முன்னுரை:
எண்ணும் எழுத்தும் என்ற கட்டுரையின் முதல் பகுதியில் தமிழ் எழுத்துக்களின் பிறப்பியலைப் பற்றி விரிவாகக் கண்டோம். இரண்டாம் பகுதியில் மெய்யெழுத்துக்களுக்கும் வினைச்சொற்களுக்கும் இடையிலான தொடர்புகளை விளக்கமாகக் கண்டோம். மூன்றாம் பகுதியில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் எண்களுக்கு அவற்றின் மதிப்பு நீங்கலாக வேறு புதிய பொருள்களும் உண்டு என்று தெளிந்தோம். நான்காம் பகுதியான இதில் உயிர் எழுத்துக்களைப் பற்றி விளக்கமாகக் காணலாம்.
உயிர் எழுத்துக்களும் வகைப்பாடும்:
தமிழில் உள்ள உயிர் எழுத்துக்கள் பன்னிரெண்டையும் பல முறைகளில் பலவகைகளாகப் பகுத்துள்ளனர். சான்றாக, அ,இ,உ,எ,ஒ போன்றவற்றைக் குறில் என்றும் ஏனையவற்றை நெடில் என்றும் ஒலிக்கும் மாத்திரைகளின் அடிப்படையில் வகுத்துள்ளனர். எழுத்துக்கள் பிறக்கும் முறையின் அடிப்படையில் அ, ஆ ஆகியவற்றை அங்காப்பு எழுத்துக்கள் என்றும் உ,ஊ,ஒ,ஓ,ஔ ஆகியவற்றை குவிநிலை எழுத்துக்கள் என்றும் பலவாறாகப் பகுத்துள்ளனர்.
இக்கட்டுரையில் உயிர் எழுத்துக்களை சுட்டெழுத்துக்கள், வினா எழுத்துக்கள், உணர்ச்சி எழுத்துக்கள் என்ற மூன்று பிரிவுகளின் கீழ் விளக்கங்களுடன் காணலாம்.
சுட்டெழுத்துக்கள்:
சுட்டெழுத்து என்பது ஒரு குறிப்பிட்ட இடத்தினையோ பொருளையோ மனிதரையோ சுட்டிக்காட்டும் பொருளில் வரும் எழுத்தாகும். உயிரெழுத்துகளில் 'அ', 'இ', உ' என்ற மூன்று எழுத்துகளும் அவற்றின் நெடில்களும் சுட்டெழுத்துகள் ஆகும். அ என்ற எழுத்து கண் தோன்றாத சேய்மையையும், இ என்ற எழுத்து அண்மையையும் உ என்ற எழுத்து சேய்மைக்கும், அண்மைக்கும் இடைப்பட்டுக் கண்ணுக்குத் தெரியும் நிலத்தையும் சுட்டுவன. அகரம் பேசுவோனுக்கும் கேட்போனுக்கும் சேய்மையிலுள்ள பொருளையும்; இகரம் பேசுவோனுக்கு அண்மையிலுள்ள பொருளையும்; உகரம் கேட்போனுக்கு அண்மையிலுள்ள பொருளையும் சுட்டுவதே பொதுவான மரபாகும். சுட்டெழுத்துக்கள் அகச்சுட்டு (அவன், இவன், உவன்), புறச்சுட்டு (அக்கரை, இப்பக்கம், உதுக்காண்) என இருவகைப்படும்.
தொல்காப்பிய எழுத்ததிகாரத்தில் நூல்மரபின் 31 ஆம் நூற்பா சுட்டெழுத்துக்களைப் பற்றிக் கீழ்க்கண்டவாறு கூறுகிறது.
அ இ உ அம்மூன்றும் சுட்டு. - 31.
அ, இ, உ ஆகிய மூன்று எழுத்துக்களும் சுட்டெழுத்துக்கள் ஆகும் என்று கூறுகிறது மேற்காணும் நூற்பா. அ, இ, உ என்று குறில் எழுத்துக்களை மட்டுமே நூற்பா குறிப்பிட்டாலும், இவற்றின் நெடில்களாகிய ஆ, ஈ, ஊ ஆகிய மூன்றையும் கூட சுட்டெழுத்துக்களாகவே கொள்ள வேண்டும். சான்றாக,
ஆங்கண் ( ஆ முதல் சுட்டுச்சொல் ) = அவ்விடம்
ஈங்கண் ( ஈ முதல் சுட்டுச்சொல் ) = இவ்விடம்
ஊங்கண் ( ஊ முதல் சுட்டுச்சொல் ) = உவ்விடம்
ஆகிய சொற்களும் ஒரு இடத்தினைச் சுட்டிக்காட்டவே பயன்படுவதால், ஆ, ஈ, ஊ ஆகிய எழுத்துக்களும் சுட்டெழுத்துக்களாகவே அறியப்படுகின்றன.
சுட்டெழுத்துக்கள் இடம், பொருள் முதலானவற்றைச் சுட்டிக்காட்டுவதற்குப் பயன்படுகின்றன என்று மட்டுமே நாம் அறிவோம். ஆனால் உண்மையில் அவை நமக்கு எவ்வளவு பெரிய உதவியினைச் செய்கின்றன என்பதனை நாம் விரிவாக அறியமாட்டோம். இதை ஒரு எடுத்துக்காட்டுடன் பார்த்தால் நன்கு விளங்கும். கீழே உள்ள எடுத்துக்காட்டில் சுட்டுச்சொற்கள் பயின்று வந்துள்ளன.
" பாலாற்றின் வடக்கே நான்கு சாலைகள் சந்திக்கும் இடத்தில் இருந்து மேற்கே 2 கல் தொலைவில் ஒரு சிவன் கோவில் உண்டு. அக் கோவிலில் தினமும் காலையில் பூசைசெய்வதற்கு 25 வயது மதிக்கத்தக்க நல்ல சிவப்பழகுடைய ஒரு இளைஞர் வருவார். அவரை நான் ஒருநாள் சந்தித்தேன்.'
மேற்காணும் எடுத்துக்காட்டினைச் சுட்டுச்சொற்கள் இல்லாமல் எழுதினால் எப்படி இருக்கும் என்று கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
" பாலாற்றின் வடக்கே நான்கு சாலைகள் சந்திக்கும் இடத்தில் இருந்து மேற்கே 2 கல் தொலைவில் இருக்கும் சிவன் கோவிலில் தினமும் காலையில் பூசைசெய்வதற்கு வருகின்ற 25 வயது மதிக்கத்தக்க நல்ல சிவப்பழகுடைய ஒரு இளைஞரை நான் ஒருநாள் சந்தித்தேன். "
சுட்டுச்சொற்களைப் பயன்படுத்தி எழுதுவதற்கும் பயன்படுத்தாமல் எழுதுவதற்கும் உள்ள வேறுபாட்டினை மேலே உள்ல எடுத்துக்காட்டில் இருந்து தெளிவாகப் புரிந்துகொள்ளலாம். அதாவது,
> சுட்டுச்சொற்கள் சொற்றொடர்களைச் சுருக்கி எழுதத் துணைபுரிகின்றன. இதனால்
> சொற்றொடரின் பொருளைச் சட்டெனப் புரிந்துகொள்ள முடிகிறது. மேலும்,
> சொற்றொடர்களுக்கு இடையிலான தொடர்பினையும் எளிதில் விளங்கிக் கொள்ள முடிகிறது.
சுட்டெழுத்துக்களின் உதவியினை எடுத்துக்காட்டுகளுடன் கூறுவதானால், அவை ஒரு கட்டிடத்தில் உள்ள தூக்கி (லிஃப்ட்) களைப் போலவும் சாலைகளின் கீழே உள்ள சுருங்கை (சப்-வே) களைப் போலவும் உதவிசெய்கின்றன எனலாம். மொத்தத்தில், உயரமாக அல்லது தூரமாக உள்ள இடத்திற்கு ஒரு குறுக்குவழி (ஷார்ட்கட்) யாக இவை செயல்படுகின்றன.
இதுவரை கண்டவற்றில் இருந்து, அ, ஆ, இ, ஈ, உ, ஊ ஆகிய ஆறு எழுத்துக்களும் சுட்டெழுத்துக்களாகப் பயன்படுத்தப் படுவதனை அறிந்து கொள்ளலாம்.
வினா எழுத்துக்கள்:
வினாப் பொருளைக் குறிக்கும் எழுத்துக்கள் வினாவெழுத்துக்கள் எனப்படும். இவ்வெழுத்துக்கள் ஒரு சொல்லில் வினாவை உண்டாக்குகின்றன. வினா எழுத்துக்களை அகவினா, புறவினா என்று இருவகையாகப் பிரிக்கலாம். வினாச்சொல்லில் இருந்து வினாப்பொருளைத் தரும் எழுத்தினை நீக்கினாலும் மிச்சமிருப்பவை பொருள்தரும் என்றால் அவை புறவினா எனப்படும்; பொருள்தராவிட்டால் அவை அகவினா எனப்படும். சான்றாக,
எப்பொழுது? எவ்விடம்? எவ்வகையில்?
ஆகிய இச்சொற்களில் இருந்து முதல் எழுத்தாகிய எ காரத்தினை நீக்கிவிட்டாலும் மிச்சமிருக்கின்ற பொழுது, இடம், வகையில் ஆகிய சொற்கள் பொருள் தருவதை அறியலாம். எனவே இவை புறவினாச் சொற்கள் ஆகும். இவற்றில் வரும் 'எ' கார எழுத்தானது புறவினா எழுத்தாகும். எ என்ற வினா எழுத்து புறவினாக்களை மட்டுமின்றி அகவினாக்களை உருவாக்கவும் பயன்படுகிறது. சான்றாக,
எங்கே? எதற்கு? எப்படி?
எது? எவன்? எந்த?
போன்றவை அகவினாச்சொற்கள் ஆகும். இச் சொற்களின் முதலில் வரும் எ கார எழுத்தே வினாப்பொருளை உணர்த்துவதுடன் இதனை நீக்கிவிட்டால் ஏனைய எழுத்துக்கள் பொருள்தராமல் போவதையும் அறியலாம். எ என்ற குறில் எழுத்து மட்டுமின்றி, இதன் நெடிலாக விளங்குகின்ற ஏ என்ற எழுத்தும் வினாப் பொருளை உணர்த்தப் பல இடங்களில் பயன்படுகின்றன. ஆனால், ஏ என்ற எழுத்தானது அகவினா எழுத்தாகும். காரணம், அந்த வினாச் சொற்களில் இருந்து இவ் எழுத்தினை நீக்கிவிட்டால் மிச்சமிருப்பவை பொருள் தராது. சான்றாக,
ஏன்? ஏது?
என்ற அகவினாச்சொற்களில் இருந்து ஏ என்ற வினா எழுத்தினை நீக்கிவிட்டால் மிச்சமிருக்கும் ன், து ஆகிய எழுத்துக்களுக்குப் பொருளில்லை. இனி, எந்தெந்த எழுத்துக்கள் வினா எழுத்துக்களாக வரக்கூடியவை என்று நன்னூலார் கீழ்க்காணும் நூற்பாவில் கூறுகிறார்.
"எ யா முதலும் ஆ ஓ ஈற்றும்
ஏ இருவழியும் வினாவாகும்மே." - நன்னூல், எழுத்தியல். 67
இந்நூற்பாவின் பொருள்:
எ எழுத்தும் யா எழுத்தும் சொல்லின் முதலில் நின்று வினாப்பொருள் உணர்த்தும்.
சான்று: எவன்?. எப்போது? யார்?.
ஆ எழுத்தும் ஓகார எழுத்தும் சொல்லின் ஈற்றில் நின்று வினாப்பொருள் உணர்த்தும்.
சான்று: வரலாமா?. தருவானோ?
ஏ என்ற எழுத்தானது சொல்லின் முதலில் மட்டுமின்றி ஈற்றிலும் நின்று வினாப்பொருளை உணர்த்த வல்லதாகும்.
சான்று: ஏன்?. அவன் தானே?.
நன்னூலாரின் மேற்காணும் விதிப்படி, எ, ஏ, யா ஆகிய எழுத்துக்கள் சொல்லின் முதலிலும் ஆ, ஏ, ஓ ஆகிய எழுத்துக்கள் சொல்லின் ஈற்றிலும் நின்று வினாப்பொருள் உணர்த்தும் என்பது அறியப்படுகிறது.
சுட்டெழுத்துக்கள் எப்படிச் சொற்றொடர்களைச் சுருக்கி எழுதவும் எளிதாகப் புரிந்துகொள்ளவும் பயன்படுகின்றனவோ அதைப்போல வினா எழுத்துக்களும் சில நன்மைகளைச் செய்கின்றன. பொதுவாக, ஒருவினா தொடுக்கப்படும்போது நமக்குள் என்ன நடக்கிறது?.
> வினாவானது கூர்நுனி கொண்ட ஒரு அம்புபோல நுணுகி நமது அறிவுக் கடலுள் பாய்ந்து மூழ்குகிறது.
> பரந்துபட்ட நமது அறிவுக்கடலில் ஏதோ ஒரு விடையினைத் தேடுகிறது. இறுதியாக,
> அம்பினால் குத்துண்ட மீன்போல தனக்குள் சிக்கியதை விடையாகக் கொண்டு மேலெழும்புகிறது.
இப்படியாக, வினாச்சொற்கள் நம்மைத் தொடர்ந்து சிந்திக்க வைக்கின்றன; தேடச்செய்கின்றன; புதிய முயற்சிகளில் நம்மை ஈடுபடச் செய்கின்றன. இந்தச் சிந்தனைகள், தேடல்கள் மற்றும் முயற்சிகளினால் தான் ஏனை விலங்குகளில் இருந்து மனிதன் மட்டும் முன்னேறி பண்பட்டதோர் விலங்கினமாக மாற முடிந்தது எனலாம். ஆக, மனிதனுடைய வாழ்க்கை நிலையினை உயர்த்த வல்ல ஆற்றல் வினா எழுத்துக்களுக்கு உண்டென்றால் அது மிகையில்லை.
உணர்ச்சி எழுத்துக்கள்:
உணர்ச்சிகளை வெளிப்படுத்த உதவும் எழுத்துக்கள் உணர்ச்சி எழுத்துக்கள் என்று அழைக்கப்படும். வியப்பு, மகிழ்ச்சி, அவலம் போன்ற உணர்ச்சிகளை மொழி வாயிலாக வெளிப்படுத்த சில எழுத்துக்களை நாம் அன்றாடம் பயன்படுத்துகிறோம். சான்றாக,
குழந்தைகள் யானையைக் காணும்போது தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்த கீழ்க்கண்டவாறு கூறுவர்.
ஐ ! யானை !
பெரிய ஆற்றினையோ கட்டிடத்தையோ பார்த்து வியக்கும்போது நாம் கீழ்க்காணுமாறு கூறுவதுண்டு.
ஓ! எவ்வளவு பெரியது !
நெருங்கிய உறவுகளின் இழப்பின்போதும் அழுகையின்போதும் அவலநிலையில் கீழ்க்காணுமாறு கூறுவதுண்டு.
ஓஓஓ! கடவுளே !
ஐ எனும் எழுத்தும் ஓ எனும் எழுத்தும் உணர்ச்சிகளை வெளிப்படுத்த தனித்தனியே பயன்படுத்தப் படுவதுடன் ஒன்றாகச் சேர்ந்து ஐயோ என்றும் பல நேரங்களில் பயன்படுத்தப்படுவதுண்டு.
ஐயோ ! தெய்வமே !
இப்படி உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் எழுத்துக்களாக ஐ, ஓ ஆகிய எழுத்துக்கள் பயன்படுவதால் இவற்றை உணர்ச்சி எழுத்துக்கள் என்று அழைக்கலாம்.
.... தொடரும் .....