு
லயம்
அளையம்
கூடுதல்
அளை (=கூடு) >>> அளையம் (= கூடுகை) >>> லயம்
லயி
அளை
கூடு
அளை (=கூடு) >>> லயி
லவங்கம்
உலவாங்கம்
நறுமணப்பொருள்
உலவை (=குச்சி) + அங்கம் = உலவாங்கம் (= குச்சி போன்ற பூ) >>> லவங்கம்
லவணம்
உலவணம்
உப்பு
உலர்வு (=வற்றுகை) >>> உலர்வணம் (= கடல்நீர் வற்றிக் கிடைப்பது) >>> உலவணம்
லாடம்
ஒல்லடம்
மாட்டுப் பாத இரும்பு
ஒல்லு (=தகு) + அடு (=பொருத்து) = ஒல்லடு >>> ஒல்லடம் = தகுமாறு பொருத்தப்பட்டது
லாத்து
உலாத்து
உலவு
உலாத்து >>> லாத்து
லாபம்
அளுவம்
மிஞ்சியது
அள் (=செறிவு) >>> அளுவம் (=மிகுதி) >>> லாபம் = செலவுபோக மிஞ்சியது
லாயம்
ஆலையம்
கட்டும் இடம்
ஆலை (=கூடம்) >>> ஆலையம் >>> ஆலாயம் >>> லாயம்
லாவண்யம்
இலவணியம்
அழகு
இலவு (=மலர்) + அணியம் (=அழகு) = இலவணியம் = இலவமலர் போன்ற சிவப்பழகு
லாவு
உலாவு
உலவு
உலாவு >>> லாவு
லிங்கம்
இலிங்கம்
சிவ சின்னம்
இலிர் (=முளை) >>>இலிங்கு (=முளைத்து ஓங்கு) >>>இலிங்கம் = முளைத்து ஓங்குவது
லுங்கி
அலூங்கி
தளர் ஆடை
அலு (=தளர்) + அங்கி (=ஆடை) = அலுவங்கி >>> அலூங்கி = தளர்வாக உடுத்துவது
லேகியம்
இளகியம்
இளகியபொருள்
இளகு >>> இளகியம் >>> லேகியம் = இளகிய பொருள்
லேசு
இளேசு
மெலிவானது
இளை (=மெலி) >>> இளசு >>> லேசு (=மெலிவானது)
லோகம்
உலகம்
உலகம்
உலகம் >>> லோகம்
லோபம்
உலவம்
கஞ்சத்தனம்
உலவு (=சுருக்கு, குறை) >>> உலவம் >>> லோபம் = குறைவாகக் கொடுத்தல்
லௌகீகம்
உலகியம்
உலகியம்
உலகியம் >>> லௌகீகம்

 

முடிவுரை:

மேலே அட்டவணையில் உள்ள தமிழ்ச் சொற்களைப் பயன்கொள்ளுவதன் மூலம் நமது தமிழ்ப் புலவர்களின் உழைப்பு வீணாகப் போகாமல் காப்பாற்றப்படும் என்பதுடன் தமிழே சமக்கிருத மொழிக்கும் மூத்த மொழி என்ற உண்மையினை நெஞ்சை நிமிர்த்தி உலகோர்க்கு உரக்கக் கூறுவதாயும் அமையும்.

பழமையை மீட்போம் !!!         மொழிவளம் காப்போம் !!! 

1 கருத்து:

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.