முன்னுரை:
தமிழ்ச்
சொற்கள் சகரத்தில் தொடங்காது என்பது சரியா?. – இக் கேள்வியை அடிப்படையாகக் கொண்டு இக்
கட்டுரையை எழுதுவதற்கான காரணத்தை முதலில் சொல்லி விடலாம். சகடம், சக்கரம், சமையல்,
சிப்பி, சிறகு என்று எந்தவொரு தமிழ்ச் சொல்லின் முதல் எழுத்தாக சகரம் வந்தாலும் அது
தமிழ்ச் சொல் அல்ல; சமக்கிருதச் சொல் என்றே பலரும் நம்புகின்றனர்; சிலர் நம்பாவிட்டாலும்
அப்படியும் இருக்குமோ? என்று அயிர்க்கின்றனர்.
இவர்களது
நம்பிக்கைக்கும் அயிர்ப்புக்கும் அடிப்படையான ஆதாரமாக இவர்கள் காட்டுவது தொல்காப்பியத்தில்
வருகின்ற ஒரு நூற்பா ஆகும். தமிழ்மொழியில் உள்ள சொற்களின் கட்டமைப்பினையே கேள்விக்
குறியாக்கி ஆட்டுவித்துக் கொண்டிருக்கும் இந்த நூற்பா ஒரு இடைச்செருகல் தான் என்றும்
தொல்காப்பியர் இந்த நூற்பாவை எழுதியிருக்க மாட்டார் என்றும் பல சான்றுகளுடன் இக் கட்டுரையில்
விரிவாகக் காணலாம்.
தொல்காப்பிய
நூற்பாக்கள்:
தொல்காப்பியத்தில்
எழுத்து அதிகாரத்தில் மொழிமரபில் கீழ்க்காணும் நூற்பாக்கள் வருகின்றன.
க
த ந ப ம எனும் ஆ ஐந்து எழுத்தும்
எல்லா
உயிரொடும் செல்லுமார் முதலே - 28
பொருள்:
க, த, ந, ப, ம ஆகிய ஐந்து மெய் எழுத்துக்களும் பன்னிரண்டு உயிர் எழுத்துக்களுடனும்
கூடி சொல்லின் முதலாக வரும்.
சகர
கிளவியும் அவற்று ஓரற்றே
அ
ஐ ஔ எனும் மூன்று அலங்கடையே - 29
பொருள்:
சகர மெய்யெழுத்துக்கும் மேற்சொன்னவை பொருந்தும்; ஆனால், அ, ஐ, ஔ ஆகிய மூன்று உயிர்
எழுத்துக்களுடன் மட்டும் சேர்ந்து சொல்லுக்கு முதலாக வராது.
மொழிமரபு
நூற்பா -29 பற்றிய சான்றோர் கருத்துக்கள்:
சகர
முதல் பற்றி வருவதான நூற்பா 29 ஐப் பற்றிய ஆய்வுகளும் கருத்துரைகளும் பன்னெடுங் காலமாகவே
நடந்து வந்துள்ளன. அவற்றின் சுருக்கத்தை மட்டும் இங்கே காணலாம்.
தொல்காப்பிய
எழுத்து அதிகாரத்திற்கு உரையெழுதிய இளம்பூரணர், நச்சினார்க்கினியர் ஆகியோர் இந்த நூற்பாவினை
இடைச்செருகலாக எண்ணவில்லை. மாறாக, சங்க இலக்கியத்தில் பயின்றுவரும் சகரமுதல் சொற்களை
ஆரியச் சிதைவாகவோ கடிசொல்லாகவோ கொள்ளலாம் என்று கூறியுள்ளனர். பெரும்பாலான உரையாசிரியர்கள்
இவரது கருத்துக்களை அடியொட்டியே தம் கருத்தினைப் பதிவு செய்துள்ளனர். தொல்காப்பியர்
காலத்தில் சகர முதல் சொற்கள் இருந்திருக்காது என்றும் மயிலைநாதர் போன்றோர் கருதுகின்றனர்.
இவர்கள்
அனைவருமே அந்த நூற்பாவை அப்படியே ஏற்றுக்கொள்ளும் நிலையில் முதன்முதலாக, மொழிஞாயிறு
தேவநேயப் பாவாணரே அந்த நூற்பாவிற்கு ஒரு பாடவேறுபாடு காட்டுகிறார். “ அவை ஔ என்னும்
ஒன்று அலங்கடையே “ என்று அந்த நூற்பாவின் இரண்டாம் அடிக்குப் பாடவேறுபாடு காட்டுகிறார்.
அதாவது, சௌ என்னும் ஒரேயொரு எழுத்தைக் கொண்டு மட்டுமே தமிழ்ச் சொற்கள் தொடங்காது என்பதே
தொல்காப்பியர் கூற்றென்று தனது கருத்தை முன்வைக்கிறார்.
மொழிமரபு
நூற்பா – 29 இடைச்செருகலே !!!
இடைச்செருகல்
இல்லாத பழந்தமிழ் இலக்கியங்களோ இலக்கணங்களோ இல்லை என்றே கூறலாம். காரணம், பழந்தமிழ்
நூல்கள் யாவும் ஓலைச் சுவடிகளாகவே ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருந்து பின்னர் பலரால்
பல காலங்களில் படியெடுக்கப்பட்டுப் பின்னர் அச்சிடப் பெற்றவை. இந்த காலகட்டங்களில்
பாடவேறுபாடுகள், இடைச்செருகல்கள், அச்சுப்பிழைகள் போன்ற பலவும் நிகழ்ந்திருக்க வாய்ப்புண்டு.
குறிப்பாக, இருப்பதிலேயே மிகவும் பழமை வாய்ந்த இலக்கண நூலான தொல்காப்பியத்தில் பல்வேறு
இடைச்செருகல்கள் இருப்பதாகப் பல ஆய்வாளர்கள் ஆதாரங்களுடன் கூறி வருகின்றனர்.
இந்நிலையில்,
மேற்காணும் மொழிமரபு நூற்பா – 29 ம் ஒரு இடைச்செருகலாகத் தான் இருக்க முடியும் என்பது
ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த நூற்பா இடைச்செருகல் தான் என்பதனைக் கீழ்க்காணும் இரண்டு
வழிமுறைகளால் உறுதி செய்துகொள்ளலாம்.
1.
தொல்காப்பிய
நூற்பா கொண்டு நிறுவுதல்
2.
இலக்கியப்
பயன்பாடுகள் கொண்டு நிறுவுதல்
1. தொல்காப்பிய நூற்பா கொண்டு நிறுவுதல்:
சகர
முதல் எழுத்துக்கள் பற்றிக் கூறும் மொழிமரபு நூற்பா 29 ஒரு இடைச்செருகல் தான் என்பதனைத்
தொல்காப்பிய மொழிமரபில் இந்த நூற்பாவை அடுத்துவரும் 30, 31, 32 ஆம் நூற்பாக்களைக் கொண்டே
நிறுவலாம்.
உ ஊ ஒ ஓ என்னும் நான்கு உயிர்
வ என் எழுத்தொடு வருதல் இல்லை - 30
ஆ எ ஒ எனும் மூ உயிர் ஞகாரத்து உரிய - 31
ஆவொடு அல்லது யகரம் முதலாது - 32
மேற்காணும்
மூன்று நூற்பாக்களில், வகர, ஞகர, யகர மெய்களுடன் எந்தெந்த உயிர் எழுத்துக்கள் இணைந்து
சொல்லுக்கு முதலாக வரும் / வராது என்று கூறுகிறார் தொல்காப்பியர். தொல்காப்பியர் ஏன்
இவ்வாறு கூறவேண்டும்?. அவர் இவ்வாறு கூறுவதற்கு ஏதும் சரியான காரணங்கள் உள்ளனவா? என்று
ஆய்வு செய்ததின் விளைவாகவே மொழிமரபு நூற்பா – 29 ஒரு இடைச்செருகல் தான் என்பது உறுதியானது.
வகர உயிர்மெய்
முதல் எழுத்துக்கள்:
நூற்பா
30 ல் வகர உயிர்மெய் பற்றிக் கூறுமிடத்து, வு, வூ, வொ, வோ என்ற நான்கு உயிர்மெய் எழுத்துக்கள்
மட்டும் சொல்லுக்கு முதலில் வராது என்கிறார். காரணம், இந்த எழுத்துக்களுக்குப் பதிலாக,
உ, ஊ, ஒ, ஓ ஆகிய உயிர் எழுத்துக்களே போதுமானது என்பதே அவரது உட்கருத்தாகும். உண்மையில்,
வு, வூ, வொ, வோ என்ற உயிர்மெய் எழுத்துக்களும் உ, ஊ, ஒ, ஓ என்ற உயிர் எழுத்துக்களும்
ஒரே மாதிரியான ஒலிப்பினைக் கொண்ட ஒலிப்புப் போலிகள் ஆகும். சான்றாக, உலகம் என்றாலும்
வுலகம் என்றாலும் ஒரே மாதிரித்தான் ஒலிக்கும். வோலம் என்றாலும் ஓலம் என்றாலும் ஒரே
மாதிரித்தான் ஒலிக்கும். இவையனைத்தும் ஒரே மாதிரி ஒலிப்பதனை நாம் நடைமுறையில் ஒலித்தும்
தெளிந்து கொள்ளலாம். அதேசமயம், எட்டு என்பதும் வெட்டு என்பதும் ஒரேமாதிரி ஒலிக்காது;
ஆட்டு என்பதும் வாட்டு என்பதும் ஒரேமாதிரி ஒலிக்காது.
எழுத்தளவில்
வேறுபாடு இருந்தாலும் ஒலிப்பளவில் ஒற்றுமை கொண்டிருக்கும் காரணத்தினால் தான் சொல்லுக்கு
முதலாக வரும் வு, வூ, வொ, வோ ஆகிய நான்கு ஒலிகளுக்கு மாற்றாக, உ, ஊ, ஒ, ஓ ஆகிய நான்கு
எழுத்துக்களையே ஒலிப்புப் போலிகளாக இலக்கியங்களில் பயன்படுத்தினர். தொல்காப்பியர் காலத்தில்
அதுவே மொழிமரபாக இருந்ததாலும் மொழிமுதலாக வு, வூ, வொ, வோ ஆகிய எழுத்துக்களின் பயன்பாடின்மை
/ தேவையின்மை காரணம் பற்றியே தொல்காப்பியரும் இந்த நான்கு எழுத்துக்களும் சொல்லுக்கு
முதலாக வராது என்றார். ஆனால் இந்த விதி சொல்லின் முதலாக வரும் வு, வூ, வொ, வோ ஆகிய
ஒலிகளுக்கு மட்டுமே பொருந்தும் என்பது இங்கே குறிப்பிடத் தக்கதாகும்.
ஞகர உயிர்மெய்
முதல் எழுத்துக்கள்:
நூற்பா
31 ல் ஞகர உயிர்மெய் பற்றிக் கூறுமிடத்து, ஞா, ஞெ, ஞொ ஆகிய மூன்று எழுத்துக்கள் மட்டுமே
சொல்லுக்கு முதலில் வரும் என்று கூறுகிறார். காரணம், ஞகர உயிர்மெய் எழுத்துக்களைத்
தனியாக ஒலிப்பதில் உள்ள கடின முயற்சியும் நகர, னகர ஒலிப்புப் போலிகளுமே எனலாம். அதாவது,
சொல்லுக்கு முதலில் வரும் ஞகர உயிர்மெய்களானவை நகர உயிர்மெய்ப் போலிகளால் மாற்றப்பட்டு
விடுகின்றன. சான்றாக, ஞாயிறு என்பது நாயிறு என்றும் ஞாயில் என்பது நாயில் என்றும் மாறிவிடுகின்றது.
சொல்லுக்கு
முதலில் மட்டுமின்றி சொல்லுக்கு இடையில் வரும் ஞகர உயிர்மெய்கள் கூட னகர எழுத்துக்களால்
மாற்றப்பட்டு விடுகின்றன. சான்றாக, அஞ்ஞை என்பது அன்னை என்றும் முஞ்ஞை என்பது முன்னை
என்றும் மாறிவிடுகிறது. ஙகர உயிர்மெய் எழுத்துக்கள் தனியாக ஒலிப்பதற்குக் கடினமாக இருப்பதால்தான்
அவற்றில் எதுவும் சொல்லுக்கு முதலில் வருவதில்லை. இவற்றைப் போலவே ஞகர உயிர்மெய்களின்
தனித்த ஒலிப்புகள் கடினமாக உள்ளதாலும் நகர னகரப் போலிகளால் மாற்றப்படுவதாலும் இவ் எழுத்துக்களின்
பயன்பாடின்மை / தேவையின்மை கருதியே தொல்காப்பியர் இந்த நூற்பாவை இயற்றினார் எனலாம்.
யகர உயிர்மெய்
முதல் எழுத்துக்கள்:
நூற்பா
32 ல் யகர உயிர்மெய் பற்றிக் கூறுமிடத்து, யா என்ற ஒரேயொரு எழுத்து மட்டுமே சொல்லுக்கு
முதலாக வரும் என்று கூறுகிறார் தொல்காப்பியர். காரணம், யகர உயிர்மெய்களின் அனைத்து
ஒலிப்புக்களையும் உயிர் எழுத்துக்களைக் கொண்டு ஒலிப்புப் போலிகளாக மாற்றிவிட முடிவதே.
இதைப்பற்றிக் கீழே விரிவாகக் காணலாம்.
ய விற்குப்
போலியாக அ வும்
யா விற்குப்
போலியாக ஆ வும்
யி க்குப்
போலியாக இ யும்
யீ க்குப்
போலியாக ஈ யும்
யு க்குப்
போலியாக உ வும்
யூ க்குப்
போலியாக ஊ வும்
யெ க்குப்
போலியாக எ வும்
யே க்குப்
போலியாக ஏ வும்
யை க்குப்
போலியாக ஐ யும்
யொ க்குப்
போலியாக ஒ வும்
யோ க்குப்
போலியாக ஓ வும்
யௌ க்குப்
போலியாக ஔ வும்
பயன்படுத்தப்பட்டு
வருகிறது. சான்றாக, யானை என்பதை ஆனை என்றும் யாறு என்பதை ஆறு என்றும் யூகம் என்பதனை
ஊகம் என்றும் யோகம் என்பதை ஓகம் என்றும் கூறுகிறோம்.
மேலே
கண்டபடி, யகர உயிர்மெய்கள் அனைத்தையுமே உயிர் ஒலிப்புப் போலிகளால் மாற்றிவிட முடியும்
என்பதால், அவ் எழுத்துக்கள் சொல்முதலாகத் தேவையற்றுப் பயனற்றுப் போகின்றன. ஆக, இங்கும்
இந்த எழுத்துக்களின் தேவையின்மை / பயனின்மை காரணம் பற்றியே தொல்காப்பியர் இந்த நூற்பாவினை
இயற்றினார் எனலாம். யா எழுத்திற்கு மட்டும் விதிவிலக்கு அளித்த காரணம், அவரது காலத்தில்
யா முதல் சொற்கள் மட்டும் இருந்திருக்கக் கூடும்.
சகர முதல்
வாராது என்பதற்குக் காரணம் உண்டா?
வகர உயிர்மெய்களில்
வு, வூ, வொ, வோ ஆகியவை சொல்லுக்கு முதலாக வாரா என்பதற்கு உ, ஊ, ஒ, ஓ ஆகிய உயிர்ப்போலிகளே
காரணம் என்று மேலே கண்டோம். அதைப்போல, ஞகர உயிர்மெய்களில் ஞா, ஞெ, ஞொ ஆகிய மூன்று மட்டுமே
வரும் என்பதற்கு ஞகர உயிர்மெய்களின் கடின ஒலிப்பும் நகர னகர மெய்ப்போலிகளுமே காரணம்
என்று கண்டோம். இறுதியாக, யகர உயிர்மெய்களில் யா மட்டுமே சொல்லுக்கு முதலில் வரும்
என்பதற்கும் உயிர்ப்போலிகளே காரணம் என்று மேலே கண்டோம்.
இவ்வாறு
வகர ஞகர யகர உயிர்மெய் எழுத்துக்களில் எவைஎவை சொல்லுக்கு முதலில் வரும் / வராது என்பதற்குச்
சொல்முதலாக அந்தந்த எழுத்துக்களின் தேவையின்மை / பயனின்மை போன்ற காரணங்கள் தெளிவாக
இருக்க, சகர சைகார சௌகார எழுத்துக்கள் சொல்லுக்கு முதலில் வாரா என்பதற்கு எவ்வித காரணமும்
அறியக் கூடவில்லை. மேலும் இந்த எழுத்துக்களுக்கு மாற்றாக எவ்விதமான உயிர் / மெய்ப்
போலிகளும் இல்லை; இவற்றை ஒலிப்பதிலும் எவ்விதக் கடினமும் இல்லை. இந்நிலையில், மேலே
கண்ட மற்ற எழுத்துக்களைப் போல, சொல்லுக்கு முதலாக சகர எழுத்துக்கள் தேவையில்லை என்றோ
வந்தாலும் பயனில்லை என்றோ கூற முடியாது.
இப்படி
எந்தவொரு சரியான காரணமும் இல்லாமல் ஏன் இந்த மூன்று உயிர்மெய் எழுத்துக்களை மட்டும்
நூற்பா 29 ல் விதிவிலக்காக அறிவிக்க வேண்டும்?. சரியான காரணம் காட்டப்படாத நிலையில்,
இந்த நூற்பா 29 வானது தொல்காப்பியரால் இயற்றப்பட்டிருக்காது என்பதனையும் உறுதியாக இது
ஒரு இடைச்செருகலே என்பதையும் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.
2. இலக்கியப் பயன்பாடுகள் கொண்டு நிறுவுதல்:
சகர
உயிர்மெய் முதல் எழுத்துக்கள் பற்றிக் கூறும் மொழிமரபு நூற்பா 29 ஒரு இடைச்செருகல்
தான் என்பதை இலக்கியச் சான்றுகள் கொண்டும் நிறுவலாம். இதைப் பற்றிக் கீழே விரிவாகக்
காணலாம்.
தொல்காப்பியத்தை
அடுத்த காலகட்டத்தில் இயற்றப்பட்ட சங்க இலக்கியங்களில் சகர முதல் சொற்கள் பலவும் பயன்படுத்தப்
பட்டுள்ளன. சகடம், சங்கம், சடை, சண்பகம், சதுக்கம், சந்தம், சந்தனம், சந்தி, சந்து,
சமம், சமழ்ப்பு, சமன், சமைப்பு, சரணம், சருமம், சலம், சலதாரி, சவட்டு, சனம், சையம்
என இருபது சொற்கள் பயன்படுத்தப் பட்டுள்ளன. சக்கரம், சகடம், சகோடன், சங்கு, சத்தம்,
சத்தி, சந்தனம், சபை, சம்பிரதம், சமத்தன், சமம், சமயம், சமழ்மை, சமன், சலம், சலவர்,
சலி, சவட்டு, சவை, சனம் என்ற இருபது சொற்கள் சங்க மருவிய காலத்துப் பதினெண் கீழ்க்கணக்கு
நூல்களில் பயன்படுத்தப் பட்டுள்ளன.
தொல்காப்பியத்தில்
இந்த நூற்பா 29 ஐ தொல்காப்பியர் தான் உண்மையிலேயே எழுதியிருந்தார் என்றால் தொல்காப்பியத்திற்குப்
பின்னர் அதனை அடியொட்டி எழுந்த சங்க இலக்கியங்களிலும் சங்க மருவிய இலக்கியங்களிலும்
சகர முதல் சொற்கள் எவையும் வந்திருக்காது அல்லவா?. ஆனால், இந்த இரண்டு இலக்கியங்களிலும்
சேர்த்து ஏறத்தாழ நாற்பது சகர முதல் சொற்கள் பயின்று வந்துள்ளதைக் கண்டோம். அதுமட்டுமின்றி,
இவற்றில் எதுவுமே சமக்கிருதச் சொற்களோ பிறமொழிச் சொற்களோ அல்ல; அனைத்துமே தூய தமிழ்ச்
சொற்கள் தான். இப்படி ஏராளமான சகர முதல் தமிழ்ச் சொற்களைப் புலவர்கள் பாடலில் பயன்படுத்தி
உள்ளதில் இருந்து தொல்காப்பிய மொழிமரபு நூற்பா 29 ஐ தொல்காப்பியர் இயற்றியிருக்க வாய்ப்பில்லை
என்பதும் அதுவொரு இடைச்செருகலே என்பதும் உறுதி செய்யப்படுகிறது.
முடிவுரை:
இதுவரை
கண்டவற்றில் இருந்து, சகர, சைகார, சௌகார எழுத்துக்கள் சொல்லுக்கு முதலாக வாரா என்பதாகக்
கூறுகின்ற மொழிமரபு நூற்பா 29 ஆனது தொல்காப்பியத்தில் ஒரு இடைச்செருகலே என்பது பல சான்றுகளுடன்
உறுதிசெய்யப்பட்டது. அதுமட்டுமின்றி, சங்க / சங்க மருவிய காலத்து இலக்கியங்களில் பயிலும்
சகர முதல் சொற்கள் எவையும் ஆரியச் சிதைவுகளோ கடியப்பட வேண்டிய சொற்களோ அல்ல என்பதும்
தெளிவுசெய்யப் பட்டது. இந்த நூற்பா ஒரு இடைச்செருகல் என்பதனால் தான், சங்க மருவிய காலத்துக்குப்
பின்னர் ஏராளமான சகர முதல் தமிழ்ச் சொற்கள் உருவாக்கப்பட்டுத் தற்போது புழக்கத்தில்
இருந்து வருகின்றன. அப்படி வழங்கப்படும் சொற்களில் சில: சட்டை, சட்டி, சடுதி, சரம்,
சரவணம், சயனம், சரிதை, சம்பளம், சல்லி, சத்து, சப்பு, ….
இறுதியாக
இங்கே கூறப்படுவது: இந்த மொழிமரபு நூற்பா 29 உண்மையாக இருக்குமோ என்று பலரும் அயிர்ப்பதற்கான
காரணம், தமிழ்ச் சொற்களில் உள்ள சகர ஒலிகளைத் தமிழர்கள் சரியாக ஒலிக்காமல் கிரந்த ஒலிகளைப்
போல ஒலிக்கத் தொடங்கியதும் அதன் விளைவாக அச்சொற்கள் எல்லாம் தமிழ் அல்ல; சமக்கிருதமே
என்று ஒருசாரார் பரப்பத் தொடங்கியதுமே எனலாம். இனிமேலாவது தமிழ்ச் சொற்களைக் கிரந்த
ஒலி கலந்து பேசாமலும் கிரந்த எழுத்து கலந்து எழுதாமலும் இருந்தால் இப்பூவுலகில் தமிழ்
என்றென்றும் வாழும்; வளரும்.