வியாழன், 14 செப்டம்பர், 2017

எண்ணும் எழுத்தும் - 2 ( மெய்யும் வினையும் பொய்யல்ல )

முன்னுரை:
எண்ணும் எழுத்தும் என்ற ஆய்வுக் கட்டுரையின் முதல் பகுதியான ' தமிழ் எழுத்துக்களின் பிறப்பியல் ' என்பதில் தமிழ் மொழியில் உள்ள உயிரெழுத்துக்கள் பன்னிரெண்டும் மெய்யெழுத்துக்கள் பதினெட்டும் பிறக்கின்ற பல்வேறு முறைகள் பற்றி விரிவாக விளக்கப் படங்களுடன் கண்டோம். இதில், ஒவ்வொரு எழுத்தும் பிறக்கும்போது நாக்கின் நிலை எப்படி இருந்தது என்பது படவிளக்கமாகக் காட்டப்பட்டு இருந்தது. இதனை அடிப்படையாகக் கொண்டு இந்த இரண்டாம் பகுதியில் மெய்எழுத்துக்களுடன் தொடர்புடைய பல்வேறு வகையான வினைகளைப் பற்றி விரிவாகக் காணலாம்.

மெய்எழுத்துக்களும் நாக்கின் நிலையும்:

தமிழ் எழுத்துக்களில் மெய்யெழுத்துக்கள் பதினெட்டும் பிறக்கும்போது நாக்கின் நிலை எவ்வாறு இருக்கும் என்பதைப் பற்றி முதலாம் பகுதியில் சொல்லப்பட்டவை கீழே தொகுத்துத் தரப்பட்டுள்ளன.

எழுத்து(க்கள்)     எழுத்து(க்கள்) பிறக்கும்போது
                                         நாக்கின் நிலைப்பாடு

க், ங்                                          திரளுதல்

ச், ஞ்                            உயர்தல், மெலிதல், பரவுதல்

ட், ண்                                        வளைதல்

த், ந்                                          மழுங்குதல்

ப், ம், வ்                              சமமாயிருத்தல்

ற், ன்                                      உட்குழிதல்

ர்                                                  திரள்தல்

ழ்                                             மழுங்குதல்

ல்                                               உட்குழிதல்

ள்                                               வளைதல்

ய்                              உயர்தல், மெலிதல், பரவுதல் 

நாநிலையும் மெய்எழுத்துத் தொகுதிகளும்:                   

மேற்காணும் நாநிலைகளிலிருந்து பிறக்கின்ற பதினெட்டு மெய்யெழுத்துக்களையும், அவை பிறக்கும்போது உள்ள நாக்கினது நிலையின் அடிப்படையில் கீழ்க்காணுமாறு ஆறுவகையான தொகுதிகளாகத் தொகுக்கலாம்.

நாக்கின் நிலை                                   பிறக்கும் எழுத்துக்கள்      

திரள்தல்                                                            க், ங், ர்                   
உயர்தல், மெலிதல், பரவுதல்                  ச், ஞ், ய்                  
வளைதல்                                                         ட், ண், ள்                  
மழுங்குதல்                                                     த், ந், ழ்                    
சமமாயிருத்தல்                                            ப், ம், வ்                    
உட்குழிதல்                                                     ற், ன், ல்                    

மெய்யெழுத்துத் தொகுதிகளுக்குப் பெயரிடுதல்:

பதினெட்டு மெய்யெழுத்துக்களையும் மேற்கண்டவாறு ஆறுவகையாகத் தொகுத்த பின்னர், ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு பெயரைச் சூட்டியாகவேண்டும். காரணம், கட்டுரையில் அந்த எழுத்துத் தொகுதியினைக் குறிப்பிடுவதற்கு ஒரு பெயர் தேவைப்படுமென்பதால். எழுத்துக்களின் தொகுதிக்குப் பெயர் சூட்டும்போது கீழ்க்காணும் விதிமுறைகளைப் பின்பற்றிப் பெயர் சூட்டப்படுகிறது. ஒரு தொகுதிக்கான பெயரானது,

> அத்தொகுதியில் உள்ள எழுத்துக்களையே அடிப்படையாகக் கொண்டிருக்கவேண்டும்.
> அத்தொகுதியில் உள்ள மூன்று எழுத்துக்களையும் தொடர்ச்சியாகக் கொண்டிருக்க வேண்டும்.
> அத்தொகுதியின் இயல்பினை விளக்கும் ஒரு முன்மாதிரியாக அதாவது சான்றாக இருக்கவேண்டும்.

இவ் விதிமுறைகளின் அடிப்படையில் ஆறு மெய்யெழுத்துத் தொகுதிகளுக்கும் கீழ்க்காணுமாறு பெயர் சூட்டப்படுகிறது.

மெய்எழுத்துக்கள்       தொகுதியின் பெயர்

க், ங், ர்                                       பொங்கர்
ச், ஞ், ய்                              நஞ்சை (நஞ்சய்)
ட், ண், ள்                                  மண்டளி
த், ந், ழ்                                      குழந்தை
ப், ம், வ்                                        வம்பு
ற், ன், ல்                                 முன்றில்

மேற்காணும் ஆறுதொகுதிகளுக்கான பெயர்களும் தமக்குரிய தொகுதியின் இயல்பினை விளக்கி எவ்வாறு தாமே ஒரு சான்றாக அமைந்துள்ளன என்பது கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பொங்கர் = பலவகையான பூக்கள் ஓரிடத்தில் பூத்திருப்பதான சோலை.
நஞ்சை = பரந்த பரப்புடைய விளைநிலம்.
மண்டளி = மண்+தளி = மண்ணைக்கொண்டு வளைத்துச்செய்யப்பட்ட அகல்விளக்கு.
குழந்தை = பொருள்விளங்காத மழுங்கிய மொழி பேசும் மழலை.
வம்பு = ஒன்றை இன்னொன்றுக்குச் சமம் என்று காட்டும் உவமை.
முன்றில் = வீட்டின் முன்னால் உள்ள தாழ்வான வெற்றிடம்.

இன எழுத்துக்களின் தொடர்புமுறை:

மேற்கண்ட ஒவ்வொரு மெய்யெழுத்துத் தொகுதியிலும் வல்லின, மெல்லின, இடையினத்தைச் சேர்ந்த எழுத்துக்கள் ஒவ்வொன்றும் இடம்பெற்றிருப்பதைக் கண்டோம். இப்படி ஒரு தொகுதியில் அடங்குகின்ற மூன்று இனத்தைச் சேர்ந்த மெய்எழுத்துக்களுக்கு இடையில் ஏதாவது தொடர்பு உண்டா?. என்று பார்க்கலாம்.

> வல்லினத்திற்கும் மெல்லினத்திற்கும் இடையிலான தொடர்பினை தொல்காப்பியரே பிறப்பியலில் கூறிவிட்டார். அதாவது, வல்லினம் எங்கே எப்படி பிறக்கிறதோ அதே இடத்தில் அதே முறையில் தான் மெல்லினமும் பிறக்கும் என்று முன்னர் முதல் கட்டுரையில் கண்டோம்.

> இடையினத்திற்கும் வல்லினத்திற்குமான தொடர்பினைக் கீழ்க்காணும் சில சான்றுகளுடன் காணலாம்.

தன்வினை        பிறவினை

காய்                       காய்ச்சு
பாய்                       பாய்ச்சு
வார்                       வாக்கு
அடர்                     அடக்கு
கழல்                    கழற்று
சுழல்                    சுழற்று
பரவு                      பரப்பு
நிரவு                     நிரப்பு
ஆழ்                    ஆழ்த்து
நெகிழ்              நெகிழ்த்து
புரள்                     புரட்டு
சுருள்                  சுருட்டு

மேலே உள்ள சான்றுகளை நோக்கினால், ஒவ்வொரு தன்வினைச் சொல்லின் ஈற்றில் வரும் இடையின மெய்யானது பிறவினைச் சொல்லாக மாறும்போது வல்லின மெய்யாக மாறியோ வல்லின மெய்யுடன் சேர்ந்தோ வருவதனை அறியலாம். அதாவது, தன்வினைச் சொல்லின் ஈற்றில் வருகின்ற இடையின மெய்யாகிய

யகரம் சகரத்துடனும்
ரகரம் ககரத்துடனும்
லகரம் றகரத்துடனும்
வகரம் பகரத்துடனும்
ழகரம் தகரத்துடனும்
ளகரம் டகரத்துடனும் தொடர்புற்றிருப்பதனை அறியலாம்.

மேற்கண்ட சான்றுகளில் இருந்து, வல்லினத்திற்கும் மெல்லினத்திற்கும் தொடர்பு இருப்பதைப் போலவே வல்லினத்திற்கும் இடையினத்திற்கும் தொடர்பு இருப்பதும் உறுதியாகிறது. ஆக, மூன்று இனச் சொற்களும் தமக்குள் ஒன்றுக்கொன்று ஏதேனும் ஒருவிதத்தில் தொடர்புடையவையே என்பது நிறுவப்படுகிறது. இனி, ஒவ்வொரு மெய்யெழுத்துத் தொகுதிக்கும் உரித்தான வினைகள் எவைஎவை என்று விரிவாகக் கீழே காணலாம்.

பொங்கர்த் தொகுதியும் சார்புடைய வினைகளும்:

க், ங், ர் ஆகிய மூன்று எழுத்துக்களையும் உள்ளடக்கிய பொங்கர்த் தொகுதியில் அடங்குவதான பல்வேறு வினைகளுள் சிலவற்றை மட்டும் கீழே காணலாம். இத் தொகுதியின் கீழ் வருவதான அனைத்து வினைகளும் 'திரளுதல்' என்ற வினையினை அடிப்படையாகக் கொண்டு கீழ்க்காணுமாறு பிறக்கும்.

திரளுதல் >>> ஒன்றுபடுதல் >>> சேர்தல்.
திரளுதல் >>> பெருகுதல் >>> பெரியதாதல் >>> மறைத்தல் >>> தடுத்தல்.
திரளுதல் >>> வலிமையாதல்.

நஞ்சைத் தொகுதியும் சார்புடைய வினைகளும்:

ச், ஞ், ய் ஆகிய மூன்று எழுத்துக்களையும் உள்ளடக்கிய நஞ்சைத் தொகுதியில் அடங்குவதான பல்வேறு வினைகளுள் சிலவற்றை மட்டும் கீழே காணலாம். இத் தொகுதியின் கீழ் வருவதான அனைத்து வினைகளும் ' உயர்தல், மெலிதல், பரவுதல் ' என்ற வினைகளை அடிப்படையாகக் கொண்டு கீழ்க்காணுமாறு பிறக்கும்.

உயர்தல் >>> எழுதல் >>> ஏறுதல் 
மெலிதல் >>> மென்மையாதல் >>> வலிமையிழத்தல் >>> தளர்தல் >>> துஞ்சுதல்.
பரவுதல் >>> பரப்புகூடுதல் >>> விரிதல் >>> திறத்தல்
பரவுதல் >>> நீளமாதல், அகலமாதல் >>> வளர்தல்

மண்டளித் தொகுதியும் சார்புடைய வினைகளும்:

ட், ண், ள் ஆகிய மூன்று எழுத்துக்களையும் உள்ளடக்கிய மண்டளித் தொகுதியில் அடங்குவதான பல்வேறு வினைகளுள் சிலவற்றை மட்டும் கீழே காணலாம். இத் தொகுதியின் கீழ் வருவதான அனைத்து வினைகளும் ' வளைதல் ' என்ற வினையினை அடிப்படையாகக் கொண்டு கீழ்க்காணுமாறு பிறக்கும்.

வளைதல் >>> பணிதல் >>> அடங்குதல் >>> தாழுதல் >>> விழுதல் >>> இறங்குதல்
வளைதல் >>> இளமையாதல் >>> மென்மையாதல்
வளைதல் >>> நாலுதல் (தொங்குதல்)

குழந்தைத் தொகுதியும் சார்புடைய வினைகளும்:

த், ந், ழ் ஆகிய மூன்று எழுத்துக்களையும் உள்ளடக்கிய குழந்தைத் தொகுதியில் அடங்குவதான பல்வேறு வினைகளுள் சிலவற்றை மட்டும் கீழே காணலாம். இத் தொகுதியின் கீழ் வருவதான அனைத்து வினைகளும் ' மழுங்குதல் ' என்ற வினையினை அடிப்படையாகக் கொண்டு கீழ்க்காணுமாறு பிறக்கும்.

மழுங்குதல் >>> மயங்குதல் >>> தெளிவறுதல் >>> கலங்குதல் >>> குழைதல் >>> மென்மையாதல்
மழுங்குதல் >>> வட்டமாதல் >>> சுழலுதல் >>> சூழ்தல் >>> எண்ணுதல், மறைத்தல், பாதுகாத்தல்
மழுங்குதல் >>> உருண்டையாதல் >>> முழுமையாதல் >>> நிறைதல் (பொதிதல்) >>> கொழுத்தல், தடித்தல்

வம்புத் தொகுதியும் சார்புடைய வினைகளும்:

ப், ம், வ் ஆகிய மூன்று எழுத்துக்களையும் உள்ளடக்கிய வம்புத் தொகுதியில் அடங்குவதான பல்வேறு வினைகளுள் சிலவற்றை மட்டும் கீழே காணலாம். இத் தொகுதியின் கீழ் வருவதான அனைத்து வினைகளும் ' சமமாயிருத்தல் ' என்ற வினையினை அடிப்படையாகக் கொண்டு கீழ்க்காணுமாறு பிறக்கும்.

சமமாயிருத்தல் >>> வளையாதிருத்தல் >>> வலியதாதல் >>> அழியாதிருத்தல்
சமமாயிருத்தல் >>> சாயாதிருத்தல் >>> நடுநிலைமை >>> நடுதல் (ஊன்றுதல்) >>> நிலைபெறுதல் >>> அமைதல்
சமமாயிருத்தல் >>> இயல்பாயிருத்தல் >>> மாறாதிருத்தல் >>> தாங்குதல் >>> எதிர்த்தல்

முன்றில் தொகுதியும் சார்புடைய வினைகளும்:

ற், ன், ல் ஆகிய மூன்று எழுத்துக்களையும் உள்ளடக்கிய முன்றில் தொகுதியில் அடங்குவதான பல்வேறு வினைகளுள் சிலவற்றை மட்டும் கீழே காணலாம். இத் தொகுதியின் கீழ் வருவதான அனைத்து வினைகளும் ' உட்குழிதல் ' என்ற வினையினை அடிப்படையாகக் கொண்டு கீழ்க்காணுமாறு பிறக்கும்.

உட்குழிதல் >>> பள்ளமாதல் >>> குறைபடுதல் >>> இல்லாதுபோதல் >>> நீங்குதல், மறைதல், அழிதல்
உட்குழிதல் >>> வலிமையற்றிருத்தல் >>> நோவுண்டாதல் >>> துன்புறுதல்
உட்குழிதல் >>> தாங்காதிருத்தல் >>> முறிதல் >>> இரண்டாதல் >>> பிளவுறுதல்


..... தொடரும்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.