வெள்ளி, 30 ஆகஸ்ட், 2019

தாரமே தர்மம் (THAARAM IS THE ROOT FOR DHARMA)


தாரமே தர்மம் 
(THAARAM IS THE ROOT FOR DHARMA)

முன்னுரை:

சங்கத் தமிழ்ப் புலவர்களால் கிமு 800 – கிமு 700 வாக்கில் உருவாக்கப்பட்ட தமிக்ருதம் என்னும் மொழியே இன்றைய சமற்கிருத மொழியின் தாயாக விளங்கியது என்று தமிக்ருதம் – சமற்கிருத மொழியின் தாய் என்ற ஆய்வுக் கட்டுரையில் விரிவாகக் கண்டோம். அக் கட்டுரையின் தொடர்ச்சியாக வரும் இக் கட்டுரையில், தற்போது சமற்கிருத மொழியைச் சேர்ந்தவையாக அறியப்படும் சில சொற்கள் தமிக்ருத மொழியை எப்படிச் சேரும் என்று விளக்கங்களுடன் விரிவாகக் காணலாம்.

தாரம் என்றால் என்ன?

உணவுப் பொருளைக் குறிப்பதற்குச் சங்கத் தமிழில் மிசை, புகவு, உண்டி, அடிசில் என்று ஏராளமான பெயர்கள் உண்டு. அவற்றுள் தாரம் என்ற பெயரும் உண்டு. தாரம் என்ற பெயர்ச்சொல், உணவு என்னும் பொருளில் பல சங்கப் பாடல்களில் பயின்றுவரும் நிலையில் கீழே சில பாடல்கள் மட்டும் சான்றாகக் கொடுக்கப்பட்டுள்ளன.

கீழ்ப்படு தாரம் உண்ணா மேல் சினை - அகம் 171
தீம் பல் தாரம் முனையின் சேம்பின் - பெரும் 361
வடி சேறு விளைந்த தீம் பழ தாரம் - மலை 513

மேற்பாடல்களில் வரும் தாரம் என்பது இயற்கையாகக் கிடைக்கும் பழங்கள், கிழங்குகள் முதலாவனவற்றைக் குறிக்கப் பயன்பட்டிருப்பதைக் காணலாம்.

தாரம் என்பது இயற்கையாகக் கிடைக்கும் உணவுகளை மட்டுமின்றி சமைக்கப்பட்ட உணவுகளைக் குறிக்கவும் பயன்பட்டிருப்பதைக் கீழ்க்காணும் பாடல்களின் வழியாக அறிந்து கொள்ளலாம்.

வரையா தாரம் வரு விருந்து அயரும் - நற் 135
வருநர் வரையா செழும் பல் தாரம் கொளக்கொள குறையாது - பதி 88
 
தாரமும் தருதலும்:

தாரம் என்னும் சமைக்கப்பட்ட உணவினைப் பசியுடன் வந்தவர்க்கு “இல்லை” என்னாமல் வழங்கி அவரது பசிப்பிணியைப் போக்கிய செய்தியினையும் மேற்பாடல்களின் வழியாக அறிந்துகொள்ள முடிகிறது. அப்பாடல்களில் வரும் தாரம் என்பது பழங்கள் உட்பட பல்வேறு உணவுகளைக் குறிப்பதையும் அவற்றைப் பிறர் பசிதீர்க்க பயன்படுத்திய செய்தியையும் அப் பாடல் வரிகளில் இருந்தே அறிந்து கொள்ளலாம்.

அறம் செய்வதன் அடிப்படை வினையே பிறர் பசி தீர்த்தல் என்ற நிலையில், தாரம் என்னும் சொல்லானது உணவு என்னும் பொருளை மட்டுமின்றிப் பிறருக்குத் தரப்படுவது என்னும் பொருளையும் உடன் உணர்த்தி நிற்பதனை மேற்பாடல் வரிகளில் இருந்து அறியலாம். அதாவது,

தா (கொடு) >>> தரு >>> தாரம் = கொடுக்கப்படுவது, உணவு.

தாரமும் தர்மமும்:

மேற்கண்டவாறு, பிறர் பசி தீர்க்கப் பயன்படும் / கொடுக்கப்படும் உணவே தாரம் என்ற நிலையில், தாரம் என்ற சொல்லே அறத்திற்கு அடிப்படையாய் அமைவதை அறியலாம். இச் சொல்லே இந்தாரிய மொழிகளில் கீழ்க்காணுமாறு திரிந்து அறத்தைக் குறிக்கலாயிற்று.

தாரம் >>> த^ர்ம் (சமற்கிருதம், இந்தி, வங்காளம், பஞ்சாபி, ஒரியா, கன்னடம், மலையாளம், தெலுங்கு, மராத்தி, குசராத்தி) (விதி எண். 2, 4)

வி.2: குறுமோனை விதி – தாகாரம் குறுகி தகரம் ஆகியது.
வி.4: மெய்யெதுகை விதி – ரகரத்தின் உயிர் கெட்டு மெய் ஆகியது

மேற்கண்ட விதிகளின் படி, தாரம் என்னும் தமிழ்ச்சொல் த^ர்ம் என்னும் தமிக்ருதச் சொல்லாக மாறுகிறது. அதேசொல், பாலி மொழியில் கீழ்க்கண்டவாறு மாறுகிறது.

தாரம் >>> த^ம்ம (பாலி)

மரங்களும் கொடையும்:

பசியோடிருக்கும் ஒருவருக்கு எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி உணவளித்து அவரது பசியாற்றுவதே அறம் அல்லது தருமம் ஆகும். அவ்வகையில், எந்தவொரு விலங்கு அல்லது பறவையிடம் இருந்தும் எல்லா நேரங்களிலும் தருமத்தை நாம் எதிர்பார்க்க இயலாது. தனக்குப் போகவே தருமம் என்னும் கொள்கை உடையவை இவை.

ஆனால், பரந்து விரிந்த இவ் உலகில் பசித்திருக்கும் ஒருவருக்கு எவ்வித எதிர்பார்ப்புமின்றி உணவளித்துத் தருமம் செய்வதற்காகவே இயற்கையால் படைக்கப்பட்ட ஒரே உயிரினம் மரங்கள் மட்டுமே. காய்கள், கனிகள், இலைகள், தண்டுகள், பூக்கள், பட்டைகள், வேர்கள், கிழங்குகள் என்று தனது அனைத்து உறுப்புக்களையும் பிறர் பசி தீர்ப்பதற்கு அளித்து தருமம் செய்வதில் மரங்களுக்கு நிகர் மரங்களே அன்றி வேறு யாருமில்லை. இதைத்தான் வள்ளுவரும் கீழ்க்காணும் குறளில் இவ்வாறு கூறுவார்.

மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
பெருந்தகை யான்கண் படின் – 217

இங்கே மருந்து என்பது உணவு என்ற பொருளில் வந்துள்ளது. எப்படி மரமானது தன்னிடம் உள்ள அனைத்தையும் பிறருக்கு உணவாகவே கொடுத்துவிடுகிறதோ, பெருந்தகையான் கண்ணுள்ள மொத்த செல்வமும் பிறருக்கே பயன்படுவதாகும். இப்படி இயற்கை தருமத்தின் முதல் சான்றுகளாய் மரங்கள் விளங்க, தரு என்னும் தமிழ்ச்சொல்லே தமிக்ருதத்தில் மரங்களைக் குறிக்கப் பயன்படுகிறது.

தரு (மரம்) >>> தாரம் (உணவு)

கொடுப்பதே இயல்பு:

தன்னிடத்து இருப்பதனைப் பிறருக்குக் கொடுப்பதே இயல்பு ஆகும் என்று பல ஊழிகளாய் மரங்கள் சான்றுகாட்டி நிற்க, கொடுப்பதே இயற்கை அல்லது இயல்பு என்றானது. கொடையைக் குறிக்கும் தாரம் என்ற தமிழ்ச் சொல்லே தமிக்ருத மொழியில் இயல்பு அல்லது இயற்கைப் பண்பினையும் குறிக்கப் பயன்படலாயிற்று.

தாரம் (கொடுப்பது) >>> த^ர்ம (இயல்பு)

கொடுப்பவனே சான்றோன்:

கொடுப்பவன் உயர்ந்தவன்; கொள்பவன் தாழ்ந்தவன் என்ற கருத்து பன்னெடுங் காலமாகவே இருந்து வருகிறது. காரணம், கொடுப்பவன் உயரமான இடத்தில் இருந்து கொடுப்பதும் அதைக் கொள்பவன் தாழ்வான இடத்தில் இருந்து பெறுவதனாலும் ஆகும்.

கொடுத்தலைக் குறிக்கும் தாரம் என்ற தமிழ்ச் சொல்லே ‘உ’ என்னும் முன்னொட்டு பெற்று, கொடையைக் குறிக்கும் சொல்லாகத் தமிக்ருத மொழியில் கீழ்க்கண்டவாறு மாறுகிறது.

தாரம் (கொடை) >>> உதா`ர (கொடை)

கொடையாளியிடம் இருந்து கொடையைப் பெற்றவர்கள், ஏனையோரும் அக் கொடையாளியைப் போல பொருள் / உணவு கொடுத்து உதவ வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தும் நோக்கில், கொடையாளியை ஒரு சான்றோனாக, கொடைக்குச் சான்றாகத் திகழ்பவனாகப் பாராட்டுவது வழக்கமே. இதைச் சங்க இலக்கியப் பாடல்கள் பலவற்றிலும் காணலாம். இந் நிலையில், கொடையைக் குறிக்கும் தாரம் என்ற தமிழ்ச் சொல்லில் இருந்து சான்று என்ற பொருளைத் தரும் தமிக்ருத மொழிச் சொல் கீழ்க்கண்டவாறு பிறக்கும்.

தாரம் (கொடை) >>> உதா`ர >>> உதா`ரண (சான்று)

கொடுத்தலும் கொள்ளலும்:

தருமம் செய்பவர் பொருளைக் கொடுக்க, தருமம் பெறுபவர் அதைக் கொள்வார். அதாவது, தருமத்தின்போது கொடுத்தலும் பிடித்தலும் ஒன்றாய் நடக்கும். அதுமட்டுமின்றி, ஒருவருக்குத் தருமமாகப் பொருளை / உணவைக் கொடுக்கும்போது “ பிடி, கொள் “ என்று கூறியே கொடுக்கப்படும். அவ்வகையில், தரு என்னும் தமிழ்ச் சொல்லானது பிடி, கொள் என்னும் பொருளில் இந்தாரிய மொழிகளில் கீழ்க்காணும் வகையில் மாறுகிறது.

தரு (கொள்ளச்செய்) >>> த^ர்மன் (சம.), த^ரணே (மரா.), த^ரா (வங்.), த^ரவும் (குச.), தா^ரண் கரோ (இந்.), த^ரோ (ஒரி.) (=கொள்)

முடிவுரை:

சங்ககாலத் தமிழ்ச் சொல்லாகிய தாரம் என்ற சொல்லில் இருந்து த^ர்ம, தரு, உதா`ர, உதா`ரண, த^ர்மன் போன்ற பல சொற்கள் எவ்வாறெல்லாம் உருவாகின என்று விளக்கமாக மேலே கண்டோம். தாரமே தர்மத்தின் மூலம் என்று அறியாமல் தர்ம என்பதனைச் சமற்கிருத மொழியாகக் கருதி, அதனைத் தருமம் என்று தமிழ்ச் சொல்லாக மாற்றி இன்றுவரையிலும் தமிழர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இக் கட்டுரையின் மூலம் எது முந்தியது எது பிந்தியது என்ற தெளிவு உண்டாகட்டும்.

*************** தமிழ் வாழ்க ! **********************

வியாழன், 8 ஆகஸ்ட், 2019

சங்க இலக்கியத்தில் யானைமலை



முன்னுரை:

யானைமலை - மதுரை மாவட்டத்தில் கிழக்கு ஒன்றியத்தைச் சேர்ந்த ஒத்தக்கடை என்னும் ஊரில் அமைந்துள்ள ஒரு மலை ஆகும். மதுரைக்கு வடக்கே 7 கிலோ மீட்டர் தொலைவில் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இம்மலை அமைந்துள்ளது. இதன் நீளம் சுமார் 4000 மீ; அகலம் 1200 மீ; உயரம் 400 மீ. இம்மலையை சற்று தூரத்தில் இருந்து பார்த்தால் ஒரு யானை படுத்திருப்பது போலத் தோன்றுவதால் இது யானைமலை எனப் பெயர் பெற்றுள்ளது. இம்மலைக்கு நரசிங்கமங்கலம் என்ற பெயரும் உண்டு. இம்மலையின் உச்சியில் குகைத் தளம் காணப்படுகிறது. இக்குகைத் தளத்தில் சமணர் படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. அத்துடன், இக்குகை தளத்தில் கி.பி.முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் பிராமி கல்வெட்டுகள் காணப்படுகிறது. 

யானைமலையில் நரசிங்கப் பெருமாளின் திருவுருவம் பாறையைக் குடைந்து செதுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, முருகப் பெருமானுக்கு இலாடன் கோயில் எனும் குடைவரை கோவிலும் இங்கு உள்ளது. இக் கோயிலில் கிரந்த, வட்டெழுத்து, தமிழ் கல்வெட்டுகள் உள்ளன. இக்கல்வெட்டுகள், முற்காலப் பாண்டியர், சோழர், பிற்காலப் பாண்டியர், விசயநகர மன்னர் ஆகியோர் பல்வேறு காலகட்டங்களில் திருப்பணிகள் பல இக்கோயிலுக்குச் செய்திருக்கின்றனர் எனக் கூறுகிறது. கி. பி. 9 - 10 நூற்றாண்டுகளில், சமண சமயத் துறவியான அச்சணந்தி என்பவரால், தீர்த்தங்கரர்களில் மகாவீரர், பார்சுவநாதர் மற்றும் பாகுபலி சிற்பங்கள் யானைமலையில் செதுக்கப்பட்டது. மதுரையை ஆண்ட விசயநகர மன்னர்கள் காலக் கல்வெட்டில் யானைமலையை "கசகிரி" என்று சமற்கிருதத்தில் குறிப்பிட்டுள்ளனர். இச் செய்திகளை எல்லாம் தமிழ் விக்கிபீடியாவில் காணமுடிகிறது. ஆனால், சங்க காலத்திலேயே அதாவது ஏறத்தாழ 3000 ஆண்டுகளுக்கு முன்னரே இம்மலையானது சிறப்பாகப் பேசப்பட்டுள்ளது.. சங்க இலக்கியத்தில் இம்மலையைப் பற்றிக் கூறப்பட்டுள்ள செய்திகளை இக்கட்டுரையில் விரிவாகக் காணலாம்.

இலக்கியத்தில் யானைமலை:

பல்வேறு கல்வெட்டுக்களில் யானைமலை பற்றிய செய்திகள் பதிவுசெய்யப்பட்டு இருப்பதனை மேலே கண்டோம். கல்வெட்டுக்கள் மட்டுமின்றி, தமிழ் இலக்கியங்களிலும் யானைமலை பற்றிய செய்திகள் பதிவுசெய்யப்பட்டு உள்ளன.

தேவாரம் பாடிய திருஞானசம்பந்தர், கி.பி. 7 ஆம் நூற்றாண்டில் தாம் எழுதிய மதுரைப் பதிகத்தில், யானைமலையில் சமணர்கள் பள்ளிகளை அமைத்துத் தங்கி இருந்த செய்தியைக் கூறியுள்ளார். பரஞ்சோதி முனிவர் எழுதிய திருவிளையாடல் புராணத்திலும் யானைமலை பற்றிய குறிப்பு உள்ளது. மதுரையைத் தாக்கவந்த ஒரு பெரிய யானையை, மதுரையைக் காக்கும் கடவுளான சொக்கநாதர், நரசிங்கம் என்னும் அம்பினைத் தொடுத்து அந்த யானையை நகர விடாமல் செய்ய, அதுவே யானைமலையாக மாறியது என்று அந்த நூலில் கூறப்பட்டுள்ளது. இவையெல்லாம் பிற்கால இலக்கியச் செய்திகள் ஆகும். இனி, சங்க இலக்கியங்களில் யானைமலையைப் பற்றி என்னென்ன செய்திகள் கூறப்பட்டுள்ளன என்று காணலாம்.

சங்க இலக்கியங்களில் யானைமலை:

சங்க இலக்கியங்களில் அகநானூறு, கலித்தொகை ஆகியவற்றில் யானைமலை பற்றிய செய்திகள் கூறப்பட்டுள்ளன. அகநானூற்றில் இரண்டு பாடல்களிலும் கலித்தொகையில் ஒரு பாடலிலும் ஆக மொத்தம் மூன்று பாடல்களில் யானைமலை பற்றிய செய்திகள் பதிவுசெய்யப்பட்டு உள்ளன.

சங்கப் பாடல்கள் யானைமலையைக் குறிப்பிடும்போது, பிடி மடிந்தன்ன குறும்பொறை, பிடி மடிந்தன்ன கல், பிடி துஞ்சு அன்ன அறை ஆகிய சொற்றொடர்களால் உணர்த்துகின்றன. ஒரு பெண்யானையானது படுத்து உறங்குவதைப் போலத் தோன்றும் மலை என்பதே இச் சொற்றொடர்களின் பொருளாகும். இனி, இப்பாடல்கள் கூறும் செய்திகளை விளக்கத்துடன் காணலாம்.

அகநானூற்றுப் பாடல்கள்:

மதுரை மருதன் இளநாகனார் இயற்றிய அகப்பாடல் 269 ல் யானைமலை பற்றிய விரிவான செய்திகள் கூறப்பட்டுள்ளது. இப்பாடலில் கூறப்பட்டுள்ள பல்வேறு செய்திகள் கீழே தொகுத்துத் தரப்பட்டுள்ளது.

யானைமலைப் பகுதியானது சங்ககாலத்தில் முல்லைநிலமாக விளங்கியது. இப் பகுதியில் முல்லைநில மக்களாகிய ஆயர் / கோவலர் வாழ்ந்தனர். ஆடுமாடுகளை மேய்ப்பதற்கு ஏதுவாக யானைமலையைச் சுற்றிலும் பரந்த பசும் புல்வெளி இருந்திருக்க வேண்டும் அல்லவா?. இப்படிப்பட்ட பரந்த பசும் புல்வெளிகளை இன்றும் கூட யானைமலையைச் சுற்றிலும் காணலாம். 

ஆயர்களின் ஆடுமாடுகளைக் கள்வர் கவர்ந்து செல்வதும் ஆயர்கள் கள்வருடன் போர்செய்து அவற்றை மீட்டு வருவதும் சங்ககாலத் தமிழரின் நடைமுறை ஆகும். இத்தகைய நடைமுறை ஒன்றினைத் தான் இப்பாடல் விரிவாகக் கூறுகிறது. தங்களது ஆடுமாடுகளைக் கள்வர் கவர்ந்துசெல்ல, அவற்றை மீட்பதற்காகத் தலையில் சிவந்த கரந்தைப் பூமாலையினையும் கால்களில் கழல்களையும் அணிந்து கையில் கூரிய வேல் தாங்கி வீரர்கள் தயாராயினர். கரந்தைப் போருக்குக் கிளம்பும் முன்னர், வீரமரணம் எய்திய முன்னோர்களின் நடுகல்லை வழிபட்டனர். இந்த நடுகல்லானது செயற்கையாக நடப்படாமல் நட்டதைப்போலவே இயற்கையாக அகலமாகவும் உயரமாகவும் விளங்கியதொரு கல்லாகும். இதற்கு முன்னால் கரந்தைப் போருக்குச் சென்று வீரமரணம் எய்திய முன்னோர்கள் அனைவரின் பெயரும் இக் கல்லில் பொறிக்கப்பட்டு இருந்தது. இக் கல்லானது படுத்திருக்கும் யானையைப் போலவே தோன்றுகின்ற யானைமலையை ஒட்டியே அமைந்திருந்தது. முன்னோர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட அக்கல்லினை நீரால் கழுவி ஈரமஞ்சளைப் பூசி வழிபட்டனர். இச் செய்திகளைக் கூறும் அகப்பாடல் வரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

…… ஏறு உடை இன நிரை பெயர பெயராது
செறி சுரை வெள் வேல் மழவர் தாங்கிய
தறுகணாளர் நல் இசை நிறும்-மார்
பிடி மடிந்து அன்ன குறும் பொறை மருங்கின்
நட்ட போலும் நடாஅ நெடும் கல்
அகல் இடம் குயின்ற பல் பெயர் மண்ணி
நறு விரை மஞ்சள் ஈர்ம் புறம் பொலிய
அம்பு கொண்டு அறுத்த ஆர் நார் உரிவையின்
செம் பூ கரந்தை புனைந்த கண்ணி
வரி வண்டு ஆர்ப்ப சூட்டி கழல் கால்
இளையர் பதி பெயரும் அரும் சுரம் இறந்தோர் …… அகம். 269

மேற்பாடலில் குறிப்பிடப்பட்டுள்ள மலையானது மதுரையில் இருக்கும் யானைமலை தானா இல்லை வேறு ஏதாவதொரு மலையா என்ற ஐயப்பாட்டினை இப்பாடலை இயற்றிய ஆசிரியரின் ஊர் ஆகிய மதுரை என்ற பெயர் தெளிவாக்கி விடுகிறது.

அடுத்ததாக, பரணர் இயற்றிய அகப்பாடல் எண் 178 ஐக் காணலாம். யானைமலையின் அருகில் நீர் ஊறுகின்ற மிகப்பெரிய சுனை ஒன்று இருந்தது. யானைமலையில் பெய்யும் மழைநீரெல்லாம் கீழே இறங்கி கடலில் பல ஆறுகள் கலப்பதைப் போல இந்த சுனையில் ஒன்று சேர்ந்தன. வயிரம் போல ஒளிர்ந்த கூரிய பற்களையும் மூங்கில் வேர்போன்ற மயிரினையும் கொண்ட காட்டுப்பன்றி ஒன்று சேப்பங் கிழங்குகளைத் தோண்டி எடுத்து உண்டபின்னர் அருகில் இருந்த சுனைநீரைப் பருகியது. பின்னர், அடர்ந்து வளர்ந்திருந்த செடிகொடிகளுக்கு இடையில் காட்டுப்பன்றி புகுந்து சென்றபோது வெண் கூதாள மலர்களின்மேல் அதன் உடல் உரசவும், அம் மலர்களில் இருந்து பொன்னிறத் தாதுக்கள் பன்றியின் உடல்மேல் உதிர்ந்தன. அந்நிலையில் அப்பன்றியைப் பார்ப்பதற்குப் பொன் துகள்கள் ஒட்டியிருக்கும் கட்டளைக் கல்லைப் போலத் தோன்றியதாகப் புலவர் பாடுகிறார்.

இப்பாடலில் குறிப்பிடப்பட்டிருக்கும் “பிடி மடிந்தன்ன கல்” என்பது யானைமலையினையும் “ஊறுநீர்ப் படார்” என்பது நீர்ச் சுனையினையும் குறிப்பதாகும். இச் சுனையினை யானைமலையின் கீழே இன்றும் காணலாம். யானைமலையின் கீழே இருக்கும் இச்சுனையானது ஏனைய குளம் குட்டைகளைப் போன்றதல்ல. இது நீர் ஊறும் பள்ளமாக விளங்கியதால் தான் பல ஆயிரம் ஆண்டுகள் கழிந்த பின்னும் வற்றிப் போகாமல் உள்ளது. இச் சுனையானது அருகில் உள்ள படத்தில் காட்டப்பட்டுள்ளது. மேற்காணும் செய்திகளைக் கூறும் அகப்பாடல் வரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
 
….. வயிரத்து அன்ன வை ஏந்து மருப்பின்
வெதிர் வேர் அன்ன பரூஉ மயிர் பன்றி
பறை கண் அன்ன நிறை சுனை பருகி
நீலத்து அன்ன அகல் இலை சேம்பின்
பிண்டம் அன்ன கொழும் கிழங்கு மாந்தி
பிடி மடிந்து அன்ன கல் மிசை ஊழ் இழிபு
யாறு சேர்ந்து அன்ன ஊறு நீர் படாஅர்
பைம் புதல் நளி சினை குருகு இருந்து அன்ன
வண் பிணி அவிழ்ந்த வெண் கூதாளத்து
அலங்கு குலை அலரி தீண்டி தாது உக
பொன் உரை கட்டளை கடுப்ப காண்வர ….. - அகம். 178

கலித்தொகைப் பாடல்:

கலித்தொகையின் 108 ஆம் பாடலிலும் யானைமலை பற்றிய செய்திகள் உள்ளன. யானைமலையானது முல்லைநில மக்கள் ஆகிய ஆயர் / கோவலர் வாழ்ந்த பகுதியாக விளங்கியது என்று முன்னர் கண்டோம். கலித்தொகையின் 108 ஆவது பாடலும் முல்லைநில மக்களைப் பற்றியே கூறுகின்றது.

பெண்யானை ஒன்று படுத்திருப்பதனைப் போலவே தோன்றும் யானைமலையைச் சுற்றிலும் இயற்கையானது செழிப்புடன் விளங்கியதைக் கலித்தொகைப் பாடலின் மூலம் அறிய முடிகிறது. மாடுகளை மேய்த்துக்கொண்டு கோலுடன் செல்லும் ஆயன் மகன் ஒருவன் வழியில் ஒரு ஆயர்குலப் பெண்ணைக் கண்டு காதல் வயப்படுகிறான். அவளை விரும்புவதாகக் கூறி அவளது அழகைப் புகழ்கிறான். அவளோ அவனது காதலை ஏற்க மறுத்து வீடு செல்ல விரும்புகிறாள். அவள் வீட்டுக்கு விரைவதைத் தடுக்கும் ஆயனோ வெயில் அதிகமாக இருப்பதால் குளுமை மிக்க யானைமலைக்குச் செல்லலாம் என்றும் அங்கே சுனைநீரில் விளையாடியும் மலர்களைப் பறித்துச் சூடியும் சோலையில் தங்கிப் பொழுதைக் கழித்தும் மாலையில் வீடு திரும்பலாம் என்று ஆசை வார்த்தை கூறுகிறான். மிக நீளமான அப்பாடலில் இருந்து குறிப்பிட்ட சில வரிகள் மட்டும் சான்றாகக் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. 

…….. வெண்ணெய் தெழி கேட்கும் அண்மையால் சேய்த்து அன்றி
அண்ண அணித்து ஊராயின் நண்பகல் போழ்து ஆயின்
கண் நோக்கு ஒழிக்கும் கவின் பெறு பெண் நீர்மை
மயில் எருத்து வண்ணத்து மாயோய் மற்று இன்ன
வெயிலொடு எவன் விரைந்து சேறி உது காண்
பிடி துஞ்சு அன்ன அறை மேல நுங்கின்
தடி கண் புரையும் குறும் சுனை ஆடி
பனி பூ தளவொடு முல்லை பறித்து
தனி காயாம் தண் பொழில் எம்மொடு வைகி
பனி பட செல்வாய் நும் ஊர்க்கு ….. – கலி. 108

மேற்காணும் பாடல் வரிகளில் இருந்து யானைமலையைப் பற்றிய சுவையான சில செய்திகளை அறிந்துகொள்ள முடிகிறது. வெட்டப்பட்ட நுங்கின் கண்களைப் போலத் தோன்றும் சிறிய பல நீர்ச்சுனைகள் யானைமலையின் மேலே இருந்தன என்றும் தளவம், முல்லை, காயா போன்ற பலவித மலர்கள் பூத்துக் குலுங்கும் சோலைகள் யானைமலையைச் சூழ இருந்தன என்றும் ஆயர்கள் தமது வீடுகளில் வெண்ணை கடையும் ஓசையானது எப்போதும் அங்கே கேட்டுக்கொண்டே இருந்தது என்றும் இப்பாடலின் வரிகள் மூலம் தெரிய வருகிறது. யானைமலையின் மேல் இருந்த சுனைகளையே பின்னாளில் வந்த சமணர்கள் தமக்கான படுக்கைகளாகச் செதுக்கி மாற்றியிருக்கக் கூடும்.

நரசிம்மர் குடைவரை:

மேற்காணும் கலித்தொகைப் பாடலில் இருந்து அறியப் பெறுவதும் சங்ககாலம் தொட்டு இன்றுவரையிலும் நிலைபெற்று மக்களால் வணங்கப்பட்டு வருவதுமாகிய நரசிம்மர் குடைவரை இங்கே குறிப்பிடத் தக்கதாகும். இந்த நரசிம்மர் குடைவரையானது யானைமலையில் உள்ள கல்லின்மேல் செதுக்கப்பட்ட திருமால் வடிவமாகும்.

முல்லைநில மக்களின் தெய்வமாகிய திருமாலின் வடிவத்தைச் சங்க காலத்திலேயே யானைமலையில் செதுக்கி வைத்து வழிபட்ட செய்தியை மேற்காணும் கலித்தொகைப் பாடல் கூறுவது வியப்பூட்டுவதாக உள்ளது. அச் செய்தியினைக் கூறும் பாடல் வரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

…… மாயோய் நின்னின் சிறந்தார்
நில உலகத்து இன்மை தெளி நீ வருதி
மலையொடு மார்பு அமைந்த செல்வன் அடியை
தலையினால் தொட்டு உற்றேன் சூள் …. கலி.108

தன்னை நம்பாத ஆயர்குலப் பெண்ணிடம் நம்பிக்கையை உண்டாக்கி அவளைத் தன்னுடன் அழைத்துச் செல்வதற்காக, திருமாலின் அடியினைத் தனது தலையால் தொட்டு ஆயன் மகன் சூள் உரைப்பதாக மேற்பாடல் வரிகள் கூறுகின்றன. இப்பாடலில் வரும் “ மலையொடு மார்பு அமைந்த செல்வன் “ என்பது “ மலையுடன் தனது மார்பு / உடல் அமையப்பெற்ற செல்வன் “ என்ற பொருளைத் தருவதாகும். அனைத்துச் செல்வங்களையும் உடையவன் / தருபவன் என்ற பொருளில் கடவுளரைச் செல்வன் என்ற பெயரால் பொதுவாகக் குறிப்பிடுவது சங்ககால வழக்கம் ஆகும். சான்றாக, சிவபெருமானை ஆலமர் செல்வன் என்று சங்க இலக்கியம் சுட்டுகிறது. மேற்காணும் பாடலில், ஆயன் தனது தலையினால் செல்வனின் திருவடிகளைத் தொட்டு வணங்கிச் சூள் உரைப்பதாகக் கூறுவதால் அச்செல்வன் வேறு யாருமல்ல திருமால் தான் என்பது உறுதியாகிறது.

முடிவுரை:

இதுவரை மேலே கண்ட பல சான்றுகளில் இருந்து சங்க காலத்திலேயே யானைமலை விரிவாகப் பேசப்பட்டுள்ளதை அறிந்து கொள்ளலாம். யானைமலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் பல கரந்தைப் போர்கள் நடந்திருக்கும் என்பதால் போரில் மரணம் அடைந்தோரின் உடல்கள் அப்பகுதியில் தான் புதைக்கப்பட்டு இருக்க வேண்டும். யானைமலையைச் சுற்றிலும் அகழ்வாய்வு செய்வதன் மூலம் புதைந்துபோன அந்த நடுகல் கிடைக்க வாய்ப்புள்ளது. அதுமட்டுமின்றி, சங்ககாலம் பற்றியும் தமிழரது தொன்மை பற்றியும் அறிந்துகொள்ளக் கூடிய வகையில் பல தொல்பொருள் எச்சங்களும் கிடைக்க வாய்ப்புள்ளது. எனவே தமிழக அரசு இதைக் கவனத்தில் கொண்டு இப் பணியை முன்னெடுக்க வேண்டும் என்ற வேண்டுகோளானது இக் கட்டுரையின் மூலம் தமிழக அரசுக்குப் பணிவுடன் முன்வைக்கப் படுகிறது.  

...................... வாழ்க தமிழ் ! .................................