செவ்வாய், 22 நவம்பர், 2016

இமயமலையும் தமிழர்களும் - பகுதி 3

முன்னுரை:

இமயமலையில் தமிழர்கள் வாழ்ந்தனர் என்பதற்கு ஆதாரமாக மேலும் பல சான்றுகளை இக் கட்டுரையில் விரிவாகக் காணலாம்.


சங்க இலக்கியமும் இமயமலையும்: சான்று: 4

மண் திணிந்த நிலனும்
நிலம் ஏந்திய விசும்பும்
விசும்பு தைவரு வளியும்
வளி தலைஇய தீயும்
தீ முரணிய நீரும் என்று ஆங்கு           
ஐம் பெரும் பூதத்து இயற்கை போல
போற்றார் பொறுத்தலும் சூழ்ச்சியது அகலமும்
வலியும் தெறலும் அளியும் உடையோய்
நின் கடல் பிறந்த ஞாயிறு பெயர்த்தும் நின்
வெண் தலை புணரி குட கடல் குளிக்கும்       
யாணர் வைப்பின் நன் நாட்டு பொருந
வான வரம்பனை நீயோ பெரும
அலங்கு உளை புரவி ஐவரோடு சினைஇ
நிலம் தலைக்கொண்ட பொலம் பூ தும்பை
ஈர் ஐம்பதின்மரும் பொருது களத்து ஒழிய       
பெரும் சோற்று மிகு பதம் வரையாது கொடுத்தோய்
பாஅல் புளிப்பினும் பகல் இருளினும்
நாஅல் வேத நெறி திரியினும்
திரியா சுற்றமொடு முழுது சேண் விளங்கி
நடுக்கு இன்றி நிலியரோ அத்தை அடுக்கத்து       
சிறு தலை நவ்வி பெரும் கண் மா பிணை
அந்தி அந்தணர் அரும் கடன் இறுக்கும்
முத்தீ விளக்கில் துஞ்சும்
பொன் கோட்டு இமயமும் பொதியமும் போன்றே - புறம் 2.

வரி விளக்கம்:

மண் திணிந்த நிலனும் = மண் நிறைந்த இப் புவியும்
நிலம் ஏந்திய விசும்பும் = இப் புவியினைத் தாங்கிநிற்கும் வான்வெளியும்
விசும்பு தைவரு வளியும் = வான்வெளியினை வருடிக்கொடுக்கும் காற்றும்
வளி தலைஇய தீயும் = காற்றினால் தலையெடுக்கும் தீயும்
தீ முரணிய நீரும் என்று ஆங்கு     = தீயுடன் முரண்படுவதான நீரும் என்று   
ஐம் பெரும் பூதத்து இயற்கை போல = ஐம்பெரும் பூதங்களின் இயல்பான தன்மைகளைப் போல
போற்றார் பொறுத்தலும் = பகைவரைப் பொறுத்தலும்
சூழ்ச்சியது அகலமும் = சிந்தனையின் பரப்பும்
வலியும் தெறலும் அளியும் உடையோய் = வலிமையும் அழித்தலும் இரக்கமும் உடையவனே !
நின் கடல் பிறந்த ஞாயிறு பெயர்த்தும் நின் = உனது கிழக்குக் கடலில் தோன்றிய ஞாயிறானது மறுபடியும் உனது
வெண் தலை புணரி குட கடல் குளிக்கும்     = வெண் நுரை மேவிய மேற்குக் கடலில் மறைவதான   
யாணர் வைப்பின் நன் நாட்டு பொருந = வளம் கொழிக்கும் பரந்த நாட்டின் தலைவனே !
வான வரம்பனை நீயோ பெரும = வானமே எல்லையாகக் கொண்டவன் நீ பெருமானே !
அலங்கு உளை புரவி ஐவரோடு சினைஇ = அசைந்தாடும் தலையணி கொண்ட குதிரைவேந்தர்கள் ஐவருடன் பகைத்து
நிலம் தலைக்கொண்ட பொலம் பூ தும்பை = அழகிய பூக்களுடைய தும்பைச்செடிகள் வளர்ந்திருக்கும் அம் மண்ணில்
ஈர் ஐம்பதின்மரும் பொருது களத்து ஒழிய = போரிட்ட நூற்றுவரும் போர்க்களத்திலே இறந்துபட   
பெரும் சோற்று மிகு பதம் வரையாது கொடுத்தோய் = நிறைய சோற்றுடன் கள்ளையும் கணக்கின்றி கொடுத்தவனே !
பாஅல் புளிப்பினும் பகல் இருளினும் = பால் புளித்துப்போனாலும் பகல்மாறி இருள்வந்தாலும்
நாஅல் வேத நெறி திரியினும் = நால்வேதங்கள் கூறும் நெறிமுறைகள் மாறினாலும்
திரியா சுற்றமொடு முழுது சேண் விளங்கி = மாறாத சுற்றத்துடன் நெடுங்காலம் வாழ்ந்து
நடுக்கு இன்றி நிலியரோ அத்தை = துன்பமின்றி நிலைத்திருப்பாயாக !    
அடுக்கத்து சிறு தலை நவ்வி = மலைச்சாரலில் சிறிய தலையுடைய மான் குட்டியானது
பெரும் கண் மா பிணை = பெரிய கண்களையுடைய தனது தாயுடன்
அந்தி அந்தணர் அரும் கடன் இறுக்கும் = மாலைநேரத்தில் அந்தணர்கள் அந்திக்கடனின்போது ஏற்றுகின்ற
முத்தீ விளக்கில் துஞ்சும் = மூவகைத் தீயின் வெளிச்சத்தில் உறங்குவதான
பொன் கோட்டு இமயமும் = பொன்போல் ஒளிரும் உச்சியை உடைய இமயமலையினையும்
பொதியமும் போன்றே = பொதிகை மலையினையும் போல !!!

பொருள் விளக்கம்:

மண் நிறைந்த இப் புவியும் இப் புவியினைத் தாங்கிநிற்கும் வான்வெளியும் வான்வெளியினை வருடிக்கொடுக்கும் காற்றும் காற்றினால் தலையெடுக்கும் தீயும் தீயுடன் முரண்படுவதான நீரும் என்று ஐம்பெரும் பூதங்களின் இயல்பான தன்மைகளைப் போல பகைவரைப் பொறுத்தலும் சிந்தனையின் பரப்பும் வலிமையும் அழித்தலும் இரக்கமும் உடையவனே ! உனது கிழக்குக் கடலில் தோன்றிய ஞாயிறானது மறுபடியும் உனது வெண் நுரை மேவிய மேற்குக் கடலில் மறைவதான வளம் கொழிக்கும் பரந்த நாட்டின் தலைவனே ! வானமே எல்லையாகக் கொண்ட பெருமானே ! அசைந்தாடும் தலையணி கொண்ட குதிரைவேந்தர்கள் ஐவருடன் பகைத்து அழகிய பூக்களுடைய தும்பைச்செடிகள் வளர்ந்திருக்கும் அம் மண்ணில் போரிட்ட நூற்றுவரும் போர்க்களத்திலே இறந்துபட நிறைய சோற்றுடன் கள்ளினைக் கணக்கின்றி கொடுத்தவனே ! பால் புளித்துப்போனாலும் பகல்மாறி இருள்வந்தாலும் நால்வேதங்கள் கூறும் நெறிமுறைகள் மாறினாலும் மாறாத சுற்றத்துடன் மலைச்சாரலில் சிறிய தலையுடைய மான் குட்டியானது பெரிய கண்களையுடைய தனது தாயுடன் மாலைநேரத்தில் அந்தணர்கள் அந்திக்கடனின்போது ஏற்றுகின்ற மூவகைத் தீயின் வெளிச்சத்தில் உறங்குவதான பொன்போல் ஒளிரும் உச்சியை உடைய இமயமலையினையும் பொதிகை மலையினையும் போல நீ நெடுங்காலம் வாழ்ந்து துன்பமின்றி நிலைத்திருப்பாயாக !

மேல் விளக்கம்:

இப் பாடலில் மன்னனின் இயல்புகளை ஐம்பூதங்களின் இயற்கைத் தன்மைகளுடன் ஒப்பிட்டுக் கூறியிருக்கும் விதம் அருமையாக இருக்கிறது. பகைவர்களின் தீமைகளைப் பொறுத்துக்கொள்வதில் பூமியைப் போலவும் தனது சிந்தனையின் பரப்பில் அதாவது பரந்த மனப்பான்மையில் வான்வெளியைப் போலவும் போரில் எதிரிகளைப் பந்தாடும் வலிமையில் சூறைக் காற்றினைப் போலவும் எதிர்த்து நிற்கும் பகைவர்களைக் கொன்று அழிப்பதில் தீயினைப் போலவும் இல்லை என்று இரந்தோரின் உள்ளத்தைக் குளிர்விப்பதில் நீரினைப் போலவும் விளங்குபவன் என்று மன்னனைப் புகழ்கிறார். இப்படிப் புகழும்போதே அம் மன்னனின் வீரம், கருணை, அறிவாற்றல், இனப்பற்று ஆகிய பண்புகளை அறியச் செய்துவிடுகிறார்.

அடுத்து, அம்மன்னன் ஆண்ட நிலப்பரப்பு பற்றிக் கூறுமிடத்துக் கதிரவனை உதவிக்கு அழைக்கிறார். கதிரவன் இவனது நாட்டின் கிழக்குக் கடலில் தோன்றிய பின்னர் இவனது நாட்டின் மேற்குக் கடலில் மறையுமாம். இதன் மூலம் அம் மன்னனது ஆட்சியின் கீழிருந்த நிலப்பரப்பானது கிழக்கில் வங்கக் கடலை ஒட்டியும் மேற்கில் அரேபியக் கடலை ஒட்டியும் இருந்திருக்கவேண்டும். அல்லது இந்த இரண்டு கடல்களுக்கு இடைப்பட்ட பகுதி முழுவதும் அவனது ஆட்சியின் கீழ் இருந்திருக்க வேண்டும். ஆனால் புலவரோ ' யாணர் வைப்பு ' என்று கூறுகிறார். பொதுவாக ஆற்றுவளம் மிக்க இடமே யாணர் வைப்பாக இருக்க முடியும். ஏனென்றால் இங்குதான் வளம் கொழிக்கும் என்பதுடன் நாள்தோறும் புதிய வருவாயும் கிடைக்கும். ஆக, புலவர் கூறும் ' யாணர் வைப்பு ' என்பது கங்கைஆறு பாயும் நிலப்பரப்பினையே குறித்திருக்க வாய்ப்புண்டு. அவ்வகையில் பார்த்தால், இம் மன்னனது ஆட்சிக்குக் கீழ் இருந்த நிலப்பரப்பானது தற்போதைய இந்தியாவில் குறைந்தபட்சம் மேற்கே குஜராத், ராஜஸ்தானிலிருந்து கிழக்கே மேற்குவங்காளம் வரை பரவி இருந்தது என்று முடிவு செய்யலாம்.

அடுத்து, இம்மன்னனின் தமிழினப் பற்றினை விளக்குகிறார். இம் மன்னனது ஆட்சிக் காலத்தில், தமிழ் இனத்தைச் சேர்ந்த சிற்றரசர்கள் ஐவருக்கும் வேற்று இனத்தைச் சேர்ந்த எதிரி மன்னர்கள் நூற்றுவருக்கும் இடையில் நடந்த பெரும்போரில் வேற்றின மன்னர்கள் தோற்றுப்போயினர். பலநாட்கள் நடந்த இப்போரில் சிற்றரசர்கள் ஐவருக்கு உதவிசெய்யும் வகையில் அவர்களது போர்வீரர்களுக்குத் தேவையான சோற்றினையும் கள்ளினையும் இம் மன்னன் மிகுதியாக வழங்கியதைக் கூறுகிறார். இப்போரில் மன்னன் நேரடியாக ஈடுபடாமல் தமிழ் மன்னர்களுக்கு உதவி மட்டுமே செய்கிறான். காரணம், அவனது படைகளும் அப்போது வேறொரு போரில் ஈடுபட்டிருக்கக் கூடும். இதிலிருந்து, இப்போர் நடந்த இடமானது இவனது ஆட்சிக்குட்பட்ட நிலப்பரப்புக்கு வெளியே இருப்பதுடன் வெகுஅருகிலும் தான் இருந்திருக்க வேண்டும் என்று தெரிகிறது.

இந்த இடத்தைப் பற்றி மேலும் ஆராயுமிடத்து, இது தற்போதைய ஹரியானா மாநிலத்தில் தும்பாஹேரி என்னும் இடத்திற்கு அருகில்தான் இருந்திருக்க வேண்டும் என்று தோன்றுகின்றது. அக் காலத்தில் தும்பைச் செடிகள் அதிகமாக வளர்ந்து சூழ்ந்திருந்த ஒரு ஏரியைச் சுற்றிய பகுதியாக இது இருக்க வேண்டும். இப்போதும் இந்த ஊருக்கு வெகு அருகில் பிந்தவாஸ் என்னும் ஏரி ஒன்று உள்ளது. பொதுவாக உணவு சமைப்பதற்கும் குடிப்பதற்கும் நல்ல நீர் தேவை. அதேசமயம், பல நாட்கள் தொடர்ந்து போர் நடக்கும்போது, போர்வீரர்களுக்குத் தேவையான உணவு சமைக்கவும் குடிப்பதற்கும் மிக அதிகமான நன் நீர் தேவைப்படும் இல்லையா?. இந்த நீர்த்தேவையினை தீர்த்துவைத்து போரில் வெற்றிபெற இந்த ஏரி பெரிதும் உதவியதால் இந்த இடத்திற்கு தும்பை ஏரி என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள். இதுவே தற்போது தும்பாஹேரி என்று மருவி வழங்கப்படுகிறது. இப் பாடலில் பாடப்பெறும் மன்னனின் ஆளுகைக்குட்பட்ட ராஜஸ்தான் மாநிலத்திற்கு வடமேற்கு திசையில் வெகுஅருகில் தான் இந்த தும்பாஹேரி அமைந்துள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த தும்பாஹேரியானது குருஷேத்திரம் என்னும் ஊருக்கு அருகில் அமைந்திருப்பதால் ஒருவேளை இப்போரினைத் தான் பாண்டவர்கள் ஐவருக்கும் கவுரவர்கள் நூற்றுவருக்கும் இடையில் நடந்த மகாபாரதப் போராகத் திரித்துக் கூறியிருப்பார்களோ என்று நினைக்கத் தோன்றுகிறது. இருந்தாலும் இதனை மெய்ப்பிக்க மேலதிக தரவுகள் தேவைப்படுகிறது.

' காலம் மாறலாம். நம் காதல் மாறுமா?' என்ற பழைய திரைப்பாடல் ஒன்று உண்டு. ஆம், காலப்போக்கிலே காதல் மட்டுமல்ல பல உறவுகளும் பொருட்களும் மாறிப்போய் விடுகின்றன. நீண்ட நேரம் பாதுகாப்பின்றி வைத்திருந்தால் பால் கெட்டுப் புளித்துப்போய் விடுகிறது. கதிரவனின் ஒளியும் நீண்ட நேரம் நிலைத்து இருப்பதில்லை; இருள் சூழ்ந்து விடுகிறது. நால்வகை வேதங்களிலே சொல்லப்பட்டுள்ள நெறிமுறைகளும் கூட காலத்திற்கேற்ப மாற்றம் அடைந்துவிடுகின்றன. இப்படி அனைத்துமே காலமாற்றத்துக்கு உட்படும்போது உறவுகளும் அப்படித்தானே மாற்றமடையும்?. உறவுகள் மாற்றமடைந்துவிட்டால் விளைவு என்னாகும்?. வாழ்க்கையில் மகிழ்ச்சி நீடிக்காது இல்லையா?. எனவே காலம் மாறினாலும் மாறாத கெடாத உறவுகள் தேவை. இப்படிப்பட்ட உறவுகள் ஒருவருக்கு அமைவதென்பது அவருக்குக் கிடைக்கும் வரம் என்றே சொல்லலாம். இப்படிப்பட்ட ஒரு வரம் இம் மன்னனுக்கு கிடைக்கட்டும் என்று அவனை வாழ்த்துகிறார் புலவர். அப்படி வாழ்த்தும்போதுதான் இமயமலையினைப் பற்றியும் பொதிகைமலையினைப் பற்றியும் கூறுகிறார்.

இமயமலைச் சாரலில் மான்கள் கூட்டம் கூட்டமாக வாழும் என்று முன்னர் கண்டோம். அங்கு மான்கள் மட்டுமல்ல பல அந்தணர்களும் வாழ்ந்துவந்தனர் என்பதை இப் பாடல் நமக்குத் தெரிவிக்கிறது. இந்த அந்தணர்கள் வேதநெறிப்படி தீ வளர்த்து யாகம் செய்பவர்கள். அந்திநேரத்தில் இவர்கள் வளர்க்கும் யாகத்தீயின் வெளிச்சத்தில் மான்குட்டியானது தனது தாயுடன் உறங்குவதைப் படம்பிடித்துக் காட்டுகிறார் புலவர். இதிலிருந்து, யாகம் வளர்க்கும் இடத்திற்கு அருகில்தான் இவை இருந்திருக்க வேண்டும் என்றும் இக் காலத்தில் நாய். பூனை போன்றவற்றை செல்லப் பிராணிகளாக நம்முடன் வீட்டில் வளர்ப்பதைப் போல மான்கள் இந்த அந்தணர்களுடன் அச்சமின்றி பழகியிருக்க வேண்டும் என்றும் தெரிய வருகிறது. இப்படி இமயமலையின் விலங்குகளும் மனிதர்களுடன் உறவுபாராட்டும் நிலையில் ' நீயும் அந்த இமயமலையினைப் போல என்றும் மாறாத உறவுகளுடன் நெடுங்காலம் துன்பமின்றி வாழ்ந்து நிலைத்திருப்பாயாக 'என்று மன்னனை வாழ்த்துகிறார். இப்பாடலில் இமயமலையில் நடக்கும் நிகழ்வுகளை விளக்கமாகக் கூறுவதால் இமயமலையில் தமிழர்கள் வாழ்ந்தனர் என்பதற்கு இப் பாடலையும் ஒரு சான்றாகக் கொள்ளலாம் என்பது துணிபாகும். 

சங்க இலக்கியமும் இமயமலையும்: சான்று: 5

இலங்கு வளை நெகிழ சாஅய் அல்கலும்
கலங்கு அஞர் உழந்து நாம் இவண் ஒழிய
வலம் படு முரசின் சேரலாதன்
முந்நீர் ஓட்டி கடம்பு அறுத்து இமயத்து
முன்னோர் மருள வணங்கு வில் பொறித்து
நன் நகர் மாந்தை முற்றத்து ஒன்னார்
பணி திறை தந்த பாடு சால் நன் கலம்
பொன் செய் பாவை வயிரமொடு ஆம்பல்
ஒன்று வாய் நிறைய குவைஇ அன்று அவண்
நிலம் தின துறந்த நிதியத்து அன்ன
ஒரு நாள் ஒரு பகல் பெறினும் வழி நாள்
தங்கலர் வாழி தோழி செம் கோல்
கரும் கால் மராத்து வாஅல் மெல் இணர்
சுரிந்து வணர் பித்தை பொலிய சூடி
கல்லா மழவர் வில் இடம் தழீஇ
வருநர் பார்க்கும் வெருவரு கவலை
மொழிபெயர் தேஎத்தர் ஆயினும்
பழி தீர் காதலர் சென்ற நாட்டே - அகம். 127

வரி விளக்கம்:

இலங்கு வளை நெகிழ சாஅய் அல்கலும் = ஒளிமிக்க கண்மையணி கெடுமாறு வருந்தி நாளும்
கலங்கு அஞர் உழந்து நாம் இவண் ஒழிய = கண்கலங்கி அழுதவாறு நாம் இங்கே தனித்திருக்க
வலம் படு முரசின் சேரலாதன் = வெற்றி முரசுடைய சேரலாதன்
முந்நீர் ஓட்டி கடம்பு அறுத்து இமயத்து = கடலில் பயணித்து கடம்பமரத்தினை வெட்டி இமயமலையில்
முன்னோர் மருள வணங்கு வில் பொறித்து = அவனது முன்னோர்களைப் போலவே வில்கொடியினை ஏற்றி
நன் நகர் மாந்தை முற்றத்து ஒன்னார் = மாந்தை என்னும் நகருக்கு வெளியே அவனது எதிரிகள்
பணி திறை தந்த = பணிந்து கப்பமாகத் தந்த
பொன் செய் பாவை வயிரமொடு ஆம்பல் ஒன்று = தங்கப்பதுமைகள் வயிரங்களுடன் யானை ஒன்றினையும்
பாடுசால் நன்கலம் வாய் நிறைய குவைஇ = பெருமைசான்ற தனது கப்பல் நிறைய ஏற்றிக் குவித்தபின்
அன்று அவண் நிலம் தின துறந்த நிதியத்து அன்ன = அங்கேயே விட்டுச்சென்ற மிச்சமான செல்வத்தைப் போல
ஒரு நாள் ஒரு பகல் பெறினும் = தேவையான செல்வத்தை ஒருநாளின் பகற்பொழுதிலே பெற்றுவிட்டால்
வழி நாள் தங்கலர் வாழி தோழி = மறுநாள் தங்கமாட்டார் தோழியே நீ வாழ்க
கரும் கால் மராத்து வாஅல் மெல் இணர் = கரிய காலுடைய மராமரத்தின் வெண்ணிறப் பூங்கொத்துக்களை
சுரிந்து வணர் பித்தை பொலிய சூடி = சுருண்டும் வளைந்தும் இருக்கிற தமது தலைமயிரில் அழகாக அணிந்த
கல்லா மழவர் செங்கோல் = ஆறலைக் கள்வர்கள் குருதி தோய்ந்த அம்பினைப் பூட்டிய
வில் இடம் தழீஇ = வில்லினை இடக்கையில் ஏந்தியவாறு
வருநர் பார்க்கும் வெருவரு கவலை = வருவோரைக் கொல்லக் காத்திருக்கும் அச்சம்மிக்க பாதையில் சென்று
மொழிபெயர் தேஎத்தர் ஆயினும் = பிறமொழி பேசுவோரின் நாட்டிலே இருந்தாலும்
பழி தீர் காதலர் சென்ற நாட்டே = பழிக்கு அஞ்சும் உன் காதலர் அந்த நாட்டில்.

பொருள் விளக்கம்:

தோழியே நீ வாழ்க ! ஒளிமிக்க கண்மையணி கெடுமாறு வருந்தி நாளும் கண்கலங்கி அழுதவாறு நாம் இங்கே தனித்திருக்க, கரிய காலுடைய மராமரத்தின் வெண்ணிறப் பூங்கொத்துக்களை சுருண்டும் வளைந்தும் இருக்கிற தமது தலைமயிரில் அழகாக அணிந்த ஆறலைக் கள்வர்கள் குருதி தோய்ந்த அம்பினைப் பூட்டிய வில்லினை தமது இடக்கையில் ஏந்தியவாறு வருவோரைக் கொல்லக் காத்திருக்கும் அச்சம்மிக்க பாதையில் சென்று தற்போது பிறமொழி பேசுவோரின் நாட்டிலே இருந்தாலும் உன் காதலர் பழிக்கு அஞ்சுபவர் என்பதால், வெற்றி முரசுடைய சேரலாதன் கடலில் பயணித்து கடம்பமரத்தினை வெட்டி அவனது முன்னோர்களைப் போலவே இமயமலையில் வில்கொடியினை ஏற்றி மாந்தை என்னும் நகருக்கு வெளியே அவனது எதிரிகள் பணிந்து கப்பமாகத் தந்த தங்கப்பதுமைகளையும் வயிரங்களையும் ஒரு யானையினையும் பெருமைசான்ற தனது கப்பல் நிறைய ஏற்றிக் குவித்தபின்னர் அங்கேயே விட்டுச்சென்ற மிச்சமான செல்வத்தைப் போல தேவையான செல்வத்தை ஒருநாளின் பகற்பொழுதிலே பெற்றுவிட்டால் மறுநாள் அந்த நாட்டில் தங்கமாட்டார்.

மேல் விளக்கம்:

இப் பாடல் அகத்திணையைச் சார்ந்ததாகவே இருந்தாலும் புறத்திணை சார்ந்த செய்திகள் இப்பாடலில் மிகுதியாகவே காணப்படுகிறது. பிறநாட்டுக்குச் சென்றிருக்கும் தலைவன், தேவையான அளவு பொருள் சேர்ந்ததும் தனது ஊருக்குத் திரும்பிவிடுவான் என்று கூறி தலைவிக்கு நம்பிக்கை ஊட்டுவதாக இப்பாடல் அமைந்துள்ளது. இதுதான் இப்பாடலின் மையக்கருத்து. இதை நேரடியாகக் கூறிவிட்டால் பாடலில் சுவை இருக்காது என்பதால் சேரலாதனின் வெற்றிகளையும் சேர்த்துக் கூறி பாடலுக்கு ஒரு வரலாற்றுச்சுவை கூட்டியிருக்கிறார் புலவர். 

சேரலாதனின் வெற்றிச்செயல்களைக் கூறுமிடத்து, அவன் வங்கக் கடலில் கப்பலில் பயணம் செய்ததையும் எதிரிகளின் நாட்டில் இருந்த கடம்ப மரத்தினை வெட்டி வீழ்த்தியதையும் இமயமலையில் தனது வில்கொடி ஏற்றியதையும் எதிரிகள் தனக்குக் கப்பமாகக் கட்டிய செல்வத்தைத் தனது கப்பல் நிறையும் அளவுக்குத் தங்கம், வயிரம் என்று ஏற்றியபின் கூடவே ஒரு யானையினையும் கொண்டுவந்ததையும் இப்பாடலில் கூறுகிறார். பொன் பொருளுடன் யானையையும் ஏற்றிக்கொண்டு வந்ததிலிருந்து சேரலாதனின் கப்பல் எவ்வளவு பெரியதாய் இருந்திருக்க வேண்டும் என்று சொல்லத் தேவையில்லை. அதுமட்டுமின்றி, முன்னோர்களைப் போலவே சேரலாதனும் இமையமலையில் வில்கொடி ஏற்றினான் என்று கூறுவதிலிருந்து இவனுக்கு முன்னரே பல சேரமன்னர்கள் இமயமலையினை வென்று வில்கொடி ஏற்றி ஆண்டுவந்தனர் என்பது அறியப்பெறுகிறது. அப்படி இவனது முன்னோர் காலத்திலிருந்து இமயமலையில் சேரர்களின் ஆட்சிக்குட்பட்டு வந்த நகரங்களில் ஒன்றுதான் மாந்தை என்னும் நகரமாகும். 

சேரலாதனிடம் தோற்ற மன்னர்கள் இமயமலையின் மாந்தை நகருக்கு வெளியே பொன்னையும் வயிரங்களையும் கப்பமாகக் கொண்டுவந்து குவித்தனர். இவற்றில் தனக்குத் தேவையானதை மட்டும் தனது கப்பலில் ஏற்றிக்கொண்டு மீண்டும் வங்கக் கடலில் பயணித்துத் தென்னகம் திரும்புகிறான் இந்த சேரலாதன். இதிலிருந்து இந்த சேரலாதன் இந்தியாவின் தென்பகுதியினை ஆண்டுவந்தவன் என்று தெரிகிறது. இம் மன்னனும் இதற்கு முன்னால் கண்ட புறநானூற்றுப் பாடல் எண் 2 ல் பாடப்பெறுகின்ற தமிழ் மன்னர்கள் ஐவரின் வெற்றிக்குத் துணையாக உணவளித்து உதவிய மன்னனும் ஒருவரா இல்லை வேறா என்ற குழப்பம் தோன்றுகின்றது. காரணம், புறநானூற்றில் வரும் மன்னன் இந்தியாவின் வடக்கு, கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகளை ஆண்டு வந்தவன். இன்னும் பல தரவுகளை ஆய்வுசெய்த பின்னரே இதில் ஒரு முடிவு காணமுடியும்.

பாடலில் வரும் தலைவியானவள் இமயமலையின் அடிவாரத்தில் உள்ள மாந்தை நகரில் வசிப்பவள். எனவே இவள் சேரலாதனின் வெற்றியைப் பற்றியும் அவன் கப்பலில் பரிசுகளை ஏற்றிச் சென்றதையும் அறிவாள். இவளது கணவன் பொருள் ஈட்டும் முயற்சியாக மாந்தை நகரிலிருந்து பிறமொழி பேசுவோராகிய ஆரியர்கள் வாழும் இமயமலையின் வடக்குப் பகுதிக்குச் செல்கிறான். அப்படி அவன் போகும்வழியோ சாதாரணமானதல்ல. அவ் வழியில் செல்வோரை ஆறலைக் கள்வர்கள் கொன்று அவரிடமிருக்கும் பொருளை எடுத்துக்கொள்வார்கள். இந்த ஆறலைக் கள்வர்கள் பார்ப்பதற்குக் கரிய நிறத்தில் இருப்பார்கள். தலைவாராமல் சுருண்டும் வளைந்தும் நீக்ரோ இனமக்களைப் போல இருக்கும் தங்களது தலைமயிரில் வெண்ணிற மராமரப் பூக்களைச் சூடியிருப்பார்கள். இவர்களின் கண்ணில் படாமல் கவனமாக அப் பாதையினைக் கடந்துசெல்லவேண்டும். மலைப்பாதை என்பதால் ஒரே வழிதான்; வேறுவழியில்லை. கண்ணில் பட்டால் அம்பெய்து கொன்று விடுவார்கள். இப்படி உயிர் போகும் வாய்ப்பு இருப்பது தெரிந்தும் இல்லறத்திற்கான பொருள்தேட தலைவன் தலைவியைப் பிரிந்து அவ்வழியே செல்கிறான்.  இப்படிப் பிரிந்துசென்ற தலைவன், மன்னன் சேரலாதனைப் போலத் தனக்குப் போதுமான பொருள் ஒரேநாளில் கிடைத்துவிட்டாலும் உடனே திரும்பிவிடுவான்; அங்கே நீடித்துத் தங்கமாட்டான் என்று அழுது அழுது கண்மை கசங்கிய நிலையில் மனம் வெம்பிக் கொண்டிருக்கும் தலைவிக்கு ஆறுதல் கூறுகிறாள் அவளது தோழி.

............ தொடரும்.....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.