வெள்ளி, 26 ஜனவரி, 2018

ஆண்டாளின் பாடல்கள் மரபு மீறலா?



ஆண்டாளின் பாடல்கள் மரபு மீறலா?

ஆண்டாள் தமிழத்தில் 7ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வைணவ ஆழ்வார்களுள் ஒருவர். வைணவம் போற்றும் 12 ஆழ்வார்களில் இவர் ஒருவரே பெண்ணாவார். திருப்பாவை, நாச்சியார் திருமொழி என்னும் இரண்டு பாடல் தொகுதிகளை ஆண்டாள் இயற்றியுள்ளார். வைணவ சமய நூல்கள் கூறும் இவரது வரலாறு இறைவன் மீது இவர் கொண்டிருந்த காதலை விளக்கும் வித்தியாசமான ஒரு வரலாறாகும். ஆண்டாள் பூமிப் பிராட்டியின் அவதாரமாய் கருதப்பட்டு பல்லோரால் பூசித்துத் தொழப்படுபவர்.

ஆண்டாள் தனது பாடல்களில் பல இடங்களில் முலை, கொங்கை ஆகிய சொற்களைப் பயன்படுத்தி இருக்கிறார். இதில், சில இடங்களில் மட்டுமே இச்சொற்களை மார்பகம் என்ற பொருளில் பாடியுள்ளார். ஏனை இடங்களில் வரும் முலை, கொங்கை ஆகிய சொற்களுக்கு மார்பகம் என்ற பொருள் பொருந்தாது. அந்தப் பொருளில் ஆண்டாளும் பாடவில்லை. ஆனால், நமது உரையாசிரியர்கள் முலை, கொங்கை என்ற சொற்கள் வருகின்ற அனைத்து இடங்களிலும் மார்பகம் என்ற ஒரே பொருளைக் கொண்டதனால் ஆண்டாள் தவறாகப் புரிந்துகொள்ளப் பட்டுள்ளார்.

அதாவது, ஆண்டாள் காமஇச்சை மிகுந்த நிலையில் தனது உள்ளுறுப்புக்களைப் பற்றி மரபினை மீறிப் பாடியிருப்பதாகவே பெரும்பாலோர் நம்புகின்றனர். ஆண்டாள் பக்திநிலையில் பாடிய இப்பாடல்வரிகளை ஆன்மீக ரீதியாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் சிலர் கூறுகின்றனர். எது எவ்வாறாயினும், ஆண்டாள் பாடிய முலையும் கொங்கையும் ஆண்டாளை ஒரு புரியாத புதிராக மக்களிடையே தோற்றுவித்து விட்டதனை யாரும் மறுக்க இயலாது.

உண்மையில் பார்த்தால், ஆண்டாள் எதையும் தவறாகப் பாடவில்லை. பெண்களின் முலை, கொங்கை பற்றிப் பாடல் இயற்றுவது இலக்கிய மரபுதான். சொல்லப்போனால், முலையும் கொங்கையும் சங்க இலக்கியங்களில் இருந்தே பாடப்பட்டு வருவதுதான். சங்க இலக்கியங்கள் மட்டுமின்றி, கம்பராமாயணத்தில் கூட சீதையின் முலை, கொங்கை பற்றி ஏராளமான இடங்களில் கம்பர் பாடியிருக்கிறார்.(4). இவர்களது பாடல்களைப் படிக்கும்போது அவற்றில் வரும் முலை, கொங்கை ஆகிய சொற்களுக்குப் பொருள் கொள்ளும்போதுதான் தவறு நேர்ந்துவிட்டது.

ஒரு சொல்லுக்கு ஒரு பொருள்தான் என்ற நிலை தமிழ் இலக்கியத்தில் ஒருபோதும் இல்லை என்று நாம் அனைவரும் நன்கு அறிவோம். சான்றாக, அரி என்ற ஒரேயொரு பெயர்ச்சொல்லுக்கு மட்டும் 67 விதமான பொருட்கள் இருப்பதனைச் சென்னை இணையத் தமிழ்ப் பேரகராதி காட்டுகிறது. 1000 ஆண்டுகளுக்கு முன்னால், இச்சொல்லுக்கு இத்தனை விதமான பொருட்கள் கண்டறியப்பட்டிருக்குமா என்றால் இல்லை. காலப்போக்கில் நிகழ்த்தப்பட்ட பல்வேறு ஆய்வுகளின் மூலமே புதிய பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டு அவற்றை அகராதிகளில் சேர்த்திருக்க வேண்டும். இதைப்போன்ற ஒரு நிலையே முலை, கொங்கை, அல்குல் ஆகிய சொற்களுக்கு இப்போது ஏற்பட்டுள்ளது. 

முலை, கொங்கை ஆகிய சொற்களுக்குப் பெண்களின் மார்பகம் மட்டுமே அகராதிகளில் பொருளாகக் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் இச்சொற்களுக்கு கண், கண்ணிமை ஆகிய பொருட்களும் உண்டு. இதைப்பற்றிப் பல ஆய்வுக் கட்டுரைகள் எழுதப்பட்டு விட்டன. அவற்றில் சில கட்டுரைகள் ஆதாரங்களாகக் காட்டப்பட்டுள்ளன. ஆனால், இப்புதிய பொருட்கள் தமிழ் அகராதிகளில் சேர்க்கப்பட்டிராத காரணத்தினால், பல இடங்களில் பொருள்மயக்கம் ஏற்பட்டுத் தவறான உரை விளக்கங்கள் எழுதப்பட்டு விட்டன. விளைவு?. கம்பனும் இராமனும் ஆண்டாளும் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுப் பெருமை இழந்து நிற்கின்றனர். இது யார்செய்த தவறு? பாடல்களைப் பாடிய கம்பன் மற்றும் ஆண்டாளின் தவறா? இல்லை அவர்களது சொற்களைச் சரியாகப் புரிந்துகொள்ளாமல் தவறாகப் புரிந்துகொண்ட நமது தவறா?. தவறு யார்மீது என்று சிந்திக்கவேண்டும்.

சங்ககாலத்துக்கு முன்னால் எழுதப்பட்ட தமிழ் இலக்கியங்கள் எதுவும் நமக்குக் கிடைக்கவில்லை. அதனால் சங்க இலக்கியங்களை அடியொற்றியே பின்னால் வந்த இலக்கியங்கள் பலவும் எழுதப்பெற்றன. ஆண்டாளின் பாடல்களும் சங்க இலக்கிய மரபுகளை மீறாமல் அப்படியே எழுதப் பெற்றவைதான். முலையும் கொங்கையும் சங்க இலக்கியங்களில் என்ன பொருட்களில் பயன்படுத்தப் பட்டனவோ அதே பொருட்களில் தான் ஆண்டாளும் அவற்றைப் பயன்படுத்தி இருக்கிறார். அதுமட்டுமல்ல, சங்க இலக்கியங்களின் பல மரபுக் கூறுகளையும் அப்படியே தனது பாடல்களில் எடுத்தாண்டுள்ளார். இதற்குப் பல சான்றுகளை இங்கே நாம் காணப்போகிறோம்.

செவ்வண்ண மை பூசப்பட்ட பெண்களின் திரண்ட கண் இமைகளைக் குங்குமச் சிமிழுடன் ஒப்பிடுவதும் புள்ளிகளால் வரையப்பட்டு அழகுசெய்யப்பட்ட பெண்களின் நெற்றிப் பகுதியினைப் பொறிகளை உடைய நல்ல பாம்புடன் ஒப்பிடுவதும் ஏராளமான சங்கப் பாடல்களில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.(1) ஆண்டாளும் அந்த மரபின்படியே கீழ்க்காணும் பாடல்களில் அந்த உவமைகளைப் பாடுகிறாள்.

புற்று அரவு அல்குல் புனமயிலே போதராய் - திரு.484

புற்றில் வாழும் பாம்பினைப் போல புள்ளிகளால் அழகுசெய்யப்பட்ட நெற்றியினை உடையவளே புனமயிலே என்று அழைக்கிறாள் ஆண்டாள். இதில் வரும் அல்குல் என்பது நெற்றியினைக் குறிப்பதாகும். (2)

செப்பென்ன மென்முலைச் செவ்வாய்ச் சிறு மருங்குல்
நப்பின்னை நங்காய் திருவே துயில் எழாய்  - திரு. 493

குங்குமச்சிமிழ் போல செவ்வண்ண மை பூசிய மென்மையான சிறிய இமைகளையும் சிவந்த கடைக்கண் ஈற்றினையும் உடைய நப்பின்னையே துயில் எழுவாய் என்கிறாள் ஆண்டாள். இப்பாடலில் வரும் முலையும் மருங்குலும் சங்க இலக்கியங்களைப் போலவே கண் இமைகளைக் குறித்து வந்துள்ளன. (3)

ஒரு குழந்தை தனது தாயின் முலையில் பால்குடிக்கும்போது இடையிடையே தனது பிஞ்சு விரல்களால் அன்னையின் முகத்தினை கண்களைத் தடவி வருடிக் கொடுக்கும். இடையிடையே தாயின் முகம் பார்த்துச் சிரிக்கும். குழந்தையின் இக்குறும்புகள் அனைத்தும் அன்னைக்குப் பேரின்பம் தரும். தன்னைத் தாயாகவும் கண்ணனைக் குழந்தையாகவும் கருதிய ஆண்டாள் கண்ணனிடம் இவ்வாறு கூறுகிறாள்: " குழகனே ! கோவிந்தா ! உன் வாயிலே என் மார்பகம் இருக்க, நீ உனது இளந்தளிர் போன்ற கையினால் எனது கண்ணை வருடிக்கொண்டே நடுநடுவே சிரித்துக்கொண்டே என்னைப் பார்க்க நான் என்னையே இழந்தேன். " என்று கூறுகிறாள் கீழ்க்காணும் பாடலில்.

குழகனே என்றன் கோமளப் பிள்ளாய்
கோவிந்தா என் குடங்கையில் மன்னி
ஒழுகு பேரெழில் இளஞ்சிறு தளிர்போல்
ஒருகையால் ஒரு முலைமுகம் நெருடா
மழலை மென்னகை இடையிடை அருளா
வாயிலே முலை இருக்க என் முகத்தே
எழில்கொள் நின்திருக் கண்ணிணை நோக்கத்
தன்னையும் இழந்தேன் இழந்தேனே - நாச். 714

மேற்காணும் பாடலில் முதலில் வரும் முலை என்னும் சொல் கண்ணையும் இரண்டாவதாக வரும் முலை என்னும் சொல் மார்பகத்தையும் குறிக்கும். மேலே கண்டதைப் போன்ற ஒரு அழகான ஓவியக் காட்சி சங்க இலக்கியத்திலும் உண்டு.(5). ஆக, மேற்காணும் பாடலிலும் சங்க இலக்கிய மரபினை மீறாத ஒரு சூழலே இருப்பதனை அறியலாம்.

குத்து விளக்கெரிய, கட்டில்மேல் மெத்தென்ற பஞ்சின்மேல் கண்ணனும் நப்பின்னையும் சேர்ந்து படுத்திருக்கிறார்கள். நப்பின்னையின் கொங்கை ஆகிய கண்களுக்கு மேலாக நெற்றிப் பகுதியில் கொத்தாக அலர்ந்த பூமாலையினைச் சூட்டிய நிலையில் கண்ணன் கண்ணயர்ந்திருக்கிறான். இவ்வாறு மாலை அணிவது தமிழரின் மரபுதான். பெண்கள் தமது நெற்றிப் பகுதியில் பூமாலைகளைச் சூடிக் கொள்வதைச் சங்க இலக்கியத்திலும் பல இடங்களில் காணலாம்.(2) சிறிதும் விரசமில்லாத அருமையான மரபுவழியான பொருளிலே இப்பாடலை ஆண்டாள் பாடியிருக்கிறாள். அந்தப் பாடல்வரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

குத்து விளக்கெரிய கோட்டுக் கால் கட்டில் மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேல் ஏறிக்
கொத்தலர் பூங்குழல் நப்பினை கொங்கை மேல்
வைத்துக் கிடந்த மலர் மார்பா வாய் திறவாய் .... - திரு. 492.

இப்பாடலில் வரும் கொங்கை என்பது கண்களைக் குறித்து வந்துள்ளது. (4) ஆனால் அதற்கு மார்பகம் என்று பொருள்கொண்டு மிக அசிங்கமாக உரை எழுதி இருக்கின்றனர். இது யாருடைய தவறு?.

அடுத்து நாச்சியார் திருமொழியில் காமதேவனைப் பார்த்து ஆண்டாள் வேண்டுகிறாள்: " காமதேவா ! திரிவிக்கிரமன் ஆகிய கண்ணனே தனது திருக்கரங்களால் எனது திரண்ட கண்களையும் இமைகளையும் தீண்டவேண்டும். " இப்பாடலில் வரும் வயிறும் முலையும் கண்களைக் குறித்து வருபவை. சொல்லப்போனால் இந்தப் பாடலையும் ஆண்டாள் மரபுசார்ந்தே பாடியிருக்கிறாள். காதலியின் கண்களைத் தொட்டு அவளது இமைகளின்மேல் வண்ண வண்ண மையிட்டுக் காதலன் அழகு செய்து பார்ப்பது சங்க இலக்கியங்களில் பல பாடல்களில் காணப்படுகிறது. சங்கத் தமிழரின் மரபுப் படியே, தனது காதலன் ஆகிய கண்ணனே தனது கண்களைத் தீண்டி அழகுசெய்ய வேண்டும் என்று ஆண்டாள் விரும்புகிறாள். சிறிதும் விரசமில்லாத இந்தப் பாடல்வரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

திரிவிக்கிரமன் திருக்கைகளால் என்னைத் தீண்டும்வண்ணம்,
சாயுடை வயிறும் என் தடமுலையும்
தரணியில் தலைப்புகழ் தரக்கிற்றியே. - நாச். 510

ஆனால், இப்பாடலில் வரும் வயிறு, முலை ஆகிய சொற்களுக்குத் தவறான பொருள்கொண்டு அசிங்கமாக விளக்கம் எழுதியுள்ளனர். இது யாருடைய தவறு?.

அதுமட்டுமல்ல, தனது கண்களைச் சிவப்புத் துணியால் கட்டிக்கொண்டு, கோவிந்தனுக்கு அல்லாமல் எனது கொங்கை ஆகிய கண்கள் வேறு யாருக்கும் வாயில் போகாது அதாவது திறக்காது என்ற பொருளில் கீழ்க்காணும் பாடலில் பாடுகிறாள் ஆண்டாள்.

அங்கைத் தலத்திடை ஆழிகொண்டான்
அவன் முகத்தன்றி விழியேனென்று,
செங்கச்சுக் கொண்டு கண் ஆடை ஆர்த்துச்
சிறுமானிடவரைக் காணில் நாணும்,
கொங்கைத் தலம் இவை நோக்கிக் காணீர்
கோவிந்தனுக்கு அல்லால் வாயில்போகா ..... - நாச். 620

ஆண்டாளின் இந்தப் பாடலும் மரபு சார்ந்ததுதான். பின்னாலிருந்துகொண்டு கண்களைக் கைகளால் பொத்திக்கொண்டு விளையாடுவதும் துணியால் கண்களைக் கட்டிக்கொண்டு விளையாடுவதும் சங்கத் தமிழர் மரபுதான். ஆனால் வழக்கம்போல, இந்தப் பாடலில் வரும் கொங்கையும் தவறாகவே புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. இது யாருடைய தவறு?

கண்ணனின் வரவை எதிர்பார்த்துக் காத்திருக்கிறாள் ஆண்டாள். அப்போது வானத்தில் கருமேகங்கள் கூடிக் குழுமுகின்றன. அந்த மேகங்களைக் கண்டதும் ஆண்டாளுக்குள் ஓர் எண்ணம் தோன்றுகிறது. கண்ணனும் கார்மேகங்களும் வேறல்லவே. எனது விருப்பங்களை இந்த மேகங்களிடம் கூறினால் அது கண்ணனிடம் கூறியதைப் போலத்தான். இதைக்கேட்டு கண்ணன் விரைந்தோடி வருவான் என்று எண்ணியவள் மேகங்களைப் பார்த்து இவ்வாறு கூறுவாள்: " ஓ மேகங்களே ! வேங்கடவனின் திருமார்பில் பொருந்துவதற்கு எனது கொங்கை ஆகிய கண்கள் பெரு விருப்பம் கொண்டுள்ளன. எனது இந்த விருப்பத்தை அந்தக் கண்ணனிடம் சென்று உரையுங்களேன் " என்று மேகங்களைத் தூது விடுகிறாள் ஆண்டாள் கீழ்க்காணும் பாடலில்.

மின்னாகத்து எழுகின்ற மேகங்காள்
........... என் ஆகத்து இளங்கொங்கை
விரும்பித்தாம் நாடோறும்,
பொன் ஆகம் புல்குதற்கு என்
புரிவுடைமை செப்புமினே. - நாச். 580

கண்ணனோ இன்னும் வந்தபாடில்லை. கண்ணனை எண்ணி எண்ணி ஆண்டாளின் முலை ஆகிய கண்களின் முகடுகளில் நீர் திரள்கிறது. திரண்ட நீர்த்துளிகள் அப்படியே துளித்துளியாய் வழியத் துவங்குகின்றன. வருத்தம் தாளாமல் மேகங்களிடம் முறையிடுகிறாள். என்னை அழவைப்பது கண்ணனுக்குப் பெருமை சேர்க்குமா? என்று மேகங்களைப் பார்த்துக் கேட்கிறாள் கீழ்க்காணும் பாடலில்.

விண்ணீல மேலாப்பு விரித்தாற்போல் மேகங்காள்,
......... கண்ணீர்கள் முலைக்குவட்டில்
துளிசோரச் சோர்வேனை,
பெண்ணீர்மை ஈடழிக்கும்
இதுதமக்கோர் பெருமையே? - நாச். 577

" கண்ணன் வரட்டும். அவனை அப்படியே ஆரத் தழுவிக் கொள்வேன். அப்போது எனது கொங்கை ஆகிய கண்ணிமைகளின்மேல் நான் பூசியிருக்கும் குங்குமப் பூச்சு அழிந்து அவன் மார்பில் ஒட்டிக்கொள்ளும். ஒரேயொரு நாள் என் கண்ணன் என்னுடன் தங்கியிருந்தால் போதும்; நான் உயிர்வாழ்வேன். இல்லாவிட்டால் நான் இறப்பது உறுதி." என்று தனது அளப்பரிய காதலைப் பாடலாக வடிக்கிறாள் ஆண்டாள் கீழ்க்காணும் பாடலில்.

சங்கமா கடல்கடைந்தான் தண்முகில்காள்
......... கொங்கைமேல் குங்குமத்தின்
குழம்பழியப் புகுந்து,ஒருநாள்
தங்குமேல் என் ஆவி
தங்கும் என்று உரையீரே. - நாச். 583

ஆண்டாளின் மேற்காணும் பாடல்களும் தமிழர் மரபு சார்ந்ததுதான். பெண்கள் தமது கொங்கை ஆகிய கண்களின்மேல் இமைப்பரப்பில் குங்குமத்தால் கொடிபோல எழுதி அழகுசெய்து கொள்வது சங்ககாலம் தொட்டே நடந்துவருவதுதான். பல சங்க இலக்கியப் பாடல்களில் இது பதிவுசெய்யப்பட்டுள்ளது. பொதுவாக, ஒரு ஆணின் தோள் உயரமே ஒரு பெண் இருப்பாள் ஆதலால் காதலனைக் கட்டி அணைக்கும்போது காதலியின் இமைகளின்மேல் பூசியிருக்கும் பூச்சுக்கள் காதலனின் மார்பில் பட்டு அழிவதுடன் காதலனின் மார்பில் கறையினை உண்டாக்கும். இதுவும் சங்க இலக்கியப் பாடல்களில் கூறப்பட்டுள்ளது. சங்ககாலத் தமிழரின் மரபினை மீறாமலே ஆண்டாளும் இந்தப் பாடலில் அச்செய்தியைக் கூறியிருக்கிறாள். ஆனால், கொங்கை என்பதற்கு மார்பகம் என்ற பொருளைக் கொண்டு தவறான உரையினை எழுதி இருக்கின்றனர். இது ஆண்டாளின் தவறா?.

கண்ணனை எதிர்நோக்கி ஆண்டாள் உள்ளம் உருகிக் காத்திருக்கிறாள். அப்போது அவளது கண்கள் அவளைப் படுத்தும்பாடு பெரும்பாடு. கண்ணன் அதோ வந்துவிடுவான், இதோ வந்துவிடுவான் என்று அவனைக் காணப்போகும் ஆசையினால் அவளது கொங்கை ஆகிய கண்கள் அடிக்கடி கிளர்ந்து குழைவதும் பின்னர் குதூகலிப்பதுமாக அவளது உயிரை ஆர்ப்பரிக்கச் செய்கிறது. கண்களின் ஆர்ப்பாட்டத்தினைத் தாங்கமுடியாதவளாய்க் கண்ணனைச் சீக்கிரம் வரச்சொல்லிக் கூவுமாறு குயிலை வேண்டுகிறாள். அதை அப்படியே கீழ்க்காணும் பாடலாக வடிக்கிறாள் ஆண்டாள்.

பொங்கிய பாற்கடல் பள்ளி கொள்வானைப்
புணர்வதோர் ஆசையினால் என்
கொங்கை கிளர்ந்து குமைத்துக் குதுகலித்து
ஆவியை ஆகுலஞ் செய்யும் .... - நாச். 551

கண்ணனை எதிர்பார்த்துக் காத்திருக்கும் வேளையில், ஒருவேளை கண்ணன் வந்தவுடன் என்னைப் பிரிந்து சென்றுவிட்டால்?. என்று ஐயமுறுகிறது ஆண்டாளின் பேதை நெஞ்சம். என்ன செய்யலாம்?. என்று அச்சமுற்றுக் கலங்கியவள், தனது தோழிகளை நோக்கி இவ்வாறு கூறுகிறாள்: " கோபாலன் வந்துவிட்டால் அவனது திரண்ட தோள்களுடன் இதுநாள்வரையில் சேர்ந்திராத என் குற்றம் தீருமாறு எனது முலை ஆகிய கண்கள் அவனது மார்புகளைவிட்டுப் பிரியாவண்ணம் எங்கள் இருவரையும் அமுக்கிக் கட்டுங்கள். ". என்று ஆவலுடன் தன்னைத் தயார்செய்து கொள்கிறாள் ஆண்டாள் கீழ்க்காணும் பாடலில்.

குற்றமற்ற முலைதன்னைக்
குமரன் கோலப் பணைத்தோளோடு,
அற்ற குற்றம் அவைதீர
அணைய அமுக்கிக் கட்டீரே. - நாச். 633

கண்ணன் வருவதற்கு இன்னும் தாமதமாகிறது. காத்திருந்து பொறுமையிழந்த ஆண்டாளின் உள்ளம் பொங்குகிறது. அவள் அமைதியாய் இருந்தாலும் அவளது கண்கள் அமைதியாய் இருக்கவில்லை. அவளது பேச்சைக் கேட்காமலேயே கண்ணனுக்காக அவளது கண்களில் கண்ணீர் பெருகி ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்தக் கண்ணனாலும் பெருந்தொல்லை
இந்தக் கண்களாலும் பெருந்தொல்லை
இரண்டுமே என்பேச்சைக் கேட்பதில்லை
கண்ணன் வரட்டும்
இந்தக் கண்களை
வேரோடு பிடுங்கி
அவன் மார்பின்மீதே
விட்டெறிந்து விடுகிறேன்.

என்று குமுறுகிறாள் ஆண்டாள் கீழ்க்காணும் பாடலில்.

உள்ளே உருகி நைவேனை
உளளோ இலளோ என்னாத,
கொள்ளை கொள்ளிக் குறும்பனைக்
கோவர்த்தனனைக் கண்டக்கால்,
கொள்ளும் பயனொன்று இல்லாத
கொங்கை தன்னைக் கிழங்கோடும்
அள்ளிப் பறித்திட்டு அவன் மார்வில்
எறிந்து என் அழலை தீர்வேனே. - நாச். 634

கண்ணகியின் கதை நாடறியும். பாண்டிய மன்னனின் தவறான தீர்ப்பினால் கோவலன் கொல்லப்படுகிறான். மைதீட்டி அழகுபார்க்கத் தனது கணவனே உயிருடன் இல்லாதநிலையில் மனம் வெறுத்துக் கதறி அழுகின்ற கண்ணகி, தனது இடது முலை ஆகிய இடது கண்ணினைப் பெயர்த்து மதுரைமீது விட்டெறிகிறாள். (1). கண்ணகியைப் போலவே ஆண்டாளுக்கும் அப்படிப்பட்ட ஒரு நிலைதான் இங்கே வருகிறது. கண்ணகியைப் போலவே தானும் தனது கொங்கை ஆகிய கண்களைப் பிடுங்கி எறிந்து விடுகிறேன் என்கிறாள். ஆண்டாளின் இந்தப் பாடலும் மரபு சார்ந்து எழுதப்பட்டதே என்பதற்குக் கண்ணகியின் கதை ஒரு சான்றாகும்.

இன்றைய தமிழ் அகராதிகளை அடிப்படையாகக் கொண்டு, முலையும் கொங்கையும் மார்பகத்தினை மட்டுமே குறிப்பதாகப் புரிந்து கொண்டதால் ஆண்டாளின் பாடல்கள் எப்படியெல்லாம் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டன என்பதைப் பல சான்றுகளுடன் மேலே கண்டோம். சங்கத் தமிழரின் மரபுகளை மீறாமல்தான் ஆண்டாள் பாடல்களை இயற்றியுள்ளார் என்பதனையும் அறிந்தோம்.

ஆண்டாளின் மீதான தவறான பார்வை
இனியேனும் மாறட்டும் !
ஆண்டாளின் பெருமையினை நன்கு உணர்ந்து
அகிலமே கூறட்டும். !!

ஆதாரங்கள்:


(1). கண்ணகி மதுரையை எரித்தது எப்படி?

(2) அழகின் மறுபெயர் அல்குல்

(3) மருங்குல் என்றால் என்ன?

(4) கொங்கை என்பது மார்பகமா?

(5) சிறுபுறம் என்பது ....

வியாழன், 18 ஜனவரி, 2018

சங்க இலக்கியத்தில் விலங்கியல் - 5 - கரடி



முன்னுரை:

கரடி - என்றவுடன் உடலெல்லாம் கருகரு முடியுடன் பெரிய கால்களுடன் மிக மெதுவாக அசைந்து அசைந்து வரும் அந்த கருநிறக் கரடி தான் நமது நினைவுக்கு வரும். கரடி ஒரு காட்டுவிலங்கு என்பதால் பொதுவாக அதை ஊர்களில் பார்க்கமுடியாது. ஆனால் பல ஆண்டுகளுக்கு முன்னால்வரை, தெருக்களில் கரடியை நடனமாடச் செய்தும் பயந்த கோளாறு மற்றும் நோய்தீர வேண்டி தாயத்தை மந்திரிக்கச் செய்து கொடுத்தும் கரடிகளைக் கொண்டு முகத்தில் காற்றினை ஊதச்செய்தும் காசு பார்த்தனர். கரடிகளில் கருப்பு, பழுப்பு, வெள்ளை என்று பலவகைகள் உண்டு என்ற நிலையில், சங்க இலக்கியத்தில் எவ்வகைக் கரடிகள் பற்றிப் பேசப்பட்டுள்ளது என்பதை இக்கட்டுரையில் விரிவாகக் காணலாம்.

சங்க இலக்கியத்தில் கரடி:

சங்ககாலத் தமிழகத்தில் வாழ்ந்த கரடியானது ஆங்கிலத்தில் Sloth Bear என்று அழைக்கப்படும் தேன்கரடி வகையைச் சார்ந்ததாகும். இதனுடைய விலங்கியல் பெயர் மெலர்ஸஸ் உர்சினஸ் ( Melursus Ursinus ) ஆகும். இந்தியக் காடுகள் மற்றும் மலைகளில் அதிகம் காணப்படும் இவ்வகைக் கரடிகளைப் பற்றி சங்க இலக்கியங்கள் ஏராளமான செய்திகளைப் பதிவுசெய்து வைத்துள்ளன. கரடியின் உடலின் நடுவில் கூன் இருக்கும் என்றும் அதன் மயிரானது கருநிறத்தில் இருந்ததால் அதனைக் கார்மேகம், இருள் துண்டம், கருப்பு ஆடு ஆகியவற்றுடன் ஒப்பிட்டும் கூறுகிறது. கரடியின் தலைமயிரானது பனைமரத்தின் நாரினைப் போலப் பருத்துக் காணப்பட்டதாகக் கூறுகிறது. கரடியின் தலையானது கவிழ்த்து வைத்ததைப் போன்று இருந்தது என்றும் அதன் முகம் ஊமணாமூஞ்சி போல அழகற்று இருந்ததாகவும் அதன் பிளந்த வாயானது தீப்பிழம்பு போலச் சிவந்து இருந்ததாகவும் கூறுகிறது. கரடி தனது முன்னங்கால்களைக் கைகளாகப் பயன்படுத்தும் என்றும் கை மற்றும் கால்களில் ஏராளமான முடி நிறைந்திருக்கும் என்றும் கூறுகிறது. பாதங்கள் சற்றே மேடுதட்டியநிலையில் வளைந்து காணப்படும் என்றும் கால்களில் இருக்கும் நகங்கள் உளிபோல நீளமாகக் கூர்மையுடன் இருக்கும் என்றும் அறியப்படுகிறது. தேன்கரடிகள் விரும்பி உண்ணும் உணவாகக் கறையான், இலுப்பைப்பூ, இலுப்பைக்கனி, கொன்றைப்பழம் ஆகியவற்றைக் கூறுகிறது. தேன்கரடிகள் பெரும்பாலும் இரவில் தான் இரைதேடிச் செல்லும் சென்ற செய்தியும் இவை மரத்தின்மேல் ஏறுவதில் வல்லவை என்ற செய்தியும் சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது. தேன்கரடிகள் கறையான் புற்றுக்களைத் தாக்கி அழித்து எவ்வாறு கறையான்களைப் பிடித்துண்ணும் என்ற செய்தியை இரும்பு செய்யும் கொல்லனின் செய்கையுடன்  ஒப்பிட்டு விரிவாகச் சொல்கிறது.

கரடி - பெயர்களும் காரணங்களும்:

உடம்பெல்லாம் கருகருவென்று முடியுடைய இந்த விலங்கினை நாம் கரடி என்ற பெயரால் தான் குறிப்பிடுகிறோம். ஆனால், சங்க இலக்கியத்தில் ஒரு பாடலில் கூட கரடி என்ற பெயர் காணப்படவில்லை என்பது வியப்பைத் தரும் செய்தியாகும். சங்க இலக்கியத்தில் மட்டுமின்றி, சங்கமருவிய காலத்து நூல்களான பதினெண் கீழ்க் கணக்கு நூல்களிலும் கரடி என்ற பெயர் காணப்படவில்லை. எனவே, கரடி என்ற பெயர் பிற்காலத்தில் தான் ஏற்பட்டிருக்க வேண்டும் என்று தெரிகிறது.

ஆய்வுசெய்ததில், கரடி என்னும் விலங்கினைக் குறிக்கும் பெயர்களாக எண்கு, உளியம், பெருங்கை ஆகியவற்றைத் தான் சங்க இலக்கியங்கள் பதிவு செய்துள்ளன. இவற்றுள்,

எண்கு என்பது கருநிற மயிரை உடையது என்ற பொருளில் ஏற்பட்டதாகும்.
உளியம் என்பது உளிபோல நீண்ட கூரிய நகங்களை உடையதால் ஏற்பட்ட பெயராகும்.
பெருங்கை என்பது பெரிய வலிய கைகளை அதாவது முன்னங்கால்களை உடையது என்ற பொருளில் எழுந்தது.

கரடி என்னும் பெயர், சங்க இலக்கியங்களில் காணப்படவில்லை என்றாலும், கருமை + அடி அதாவது கரிய கால்களை உடையது என்பதின் அடிப்படையில் கரடி என்ற பெயர் இவ் விலங்கிற்கு ஏற்பட்டிருக்கலாம்.

கரடியின் உடலும் மயிரும்:

தமிழகக் காடுகளில் வாழ்ந்த தேன்கரடியின் உடலைப் பற்றிக் கூறும்போது, அவை நடுமுதுகில் கூன் விழுந்ததைப் போல மேல்நோக்கிய வளைவுடன் இருந்ததாகக் கீழ்க்காணும் சங்கப்பாடல் கூறுகிறது.

கூனல் எண்கின் குறுநடைத் தொழுதி - அகம். 112

கரடியின் உடலெங்கும் மயிர் மிக்கிருந்ததைப் பற்றிக் கீழ்க்காணும் பாடல் கூறுகிறது.

எண்கின் பரூஉ மயிர் ஏற்றை - நற். 325

கரடியின் உடலெங்கும் நிறைந்திருந்த மயிரின் நிறம் பற்றிக் கூறுமிடத்து, அவை கருநிறம் கொண்டவை என்று நேரடியாகக் கூறாமல் சில உவமைகளின் மூலம் உய்த்துணர வைத்துள்ளனர் சங்ககாலப் புலவர்கள். கார்மேகம் போன்றும் இருளின் துண்டம் போன்றும் ஆடு போன்றும் தோன்றியதாகக் கூறும் பாடல்களில் இருந்து அதனை உறுதிசெய்து கொள்ளலாம்.

மாரி எண்கின் மலைச்சுர நீள் இடை   - நற். 192

கரடியினை மாரியுடன் அதாவது கார்மேகத்துடன் ஒப்பிடுகிறது மேற்பாடல் வரி. இதைப்போலவே, கீழ்க்காணும் பாடலும் கரடிகளைக் கார்மேகங்களுடன் ஒப்பிடுகிறது.

அரவின் ஈர் அளை புற்றம் கார் என முற்றி
இரை தேர் எண்கு இனம் அகழும் - நற்.336

பொதுவாக, பாம்புக்கும் கார்மேகத்திற்கும் ஆகாது. அதாவது, பாம்புகள் எங்கிருந்தாலும் அவற்றைத் தேடிப்பிடித்துக் கொல்வதைப்போல கார்மேகங்கள் எழுப்பும் இடியோசையினைக் கேட்ட நாகங்கள் துடிதுடித்து இறந்துபடும். இதைப்பற்றிக் கூறும் சங்கப் பாடல்கள் ஏராளமாக உள்ளன. அவற்றை விரிவாகப் பாம்பு என்னும் புதிய கட்டுரையில் காணலாம். எப்படி கார்மேகங்கள் பாம்புகளைத் தேடி முற்றுகை இடுமோ அதைப்போலக் கரடிகள் பாம்புகள் வாழும் புற்றினைச் சூழ்ந்து தாக்கியதாக மேற்பாடல் வரிகள் கூறுகின்றன.

பெரும் கை எண்கின் பேழ் வாய் ஏற்றை
இருள் துணிந்து அன்ன குவவு மயிர் குருளை - அகம். 201

இருளின் துண்டம் போல கரடி தோன்றியதாக மேற்பாடல் வரிகள் கூறுகின்றன.

ஆடு பரந்து அன்ன ஈனல் எண்கின் - அகம். 331

கரடிகள் நடந்துசெல்லும்போது பின்புறமாக இருந்து அவற்றைப் பார்ப்பதற்கு, உடலெங்கும் அடர்த்தியாகக் கருமயிரை உடைய கருப்பு ஆடுகள் ஊர்வதைப் போலத் தோன்றியதாக மேற்பாடல் வரி கூறுகின்றது. தமிழக மலைகளில் வாழ்ந்துவந்த இந்த ஆட்டினம் தற்போது முற்றிலும் அழிந்துவிட்டதாகத் தெரிகின்றது.

இரும் பனை வெளிற்றின் புன் சாய் அன்ன
குரூஉ மயிர் யாக்கை குடா அடி உளியம்     - திரு. 313

கரடியின் உடலில் இருந்த மயிரானது, பனைமரத்தின் செறும்பு அதாவது நார்போலத் தோன்றியதாக மேற்பாடல் வரிகள் கூறுகின்றன.

கரடியின் தலை:

கரடியின் தலை பற்றிக் கூறும்போது, கவித்தலை என்று குறிப்பிடுகிறது சங்க இலக்கியம்.

கவித்தலை எண்கின் பரூஉ மயிர் ஏற்றை - நற். 325

கரடியின் தலையானது கவிழ்த்து வைத்ததைப் போல இருந்ததாக மேற்பாடல் வரி ஏன் கூறுகிறது என்று பார்க்கலாம். பொதுவாக, ஒரு வாளியைக் கவிழ்த்து வைத்தால் எப்படித் தோன்றும்?. கீழ்ப்புறத்தில் அகன்றும் மேலே செல்லச்செல்ல சிறுத்துக் குறுகியும் தோன்றும் அல்லவா?. அதைப்போல, கரடியின் தலையானது துவக்கத்தில் பெரிதாகவும் முன்னால் செல்லச்செல்ல சிறுத்துக் குறுகியும் இருப்பதால், அதனைக் கவித்தலை என்று இலக்கியம் குறிப்பிடுகிறது.

கரடியின் முகம் பற்றிக் கூறுகையில், உம்மென்று சுருங்கியதாய் ஒரு ஊமணாமூஞ்சி போலப் பொலிவற்று அதாவது அழகற்று இருந்ததாகக் கீழ்க்காணும் பாடல் குறிப்பிடுகிறது.

ஊமை எண்கின் குடாஅடிக் குருளை - மலை. 501

இப்பாடலில் வரும் ஊமை என்பது வாய்பேசாத் தன்மையைக் குறித்து வராமல் உம்/ஊம் என்று குவிந்து இருக்கும் பொலிவற்ற முகத்தைக் குறித்து வந்துள்ளது. அடுத்ததாகக் கரடியின் வாயினைப் பற்றிக் கூறுமிடத்து, பகுவாய் என்றும் பேழ்வாய் என்றும் அழல்வாய் என்றும் சங்க இலக்கியம் குறிப்பிடுகிறது.

இரை தேர் எண்கின் பகு வாய் ஏற்றை - நற். 125
பெரும் கை எண்கின் பேழ் வாய் ஏற்றை - அகம். 201
இரும் கிளை எண்கின் அழல் வாய் ஏற்றை - அகம். 247

பகுவாய் என்பதும் பேழ்வாய் என்பதும் பிளந்த வாயினையுடையது என்று பொருள்படும். பிளந்த நிலையில் காணப்பட்ட அதன் வாயின் உட்பகுதியானது தீயினைப் போலச் செந்நிறத்தில் காணப்பட்டதால் அழல்வாய் என்று இலக்கியம் கூறுகிறது. அருகில் உள்ள படம் கரடியின் தலை மற்றும் வாயின் அமைப்பினைக் காட்டும்.

கரடியின் கால்/கை:

கரடியானது தனது முன்னங்கால்களைத் தனது கைகளாகப் பயன்படுத்தும். இவை பின்னங்கால்களைக் காட்டிலும் அளவில் பெரியவை மட்டுமின்றி வலிமை மிக்கவையும் கூட. இதனால்தான் இதற்குப் பெருங்கை என்ற பெயரும் உண்டானது. இதைப்பற்றிக் கூறும் சில பாடல்கள் சான்றாகக் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

பெரும்கை எண்கின் இரும் கிளை கவரும் - அகம். 149
பெரும்கை எண்கின் சுரன் இறந்தோரே - அகம். 171
பெரும்கை எண்கின் பேழ் வாய் ஏற்றை - அகம். 201

கரடியின் கைகள் வலிமை மிக்கவை என்று கீழ்க்காணும் அகப்பாடலும் கூறுகிறது.

வன்கை எண்கின் வய நிரை பரக்கும் - அகம். 15

கரடியின் உடல் மட்டுமின்றி, கால்கள் முழுவதிலும் கருநிற மயிர் அடர்ந்திருக்கும் என்ற செய்தியைக் கீழ்க்காணும் சங்கப்பாடல் பதிவு செய்துள்ளது.

மயிர்க்கால் எண்கின் ஈர் இனம் கவர -அகம். 267

கரடியின் முன்னங்கால்கள் வலிமையானவை மட்டுமின்றி, அதன் விரல்கள் சற்று உள்நோக்கி வளைந்தும் காணப்படும். இதனால் தான் கரடியானது எளிதில் மண்ணைத் தோண்ட முடிகிறது. கரடியின் முன்னங்கால் விரல்களைக் கொடுவிரல் என்று சங்க இலக்கியம் கூறுகிறது.

கொடுவிரல் உளியம் கெண்டும் - அகம். 88

கரடியின் கால்பாதங்களைப் பற்றிக் கூறுமிடத்து, குடா அடி என்ற சொல்லால் சங்க இலக்கியம் குறிப்பிடுகிறது. காரணம், தேன்கரடியின் முன்னங்கால் பாதமானது சமதளமாக இல்லாமல் சற்று மேடுதட்டிய நிலையில் வளைந்து காணப்படும். இதைப்பற்றிய சில பாடல்வரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

ஊமை எண்கின் குடாஅடிக் குருளை - மலை. 501
குரூஉ மயிர் யாக்கை குடாஅடி உளியம்      - திரு. 313

கரடியின் முன்னங்கால் பாதங்களில் கூர்மையுடன் கூடிய நீண்ட நகங்கள் காணப்படும். இவை பார்ப்பதற்குக் கூரிய நீண்ட உளியைப் போல இருப்பதால் கரடிக்கு உளியம் என்ற பெயர் ஏற்பட்டது. கரடியின் பின்னங்கால்களைக் காட்டிலும் கைகளில் அதாவது முன்னங்கால்களில் காணப்படும் நகங்கள் மிக நீளமானவை. பாம்புப் புற்றைத் தோண்டுவதற்கும் அதில் வாழும் பாம்புகளைக் குத்திக் கொல்வதற்கும் எதிரிகளைத் தாக்கவும் பெரிதும் உதவுவது இந்த முன்னங்கால் நகங்களே ஆகும். இந்த நகங்களைப் பற்றிக் கூறும் சில சங்க இலக்கியப் பாடல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

வள் உகிர் இடப்ப வாங்கும் - நற். 325
வள் உகிர் கதுவலின் - அகம். 8

கரடியின் உணவு:

தமிழகக் காடுகளில் வாழ்ந்த தேன்கரடிகளின் முதன்மை உணவு கறையான் ஆகும். ஒரு புற்றுக்குள் வாழுகின்ற சிறியதும் பெரியதுமான கறையான்களின் தொகுதியினைக் குரும்பி என்ற சொல்லால் சங்க இலக்கியம் குறிப்பிடுகிறது. சான்றாகச் சில பாடல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

பெரும்கை எண்குஇனம் குரும்பி தேரும் - அகம். 307
குரும்பி வல்சி பெரும் கை ஏற்றை - அகம். 8
குரும்பி கெண்டும் பெரும் கை ஏற்றை - அகம். 72

இந்தக் குரும்பி என்பது எப்படித் தோன்றும் என்றால், தென்னையின் முற்றாத இளநீர்க் காயினுள் வெள்ளைநிறத்தில் கொழகொழவென காணப்படுகின்ற தேங்காயின் வழுக்கையினைப் போலத் தோன்றும். இதனால் தான் தென்னையின் முற்றாத இளநீர்க் காயினையும் குரும்பி / குரும்பை என்ற சொல்லால் தமிழ் அகராதிகள் கூறுகின்றன. மேலும் இந்தக் கறையான்கள் வாழும் புற்றின் அடியில் இருக்கும் மண் எப்போதும் அதிக ஈரத்துடன் இருப்பதால், ஈரம்மிக்க மண்குழியில் ஒன்றின்மேல் ஒன்றாக இருக்கும் வெண்ணிறக் கறையான்களின் கூட்டத்தினைப் பார்க்கும்போது அது ஒரு அகன்ற பாத்திரத்தில் ஊற்றி ஆறவைத்த வெண்ணிற அரிசிக் கஞ்சியினைப் போலத் தோன்றியதாகக் கீழ்க்காணும் பெரும்பாணாற்றுப்படைப் பாடல்வரிகள் கூறுகின்றன.

அவையா அரிசி அம்களி துழவை
மலர் வாய் பிழாவில் புலர ஆற்றி
பாம்பு உறை புற்றின் குரும்பி ஏய்க்கும்
பூம்புற நல்அடை அளைஇ - பெரும். 275

கறையான்களுக்கு அடுத்தபடியாக தேன்கரடிகளுக்கு மிகப்பிடித்தமான உணவு இலுப்பை என்று நாம் தற்போது அழைப்பதான இருப்பை மரத்தின் பூக்கள் ஆகும். இலுப்பை மரத்தின் பூக்கள் இனிப்புத் தன்மை மிக்கவை ஆகும். 'ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூச் சக்கரை' என்ற பழமொழிக்கேற்ப, இலுப்பை மரத்தின் பூக்களைச் சக்கரையாகப் பழங்காலம் தொட்டே மக்கள் பயன்படுத்தி வந்துள்ளனர். தேன்கரடிகளும் இலுப்பை மரத்தின் இனிப்பான வெண்ணிறப் பூக்களை விரும்பி உண்ட செய்திகளைக் கீழ்க்காணும் பாடல்கள் பறைசாற்றுகின்றன.

புல் அரை இருப்பை தொள்ளை வான் பூ
பெரும்கை எண்கின் இரும் கிளை கவரும் - அகம். 149

இலுப்பை மரத்தின் பூக்களை மட்டுமின்றி அவற்றின் இனிப்பான பழங்களையும் தேன்கரடிகள் விரும்பி உண்ட செய்தியினைக் கீழ்க்காணும் பாடல் கூறுகிறது.

பழம்போல் சேற்ற தீம்புழல் உணீஇய
கருங்கோட்டு இருப்பை ஊரும் பெரும்கை எண்கின் - அகம். 171

இலுப்பை மட்டுமின்றி, கொன்றை மரத்தின் குழல் போன்ற பழங்களையும் தேன்கரடிகள் விரும்பி உண்ட செய்தியினைக் கீழ்க்காணும் பாடல்வரிகள் கூறுகின்றன.

கொன்றை அம் சினை குழல் பழம் கொழுதி       
வன்கை எண்கின் வய நிரை பரக்கும் - அகம். 15

கரடியின் செயல்பாடுகள்:

தமிழகக் காடுகளில் வாழ்ந்த தேன்கரடியின் செயல்பாடுகளைப் பற்றிச் சங்க இலக்கியங்கள் பதிவுசெய்துள்ள செய்திகளைக் கீழ்க்காணும் தலைப்புக்களின் கீழ் காணலாம்.

1. இரவில் உணவு தேடுதல்
2. மரம் ஏறுதல்
3. புற்றுக்களை அழித்தல்.

1. இரவில் உணவு தேடுதல்:

தேன்கரடிகள் இரவில் இரைதேடும் தன்மை கொண்டவை. இதனால் இவற்றை இரவாடி என்று விக்கிபீடியா குறிப்பிடுகிறது. இவற்றின் உடலும் கருமைநிறத்தில் இருப்பதால், முழுநிலா வெளிச்சத்தில் அன்றி ஏனைய இரவுகளில் இவற்றைக் காண்பது கடினம். முழுநிலா ஒளிவீசும் இரவுகளில் காடுகளின் வழியாகப் பயணம் செய்வோர் இவற்றால் தாக்கப்படுவதுண்டு. இரவுநேரத்தில் தலைவியைச் சந்திக்க வரும் தலைவனிடம், வழியில் திடும் என்று எதிர்ப்படும் கரடிகளால் ஏற்படும் துன்பத்தை எடுத்துச்சொல்லி இரவில் சந்திக்க வரவேண்டாம் என்று கூறுவதைப் போல பல பாடல்கள் இயற்றப்பட்டுள்ளன. அவற்றில் ஒருசில பாடல்களை மட்டும் இங்கே காணலாம்.

இரை தேர் எண்கின் பகு வாய் ஏற்றை ......
.......... நடுநாள் வருதல் அஞ்சுதும் யாம் என - நற். 125

கூனல் எண்கின் குறு நடை தொழுதி .........
..........இரை நசைஇ பரிக்கும் அரைநாள் கங்குல்- அகம். 112

மேற்காணும் பாடல்களில் வரும் நடுநாள், அரைநாள் என்பவை நள்ளிரவு நேரங்களைக் குறிப்பவை. நள்ளிரவுப் பொழுதிலும் இரை இருக்கும் இடத்தினைச் சரியாகக் கண்டறிந்து கூட்டமாகவும் சென்று உண்ணும். பெரும்பாலும் இரவில் இரைதேடும் தன்மை கொண்டவை என்றாலும் சிலசமயங்களில் அரிதாகப் பகலிலும் இரைதேடிச் செல்வதுண்டு. அதுபற்றியதொரு பாடல்கீழே:

நாள் உலா எழுந்த கோள் வல் உளியம் - அகம். 81

2. மரம் ஏறுதல்:

கரடிக்குப் பிடித்தமான உணவுகளில் இலுப்பைமரத்தின் பூக்களும் கனிகளும் கொன்றை மரத்தின் குழல் போன்ற பழங்களும் உண்டு என்று மேலே கண்டோம். இந்த மரங்களின் கீழே தானே உதிர்ந்துகிடக்கின்றவற்றை உண்டதுபோக, மரத்தில் இருப்பதையும் உண்ண விரும்பும் கரடிகள் தாமே மரத்தில் ஏறிச்சென்று உண்ணும். இக் கரடிகள் மரத்தில் ஏறிச்செல்வதற்கு ஏதுவாக இவற்றின் பாதங்களின் அமைப்பும் நீண்ட நகங்களும் உதவியாய் இருக்கின்றன. தேன் கரடிகள் மரம் ஏறுதலைப் பற்றிய செய்தியினைக் கீழ்க்காணும் சங்கப் பாடல் பதிவுசெய்துள்ளது.

கீழ்ப்படு தாரம் உண்ணா மேல் சினை
பழம் போல் சேற்ற தீம் புழல் உணீஇய
கரும் கோட்டு இருப்பை ஊரும்
பெரும் கை எண்கின் சுரன் இறந்தோரே - அகம். 171

கீழே கிடந்த உணவுப்பொருளை உண்ணாமல், உயரமான கிளைகளில் இருந்த இனிப்பான சேற்றினை உடைய கனிகளை உண்ண விரும்பிய கரடிகள் இருப்பை மரத்தின் மேல் ஏறியதைப் பற்றி மேற்பாடல் வரிகள் கூறுகின்றன.

3. புற்றுக்களை அழித்தல்:

தேன்கரடிகளுக்கு மிகப் பிடித்தமான முதன்மை உணவு கறையான் பூச்சிகள் என்று மேலே கண்டோம். இந்தக் கறையான்கள் பார்ப்பதற்கு அளவில் மிகச்சிறியவையாக இருந்தாலும் மிக உயரமான புற்றுக்களைக் கட்டும் திறன் கொண்டவை. மரங்களின் அடிப்பகுதிகளிலும் சுவர்களின் அடியிலும் புற்றை அமைத்து அதனுள் கூட்டம் கூட்டமாக வாழ்கின்ற இவற்றை உண்ண விரும்பும் கரடிகள் புற்றின் அடிப்பகுதியில் மறைந்து இருக்கும் கறையான்களை எவ்வாறு பிடித்துண்ணும் என்பதைப் பற்றிச் சங்க இலக்கியங்கள் கூறும் செய்திகளை இங்கே காணலாம்.

தேன்கரடியானது முதலில் புற்றின் அடிப்பகுதியினைத் தனது கைகளில் உள்ள கூரிய நகங்களைக் கொண்டு தோண்டும். பின்னர் கையை உள்ளேவிட்டு பாம்பு ஏதேனும் இருந்தால் அதனைத் தனது கூரிய நகங்களைக் கொண்டு குத்திக்கொன்று வெளியே எடுத்து வீசிவிடும். பின்னர் தனது வாயினால் காற்றை ஊதிப் புற்றுக்குள் இருக்கும் புழுதிபோன்ற மண்ணை வெளியேற்றும். அதன்பின், மறுபடியும் தனது வாயினைப் புற்றுக்குள் நுழைத்து தனது உதடுகளை நீட்டிக் குவித்துக் கறையான்களை அப்படியே உறிஞ்சி உண்ணும். இச்செய்திகளைப் பதிவுசெய்து வைத்துள்ள சங்கப் பாடல்கள் சில மட்டும் சான்றாகக் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

அரவாழ் புற்றம் ஒழிய ஒய்யென
முரவு வாய் வள் உகிர் இடப்ப வாங்கும்      - நற். 325

தேன்கரடிகள் கறையான்புற்று அழியுமாறு தனது கைநகங்களால் தோண்டிய செய்தியினை மேற்பாடல் வரி விளக்குகிறது.

புற்றத்து அல்குஇரை நசைஇ வெள்அரா மிளிர வாங்கும்
பிள்ளை எண்கின் மலை வயினானே - அகம். 257

புற்றுக்குள் இருக்கும் கறையான்களை உண்ண விரும்பிய குட்டிக்கரடியானது புற்றுக்குள் இருந்த வெள்ளைநிறப் பாம்பினைக் கொன்று கையில் எடுத்த செய்தியினை மேற்பாடல் கூறுகிறது.

கொல்லன் ஊது உலை குருகின் உள் உயிர்த்து அகழும் - நற். 125

தேன்கரடியானது, கொல்லனின் ஊதுலையில் ஊதப்படும் துருத்தியைப் போலப் புற்றுக்குள் தனது வாயை நுழைத்துக் காற்றை ஊதி மண்ணை நீக்கிய செய்தியினை மேற்பாடல் வரி விளக்குகிறது.

அது ஒரு நள்ளிரவு நேரம். இருளைக் கிழிப்பதைப் போல வானம் மின்னிப் பெருமழை பொழிந்ததால் எங்கும் குளிர்ச்சி மிக்கிருந்தது. அந்தப் பெரிய கறையான் புற்றினைச் சுற்றிலும் மின்மினிப் பூச்சிகள் ஒளிர்ந்தபடி பறந்து கொண்டிருந்தன. அப்போது அங்கு வந்த ஒரு தேன்கரடியானது, தனது கையினால் புற்றைத் தோண்டி வாயை உள்ளே நுழைத்து காற்றினை ஊத, அங்கிருந்து தெறித்துப் பறந்த மின்மினிப் பூச்சிகளானவை பார்ப்பதற்கு, இரும்பு செய்யும் கொல்லன் ஒருவன் தனது ஊதுலையில் துருத்தியால் காற்றினை ஊத, அப்போது அந்த உலையில் இருந்து தெறித்துப் பறக்கும் தீப்பொறிகளைப் போலத் தோன்றியதாகக் கூறும் கீழ்க்காணும் அகப்பாடல் அப்படியே அக்காட்சியினை நம் மனக்கண்ணில் கொண்டுவந்து விடுகிறது.

இருள் கிழிப்பது போல் மின்னி வானம்
துளி தலைக்கொண்ட நளி பெயல் நடுநாள்
மின்மினி மொய்த்த முரவு வாய் புற்றம்
பொன் எறி பிதிரின் சுடர வாங்கி
குரும்பி கெண்டும் பெரும் கை ஏற்றை
இரும்பு செய் கொல் என தோன்றும் ஆங்கண் - அகம். 72

முடிவுரை:

சங்ககாலத் தமிழகக் காடுகளில் வாழ்ந்துவந்த தேன்கரடிகளைப் பற்றிச் சங்க இலக்கியங்கள் கூறும் பல்வேறு செய்திகளைப் பற்றி மேலே கண்டோம். கரடியானது, இந்திய மொழிகளில் பல்வேறு பெயர்களில் குறிக்கப்படும் நிலையில், தெலுங்கில் கூறப்படும் எலுகு என்னும் பெயர், தமிழ்ப் பெயராகிய எண்கு என்பதுடன் நெருக்கமாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இறுதியாக, சிவபூசையில் கரடி என்று மக்கள் சொலவடையாகக் கூறுவதற்கும் இக்கட்டுரையில் வரும் கரடி என்னும் விலங்கிற்கும் எவ்விதத் தொடர்புமில்லை.