முன்னுரை
வாழை
என்றதும் முதலில் நினைவுக்கு வருவது இனிப்பான மஞ்சள் நிறப் பழம் தான். பெரியவர் முதல்
சிறியவர் வரையிலும் எல்லா பருவ காலங்களிலும் விரும்பி உண்ணக் கூடிய பழங்களுள் முதன்மையானது
வாழைப்பழமே. செழிப்பின் அறிகுறியாக மங்கலத்தின் அடையாளமாகக் கருதப்படுவதால் அனைத்து
சுபகாரியங்களிலும் வீட்டு வாசலில் வாழைமரங்களை நட்டு வைப்பது தமிழரின் வழக்கமாயிற்று.
விருந்தோம்பல் உட்பட தமிழர்களின் வாழ்வியலில் குறிப்பிடத்தக்க அங்கமாக இன்றளவும் நிலவி
வருகின்ற வாழை மரம் பற்றிச் சங்க இலக்கியங்கள் கூறியுள்ள பல்வேறு செய்திகளை இங்கே விரிவாகக்
காணலாம்.
வாழை – பூர்வீகமும் பெயரும்:
வாழையின்
பூர்வீகம் இந்தியாவாகவே கருதப்படுகிறது. இந்தியாவிலும் குறிப்பாகத் தமிழகமே இருந்திருக்க
வேண்டும் என்று தோன்றுகிறது. காரணம், வாழைமரத்தின் தாவரவியல் பெயரான மூசா அசுமினேடா
(MUSA ACUMINATA) ஆகும். இப்பெயரில் வரும் மூசா என்பது தமிழ்ச்சொல்லான மோசை என்பதன்
மரூஉ வழக்காகும். சங்க இலக்கியத்தில் நற்றிணை 188 ஆம் பாடலில் வாழையைக் குறிக்க மோசை
என்னும் சொல் பயன்படுத்தப் பட்டுள்ளது.
வாழை
மரத்தைக் குறிக்க இதுவரையிலும் எழுபத்தி ஒன்பது பெயர்கள் இருப்பதாக அறியப்பட்டுள்ளன.
அப்பெயர்கள் யாவும் அகரவரிசைப்படி அமைக்கப்பட்டுக் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
அங்குசம்,அசோகம்,அசோணம்,அம்பணம்,அரபருத்தம்,அரம்பை,அரேசிகம்,
அற்பகதம்,அற்பருத்தம்,இயை,இயைமே,இரசதாளி,இரசம்,இலாடன்,உதிரி,
ஏத்தம்,ஓசை,கதலம்,கதலி,கவர்,காட்டிலம்,காவற்கலி,கும்பை,கெசகன்னி,
சமி,சர்க்கரைக்கேளி,சுகந்தம்,செவந்தன்,சேகிலி,ததபத்திரி,தந்துவிக்கிரியை,
தாம்பூரவல்லம்,தாருகதலி,திரணபதி,திருணசாரை,தீர்க்கபர்ணி,துளுவன்,
தென்னி,நகரம்,நகரௌடதி,நண்டுகலை,நண்டுகழை,நத்தம்,நந்தன்,நமரை,
நவரம்,நவரை,நாமம்,நிரம்பியம்,நீலங்கம்,நேந்திரம்,பங்காளா,படற்றி,
பானுபலை,பிச்சை,பீதகதலி,புட்பம்,பூவன்,பேயன்,பைஞ்ஞீலம்,மகரம்,மஞ்சி,
மஞ்சிபலை,மருகு,மருபுகா,மாந்தன்,மிருத்தியுபலை,முண்டகம்,மொச்சம்,
மொந்தன்,மோசம்,மோசாடம்,மோசை,வங்காளி,வல்லம்,வாழை,விசாலம்,
விலாசம்,வீரை.
மேற்கண்ட
பல்வேறு பெயர்களில் வாழை, மோசை என்ற பெயர்கள் மட்டுமே சங்க இலக்கியத்தில் பயன்படுத்தப்
பட்டுள்ளன.
வாழை – பண்புகள்:
மூசாசியே
என்ற தாவரக் குடும்பத்தைச் சேர்ந்ததான வாழை மரத்தின் பண்புகளாகச் சங்க இலக்கியங்கள்
பதிவுசெய்துள்ள பல்வேறு செய்திகளின் சுருக்கத்தைக் கீழே காணலாம்.
வாழைமரத்தின்
தண்டுகள் வலுவற்றவை என்பதால் மலையில் இருந்து வேகமாக விழும் அருவிநீர் மற்றும் வேகமாக
வீசும் வாடைக்காற்றுக்குக் கூட ஈடுகொடுக்க முடியாமல் முறிந்து விழுந்ததாகக் கூறப்பட்டுள்ளது.
வாழைமரத்தின் அடிக்குருத்துக்கள் மிக வலுவானவை என்பதுடன் மிகக் கூர்மையானவையும் ஆகும்.
யானையின் வலிமையான கால்களைக் கூடக் கீறிப் புண்ணாக்கிய செய்தி கூறப்பட்டுள்ளது. வாழையின்
இலைகள் அகலமாகவும் நீளமாகவும் பளபளப்புடன் இருக்கும். சங்ககாலத் தமிழர்கள் இந்த இலைகளில்
உணவைப் பரிமாறி உண்டனர். வாழையின் பூக்கள் கூரிய நுனியுடன் செந்நிறத்தில் இருக்கும்.
பலவரிகளைக் கொண்ட வாழையின் பூமடல்களைச் சங்ககாலப் பெண்களின் செம்மை நிறமுண்ட கண்ணிமைகளுடன்
ஒப்பிட்டுள்ளனர். திருமணமான சங்ககாலப் பெண்கள் வளையல்களில் வாழைப்பூ வடிவ அணிகளைப்
பொருத்திக் கையில் அணிந்திருந்தனர். வாழைமரம் குலையாகக் காய்க்கும் தன்மை கொண்டது.
வாழைக்காய்களின் அடிப்பகுதியானது புலிகளின் கால்விரல்களின் அடிப்பகுதி போலத் தோன்றியதாகக்
கூறப்பட்டுள்ளது. காய்கள் பழுத்ததும் மஞ்சள் நிறமடைந்து இனிப்புச் சுவை பெறும். பழுத்த
வாழைப் பழமானது பெண்யானையின் சிறிய தந்தம் போலத் தோன்றியதாகக் கூறப்பட்டுள்ளது. மஞ்சள்
வாழை மட்டுமின்றி செம்முக வாழை அதாவது செவ்வாழை பற்றிய குறிப்பும் காணப்படுகிறது. இனி,
சங்க இலக்கியம் கூறியுள்ள இச் செய்திகளைத் தனித்தனித் தலைப்பின் கீழ் விரிவாகக் காணலாம்.
தண்டு:
வாழைமரத்தின்
தண்டானது வெளியே தடிமனான பச்சைநிற மட்டையால் மூடப்பட்டிருக்கும். மற்ற மரங்களைப் போலன்றி,
நடுவில் வெண்மை நிறத்தில் நீர்ப்பதம் உடைய நார்களால் ஆன கோல் இருக்கும். இதனால் வாழைமரத்
தண்டிற்கு வலுவிருக்காது. வேகமாகப் பாயும் நீர், வேகமாக வீசும் காற்றுக்கு கூட மிக
எளிதாக சாய்ந்து முறிந்துவிடும். இதைப்பற்றிக் கூறும் சங்க இலக்கியப் பாடல்கள் கீழே
கொடுக்கப்பட்டுள்ளன.
வாழை முழுமுதல் துமிய – திரு. 307
ததை இலை வாழை முழுமுதல் அசைய
இன்னா வாடையும் அலைக்கும் – ஐங்கு.460
வாழைமரத்தின்
கீழே அடிவாழை என்று அழைக்கப்படும் குருத்துக்கள் தோன்றும். நுகும்பு என்று சங்க இலக்கியத்தினால்
குறிக்கப்படும் இந்த குருத்துக்கள் நுனியில் கூர்மையுடன் சங்கில் இருப்பதைப் போன்ற
பல வளைவான மரைகளுடன் காணப்படும். வாழைத்தண்டுக்கு மாறாக, வாழையின் குருத்துக்கள் மிக
வலுவானவை. மிகப்பெரிய உடலையும் வலிமையையும் கொண்ட யானையின் கால்களையே பதம்பார்த்துப்
புண்ணாக்கும் திறன் கொண்டவை. இதைப்பற்றிக் கூறும் சங்க இலக்கியப் பாடலைக் கீழே காணலாம்.
சோலை வாழை சுரி நுகும்பு இனைய
அணங்கு உடை இரும் தலை நீவலின் மதன் அழிந்து
மயங்கு துயர்உற்ற மையல் வேழம் – குறு. 308
இலை:
தாவர
இலைகளிலேயே மிக நீளமான அகலமான ஒற்றை இலையைக் கொண்டது வாழை மரம் மட்டுமே. வாழை இலை அகலமானது
என்று கூறும் சங்கப் பாடல்கள் சில கீழே;
வாழைக் கொழு மடல் அகல் இலை – நற். 309
செழும்
கோள் வாழை அகல் இலை பகுக்கும் – புறம். 168
வாழை
இலையானது நீளம் மிக்கது என்பதைக் கூறும் பாடல் கீழே:
வாழை
மென் தோடு வார்புறுபு – நற். 400
வாழை
இலையானது பச்சை நிறமும் செழிப்பைக் காட்டும் பளபளப்பையும் கொண்டது. இதனால் வாழை இலையைக்
கொழுமடல் என்றும் கோழ் இலை என்றும் சங்க இலக்கியம் குறிப்பிடுவதைக் கீழே காணலாம்.
வாழைக் கொழு மடல் அகல் இலை – நற். 309
குலை உடை வாழை கொழு மடல் கிழியா – கலி. 41
கோழ் இலை வாழை கோள் – அகம். 2
வாழை
இலைகள் நீளமும் அகலமும் கொண்டு பெரிதாக இருப்பதால் இவை பெரும்பாலும் வளைந்து தொங்கிக்
கொண்டிருக்கும். இதைக் குறிப்பிடும் சங்க இலக்கியப் பாடலைக் கீழே காணலாம்.
தூங்கு
இலை வாழை – கலி. 50
வாழை
இலையானது பெரிதாக இருப்பதுடன் நீரில் நனையாத தன்மையும் பளபளப்பும் கொண்டிருப்பதால்
உணவைப் பரிமாறி உண்ணும் கலமாக இதனைத் தமிழர்கள் பெரிதும் பயன்படுத்தி வருகின்றனர்.
இப் பழக்கம் இன்று நேற்றல்ல, மூவாயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்டதான சங்க காலத்திலேயே
இருந்துள்ளது என்பதைக் கீழ்க்காணும் பாடல்வழி அறிய முடிகிறது.
செழும்
கோள் வாழை அகல் இலை பகுக்கும் – புறம். 168
பூ:
வாழைப்பூவானது
நீண்ட தண்டின் முனையில் சிவப்பு நிறத்தில் தோன்றிக் கூர்மையான நுனியுடன் இருக்கும்.
இதைப் பற்றிக் கூறும் சங்க இலக்கியப் பாடல்கள் சில கீழே உள்ளன.
வாழைக் கொடு மடல் ஈன்ற கூர் வாய் குவி முகை – நற். 188
வாழை ஈன்ற வை ஏந்து கொழு முகை – நற். 225
குவி முகை வாழை வான் பூ – அகம். 134
வாழைத்
தோட்டத்தில் பெரிய கரும்பாறை ஒன்று இருந்தது. அதனருகில் இருந்த வாழைமரத்தில் இருந்து
கூரிய வாழைப்பூ ஒன்று தாழ்ந்து அந்தக் கரும்பாறையைத் தொட்டுக் கொண்டிருந்தது. இக்காட்சியானது
பார்ப்பதற்கு குருதி தோய்ந்த வேல் ஒன்று யானையின் நெற்றியில் பாய்ந்ததைப் போலத் தோன்றியதாகக்
கீழ்க்காணும் சங்கப் பாடல் கூறுகிறது.
காழ் மண்டு எஃகம் களிற்று முகம் பாய்ந்து என
ஊழ் மலர் ஒழி முகை உயர் முகம் தோய
துறுகல் சுற்றிய சோலை வாழை
இறுகு குலை முறுக பழுத்த பயம் புக்கு – மலை. 131
இதே
உவமையினை வேறொரு விதமாக இன்னொரு பாடல் கூறுகிறது. கடுஞ்சினத்துடன் போராடிப் புலியைக்
குத்திக் கொன்ற யானையின் குருதி தோய்ந்த தந்தத்தைப் போல வாழைமரத்தில் பூ தோன்றியதாகக்
கீழ்க்காணும் பாடலில் கூறப்பட்டுள்ளது.
முருகு உறழ் முன்பொடு கடும் சினம் செருக்கி
பொருத யானை வெண் கோடு கடுப்ப
வாழை ஈன்ற வை ஏந்து கொழு முகை - நற்.
225
வாழைப்பூவானது
செந்நிறத்தில் இருக்கும் என்று மேலே கண்டோம். இப்பூவில் இருக்கும் செந்நிற மடல்களில்
ஏராளமான மெல்லிய வரிகள் காணப்படும். எனவே இதனை சங்ககாலப் பெண்களின் செந்நிற மையுண்ட
கண்ணிமைகளில் காணப்படும் வரிகளுடன் ஒப்பிட்டுப் பல பாடல்களில் புலவர்கள் பாடியுள்ளனர்.
அவற்றில் சில மட்டும் கீழே தரப்பட்டுள்ளன. இவற்றில் வரும் ஓதி என்பது கண்ணிமையைக் குறிக்கும்.
(1)
வாழைப்பூ என பொலிந்த ஓதி – சிறு. 21
வாழை ஈன்ற வை ஏந்து கொழு முகை மெல் இயல்
மகளிர் ஓதி அன்ன பூவொடு துயல்வரும் – நற். 225
சங்ககாலத்தில்
திருமணமான பெண்கள் தமது கைகளில் அணியும் வளையல்களில் வாழைப்பூ வடிவிலான கூரிய சிறிய
செந்நிற அணிகளை ஒட்டவைத்து அணிவர். வாழைப்பூ வடிவிலான இந்த சிறிய அணிகளை மோசை என்று
சங்க இலக்கியம் கூறுகிறது. சிவந்த மெல்லிய விரல்களால் பெண்கள் இந்த மோசையைக் கையில்
தொட்டபோது அக் காட்சியானது பார்ப்பதற்குக் காந்தள் பூக்குலை ஒன்று வாழைப் பூவைத் தொட்டதைப்
போலத் தோன்றியதாகக் கீழ்க்காணும் சங்கப்பாடல் கூறுவதைப் பாருங்கள்.
படு நீர் சிலம்பில் கலித்த வாழை
கொடு மடல் ஈன்ற கூர் வாய் குவி முகை
ஒள் இழை மகளிர் இலங்கு வளை தொடூஉம்
மெல் விரல் மோசை போல காந்தள் வள் இதழ் தோயும் – நற். 188
தற்காலத்தில்
தமிழகப் பெண்கள் தமது கணவர் இறந்துவிட்டால் கைகளில் அணிந்திருக்கும் வளையல்களை உடைத்து
உதிர்த்து விடுவர். தமிழர்களுக்கு இப் பழக்கமும் புதிதல்ல. சங்ககாலத் தமிழரின் பண்பாட்டுத்
தொடர்ச்சியே இதுவும். கணவரை இழந்த சங்ககாலப் பெண்கள் கையில் அணிந்திருந்த மோசை பொருத்திய
வளையல்களை உடைத்து உதிர்த்த செய்தியைக் கீழ்க்காணும் சங்கப்பாடல் பதிவுசெய்து வைத்துள்ளது.
நீடு வாழ்க என்று யான் நெடும் கடை குறுகி
…………………………………………………………………………………………….
ஊழின் உருப்ப எருக்கிய மகளிர்
வாழைப் பூவின் வளை முறி சிதற
முது வாய் ஒக்கல் பரிசிலர் இரங்க
கள்ளி போகிய களரி அம் பறந்தலை
வெள் வேல் விடலை சென்று மாய்ந்தனனே – புறம்.
237
பிஞ்சுக்
குழந்தை ஒன்று தனது மெல்லிய சிவந்த விரல்களால் தனது அன்னையின் சிவப்புச் சாயம் பூசிய
வரிகளைக் கொண்ட கண்ணிமைகளைத் தடவுகிறது. இக் காட்சியானது பார்ப்பதற்குக் காந்தள் பூக்குலை
ஒன்று வாழைப்பூவை வருடுவதைப் போல இருந்ததாகக் கீழ்க்காணும் பாடலில் கூறப்பட்டுள்ளது.
இப்பாடலில் வரும் முலை என்பது கண்ணிமையைக் குறிப்பதாகும். (2)
புதல்வன் ஈன்ற பூ கண் மடந்தை
முலை வாய் உறுக்கும் கை போல் காந்தள்
குலைவாய் தோயும் கொழு மடல் வாழை – நற். 355
வாழைப்பூவில்
இருக்கும் செந்நிற மடல்கள் ஒவ்வொன்றாக உதிர்ந்து விட்டால் அந்தப் பூவைத் தாங்கியிருந்த
தண்டு பார்ப்பதற்கு எப்படி இருக்கும்?. வளைந்த மரைகளைக் கொண்ட மானின் கொம்புகளைப் போல
இருக்கும் என்று கீழ்க்காணும் சங்கப்பாடல் கூறுகிறது.
குவி முகை வாழை வான் பூ ஊழுறுபு உதிர்ந்த
ஒழி குலை அன்ன திரி மருப்பு ஏற்றொடு – அகம். 134
காய்:
வாழைமரத்தின்
காய்கள் குலைகுலையாகக் காய்க்கும் இயல்புடையவை. இதைப்பற்றிக் கூறும் சில சங்கப் பாடல்கள்
கீழே:
குலை வாழை – பொரு. 208, பட். 16, அகம். 141
குலை
உடை வாழை – கலி. 41
வாழைமரத்தில்
காய்களின் கீழ்ப்பகுதியானது கருப்புநிறத்தில் கூரியதாகத் திரண்டிருக்கும். இவை பார்ப்பதற்குப்
புலியின் பாதங்களில் உள்ள விரல்களின் அடிப்பகுதியைப் போல இருக்கும் என்று கீழ்க்காணும்
சங்கப்பாடல் கூறுகிறது.
கடுங்கண் உழுவை அடி போல வாழை
கொடும் காய் குலைதொறூஉம் தூங்கும் – கலி. 43
கனி:
வாழைமரத்தின்
காய்கள் நன்கு கனிந்தபின் இனிப்பான சுவை பெறும். பசுமையாக இருந்த காய்கள் கனிந்தபின்
மஞ்சள் நிறம் பெற்றுப் பார்ப்பதற்கு அழகாகத் தோன்றும். இதைப் பற்றிக் கூறும் சங்கப்
பாடல்கள் கீழே:
வாழைக் கொழு முதல் ஆய் கனி – நற். 251
வாழை கோள் முதிர் பெரும் குலை ஊழுறு தீம் கனி – அகம். 2
மஞ்சள்
நிறமாக நன்கு பழுத்த வாழைப் பழமானது பார்ப்பதற்குப் பெண்யானையின் சிறிய வளைந்த தந்தம்
போலத் தோன்றியதாகக் கீழ்க்காணும் சங்கப் பாடல் கூறுகிறது.
இரும் பிடி கவுள் மருப்பு ஏய்க்கும்
குலை முதிர் வாழை கூனி வெண் பழம் – பெரும். 359
வாழைப்
பழங்கள் இயல்பில் மஞ்சள் நிறம் கொண்டவைதான் என்றாலும் சிவப்புநிறப் பழங்களும் உண்டு.
தற்காலத்தில் செவ்வாழை, கதலி என்றெல்லாம் அழைக்கப்படும் இவ் வகை வாழையைச் செம்முக வாழை
என்று கீழ்க்காணும் சங்க இலக்கியப் பாடல் பதிவு செய்துள்ளது.
சிலம்பில் போகிய செம் முக வாழை – அகம். 302
முடிவுரை:
ஏனை மரங்களைப் போலன்றி, வாழை மரத்தின் கிழங்கு, தண்டு, இலை, பூ, காய், கனி என்று அனைத்துப் பகுதிகளும் உணவாகப் பயன்படுகிறது. அதுமட்டுமின்றி, வாழை மரம் தனது மொத்தத்தையும் பிறருக்கே உணவாகக் கொடுத்து இறக்கும் தருவாயிலும் தனக்குக் கீழ் அடிவாழை எனப்படும் குருத்தினைத் தோற்றுவிக்கிறது. தாய்மரம் அழிந்தபின்னர் குருத்து வளர்ந்து பெரிய மரமாகி மீண்டும் பயன்தரத் தொடங்கும். எனவேதான் பிறரை வாழ்த்தும்போது கூட, வாழைமரத்தின் தனிச்சிறப்பைக் குறிப்பிட்டுப் “ வாழையடி வாழையாய் வாழ்க ” என்று கூறினர் முன்னோர். இத்தகைய பெருமையைக் கொண்ட வாழைமரங்களை இல்லங்கள் தோறும் நட்டுப் பயன்பெறுவோம்.
ஆதாரம் / மேற்கோள்கள்:
(1) (1) https://thiruththam.blogspot.com/2015/05/blog-post_14.html
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.