வியாழன், 16 பிப்ரவரி, 2017

இமயம் வென்ற தமிழன் (இமயமலையும் தமிழர்களும் நிறைவுப்பகுதி)

முன்னுரை:

இன்றைய இந்தியாவின் தெற்குக் கடைக்கோடியில் வாழ்ந்துவருகின்ற தமிழனமானது ஒருகாலத்தில் இந்தியா முழுவதிலும் கோலோச்சி வந்தது. கங்கை ஆற்று நாகரீகம் தமிழன் கண்டறிந்த ஒன்றேயாகும். மேற்கே ராஜஸ்தானிலிருந்து கிழக்கே வங்காள விரிகுடா வரையிலும் தெற்கே பரந்துபட்ட ஓர் தேயமாக விளங்கியது தான் தொல்தமிழகம் என்று குறிப்பிடப்படுவதான பண்டைய தமிழகமாகும். இந்த தொல்தமிழகத்தைப் பற்றிய மேலதிக செய்திகளை ' நான்கு கடவுள் - தொல்தமிழகம் ' என்ற ஆய்வுக் கட்டுரையில் விரிவாகக் காணலாம். இந்த தொல்தமிழகத்தின் வடக்கு எல்லையாக விளங்கியது தான் இமயமலை ஆகும். இந்த இமயமலையிலும் அதன் அடிவாரப் பகுதிகளிலும் தமிழர்கள் பெருவாரியாகப் பல்லாண்டு காலம் வாழ்ந்து வந்திருக்கிறார்கள். இக்கூற்றை மெய்ப்பிக்கும் வகையில் விரிவாகப் பல ஆதாரங்களுடன் இக் கட்டுரையில் காணலாம்.

இமயமலை பற்றிய செய்திகள்:

தமிழ் இலக்கியங்களில் இமயமலை பற்றிக் கூறப்பட்டுள்ள செய்திகளைக் கீழ்க்காணும் தலைப்புக்களில் காணலாம்.

இமயமலையும் தமிழ் மன்னர்களும்
இமயமலையும் தாவரங்களும்
இமயமலையும் விலங்குகளும்
இமயமலையும் பறவைகளும்
இமயமலையும் நீர்ஆதாரங்களும்
இமயமலையும் சிகரங்களும்

இமயமலையும் தமிழ் மன்னர்களும்:

இந்தியா முழுவதும் தமிழ் மன்னர்கள் ஆட்சி புரிந்தனர் என்பதற்கு அவர்கள் இமயமலையினை வென்று வெற்றிக்கொடி நாட்டிய செய்திகளே போதுமானவை. இமயமலையினை ஆண்டு வந்த பிறமொழி பேசுவோராகிய ஆரிய மன்னர்களைத் தோற்கடித்து சேரமன்னன் தனது வில் சின்னத்தினையும் பாண்டிய மன்னன் தனது மீன் சின்னத்தினையும் சோழமன்னன் தனது புலிச்சின்னத்தையும் இமயமலையில் பொறித்து வைத்த செய்தியினைச் சிலப்பதிகாரப் பாடல்கள் ( மதுரைக்காண்டம்:17, வஞ்சிகாண்டம்: 24,29 ) கூறுகின்றன.

இமயமலையில் வில்சின்னத்தினைப் பொறித்த சேரலாதன், இமயமலையில் இருக்கும் மாந்தை நகருக்கு வெளியே தன்னிடம் தோற்றுப்போன ஆரிய மன்னர்கள் தனக்குக் கப்பமாகக் கொடுத்த பொன்னையும் பொருளையும் யானையினையும் தனது கப்பலில் ஏற்றியது போக மிச்சத்தை அப்படியே விட்டுச் சென்றான் என்று அகநானூற்றுப் பாடல் 127 குறிப்பிடுகிறது. இம்மன்னன் வடக்கே இமயமலை முதல் தெற்கே குமரிவரை இந்தியா முழுவதும் ஒரேமொழி வைத்து அரசாண்ட செய்தியினை சிலப்பதிகாரத்தில் வாழ்த்துக்காதை குறிப்பிடுகிறது.

இமயமலையினை வடக்கு எல்லையாகவும் குமரியினைத் தெற்கு எல்லையாகவும் கொண்டு பரந்த தேயத்தை ஆண்டுவந்தான் குட்டுவன் என்று கூறுகிறது பதிற்றுப்பத்தின் 43 ம் பாடல். இமயமலையில் குட்டுவன் வில்பொறித்த செய்தியினை சிறுபாணாற்றுப்படையும் குறிப்பிடுகிறது. இமயமலையில் பொன்னாலான வில்பொறியினை வானவன் என்னும் தமிழ் மன்னன் நட்டான் என்று கூறுகிறது புறநானூற்றின் 39 ம் பாடல்.

இமயமலையும் தாவரங்களும்:

இமயமலையில் வளர்ந்திருந்த மரங்கள், கொடிகள், புற்கள், சோலைகள் முதலான பல்வேறு வகையான தாவரங்களைப் பற்றிய செய்திகள் தமிழ் இலக்கியம் முழுவதிலும் காணப்படுகின்றன. இமயமலையில் வளர்ந்திருந்த மூங்கில் மரங்களைப் பற்றி அகநானூற்றுப் பாடல் 399ம் புறநானூற்றுப் பாடல் 166ம், நெல்லிமரங்களைப் பற்றி அகநானூற்றுப் பாடல் 399ம், ஞெமை மரங்களைப் பற்றி நற்றிணைப் பாடல் 369 ம், தகரமரங்களைப் பற்றி புறநானூற்றுப் பாடல் 132ம், முருக்கமரங்களைப் பற்றி பதிற்றுப்பத்தின் பாடல் 11ம், கொன்றைமரங்களைப் பற்றி அகநானூற்றுப் பாடல் 399ம், மராமரங்களைப் பற்றி அகநானூற்றின் 127ம் பாடலும் குறிப்பிடுகின்றன.

அத்துடன், இமயமலையில் மிக அதிக அளவில் எலுமிச்சை போன்ற நறுமணம் மிக்க நரந்தைப் புற்கள் வளர்ந்திருந்ததைப் பற்றி புறநானூற்றுப் பாடல் 132ம், பதிற்றுப்பத்தின் 11ம் பாடலும் குறிப்பிடுகின்றன. இமயமலையில் மாலைநேரத்தில் முல்லைக்கொடியின் மலர்மொட்டுக்கள் மலர்வது பற்றி நற்றிணை 369ம் பாடல் குறிப்பிடுகிறது. இமயமலையின் நீர்ச்சுனைகளில் குவளை மலர்கள் மலர்ந்திருப்பதனை புறநானூற்றுப் பாடல் 132ம் நறுமணம் கமழும் பன்மலர்ச் சோலைகள் மிக்கிருந்ததைப் பற்றி அகநாற்றுப் பாடல்கள் 398ம் 399ம் குறிப்பிடுகின்றன. 

இமயமலையும் விலங்குகளும்:

இமயமலையில் வாழ்ந்துவந்த பல்வகை மான் இனங்களைப் பற்றிய செய்திகள் இலக்கியப் பாடல்களில் காணக் கிடைக்கின்றன. கவரிமான்கள் இமயமலையில் வாழ்ந்து வந்ததைப் பற்றியும் இம் மான்கள் நரந்தைப் புல்லை வயிறார மேய்ந்துவிட்டு சுனைநீரைக் குடித்துவிட்டுத் தகர மரங்களின் நிழலில் படுத்துறங்கும் என்று புறநானூற்றுப் பாடல் 132 கூறுகிறது. இந்தக் கவரி மான்கள் முருக்கமர நிழலில் தூங்கும்போது கூட நரந்தைப் புல்லை உண்டு அருவி நீரைப் பருகுவதாகக் கனவு காணும் என்று பதிற்றுப்பத்தின் 11 ஆம் பாடல் குறிப்பிடுகிறது. இமயமலையில் கோடைக்காலத்தில் உண்டாகும் நீர் வறட்சியினைப் போக்கிக்கொள்ள மான்கள் நெல்லிக்காய்களைத் தின்னும் என்று அகநானூற்றுப் பாடல் 399 குறிப்பிடுகிறது. நவ்வி மான்கள் தனது குட்டியுடன் இமயமலையில் வாழும் அந்தணர்கள் மாலைநேரத்தில் ஏற்றும் முத்தீ விளக்கின் ஒளியில் உறங்கும் என்று புறநானூற்றுப் பாடல் எண் 2 குறிப்பிடுகிறது.

இமயமலையும் பறவைகளும்:

இமயமலையில் வாழ்ந்துவந்த பறவை இனங்களைப் பற்றியும் தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. சிவந்த கால்களையும் ஒளிவீசும் வெண்ணிற சிறகுகளையும் உடைய அன்னப் பறவைகள் இமயமலையின் உயர்ந்த சிகரத்தில் வாழ்ந்து வந்ததாகவும் இவை இமயமலையில் கடல்போலப் பெரிதாக இருந்த ஏரிகளில் உணவுதேடும் என்றும் இமயமலையின் உச்சியில் வாழ்ந்துவந்த தேவதை போன்ற பெண்களுக்கு இவை பெருவிருப்பமாக இருந்துவந்தன என்றும் நற்றிணை 356 ஆம் பாடல் குறிப்பிடுகிறது. பறக்கும்போது மேகங்களையே அலகினால் குத்தும் அளவுக்கு உயரமாகப் பறக்கவல்ல இப் பறவைகள் மாலைநேரத்தில் இமயமலையினை விட்டு எங்கும் செல்லாது என்று கலித்தொகை 92 ஆம் பாடல் குறிப்பிடுகிறது. இமயமலையில் மாலைநேரத்தில் கொக்கு முதலான பறவையினங்கள் அந்திவானத்தில் பறந்துசெல்லும் அழகான காட்சியினை விரித்துரைக்கிறது நற்றிணை 369 ம் பாடல்.

இமயமலையும் நீர்ஆதாரங்களும்:

இமயமலையில் இருந்த அருவிகள், ஏரிகள், ஆறுகள் போன்ற பல்வேறு நீர்ஆதாரங்களைப் பற்றிய செய்திகளும் இலக்கியத்தில் காணக் கிடைக்கின்றன. இமயமலையின் உச்சியில் பெய்த மழையினால் பல வெண்ணிற அருவிகள்  தோன்றிக் கீழ்நோக்கிப் பாய்வதாகவும் அவை முடிவில் கங்கை ஆற்றில் சென்று கலப்பதாகவும் நற்றிணை 369ம் பாடல் கூறுகிறது. இந்த கங்கை ஆறானது இமயமலையின் உச்சியில் தோன்றிக் கீழிறங்கி வரும்போது பொன் துகள்களை வாரிக்கொண்டு வருவதாக பெரும்பாணாற்றுப்படை குறிப்பிடுகிறது. இமயமலையில் இருந்த ஏரிகள் கூட கடல்போல பெரிதாக இருந்ததாக நற்றிணை 356ம் பாடல் கூறுகிறது.

இமயமலையும் சிகரங்களும்:

இமயமலையில் ஏராளமான மலைச்சிகரங்கள் உண்டு என்று நாம் அறிவோம். இவற்றில் பல சிகரங்கள் மிக உயரம் கொண்டவை. இந்த உயர்ந்த சிகரங்களைப் பற்றிய குறிப்புக்கள் தமிழ் இலக்கியங்களில் வெகுவாகக் காணக் கிடைக்கின்றன. இமயமலையின் மிக உயர்ந்த சிகரத்தின் உச்சியில் கடவுள் உறைவதாகவும் (பதிற்.: 43), கண்மூடித் தவம் செய்யும் பெரியோர்களும் (கலி.: 92) வேதநெறிப்படி வாழும் அந்தணர்களும் (புறம்: 2) தேவதை போன்ற பெண்களும் அன்னப் பறவைகளும் (நற்.: 356) வாழ்வதாக இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.

இந்த மலை உச்சியில் அதிக அளவில் பொன்துகள் இருப்பதால்தான் மலைச்சிகரமானது தங்க நிறத்தில் தகதகவென மின்னுவதாக அக்காலத்தில் மக்கள் நம்பிக்கை வைத்திருந்தனர். இலக்கியங்களில் (புறம்: 39, 369. அகம்: 398, பெரும்பாண்., ) கூட ' பொன்படு நெடுவரை ' என்று இமயமலையினைக் குறிப்பிடுகிறார்கள்.

முடிவுரை:

தமிழ்மன்னர்கள் இமயமலையை வென்று வெற்றிக்கொடி நாட்டிய செய்திகளையும் இமயமலையில் வாழ்ந்த விலங்குகள், பறவைகள், தாவரங்கள் மற்றும் இமயமலையின் நீர்ஆதாரங்களைப் பற்றியும் தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடுவதை மேலே கண்டோம். இமயமலை மற்றும் அதன் அடிவாரப் பகுதிகளில் வாழாமல் இமயமலை பற்றி இவ்வளவு விரிவான செய்திகளைக் கூறமுடியாது என்பதால் தமிழர்களும் தமிழ்ப் புலவர்களும் ஒருகாலத்தில் இப் பகுதிகளில் வாழ்ந்துவந்தனர் என்பது உறுதியாகிறது. இருப்பினும், இவ்வளவு விரிவாக இமயமலையினைப் பற்றிக் கூறிய தமிழ் இலக்கியங்கள் ஒன்றில்கூட இக்காலத்து இமயமலையின் தனிச்சிறப்பான 'பனிப்பொழிவு' பற்றி கூறப்படாதது ஆச்சரியம் அளிக்கிறது. ஒருவேளை தமிழ் மக்கள் வாழ்ந்த காலத்தில் இமயமலையில் இந்தப் பனிப்பொழிவு இருந்திருக்காது; இருந்தால் அதனையும் பாடல்களில் கூறியிருப்பார்கள். இமயமலையில் ஏற்பட்டுள்ள இதுபோன்ற மிகப்பெரிய பருவநிலை மாற்றங்கள் எப்போது எப்படி உண்டாயின என்பது புவியியல் துறை ஆய்வாளர்களும் வரலாற்றுத்துறை ஆய்வாளர்களும் இலக்கிய ஆய்வாளர்களும் இணைந்து மேற்கொள்ள வேண்டிய ஆய்வுகளில் ஒன்றாகும்.

தொடர்புடைய இலக்கிய ஆய்வுக் கட்டுரைகள்:

இமயமலையும் தமிழர்களும் - பகுதி 1 ( பன்மலர்ச் சோலைகள் )
இமயமலையும் தமிழர்களும் - பகுதி 2 ( கங்கையும் கஸ்தூரி மான்களும் )
இமயமலையும் தமிழர்களும் - பகுதி 3 ( அந்தணர்களும் மராமரங்களும் )
இமயமலையும் தமிழர்களும் - பகுதி 4 ( ஆரியர்கள் )
இமயமலையும் தமிழர்களும் - பகுதி 5 ( அன்னப்பறவைகளும் புதையலும் )
இமயமலையும் தமிழர்களும் - பகுதி 6 ( கடவுளும் முனிவர்களும் )

ஆதார நூல்கள்:

சிலப்பதிகாரம் (சிலப்.)
அகநானூறு (அகம்.)
புறநானூறு (புறம்.)
பதிற்றுப்பத்து (பதிற்.)
நற்றிணை (நற்.)
கலித்தொகை (கலி.)
பெரும்பாணாற்றுப்படை (பெரும்பாண்.)
சிறுபாணாற்றுப்படை (சிறுபாண்.)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.