வெள்ளி, 18 அக்டோபர், 2019

சங்கம் - சத்தி - பத்தி - முத்தி - புத்தி - புத்தகம் - எது தமிழ்? எது மூலம்?


முன்னுரை:

தமிழ் மொழிக்கும் சமக்கிருத மொழிக்கும் இடையிலான போராட்டம் எப்போது தீரும் என்று தெரியவில்லை. எது மூத்தது தமிழா சமக்கிருதமா? என்ற போராட்டம் ஒருபுறம் நடக்க, இச்சொல் எந்த மொழி தமிழா சமக்கிருதமா?. என்ற போராட்டம் இன்னொரு புறத்தில் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், தமிழர்களின் அன்றாட வாழ்வில் புழக்கத்தில் இருக்கும் சங்கம், பத்தி, பத்தர், பட்டர், சத்தி, முத்தி, புத்தி, புத்தகம் போன்ற பல்வேறு சொற்கள் தமிழா? சமக்கிருதமா?. என்ற தெளிவிற்காக இக் கட்டுரை எழுதப்படுகிறது.

சங்கம்:

சங்கம் என்பது தமிழ்ச் சொல் அல்ல என்றும் ச`ங்க என்ற சமக்கிருதச் சொல்லில் இருந்தே அது தோன்றியது என்றும் கருதப்பட்டு வருகிறது. இக் கருத்து தவறானது என்பதை இக் கட்டுரை உறுதி செய்கிறது.

அங்குதல் என்னும் தமிழ்ச் சொல்லுக்குத் திரளுதல், கூடுதல், மிகுதல் என்றெல்லாம் பொருள் உண்டு. இது தமிழ்மொழியின் ஒரு அடிப்படை வினைச்சொல் ஆகும். இவ் வினையின் அடிப்படையி்ல் தோன்றியவையே அங்காடியும் அங்கையும்.

அங்கு >>> அங்காடி = பல்வகைப் பொருட்களைத் திரட்டி விற்கும் இடம்.
அங்கு >>> அங்கை = ஐந்து விரல்களும் ஒன்றுகூடும் இடம்.

அங்காடியும் அங்கையும் சங்க இலக்கியங்களில் பயின்று வந்துள்ள நாம் நன்கு அறிந்த சொற்கள் ஆகும். இவைதவிர, அங்கண் என்ற சொல்லாட்சியும் இதில் அடங்குவதே.

அங்கு >>> அங்கண் = கூட்டம், திரட்சி.

அங்கண் என்ற சொல் சங்க இலக்கியங்களிலும் சங்கம் மருவிய இலக்கியங்களிலும் மிக அதிகமாகப் பயின்று வந்துள்ள ஒரு சொல்தான். ஆனால் தமிழ் அகராதிகள் இச் சொல்லுக்குக் காட்டியுள்ள பொருட்கள் அவ்விடம், அழகிய இடம், அழகிய கண் ஆகியவை மட்டுமே.

அங்கண் என்ற சொல்லானது மேகங்களைக் குறிப்பதான விசும்பு என்ற சொல்லுடன் தான் மிகவும் அதிகமாகப் பயின்று வந்துள்ளது. கீழே உள்ள காட்டுகளில் இருந்து அதை உறுதி செய்யலாம்.

அங்கண் மால் விசும்பு புதைய வளி போழ்ந்து – மது.384
அங்கண் இரு விசும்பு அதிர ஏறொடு – ஐங்கு.469
அங்கண் இரு விசும்பு விளங்க திங்கள் – அகம். 136
அங்கண் விசும்பின் விளங்கு ஞாயிற்று – அகம். 208
அங்கண் விசும்பின் ஆர் இருள் அகற்றும் – புறம்.56
அங்கண் விசும்பின் அகல் நிலா பாரிக்கும் – நால. 16/1
அங்கண் விசும்பின் முயலும் தொழப்படூஉம் – நால. 18/6
அங்கண் விசும்பின் அமரர் தொழப்படும் – நால. 38/3
அங்கண் விசும்பின் அகல் நிலா காண்பு இனிதே – இனிய. 40/9
அங்கண் விசும்பின் உரும் எறிந்து எங்கும் – கள. 40/6
அங்கண் விசும்பின் அகல் நிலா பாரிக்கும் – பழ. 15/1

வானத்திற்கு அழகே மேகங்கள் தான் என்று அறிவோம். மேகங்கள் கூட்டம் கூட்டமாகத் திரண்டு வானத்தில் ஆங்காங்கே உலாவரும் காட்சியைக் கண்டு மகிழாதவர் மனிதர் இல்லை; அந்த அழகைப் பாடாதவர் புலவரும் இல்லை. மேற்காணும் பாடல்களும் இதைத்தான் கூறுகின்றன. இப்பாடல்களில் வரும் அங்கண் என்பது கூட்டத்தையும் விசும்பு என்பது மேகத்தையும் குறிக்கும். அவ்வகையில், அங்கண் விசும்பு என்பது மேகங்களின் கூட்டத்தைக் குறிப்பதாகும்.

இந்த அங்கண் என்ற சொல்லில் இருந்தே சங்கம் என்ற சொல் தோன்றியது.

இறகு சிறகு ஆவதைப் போல        இப்பி சிப்பி ஆவதைப் போல
இமிழ் சிமிழ் ஆவதைப் போல       உணங்கு சுணங்கு ஆவதைப் போல

அங்கண் என்னும் சொல்லுடன் சகர மெய் சேர்ந்து சங்கம் என்று ஆகும்.

அங்கண் >>> சங்கண் >>> சங்கம்.

அங்கண் என்பது சங்கம் என்று மாறுவது தமிழ் வழக்குதான். அதுமட்டுமின்றி, சங்கம் என்ற சொல் கூட்டம் என்ற பொருளில் பரிபாடலிலும் உண்டு.

    ஊழியும் நெய்தலும் குவளையும் ஆம்பலும் சங்கமும்
    மை இல் கமலமும் வெள்ளமும் – பரி.2

மேற்பாடலில் வரும் ஊழி, நெய்தல், குவளை, ஆம்பல், சங்கம், கமலம், வெள்ளம் ஆகிய அனைத்தும் வெவ்வேறு எண்ணிக்கைகளைக் குறிக்கும் தமிழ்ச் சொற்கள் ஆகும்.

எண்ணிக்கை கூடுதலாக இருப்பதையே அதாவது ஒன்றுக்கு மேற்பட்ட எண்ணிக்கையில் இருப்பதையே கூட்டம் என்று நாம் சொல்கிறோம் அல்லவா?. இப்படித்தான் சங்கம் என்ற சொல் உட்பட, எண்ணிக்கையைக் குறிக்கும் வேறுபல சொற்களும் கூட்டத்தைக் குறிக்கப் பயன்படலாயிற்று.

ஊழி >>> குழு                     ஆம்பல் >>> அம்பலம்     
குவளை >>> குவால்               கமலம் >>> கவலை

கூட்டம் / எண்ணிக்கையைக் குறிக்கும் சங்கம் என்ற தமிழ்ச் சொல்லில் இருந்தே ச`ங்க, ச`ங்க்ய ஆகிய சொற்கள் கீழ்க்காணும் விதிகளின்படி தமிக்ருத மொழியில் மாறும்.

சங்கம் >>> ச`ங்க (கூட்டம்) – வி. 15, 6
சங்கம் >>> ச`ங்க்ய (எண்ணிக்கை) – வி. 15, 6

வி.15 – கிரந்தமாற்று விதி – இதன்படி சகரம் ச`கரம் ஆயிற்று.
வி.6 – விகுதிமாற்று/விகுதிகெடல் விதி – இதன்படி விகுதி கெட்டது/மாறியது.

இதுவரை மேலே பார்த்தவற்றில் இருந்து கீழ்க்காண்பவற்றை உறுதியென்று அறிந்துகொள்ளலாம்.

    சங்கம் என்ற சொல்லின் மூலமும் தோன்றிய முறையும் தமிழே.
    சங்கம் என்ற சொல் சங்க இலக்கியத்திலும் பயன்பாட்டில் உண்டு.

இவற்றின் அடிப்படையில் இனி உறுதியுடன் உரக்கக் கூவலாம்.

சங்கம் என்பது

அப்போதும் இப்போதும் எப்போதும்

தமிழ்ச்சொல்லே. !!!

பத்தி:

தமிழ்ச் சொல்லான பத்தி என்பதில் இருந்தே பக்தி எனப்படும் தமிக்ருதச் சொல் உருவானது. இதைப் பற்றி கீழே பல சான்றுகளுடன் விரிவாகப் பார்க்கலாம்.

தமிழில் இலக்கணப் போலிகள் என்றொரு வகை உண்டு. அதாவது, ஒரு சொல்லில் இருக்கும் ஒரு குறிப்பிட்ட எழுத்து(க்களு)க்கு மாற்றாக வேறொரு எழுத்தைப் போட்டுப் புதிய சொல்லை உருவாக்கி, இரண்டு சொற்களையும் ஒரே பொருளில் வழங்குவது. கீழே சில சான்றுகள் கொடுக்கப்பட்டுள்ளன,.

மரம் – மரன் ( மகர – னகரப் போலி)
பந்தல் – பந்தர் ( லகர – ரகரப் போலி)
முற்று – முட்டு ( றகர – டகரப் போலி)
குற்று – குத்து ( றகர – தகரப் போலி)

இதைப்போல, பற்று என்ற சொல் பத்து என்று மாறும். பற்றுதல் என்றால் கொள், பிடி, ஒட்டு, பொருந்து என்றெல்லாம் பொருளுண்டு. ஒரு பொருள் அல்லது கொள்கையின்மேல் பிடிப்போ ஒட்டுதலோ இருப்பதையே பற்று என்போம். அவ்வகையில் இறையின்மேல் ஒருவர் கொள்ளும் பிடிப்பு அல்லது ஒட்டுதலே இறைப்பற்று ஆகும். இந்தப் பற்று என்ற சொல்லே கீழ்க்காணுமாறு இலக்கணப் போலியாக மாறும்..

பற்று >>> பத்து

இதைப்போல, நெற்றியை நெத்தி என்றும் செற்றையைச் செத்தை என்றும் புற்றினைப் புத்து என்றும் நேற்று என்பதை நேத்து என்றும் கூறுகிறோம். இவ்வகை இலக்கணப் போலிகளை பேச்சுவழக்கில் மட்டுமின்றி, இலக்கிய வழக்கிலும் பயன்கொள்வதுண்டு.

அதுமட்டுமின்றி, சளி, தலைவலி போன்ற நேரங்களில் நெற்றியில் மருந்தை அரைத்துப் பற்று போடுவதுண்டு. இதைக்கூட பேச்சுவழக்கில் பத்து போடுதல் என்றே சொல்வோம். மருந்தினை மட்டுமின்றி, சிவநெறி / மால்நெறி யாளர்கள் அவரவர் விதிகளுக்கேற்ப திருநீறு / திருமண் போன்றவற்றைக் குழைத்துத் தம் நெற்றியின்மேல் பத்து போட்டுக் கொள்வதையும் பார்க்கிறோம்.

இவர்களது நெற்றியில் காணப்படும் பத்தானது இவர்கள் தம் இறையின்மேல் கொண்ட பற்றினை அதாவது பிடிப்பினையே பறைசாற்றுகிறது அல்லவா?. காலப்போக்கில், இப்படி ஒருவர் தான்சார்ந்த சமயநெறியைக் காட்ட தனது நெற்றியில் பத்து போட்டுக் கொள்வதைப் பத்தி என்றும் அவ்வகையான பத்தினை நெற்றியில் அணிந்தவர்கள் பத்தர் என்றும் குறிக்கப் படலாயினர்..

பத்து (நெற்றிக்குறி) >>> பத்தி (இறைநெறி)
பத்து (நெற்றிக்குறி) >>> பத்தர் (இறையன்பர்)

பத்தி, பத்தர் ஆகிய தூய தமிழ்ச் சொற்களே தமிக்ருதத்தில் கீழ்க்காணும் விதிகளின்படி மாறுதல் அடைந்தன.

பத்தி >>> ப`க்தி (வி.15,12)
பத்தர் >>> ப`க்த (வி.15,12,6)

வி.15 – கிரந்தமாற்று விதி – இதன்படி பகர ஒலி ப`கர ஒலியாக மாறியது.
வி.12 – மெய்மாற்று விதி – இதன்படி தகர மெய்கெட்டு ககர மெய்யாக மாறியது.
வி.6 – விகுதிகெடல் விதி – இதன்படி, ரகர விகுதி கெட்டது.

பி.கு: பற்று என்பது பத்து என்று ஆனதைப் போல, பற்றை என்பது பட்டை என்றும் ஆகும். இறைப் பற்றைக் குறிக்கும் நெற்றிக்குறியைப் பட்டை என்றும் அழைப்பர்.

பற்று >>> பற்றை >>> பட்டை (றகர – டகரப் போலி).

பட்டையினை அணிந்தவர்களே பட்டர் என்றும் அழைக்கப்பட்டனர்.

பட்டை >>> பட்டர்.

முத்தி:

முத்தி என்ற தமிழ்ச் சொல்லில் இருந்து உருவான தமிக்ருதச் சொல்லே முக்தி ஆகும். இதைப் பற்றிக் கீழே விரிவாகப் பார்க்கலாம்.

முற்று என்ற சொல்லானது முழுமை, முதிர்ச்சி, அடைவு, வலிமை என்றெல்லாம் பொருட்களைக் கொண்டதாகும். முற்று என்ற சொல்லானது முத்து என்றும் இலக்கணப் போலியாக வழங்கப் பெறுவதே.

முற்று >>> முத்து (றகர – தகரப் போலி)

முழுமையான வடிவமும் வலிமையும் கொண்டதே முத்து எனப்படும். அதைப்போல, ஒருவர் தனது இறைபத்தியில் முழுமையும் வலிமையும் பெற்றுவிட்டால் அதைப்பார்த்து, “அவருக்குப் பத்தி முத்தி விட்டது” என்று கூறுவதும் வழக்கமே. இவ்வாறு முழுமை / முதிர்ச்சி அடைந்த நிலையே முத்தி எனப்படும்.

முத்து >>> முத்தி

முத்தி நிலை அடைந்தவர்கள் இறைவனின் திருவடிகளைப் பெறுவதையே வீடுபேறு என்று சொல்கிறோம். இந்த முத்தி என்ற தமிழ்ச் சொல்லில் இருந்தே முக்தி என்ற தமிக்ருதச் சொல் கீழ்க்காணும் விதிப்படிப் பிறக்கும்.

முத்தி >>> முக்தி (வி. 12)
வி.12 – மெய்மாற்று விதி – இதன்படி, தகரம் ககரமாக மாறியது.

சத்தி:

அடுத்ததாக, சத்தி என்ற சொல்லுக்கு வருவோம். சத்தி என்ற தமிழ்ச் சொல்லில் இருந்து தோன்றியதே சக்தி என்ற தமிக்ருதச் சொல் ஆகும். இதைப் பற்றிக் கீழே விரிவாகப் பல சான்றுகளுடன் காணலாம்.

அத்துதல் என்ற தமிழ்ச் சொல்லுக்கு ஒட்டுதல், பொருந்துதல், கூடுதல், சேர்தல், மிகுதல் என்றெல்லாம் பொருட்கள் உண்டு. இந்த வினையின் அடிப்படையில் பிறந்த தமிழ்ச் சொற்கள் ஏராளம். அவற்றில் சிலவற்றை மட்டும் இங்கே பார்க்கலாம்.

அத்து >>> அத்து = தையல் – இரண்டு துணிகளை இணைத்தல்.
அத்து >>> அத்து – அரைப்பட்டிகை – இடுப்பில் பொருத்திக் கொள்வது.
அத்து >>> அத்தி = அத்தி மரம் – ஏராளமான பழங்கள் மிகவும் நெருக்கமாக ஒட்டிக் கொண்டிருக்கும் மரம்.
அத்து >>> அத்தம் = செல்வம் – சேர்க்கப்படுவது / திரட்டப்படுவது.
அத்து >>> அத்தன் = அண்ணன் – கூடப் பிறந்த ஆண்.
அத்து >>> அத்தன் = தந்தை – வயது கூடியவர்.
அத்து >>> அத்தை = அத்தன் ஆகிய தந்தையின் கூடப் பிறந்த பெண்.
அத்து >>> அத்தான் = அத்தையின் மகன்.
அத்து >>> அத்திரி = மலை – கற்களும் மண்ணும் திரளாகச் சேர்ந்து மிகுந்திருப்பது.
அத்து >>> அத்திகம் >>> அதிகம் = மிகுதி.

ஒற்றுமையே வலிமை என்று அனைவரும் அறிவோம். பல பொருட்கள் அல்லது பலர் திரளும் / ஒன்றுகூடும் போது அதன் வலிமை மிகுதியாவது கண்கூடு. திரண்டு விளங்கும் தோள்களின் வலிமையே இதற்கு நல்ல சான்று. இதன்படி, அத்து என்னும் சொல்லானது கீழ்க்காணும் முறையில் வலிமைப் பொருளைக் குறிக்கலாயிற்று.

அத்து (மிகுதி, திரட்சி) >>> அத்து / அத்தி (வலிமை)

அத்து / அத்தி என்ற சொல் வலிமைப் பொருளில் வருவதைக் கீழே கொடுக்கப்பட்டுள்ள பிற சான்றுகளிலும் கீழே காணலாம்.

அத்து >>> அத்தன் = கடுக்காய் – மிகவும் வலிமையான காய்.
அத்து >>> அத்தி = யானை – வலிமைக்குப் பேர்போன விலங்கு.
அத்து >>> அத்தி = எலும்பு – உடல் உறுப்புக்களில் வலிமை மிக்கது.
அத்து + இரி >>> அத்திரி = கோவேறு கழுதை. கழுதைக்கும் குதிரைக்கும் கலப்பினமாக உருவானது. கழுதையைப் போல பாரம் சுமக்கும் வலிமையும் குதிரையைப் போலத் தொடர்ந்து வெகுதூரம் அயராமல் விரைந்து ஓடும் (இரியும்) வலிமையும் கொண்ட விலங்கு.

அடுத்ததாக, அகரத்தில் தொடங்கும் பல தமிழ்ச் சொற்களுடன் சகர மெய் சேர்ந்து சகர முதல் சொற்களாகவும் மாறும் என்று முன்னர் கண்டோம். சான்றாக,

இப்பி >>> சிப்பி                  இறகு >>> சிறகு                       
இமிழ் >>> சிமிழ்                 உணங்கு >>> சுணங்கு

இதே முறைப்படி, அத்து / அத்தி என்ற சொல்லுடன் சகர மெய் சேர்ந்து சத்து / சத்தி என்று மாறும். அதாவது,

அத்தி >>> சத்தி (வலிமை)       அத்து >>> சத்து (வலிமை)

வலிமை என்ற பொருளைத் தருவதான சத்தி என்ற தமிழ்ச் சொல்லில் இருந்தே சக்தி என்ற தமிக்ருதச் சொல்லானது கீழ்க்காணும் விதிப்படி பிறக்கும்.

சத்தி >>> ச`க்தி (வி.15, 12)

வி.15 – கிரந்தமாற்று விதி – இதன்படி சகரம் ச`கரமாக மாறியது.
வி.12 – மெய்மாற்று விதி – இதன்படி தகரம் ககரமாக மாறியது.

புத்தியும் புத்தகமும்:

புத்தி என்ற சொல் சமக்கிருதம் என்றும் புத்தகம் என்ற சொல்லும் புச்`தக் என்ற சமக்கிருதச் சொல்லில் இருந்தே தோன்றியது என்றும் ஒரு கருத்து நிலவி வருகிறது. கீழ்க்காணும் ஆதாரங்களைக் கண்டபின்னர், அக் கருத்து தவறென்று உறுதியாகிவிடும்.

புத்தகம், பொத்தகம் - இவற்றில் புத்தகம் என்ற சொல்லே சரியானது. பொத்தகம் என்பது புத்தகம் என்ற சொல்லின் மரூஉ மொழி ஆகும்.

உலக்கை என்பது பேச்சு வழக்கில் ஒலக்கை ஆவதைப் போல உட்கார் என்பது ஒக்காரு என்று ஆவதைப் போல புத்தகம் என்பது பொத்தகம் என்று பேச்சு வழக்கில் மாறும். அதேசமயம், புத்தகம் என்ற சொல்லில் இருந்துதான் சமக்கிருதச் சொல்லான புச்`தக் என்பதும் பிறந்தது. இதைப் பற்றிக் கீழே விரிவாகக் காணலாம்.

புத்தகம் = புத்து + அகம்.

புத்து என்றால் அறிவு என்று பொருள். கற்கக்கூடிய அறிவினை தன்னகத்தே கொண்டது புத்தகம் ஆயிற்று.

புத்து என்பது அறிவினைக் குறிக்கும் தமிழ்ச்சொல் ஆகும். இதன் இன்னொரு வடிவமே புத்தி ஆகும். இதிலிருந்தே பு`த்^, பு`த்தி^ போன்ற அறிவைக் குறிக்கின்ற தமிக்ருதச் சொற்கள் பிறக்கும்.

புத்தி (தமிழ்) >>> பு`த்^, பு`த்தி^ (தமிக்ருதம்) (வி.15)

வி.15 - கிரந்தமாற்று விதி - இதன்படி பு, த் என்ற ஒலிகள் முறையே பு`, த்^ என்ற ஒலிகளாக மாறின.

சங்க இலக்கியத்திலும் திருக்குறளிலும் புத்து என்ற சொல் அறிவு என்ற பொருளில் தனியே பயிலாவிட்டாலும் கூட்டுச்சொல் வடிவத்தில் ஏராளமான பாடல்களில் பயின்று வந்துள்ளது. அவற்றில் சில பாடல்களை மட்டும் கீழே காணலாம்.

புத்தேள் உலகம் கவினி காண்வர - மது 698
அரிது பெறு சிறப்பின் புத்தேள் நாடும் - குறு 101
ஞாயிற்றுப் புத்தேள் மகன் - கலி 108
திங்கள் புத்தேள் திரிதரும் உலகத்து - புறம் 27
புத்தேள் உலகத்தும் ஈண்டும் பெறல் அரிதே - குறள் 22:3
புலவரை போற்றாது புத்தேள் உலகு - குறள் 24:4
கள்ளார்க்கு தள்ளாது புத்தேள் உலகு - குறள் 29:10
புகழ் இன்றால் புத்தேள் நாட்டு உய்யாதால் - குறள் 97:6
புலத்தலின் புத்தேள் நாடு உண்டோ நிலத்தொடு - குறள் 133:3

மேற்பாடல்களில் வரும் புத்தேள் என்பது புத்து என்னும் அறிவினை அடிப்படையாகக் கொண்ட சொல் ஆகும்.

புத்தேள் என்பது அறிவினை ஊட்டும் ஆசிரியர் / குருவைக் குறிக்கும். ஆனால் இந்தப் பொருள் தமிழ் அகராதிகளில் குறிப்பிடப்படவில்லை. புத்தேள் என்னும் சொல் எவ்வாறு அறிவினை ஊட்டும் ஆசானைக் குறிக்கும் என்பதைப் பற்றி விரிவான விளக்கமான தகவல்களைத் தெரிந்துகொள்ள கீழ்க்காணும் ஆய்வுக் கட்டுரையைப் படிக்கலாம்.


புத்தேள் என்ற சொல் அறிவினைக் கற்பிக்கும் ஆசானைக் குறிக்கப் பயன்படுவதைப் போல, புத்தகம் என்ற சொல் அறிவை அகத்தே கொண்ட நூலைக் குறிக்கப் பயன்படலாயிற்று.

நாலடியாரிலும் ஏலாதியிலும் பயின்றுவருகின்ற இந்த புத்தகம் என்ற சொல்லே பேச்சுவழக்கில் பொத்தகம் என்று ஆகும்.

புத்தகம் >>> பொத்தகம்

அதுமட்டுமின்றி, புத்தகம் என்ற தமிழ்ச் சொல்லே புச்`தக் என்று கீழ்க்காணும் விதிகளின்படி தமிக்ருதமாகவும் மாறும்.

புத்தகம் (தமிழ்) >>> புச்`தக் (வி.8,6)

வி.8 - மெய்யிடை விதி - இதன்படி இடையில் உள்ள "த்" நீங்கி "ச்`" சேர்ந்தது.
வி.6 - விகுதிகெடல் விதி - இதன்படி "அம்" விகுதி கெட்டது.

முடிவுரை:

இக் கட்டுரையில், சங்கம், சத்தி என்ற சகர முதல் சொற்களைக் கண்டோம். சகரத்தில் தொடங்குவன எல்லாம் சமக்கிருதச் சொற்கள் என்ற எண்ணம் தவறானது. சகரத்தில் தமிழ்ச் சொற்கள் தொடங்கா என்று தொல்காப்பியம் கூறுவதாக ஒரு நூற்பாவைக் காட்டுவதும் பிழையே. சகரத்தில் தொடங்கும் பல சொற்கள் சங்க இலக்கியங்களிலேயே உண்டு. அதுமட்டுமின்றி, சா, சி, சீ, சு, சூ, செ, சே, சொ, சோ ஆகிய எழுத்துக்களை முதலாகக் கொண்டு ஏராளமான தமிழ்ச் சொற்கள் தொடங்கும்போது, ச, சை, சௌ வில் மட்டும் தொடங்காது என்ற கட்டுப்பாட்டினை ஏற்படுத்த வேண்டிய தேவை என்ன?. அப்படியொரு கட்டுப்பாட்டை விதித்தால் அதைப் புலவர்கள் யாரும் ஒத்துக் கொள்வார்களா?. மாட்டார்கள். ஆகவே, தொல்காப்பியத்தில் வரும் அந்த நூற்பா ஒரு இடைச்செருகல் என்பது உறுதியாகிறது.

3 கருத்துகள்:

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.