புதன், 25 ஜனவரி, 2017

சங்க கால யாழ் வகைகள்

முன்னுரை:

யாழ் என்பது பழந்தமிழர்களால் பயன்படுத்தப்பட்டு வந்த நரம்பிசைக் கருவிகளில் ஒன்றாகும். தற்போது நாம் பயன்படுத்தி வருகின்ற வீணை எனும் நரம்பிசைக் கருவியின் முன்னோடி என்று நாம் யாழைக் குறிப்பிடலாம். இரண்டுக்குமே பல ஒற்றுமைகள் உண்டு; சில வேற்றுமைகளும் உண்டு. இவற்றை அறியவேண்டுமெனில் முதலில் நாம் யாழின் அமைப்பு பற்றி அறிந்தாக வேண்டும். ஏனென்றால் வீணையின் அமைப்பு பற்றி நாம் அனைவரும் நன்கு அறிவோம்.

யாழின் அமைப்பானது காலந்தோறும் மாறியே வந்துள்ளது. பேரியாழ், சீறியாழ், மகரயாழ், சகோடயாழ் என்று பல்வகை யாழ்கள் புழக்கத்தில் இருந்துள்ளன. யாழ் அமைப்புக்கள் பலவிதமாகக் காலந்தோறும் மாறிவந்துள்ள நிலையில், சங்ககாலத்தில் பயன்படுத்தப்பட்ட யாழ்களின் அமைப்புமுறையினைப் பற்றி மட்டுமே நாம் இக் கட்டுரையில் காணப்போகிறோம்.

சங்ககால யாழ்:

சங்ககாலத்தில் பாணர்கள், பொருநர்கள் போன்றோர் யாழினை மீட்டி இசையெழுப்பியதாக ஆற்றுப்படை இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. வெறுமனே இசையெழுப்பாமல் இசையுடன் பாடலைப் பாடி ஆட்டம் ஆடி மக்களையும் மன்னர்களையும் மகிழ்வித்திருக்கின்றனர்.

சங்ககாலத்து யாழ் அமைப்பு பற்றி சங்க இலக்கியங்களான பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை மற்றும் மலைப்படுகடாம் ஆகியவை மிக விரிவாகக் குறிப்பிடுகின்றன. இந்த இலக்கியங்கள் குறிப்பிடும் செய்திகளின் அடிப்படையில் அந்த யாழ்கள் எவ்வாறு இருக்கும் என்று ஊகித்து அதனடிப்படையில் வரையப்பட்ட படங்களும் இக் கட்டுரையில் இணைக்கப்பட்டுள்ளன.

 இந்த இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள செய்திகளின் வழி, சங்க கால யாழ்களின் தோற்றமானது களாக்கனியைப் போலும் குமிழம் பழம் போலும் பாதிரி மலர் போலும் இருப்பதாக அறியமுடிகிறது. அதாவது, இந்த யாழ்களின் பத்தலென்ற உறுப்பானது கீழ்ப்புறத்தில் மஞ்சள்நிறப் போர்வையாலும் மேல்புறத்தில் சிவப்பு / காவி / செம்மஞ்சள் நிறத் தோலினாலும் மூடப்பட்டு இருந்ததால், வண்ணம் மற்றும் வடிவ அடிப்படையில் யாழ்களை இவற்றுடன் உவமைப்படுத்திப் பாடியுள்ளனர் புலவர். களாக்கனி, குமிழம்பழம் மற்றும் பாதிரிமலரின் படங்களும் யாழின் படமும் அருகில் இணைக்கப்பட்டுள்ளது. சங்கப் புலவர்களின் உவமை எவ்வளவு நயமானது என்பதனை இந்தப் படமே தெளிவாக்கிவிடும்.

யாழ் உறுப்புக்கள்:

யாழ் பற்றிய தெளிவான காட்சியினைப் பெற, முதலில் அதன் உறுப்புக்களைப் பற்றி அறிந்தாக வேண்டும். பொதுவாக எல்லா யாழ்களிலும் கீழ்க்காணும் உறுப்புக்கள் கண்டிப்பாக இருக்கும்.

1. பத்தல்
2. கோடு அல்லது மருப்பு
3. ஆணி
4. வெண்கை
5. நரம்பு
6. பச்சை
7. போர்வை
8. திவவு

இந்த உறுப்புக்களைப் பற்றித் தனித்தனியாகக் கீழே விரிவாகக் காணலாம்.

1. பத்தல்:

யாழ் உறுப்புக்களில் முதன்மையானதும் அடிப்படையானதும் இதுதான். உறுப்புக்களில் பெரிய பரப்புகொண்ட உறுப்பும் இதுதான். யாழினது ஏனை உறுப்புக்களைத் தாங்கி நிற்கும் ஆதார உறுப்பான இது அடிப்படையில் பிச்சைக்காரர்களின் கையிலிருக்கின்ற பிச்சையெடுக்கும் ஓடுபோல மரத்தினால் செய்யப்பட்ட ஆழமான ஒரு பாத்திரம் தான். ஆனால் அதனின்று சற்று வேறுபட்டது. பத்தலானது கருமைநிறத்தில் ஆழமாக நீள்வட்டமாக இருப்பதால் இதனை நீரின்றி வறண்ட ஒரு ஆழமான இருள்நிறைந்த சுனையுடன் உவமைப்படுத்திக் கூறுவர்.

பத்தலின் மேல்புறத்தினை வாய் என்று கூறுவர். இந்த வாய்ப்பகுதியில் அதாவது மேல்விளிம்புகளில் மணிபோன்ற உருண்டையான அமைப்புக்கள் இருக்கும். இந்த மணிகள் வரிசையாக அமைக்கப்பட்டு பார்ப்பதற்கு ஒரு கால்சிலம்புக்குள் பரல்கள் வரிசையாகவும் நீள்வட்டமாகவும் அமைந்திருப்பதிருப்பதைப் போலக் காணப்படும். பத்தலின் வாய்ப்பகுதியின் ஒருபுறத்தில் இருமுனைகளை உடைய மேல்நோக்கிய பிறைபோன்ற அமைப்புக் காணப்படுகிறது. சில யாழ்களில் ஒரேஒரு முனையும் சிலவற்றில் இரண்டுபுறங்களிலும் ஒவ்வொரு முனையும் காணப்படுகிறது. யாழின் தண்டினைப் பத்தலுடன் பொருத்துவதற்கு இந்தப் பிறைபோன்ற அமைப்பு உதவுகிறது.

பத்தலின் கீழ்ப்புறமானது குவிந்து திரண்டு பார்ப்பதற்குக் கண்விழி போன்ற வடிவில் இருக்கும். முன்புறமாகக் குவிந்து இருப்பதால் இதனைப் பத்தலின் வயிறு என்று கூறுவர். இதன்நடுவில் ஒரு கவடு போன்ற சிறு பிளவு காணப்படும். இதனை உந்தி (தொப்பூழ்) என்று கூறுவர். இது பார்ப்பதற்கு மானின் கால்குளம்பின் அடிப்பகுதியினை ஒத்திருக்கும். இந்தக் கவட்டின் மேல்புறத்தில் போர்வையின் கீழ்முனையினைப் பொருத்துவதற்கு ஏதுவாக நீளமான விரல்போன்ற அமைப்புக்கள் வரிசையாக இருக்கும். இவற்றைப் பொல்லம் என்று கூறுவர்.

2. கோடு அல்லது மருப்பு:

கோடு என்றும் மருப்பு என்றும் அறியப்படுவதான யாழின் தண்டுதான் உறுப்புக்களில் உயரமானதொரு உறுப்பாகும். மரத்தினால் செய்யப்படும் இது உருண்டையாகவும் பளபளப்பாகவும் காணப்படுவதால் இதனைப் பாம்புடன் ஒப்பிட்டுக் கூறுவர். பெரும்பாலும் இது கருநிறம் கொண்டதே ஆனாலும் சில சமயங்களில் தேன் வண்ணத்திலும் இருக்கும். யாழ்நரம்புகளைத் தாங்கிநின்று சரியான இசையினை மீட்ட இது உதவுகிறது.

3. ஆணி:

யாழின் உறுப்புக்களில் மிகச்சிறிய உறுப்பு ஆணிதான். இவை யாழ்த்தண்டின் மேல்பகுதியில் அமைந்துள்ள துளைகளுக்குள் செலுத்தப்பட்டு தம் தலையில் முடுக்குவதற்கான அமைப்புடன் அதாவது இன்றைய திருகாணி போல இருக்கும். இதனை நண்டின் தலைக்குமேல் நீண்டு அமைந்துள்ள அதன் கண்களுடன் ஒப்பிட்டுக் கூறுவர். இந்த ஆணிகள் மரத்தாலோ உலோகத்தாலோ செய்யப்பட்டிருக்கும். வெள்ளியால் செய்யப்பட்ட இந்த வட்டவடிவ ஆணிகள் ஒளிவீசும்போது பார்ப்பதற்கு நிலவு போலத் தோன்றும். யாழ்நரம்புகளின் மேல்முனையின் ஒருபகுதியினை இந்த ஆணிகளில் சுற்றியிருப்பதால் இந்த ஆணிகளை முடுக்குவதன் மூலம் யாழ்நரம்புகளில் விரைப்பினைக் கூட்டவும் குறைக்கவும் முடியும்.

4. வெண்கை:

யாழ்த் தண்டின் மேல்பகுதியில் அமைந்திருக்கும் இது ஒரு கைப்பிடி போன்ற அமைப்பாகும். யாழினைத் தூக்க உதவுவது மட்டுமின்றி யாழ் நரம்புகளின் மேல்முனைகள் அவிழாமல் இருப்பதற்கு அவற்றை இந்தக் கைப்பிடியில் தான் சுற்றிக் கட்டிவைப்பர். வெள்ளியாலான இது வெண்ணிறத்தில் அமைந்திருப்பதால் இதனை வெண்கை என்று கூறுவர்.

5. நரம்பு:

யாழில் இசையினை உருவாக்க உதவுவது நரம்புதான். நரம்பினை மீட்டும்போது இசை உருவாகிறது. இந்த நரம்பானது பெரும்பாலும் மரல்செடியின் இலைகளை வகுத்து உரித்தெடுத்த நாரினை வடித்து முறுக்கி செய்யப்பட்டதாகும். மஞ்சள் நிறத்தில் இருக்கும் இதனை தினையரிசி மாவில் செய்த இடியாப்ப இழைகளுடனும் பொன்னாலான இழைகளுடனும் ஒப்பிட்டுக் கூறுவர்.

6. பச்சை :

பச்சை என்பது விலங்கின் தோலைக் குறிக்கும். விலங்கின் தோலைப் பாடம்செய்து அதில் சிவப்பு அல்லது காவி அல்லது செம்மஞ்சள் வண்ணச் சாயம் ஊட்டியிருப்பர். பச்சையானது, பத்தலின் மேல்புறமான வாய்ப்பகுதியினை முழுவதும் மூடிமறைக்குமாறு அதன்மேல் பசைகொண்டு பூசப்பட்டுப் பொருத்தப்பட்டிருக்கும். இத்தோலின் மையத்தில் இரண்டு வரிசைகளில் நெருக்கமாக சிறுதுளைகள் போடப்பட்டு இருக்கும். துளைகள் இருக்கும் இடம் சற்று குவிந்தநிலையில் காணப்படுவதால் இவை பார்ப்பதற்குக் கமுகுமரத்தின் பாளைகளில் பூமொக்குகள் வரிசையாக அமைந்திருப்பதைப் போலவும் வரகுப் பயிரில் விளைந்த கதிர்களின் மணிகள் வரிசையாக அமைந்திருப்பதைப் போலவும் காணப்படும். யாழ்நரம்புகளின் கீழ்முனையினை இந்தத் துளைகளுக்குள் செலுத்தி இறுக்கமாகக் கட்டியிருப்பர்.

7. போர்வை:

பத்தலின் மேல்புறத்தினைப் பச்சையானது மூடியிருப்பதைப் போலப் போர்வையானது பத்தலின் கீழ்ப்புறத்தினை  மூடியிருக்கும். ஆனால், போர்வையானது பச்சையினைப் போலின்றி துணியினால் ஆனதே. பெரும்பாலும் இந்தப் போர்வையானது மஞ்சள் வண்ணத்தில் தான் இருக்கும். போர்வையின் மேல்முனையானது பத்தலின் வாய்ப்பகுதியில் அமைந்துள்ள மணிபோன்ற அமைப்புக்களுடன் பொருத்தப்பட்டு இருக்கும். கீழ்முனையானது பத்தலின் குவிந்த அடிப்பகுதியுடன் ஒட்டிச்சென்று இரண்டாகப் பிரிந்து அடிப்பகுதியின் நடுவில் இருக்கின்ற பொல்லத்துடன் அதாவது கவட்டின் விரல்போன்ற பகுதியுடன் சேர்த்து இழுத்துப் பொருத்தப்பட்டிருக்கும். இது பார்ப்பதற்குப் பெண்களின் மையுண்ட குவிந்த கண்ணிமைகளில் இருக்கும் மயிர் ஒழுக்கத்தினைப் போலக் காணப்படும்.

8. திவவு:

யாழின் உறுப்புக்களில் கடைசியாகக் கூறப்பட்டாலும் மிக இன்றியமையாத உறுப்பு இதுதான். யாழின் வடிவத்தினைக் குலையாமல் நிலைநிறுத்தவும் யாழ்நரம்புகளை மீட்டிச் சரியான இசையினைப் பெறுவதற்கும் இதுதான் உதவுகிறது. அதாவது, யாழ்த்தண்டினைப் பத்தலின் பிறைபோன்ற அமைப்புடன் மிக வலுவாகப் பொருத்துவதற்கு உதவும் இது உண்மையில் ஒரு வளையம் போன்ற அமைப்பாகும். மரத்தினால் செய்யப்படும் இது பார்ப்பதற்கு அளவு திரிந்த கைவளையல் போல ஒருபுறம் பெருத்தும் மறுபுறம் சிறுத்தும் காணப்படும். உள்ளே ஒரு ஒடுக்கவழி உடையதால் இதனைக் காதுடன் ஒப்பிட்டுக் கூறுவர். திருகி ஏற்றப்படும் இது பொதுவாக பல எண்ணிக்கையில் பல அளவுகளில் பொருத்தப்படுவதால் இவற்றைப் பொருத்தியபின்னர் இவற்றைப் பார்ப்பதற்கு ஒருபெண் தனது முன்னங்கை முழுவதும் பல அளவுகளிலான வளையல்களை வரிசையாக அணிந்திருப்பதைப் போலவும் மலையேறும் படிக்கட்டு போலவும் தோன்றும். திவவு பற்றிய மேலதிக தகவல்களை ' திவவு என்றால் என்ன?' என்ற கட்டுரையில் காணலாம்.

பொருநன் யாழ்:

பொருநனது யாழ் குறித்த விளக்கத்தினை ஏற்கெனவே நாம் ' வயிறு என்றால் என்ன? ' என்ற கட்டுரையில் விளக்கமாகக் கண்டுள்ளோம். எனினும், இங்கே பொருநனது யாழ் பற்றி படத்துடன் விரிவாகக் காணலாம்.

அறாஅ யாணர் அகன் தலை பேர் ஊர்
சாறு கழி வழி நாள் சோறு நசையுறாது      
வேறு புலம் முன்னிய விரகு அறி பொருந
குளப்பு வழி அன்ன கவடு படு பத்தல்      
விளக்கு அழல் உருவின் விசியுறு பச்சை
எய்யா இளம் சூல் செய்யோள் அம் வயிற்று
ஐது மயிர் ஒழுகிய தோற்றம் போல
பொல்லம் பொத்திய பொதியுறு போர்வை
அளை வாழ் அலவன் கண் கண்டு அன்ன
துளை வாய் தூர்ந்த துரப்பு அமை ஆணி
எண் நாள் திங்கள் வடிவிற்று ஆகி      
அண்நா இல்லா அமைவரு வறு வாய்      
பாம்பு அணந்து அன்ன ஓங்கு இரு மருப்பின்
மாயோள் முன்கை ஆய் தொடி கடுக்கும்      
கண்கூடு இருக்கை திண் பிணி திவவின்
ஆய் தினை அரிசி அவையல் அன்ன
வேய்வை போகிய விரல் உளர் நரம்பின் .... - பொருந.

வரிவிளக்கம்:

அறாஅ யாணர் அகன் தலை பேர் ஊர் = வற்றாத வளம்கொண்ட அந்தப் பெரிய ஊரில்
சாறு கழி வழி நாள் சோறு நசையுறாது = விழா முடிந்த மறுநாளும் உண்ணும் விருப்பமின்றி  
வேறு புலம் முன்னிய விரகு அறி பொருந = வேறிடம் நோக்கிச் செல்லும் திறமை மிக்க பொருநனே !
குளப்பு வழி அன்ன கவடு படு பத்தல் = மான் குளம்பின் அச்சு போன்ற பிளவுடைய பத்தலையும்      
விளக்கு அழல் உருவின் விசியுறு பச்சை = விளக்குச்சுடர் போல வண்ணங்கொண்ட இழுத்துக்கட்டிய தோலையும்
எய்யா இளம் சூல் செய்யோள் அம் வயிற்று = கருவுற்றிருக்கும் அழகிய பெண்ணுடைய கண்ணிமையில் இருக்கும்
ஐது மயிர் ஒழுகிய தோற்றம் போல = அழகிய மயிர்களின் ஒழுக்கத்தினைப் போல
பொல்லம் பொத்திய பொதியுறு போர்வை = பொல்லத்துடன் சேர்த்துப் பொருத்திய போர்வையும்
அளை வாழ் அலவன் கண் கண்டு அன்ன = வளையில் வாழும் நண்டின் கண்களைப் போலத்தோன்றும்
துளை வாய் தூர்ந்த துரப்பு அமை ஆணி = துளைக்குள் செலுத்திய முடுக்கத்தக்க ஆணிகளும்
எண் நாள் திங்கள் வடிவிற்று ஆகி = எட்டாம்பிறை போன்று வளைந்த வடிவினதாய்  
அண்நா இல்லா அமைவரு வறு வாய் =     உள்நாக்கு இல்லாத வெற்று வாயுடையதோர்
பாம்பு அணந்து அன்ன ஓங்கு இரு மருப்பின் = பாம்பு நிமிர்ந்ததைப் போல ஓங்கிய கோட்டினையும்
மாயோள் முன்கை ஆய் தொடி கடுக்கும்    = அழகிய பெண்ணின் கைவளைபோலத் தோன்றுவதும்  
கண்கூடு இருக்கை = பத்தலுடன் கோடு ஒன்றுகூடும் இடத்தில் இருப்பதுமான
திண் பிணி திவவின் = வலிமையாகப் பிணிக்கின்ற வளையத்தினையும்
ஆய் தினை அரிசி அவையல் அன்ன = தினையரிசி மாவினால் செய்த இடியாப்ப இழைபோலத் தோன்றுவதும்
வேய்வை போகிய விரல் உளர் நரம்பின் = துளைக்குள் செலுத்தப்பட்டு விரலால் மீட்டப்படுவதுமான நரம்புகளையும்

பொருள் விளக்கம்:

வற்றாத வளம்கொண்ட அந்தப் பெரிய ஊரில் விழா முடிந்த மறுநாளும் உண்ணும் விருப்பமின்றி வேறிடம் நோக்கிச் செல்லும் திறமை மிக்க பொருநனே ! மான் குளம்பின் அச்சு போன்ற பிளவுடைய பத்தலையும் விளக்குச்சுடர் போல வண்ணங்கொண்ட இழுத்துக்கட்டிய தோலையும் கருவுற்றிருக்கும் அழகிய பெண்ணுடைய கண்ணிமையில் இருக்கும் அழகிய மயிர்களின் ஒழுக்கத்தினைப் போலத் தோன்றுகின்ற பொல்லத்துடன் சேர்த்துப் பொருத்திய போர்வையும் வளையில் வாழும் நண்டின் கண்களைப்போலத் தோன்றுவதும் துளைக்குள் செலுத்தப்பட்டதுமான முடுக்கத்தக்க ஆணிகளும் எட்டாம்பிறை போன்று வளைந்த வடிவினதாய் உள்நாக்கு இல்லாத வெற்று வாயுடையதோர் பாம்பு நிமிர்ந்ததைப் போலத்தோன்றும் ஓங்கிய கோட்டினையும் அழகிய பெண்ணின் கைவளைபோலத் தோன்றுவதும் பத்தலுடன் கோடு ஒன்றுகூடும் இடத்தில் இருப்பதுமான வலிமையாகப் பிணிக்கின்ற வளையத்தினையும் தினையரிசி மாவினால் செய்த இடியாப்ப இழைபோலத் தோன்றுவதும் துளைக்குள் செலுத்தப்பட்டு விரலால் மீட்டப்படுவதுமான நரம்புகளையும்......

மேல் விளக்கம்:

ஒரு சொல்லுக்கான சரியான பொருளைப் புரிந்துகொள்ள உவமையினைப் போல உதவிசெய்யும் அணி எதுவுமில்லை. உவமையணி மட்டும் இல்லாதிருந்தால் பல சங்கத் தமிழ்ச் சொற்களை நம்மால் சரியாகப் புரிந்துகொள்ள முடியாமலே போயிருக்கும் என்பது மறுக்கமுடியாத உண்மை. இதையெல்லாம் உணர்ந்துதான் சங்கப் புலவர்கள் ஒவ்வொரு பொருளுக்கும் கூடுமானவரைக்கும் உவமைகூறிப் பாடல் இயற்றியிருக்க வேண்டும். அவ்வகையில், இந்தப் பாடலில் பயின்று வரும் பல சொற்களைப் புரிந்துகொள்ள பல உவமைகளை அமைத்துப் பாடியிருக்கிறார் புலவர். அந்த உவமைகள் ஒவ்வொன்றையும் தனித்தனியே பார்த்துப் புரிந்துகொள்ள முயல்வோம்.

முதலில் யாழ் கருவியின் அடிப்படை உறுப்பான பத்தல் பற்றிப் பேசுகிறார். இது எப்படி இருக்கும்?. புலவர் வெறுமனே பத்தல் என்று கூறியிருந்தால் பத்தல் எவ்வாறு இருக்கும் என்று தெரியாமல் போயிருக்கும். ஆனால் புலவர் இங்கே பத்தலை மானின் குளம்புத் தடத்துடன் ஒப்பிடுகிறார். அருகில் மான் குளம்பின் தடம் காட்டப்பட்டுள்ளது. நடுவில் சிறிய பிளவினை உடையதாய் கண் வடிவத்தில் மான் குளம்பின் தடம் இருப்பதிலிருந்து பத்தலும் கண்வடிவத்தில் தான் இருக்கும் என்று தெரியவருகிறது. இதனால் தான் பத்தலுடன் கண்ணை உவமைப்படுத்திக் கீழ்க்காணும் பாடலும் கூறுகிறது.

செங்கோட்டு யாழின் பத்தர் அன்ன
மெத்தென் அம் வயிற்று - பெருங்.உஞ்சை.40

அடுத்து இந்தப் பத்தலுக்கு மேலாக அதனை மூடியிருக்கும் தோல் பற்றிப் பேசுகிறார். இத் தோலானது பத்தலின் மேல்விளிம்புடன் நன்கு இழுத்துக் கட்டப்பட்டிருக்கிறது. இது பார்ப்பதற்கு விளக்குச்சுடர் போல செவ்வண்ணத்தில் இருப்பதாகக் கூறுகிறார் புலவர். பத்தலின் வயிறு போன்ற அடிப்பகுதியினை போர்வையால் மூடி அடிப்பகுதியின் நடுவில் இருக்கும் கவட்டுடன் சேர்த்து அதனைப் பொருத்தியிருக்கிறார்கள். இது பார்ப்பதற்கு கருவுற்ற பெண்ணின் அழகிய கண்ணிமைகளில் இருக்கும் அழகிய மயிர்களின் ஒழுக்கம் போலத் தோன்றுகிறதாம். இது எப்படியென்றால், பத்தலின் குவிந்த அடிப்பகுதியானது பெண்ணின் திரண்ட கண்களைப் போன்றும் அதை மூடியிருக்கின்ற வண்ணத்துணியானது அப்பெண்ணின் மையுண்ட இமைகளைப் போலவும் பத்தலின் கவட்டில் இருக்கும் பொல்லம் ஆகிய கருநிற விரல் போன்ற அமைப்புக்கள் இமைகளில் உள்ள கருமயிர் போலவும் இருப்பதாகக் கூறுகிறார். என்ன ஒரு உவமை !

அடுத்து யாழின் சிறிய உறுப்புக்களான ஆணிகளைப் பற்றிப் பேசுகிறார். இந்த ஆணிகள் தலையில் முடுக்கும் அமைப்புடன் வட்டவடிவில் பார்ப்பதற்கு நண்டின் தலையில் இருந்து நீண்டு காணப்படும் அதன் கண்களைப் போன்று தோன்றுகிறது புலவருக்கு. அருகில் நண்டின் கண்கள் படம் காட்டப்பட்டுள்ளது.

ஆணிகளை அடுத்து வருவது அவற்றைத் தாங்கிநிற்கும் கோடு என்றும் மருப்பு என்றும் கூறப்படும் யாழின் தண்டு. இந்தக் கோடானது எட்டாம்பிறைச் சந்திரனைப் போல அரைவட்ட வடிவில் வளைந்திருக்கிறது என்கிறார் புலவர். அத்துடன் நிற்காமல் இது பார்ப்பதற்கு உள்நாக்கு இல்லாத ஒரு பாம்பு தலைநிமிர்ந்து பார்ப்பதைப் போல இருக்கிறதாம் புலவருக்கு. இதிலிருந்து இத் தண்டின் ஒரு முனையானது பத்தலின் ஓரத்தில் ஒருபுறமாகப் பொருத்தப்பட்டிருந்தது என்பதையும் இன்னொரு முனையானது சீறும்பாம்பின் வாய்போல பிளந்திருந்தது என்பதனையும் அறிந்துகொள்ள முடிகிறது.

இதனை அடுத்து வருவது திவவு என்று அறியப்படும் உறுப்பு. திவவு என்பதற்கு யாழ்நரம்புக் கட்டு என்று பொருள்கூறுவாருளர். இது தவறானதாகும். இப்பாடலில் வரும் திவவு என்பது நரம்புக் கட்டினைக் குறிக்காது. திவவு என்பது ஒரு வளையம் ஆகும். இந்த வளையமானது பத்தலும் தண்டும் ஒன்றுகூடும் இடத்தில் பொருத்தப்பட்டு இருக்கும். நரம்புகளில் விறைப்புத்தன்மையினை கூட்டும்போது தண்டுப்பகுதி முன்னால் வளைந்து சாய்ந்துவிடாமல் இருக்கும்விதமாக அதனை இறுக்கமாகப் பத்தலுடன் பிணித்துக்கொள்கிறது. இது பார்ப்பதற்கு அழகிய பெண்ணொருத்தி முன்கையில் அணிந்திருக்கும் வளையலைப் போல இருக்கிறது என்று புலவர் கூறுவதிலிருந்தே திவவு என்பதும் ஒரு வளையம் போன்ற உறுப்பினையே குறிக்கும் என்பதைப் புரிந்துகொள்ளலாம். திவவு பற்றி விரிவாக வேறு ஒரு கட்டுரையில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது.

திவவினை அடுத்து யாழ் நரம்புகளைப் பற்றிச் சொல்கிறார் புலவர். யாழின் நரம்புகளைப் பார்க்கும்போது அவருக்குத் தினையரிசி மாவினால் செய்த இடியாப்பம் நினைவுக்கு வந்துவிட்டது. தினை அரிசியினை நன்கு ஊறவைத்து மாவாக அரைத்தபின் அதை இடியாப்ப உரலுக்குள் இட்டுப் பிழியும்போது கம்பிபோன்ற இழைகள் கீழே விழும். இந்த இடியாப்ப இழைகளைப் போலத் தோன்றும் யாழின் நரம்புகள் தண்டின் மேல்பகுதியில் உள்ள துளைகள் வழியாகச் செலுத்தப்பட்டு முடுக்கு ஆணிகளுடன் பிணிக்கப்பட்டிருக்கும். ஆணிகளை முடுக்குவதன் மூலம் நரம்புகளில் விறைப்புத் தன்மையை ஏற்றவோ இறக்கவோ செய்யலாம்.

மலைப்பாணன் யாழ் அல்லது பேரியாழ்:

மலைப்படுகடாம் நூலில் பாடப்பெறும் பாணனது யாழ் என்பதாலும் ஏனைப் பாணர்களின் யாழில் இருந்து இதனை வேறுபடுத்திக் காட்டவும் இதற்கு மலைப்பாணன் யாழ் என்று பெயரிடப்பட்டுள்ளது. ஏனை யாழ்களைக் காட்டிலும் இது அளவிலும் ஒலியிலும் பெருமை கொண்டது என்பதால் இதற்குப் பேரியாழ் என்று பெயர் ஏற்பட்டு இருக்கலாம். மலைப்படுகடாம் நூலில் பேரியாழ் பற்றிவரும் பாடல்வரிளையும் அவற்றின் பொருளையும் மேல்விளக்கத்தினையும் விரிவாகக் கீழே காணலாம்.

தொடி திரிவு அன்ன தொண்டு படு திவவின்       
கடிப்பகை அனைத்தும் கேள்வி போகா       
குரல் ஓர்த்து தொடுத்த சுகிர் புரி நரம்பின்       
அரலை தீர உரீஇ வரகின்   
குரல் வார்ந்து அன்ன நுண் துளை இரீஇ       
சிலம்பு அமை பத்தல் பசையொடு சேர்த்தி
இலங்கு துளை செறிய ஆணி முடுக்கி       
புதுவது புனைந்த வெண்கை யாப்பு அமைத்து   
புதுவது போர்த்த பொன் போல் பச்சை
வதுவை நாறும் வண்டு கமழ் ஐம்பால்
மடந்தை மாண்ட நுடங்கு எழில் ஆகத்து
அடங்கு மயிர் ஒழுகிய அம் வாய் கடுப்ப       
அகடு சேர்பு பொருந்தி அளவினில் திரியாது
கவடு பட கவைஇய சென்று வாங்கு உந்தி       
நுணங்கு அரம் நுவறிய நுண் நீர் மாமை
களங்கனி அன்ன கதழ்ந்து கிளர் உருவின்
வணர்ந்து ஏந்து மருப்பின் வள் உயிர் பேரியாழ்    - மலைபடு.

வரிவிளக்கம்:

தொடி திரிவு அன்ன = வடிவம் திரிந்த வளையலைப் போல
தொண்டு படு திவவின்    =  ஒடுக்கவழியுடைய திவவினை உடையதும்   
கடிப்பகை அனைத்தும் கேள்வி போகா = கடுகளவு கூட சுருதி மாறாவண்ணம்   
குரல் ஓர்த்து தொடுத்த = இசையினைக் கூர்ந்துகேட்டுக் கட்டிய       
அரலை தீர உரீஇ = மரல்செடியின் இலையினை வகுத்து உரித்து
சுகிர் புரி நரம்பின் = வடிக்கப்பட்ட முறுக்குடைய நரம்பினை உடையதும்
வரகின் குரல் வார்ந்து அன்ன நுண் துளை இரீஇ = வரகின் கதிர் ஒழுக்கம்போல நுண்ணிய துளைகள் இட்ட    
புதுவது போர்த்த பொன் போல் பச்சை = புதியதாய்ப் போர்த்திய செம்பொன் வண்ணத் தோலினை
சிலம்பு அமை பத்தல் = சிலம்பு போல வாய்ப்பகுதி அமைக்கப்பட்ட பத்தலுடன்
பசையொடு சேர்த்தி  = பசையினைக் கொண்டு பூசிப் பொருத்தப்பட்டதும்
வணர்ந்து ஏந்து மருப்பின் = வளைந்து ஓங்கிய யாழ்த்தண்டில்
இலங்கு துளை செறிய ஆணி முடுக்கி = விளங்கிய துளைகள் செறியுமாறு ஆணிகளை முடுக்கி   
புதுவது புனைந்த வெண்கை = புதிதாகச் செய்த வெண்ணிறக் கைப்பிடியில்
யாப்பு அமைத்து    =  யாழ்நரம்புகளைக் கட்டியிருப்பதும்
மடந்தை மாண்ட நுடங்கு எழில் ஆகத்து = பெண்ணுக்குப் பெருமைதருவதாய் அசைகின்ற அழகு விழிகளில்
வதுவை நாறும் வண்டு = வாசனை முகரும் வண்டுகள்
கமழ் ஐம்பால் = தோன்றுவதான ஐவகையாய்ப் பூசிய இமைகளின்
அடங்கு மயிர் ஒழுகிய அம் வாய் கடுப்ப    = படிந்த மயிர்கள் ஒழுகிய அழகிய பகுதியினைப் போல் தோன்றுமாறு
அகடு சேர்பு பொருந்தி அளவினில் திரியாது = பத்தலின் வயிற்றுடன் சேர்ந்து பொருந்தி அளவில் மாறுபடாமல்
கவடு பட கவைஇய சென்று = கவைத்துச் சென்று கவட்டுடன்
வாங்கு உந்தி = இழுத்துக் கட்டப்பட்ட நடுப்பகுதியினை உடையதும்
நுணங்கு அரம் நுவறிய = நுட்பமான அரத்தினைக் கொண்டு அராவிய பொன்னின்
நுண் நீர் மாமை களங்கனி அன்ன = நுட்பமான அழகுடைய களாக்கனியினைப் போலச்
கதழ்ந்து கிளர் உருவின் = சிவப்பு மேலெழுந்த தோற்றம் கொண்டதுமான
வள் உயிர் பேரியாழ் = வலிய ஓசையினையுடைய பேரியாழ்

பொருள் விளக்கம்:

வடிவம் திரிந்த வளையலைப் போல ஒடுக்கவழியுடைய திவவினை உடையதும் கடுகளவு கூட சுருதி மாறாவண்ணம் இசையினைக் கூர்ந்துகேட்டுக் கட்டிய மரல்செடியின் இலையினை வகுத்து உரித்து வடிக்கப்பட்ட முறுக்குடைய நரம்பினை உடையதும் வரகின் கதிர் ஒழுக்கம்போல நுண்ணிய துளைகள் இட்ட புதியதாய்ப் போர்த்திய செம்பொன் வண்ணத் தோலினை சிலம்பு போல வாய்ப்பகுதி அமைக்கப்பட்ட பத்தலுடன் பசையினைக் கொண்டு பூசிப் பொருத்தப்பட்டதும் வளைந்து ஓங்கிய யாழ்த்தண்டில் விளங்கிய துளைகள் செறியுமாறு ஆணிகளை முடுக்கி புதிதாகச் செய்த வெண்ணிறக் கைப்பிடியில் யாழ்நரம்புகளைக் கட்டியிருப்பதும் பெண்ணுக்குப் பெருமைதருவதாய் அசைகின்ற அழகு விழிகளில் வாசனை முகரும் வண்டுகள் தோன்றுவதான ஐவகையாய்ப் பூசிய இமைகளின் படிந்த மயிர்கள் ஒழுகிய அழகிய பகுதியினைப் போல் தோன்றுமாறு பத்தலின் வயிற்றுடன் சேர்ந்து பொருந்தி அளவில் மாறுபடாமல் கவைத்துச் சென்று கவட்டுடன் இழுத்துக் கட்டப்பட்ட நடுப்பகுதியினை உடையதும் நுட்பமான அரத்தினைக் கொண்டு அராவிய பொன்னின் நுட்பமான அழகுடைய களாக்கனியினைப் போலச் சிவப்பு மேலெழுந்த தோற்றம் கொண்டதுமான வலிய ஓசையினையுடைய பேரியாழ்...

மேல்விளக்கம்:

மேலே உள்ள பாடலில் சில வரிகள் வரிசை மாறி அமைந்திருப்பதால் அவற்றைப் பொருள்நோக்கி மாற்றி அமைத்து விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. திவவின் அமைப்பு பற்றிக் கூறுமிடத்து, அதனை வடிவம் திரிந்த வளையலுடன் ஒப்பிட்டுக் கூறுகிறார். மேலும் அதில் ஓர் ஒடுக்கவழியுண்டு என்று கூறி அதன் அமைப்பினை மேலும் தெளிவாகக் கூறியுள்ளார். திவவின் புற மற்றும் அக அமைப்புமுறை பற்றி இவ்வளவு தெளிவாக வேறுயாரும் கூறவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

யாழ்நரம்பினைப் பற்றிக் குறிப்பிடுகையில், மரல்செடியின் இலைகளை வகுத்து நாரினை உரித்துப் பின்னர் அதனைப் பிசிரில்லாமல் ஒரே சீராக வடித்து இறுதியாக முறுக்கி வலுவேற்றி அதனை யாழில் பயன்படுத்துவதாகக் கூறியுள்ளார் புலவர். யாழ் நரம்புகள் எதிலிருந்து எவ்வாறு செய்யப்படுகின்றன என்பதைப் பற்றி விரிவாகக் கூறியுள்ள ஒரே புலவர் இவர் தான் என்பது ஈண்டு நோக்கற்பாலது. இந்த நரம்புகளை யாழில் கட்டும்முன்னர், அவை எழுப்பும் இசையின் சுருதி எவ்வாறு இருக்கிறது என்பதை மிகக் கவனமாகக் கேட்டறிந்த பின்னரே அதனை யாழில் கட்டுவதாக புதிய் செய்தியினை இப்புலவர் நமக்குத் தந்திருக்கிறார்.

பத்தலின் வாய்ப்பகுதியினை மூடியிருக்கும் பச்சை என்னும் தோல் பற்றிக் கூறுகையில், அதனைப் பொன்னுடன் ஒப்பிடுகிறார். இங்கே பொன் என்பது செம்பொன் ஆகிய செம்பினைக் குறிக்கும். செம்பு சிவப்புநிறத்தில் இருக்கும் என்பதால் தோலும் அதே நிறம் கொண்டதாகத் தான் இருந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. மேலும் இத் தோலின் நடுவில் இடப்பட்டுள்ள சிறுதுளைகளை வரகுப் பயிரில் கதிர்மணிகளின் ஒழுக்கத்துடன் உவமைப்படுத்திக் கூறுகிறார். அருகில் வரகுக் கதிரின் படம் இணைக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து, இத் தோலில் இரண்டு வரிசைகளில் நெருக்கமாகவும் தொடர்ச்சியாகவும் துளைகள் இடப்பட்டிருக்கவேண்டும் என்றும் துளைகள் இடப்பட்ட பகுதி சற்று உயரமாக மேடுதட்டியும் குவிந்தும் இருந்திருக்க வேண்டும் என்றும் ஊகிக்க முடிகிறது.

பெரும்பாணாற்றுப்படையிலும் இந்தத் துளைகளின் அமைப்புமுறை பற்றிக் கூறுகையில், காட்டுக்கமுகின் பாளையில் பூமொக்குகளின் ஒழுக்கத்துடன் ஒப்பிட்டுக் கூறியுள்ளது இங்கே குறிப்பிடத்தக்கது. இந்தப் பச்சையானது பத்தலின் வாய்ப்பகுதியில் நன்கு பொருந்தியிருக்குமாறு பசைகொண்டு பூசப்பட்டிருக்கும்.

பத்தல் பற்றிக் கூறும்போது, அதன் வாய்ப்பகுதியில் சிலம்பு போன்ற அமைப்பு பற்றிக் கூறுகிறார். அதாவது, காற்சிலம்புக்குள் மணி போன்ற உருண்டையான பரல்கள் வரிசையாகவும் நீள்வட்டமாகவும் அமைந்திருப்பதைப் போல பத்தலின் வாய்ப்பகுதியில் அதாவது மேல்விளிம்பில் பல உருண்டையான அமைப்புக்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. பச்சை மற்றும் போர்வையினை பத்தலுடன் பொருத்துவதற்கு ஏதுவாக இந்த மணிபோன்ற அமைப்புக்கள் உதவுகின்றன.  பத்தலின் வாய்ப்பகுதியில் அமைந்த இந்த மணிபோன்ற அமைப்புக்கள் பற்றி சிறுபாணாற்றுப்படையிலும் கூறப்பட்டுள்ளது.

பத்தலின் கீழ்ப்புறத்தில் கட்டியிருந்த போர்வையின் அழகினைப் பற்றிக் கூறுமிடத்து, அதனை அவர் உணர்த்தியிருக்கும் பாங்கு அருமையானது. பொதுவாக இரும்பினைத் தேய்க்கும் அரங்கள் பெரியதாக இருக்கும். ஆனால் பொன்னைத் தேய்க்கும் அரங்கள் நுட்பமானவை. எனவே இவற்றை ' நுணங்கு அரம் ' என்கிறார். இப்படி நுட்பமான அரம் கொண்டு தேய்த்தபின்னர் ஒளிரும் பொன்போல இந்தப் போர்வையானது ஒளிவீசுகிறது என்று உய்த்துணர வைக்கிறார். அத்துடன் நில்லாமல் அதனை களாக்கனியுடன் ஒப்பிடவும் செய்கிறார். பொதுவாகக் களாக்கனியானது ஒருபுறத்தில் மஞ்சள்நிறமும் இன்னொரு புறத்தில் சிவப்பு நிறமும் கொண்டிருக்கும். இந்தச் சிவப்பு நிறத்தைத்தான் ' கதழ்ந்து கிளர் உருவின் ' என்ற சொல்லால் நமக்கு உணர்த்துகிறார். களாக்கனியைப் போல இந்தப் பத்தலானது மேல்புறத்தில் செந்நிறத் தோலாலும் கீழ்ப்புறத்தில் மஞ்சள்நிறப் போர்வையாலும் மூடப்பட்டு இருந்திருக்கிறது.

பத்தலின் உந்தி என்னும் கீழ்நடுப்பகுதியுடன் சேர்த்துப் பொருத்தப்பட்டிருக்கின்ற போர்வையின் தோற்றம் பற்றிக் கூறுகையில், பெண்ணுக்குப் பெருமைசேர்ப்பதான அசைவுடைய அழகுவிழிகளில் வாசனை முகரும் வண்டுகள் தோன்றுவதான ஐவகையாய்ப் பூசப்பட்ட கண்ணிமைகளில் இருக்கும் மயிர் ஒழுக்கத்தினைப் போல இருப்பதாகக் கூறுகிறார். 

பெரும்பாணன் யாழ்:

பெரும்பாணனின் யாழ் அமைப்பினைப் பெரும்பாணாற்றுப்படைப் பாடல் விளக்கமாகக் கூறுகிறது. பாடலில் உள்ள விளக்கப்படி, பெரும்பாணனது யாழின் படம் அருகில் வரைந்து காட்டப்பட்டுள்ளது. யாழின் அமைப்பு பற்றிக் கூறும் பாடல் வரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

......பாசிலை ஒழித்த பராஅரை பாதிரி
வள் இதழ் மா மலர் வயிற்று இடை வகுத்ததன்
உள்ளகம் புரையும் ஊட்டுறு பச்சை
பரி அரை கமுகின் பாளை அம் பசும் பூ
கரு இருந்து அன்ன கண்கூடு செறி துளை
உருக்கி அன்ன பொருத்துறு போர்வை
சுனை வறந்து அன்ன இருள் தூங்கு வறு வாய்       
பிறை பிறந்து அன்ன பின் ஏந்து கவை கடை           
நெடும் பணை திரள் தோள் மடந்தை முன்கை   
குறும் தொடி ஏய்க்கும் மெலிந்து வீங்கு திவவின்       
மணி வார்ந்து அன்ன மா இரு மருப்பின்
பொன் வார்ந்து அன்ன புரி அடங்கு நரம்பின்... - பெரும்பாண்.

வரிவிளக்கம்:

பாசிலை ஒழித்த பராஅரை பாதிரி = பசுமையான இலைகளை உதிர்த்த பருத்த அடியுடைய பாதிரிமரத்தின்
வள் இதழ் மா மலர் வயிற்று இடை வகுத்ததன் = அழகிய பெரிய மலரின் வயிற்றின் நடுவில் அறுத்தபின் அதன்
உள்ளகம் புரையும் ஊட்டுறு பச்சை = உட்பகுதி போலத்தோன்றும் செஞ்சாயம் ஊட்டப்பட்ட தோலினையும்
உருக்கி அன்ன பொருத்துறு போர்வை = பொன்னால் வார்த்ததைப் போலத் தோன்றுகின்ற போர்வையினையும்
பரி அரை கமுகின் பாளை அம் பசும்பூ கரு இருந்தன்ன = பாக்குமரத்தின் பாளையில் பூக்களின் கரு இருந்ததைப்போல
கண்கூடு செறி துளை = நெருங்கித்தோன்றும் கண்குவிந்த சிறுதுளைகளையும்
சுனை வறந்து அன்ன இருள் தூங்கு வறு வாய் = வறண்ட சுனைபோலத் தோன்றும் இருள்மிக்க வெற்றிடத்தையும்   
பிறை பிறந்து அன்ன பின் ஏந்து கவை கடை=     பிறைச்சந்திரன் போலத் தோன்றும் கவடுபட்ட பின்பகுதியினையும்       
நெடும் பணை திரள் தோள் மடந்தை முன்கை = நீண்ட பெருத்த கண்களையுடையவளின் முன்கையில் இருக்கும்   
குறும் தொடி ஏய்க்கும் மெலிந்து வீங்கு திவவின் = வளையல்போல மெலிந்தும் பெருத்தும் உள்ள திவவினையும்       
மணி வார்ந்து அன்ன மா இரு மருப்பின் = நீலமணி போலத் தோன்றுகின்ற பெரிய கருப்புநிறத் தண்டினையும்
பொன் வார்ந்து அன்ன புரி அடங்கு நரம்பின் = பொன்னாலானதைப் போலத் தோன்றும் முறுக்குடைய நரம்புகளையும்

பொருள் விளக்கம்:

பசுமையான இலைகளை உதிர்த்த பருத்த அடிப்பகுதியினை உடைய பாதிரிமரத்தின் அழகிய பெரிய மலரின் வயிற்றின் நடுவில் அறுத்தாற்போல பொன்நிறத்தில் தோன்றி பொருந்தியுள்ள போர்வையினையும் அம்மலர்களின் உட்பகுதியைப் போல செஞ்சாயம் ஊட்டப்பட்ட தோலினையும், பாக்குமரத்தின் பாளையில் பூக்களின் கரு இருந்ததைப் போல நெருக்கமாகத் தோன்றும் கண்குவிந்த சிறுதுளைகளையும், நீரில்லாத வட்டவடிவ சுனையைப் போலத் தோன்றும் இருள்நிறைந்த வெற்றிடத்தையும் பிறைச்சந்திரனைப் போலத் தோன்றும் கவடுபட்ட பின்பகுதியினையும் உடைய பத்தலையும் நீண்ட பெருத்த கண்களையுடைய பெண்ணொருத்தி முன்னங்கையில் அணிந்திருக்கின்ற சிறு வளையல்களைப் போல மெலிந்தும் பெருத்தும் காணப்படுகின்ற திவவுகளையும் நீலமணி போலும் அழகுடன் தோன்றுகின்ற பெரிய கருப்புநிறத் தண்டினையும் பொன்னால் செய்ததைப் போலத் தோன்றுகின்ற முறுக்குடைய நரம்புகளையும் உடைய யாழினை.....

மேல்விளக்கம்:

பாடலின்படி, யாழ்ப்பத்தரின் கீழ்ப்பகுதியானது மஞ்சள்நிறப் போர்வையாலும் மேல்பகுதியானது செஞ்சாயம் ஊட்டப்பட்ட தோலினாலும் மூடப்பட்டுள்ளது. இது பார்ப்பதற்கு பாதிரிமலரின் நடுவில் அறுத்துப் பார்த்தால் வெளியே மஞ்சள்நிறமும் உள்ளே சிவப்புநிறமும் காணப்படுவதைப் போலத் தோன்றுகிறது புலவருக்கு. தோலின் மேற்பகுதியில் யாழ்நரம்புகளைக் கோர்ப்பதற்காக இரு வரிசைகளில் சிறுதுளைகள் நெருக்கமாகப் போடப்பட்டு இருக்கிறது. சிவப்பு நிறத்தில் இருந்த இத்தோலில் துளைகளைச் செய்தபோது அவை ஒருபுறத்தில் குவிந்து பார்ப்பதற்குக் காட்டுப் பாக்குமரத்தின் பாளையில் எதிரெதிர் வரிசையில் முகிழ்த்த செவ்வண்ணப் பூக்களின் கரு இருந்ததைப் போலத் தோன்றுகிறது புலவருக்கு.

பொதுவாகக் கமுகு மரமாகிய பாக்கு மரத்தில் பலவகைகள் உண்டு. இங்கே பாடலில் கூறப்படும் மரமானது காட்டுக்கமுகு என்றும் கானக்கமுகு என்றும் அழைக்கப்படுவதான பினாங்கா டிக்ஸனி என்ற தாவரப்பெயர் உடைய மரமாகும். இம்மரத்தில் பூக்கும் சிறுமலர் மொட்டுக்கள் எதிரெதிர் வரிசையில் சிவப்பு நிறத்தில் சிறிய கருவினைப் போலத் தோன்றும். அருகில் இவற்றின் படம் இணைக்கப்பட்டுள்ளது. இந்தக் கருக்களில் இருந்துதான் சிறிய வெண்ணிறப் பூக்கள் முகிழ்க்கும். சிவப்புநிறத் தோலில் இட்ட துளைகளுக்கருகில் இருக்கும் குவிந்த பகுதியானது பாக்குமரத்தின் சிவந்த மலர்மொக்குகள் போல இருப்பதாகக் கூறுகிறார். அருமையான ஒப்பீடுதான் !!.

அதுமட்டுமின்றி, பத்தலின் வடிவமைப்பினை இன்னும் தெளிவாகக் கூறுகிறார். பத்தலானது நன்கு ஆழமாகவும் வட்டமாகவும் காணப்படுகிறது. மேலும் அது கருமை நிறத்தில் இருந்ததால் அதனை நீரின்றி வறண்டு இருட்டாகக் காணப்படும் வட்டவடிவ சுனையுடன் ஒப்பிட்டுக் கூறுகிறார். பத்தலின் ஒருபகுதியானது மேல்நோக்கிய கவை போன்ற அமைப்பினைக் கொண்டிருந்ததால் அதனைப் பிறைச்சந்திரனுடன் ஒப்பிட்டுக் கூறுகிறார். இந்தக் கவைப்பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் திவவின் வளையங்கள் ஒருமுனையில் பெரிதாயும் இன்னொரு முனையில் சிறியதாயும் காணப்படுவதால் அதனைப் பெண்ணின் முன்னங்கையில் அணிந்திருக்கும் வளையல்களுடன் ஒப்பிட்டுக் கூறுகிறார். யாழின் தண்டானது கருமைநிறத்தில் பளபளப்புடன் இருப்பதால் அதனை நீலமணியுடன் ஒப்பிடுகிறார். யாழ் நரம்புகள் மஞ்சள் நிறத்தில் இருந்ததால் அவற்றைப் பொன்னிழைகளுடன் ஒப்பிடுகிறார் இப்புலவர். பொருநராற்றுப்படையில் வரும் பொருநனது யாழ்நரம்புகளை இதேபோல மஞ்சள்நிறத் தினைஅரிசி மாவின் இடியாப்ப இழைகளுடன் ஒப்பிட்டது ஈண்டு நினைவுகூரத் தக்கது.

சிறுபாணன் யாழ் அல்லது சீறியாழ்:

சிறுபாணனது யாழின் அமைப்பினைச் சிறுபாணாற்றுப்படை நூலின் கீழ்க்காணும் வரிகள் விளக்குகின்றன. அமைப்பில் சிறுபாணனின் யாழானது பெரும்பாணனின் யாழைக் காட்டிலும் வடிவில் சிறியது மட்டுமின்றி அமைப்புமுறையிலும் மாறுபட்டது. பாடல்விளக்கப்படி, சிறுபாணனது யாழின் படம் வரைந்து காட்டப்பட்டுள்ளது. யாழின் அமைப்பு பற்றிக் கூறும் பாடல்வரிகள் கீழே:

....பை கண் ஊகம் பாம்பு பிடித்து அன்ன
அம் கோட்டு செறிந்த அவிழ்ந்து வீங்கு திவவின்
மணி நிரைத்து அன்ன வனப்பின் வாய் அமைத்து
வயிறு சேர்பு ஒழுகிய வகை அமை அகளத்து
கானக் குமிழின் கனி நிறம் கடுப்ப
புகழ் வினை பொலிந்த பச்சையொடு தேம் பெய்து
அமிழ்து பொதிந்து இலிற்றும் அடங்கு புரி நரம்பின்... - சிறுபாண்.

வரிவிளக்கம்:

பை கண் ஊகம்  = இளமை மிக்க ஒளிரும் கண்களுடைய கருங்குரங்கின் குட்டியானது
பாம்பு பிடித்து அன்ன = பாம்புக் குட்டியினைப் பிடித்திருப்பதைப் போலத் தோன்றும்
அம் கோட்டு செறிந்த அவிழ்ந்து வீங்கு திவவின் = அழகிய தண்டில் செறிக்கப்பட்ட நெகிழ்ந்த பெருத்த திவவினையும்
மணி நிரைத்து அன்ன = மணிகளை வரிசையாக வைத்ததைப் போன்ற
வனப்பின் வாய் அமைத்து = அழகுடன் அமைக்கப்பட்ட வாய்ப்பகுதியினையும்
வயிறு சேர்பு ஒழுகிய = பெண்களின் மையுண்ட கண்ணிமையினைப் போல் தோற்றமும்
வகை அமை அகளத்து = நடுவில் பிரிவினையும் உடைய பத்தலினையும்
கானக் குமிழின் கனி நிறம் கடுப்ப = காட்டுக்குமிழம் பழத்தின் நிறத்தையுடையதாய்
புகழ் வினை பொலிந்த பச்சையொடு = புகழ்மிக்க வேலைப்பாட்டுடன் பொலிந்துவிளங்கும் தோலினையும்
தேம் பெய்து அமிழ்து பொதிந்து இலிற்றும் = தேனுடன் பால் கலந்தாற்போல இன்னிசை சுரக்கின்ற
அடங்கு புரி நரம்பின் = முறுக்குடைய நரம்பினையும்

பொருள் விளக்கம்:

இளமை மிக்க ஒளிரும் கண்களுடைய கருங்குரங்கின் குட்டியானது பயமின்றி ஒரு பாம்புக் குட்டியினை உயர்த்திப் பிடித்திருப்பதைப் போலத் தோன்றும் அழகிய தண்டில் செறிக்கப்பட்ட நெகிழ்ந்த பெருத்த திவவினையும் மணிகளை வரிசையாக வைத்ததைப் போன்ற அழகுடன் அமைக்கப்பட்ட வாய்ப்பகுதியினையும் பெண்களின் மையுண்ட கண்ணிமையினைப் போல் தோற்றமும் நடுவில் பிரிவினையும் உடைய பத்தலினையும் காட்டுக்குமிழம் பழத்தின் நிறத்தையுடையதாய் புகழ்மிக்க வேலைப்பாட்டுடன் பொலிந்துவிளங்கும் தோலினையும் தேனுடன் பால் கலந்தாற்போல இன்னிசை சுரக்கின்ற முறுக்குடைய நரம்பினையும்...

மேல்விளக்கம்:

கருங்குரங்கின் குட்டி ஒன்று தனது இருகைகளாலும் ஒரு சிறிய பாம்புக் குட்டியினை உயர்த்திப் பிடித்திருப்பதைப்போல யாழின் தண்டானது வளைந்திராமல் ஒரே நேர்கோட்டில் இருக்கிறது என்கிறார் புலவர். இப்பாடலில் வரும் ஊகம் என்பது பெரிய குரங்கினைக் குறித்திருக்க வாய்ப்பில்லை. காரணம், இப்பாடலில் வரும் 'பைங்கண்' என்பது இளமை மிக்க ஒளிரும் கண் என்ற பொருளில் குட்டியினைக் குறிக்கின்ற நிலையில் இளங்கன்று பயமறியாது என்பதற்கேற்ப குரங்குக் குட்டியே பயமின்றி ஒரு சிறிய பாம்புக் குட்டியினைப் பிடித்துத் தூக்கும். குரங்கு ஒன்று பாம்பினைப் பிடித்துத் தூக்கிய நிலையிலான சிற்பத்தின் படம் அருகில் காட்டப்பட்டுள்ளது. யாழ்ப்பத்தலின் இரண்டு ஓரங்களிலும் தண்டு பொருந்துகின்ற இடங்களில் திவவின் கருநிற வளையங்கள் பொருத்தப்பட்டிருப்பதால் அவை பார்ப்பதற்குக் கருங்குரங்குக் குட்டியின் வளைந்த கைவிரல்களைப் போலத் தோன்றுகிறது புலவருக்கு.

மேலும் இந்த யாழின் தண்டானது படத்தில் காட்டியுள்ளபடி, வளையாமல் ஒரே சீரான அளவில் இருந்ததாலும் அதில் பெரிய திவவு வளையங்களைப் பொருத்தியிருந்ததாலும் இந்த வளையங்கள் தண்டுடன் இறுக்கமாகப் பொருந்தாமல் சற்று நெகிழ்ந்த நிலையில் இருந்தன. எனவேதான் இவற்றை ' அவிழ்ந்து வீங்கு திவவு ' என்கிறார். பாம்பு போலிருந்த யாழ்த்தண்டின் வால்பகுதியில் மட்டும் சரியான திவவுகளைக் கொண்டு இறுக்கமாகப் பிணித்திருக்கின்றனர்.

அடுத்து பத்தலின் அமைப்பு பற்றி விளக்குகிறார். பத்தலின் மேல்பகுதி விளிம்பில் பல உருண்டை வடிவ அமைப்புக்கள் தொடர்ச்சியாக காணப்படுகின்றன. இவை கருமையாக பளபளப்புடன் இருப்பதால் பார்ப்பதற்கு நீலமணிகளை வரிசையாக வைத்தது போலத் தோன்றுகிறது. பத்தலின் வாய்ப்பகுதியுடன் போர்வை மற்றும் தோலின் விளிம்புகளைப் பொருத்துவதற்கு இந்த மணிபோன்ற அமைப்புகள் உதவிசெய்கின்றன.

பத்தலின் கீழ்ப்பகுதியானது குவிந்தநிலையில் உள்ளது. அதன்நடுவில் மான்குளம்பில் இருப்பதைப் போல ஒரு பிரிவு அல்லது கவடு இருக்கிறது. இதனை வகை என்ற சொல்லால் குறிக்கும் புலவர், பத்தலின் கீழ்ப்பகுதியானது பார்ப்பதற்கு பெண்களின் குவிந்த கண்ணிமைகளைப் போலத் தோன்றுகிறது என்கிறார். காரணம், போர்வையின் ஒரு விளிம்பானது மணிபோன்ற அமைப்புக்களுடன் பொருத்தப்பட்டிருக்க, இன்னொரு விளிம்பானது இந்தக் கவட்டுப் பகுதியுடன் சேர்த்து இழுத்துப் பொருத்தப்பட்டிருக்கிறது. இப்பாடலில் வரும் வயிறு என்ற சொல் கண்ணிமை என்ற புதிய பொருளைக் குறிக்கும். இதைப்பற்றி விரிவாக ' வயிறு என்றால் என்ன? ' என்ற கட்டுரையில் ஏற்கெனவே கண்டுள்ளோம்.

பத்தலின் மேல்பகுதியான வாயினைத் தோல்கொண்டு மூடியிருக்கின்றனர். இத்தோலில் புகழத்தக்க  வேலைப்பாட்டினைச் செய்திருப்பதாகக் கூறுகிறார் புலவர். தோலில் உள்ள அந்த வேலைப்பாடு என்னவாக இருக்கும்?. வேறென்ன, வழக்கம்போல தோலில் சிவப்பு அல்லது செம்மஞ்சள் வண்ணச் சாயம் ஊட்டியிருப்பார்கள். அதுமட்டுமின்றி காட்டுக் குமிழம் பழத்துடன் பத்தலை ஒப்பிட்டுக் கூறுகிறார். காட்டுக் குமிழம் பழத்தைப் பாதியாக அறுத்தால் புறத்தே மஞ்சள் நிறத்திலும் உள்ளே செம்மஞ்சள் நிறத்திலும் படத்தில் காட்டியபடி இருக்கும். பத்தலின் கீழ்ப்பகுதியினை மஞ்சள்நிறப் போர்வையாலும் மேல்பகுதியினை செம்மஞ்சள் நிறத் தோலாலும் மூடியிருந்ததால் அதனைக் குமிழம் பழத்துடன் ஒப்பிட்டுக் கூறியுள்ளார் புலவர்.

யாழின் நரம்புகளைப் பற்றிக் கூறுமிடத்து, அவை எழுப்பும் ஓசையானது தேனையும் பாலையும் கலந்து அருந்தினால் கிடைக்கும் இன்சுவையினைத் தந்துநிற்பதாகக் கூறுகிறார். ஆக, சிறுபாணனது யாழின் தோற்றம் பார்ப்பதற்குக் கரடுமுரடாகத் தெரிந்தாலும் அதன் ஓசையோ இனிமை மிக்கது என்கிறார் புலவர்.

முடிவுரை:

சங்ககாலத்தில் பயன்படுத்தப்பட்டப் பல்வகை யாழ்களின் அமைப்புமுறை பற்றி மேலே பட விளக்கங்களுடன் கண்டோம். முழுக்கமுழுக்க சங்க இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள பாடல்வரிகளுக்கான விளக்கத்தின் அடிப்படையில் இந்தப் படங்கள் வரையப்பட்டுள்ளன. சுவாமி விபுலானந்தர் என்பார் எழுதிய யாழ்நூலுக்கும் இதற்கும் எவ்விதத் தொடர்புமில்லை. இக்கட்டுரையில் வரும் அனைத்துப் படங்களும் வரைபடங்களும் விளக்கங்களும் முழுக்க முழுக்க இக் கட்டுரையின் ஆசிரியருக்கே உரித்தானதாகும்.

வெள்ளி, 13 ஜனவரி, 2017

திவவு என்றால் என்ன? ( தைப்பொங்கல் 2017 சிறப்புக் கட்டுரை)

முன்னுரை:

வயிறு என்றால் என்ன என்ற கட்டுரையில் திவவு என்ற சொல் குறிக்கும் புதிய பொருள் பற்றிக் கண்டோம். இக் கட்டுரையில், இச் சொல்லுக்குப் புதிய பொருள் எவ்வாறு பொருந்தும் என்றும் இப் பொருளில் இருந்து பிற பொருட்கள் எவ்வாறு தோன்றின என்றும் விரிவாகக் காணலாம்.

திவவு - தற்போதைய அகராதிப் பொருட்கள்:

திவவு என்ற சொல்லுக்குத் தற்போதைய தமிழ் அகராதிகள் காட்டும் பொருட்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

திவவு tivavu , n. 1. Bands of catgut in a yāḻ; யாழ்த்தண்டிலுள்ள நரம்புக்கட்டு. செவிநேர்பு வைத்த செய்வுறு திவவின் (திருமுரு. 140). 2. Steps cut on the sides of a mountain; மலைமேலேறும் படிக்கட்டு. (W.)

பொருள் பொருந்தா இடங்கள்:

திவவு என்ற சொல்லுக்குத் தற்போதைய அகராதிகள் யாழ்நரம்புக் கட்டு என்றும் மலையேறும் படிக்கட்டு என்றும் பொருள் கூறியிருந்தாலும் யாழ் என்னும் இசைக்கருவியினைப் பொருத்தமட்டில் யாழ்நரம்புக் கட்டு என்ற பொருளையே பாடல்களின் விளக்க உரைகளில் பயன்படுத்தி உள்ளனர். இந்தப் பொருள் பொருந்திவராத சில இலக்கியப் பாடல்களை மட்டும் இங்கே காணலாம். 

புகை முகந்து அன்ன மாசு இல் தூ உடை           
முகை வாய் அவிழ்ந்த தகை சூழ் ஆகத்து
செவி நேர்பு வைத்த செய்வுறு திவவின் நல்யாழ் - திருமு.

( பொருள்: வெள்ளாவியில் வைத்ததைப் போன்ற அழுக்கில்லாத வெண்ணிற முகத்திரை சூழ்ந்த முல்லை மொட்டு அவிழ்ந்ததைப் போலத் தோன்றும் அழகுமிக்க கண்களையுடைய பெண்ணின் செவியினைப் போன்று பொருத்தப்பட்ட செந்நிற திவவினையுடைய நல்ல யாழ் ....)

இப்பாடலில் வரும் செய் என்பது செம்மைநிறம் எனும் அகராதிப் பொருளைக் குறிக்கும். யாழ் கருவியின் திவவானது செவ்வண்ணத்தில் இருந்ததால் அதனை அழகிய பெண்களின் காதுக்கு உவமையாக்கிய புலவர் அப் பெண்டிர் அணிந்திருந்த வெண்ணிற முகத்திரையினை யாழின் பத்தலுக்குமேல் மூடியிருந்த துணியுடனும் அவரது ஒளிவீசும் வெண்ணிற விழிகளை பத்தலின் குவிந்த அடிப்பாகத்திற்கும் மறைமுகமாக உவமையாக்கி உய்த்துணர வைத்தார் என்க. இப்பாடலில் வரும் நேர்பு என்பது ஒப்பு எனும் பொருள்தரும். ( நேர்தல் = ஒத்தல் )

இப்பாடலில் வரும் திவவினைப் பெண்களின் காதுக்கு உவமையாக்கியுள்ள நிலையில், திவவு என்பதற்கு யாழ்நரம்புக் கட்டு என்று பொருள்கொள்ள முடியுமா என்றால் முடியாது. காரணம், யாழ்நரம்புகளின் கட்டுக்கும் காதுக்கும் ஒரு தொடர்புமில்லை. வடிவத்தாலோ அமைந்திருக்கின்ற இடத்தாலோ இவ் இரண்டுக்குமிடையில் எந்தவொரு ஒப்புமையும் காட்டவியலாது. யாழ்நரம்புக் கட்டானது ஒரே சீராகச் சுற்றிக் கட்டப்பட்டிருக்கும்; மேலும் அது யாழ்த்தண்டின் மேல்பகுதியில் அமைந்திருக்கும். ஆனால், செவியானது கண்களுக்கு அருகில் பக்கவாட்டில் அமைந்திருப்பது; ஒருபுறம் மெலிந்தும் இன்னொருபுறம் பெருத்தும் இருப்பது. எனவே இப்பாடலில் வரும் திவவு என்பதற்கு யாழ்நரம்புக் கட்டு என்ற பொருள் பொருந்தாது என்பது உறுதியாகிறது.

தொடி திரிவு அன்ன தொண்டு படு திவவின்    - மலைபடு.

( பொருள்: தனது இயல்பினின்று வேறுபட்ட வளையலைப் போல ஒடுக்கவழியுடைய திவவின்......)

தொடி என்பது பெண்கள் தமது முன்னங்கையில் அணியும் வளையத்தையும் குறிக்கும் என்று அறிவோம். இத்தொடியானது பொதுவாக இருபுறங்களிலும் ஒரே அளவினதாக அதாவது ஒரே விட்டம் கொண்டதாக இருந்தால்தான் அதனைப் பெண்கள் கையில் அணியமுடியும். அப்படியின்றி, ஒருபுறம் சரியான விட்டமும் மறுபுறம் அதற்குக் குறைவான விட்டமும் கொண்டதாக இருந்தால் அதனைப் பெண்கள் அணியமாட்டார்கள்; அணியவும் முடியாது. இதைத்தான் தொடி திரிதல் என்று இப்பாடல் குறிப்பிடுகிறது. இப்படி இயல்பான அளவினின்று மாறுபட்டதொரு தொடியினைப் போல ஒருபுறத்தில் பெருத்தும் இன்னொரு புறத்தில் சிறுத்தும் உட்புறத்தில் ஒரு ஒடுக்கவழியினையும் உடையதாய் இருப்பதே திவவு என்று இப்பாடல் திவவின் அமைப்பினை விளக்குகிறது. இப்பாடலில் வரும் தொண்டு என்ற சொல் ஒடுக்கவழி என்ற அகராதிப் பொருளை உணர்த்தும்.

இப்பாடலில் வரும் திவவு என்பதற்கு யாழ்நரம்புக் கட்டு என்ற பொருள் ஒருபோதும் பொருந்தாது. காரணம், திவவானது ஒருபுறம் பெருத்தும் மறுபுறம் சிறுத்தும் உள்ளே ஒரு ஒடுக்கவழி உடையதாய் இருக்கும்நிலையில், இதனை யாழ்நரம்புகளின் கட்டுடன் ஒப்பிடுவது சற்றும் பொருத்தமற்ற செயலென்று எளிதின் புரிந்துகொள்ளலாம்.

செந்திறம் புரிந்த செங்கோட்டு யாழில்
தந்திரிகரத்தொடு திவவு உறுத்து யாஅத்து - சிலப். மதுரை.

( பொருள்: செம்மை நிறத்தில் இருந்த செங்கோட்டு யாழில் தந்திரிகரத்தினைக் கட்டியும் திவவினைப் பொருத்தியும்...)

இப்பாடலில் வரும் தந்திரிகரம் என்பதற்கு செங்கோட்டு யாழின் உறுப்புக்களில் ஒன்று என்று அகராதி பொருள் கூறுகிறது. இதுதான் யாழ்நரம்புக் கட்டினைக் குறிக்கும் என்று எண்ணத் தோன்றுகிறது. காரணம் தந்திரி என்னும் சொல்லுக்கு யாழ் நரம்பு என்ற பொருளையும் கரம் என்பதற்குத் திடம் என்ற பொருளையும் அகராதி குறிப்பிடுகிறது. அவ்வகையில், தந்திரிகரம் என்பது தந்திரி + கரம் என்று பிரிந்து யாழ் நரம்புகளைத் திடமாகப் பண்ணுதல் என்று பொருள் தரும் அல்லவா. இதிலிருந்து, தந்திரிகரம் என்று அழைக்கப்படும் யாழ்நரம்புக் கட்டும் திவவு என்று அழைக்கப்படும் உறுப்பும் வேறுவேறு என்பது உறுதியாகிறது.

இதுவரை மேலே கண்டவற்றில் இருந்து, திவவு என்பது யாழ்நரம்புக் கட்டு என்ற பொருளைக் குறிக்காது என்று கண்டோம். என்றால், இச்சொல் உணர்த்தும் புதிய பொருள் என்னவென்று காணலாம்.

திவவு - புதிய பொருள் என்ன?

திவவு என்ற சொல் உணர்த்தும் புதிய பொருள்: பொருத்துவளையம்.

திவவு என்பது ஒருபொருள் போல அறியப்பட்டாலும் அது பல வளையங்களின் தொகுப்பாகும்.

நிறுவுதல்:

திவவு என்னும் சொல் உணர்த்தும் புதிய பொருளான பொருத்து வளையம் எப்படி இருக்கும் என்பதைப் பற்றியும் அது எப்படி இச்சொல்லுக்குப் பொருந்தும் என்பதைப் பற்றியும் விளக்கமாகக் கண்டு நிறுவலாம்.

திவவின் புறத்தோற்றம்:

திவவின் புறத்தோற்ற அமைப்பு எப்படி இருக்கும் என்பதனைக் கீழ்க்காணும் சில பாடல்களின் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது. யாழில் பொருத்தப்பட்ட பின்னர் திவவானது வெளியில் இருந்து பார்க்கும்போது பெண்கள் முன்னங்கையில் அணிந்திருக்கும் வளையல்களைப் போலத் தோன்றும் என்றும் அது யாழில் வலிமையாகப் பிணிப்பதற்குப் பயன்படுவது என்றும் கீழ்க்காணும் பாடலின் மூலம் அறிந்துகொள்கிறோம்.

மாயோள் முன்கை ஆய் தொடி கடுக்கும்       
கண்கூடு இருக்கை திண் பிணி திவவின் - பொருந.

( பொருள்: அழகிய பெண்ணொருத்தி முன்கையில் அணிந்திருக்கும் அழகிய வளையல்களைப் போலத் தோன்றுவதும் பத்தலுடன் கோடு ஒன்றுகூடும் இடத்தில் இருப்பதுமான வலிமையாகப் பிணிக்கின்ற திவவினையும்..)

கீழ்க்காணும் பாடலும் மேற்சொன்ன கருத்தையே கூறுகிறது. அத்துடன் நிற்காமல், திவவானது ஒருபுறம் மெலிந்தும் மறுபுறம் பெருத்தும் காணப்படும் என்று கூறுகிறது.

நெடும் பணை திரள் தோள் மடந்தை முன்கை   
குறும் தொடி ஏய்க்கும் மெலிந்து வீங்கு திவவின் - பெரும்பாண்.

( பொருள்: நெடிய திரண்ட கண்களையுடைய அப் பெண்ணின் முன்கையில் அணிந்திருக்கின்ற சிறு வளையல்கள் போலத் தோன்றுகின்ற மெலிந்து பருத்த திவவினையும்.....)

திவவானது ஒருபுறம் மெலிந்தும் மறுபுறம் பெருத்தும் காணப்படும் என்று மேற்காணும் பாடல் கூறுவதிலிருந்து, யாழில் பொருத்தப்பட்ட பின்னர், திவவானது பார்ப்பதற்கு படிக்கட்டு போலக் காணப்படும் என்பது தெரிகிறது. சில பெண்கள் தமது முன்னங்கையில் வளையல்களை அணியும்போது பலவிதமான விட்டமுடைய வளையல்களை முன்னங்கை முழுவதும் மறைக்குமாறு வரிசையாக அணிந்திருப்பர். இதுவும் பார்ப்பதற்கு ஒரு படிக்கட்டு போலத் தோன்றும். அதனால் தான் திவவினைப் பெண்களின் வளையல்களுக்கு உவமையாக்கிப் பாடியுள்ளனர் புலவர்கள். அப்படி வளையல்களை அணிந்த ஒரு பெண்ணின் படம் மேலே காட்டப்பட்டுள்ளது.

மேலும், திவவானது பாம்பைப் பிடித்திருக்கும் கருங்குரங்கின் வளைந்த விரல்களைப் போன்ற தோற்றமுடையது என்று கீழ்க்காணும் பாடல் கூறுகிறது.

பை கண் ஊகம் பாம்பு பிடித்து அன்ன
அம் கோட்டு செறிந்த அவிழ்ந்து வீங்கு திவவின் - சிறுபாண்.

( பொருள்: கருங்குரங்கு ஒன்று பாம்பினை ஒருகையினால் உயர்த்திப் பிடித்திருப்பதைப்போலத் தோன்றுகின்ற அழகிய யாழ்த் தண்டில் பொருத்தப்பட்ட பெருத்த திவவினை....)

இப்பாடலில் வரும் திவவானது கருமைநிறத்தில் இருப்பதால் அதனைக் கருங்குரங்கின் கைவிரல்களுடன் ஒப்பிடுகிறார் புலவர்.  

திவவின் அகத்தோற்றம்:

திவவானது புறத்தே ஒரு வளையம் போன்ற அமைப்பைக் கொண்டிருந்தாலும் அகத்தே ஒர் ஒடுக்கவழியினை உடையது என்று கீழ்க்காணும் பாடல் கூறுகிறது.

தொடி திரிவு அன்ன தொண்டு படு திவவின்    - மலைபடு.

( பொருள்: தனது இயல்பினின்று வேறுபட்ட வளையலைப் போல ஒடுக்கவழியுடைய திவவின்......)

பெண்கள் முன்னங்கையில் அணிகின்ற வளையலான தொடி என்பது இருபுறங்களிலும் ஒரே விட்டம் கொண்டதாகவே இருக்கும். விட்ட அளவுகள் மாறுபட்டால் அதனைப் பெண்களால் அணிய முடியாது. இதைத்தான் தொடி திரிதல் என்று இப்பாடல் குறிப்பிடுகிறது. இப்படி இயல்பான அளவினின்று மாறுபட்டதொரு தொடியினைப் போல ஒருபுறத்தில் பெருத்தும் இன்னொரு புறத்தில் சிறுத்தும் உட்புறத்தில் ஒரு ஒடுக்கவழியினையும் உடையதாய் இருப்பதே திவவு என்று இப்பாடல் திவவின் உட்புற அமைப்பினை விளக்குகிறது. இப்பாடலில் வரும் தொண்டு என்ற சொல் ஒடுக்கவழி என்ற அகராதிப் பொருளை உணர்த்தும்.

புறத்தே வளையம் போலவும் அகத்தே ஒடுக்க வழியும் கொண்டதாய் ஆக மொத்தம் திவவானது பார்ப்பதற்குக் காது போலத் தோன்றும் என்று கீழ்க்காணும் பாடல் மேலும் தெளிவாக்குகிறது.

புகை முகந்து அன்ன மாசு இல் தூ உடை           
முகை வாய் அவிழ்ந்த தகை சூழ் ஆகத்து
செவி நேர்பு வைத்த செய்வுறு திவவின் நல்யாழ் - திருமு.

( பொருள்: வெள்ளாவியில் வைத்ததைப் போன்ற அழுக்கில்லாத வெண்ணிற முகத்திரை சூழ்ந்த முல்லை மொட்டு அவிழ்ந்ததைப் போலத் தோன்றும் அழகுமிக்க கண்களையுடைய பெண்ணின் செவியினைப் போன்று பொருத்தப்பட்ட செந்நிற திவவினையுடைய நல்ல யாழ் ....)

இப்பாடலில் வரும் செய் என்பது செம்மைநிறம் எனும் அகராதிப் பொருளைக் குறிக்கும். யாழ் கருவியின் திவவானது செவ்வண்ணத்தில் இருந்ததால் மட்டும் அதனை அழகிய பெண்களின் காதுக்கு உவமையாக்கவில்லை; காதினைப் போலவே திவவும் அகத்தே ஓர் ஒடுக்கவழியினை உடையது என்பதாலும் காதினைப் போலவே திவவும் யாழ்ப்பத்தலின் பக்கவாட்டில் பொருத்தப்படுவது என்பதாலும் தான். இப்பாடலில் வரும் நேர்பு என்பது ஒப்பு எனும் பொருள்தரும். ( நேர்தல் = ஒத்தல். அகராதி காண்க. ).

அதுமட்டுமின்றி, எப்படிக் காதைப் பிடித்துத் திருகுவார்களோ அதைப்போல திவவினையும் திருகித்திருகித்தான் தண்டில் ஏற்றவேண்டும். அப்போதுதான் அது தண்டினை வலிமையாகப் பிணிக்கும். இப்படி திவவினைப் பலமுறைத் திருகித்திருகி ஏற்றியதால் விரல் வலித்ததைப் பற்றிக் கீழ்க்காணும் பாடல் கூறுகிறது.

ஒள் உறை நீக்கி ஒளி பெற துடைத்து
வன் பிணி திவவு வழிவயின் இறுத்த
மெல் விரல் நோவ பல்கால் ஏற்றி ஆற்றாள் ஆகி ...- பெருங். மகத.14

( பொருள்: பளபளக்கின்ற மேலுறையினைக் களைந்தபின் ஒளிவீசுமாறு யாழினை நன்கு துடைத்து வலிதாகப் பிணிக்கின்ற திவவினை தண்டின் வழியாக ஏற்றிமுடிக்கப் பலமுறை ஏற்றியதால் தனது மெல்லிய விரல்கள் நோவெடுக்கத் தாங்கமாட்டாதவளாய் ..... )

பிற இடங்களில் திவவு:

இதுகாறும் திவவின் அமைப்பு பற்றி விரிவாகக் கண்டோம். இனி, திவவு என்ற சொல் பயிலும் பிற இடங்களையும் அவ் இடங்களில் திவவிற்கான புதிய பொருள் எப்படிப் பொருந்துகிறது என்பதைப் பற்றியும் இங்கே காணலாம்.

அழியா விழவின் இழியா திவவின்
வயிரிய மாக்கள் பண் அமைத்து ... - பதிற்.29

( பொருள்: விழா தொடர்ந்து நடைபெற்றதால் திவவினைக் கழற்றாத வயிரியர்கள் யாழில் இசையமைத்து...)

பொதுவாக யாழின் தண்டானது பத்தலுடன் பொருத்தப்பட்ட நிலையில் உயரமாகவும் வளைந்தும் காணப்படுவதால், வயிரியர்கள் ஓரிடத்தில் இருந்து இன்னோரிடம் செல்லும்போது அப்படியே கொண்டுசெல்ல மாட்டார்கள். காரணம், அது மிகப்பெரியதாய் இருக்கும். எனவே முதலில் பத்தலில் இருந்து தண்டினைக் கழற்றுவார்கள். அதற்குத் திவவின் வளையங்களைக் கழற்றவேண்டும். தண்டினைக் கழற்றியபின்னர் அதில் நரம்புகளை அப்படியே சுற்றிவைத்துக் கொள்வார்கள். இப்போது யாழின் அளவு சிறியதாகிவிடும்; கொண்டுசெல்வதும் அவர்களுக்குக் கடினமாயிராது. 

திவவு மெய்நிறுத்து செவ்வழி பண்ணி
குரல் புணர் நல் யாழ் முழவோடு ஒன்றி - மதுரை.

( பொருள்: திவவினை நிலைநிறுத்தி யாழில் எழுப்பிய செவ்வழிப் பண்ணின் குரல் ஓசையானது முழவின் ஓசையுடன் ஒன்றிட...)

பண் மொழி நரம்பின் திவவு யாழ் மிழற்றி
பெண்மையில் திரியும் பெற்றியும் உண்டு என - சிலப்.புகார்.

( பொருள்: பண்ணிசைக்கும் நரம்பினையும் திவவினையும் உடைய யாழினைப் போல பேசுகின்ற பெண்மையில் மாறுபடுகின்ற தன்மையும் உண்டு என...)

விளக்கு அழல் உறுத்த போலும் விசியுறு போர்வை தீம் தேன்
துளக்கு அற ஒழுகி அன்ன துய்யற திரண்ட திண் கோல்
கொளத்தகு திவவு திங்கள் கோள் நிரைத்து அனைய ஆணி
அளப்ப அரும் சுவை கொள் நல் யாழ் ஆயிரம் அமைக என்றான் - சிந்தா. 559

( பொருள்: விளக்குச்சுடர் போலச் செவ்வண்ணத்தில் தோன்றுகின்ற இழுத்துக்கட்டிய போர்வையும் இனிய தேனின் ஒழுக்கானது அசைவற்று நிற்பதைப் போல பிசிர் இல்லாத வழுவழுப்பான திரண்ட திண்ணிய தண்டினையும் அதில் பொருத்தக்கூடிய திவவினையும் நிலவினை வரிசையாக நிறுத்தியதைப் போன்று ஒளிவீசுகின்ற பல ஆணிகளையும் உடையதும் அளவில்லா இசையின்பம் தருவதுமான யாழ்கள் ஆயிரம் அமையட்டும் என்றான்....)

இப்பாடலில் வரும் யாழின் தண்டினை தேன் ஒழுக்குடன் உவமை கூறியிருப்பதில் இருந்து, இந்த யாழின் தண்டானது தேன் வண்ணத்தில் பளபளப்புடன் இருந்திருக்கும் என்று தெரிகிறது.

பொன் இழை மாதர் தா என கொண்டு
திண்ணிய ஆக திவவு நிலை நிறீஇ
பண் அறிவுறுத்தற்கு பையென தீண்டி
சுவைப்பட நின்றமை அறிந்தே பொருக்கென
பகை நரம்பு எறிந்து மிகையுற படூஉம்
எள்ளல் குறிப்பினை உள்ளகத்து அடக்கி
கோடும் பத்தலும் சேடு அமை போர்வையும்
மருங்குலும் புறமும் திருந்து துறை திவவும்..... - பெருங்.மகத.14

( பொருள்: பொன் அணிந்த பெண்களே ! தாருங்கள் என்று கேட்டுவாங்கி திவவினை வலிமையாக நிலைநிறுத்திப் பண்ணிசைக்கக் கற்றுத்தரவேண்டி நரம்பினை மெல்லெனத் தீண்டவும் அதை ரசித்தவாறு அவர்கள் நிற்பதைப் பார்த்து அவசரப்பட்டுப் பகைநரம்பினைத் தவறாக மீட்டவும் அதனை அவர்கள் எள்ளியதைக் குறிப்பால் அறிந்து மனத்தடக்கித் தண்டினையும் பத்தலையும் அழகுமிகு போர்வையினையும் தண்டின் உடலினைப் பத்தலின் புறத்துடன் இணைத்திருக்கின்ற அழகுமிக்க பகுதியான திவவினையும் ..... )

தீம் தொடை பேரியாழ் திவவொடு கொளீஇ
யாப்புறு புரி ஞாண் வீக்கு முதல் அவிழ - பெருங்.உஞ்சை.52

( பொருள்: திவவினைப் பொருத்திய பேரியாழில் இன்னிசை மீட்டவும் இறுக்கமாகக் கட்டிய முறுக்கு நரம்பின் மேல்முடிச்சு அவிழ்ந்து ..... )

முடிவுரை:

இதுகாறும் கண்டதிலிருந்து, இலக்கியங்களில் வரும் திவவு என்பது பொருத்து வளையம் என்ற பொருளையே துவக்கத்தில் குறித்து வந்துள்ளது என்பதை அறிந்துகொண்டோம். திவவினைப் பொருத்தியபின்னர், ஒருபுறம் அது பெரியதாயும் மறுபுறம் அது சிறியதாயும் பல படிநிலைகளில் இருப்பதால்தான் திவவு என்ற சொல்லுக்கு ' மலையேறும் படிக்கட்டு ' என்ற பொருளும் பின்னாளில் தோன்றியிருக்க வேண்டும் என்று தெரிகிறது.

திவவு என்பது யாழின் பல்வேறு உறுப்புக்களில் ஒன்றென்றாலும் மிக இன்றியமையாத உறுப்பாக விளங்குகிறது. காற்றடைத்த ஊதுபை (பலூன்) எவ்வளவு பெரியதாக இருந்தாலும் அது உருக்குலையாமல் இருக்க உதவுவது அதன் முனையில் கட்டப்படும் மிகச்சிறிய நூல் தான். அதைப்போல யாழ் எவ்வளவு பெரியதாக இருந்தாலும் அதன் வடிவம் குலையாமல் காப்பதும் சரியான இசையை உருவாக்க உதவுவதும் மிகச்சிறிய திவவுதான். திவவு பற்றி மேலும் தெளிவாகப் புரிந்துகொள்ள யாழ்களைப் பற்றி அறிந்துகொள்வது அவசியமாகிறது. சங்ககாலத்தில் பயன்படுத்தப்பட்ட பல்வகை யாழ்களின் அமைப்புமுறை பற்றித் தனிக்கட்டுரையில் விரிவாகக் காணலாம்.