வெள்ளி, 13 ஜனவரி, 2017

திவவு என்றால் என்ன? ( தைப்பொங்கல் 2017 சிறப்புக் கட்டுரை)

முன்னுரை:

வயிறு என்றால் என்ன என்ற கட்டுரையில் திவவு என்ற சொல் குறிக்கும் புதிய பொருள் பற்றிக் கண்டோம். இக் கட்டுரையில், இச் சொல்லுக்குப் புதிய பொருள் எவ்வாறு பொருந்தும் என்றும் இப் பொருளில் இருந்து பிற பொருட்கள் எவ்வாறு தோன்றின என்றும் விரிவாகக் காணலாம்.

திவவு - தற்போதைய அகராதிப் பொருட்கள்:

திவவு என்ற சொல்லுக்குத் தற்போதைய தமிழ் அகராதிகள் காட்டும் பொருட்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

திவவு tivavu , n. 1. Bands of catgut in a yāḻ; யாழ்த்தண்டிலுள்ள நரம்புக்கட்டு. செவிநேர்பு வைத்த செய்வுறு திவவின் (திருமுரு. 140). 2. Steps cut on the sides of a mountain; மலைமேலேறும் படிக்கட்டு. (W.)

பொருள் பொருந்தா இடங்கள்:

திவவு என்ற சொல்லுக்குத் தற்போதைய அகராதிகள் யாழ்நரம்புக் கட்டு என்றும் மலையேறும் படிக்கட்டு என்றும் பொருள் கூறியிருந்தாலும் யாழ் என்னும் இசைக்கருவியினைப் பொருத்தமட்டில் யாழ்நரம்புக் கட்டு என்ற பொருளையே பாடல்களின் விளக்க உரைகளில் பயன்படுத்தி உள்ளனர். இந்தப் பொருள் பொருந்திவராத சில இலக்கியப் பாடல்களை மட்டும் இங்கே காணலாம். 

புகை முகந்து அன்ன மாசு இல் தூ உடை           
முகை வாய் அவிழ்ந்த தகை சூழ் ஆகத்து
செவி நேர்பு வைத்த செய்வுறு திவவின் நல்யாழ் - திருமு.

( பொருள்: வெள்ளாவியில் வைத்ததைப் போன்ற அழுக்கில்லாத வெண்ணிற முகத்திரை சூழ்ந்த முல்லை மொட்டு அவிழ்ந்ததைப் போலத் தோன்றும் அழகுமிக்க கண்களையுடைய பெண்ணின் செவியினைப் போன்று பொருத்தப்பட்ட செந்நிற திவவினையுடைய நல்ல யாழ் ....)

இப்பாடலில் வரும் செய் என்பது செம்மைநிறம் எனும் அகராதிப் பொருளைக் குறிக்கும். யாழ் கருவியின் திவவானது செவ்வண்ணத்தில் இருந்ததால் அதனை அழகிய பெண்களின் காதுக்கு உவமையாக்கிய புலவர் அப் பெண்டிர் அணிந்திருந்த வெண்ணிற முகத்திரையினை யாழின் பத்தலுக்குமேல் மூடியிருந்த துணியுடனும் அவரது ஒளிவீசும் வெண்ணிற விழிகளை பத்தலின் குவிந்த அடிப்பாகத்திற்கும் மறைமுகமாக உவமையாக்கி உய்த்துணர வைத்தார் என்க. இப்பாடலில் வரும் நேர்பு என்பது ஒப்பு எனும் பொருள்தரும். ( நேர்தல் = ஒத்தல் )

இப்பாடலில் வரும் திவவினைப் பெண்களின் காதுக்கு உவமையாக்கியுள்ள நிலையில், திவவு என்பதற்கு யாழ்நரம்புக் கட்டு என்று பொருள்கொள்ள முடியுமா என்றால் முடியாது. காரணம், யாழ்நரம்புகளின் கட்டுக்கும் காதுக்கும் ஒரு தொடர்புமில்லை. வடிவத்தாலோ அமைந்திருக்கின்ற இடத்தாலோ இவ் இரண்டுக்குமிடையில் எந்தவொரு ஒப்புமையும் காட்டவியலாது. யாழ்நரம்புக் கட்டானது ஒரே சீராகச் சுற்றிக் கட்டப்பட்டிருக்கும்; மேலும் அது யாழ்த்தண்டின் மேல்பகுதியில் அமைந்திருக்கும். ஆனால், செவியானது கண்களுக்கு அருகில் பக்கவாட்டில் அமைந்திருப்பது; ஒருபுறம் மெலிந்தும் இன்னொருபுறம் பெருத்தும் இருப்பது. எனவே இப்பாடலில் வரும் திவவு என்பதற்கு யாழ்நரம்புக் கட்டு என்ற பொருள் பொருந்தாது என்பது உறுதியாகிறது.

தொடி திரிவு அன்ன தொண்டு படு திவவின்    - மலைபடு.

( பொருள்: தனது இயல்பினின்று வேறுபட்ட வளையலைப் போல ஒடுக்கவழியுடைய திவவின்......)

தொடி என்பது பெண்கள் தமது முன்னங்கையில் அணியும் வளையத்தையும் குறிக்கும் என்று அறிவோம். இத்தொடியானது பொதுவாக இருபுறங்களிலும் ஒரே அளவினதாக அதாவது ஒரே விட்டம் கொண்டதாக இருந்தால்தான் அதனைப் பெண்கள் கையில் அணியமுடியும். அப்படியின்றி, ஒருபுறம் சரியான விட்டமும் மறுபுறம் அதற்குக் குறைவான விட்டமும் கொண்டதாக இருந்தால் அதனைப் பெண்கள் அணியமாட்டார்கள்; அணியவும் முடியாது. இதைத்தான் தொடி திரிதல் என்று இப்பாடல் குறிப்பிடுகிறது. இப்படி இயல்பான அளவினின்று மாறுபட்டதொரு தொடியினைப் போல ஒருபுறத்தில் பெருத்தும் இன்னொரு புறத்தில் சிறுத்தும் உட்புறத்தில் ஒரு ஒடுக்கவழியினையும் உடையதாய் இருப்பதே திவவு என்று இப்பாடல் திவவின் அமைப்பினை விளக்குகிறது. இப்பாடலில் வரும் தொண்டு என்ற சொல் ஒடுக்கவழி என்ற அகராதிப் பொருளை உணர்த்தும்.

இப்பாடலில் வரும் திவவு என்பதற்கு யாழ்நரம்புக் கட்டு என்ற பொருள் ஒருபோதும் பொருந்தாது. காரணம், திவவானது ஒருபுறம் பெருத்தும் மறுபுறம் சிறுத்தும் உள்ளே ஒரு ஒடுக்கவழி உடையதாய் இருக்கும்நிலையில், இதனை யாழ்நரம்புகளின் கட்டுடன் ஒப்பிடுவது சற்றும் பொருத்தமற்ற செயலென்று எளிதின் புரிந்துகொள்ளலாம்.

செந்திறம் புரிந்த செங்கோட்டு யாழில்
தந்திரிகரத்தொடு திவவு உறுத்து யாஅத்து - சிலப். மதுரை.

( பொருள்: செம்மை நிறத்தில் இருந்த செங்கோட்டு யாழில் தந்திரிகரத்தினைக் கட்டியும் திவவினைப் பொருத்தியும்...)

இப்பாடலில் வரும் தந்திரிகரம் என்பதற்கு செங்கோட்டு யாழின் உறுப்புக்களில் ஒன்று என்று அகராதி பொருள் கூறுகிறது. இதுதான் யாழ்நரம்புக் கட்டினைக் குறிக்கும் என்று எண்ணத் தோன்றுகிறது. காரணம் தந்திரி என்னும் சொல்லுக்கு யாழ் நரம்பு என்ற பொருளையும் கரம் என்பதற்குத் திடம் என்ற பொருளையும் அகராதி குறிப்பிடுகிறது. அவ்வகையில், தந்திரிகரம் என்பது தந்திரி + கரம் என்று பிரிந்து யாழ் நரம்புகளைத் திடமாகப் பண்ணுதல் என்று பொருள் தரும் அல்லவா. இதிலிருந்து, தந்திரிகரம் என்று அழைக்கப்படும் யாழ்நரம்புக் கட்டும் திவவு என்று அழைக்கப்படும் உறுப்பும் வேறுவேறு என்பது உறுதியாகிறது.

இதுவரை மேலே கண்டவற்றில் இருந்து, திவவு என்பது யாழ்நரம்புக் கட்டு என்ற பொருளைக் குறிக்காது என்று கண்டோம். என்றால், இச்சொல் உணர்த்தும் புதிய பொருள் என்னவென்று காணலாம்.

திவவு - புதிய பொருள் என்ன?

திவவு என்ற சொல் உணர்த்தும் புதிய பொருள்: பொருத்துவளையம்.

திவவு என்பது ஒருபொருள் போல அறியப்பட்டாலும் அது பல வளையங்களின் தொகுப்பாகும்.

நிறுவுதல்:

திவவு என்னும் சொல் உணர்த்தும் புதிய பொருளான பொருத்து வளையம் எப்படி இருக்கும் என்பதைப் பற்றியும் அது எப்படி இச்சொல்லுக்குப் பொருந்தும் என்பதைப் பற்றியும் விளக்கமாகக் கண்டு நிறுவலாம்.

திவவின் புறத்தோற்றம்:

திவவின் புறத்தோற்ற அமைப்பு எப்படி இருக்கும் என்பதனைக் கீழ்க்காணும் சில பாடல்களின் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது. யாழில் பொருத்தப்பட்ட பின்னர் திவவானது வெளியில் இருந்து பார்க்கும்போது பெண்கள் முன்னங்கையில் அணிந்திருக்கும் வளையல்களைப் போலத் தோன்றும் என்றும் அது யாழில் வலிமையாகப் பிணிப்பதற்குப் பயன்படுவது என்றும் கீழ்க்காணும் பாடலின் மூலம் அறிந்துகொள்கிறோம்.

மாயோள் முன்கை ஆய் தொடி கடுக்கும்       
கண்கூடு இருக்கை திண் பிணி திவவின் - பொருந.

( பொருள்: அழகிய பெண்ணொருத்தி முன்கையில் அணிந்திருக்கும் அழகிய வளையல்களைப் போலத் தோன்றுவதும் பத்தலுடன் கோடு ஒன்றுகூடும் இடத்தில் இருப்பதுமான வலிமையாகப் பிணிக்கின்ற திவவினையும்..)

கீழ்க்காணும் பாடலும் மேற்சொன்ன கருத்தையே கூறுகிறது. அத்துடன் நிற்காமல், திவவானது ஒருபுறம் மெலிந்தும் மறுபுறம் பெருத்தும் காணப்படும் என்று கூறுகிறது.

நெடும் பணை திரள் தோள் மடந்தை முன்கை   
குறும் தொடி ஏய்க்கும் மெலிந்து வீங்கு திவவின் - பெரும்பாண்.

( பொருள்: நெடிய திரண்ட கண்களையுடைய அப் பெண்ணின் முன்கையில் அணிந்திருக்கின்ற சிறு வளையல்கள் போலத் தோன்றுகின்ற மெலிந்து பருத்த திவவினையும்.....)

திவவானது ஒருபுறம் மெலிந்தும் மறுபுறம் பெருத்தும் காணப்படும் என்று மேற்காணும் பாடல் கூறுவதிலிருந்து, யாழில் பொருத்தப்பட்ட பின்னர், திவவானது பார்ப்பதற்கு படிக்கட்டு போலக் காணப்படும் என்பது தெரிகிறது. சில பெண்கள் தமது முன்னங்கையில் வளையல்களை அணியும்போது பலவிதமான விட்டமுடைய வளையல்களை முன்னங்கை முழுவதும் மறைக்குமாறு வரிசையாக அணிந்திருப்பர். இதுவும் பார்ப்பதற்கு ஒரு படிக்கட்டு போலத் தோன்றும். அதனால் தான் திவவினைப் பெண்களின் வளையல்களுக்கு உவமையாக்கிப் பாடியுள்ளனர் புலவர்கள். அப்படி வளையல்களை அணிந்த ஒரு பெண்ணின் படம் மேலே காட்டப்பட்டுள்ளது.

மேலும், திவவானது பாம்பைப் பிடித்திருக்கும் கருங்குரங்கின் வளைந்த விரல்களைப் போன்ற தோற்றமுடையது என்று கீழ்க்காணும் பாடல் கூறுகிறது.

பை கண் ஊகம் பாம்பு பிடித்து அன்ன
அம் கோட்டு செறிந்த அவிழ்ந்து வீங்கு திவவின் - சிறுபாண்.

( பொருள்: கருங்குரங்கு ஒன்று பாம்பினை ஒருகையினால் உயர்த்திப் பிடித்திருப்பதைப்போலத் தோன்றுகின்ற அழகிய யாழ்த் தண்டில் பொருத்தப்பட்ட பெருத்த திவவினை....)

இப்பாடலில் வரும் திவவானது கருமைநிறத்தில் இருப்பதால் அதனைக் கருங்குரங்கின் கைவிரல்களுடன் ஒப்பிடுகிறார் புலவர்.  

திவவின் அகத்தோற்றம்:

திவவானது புறத்தே ஒரு வளையம் போன்ற அமைப்பைக் கொண்டிருந்தாலும் அகத்தே ஒர் ஒடுக்கவழியினை உடையது என்று கீழ்க்காணும் பாடல் கூறுகிறது.

தொடி திரிவு அன்ன தொண்டு படு திவவின்    - மலைபடு.

( பொருள்: தனது இயல்பினின்று வேறுபட்ட வளையலைப் போல ஒடுக்கவழியுடைய திவவின்......)

பெண்கள் முன்னங்கையில் அணிகின்ற வளையலான தொடி என்பது இருபுறங்களிலும் ஒரே விட்டம் கொண்டதாகவே இருக்கும். விட்ட அளவுகள் மாறுபட்டால் அதனைப் பெண்களால் அணிய முடியாது. இதைத்தான் தொடி திரிதல் என்று இப்பாடல் குறிப்பிடுகிறது. இப்படி இயல்பான அளவினின்று மாறுபட்டதொரு தொடியினைப் போல ஒருபுறத்தில் பெருத்தும் இன்னொரு புறத்தில் சிறுத்தும் உட்புறத்தில் ஒரு ஒடுக்கவழியினையும் உடையதாய் இருப்பதே திவவு என்று இப்பாடல் திவவின் உட்புற அமைப்பினை விளக்குகிறது. இப்பாடலில் வரும் தொண்டு என்ற சொல் ஒடுக்கவழி என்ற அகராதிப் பொருளை உணர்த்தும்.

புறத்தே வளையம் போலவும் அகத்தே ஒடுக்க வழியும் கொண்டதாய் ஆக மொத்தம் திவவானது பார்ப்பதற்குக் காது போலத் தோன்றும் என்று கீழ்க்காணும் பாடல் மேலும் தெளிவாக்குகிறது.

புகை முகந்து அன்ன மாசு இல் தூ உடை           
முகை வாய் அவிழ்ந்த தகை சூழ் ஆகத்து
செவி நேர்பு வைத்த செய்வுறு திவவின் நல்யாழ் - திருமு.

( பொருள்: வெள்ளாவியில் வைத்ததைப் போன்ற அழுக்கில்லாத வெண்ணிற முகத்திரை சூழ்ந்த முல்லை மொட்டு அவிழ்ந்ததைப் போலத் தோன்றும் அழகுமிக்க கண்களையுடைய பெண்ணின் செவியினைப் போன்று பொருத்தப்பட்ட செந்நிற திவவினையுடைய நல்ல யாழ் ....)

இப்பாடலில் வரும் செய் என்பது செம்மைநிறம் எனும் அகராதிப் பொருளைக் குறிக்கும். யாழ் கருவியின் திவவானது செவ்வண்ணத்தில் இருந்ததால் மட்டும் அதனை அழகிய பெண்களின் காதுக்கு உவமையாக்கவில்லை; காதினைப் போலவே திவவும் அகத்தே ஓர் ஒடுக்கவழியினை உடையது என்பதாலும் காதினைப் போலவே திவவும் யாழ்ப்பத்தலின் பக்கவாட்டில் பொருத்தப்படுவது என்பதாலும் தான். இப்பாடலில் வரும் நேர்பு என்பது ஒப்பு எனும் பொருள்தரும். ( நேர்தல் = ஒத்தல். அகராதி காண்க. ).

அதுமட்டுமின்றி, எப்படிக் காதைப் பிடித்துத் திருகுவார்களோ அதைப்போல திவவினையும் திருகித்திருகித்தான் தண்டில் ஏற்றவேண்டும். அப்போதுதான் அது தண்டினை வலிமையாகப் பிணிக்கும். இப்படி திவவினைப் பலமுறைத் திருகித்திருகி ஏற்றியதால் விரல் வலித்ததைப் பற்றிக் கீழ்க்காணும் பாடல் கூறுகிறது.

ஒள் உறை நீக்கி ஒளி பெற துடைத்து
வன் பிணி திவவு வழிவயின் இறுத்த
மெல் விரல் நோவ பல்கால் ஏற்றி ஆற்றாள் ஆகி ...- பெருங். மகத.14

( பொருள்: பளபளக்கின்ற மேலுறையினைக் களைந்தபின் ஒளிவீசுமாறு யாழினை நன்கு துடைத்து வலிதாகப் பிணிக்கின்ற திவவினை தண்டின் வழியாக ஏற்றிமுடிக்கப் பலமுறை ஏற்றியதால் தனது மெல்லிய விரல்கள் நோவெடுக்கத் தாங்கமாட்டாதவளாய் ..... )

பிற இடங்களில் திவவு:

இதுகாறும் திவவின் அமைப்பு பற்றி விரிவாகக் கண்டோம். இனி, திவவு என்ற சொல் பயிலும் பிற இடங்களையும் அவ் இடங்களில் திவவிற்கான புதிய பொருள் எப்படிப் பொருந்துகிறது என்பதைப் பற்றியும் இங்கே காணலாம்.

அழியா விழவின் இழியா திவவின்
வயிரிய மாக்கள் பண் அமைத்து ... - பதிற்.29

( பொருள்: விழா தொடர்ந்து நடைபெற்றதால் திவவினைக் கழற்றாத வயிரியர்கள் யாழில் இசையமைத்து...)

பொதுவாக யாழின் தண்டானது பத்தலுடன் பொருத்தப்பட்ட நிலையில் உயரமாகவும் வளைந்தும் காணப்படுவதால், வயிரியர்கள் ஓரிடத்தில் இருந்து இன்னோரிடம் செல்லும்போது அப்படியே கொண்டுசெல்ல மாட்டார்கள். காரணம், அது மிகப்பெரியதாய் இருக்கும். எனவே முதலில் பத்தலில் இருந்து தண்டினைக் கழற்றுவார்கள். அதற்குத் திவவின் வளையங்களைக் கழற்றவேண்டும். தண்டினைக் கழற்றியபின்னர் அதில் நரம்புகளை அப்படியே சுற்றிவைத்துக் கொள்வார்கள். இப்போது யாழின் அளவு சிறியதாகிவிடும்; கொண்டுசெல்வதும் அவர்களுக்குக் கடினமாயிராது. 

திவவு மெய்நிறுத்து செவ்வழி பண்ணி
குரல் புணர் நல் யாழ் முழவோடு ஒன்றி - மதுரை.

( பொருள்: திவவினை நிலைநிறுத்தி யாழில் எழுப்பிய செவ்வழிப் பண்ணின் குரல் ஓசையானது முழவின் ஓசையுடன் ஒன்றிட...)

பண் மொழி நரம்பின் திவவு யாழ் மிழற்றி
பெண்மையில் திரியும் பெற்றியும் உண்டு என - சிலப்.புகார்.

( பொருள்: பண்ணிசைக்கும் நரம்பினையும் திவவினையும் உடைய யாழினைப் போல பேசுகின்ற பெண்மையில் மாறுபடுகின்ற தன்மையும் உண்டு என...)

விளக்கு அழல் உறுத்த போலும் விசியுறு போர்வை தீம் தேன்
துளக்கு அற ஒழுகி அன்ன துய்யற திரண்ட திண் கோல்
கொளத்தகு திவவு திங்கள் கோள் நிரைத்து அனைய ஆணி
அளப்ப அரும் சுவை கொள் நல் யாழ் ஆயிரம் அமைக என்றான் - சிந்தா. 559

( பொருள்: விளக்குச்சுடர் போலச் செவ்வண்ணத்தில் தோன்றுகின்ற இழுத்துக்கட்டிய போர்வையும் இனிய தேனின் ஒழுக்கானது அசைவற்று நிற்பதைப் போல பிசிர் இல்லாத வழுவழுப்பான திரண்ட திண்ணிய தண்டினையும் அதில் பொருத்தக்கூடிய திவவினையும் நிலவினை வரிசையாக நிறுத்தியதைப் போன்று ஒளிவீசுகின்ற பல ஆணிகளையும் உடையதும் அளவில்லா இசையின்பம் தருவதுமான யாழ்கள் ஆயிரம் அமையட்டும் என்றான்....)

இப்பாடலில் வரும் யாழின் தண்டினை தேன் ஒழுக்குடன் உவமை கூறியிருப்பதில் இருந்து, இந்த யாழின் தண்டானது தேன் வண்ணத்தில் பளபளப்புடன் இருந்திருக்கும் என்று தெரிகிறது.

பொன் இழை மாதர் தா என கொண்டு
திண்ணிய ஆக திவவு நிலை நிறீஇ
பண் அறிவுறுத்தற்கு பையென தீண்டி
சுவைப்பட நின்றமை அறிந்தே பொருக்கென
பகை நரம்பு எறிந்து மிகையுற படூஉம்
எள்ளல் குறிப்பினை உள்ளகத்து அடக்கி
கோடும் பத்தலும் சேடு அமை போர்வையும்
மருங்குலும் புறமும் திருந்து துறை திவவும்..... - பெருங்.மகத.14

( பொருள்: பொன் அணிந்த பெண்களே ! தாருங்கள் என்று கேட்டுவாங்கி திவவினை வலிமையாக நிலைநிறுத்திப் பண்ணிசைக்கக் கற்றுத்தரவேண்டி நரம்பினை மெல்லெனத் தீண்டவும் அதை ரசித்தவாறு அவர்கள் நிற்பதைப் பார்த்து அவசரப்பட்டுப் பகைநரம்பினைத் தவறாக மீட்டவும் அதனை அவர்கள் எள்ளியதைக் குறிப்பால் அறிந்து மனத்தடக்கித் தண்டினையும் பத்தலையும் அழகுமிகு போர்வையினையும் தண்டின் உடலினைப் பத்தலின் புறத்துடன் இணைத்திருக்கின்ற அழகுமிக்க பகுதியான திவவினையும் ..... )

தீம் தொடை பேரியாழ் திவவொடு கொளீஇ
யாப்புறு புரி ஞாண் வீக்கு முதல் அவிழ - பெருங்.உஞ்சை.52

( பொருள்: திவவினைப் பொருத்திய பேரியாழில் இன்னிசை மீட்டவும் இறுக்கமாகக் கட்டிய முறுக்கு நரம்பின் மேல்முடிச்சு அவிழ்ந்து ..... )

முடிவுரை:

இதுகாறும் கண்டதிலிருந்து, இலக்கியங்களில் வரும் திவவு என்பது பொருத்து வளையம் என்ற பொருளையே துவக்கத்தில் குறித்து வந்துள்ளது என்பதை அறிந்துகொண்டோம். திவவினைப் பொருத்தியபின்னர், ஒருபுறம் அது பெரியதாயும் மறுபுறம் அது சிறியதாயும் பல படிநிலைகளில் இருப்பதால்தான் திவவு என்ற சொல்லுக்கு ' மலையேறும் படிக்கட்டு ' என்ற பொருளும் பின்னாளில் தோன்றியிருக்க வேண்டும் என்று தெரிகிறது.

திவவு என்பது யாழின் பல்வேறு உறுப்புக்களில் ஒன்றென்றாலும் மிக இன்றியமையாத உறுப்பாக விளங்குகிறது. காற்றடைத்த ஊதுபை (பலூன்) எவ்வளவு பெரியதாக இருந்தாலும் அது உருக்குலையாமல் இருக்க உதவுவது அதன் முனையில் கட்டப்படும் மிகச்சிறிய நூல் தான். அதைப்போல யாழ் எவ்வளவு பெரியதாக இருந்தாலும் அதன் வடிவம் குலையாமல் காப்பதும் சரியான இசையை உருவாக்க உதவுவதும் மிகச்சிறிய திவவுதான். திவவு பற்றி மேலும் தெளிவாகப் புரிந்துகொள்ள யாழ்களைப் பற்றி அறிந்துகொள்வது அவசியமாகிறது. சங்ககாலத்தில் பயன்படுத்தப்பட்ட பல்வகை யாழ்களின் அமைப்புமுறை பற்றித் தனிக்கட்டுரையில் விரிவாகக் காணலாம்.

4 கருத்துகள்:

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.