சங்கத் தமிழ் இலக்கியங்கள் தொட்டு இன்றுவரையிலும் பயன்படுத்தப்பட்டு வரும் பல தமிழ்ச்சொற்களுள் ' வயிறு' என்ற சொல்லும் ஒன்று. இச்சொல்லுக்கு இன்றைய தமிழ் அகராதிகள் பல பொருட்களைக் கூறினாலும், இப் பொருட்களில் எவையும் பொருந்தாத நிலை பல பாடல்களில் காணப்படுகின்றது. இது இச்சொல்லுக்குப் புதியதோர் பொருள் இருப்பதையே காட்டுகின்றது. இச்சொல் உணர்த்தும் புதிய பொருள் என்ன என்பதைப் பற்றி இக் கட்டுரையில் விரிவாகக் காணலாம்.
வயிறு - தற்கால அகராதிகள் காட்டும் பொருட்கள்:
வயிறு என்பதற்கு இன்றைய தமிழ் அகராதிகள் காட்டும் பொருட்கள் கீழே:
வயிறு vayiṟu , n. cf. வயின். [K. basiṟu.] 1. Belly, stomach, paunch; உதரம். உணவு . . . சிறிது வயிற்றுக்கு மீயப்படும் (குறள், 412). 2. Womb; கருப்பப் பை. பத்துமாதம் வயிற்றிற் சுமந்து பெற்ற பிள்ளை. (W.) 3. Centre, heart, as of a tree; நடுவிடம். கடல் வயிறு கலக்கினையே (சிலப். 17, முன்னிலைப்பரவல், 1). 4. Interior, inner space; உள்ளிடம். வயிற்றிற்கொண்டு நின்றொரு மூவுலகும் (திவ். திருவாய். 8, 7, 9). 5. Mind; மனம். (திவ். திருவாய். 8, 7, 9.)
பொருள் பொருந்தா இடங்கள்:
வயிறு என்ற சொல்லுக்கு இன்றைய அகராதிகள் காட்டும் பொருட்களில் எதுவுமே பொருந்தாத சில இடங்களை மட்டும் கீழே விரிவாகக் காணலாம்.
பொதுவாக, ஆண்கள் அதிகம் உண்பதால் அவர்களின் உதரமானது சற்று மேடுதட்டி இருக்கும். ஆனால், பெண்கள் குறைந்த அளவே உண்பதால் அவர்களின் உதரமோ செதுக்கப்பட்டதைப் போல மிகச் சரியாக இருக்கும். இது இக்காலத்துக்கு மட்டுமின்றி சங்ககாலத்துக்கும் பொருந்தும். ஆனால், கீழ்க்காணும் பெருங்கதைப் பாடலில் பெண்களின் வயிற்றினை யாழ் கருவியின் பத்தர் என்ற உறுப்புடன் ஒப்புமையாகக் கூறியிருக்கிறார்கள்.
செங்கோட்டு யாழின் பத்தர் அன்ன
மெத்தென் அம் வயிற்று - பெருங்.உஞ்சை.40
பொதுவாக, யாழ் கருவியின் பத்தர் என்ற உறுப்பானது நன்கு உருண்டு திரண்டு தேங்காய்மூடி போல் புடைத்த வடிவத்தில் இருக்கும். மேலே உள்ள படத்தில் புடைத்தது போலத் தோன்றும் யாழின் கீழ்ப்பாகமே பத்தர் ஆகும். இதனைப் பத்தல் என்றும் கூறுவர். இந்நிலையில், பெண்களின் உதரத்தினை அதாவது செதுக்கி வைத்தாற்போன்ற அவரது உடலின் மையப்பகுதியினை குவிந்தநிலையில் அறியப்படும் யாழின் பத்தருடன் ஒப்பீடு செய்தால் அது எவ்விதத்திலும் பொருந்தாது அல்லவா?. ஏனென்றால், யாழின் பத்தரோ குவிநிலை கொண்டது; பெண்களின் உதரமோ குவிநிலை அற்றது. ஆக, இப்பாடலில் வரும் வயிறு என்ற சொல் உதரம் என்ற பொருளில் வரவில்லை என்பது உறுதியாகிறது.
அடுத்து, பெண்களின் வயிற்றினை ஆலமரத்து இலையுடன் உவமைப்படுத்திக் கூறுகிறது கீழ்க்காணும் கம்பராமாயணப் பாடலொன்று.
ஆல் இலை அன்ன வயிற்றினை
பெய் வளை தளிரால் பிசையும் - கம்ப.அயோத்.4
ஆலமரத்தின் இலை போன்ற தனது வயிற்றினை வளைபெய்த தனது தளிர்போன்ற கைகளால் பிசைந்தாள் என்று மேற்காணும் பாடல் கூறுகிறது. இப்பாடலில் வரும் வயிறு என்ற சொல்லுக்கு உதரம் என்ற பொருள் பொருந்துமா என்றால் பொருந்தாது. காரணம், ஆல இலையின் வடிவத்திற்கும் உதரத்துக்கும் ஒரு பொருத்தமும் கிடையாது.
அடுத்து, பெண்கள் அழும்போது தமது வயிற்றினை அதுக்குவதாகக் கீழ்க்காணும் பாடல்களில் கூறுகின்றனர்.
வேல் நெடும் கண் நீர் மல்க
ஆகுலத்து அரிவையர் அம் வயிறு அதுக்கினார் - சிந்தா: 1104
பூம் தெரிவையர் ஆ தகாது என கலங்கி
அம் வயிறு அதுக்கினார் - சிந்தா: 1106
இப் பாடல்களில் வரும் அதுக்குதல் என்பதற்கு அமுக்குதல், பிசைதல் என்ற பொருளுண்டு. இப் பாடல்களில் வரும் வயிறு என்பதற்கு உதரம் என்று பொருள்கொண்டால், பெண்கள் அழும்போது தமது கைகளால் தமது உதரத்தினை அமுக்குவதாகவோ பிசைவதாகவோப் பொருள்கொள்ள நேரிடும். ஆனால், உண்மையிலேயே எந்த ஒரு பெண்ணும் வருந்தி அழும்போது தனது கைகளால் தனது உதரத்தினைப் பிசையவோ அமுக்கவோ மாட்டாள். அப்படிச் செய்தால் அது மேலும் அவளுக்கு வலியை உண்டாக்கும் என்பதுடன் அவ்வாறு அவள் செய்யவேண்டிய தேவையுமில்லை. எனவே இப்பாடல்களில் வரும் வயிறு என்பதற்கு உதரம் என்று பொருள்கொள்வது பொருந்தாது என்பது உறுதியாகிறது.
அடுத்து, பெண்களின் வயிற்றில் காணப்பட்ட மயிர் ஒழுங்கின் அழகினைப் பாராட்டிக் கூறுகின்றன கீழ்க்காணும் பாடல்கள்.
......எய்யா இளம் சூல் செய்யோள் அம் வயிற்று
ஐது மயிர் ஒழுகிய தோற்றம் போல
பொல்லம் பொத்திய பொதியுறு போர்வை - பொருந.
......அரு மணி பூணினாள் தன் அம் வயிறு அணிந்த கோல
திரு மயிர் ஒழுக்கம் வந்து என் திண் நிறை கவர்ந்தது அன்றே - சிந்தா: 2061
இப் பாடல்களில் வரும் வயிறு எனப்படுவதற்கு உதரம் என்ற பொருள் பொருந்துமா என்றால் பொருந்தாது. காரணம், பொதுவாகவே எந்தவொரு பெண்ணின் உதரத்திலும் மயிர் காணப்படாது என்பதுடன் அப்படியே அரிதினும் அரிதாகக் காணப்பட்டாலும் அதைப் பிறர் காணத்தக்க வகையில் பெண்கள் காட்டமாட்டார்கள். இந்நிலையில், மேற்காணும் பாடல்கள் அம் மயிரினை அழகானது என்று பாராட்டிக் கூறுவதிலிருந்து, வயிறு என்பது இங்கே உதரம் என்ற பொருளைக் குறித்து வரவில்லை என்பது உறுதியாகிறது.
இதுவரை கண்டவற்றில் இருந்து, வயிறு என்ற சொல்லுக்கு அகராதிகள் காட்டும் பொருட்கள் நீங்கலாக புதிய பொருளும் உண்டென்று தெரிகிறது. இதைப் பற்றிக் கீழே விரிவாகக் காணலாம்.
வயிறு - புதிய பொருள்(கள்) என்ன?
வயிறு என்ற சொல் குறிக்கும் புதிய பொருட்கள்
கண் மற்றும் கண்ணிமை ஆகும்.
நிறுவுதல்:
வயிறு என்ற சொல் எவ்வாறு கண் மற்றும் கண்ணிமைகளைக் குறிக்கும் என்பதனை இங்கே ஆதாரங்களுடன் விரிவாகக் கண்டு நிறுவலாம்.
பெண்கள் தமது கண்ணிமைகளைப் பல வண்ணங்களில் மைதீட்டி அழகுசெய்வர் என்று முன்னர் பல கட்டுரைகளில் கண்டுள்ளோம். பசுமை நிறத்தில் மைதீட்டிய ஒரு பெண்ணின் கண்ணிமைகள் பார்ப்பதற்கு ஆலமரத்தின் பசிய இலை போன்று தோன்றியதாகக் கீழ்க்காணும் பாடல் கூறுகிறது.
ஆல் இலை அன்ன வயிற்றினை
பெய் வளை தளிரால் பிசையும் - கம்ப.அயோத்.4
ஆலமரத்தின் இலைப் போலத் தோன்றிய தனது கண்ணிமைகளை வளைபெய்த தனது தளிர்க்கரங்களால் பிசைந்தாள் என்று மேற்காணும் பாடல் கூறுகிறது. பொதுவாக, பெண்கள் கண்கலங்கி அழும்போது தனது இமைகளைக் கைகளால் பிசைவர் அல்லது கசக்குவர் என்பது உலகறிந்த செய்திதான். இதே கருத்தினைத்தான் கீழ்க்காணும் பாடல்களும் உறுதிசெய்கின்றன.
வேல் நெடும் கண் நீர் மல்க
ஆகுலத்து அரிவையர் அம் வயிறு அதுக்கினார் - சிந்தா: 1104
பூம் தெரிவையர் ஆ தகாது என கலங்கி
அம் வயிறு அதுக்கினார் - சிந்தா: 1106
இப் பாடல்களில் வரும் வயிறு அதுக்குதல் என்பது இமைகளைப் பிசைதல் என்ற பொருளில் வந்துள்ளது. அதுக்குதல் என்ற சொல்லினைப் போலவே அலைத்தல் என்ற சொல்லுடன் சேர்ந்து ' வயிறு அலைத்தல் ' என்ற சொல்லாடல் பல இடங்களில் பயின்று வந்துள்ளது. சில இடங்கள் மட்டும் சான்றுக்குக் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
இல் எழு வயலை ஈற்று ஆ தின்று என
பந்து நிலத்து எறிந்து பாவை நீக்கி
அம் வயிறு அலைத்த என் செய்வினை குறுமகள் - நற்.179
(பொருள்: வீட்டில் வளர்த்த வயலைக் கொடியினை கன்றுபோட்ட பசு தின்றுவிட்டதற்காக வருந்தி பந்து விளையாடுவதையும் பாவை விளையாட்டையும் துறந்து தனது அழகிய கண்களைக் கசக்கி அழுத எனது சிறிய மகள்...)
.... விரலே பாஅய் அம் வயிறு அலைத்தலின் ஆனாது
ஆடு மழை தவழும் கோடு உயர் பொதியில்
ஓங்கு இரும் சிலம்பில் பூத்த
காந்தள் அம் கொழு முகை போன்றன சிவந்தே - நற். 379
( பொருள்: கண்ணீர் ஒழுகும் தனது அழகிய கண்களைத் தொடர்ந்து கசக்கியதால் மேகங்கள் தவழும் பொதிகை மலையின் உச்சியில் பூத்த செங்காந்தள் மலர்மொட்டுக்களைப் போல அவளது விரல்கள் சிவந்து காணப்பட்டன..)
.....செறி தொடி தெளிர்ப்ப வீசி சிறிது அவண்
உலமந்து வருகம் சென்மோ தோழி
ஒளிறு வாள் தானை கொற்ற செழியன்
வெளிறு இல் கற்பின் மண்டு அமர் அடுதொறும்
களிறு பெறு வல்சி பாணன் எறியும்
தண்ணுமை கண்ணின் அலைஇயர் தன் வயிறே. - அகம். 106
(பொருள்: வா என் தோழியே !. மைசெறிந்த நமது கண்ணிமைகள் ஒளிவீசுமாறு பார்த்து சிறிதுநேரம் அவளிடத்தில் அலப்பறை செய்துவிட்டு வருவோம். இதைக்காணும் அவளது கண்கள், ஒளிரும் வாட்படையினை உடைய செழியனின் போர்க்களத்திலே யானையினை உடைய பாணன் கோல்கொண்டு அடிக்கும் தண்ணுமைப் பறையின் கண்களைப் போல இடையறாது கலங்கி வருந்துவதாகட்டும்...)
' வயிறு அலைத்தல் ' என்ற சொல்லாடலானது ' அழுதவாறு கண்களைக் கசக்குதல் ' என்ற பொருளில் கம்பராமாயணத்தில் மட்டும் ஏராளமான இடங்களில் பயின்று வந்துள்ளது. கீழே சில பாடல்வரிகள் மட்டும் சான்றாகக் கொடுக்கப்பட்டுள்ளன.
எயினர் வாழ் சீறூர் அப்பு மாரியின் இரியல் போக்கி
வயின்வயின் எயிற்றி மாதர் வயிறு அலைத்து ஓட ஓடி - கம்ப.பால.1
வந்தானை முகம் நோக்கி வயிறு அலைத்து மழை கண்ணீர் - கம்ப.ஆரண்.6
தோன்றலும் தொல் நகர் அரக்கர் தோகையர்
ஏன்று எதிர் வயிறு அலைத்து இரங்கி ஏங்கினார் - கம்ப. ஆரண்.10
வான நாடியர் வயிறு அலைத்து அழுது கண் மழை நீர் - யுத்3:22 199/1
பெண்கள் பெருந்துயரத்தில் அழும்போது தமது முகத்தைக் கைகளால் அடித்துக்கொண்டும் அழுவார்கள். தமது கணவனின் இறப்பு, மக்களின் இழப்பு போன்ற பெருந்துயர நிகழ்வுகளில் இவ்வாறு அவர்கள் செய்வது வழக்கம். இருகைகளாலும் முகத்தில் அடித்துக்கொள்ளும்போது அது பெரும்பாலும் கண்களையே வருத்துவதால் இதனையும் வயிறு அலைத்தல் என்ற சொல்லால் குறிப்பிட்டனர் எனலாம். இப்படி கண்களின்மேல் அடித்துக்கொள்ளும் ' வயிறு அலைத்தல் ' பற்றிய சில பாடல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
குயில் தலத்திடை உற்றது ஓர் கொள்கையாள்
வயிறு அலைத்து விழுந்து மயங்கினாள் - கம்ப.ஆரண்.12
மயன் மகள் வயிறு அலைத்து அலறி மாழ்கினாள் - சுந்:10 48/4
வாள் இணை நெடும் கண் மாதர் வயிறு அலைத்து அலறி மாழ்க - சுந்:11 8/3
வயிறு அலைத்து ஓடி வந்து கொழுநர்மேல் மகளிர் மாழ்கி - யுத்3:22 29/1
அடித்தாள் முலைமேல் வயிறு அலைத்தாள் அழுதாள் தொழுதாள் அனல் வீழ்ந்த - யுத்3:23 8/1
திதலையும் வயிறும்:
பெண்கள் தமது கண்ணிமைகளை அழகுசெய்யும்போது பல வடிவங்களிலும் வண்ணங்களிலும் வரைந்து அழகுசெய்வர். அருகில் உள்ள படம் இதற்கொரு சான்றாகும். அப்படி அழகுசெய்யும்போது இமைகளின்மேல் புள்ளிகளை வரைந்தும் அழகுசெய்வர். இந்தப் புள்ளிகளையே திதலை என்றும் தித்தி என்றும் புலவர்கள் குறித்தனர். இதுபற்றி திதலையும் தித்தியும் என்ற ஆய்வுக் கட்டுரையில் மேலதிக தகவல்கள் பெறலாம். கண்ணிமைகளில் திதலை வரைந்திருப்பதைப் பேசும் பாடல்கள் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
புதல்வன் பயந்த திதலை அம் வயிற்று
வால் இழை மகளிர் நால்வர் கூடி ... - அகம்.86
( பொருள்: இமைகளில் அழகுற திதலைப் புள்ளிகளை வரைந்தும் ஒளிவீசும் அணிகளை அணிந்தவருமான கருவுற்ற பெண்கள் நால்வர் ஒன்றுகூடி ..... )
வரி கிளர் பணை தோள் வயிறு அணி திதலை
அரியலாட்டியர் - அகம். 245
( பொருள்: மைகொண்டு வட்டமாய் வரிவரைந்த பருத்த கண்விளிம்பும் கண்ணிமையில் வரைந்த திதலைப் புள்ளிகளையும் உடைய கள்விற்கும் பெண்டிர்.....)
புதல்வரை ஒழிந்து யாம் போந்தனமே என
அதிர்வனர் நடுங்கி அழலின் உயிர்த்து
திதலை அம் வயிறு அங்கையின் அதுக்கி - பெருங்.உஞ்சை.44
( பொருள்: பிள்ளைகளை விட்டுவிட்டு நாம் வந்துவிட்டோமே என்று அதிர்ச்சியால் பெரிதும் நடுங்கிப் பெருமூச்செறிந்துக் கண்கலங்கித் திதலை அணிந்த தமது கண்களைக் கைகளால் கசக்கி....)
யாழின் பத்தரும் வயிறும்:
பெண்களின் வயிற்றினை யாழின் பத்தர் என்னும் உறுப்புடன் உவமைப்படுத்திப் புலவர்கள் பாடியிருப்பதனை மேலே கண்டோம். இங்கே யாழின் பல்வேறு உறுப்புக்களைப் பற்றியும் அவற்றுள் பத்தர் ஆகிய உறுப்பு எவ்வாறு பெண்களின் கண்ணுக்கு உவமையாகும் என்றும் காண்போம்.
யாழின் பல்வேறு உறுப்புக்கள் பற்றிக் கீழ்க்காணும் சிலப்பதிகாரப் பாடல் வரி கூறுகிறது.
பத்தரும் கோடும் ஆணியும் நரம்பும் என்று
இத்திறத்து குற்றம் நீங்கிய யாழ் - சிலப்.கானல்வரி.
யாழின் உறுப்புக்களை பத்தர், கோடு, ஆணி, நரம்பு என்று நால்வகையாகக் கூறுகிறது மேற்காணும் பாடல். இந்த நால்வகை உறுப்புக்களும் எப்படி இருக்கும் என்பதனைக் கீழ்க்காணும் பொருநராற்றுப்படைப் பாடல் வரிகள் மிக அழகாக உவமைகளுடன் விளக்குகிறது.
அறாஅ யாணர் அகன் தலை பேர் ஊர்
சாறு கழி வழி நாள் சோறு நசையுறாது
வேறு புலம் முன்னிய விரகு அறி பொருந
குளப்பு வழி அன்ன கவடு படு பத்தல்
விளக்கு அழல் உருவின் விசியுறு பச்சை
எய்யா இளம் சூல் செய்யோள் அம் வயிற்று
ஐது மயிர் ஒழுகிய தோற்றம் போல
பொல்லம் பொத்திய பொதியுறு போர்வை
அளை வாழ் அலவன் கண் கண்டு அன்ன
துளை வாய் தூர்ந்த துரப்பு அமை ஆணி
எண் நாள் திங்கள் வடிவிற்று ஆகி
அண்நா இல்லா அமைவரு வறு வாய்
பாம்பு அணந்து அன்ன ஓங்கு இரு மருப்பின்
மாயோள் முன்கை ஆய் தொடி கடுக்கும்
கண்கூடு இருக்கை திண் பிணி திவவின்
ஆய் தினை அரிசி அவையல் அன்ன
வேய்வை போகிய விரல் உளர் நரம்பின் .... - பொருந.
வரிவிளக்கம்:
அறாஅ யாணர் அகன் தலை பேர் ஊர் = வற்றாத வளம்கொண்ட அந்தப் பெரிய ஊரில்
சாறு கழி வழி நாள் சோறு நசையுறாது = விழா முடிந்த மறுநாளும் உண்ணும் விருப்பமின்றி
வேறு புலம் முன்னிய விரகு அறி பொருந = வேறிடம் நோக்கிச் செல்லும் திறமை மிக்க பொருநனே !
குளப்பு வழி அன்ன கவடு படு பத்தல் = மான் குளம்பின் அச்சு போன்ற பிளவுடைய பத்தலையும்
விளக்கு அழல் உருவின் விசியுறு பச்சை = விளக்குச்சுடர் போல வண்ணங்கொண்ட இழுத்துக்கட்டிய தோலையும்
எய்யா இளம் சூல் செய்யோள் அம் வயிற்று = கருவுற்றிருக்கும் அழகிய பெண்ணுடைய கண்ணிமையில் இருக்கும்
ஐது மயிர் ஒழுகிய தோற்றம் போல = அழகிய மயிர்களின் தோற்றத்தினைப் போல
பொல்லம் பொத்திய பொதியுறு போர்வை = பொல்லத்துடன் சேர்த்துப் பொருத்திய போர்வையும்
அளை வாழ் அலவன் கண் கண்டு அன்ன = வளையில் வாழும் நண்டின் கண்களைப் போலத்தோன்றும்
துளை வாய் தூர்ந்த துரப்பு அமை ஆணி = துளைக்குள் செலுத்திய முடுக்கத்தக்க ஆணிகளும்
எண் நாள் திங்கள் வடிவிற்று ஆகி = எட்டாம்பிறை போன்று வளைந்த வடிவினதாய்
அண்நா இல்லா அமைவரு வறு வாய் = உள்நாக்கு இல்லாத வெற்று வாயுடையதோர்
பாம்பு அணந்து அன்ன ஓங்கு இரு மருப்பின் = பாம்பு நிமிர்ந்ததைப் போல ஓங்கிய கோட்டினையும்
மாயோள் முன்கை ஆய் தொடி கடுக்கும் = அழகிய பெண்ணின் கைவளைபோலத் தோன்றுவதும்
கண்கூடு இருக்கை = பத்தலுடன் கோடு ஒன்றுகூடும் இடத்தில் இருப்பதுமான
திண் பிணி திவவின் = வலிமையாகப் பிணிக்கின்ற வளையத்தினையும்
ஆய் தினை அரிசி அவையல் அன்ன = தினையரிசி மாவினால் செய்த இடியாப்ப இழைபோலத் தோன்றுவதும்
வேய்வை போகிய விரல் உளர் நரம்பின் = துளைக்குள் செலுத்தப்பட்டு விரலால் மீட்டப்படுவதுமான நரம்புகளையும்
பொருள் விளக்கம்:
வற்றாத வளம்கொண்ட அந்தப் பெரிய ஊரில் விழா முடிந்த மறுநாளும் உண்ணும் விருப்பமின்றி வேறிடம் நோக்கிச் செல்லும் திறமை மிக்க பொருநனே ! மான் குளம்பின் அச்சு போன்ற பிளவுடைய பத்தலையும் விளக்குச்சுடர் போல வண்ணங்கொண்ட இழுத்துக்கட்டிய தோலையும் கருவுற்றிருக்கும் அழகிய பெண்ணுடைய கண்ணிமையில் இருக்கும் அழகிய மயிர்களின் தோற்றத்தினைப் போலத் தோன்றுகின்ற பொல்லத்துடன் சேர்த்துப் பொருத்திய போர்வையும் வளையில் வாழும் நண்டின் கண்களைப்போலத் தோன்றுவதும் துளைக்குள் செலுத்தப்பட்டதுமான முடுக்கத்தக்க ஆணிகளும் எட்டாம்பிறை போன்று வளைந்த வடிவினதாய் உள்நாக்கு இல்லாத வெற்று வாயுடையதோர் பாம்பு நிமிர்ந்ததைப் போலத்தோன்றும் ஓங்கிய கோட்டினையும் அழகிய பெண்ணின் கைவளைபோலத் தோன்றுவதும் பத்தலுடன் கோடு ஒன்றுகூடும் இடத்தில் இருப்பதுமான வலிமையாகப் பிணிக்கின்ற வளையத்தினையும் தினையரிசி மாவினால் செய்த இடியாப்ப இழைபோலத் தோன்றுவதும் துளைக்குள் செலுத்தப்பட்டு விரலால் மீட்டப்படுவதுமான நரம்புகளையும்......
மேல் விளக்கம்:
ஒரு சொல்லுக்கான சரியான பொருளைப் புரிந்துகொள்ள உவமையினைப் போல உதவிசெய்யும் அணி எதுவுமில்லை. உவமையணி மட்டும் இல்லாதிருந்தால் பல சங்கத் தமிழ்ச் சொற்களை நம்மால் சரியாகப் புரிந்துகொள்ள முடியாமலே போயிருக்கும் என்பது மறுக்கமுடியாத உண்மை. இதையெல்லாம் உணர்ந்துதான் சங்கப் புலவர்கள் ஒவ்வொரு பொருளுக்கும் கூடுமானவரைக்கும் உவமைகூறிப் பாடல் இயற்றியிருக்க வேண்டும். அவ்வகையில், இந்தப் பாடலில் பயின்று வரும் பல சொற்களைப் புரிந்துகொள்ள பல உவமைகளை அமைத்துப் பாடியிருக்கிறார் புலவர். அந்த உவமைகள் ஒவ்வொன்றையும் தனித்தனியே பார்த்துப் புரிந்துகொள்ள முயல்வோம்.
முதலில் யாழ் கருவியின் அடிப்படை உறுப்பான பத்தல் பற்றிப் பேசுகிறார். இது எப்படி இருக்கும்?. புலவர் வெறுமனே பத்தல் என்று கூறியிருந்தால் பத்தல் எவ்வாறு இருக்கும் என்று தெரியாமல் போயிருக்கும். ஆனால் புலவர் இங்கே பத்தலை மானின் குளம்புத் தடத்துடன் ஒப்பிடுகிறார். அருகில் மான் குளம்பின் தடம் காட்டப்பட்டுள்ளது. நடுவில் சிறிய பிளவினை உடையதாய் கண் வடிவத்தில் மான் குளம்பின் தடம் இருப்பதிலிருந்து பத்தலும் கண்வடிவத்தில் தான் இருக்கும் என்று தெரியவருகிறது. இதனால் தான் பத்தலுடன் கண்ணை உவமைப்படுத்திக் கீழ்க்காணும் பாடலும் கூறுகிறது.
செங்கோட்டு யாழின் பத்தர் அன்ன
மெத்தென் அம் வயிற்று - பெருங்.உஞ்சை.40
அடுத்து இந்தப் பத்தலுக்கு மேலாக அதனை மூடியிருக்கும் தோல் பற்றிப் பேசுகிறார். இத் தோலானது பத்தலின் மேல்விளிம்புடன் நன்கு இழுத்துக் கட்டப்பட்டிருக்கிறது. இது பார்ப்பதற்கு விளக்குச்சுடர் போல செவ்வண்ணத்தில் இருப்பதாகக் கூறுகிறார் புலவர். பத்தலின் வயிறு போன்ற அடிப்பகுதியினை போர்வையால் மூடி அடிப்பகுதியின் நடுவில் இருக்கும் கவட்டுடன் சேர்த்து அதனைப் பொருத்தியிருக்கிறார்கள். இது பார்ப்பதற்கு கருவுற்ற பெண்ணின் அழகிய கண்ணிமைகளில் இருக்கும் அழகிய மயிர்களின் ஒழுக்கம் போலத் தோன்றுகிறதாம். இது எப்படியென்றால், பத்தலின் குவிந்த அடிப்பகுதியானது பெண்ணின் திரண்ட கண்களைப் போன்றும் அதை மூடியிருக்கின்ற வண்ணத்துணியானது அப்பெண்ணின் மையுண்ட இமைகளைப் போலவும் பத்தலின் கவட்டில் இருக்கும் பொல்லம் ஆகிய கருநிற விரல் போன்ற அமைப்புக்கள் இமைகளில் உள்ள கருமயிர் போலவும் இருப்பதாகக் கூறுகிறார். என்ன ஒரு உவமை !
அடுத்து யாழின் சிறிய உறுப்புக்களான ஆணிகளைப் பற்றிப் பேசுகிறார். இந்த ஆணிகள் தலையில் முடுக்கும் அமைப்புடன் வட்டவடிவில் பார்ப்பதற்கு நண்டின் நீண்ட கண்களைப் போன்று தோன்றுகிறது புலவருக்கு. அருகில் நண்டின் கண்கள் படம் காட்டப்பட்டுள்ளது.
ஆணிகளை அடுத்து வருவது அவற்றைத் தாங்கிநிற்கும் கோடு என்றும் மருப்பு என்றும் கூறப்படும் யாழின் தண்டு. இந்தக் கோடானது எட்டாம்பிறைச் சந்திரனைப் போல அரைவட்ட வடிவில் வளைந்திருக்கிறது என்கிறார் புலவர். அத்துடன் நிற்காமல் இது பார்ப்பதற்கு உள்நாக்கு இல்லாத ஒரு பாம்பு தலைநிமிர்ந்து பார்ப்பதைப் போல இருக்கிறதாம் புலவருக்கு. இதிலிருந்து இத் தண்டின் ஒரு முனையானது பத்தலின் ஓரத்தில் ஒருபுறமாகப் பொருத்தப்பட்டிருந்தது என்பதையும் இன்னொரு முனையானது சீறும்பாம்பின் வாய்போல பிளந்திருந்தது என்பதனையும் அறிந்துகொள்ள முடிகிறது.
இதனை அடுத்து வருவது திவவு என்று அறியப்படும் உறுப்பு. திவவு என்பதற்கு யாழ்நரம்புக் கட்டு என்று பொருள்கூறுவாருளர். இது தவறானதாகும். இப்பாடலில் வரும் திவவு என்பது நரம்புக் கட்டினைக் குறிக்காது. திவவு என்பது ஒரு வளையம் ஆகும். இந்த வளையமானது பத்தலும் தண்டும் ஒன்றுகூடும் இடத்தில் பொருத்தப்பட்டு இருக்கும். நரம்புகளில் விறைப்புத்தன்மையினை கூட்டும்போது தண்டுப்பகுதி முன்னால் வளைந்து சாய்ந்துவிடாமல் இருக்கும்விதமாக அதனை இறுக்கமாகப் பத்தலுடன் பிணித்துக்கொள்கிறது. இது பார்ப்பதற்கு அழகிய பெண்ணொருத்தி முன்கையில் அணிந்திருக்கும் வளையலைப் போல இருக்கிறது என்று புலவர் கூறுவதிலிருந்தே திவவு என்பதும் ஒரு வளையம் போன்ற உறுப்பினையே குறிக்கும் என்பதைப் புரிந்துகொள்ளலாம். திவவு பற்றி விரிவாக வேறு ஒரு கட்டுரையில் காணலாம்.
திவவினை அடுத்து யாழ் நரம்புகளைப் பற்றிச் சொல்கிறார் புலவர். யாழின் நரம்புகளைப் பார்க்கும்போது அவருக்குத் தினையரிசி மாவினால் செய்த இடியாப்பம் நினைவுக்கு வந்துவிட்டது. தினை அரிசியினை நன்கு ஊறவைத்து மாவாக அரைத்தபின் அதை இடியாப்ப உரலுக்குள் இட்டுப் பிழியும்போது கம்பிபோன்ற இழைகள் கீழே விழும். இந்த இடியாப்ப இழைகளைப் போலத் தோன்றும் யாழின் நரம்புகள் தண்டின் மேல்பகுதியில் உள்ள துளைகள் வழியாகச் செலுத்தப்பட்டு முடுக்கு ஆணிகளுடன் பிணிக்கப்பட்டிருக்கும். ஆணிகளை முடுக்குவதன் மூலம் நரம்புகளில் விறைப்புத் தன்மையை ஏற்றவோ இறக்கவோ செய்யலாம்.
முடிவுரை:
இதுவரை கண்டவற்றில் இருந்து, வயிறு என்னும் சொல்லுக்கு அகராதிகள் காட்டும் பொருட்கள் நீங்கலாக, கண் மற்றும் கண்ணிமை ஆகிய பொருட்களும் உண்டென்று அறிந்தோம். சங்க காலத்தில் யாழின் வடிவமைப்பு எவ்வாறு இருந்தது என்றும் கண்டோம். யாழுக்கும் வயிறுக்கும் என்ன தொடர்பு என்பதைப் பற்றியும் அறிந்தோம். இந்த யாழினை மீட்டித்தான் பொருநர்கள் தம் வயிற்றை நிரப்பினர் என்று நினைக்கும்போது மனம் கொஞ்சம் கனக்கத்தான் செய்கிறது.