புதன், 29 நவம்பர், 2017

சங்க இலக்கியத்தில் விலங்கியல் - 1 - நாய்



முன்னுரை:



நாய் - என்று சொன்னாலே அதனுடைய நன்றிமறவாத் தன்மையே நம்மில் பலருக்கு நினைவுக்கு வரும். இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலும் எல்லா வீடுகளிலும் செல்லப்பிராணியாக வளர்க்கப்படுகிறது நாய். இந்திய வகை நாய்களில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெளிநாட்டு நாய் வகைகள் வரை பலவகையான நாய்களை இன்று நாம் காண்கிறோம். நாய்வளர்ப்புக்கென்றே பலவகையான உணவுவகைகள் ஏராளமான கடைகளில் விற்பனை செய்யப்படுகின்றன. நாய்களுக்காக பலவகையான போட்டிகளும் நடத்தப்படுகின்றன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையிலும் நாயானது செல்லப்பிராணியாகவும் பொழுதுபோக்குவதற்கான உற்றதுணையாகவும் இருந்துவருகிறது. காலையிலும் மாலையிலும் நடைப்பயிற்சி மேற்கொள்ளும்போது பலரும் தங்களுக்குத் துணையாக நாயினை அழைத்துச் செல்வதைப் பார்க்கலாம். இன்றைய காலகட்டத்தில் நாயானது தவிர்க்கமுடியாத ஒரு குடும்ப உறுப்பினராகிவிட்ட நிலையில், சங்ககாலத் தமிழர்களின் சமுதாயத்தில் எவ்வகையான நாய்கள் இருந்தன என்பதைப் பற்றியும் நாய்கள் எதற்கெல்லாம் பயன்படுத்தப்பட்டன என்பதைப் பற்றியும் சங்ககால இலக்கியங்கள் கூறுகின்ற செய்திகளை இங்கே விரிவாகக் காணலாம்.



நாய் - பெயர்க்காரணமும் வேறுபெயர்களும்:



விலங்கியலைப் பொருத்தமட்டிலும் நாயானது கேனிடே ( canidae ) குடும்பத்தைச் சேர்ந்ததாகும். கூரிய பற்களைக் கொண்டது என்பது இதற்குப் பொருளாகும். கேனிடே குடும்பத்தில் நாய் உட்பட கூரிய பற்களைக் கொண்ட பலவகையான விலங்குகள் உண்டு. நாயிலும் பலவகைகள் உண்டு. நாம் அன்றாடம் காண்கின்ற தெருநாயாகட்டும் வீட்டுநாயாகட்டும் பலசமயங்களில் தனது நாக்கினை முழுவதுமாக வெளியே நீட்டித் தொங்கவிட்டிருப்பதைக் காணலாம். இவ்வாறு இவை செய்வதற்குக் காரணம், தனது உடல்வெப்பத்தைக் குறைத்துக் கொள்ளவே என்று கூறப்படுகிறது. இப்படி இவ் விலங்குகள் தனது 'நா'வினைத் தொங்கவிட்டபடி இருப்பதால்தான், இவற்றுக்கு 'நாய்' என்று பெயர் ஏற்பட்டதாகக் கூறுகின்றனர்.



'நாய்' என்னும் விலங்கினைக் குறிக்கும் வேறுபெயர்களாக ஞாளி, ஞமலி, எகினம், முடுவல் போன்றவற்றைச் சங்க இலக்கியங்கள் பதிவுசெய்துள்ளன. 



சங்ககாலத் தமிழர்களும் நாயும்:



இன்றைய காலகட்டத்தினைப் போலவே, சங்ககாலத் தமிழர் சமுதாயத்திலும் நாயானது ஒரு இன்றியமையாத வளர்ப்பு விலங்காக இருந்துவந்துள்ளது என்பதனைச் சங்க இலக்கியங்கள் பறைசாற்றுகின்றன. வீட்டின் காவலுக்கேற்ற ஒரு சிறந்த விலங்காக நாயானது கருதப்பட்டு வளர்க்கப்பட்டு வந்துள்ளது. ஆடு, மாடு, புறா, கிளி, கோழியுடன் நாயினையும் ஒரு வளர்ப்பு விலங்காகச் சங்கத் தமிழர் வளர்த்து வந்துள்ளனர். காவலுக்கு மட்டுமின்றி, வேட்டைத் தொழிலுக்கும் நாய்களைப் பெரிதும் பயன்படுத்தி இருக்கின்றனர். மான், முயல், பன்றி, உடும்பு போன்றவற்றை வேட்டையாடுவதில் நாயின் பங்கு குறிப்பிடத்தக்கது. சங்ககாலத் தமிழ்ச் சமுதாயத்தில் ஒரு ஆண்மகன் வீட்டைவிட்டு வெளியே செல்லும்போது, கையில் ஒரு வேலுடன் வேட்டைநாய் பின்தொடரச் செல்வது பெருவழக்காக இருந்தது. வீட்டுநாய், வேட்டைநாய்களைப் பற்றி மட்டுமின்றி காடுகளில் வாழும் செந்நாய்களைப் பற்றியும் நீர்நிலைகளில் வாழும் நீர்நாய்களைப் பற்றியும் சங்ககாலப் புலவர்கள் இலக்கியங்களில் பதிவுசெய்து வைத்துள்ளனர். இவற்றைத் தனித்தனியே விரிவாகக் காணலாம்.



வீட்டுநாய்:



வீட்டுநாய் என்று அழைக்கப்படுவதான இது இந்தியத்துணைக் கண்டத்தில் இயற்கையாகக் காணப்படும் நாயினமாகும். இதன் விலங்கியல் பெயர் கேனிஸ் லுபஸ் ஃபெமிலாரிஸ் ( canis lupus familiaris ) ஆகும். இதன் பாரம்பரியம் 15,000 ஆண்டுகளுக்கும் முன் செல்கிறது. இந்த இனம் உலகின் பழமையான நாய் இனங்களில் ஒன்றாகும்.



சங்ககாலத்தில் வீட்டுநாயானது ஏழை பணக்காரன் என்ற பாகுபாடு இல்லாமல் எல்லோருடைய வீடுகளிலும் வளர்க்கப்பட்டு வந்திருக்கிறது. எப்போதும் வறுமையில் உழன்ற பாணர்களும் தமது வீட்டில் நாய் வளர்த்துள்ளனர். வறுமையினால் பலநாட்களாக அடுப்பு எரியாதநிலையில், பாணர்கள் தமது வீட்டில் வளர்த்த பெண்நாயானது இன்னும் கண்திறக்காத தனது குட்டிகளுடன் அடுப்பில் படுத்திருக்க, பாலில்லாமல் வற்றியிருக்கும் தனது முலையினைக் குட்டிகள் வாயால் கவ்வி இழுக்கின்ற வலியைப் பொறுக்கமாட்டாமல் குரைத்த செய்தியைக் கீழ்க்காணும் பாடல்வரிகள் கூறாநிற்கின்றன.



திறவா கண்ண சாய் செவி குருளை

கறவா பால் முலை கவர்தல் நோனாது

புனிற்று நாய் குரைக்கும் புல்லென் அட்டில் - சிறு. 132



சங்ககாலத் தமிழர்களின் வீட்டில் வளர்க்கப்பட்ட நாயானது காவலுக்குப் பரவலாகப் பயன்படுத்தப்பட்டதைப் பலபாடல்களின் வழியாக அறியமுடிகிறது. வீட்டுக்கு வெளியில் பந்தல்காலில் கட்டி வைக்கப்பட்ட நாயானது காவலில் சிறந்து விளங்கியதைப் பெரும்பாணாற்றுப்படை கீழ்க்காணுமாறு கூறுகிறது.



கணைக்கால் பந்தர் தொடர்நாய் யாத்த துன்னரும் கடி நகர் - பெரும்.125



காதலன் தன்னைச் சந்திக்க இரவுநேரத்தில் தனது வீட்டுக்கு வரும்போது காவலர்களாலும் காவல்நாய்களாலும் அவனுக்கு ஏற்படக்கூடிய இடையூறினைப் பற்றிக் கவலையுடன் கூறுகிறாள் செல்வந்தரின் மகளான ஒருகாதலி.



காவலர் கடுகினும் கதநாய் குரைப்பினும் - குறி.240



காவல்நாயானது வீட்டில் வளர்க்கப்பட்ட ஆடுகளுடன் சேர்ந்துகொண்டு வீட்டு முற்றத்தில் துள்ளி விளையாடி மகிழ்ந்திருந்ததைக் காட்டும் சங்கப் பாடல்வரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.



கூர் உகிர் ஞமலி கொடும் தாள் ஏற்றை

ஏழகத் தகரோடு உகளும் முன்றில் - பட்.140.



நெல் உழு பகட்டொடு கறவை துன்னா

மேழகத் தகரோடு எகினம் கொட்கும் - பெரும்.326



'நெல்லுக்கு உப்பு வாங்கலியோ' என்று கூவியவாறு உப்புவிற்றுக்கொண்டு தெருவில் வருகின்றாள் ஒரு பெண். அவளது சத்தத்தைக்கேட்ட ஒருநாய் வீட்டுக்கு வெளியே வந்து அவளைப் பார்த்துக் குரைக்க, அப்பெண் அஞ்சி நடுங்குவதனை ஓவியமாகக் காட்டும் அகநானூற்றுப் பாடல்வரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.



நெல்லின் நேரே வெண்கல் உப்பு என

சேரி விலைமாறு கூறலின் மனைய

விளி அறி ஞமலி குரைப்ப வெரீஇய

மதர் கயல் மலைப்பின் அன்ன கண் - அகம்.140



செல்வந்தர் வீடுகளில் வளர்க்கப்பட்ட காவல்நாய்களுக்கென்றே தனித்தனியாக ஒருஅறை ஒதுக்கப்பட்டு இருந்தது. மரக்கழிகளைக் கொண்டு பொருத்திச் செய்யப்பட்ட ஒருகதவும் இந்த அறைக்கு இருந்தது. சாரல்மழையுடன் குளிர்ந்த காற்று வீசியபோது இந்த அறைக்குள் இருந்த காவல்நாய்கள் குளிரால் நடுங்கிய காட்சியை கீழ்க்காணும் நற்றிணைப் பாடல் விளக்குகிறது.



பெயல் உறு தண் வளி போர் அமை கதவ

புரைதொறும் தூவ கூர் எயிற்று எகினம் நடுங்கும் நன் நகர் - நற்.132



வேட்டைநாய்:



தமிழகத்தில் வளர்க்கப்பட்ட வேட்டைநாய்களில் பலவகைகள் உண்டு. இவற்றில் கோம்பைநாய், இராஜபாளையம் நாய், கண்ணி / கன்னி நாய் ஆகியவற்றைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். இவை தமிழ்நாட்டுக்கே உரிய வேட்டைநாய் வகைகள் ஆகும். இவற்றின் விலங்கியல் பெயரும் வீட்டுநாயைப் போலவே கேனிஸ் லுபஸ் ஃபெமிலாரிஸ் ( canis lupus familiaris ) ஆகும். பொதுவாக, வீட்டுநாயைக் காட்டிலும் வேட்டையாடும் நாய் அதிக சினமும் அதிக ஆற்றலும் கொண்டது. இதனால் இதனைக் 'கதநாய்' என்றே இலக்கியங்கள் கூறும். வடுகமொழி பயிலும் 'வடுகர்' என்போர் வேட்டையாடுதலையே தொழிலாக உடையவர்கள். இவர்களுடன் வேட்டைநாய் எப்போதும் இருப்பதால் இவர்களைக் 'கதநாய் வடுகர்' என்றே இலக்கியங்கள் குறிப்பிடும்.



கடும் குரல் பம்பை கதநாய் வடுகர்  - நற்.212

கல்லா நீள்மொழி கதநாய் வடுகர் - அகம். 107



வீட்டுநாயினையே சிலர் வேட்டையாடப் பழக்கி வைத்திருப்பதும் உண்டு. மான், பன்றி, முயல், உடும்பு போன்றவற்றின்மீது வேட்டைநாயினை ஏவிவிட்டுப் பிடிப்பர். வேட்டைநாயினை ஏவுவதற்கும் திரும்ப அழைப்பதற்கும் ஊதுகொம்பினை விதம்விதமாக ஊதுவர். இதைப்பற்றிக் கூறும் பாடல்வரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.



ஊதல் வேண்டுமால் சிறிதே வேட்டொடு

வேய் பயில் அழுவத்து பிரிந்த நின்

நாய் பயிர் குறிநிலை கொண்ட கோடே - அகம். 318



கோடு துவையா கோள்வாய் நாயொடு

காடு தேர்ந்து அசைஇய வயமான் வேட்டு - நற்.276



இப்பாடல்களில்வரும் கோடு என்பது ஊதுகொம்பினையும் துவைத்தல் என்பது ஒலித்தலையும் குறிக்கும். வேட்டுவர்கள் வேட்டைநாயின் உதவியுடன் மான், பன்றி, முயல் முதலானவற்றை வேட்டையாடியதைப் பற்றித் தனித்தனியே விரிவாகக் காணலாம்.



மான்வேட்டை:



கொலைவெறியுடன் பாய்ந்த வேட்டைநாயினைக் கண்டு அஞ்சிய மானானது வேடுவர் விரித்த வலையில் சிக்கிய காட்சியினைக் கீழ்க்காணும் கலித்தொகைப் பாடல்வரிகள் விளக்கும்.



கொலைவெம் கொள்கையொடு நாய் அகப்படுப்ப

வலைவர்க்கு அமர்ந்த மட மான் போல - கலி.23

 

வேட்டுவனின் அம்புகளில் இருந்து தப்பிய சிறியதும் பெரியதுமான மான்களை வேட்டைநாய்கள் பாய்ந்து கொன்றதைக் கூறும் புறநானூற்றுப் பாடல் வரிகள் கீழே:



சிறியவும் பெரியவும் புழை கெட விலங்கிய

மான் கணம் தொலைச்சிய கடு விசை கத நாய்

நோன் சிலை வேட்டுவ - புறம் 205



பன்றிவேட்டை:



சிறிய கண்களையும் பெரும் சினமும் கொண்ட ஆண்பன்றி ஒன்றின் உடலெலாம் சேறு அப்பியிருக்க உலர்ந்தநிலையில் பார்ப்பதற்கு அது நீறுபூசியதைப் போலத் தோன்றியது. வேட்டுவன் எறிந்த கூர்முனைகொண்ட நீண்ட கோலானது அப்பன்றியின்மேல் சரியாகப் படவும் அதனை நெருங்கிய வேட்டைநாயானது அதன் பெரிய காதினைக் கடித்து வாயில் கவ்வியவாறு வேட்டுவனைப் பின்தொடர்ந்த காட்சியினை கீழ்க்காணும் நற்றிணைப் பாடல் அப்படியே நம் கண்முன்னால் கொண்டுவந்து நிறுத்துகின்றது.



சிறு கண் பன்றி பெரும் சின ஒருத்தல்

சேறு ஆடு இரும் புறம் நீறொடு சிவண

வெள் வசி படீஇயர் மொய்த்த வள்பு அழீஇ

கோள் நாய் கொண்ட கொள்ளை            

கானவர் பெயர்க்கும் சிறுகுடியானே - நற்.82



வேடனுடைய வில்லில் இருந்து சீறிய அம்பானது தனது மார்பின்மேல் பாய்வதில் இருந்து தப்பிய ஆண் முள்ளம்பன்றியினை அவனது வேட்டைநாயானது இடைமறித்து ஒருபுறமாக வெருண்டு ஓடச்செய்யவும் அதனைச் சரியாகப் பயன்படுத்தி மறுபடி அம்பெய்து வேட்டையாடிய காட்சியைக் கீழ்க்காணும் பாடல் கூறுகிறது.



வன் கை கானவன் வெம் சிலை வணக்கி

உளம் மிசை தவிர்த்த முளவுமான் ஏற்றையொடு

மனைவாய் ஞமலி ஒருங்கு புடை ஆட     

வேட்டு வலம்படுத்த உவகையன் காட்ட - நற்.285



முயல்வேட்டை:



சங்ககாலத் தமிழகத்தில் வேடர்கள் முயல்வேட்டை ஆடிய முறையினைக் கீழ்க்காணும் பெரும்பாணாற்றுப் பாடல்வரிகள் தெளிவாகக் கூறுகின்றன.



பகு வாய் ஞமலியொடு பைம் புதல் எருக்கி          

தொகு வாய் வேலி தொடர் வலை மாட்டி

முள் அரை தாமரை புல் இதழ் புரையும்         

நெடும் செவி குறு முயல் போக்கு அற வளைஇ - பெரும்.112



பிளந்த வாயினை உடைய வேட்டைநாயுடன் சென்ற வேடுவர்கள், அங்கிருந்த பசிய புதர்களை எல்லாம் கோல்கொண்டு அடிக்க, அவற்றுள் இருந்து பயந்தவாறு வெளிப்பட்ட வெண்தாமரை மலரின் இதழ்களைப் போல நீண்ட செவிகளை உடைய குறுமுயல்களை வேட்டைநாய்களின் உதவியுடன் போக்குக்காட்டியவாறு வளைத்துச்சென்றுத் தொகுக்கப்பட்ட வேலிபோல விரித்து வைக்கப்பட்டிருந்த வலைக்குள் மாட்டச் செய்தனர் என்று மேற்பாடல் விளக்குகிறது.



செந்நாய்:



இந்தியக் காடுகளில் மிக இயல்பாகக் காணப்படுவதும் செம்மைநிறம் கொண்டதுமான நாய்களைச் செந்நாய் என்று சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. இதன் விலங்கியல் பெயர் கான் அல்பினஸ் (cuon alpinus ) ஆகும். ஆண் செந்நாய்களின் கழுத்தில் கவிழ்த்ததைப் போன்று அடர்த்தியான மயிர் இருக்கும். கீழ்க்காணும் ஐங்குறுநூற்றுப் பாடல் இதைக் கூறுகிறது.



கவிழ் மயிர் எருத்தின் செந்நாய் ஏற்றை - ஐங்கு.397



அரம்கொண்டு தேய்த்துக் கூர்மை செய்யப்பட்ட ஊசிகளைப் போல செந்நாய்களின் பற்கள் கூர்மையுடனும் வலிமையுடனும் இருந்ததைக் கீழ்க்காணும் அகப்பாடல் கூறுகிறது. 



அரம் தின் ஊசி திரள் நுதி அன்ன

திண் நிலை எயிற்றச் செந்நாய் - அகம்.199



செந்நாயின் பற்கள் பொன்னை உருக்கி வார்த்ததைப்போல ஒளியுடனும் கூர்மையுடனும் இருந்ததாகக் கீழ்க்காணும் பாடலும் கூறுகிறது. 



பொன் வார்ந்து அன்ன வை வால் எயிற்று செந்நாய் - அகம்.219



செந்நாய்களின் கண்களைப் பற்றிக் கூறும்போது 'பைங்கண்' என்று பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் வரும் பை(த்தல்) என்பது ஒளி(ர்தல்) என்ற பொருளில் வந்துள்ளது. செந்நாயின் கண்கள் இரவு நேரத்திலும் மஞ்சள் நிறத்தில் ஒளிர்வதைப் பார்க்கலாம். ஒளிரும் கண் என்ற பொருளில் பைங்கண் என்ற சொல்லால் குறித்தனர். சில பாடல் சான்றுகள் மட்டும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.



பைங்கண் செந்நாய் - அகம். 21, நற். 103, குறு. 141.



செந்நாய்கள் குடும்பத்துடன் வாழும் இயல்புடையவை. தனது குட்டிக்காகவும் பெண்நாய்க்காகவும் ஆண்நாயானது வேட்டையாடிக் கொண்டுவந்து உணவினைக் கொடுக்கும். பெண்மான் அலறவும், அதன் துணையாகிய ஆண்மானின் காலை அதன் தொடையுடன் கவ்விக் கிழித்துக் கொண்டுசென்று தனது துணையின் பசியினைப் போக்கிய ஆண் செந்நாயின் செயலைக் கீழ்க்காணும் பாடல் விளக்குகிறது.



பிணவின் உறுபசி களைஇயர்

காடு தேர் மட பிணை அலற கலையின்

ஓடு குறங்கு அறுத்த செந்நாய் ஏற்றை - அகம். 285.



ஆண் செந்நாயானது மான்கூட்டத்தின்மேல் பாயவும், அஞ்சி ஓடிய மான்கள் எழுப்பிய 'ஒய்' என்னும் அலறல் ஓசையானது, பூவரச (பூளை) இலையைச் சுருட்டிச் செய்யப்படும் பீப்பியின் குவிந்த முனையில் காற்றைச் செலுத்தி எழுப்பப்படும் ஓசையைப் போல இருந்ததாகக் கீழ்க்காணும் அகப்பாடல் கூறுகிறது.



செந்நாய் எடுத்தலின் வளி முனை பூளையின்

ஒய்யென்று அலறிய கெடு மான்இன நிரை - அகம்.199



கடுமையான பசி; ஆனால் உண்பதற்கு உணவில்லை. என்ன செய்வோம்?. பசி தெரியாமலிருக்க, ஈரத்துணியை வயிற்றில் கட்டிக்கொண்டு படுத்திருப்போம் இல்லையா?. செந்நாய்களும் இதையேதான் செய்ததாகக் கீழ்க்காணும் நற்றிணைப் பாடல் கூறுகிறது.



நீர் அல் ஈரத்து பால் வீ தோல் முலை அகடு

நிலம் சேர்த்தி பசி அட முடங்கிய பைம் கண் செந்நாய் - நற்.103



ஈரமான நிலத்தில் பால்வற்றிய தோல்முலைகளை உடைய தனது அடிவயிறு படுமாறு படுத்தநிலையில் தனது பசியை அடக்கிக்கொண்டு வேட்டைக்குச் சென்றிருக்கும் ஆண் செந்நாயின் வருகைக்காகக் காத்திருக்கும் பெண்நாயின் நிலையை மேற்பாடல் விவரிக்கிறது.



நீர்நாய்:





நீர்நிலைகளில் வாழ்வதும் பார்ப்பதற்குக் கீரிப்பிள்ளையைப் போலத் தோன்றுவதுமான நீர்நாய்களின் ஆங்கிலப்பெயர் otter (ஓட்டர்) என்பதாகும். இதன் விலங்கியல் பெயர் லுற்றோகல் பெர்ஸ்பிசில்லேட்டா ( lutrogale perspicillata ) ஆகும்.  சங்ககாலத் தமிழகத்தில் வாழ்ந்த நீர்நாய்களைப் பற்றியும் சங்கப்புலவர்கள் சிலபாடல்களில் பதிவுசெய்துள்ளனர்.

நீர்நாயின் பற்கள் கூர்மையானவை என்று கீழ்க்காணும் அகப்பாடல் கூறுகிறது.

வாளை மேய்ந்த வள் எயிற்று நீர்நாய் - அகம். 6

நீர்நாயின் முதுகில் வரிவரியாய் மயிர் இருக்கும் என்று கீழ்க்காணும் பாடல் கூறுகிறது.

அரில் பவர் பிரம்பின் வரிப்புற நீர்நாய் - குறு.364

நீரிலேயே இருக்கும் மீனை வெளியே எடுத்தால் ஒரு வாடை வருமே அதைப்போல நீரிலேயே வாழும் நீர்நாய்க்கும் ஒரு வாடை உண்டு. அதனைப் புலவு நாற்றம் என்று கீழ்க்காணும் பாடல் கூறுகிறது.

பொய்கை பள்ளி புலவு நாறு நீர்நாய் - ஐங்கு.63

நீர்நாய்க்கு மிகப்பிடித்தமான உணவு மீன் குறிப்பாக வாளைமீன் என்று கீழ்க்காணும் பாடல்கள் கூறுகின்றன.

வாளை மேய்ந்த வள் எயிற்று நீர்நாய் - அகம். 6
நீர்நாய் வாளையொடு உழப்ப - அகம். 336
நீர்நாய் வாளை நாள்இரை பெறூஉம் ஊரன் - குறு.364, ஐங்கு. 63

வயலில் தேங்கியிருக்கும் நீர், கழிமுக நீர், பொய்கை நீர் போன்றவற்றில் தனக்கான மீன் உணவினை பகற்பொழுதெல்லாம் வேட்டையாடி உண்ணும் நீர்நாய்கள் இரவில் கொடிகள் அடர்ந்த புதருக்குள்ளும் மரங்களின் பொந்துக்குள்ளும் தங்கும். இதைப்பற்றிக் கூறும் சில பாடல்கள் கீழே தரப்பட்டுள்ளன.

நீர்நாய் முள் அரை பிரம்பின் மூதரில் செறியும் - அகம். 6
அரில் பவர் பிரம்பின் வரி புற நீர்நாய் - குறு.364
நீர்நாய் கொழுமீன் மாந்தி தில்லையம்பொதும்பில் பள்ளிகொள்ளும் - நற்.195


நாயின் நாக்கும் பெண்ணின் பாதமும்:



ஓடி இளைத்தநிலையில் வலிமைகுன்றி இருக்கும் நாயானது தனது செந்நிற நாக்கினை வாய்க்கு வெளியே நீட்டித் தொங்கவிட்டவாறு இருப்பதனைப் பார்த்திருக்கிறோம். தொங்கவிடப்பட்ட நாக்கின் வடிவத்தைப் பார்த்தால், அது ஒரே சீராக நீண்டு அதன் இறுதிப்பகுதியில் விரிந்து அகன்று மெலிந்து இருக்கும். இது பார்ப்பதற்குப் பெண்களின் இரண்டு பாதங்களையும் (சீறடி) ஒன்றாக அருகருகே சேர்த்துவைத்ததைப் போலத் தோன்றும். இயல்பாகவே மென்மையான பாதங்களைக் கொண்ட பெண்கள் நெடுந்தொலைவு நடக்கும்போது அவர்களது பாதங்கள் மேலும் மெலிந்து சிவப்பு நிறமடையும். இந்நிலையில், அவர்களது பாதங்களை வடிவம் மற்றும் வண்ண ஒப்புமை கருதி நாயின் நாக்கிற்கு உவமையாகக் கூறுவது சங்ககாலப் புலவர்களின் வழக்கம். அருகில் உள்ள படத்தில் காட்டப்பட்டிருக்கும் நாயின் நாக்கும் பெண்களின் இணைந்த பாதங்களும் சங்கப்புலவர்களின் உவமை எவ்வளவு நுட்பம் வாய்ந்தது என்பதனைத் தெளிவாக விளக்கும். நாயின் நாக்குடன் பெண்களின் மெல்லிய சிவந்த பாதங்களை ஒப்பிட்டுக் கூறும் சில பாடல்கள் கீழே தரப்பட்டுள்ளன.



வருந்து நாய் நாவின் பெரும் தகு சீறடி  - பொரு. 42

(பொருள்: வருந்துகின்ற நாயின் நாக்கினைப் போன்ற சிறப்புடைய பாதங்கள்...)



உயங்கு நாய் நாவின் நல் எழில் அசைஇ           

வயங்கு இழை உலறிய அடியின் - சிறு. 17

(பொருள்: வருந்துகின்ற நாயின் நாக்கினைப்போல நல்அழகு வாடிய அணியினை உடைய பாதங்கள்...)



மதம் தபு ஞமலி நாவின் அன்ன   

துளங்கு இயல் மெலிந்த கல் பொரு சீறடி - மலை.42

(பொருள்: வலிமை குன்றிய நாயின் நாக்கினைப் போல தளர்ந்த நடையுடைய மெலிந்த பாதங்கள்....)



முடிவுரை:



சங்ககாலத் தமிழர்களின் சமுதாயத்தில் எவ்வகையான நாய்கள் இருந்தன என்பதைப் பற்றியும் நாய்கள் எதற்கெல்லாம் பயன்படுத்தப்பட்டன என்பதைப் பற்றியும் சங்ககால இலக்கியங்கள் கூறுகின்ற செய்திகளை மேலே விரிவாகக் கண்டோம். அதுமட்டுமின்றி, சங்ககாலத் தமிழர்களின் வாழ்க்கையானது நாயுடன் எவ்வாறு ஒன்றிணைந்து இருந்தது என்பதையும் கண்டோம். சங்ககாலம்தொட்டு இன்றுவரையிலும் மனிதர்களுக்குக் காலம்காலமாக நன்றி உணர்வுடன் பலவகையிலும் உதவிசெய்துவருவதான நாயை அது தெருநாயாக இருந்தாலும் கேவலமாக நினைக்காமல் தயவுசெய்து கொல்லாமல் அன்புகாட்டி ஆதரிப்போம் !.


திங்கள், 13 நவம்பர், 2017

திருக்குறள் காட்டும் அடியளந்தான் யார்?



முன்னுரை:

மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
தாஅயது எல்லாம் ஒருங்கு. - 610.

திருக்குறளில் மடியின்மை என்னும் அதிகாரத்தில் வருவது மேற்காணும் குறள். ஒரு வேலையைச் செய்யும்போது சோம்பல் இல்லாமல் தொடர்ந்து செய்தால், என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதனைப் பற்றி விளக்கமாகக் கூறும் அதிகாரத்தில் ஒரு மன்னனுக்கான அறிவுரையாக மேற்காணும் குறள் அமைகின்றது. இக்குறளுக்கு விளக்கம் கூறும்போது, அடியளந்தான் என்னும் சொல்லானது 'திருமால்' என்னும் தெய்வத்தைக் குறிப்பதாகப் பொருள்கொண்டுள்ளனர். உண்மையில், இக்குறளில் வரும் அடியளந்தான் என்னும் சொல் திருமாலைத்தான் குறிக்கிறதா என்றும் இக்குறளின் உண்மையான பொருள் எதுவென்பதனையும் இக்கட்டுரையில் விரிவாகக் காணலாம்.

தற்போதைய விளக்க உரைகள்:

கலைஞர் மு.கருணாநிதி உரை: சோம்பல் இல்லாதவர் அடையும் பயன், சோர்வில்லாத ஒரு மன்னன், அவன் சென்ற இடமனைத்தையும் தனது காலடி எல்லைக்குள் கொண்டு வந்ததைப் போன்றதாகும்.

மு.வரதராசனார் உரை: அடியால் உலகத்தை அளந்த கடவுள் தாவிய பரப்பு எல்லாவற்றையும் சோம்பல் இல்லாத அரசன் ஒரு சேர அடைவான்.

சாலமன் பாப்பையா உரை: தன் அடியால் எல்லா உலகையும் அளந்தவன் கடந்த உலகம் முழுவதையும், சோம்பல் இல்லாத அரசு முழுமையாக அடையும்.

பரிமேலழகர் உரை: அடி அளந்தான் தாஅயது எல்லாம் - தன் அடியளவானே எல்லா உலகையும் அளந்த இறைவன் கடந்த பரப்பு முழுதையும்; மடி இலா மன்னவன் ஒருங்கு எய்தும் - மடியிலாத அரசன் முறையானன்றி ஒருங்கே எய்தும். ('அடியளந்தான்' என்றது வாளா பெயராய் நின்றது. 'தாவியது' என்பது இடைக் குறைந்து நின்றது. எப்பொழுதும் வினையின் கண்ணே முயறலின், இடையீடின்றி எய்தும் என்பதாம். இவை இரண்டு பாட்டானும் மடியிலாதான் எய்தும் பயன் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை: மடியில்லாத மன்னவன் எய்துவன், அடியினால் அளந்தானால் கடக்கப்பட்ட வுலகமெல்லாம் ஒருங்கே. இது மடியின்மையால் வரும் பயன் கூறிற்று.

அடியளந்தான் என்பது திருமால் தெய்வமா?:

மேற்காணும் குறளில் வரும் அடியளந்தான் என்னும் சொல் திருமால் தெய்வத்தைக் குறிக்குமா என்றால் ஒருபோதும் குறிக்காது. இதற்கான காரணங்களைக் கீழே காணலாம்.

1. திருவள்ளுவர் 1330 குறள்களில் எந்தவொரு குறளிலும் எந்தவொரு குறிப்பிட்ட தெய்வத்தையும் சுட்டிக்காட்டிச் சொல்லவில்லை. கடவுள்வாழ்த்தில்கூட ஆதிபகவன், அந்தணன், இறைவன் என்று பொதுவான பெயர்களால்தான் கடவுளைக் குறிப்பிடுகிறாரே ஒழிய சிவன், திருமால், விநாயகர், ரிஷபநாதர், இயேசு என்பதைப்போல எந்தவொரு பெயரையும் குறிப்பால்கூட உணர்த்தவில்லை.

2. அடியளந்தான் என்ற சொல்லினால் மூன்று அடிகளால் உலகம் முழுவதையும் அளந்த தெய்வமாகப் போற்றப்படுகின்ற திருமாலைக் குறிப்பிட வள்ளுவர் உண்மையிலேயே விரும்பியிருந்தால் திருமால் அடியளந்த நிகழ்வினைப்பற்றிக் கண்டிப்பாக வேறு ஒருகுறளில் சிறிய குறிப்பின் மூலமாவது குறிப்பிட்டிருப்பார். ஏனென்றால், அப்படிக் குறிப்பிட்டால்தான் அக்குறளைச் சரியாகப் புரிந்துகொள்ள முடியும். இல்லையேல் அடியளந்தான் என்னும் சொல்லினால் மன்னனைத்தவிர வேறுயாரை வள்ளுவர் அக்குறளில் குறிப்பிடுகிறார் என்று மக்களால் புரிந்துகொள்ள முடியாது. இதனை மதிநுட்பம் கொண்ட நம் ஐயன் நன்கு அறிவார். ஆனால் அவரோ வேறு எந்தக்குறளிலும் திருமால் அடியளந்த நிகழ்வினைப் பற்றியோ திருமாலைப் பற்றியோ குறிப்பிடவில்லை.

3. ஏன், 1103 ஆம் குறளில் வரும் தாமரைக்கண்ணான் என்ற சொல்லினால் வள்ளுவர் திருமால் தெய்வத்தைக் குறித்திருக்கிறாரே என்று சிலர் கேட்கலாம். இது தவறான கருத்தாகும். உண்மையில் தாமரைக்கண்ணான் என்பது தாமரைக்கு அண்ணான் என்று விரிந்து தாமரைக்குப் பகைவன் என்ற பொருளில் சந்திரனைக் குறிப்பதாகும். சந்திரனைக் குறிக்கத் திங்கள் என்ற சொல்லை அவர் அக்குறளில் பயன்படுத்தாத காரணம், எதுகைமோனை (தாம்வீழ்வார் - தாமரைக்கண்ணான்) அணிநயம் கருதியே ஆகும். 1103 ஆம் குறளின் கருத்துபற்றி முழுமையாகத் தெரிந்துகொள்ள தாமரைக்கண்ணான் உலகு என்ற ஆய்வுக்கட்டுரையினை இந்த இணையதளத்திலேயே படிக்கலாம்.

மேற்காணும் கருத்துக்களின் அடிப்படையில், இக்குறளில் வரும் அடியளந்தான் என்னும் சொல் திருமால் தெய்வத்தைக் குறித்து வந்திருக்க வாய்ப்பில்லை என்பது உறுதிசெய்யப்படுகிறது.

தாஅயது என்றால் தாவிய / கடந்த பரப்பு ஆகுமா?

' தாஅயது எல்லாம் ஒருங்கு ' என்பதற்குத் ' தாவிய / கடந்த பரப்பு அனைத்தையும் பெறமுடியும் ' என்று உரையாசிரியர்கள் அனைவரும் பொருள் உரைக்கின்றனர். ஒருமன்னன் சோம்பலின்றி எவ்வளவுதான் முயன்றாலும் உலகம் அனைத்தையும் தனது காலடியின்கீழ் கொண்டுவருதல் என்பது சாத்தியம் தானா?. இத்துணை ஆண்டுகளில் அப்படி யாரேனும் ஒரு மன்னன் செய்திருக்கிறானா?. என்றெல்லாம் எண்ணிப் பார்க்கவில்லை உரையாசிரியர்கள். வள்ளுவர் ஒருவேளை உயர்வுநவிற்சியாக இதனைக் கூறியிருக்கலாம் என்று நினைத்திருப்பார்கள். ஆனால், வள்ளுவரின் உளப்பாங்கோ வேறுவிதமானது. ஒருமன்னன் தனது பகைவர்களை அழிக்கவேண்டி தனது நாட்டினைக் கடந்துசென்று போரின்மூலமாகவோ பிறவழிகளிலோ அவர்களை அழித்துவிட வேண்டும் என்றுதான் பல குறள்களின் வாயிலாகக் கூறியிருக்கிறார். அதில் சில குறள்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
சேராது இயல்வது நாடு. - 734.

உயிர்ப்ப உளரல்லர் மன்ற செயிர்ப்பவர்
செம்மல் சிதைக்கலா தார். - 880

ஒருமன்னன் தனது பகைவர்களை அழிப்பதற்காகப் போர்தொடுப்பதை ஆதரிக்கும் வள்ளுவர் தனது ஆட்சிப்பரப்பினை விரிவுபடுத்தவேண்டி ஒரு மன்னன் போர்தொடுக்கலாம் என்று எங்கேயும் ஆதரித்துக் கூறவில்லை. இதைப் பற்றி விரிவாகக் கீழே காணலாம்.

போர்செய்து நாடுபிடித்தலை வள்ளுவர் ஆதரித்தாரா?.

அடியளந்தான் என்னும் சொல் திருமால் தெய்வத்தைக் குறிக்காது என்று மேலே கண்டோம். என்றால், அச்சொல் வேறு யாரைக் குறிக்கும்?. ஐயமின்றி அது மன்னனைத்தான் குறிக்கும். கலைஞர் கருணாநிதியும் கூட தனது விளக்கவுரையில், அடியளந்தான் என்ற சொல்லுக்கு மன்னனைத்தான் பொருள்கொள்ளுகிறார். ஆனால், அடியளந்தான் என்பதற்குத் தனது அடிகளால் நடந்தவன் என்ற வகையில் அது மன்னனைக் குறிப்பதாகப் பொருள்கொள்கிறார். இது தவறாகும். அதுமட்டுமின்றி, கலைஞர் கருணாநிதி உட்பட உரையாசிரியர்கள் அனைவரும் ' ஒரு மன்னன் தனது சோம்பலற்ற முயற்சியினால் இந்த உலகம் முழுவதையும் தனது காலடியின்கீழ்க் கொண்டுவந்து விடலாம். ' என்ற ஒருமித்த கருத்தினையே இக்குறளுக்குக் கூறுகின்றனர். இக்கருத்து வள்ளுவரின் உளப்பாங்குடன் பொருத்தமானதா என்று பார்க்கலாம்.

கலைஞர் கருணாநிதி சொல்வதைப்போல ஒரு மன்னன் தனது காலடிகளால் நடந்துவிட்டால் போதும் அந்த இடமனைத்தையும் அவனது காலடிக்கீழ்க் கொண்டுவந்து விடமுடியுமா?. போர்செய்து வெற்றிபெற வேண்டாமா?. உரையாசிரியர்கள் அனைவரும் கூறுவதைப்போல, உலகம் முழுவதையும் ஒருமன்னன் தனது காலடியின் கீழ்க் கொண்டுவருவது என்றால், எத்தனை போர்களை அம்மன்னன் மேற்கொள்ளவேண்டும்?. இப்போர்களால் எவ்வளவு இயற்கைவளங்கள் அழியும்?. எத்தனை எத்தனை உயிர்கள் பலியாகும்?. ' நீ சோம்பலின்றி முயன்றால் உலகம் அனைத்தையும் உனது காலடியின்கீழ்க் கொண்டுவரலாம் ' என்று ஒரு மன்னனை நோக்கிக் கூறுவது அப்பட்டமாக அவனைப் பலபோர்களைச் செய்யத் தூண்டுவதே ஆகுமன்றோ?. போரின் பின்விளைவுகளை எல்லாம் அறிந்தவரான கருணைக்கடல் ஆகிய திருவள்ளுவர், இப்படிப்பட்ட பொருளில் ஒரு அறிவுரையினை மன்னனுக்குச் சொல்வாரா?. ஒருபோதும் அப்படிச் சொல்லியிருக்க மாட்டார். மாறாக, போரின் பின்விளைவுகளால் பாதிக்கப்பட்ட பிறநாட்டு மக்களையும் தன்நாட்டு மக்களைப் போல அரவணைத்துச் செல்லவேண்டும் என்றே கூறுவார். இதனைக் கீழ்க்காணும் குறளின்மூலம் அவரே உறுதிப்படுத்துவதைப் பாருங்கள்.

பொறையொருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்கு
இறையொருங்கு நேர்வது நாடு. - 733.

கடும்வறட்சி, கொடுங்கோன்மை, பகையரசு கைப்பற்றல் போன்ற காரணங்களால் வேற்றுநாட்டில் இருந்து குடிப்பெயர்ந்துவரும் மக்கள் மற்றும் அவர்தம் விலங்குகள் ஆகிய பெரும்பாரத்தைத் தாங்கியும், அவ்வாறு புதிதாக வந்தவர்களும் தமது இறைவனாகிய மன்னனுக்கு வேண்டிய இறைப்பொருள் அனைத்தையும் அளிக்கும்வகையில் வளம்மிக்கதுவும் ஆகியதே நாடு என்று மேற்காணும் குறளில் கூறுகிறார் வள்ளுவர். நாடு என்று இடப்பெயரால் குறித்தாலும் அது அரசனின் ஆணைக்குட்பட்ட காரணத்தினால் மறைமுகமாக அந்நாட்டு அரசனைக் குறிப்பதாகவேக் கொள்ளவேண்டும். அதாவது, வேற்றுநாட்டில் இருந்து தன்நாட்டிற்குத் தஞ்சம் என்றுவந்த மக்களையும் ஏற்றுக்கொண்டு அவர்களையும் தன்நாட்டு மக்களைப் போலவே கருதி தன்நாட்டு வளங்களைப் பயன்படுத்தி மகிழ்ச்சியுடன் வாழவே ஒரு மன்னன் வகைசெய்ய வேண்டும் என்பதே இக்குறளில் வள்ளுவரின் உட்கிடையாக இருப்பதை அறியலாம்.

இதிலிருந்து, போர்செய்து நாடுபிடித்தலை வள்ளுவர் ஆதரிக்கவில்லை என்பதும் இக்குறளுக்கு உரையாசிரியர்கள் கூறியுள்ள கருத்துக்கள் அனைத்தும் வள்ளுவரின் உளப்பாங்குடன் பொருந்தாதவை என்பதும் உறுதிசெய்யப்படுகிறது.

திருந்திய பொருள் விளக்கம்:

இக்குறளுக்கான திருந்திய விளக்கத்தினைக் காணும்முன்னர், இக்குறளில் வரும் சில சொற்களுக்கான புதிய பொருட்களை அறிந்துகொள்ளவேண்டும். இக்குறளில் வரும்,

அடி என்ற சொல் செல்வத்தினையும்
அளத்தல் என்ற சொல் கொடையாகக் கொடுத்தலையும்
தாயது என்ற சொல் உரிமையானது என்ற பொருளையும் குறிக்கும்.

மேற்காணும் புதிய பொருட்கள் அனைத்தும் தமிழ் அகராதிகள் கீழே கண்டபடி கூறுவதுதான்.

அடி³ aṭi , n. < அடு¹-. [T. aḍugu, K. Tu. aḍi, M. aṭi.] 1. Foot; பாதம். (பிங்.) 2. Measure of a foot = 12"; அடியளவு. 3. Footprint; காற் றடம். (சம். அக.) 4. Metrical line, of which there are five kinds, viz., குறளடி, சிந்தடி, அளவடி or நேரடி, நெடிலடி, கழிநெடிலடி. அடுத்து நடத்தலி னடியே (இலக். வி. 711). 5. Base, bottom; கீழ். 6. Stand, support, foundation; அடிப்பீடம். புஷ்கரபத்திமடல் அடியோடுமொன்று (S.I.I. ii, 15). 7. Beginning; ஆதி. நடுவின் முடிவினி லடியி னன் றான பொருள் (ஞானவா. சனகரா. 22). 8. Source, root of words or plants, origin of lineage, ancestry, or family; மூலம். (தாயு. தேசோ. 10.) 9. Antiquity; பழைமை. 10. Place; இடம். (பிங்.) 11. Racecourse; வையாளிவீதி. (சூடா.) 12. A conventional term in gambling; சூதாடுவோர் குழூஉக்குறியுளெரன்று. அடியிது பொட்டையீ தென்பர் (கந்தபு. கயமுகனு. 168). 13. Indulgence in intoxicating drinks; மதுபானம். Parav. 14. Riches, wealth; ஐசுவரியம். அடியுடையார்க்கெல் லாம் சாதித்துக்கொள்ளலாமே (ஈடு, 4, 2, 9). 15. Nearness, proximity; சமீபம். கிணற்றடியில் நிற் காதே. Colloq. 16. Plan of action; உபாயம். நல்ல அடி எடுத்தாய். Colloq.

அள-த்தல் aḷa- , [K. M. aḷa.] 12 v. tr. 1. To measure, fathom; அளவிடுதல். அடி யளந்தான் (குறள், 610). 2. To extend to, reach; எட்டுதல். மெளலியண்ட முகட்டினை யளப்ப (கூர்மபு. தக்கன்வேள். 16). 3. To test by the logical modes of proof; பிரமாணங்கொண்டறிதல். (சி. சி. அளவை. 4, சிவஞா.) 4. To consider; கருதுதல். ஊற ளந் தவர்வயின் (கலித். 17). 5. To gossip; வீண்பேச் சுப்பேசுதல். வாயில் வந்தபடியெல்லாம் அளக்கிறான் 6. To limit, define, determine the bounds of; வரையறுத்தல். அவையளந் தறியினு மளத்தற் கரியை (புறநா. 20, 5). 7. To give, render, offer; கொடுத்தல். (பு. வெ 8, 29.)--v. intr. 1. To talk together, hold converse; அளவளாவுதல். (கல்லா. 18, 36.) 2. To mingle, blend; கலத்தல்.

தாயம் tāyam (p. 200) {*}, s. a portion, an inheritance, உரிமை; 2. dice to play with, a kind of backgammon board, கவறு; 3. a relation by the fathers's side; 4. affliction, distress, தவதாயம்; 5. good opportunity, juncture, சமயம்; 6. a play with tamarind stones; 7. a stop, delay, தாக்காட்டு. தாயக்கட்டை, dice, a cubical piece in the play of dice. தாயங்கிடைக்க, to get a good opportunity. தாயதி, தாயத்தனம், kinship. தாயத்தார், paternal kinsman or heirs. தாயபாகம், a division of an estate. தாயமாட, to play dice, to gamble; 2. to be tardy, தாமதஞ் செய்ய. தாயம் போட, to cast dice. தாயம் விழுதல், the lucky falling of dice. தாயவிதைப்பு, seasonable sowing.

தாயம் = உரிமை என்பதிலிருந்தே, தாயது = உரிமையானது என்பதும் பெறப்படுகிறது. தாயாதிகள் என்பது உரிமைக்குரியவர்கள் என்னும் பொருளில் பங்காளிகளைக் குறிப்பதற்கும் இதுவே அடிப்படையாகும். இனி, இப்புதிய பொருட்களின் அடிப்படையில், இக்குறளுக்கான திருந்திய விளக்கம் இதுதான்:

தனக்கு உரிமையான அனைத்துச் செல்வங்களையும் கொடையாகக் கொடுத்தவனாகிய ஒரு அரசன் தனது சோம்பலற்ற முயற்சியினால் அவையனைத்தையும் மீண்டும் பெற்றுவிடமுடியும்.


நிறுவுதல்:

இக்குறளுக்கான புதிய விளக்கம் எப்படிப் பொருந்தும் என்பதனைப் பல விளக்கங்களுடனும் ஆதாரங்களுடனும் விரிவாகக் காணலாம். இதற்கு முதலில் ஒரு அரசனுக்குரிய பல்வேறு பண்புகள் எவையென்று வள்ளுவர் பட்டியலிடுவதைப் பற்றிக் காணவேண்டியது அவசியமாகிறது. இறைமாட்சி என்னும் அதிகாரத்தில் ஒரு மன்னனுக்குரிய பண்புகளைப் பற்றிக் கூறுமிடத்து, கொடை அளித்தலும் ஒரு மன்னனுக்குரிய பண்புகளில் ஒன்றே என்று சில குறள்களின் மூலம் வலியுறுத்துகிறார்.

அஞ்சாமை ஈகை அறிவுஊக்கம் இந்நான்கும்
எஞ்சாமை வேந்தர்க்கு இயல்பு. - 382.

துணிவு, கொடை, அறிவு, ஊக்கம் ஆகிய நான்கும் ஒரு மன்னனுக்கு நீங்காமல் இருக்கவேண்டிய பண்புகள் என்று இக்குறளில் கூறுகிறார். ஒருநாட்டை ஆளும் மன்னனே ஆனாலும், இல்லை என்று தன்னிடம் வந்தவர்க்குக் கொடையளிக்கும்போது இன்சொற்களைக் கூறியே கொடையளிக்க வேண்டும். அவ்வாறு செய்தால், குடிமக்கள் யாவரும் தன்சொல்லைப் பேணுபவராய் தான்காண விரும்பியவாறே ஒழுகுவர் என்று கீழ்க்காணும் குறளில் கூறுகிறார்.

இன்சொலால் ஈத்தளிக்க வல்லார்க்குத் தன்சொலால்
தான்கண் டனைத்திவ் வுலகு. - 387.

அதுமட்டுமின்றி, கொடை, அருள், செங்கோன்மை, குடிமக்களைக் காத்தல் ஆகிய நான்கினையும் உடைய அரசனே ஏனை அரசர்களுக்கெல்லாம் ஒளியாக விளங்கி வழிகாட்டுபவன் ஆவான் என்று கீழ்க்காணும் குறளில் கூறுகிறார்.

கொடை அளி செங்கோல் குடியோம்பல் நான்கும்
உடையானாம் வேந்தர்க்கு ஒளி. - 390.

இப்படி மேற்காணும் மூன்று குறள்களாலும் ஒரு அரசனுக்குரிய கொடைப்பண்பினைப் போற்றுகின்ற வள்ளுவர், கொடையினால் ஒரு மன்னன் தனது செல்வங்கள் அனைத்தையும் இழந்துவிட்ட போதிலும் தனது சோம்பலற்ற முயற்சியினால் அனைத்தையும் மீண்டும் பெற்றுவிடமுடியும் என்று நமது தலைப்புக் குறளில் இவ்வாறு கூறுகிறார்.

தாஅயது எல்லாம் அடியளந்தான் மடியிலா மன்னவன் ஒருங்கு எய்தும்.

இழந்ததை எப்படி மீண்டும் பெறுவது என்பதனையும் கீழ்க்காணும் குறளின் மூலம் அரசனுக்கு விளக்குகிறார் வள்ளுவர்.

இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்லது அரசு. - 385.

பொருள்வரும்வழி உட்பட பல்வேறு சட்டதிட்டங்களை முறைப்படி இயற்றுவதும் அவற்றின் வழியாகப் பொருட்களை ஈட்டுவதும் ஈட்டிய பொருட்களைப் பாதுகாப்பதும் பாதுகாத்து வைத்தவற்றை முறையாக வகுத்துக் கொடை போன்றவற்றுக்குச் செலவுசெய்வதும் ஒரு அரசன் சோம்பலின்றித் திறம்படச் செய்யவேண்டிய பணிகளாகும் என்று மேற்காணும் குறளில் விளக்குகிறார். இப்படி ஒருநாட்டு மன்னன், தனது உலகமாகிய மக்களுக்கான சட்டதிட்டங்களை இயற்றி வழிநடத்திச் செல்வதால் அவனை 'உலகியற்றியான்' என்று கீழ்க்காணும் குறளில் கூறுவார் வள்ளுவர்.

இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான். - 1062.

இந்த உலகியற்றியான் ஆகிய மன்னன், சட்டதிட்டங்களைத் தவறாக வகுத்து மக்களிடம் இருந்து அறமற்ற வழிகளில் பொருள் ஈட்டுவானாகில், புரப்பவரின்றி மக்கள் பிச்சையெடுத்துண்ணும் இழிநிலைக்கே தள்ளப்படுவர் அன்றோ?. அப்படி யாரேனும் ஒருநாட்டில் உழைத்துவாழ வழியின்றிப் பிச்சையெடுத்துண்டு வாழ்வரேல், அதற்குக் காரணமான அந்நாட்டு மன்னனும் ஒருநாள் அதைப்போலவே அலைந்துதிரிந்து பிச்சையெடுத்து அழிவதாக என்று மேற்காணும் குறளில் மன்னனுக்குச் சாபம்விடுகிறார் வள்ளுவர். இக்குறளைப் பற்றி மேலதிக தகவல்களை அறிந்துகொள்ள 'உலகியற்றியான் யார்?' என்ற ஆய்வுக் கட்டுரையினைப் படிக்கலாம்.

முடிவுரை:

இதுவரை கண்டதிலிருந்து, ஒரு மன்னன் தனது சோம்பலில்லாத முயற்சியினால் மீண்டும் பெறத்தக்கவையாக வள்ளுவர் இக்குறளில் கூறியிருப்பது பொருட்செல்வங்களேயன்றி நாடு முதலான இடங்களை அன்று என்று தெளிவாகப் புரிந்து கொள்ளலாம். அப்படித் திரும்பப் பெறுமிடத்து, அம்மன்னன் அறமற்ற வழிகளைக் கையாண்டால் அந்நாட்டில் பிச்சைக்காரர்களே மிக்கிருப்பர் என்றும் ஒருநாள் அம்மன்னனும் பிச்சைக்காரனைப் போல அலைந்துதிரிந்து கெடுவான் என்றும் வள்ளுவர் சாபம் விடுத்திருப்பதைத் தற்போது நம் நாட்டை ஆள்பவர்கள் கவனித்துச் சிந்தித்துச் செயல்படுவார்களாக !!!

******** வாழ்க தமிழ் ! வளர்க வள்ளுவம் !! *************