தமிழ்மொழி காட்டுமிராண்டிகளின் மொழியா?
முன்னுரை:
உலகின்
மூத்தமொழி என்று புகழப்படுவதாகிய நமது தமிழ்மொழியைக் காட்டுமிராண்டி மொழி என்று ஈ.வே.ரா.
கூறியதாக இன்றளவும் இணையத்தில் வாக்குவாதங்கள் நடைபெற்று வருகின்றது. ஈ.வே.ரா. எந்த
நோக்கத்தில் அப்படிக் கூறினார் என்பதும் எதை அடிப்படையாகக் கொண்டு அப்படிக் கூறினார்
என்பதும் யாருக்கும் தெரியாது. ஆனால் அவர் எந்தவொரு ஆய்வையும் மேற்கொள்ளாமல் எதையும்
சான்றாகக் காட்டாமல் தான் அவ்வாறு சொன்னார் என்பது மட்டும் உறுதி.
இந்நிலையில்,
தமிழின் தொன்மை குறித்த கீழ்க்காணும் பாடலும் அடிக்கடி விவாதங்களுக்கு உள்ளாகி வருவதனைப்
பார்க்க முடிகிறது.
கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு
முன்தோன்றி மூத்த குடி.
இப்பாடலில்
கூறப்பட்டுள்ள தமிழ்க்குடியின் தொன்மையானது உண்மையல்ல; உயர்வு நவிற்சியே என்று சிலர்
கூறிவருகின்றனர். இவர்களது கூற்று எவ்வளவு தவறு என்பதைப் பற்றியும் ஈ.வே.ரா.வின் பேச்சில்
நல்ல நோக்கம் இல்லையென்றால் அது எவ்வளவு பெரிய தவறு என்பதைப் பற்றியும் இக் கட்டுரையில்
விரிவாகப் பார்க்கலாம்.
மூத்தகுடிக்கான விளக்கம்:
தமிழ்க்குடியின்
தொன்மை பற்றிய மேற்காணும் பாடலுக்குப் பலரும் பலவிதமான விளக்கங்களைக் கூறுகின்றனர்.
எனவே இப் பாடல் வரிகளுக்கான தெளிவான விளக்கத்தினை முதலில் காணலாம்.
இப்பாடலில்
வரும் கல்லும் மண்ணும் இயற்கைப் பொருட்களைக் குறிக்கும். வாள் என்பது ஆயுதப் பொதுவினைக்
குறிக்கும். இனி இப்பாடல் வரிகளுக்கான விளக்கம் இதுதான்:
கல் தோன்றி = கல்லில் இருந்து தோன்றியனவும்
மண் தோன்றாக் காலத்தே = மண்ணிலுள்ள உலோகத்தில் இருந்து தோன்றிய காலத்திற்கு முற்பட்டனவுமான
வாளொடு = ஆயுதங்களுடன்
முன்தோன்றி மூத்தகுடி = முன்நின்ற தொல்குடி.
விளக்கம்: கல்லில் இருந்து தோன்றியனவும் மண்ணிலுள்ள உலோகத்தில் இருந்து தோன்றிய காலத்திற்கு முற்பட்டனவுமான ஆயுதங்களுடன் முன்நின்ற தொல்குடி.
மேற்கண்ட
விளக்கத்தில் இருந்து அறியப்படுவது யாதெனில்: உலோக காலத்திற்கு முற்பட்ட காலமான கற்காலத்திலேயே
கல்லால் ஆன வேட்டை ஆயுதங்களைத் தயார்செய்து முன்னோடியாக விளங்கியவர்கள் தமிழர்கள் என்பதே.
காடுகளில் வாழ்ந்தும் குகைகளில் வசித்தும் வேட்டையாடி உண்டு வாழ்ந்த மக்களையே காட்டுமிராண்டிகள் என்று அழைப்பது வழக்கம். காட்டுமிராண்டி என்ற சொல்லுக்குக் காடுகளில் மிருகங்களை அண்டி வாழ்பவன் என்று பொருள். மேற்காணும் பாடல் வரிகளுக்கான விளக்கமும் ஆதி தமிழர்களை ஒரு காட்டுமிராண்டிக் குடி என்றுதான் கூறுகிறது.
மாந்த இனமும் மொழித்தேவையும்:
மாந்த
இனத்தின் வளர்ச்சியைத் தொடர்ந்து பார்த்தோமானால், ஒவ்வொரு காலகட்டத்திலும் அவனது வாழ்க்கை
முறையில் பல மாற்றங்கள் நிகழ்ந்திருப்பதை அறியலாம்.
ஆதிமனிதன்
முதலில் எதையும் வேட்டையாடவில்லை. மரங்களில் இருந்து விழுந்து கிடந்த பழங்களே அவனது
முதல் உணவாயின. வேலை எதுவும் செய்யாமல் எளிதாகக் கிடைத்த இவற்றை உண்டு மகிழ்ந்து இருந்தவனுக்கு
நாளடைவில் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டது. பழங்கள் கிடைக்காத போது காய்கள், இலைகள்,
பூக்கள், கிழங்குகள் என்று அவனது உணவுமுறையில் மாற்றம் ஏற்பட்டது. இதன்பின்னர் தான்
அவனுக்கு மாமிசம் அறிமுகம் ஆகிறது. புலி, சிங்கம் போன்றவை தின்றுவிட்டுச் சென்ற எச்சில்
மாமிசங்களைப் புசிக்கலானான். அதற்கும் பற்றாக்குறை ஏற்படவே புலி, சிங்கங்களைப் போல
தானும் விலங்குகளை வேட்டையாடத் தயாரானான். இப்படித்தான் உலகில் முதன்முதலில் வேட்டைக்குடி
உருவாகிறது.
தாவர உணவுகளை மட்டுமே உண்டு வாழ்ந்துவந்த வரையிலும் பிறருடன் பேசுவதற்கான தேவைகள் இல்லாமல் இருந்தது. காரணம், தற்போது இருப்பதைப்போன்ற குடும்ப அமைப்பு ஆதியில் இருந்திருக்க வாய்ப்பில்லை. ஆணும் பெண்ணும் விரும்பிப் புணர்ந்து பிள்ளை பெற்றுக் கொண்டனர். அந்த ஆண் ஒரே பெண்ணுடன் நிரந்தரமாக இருந்திருக்கவும் வாய்ப்பில்லை. எனவே, தேவைப்பட்டால் ஒன்றிரண்டு சைகைகளை மட்டுமே பயன்படுத்தி அவன் பேசியிருப்பான். ஆனால், வேட்டையாடத் துவங்கியதும் அவனால் தனியாக விலங்குகளைத் துரத்திச்சென்று பிடிக்க இயலவில்லை; அவனுக்கு வேட்டையாட ஒரு குழு தேவைப்பட்டது. பிறரது உதவி தேவைப்பட்டது. அப்போது அவனுக்குப் பிறருடன் உரையாட ஒரு மொழியும் தேவைப்பட்டது. அந்தத் தேவையின் அடிப்படையில் உருவான முதல் மொழியே வேட்டைமொழி.
வேட்டைமொழியின் உருவாக்கம்:
வேட்டைக்குடி
மக்களுக்கு மொழியின் அவசியம் தேவைப்பட்டவுடன் அவர்களுக்கான மொழியை உருவாக்குவதில் முன்னோடியாக
விளங்கியவை பறவைகளும் விலங்குகளுமே எனலாம். கண் முன்னால் பறந்து திரிந்த காகத்தின்
கா எனும் ஒலி, கிளியின் கீ என்ற ஒலி, குயிலின் கூ என்ற ஒலி, தூரத்து மாடுகளின் மா என்ற
ஒலி, ஆடுகளின் மே என்ற ஒலி, நரியின் ஊ என்ற ஒலி போன்ற பல ஒலிகளில் இருந்து அவன் கற்றுக்
கொண்ட முதல் மொழி அறிவு இதுதான்: நீண்டு ஒலிக்கும்
ஒற்றை ஒலிகளைக் கொண்டே ஒரு மொழியை உருவாக்க முடியும்.
இயற்கையில்
இருந்து பெற்ற முதல் மொழி அறிவின் அடிப்படையில், ஒவ்வொரு நெட்டொலிக்கும் ஒரு பொருள்
என்ற முறையில் முதல் மொழியை உருவாக்கத் தொடங்கினர். அப்போது அவர்களது வாழ்வியல் முறையும்
செயல்பாடுகளும் வேட்டை சார்ந்ததாகவே இருந்தபடியால், அவர்கள் உருவாக்கிய சொற்கள் அனைத்தும்
வேட்டை சார்ந்த பொருட்களைக் குறிக்கின்ற ஓரெழுத்து ஒருமொழிகளாய் உருப்பெற்றன.
ஆக,
மாந்த முதன்மொழி அல்லது வேட்டைமொழி என்பது ஓரெழுத்து ஒருமொழிகளின் தொகுப்பே என்பதனை
இதனால் அறியலாம். மொழியியல் வல்லுநர் பலரும் இதே கருத்துடையவராய் இருப்பதும் இங்கே
சுட்டிக்காட்டத் தக்கதாகும்.
தமிழ்மொழியும் வேட்டைமொழியும்:
வேட்டைமொழி
என்பது ஓரெழுத்து ஒருமொழிகளின் தொகுப்பு என்று மேலே கண்டோம். இந்நிலையில், நமது தமிழ்
மொழியில் கீழ்க்காணும் ஓரெழுத்து ஒருமொழிகள் இன்றளவும் இருந்து வருவதனை அறிய முடிந்தது.
உயிர் எழுத்துக்கள்
(6)
- ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ.
மெய் எழுத்துக்கள்
(42)
– கா, கூ, கை, கோ, கௌ, சா, சீ, சூ, சே, சோ, சௌ, தா, தீ, தூ, தே, தை, தௌ, பா, பீ, பூ,
பே, பை, போ, நா, நீ, நூ, நே, நை, நோ, நௌ, மா, மீ, மூ, மே, மை, மோ, யா, வா, வீ, வே,
வை, வௌ.
ஆக
மொத்தம் 48 ஓரெழுத்து ஒருமொழிகள் தமிழில் இருக்கின்றன. இவற்றை ஆய்வு செய்ததில், இவை
யாவும் ஆதியில் வாழ்ந்த காட்டுமிராண்டிகள் / வேட்டைக்காரர்களின் வாழ்வியலுடன் தொடர்பு
உடையதாக இருப்பது அறியப்பட்டது. ஒவ்வொரு ஓரெழுத்து ஒருமொழிக்குத் தமிழில் உள்ள பொருளையும்
அது எவ்வாறு வேட்டைக்குடியுடன் தொடர்புடையது என்பதையும் கீழே விளக்கத்துடன் காணலாம்.
தமிழின் ஓரெழுத்து ஒருமொழிகளும்
விளக்கங்களும்:
ஆ (= காட்டுப்பசு) – வேட்டையாடும் தூரத்தில்
நிற்கும் காட்டுப்பசுவினை ஆ என்ற சொல்லால் பிறருக்குச் சுட்டினர். ஆதிதமிழரால் முதன்முதலில்
வேட்டையாடப்பட்ட விலங்கு இதுவாகத் தான் இருக்க வேண்டும். காட்டு விலங்குகளில் வேட்டையாடுவதற்கு
எளிதான பெரிய விலங்கு பசுதான். காரணம், மான்போல இது வேகமாக ஓடக்கூடியதோ எருதுபோல அதிக
வலிமையும் எதிர்ப்பும் காட்டுவதாக இல்லாததே. அதுமட்டுமின்றி, பசு உருவத்தில் பெரியதாக
இருப்பதால் ஒரு பசுவைக் கொன்றால் பலரும் உண்ணலாம் என்பதும் தான்.
ஈ (=வெட்டு, பகு) – பலர்கூடி வேட்டையாடிக்
கொன்ற விலங்கினைக் கூரிய கருவியால் வெட்டி அந்த மாமிசத்தினை வேட்டையில் கலந்து கொண்டோருக்குப்
பகுத்துக் கொடுப்பதற்காக ஈ என்று சொல்லால் ஆணையிட்டான் வேடர் தலைவன்.
ஊ (=இறைச்சி) – வேட்டையாடி வெட்டிப்
பகுக்கப்பட்ட இறைச்சியை ஊ என்று அழைத்தனர்.
ஏ (=அம்பு, கூராயுதம்) – வேட்டையாடப்பட்ட விலங்கினை
வெட்டிப் பகுப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட கூரிய ஆயுதத்திற்கு ஏ என்று பெயரிட்டனர்.
ஐ (=தலைவன்) – வேட்டைக் குழுவின் தலைவனை
ஐ என்று விளித்தனர்.
ஓ (=எறி) – வேட்டையின்போது விலங்கின்மேல்
ஆயுதத்தினை எறிவதற்கு ஓ என்று கூறி ஆணையிட்டான் வேடர் தலைவன். ஓ என்பதே தற்போதைய தமிழில்
ஓங்கு / ஓக்கு என்று பயன்பட்டு வருகிறது.
கா (=காவுதண்டு) – வேட்டையாடப்பட்ட பெரிய
விலங்கினைத் தமது இடத்திற்குக் கொண்டு செல்வதற்காக நீண்ட தடித்த மரத்தண்டில் கட்டித்
தொங்கவிட்டுத் தோளில் சுமந்து சென்றனர். இந்தத் தண்டினைக் கா என்று அழைத்தனர்.
கூ (=அழை) – ஒருவரை ஒருவர் அழைத்துக்
கொள்ள கூ என்ற சொல்லைப் பயன்படுத்தினர்.
கை (=ஆள்) – வேட்டையின்போது உடன்வரும்
ஆட்களைக் கை என்று அழைத்தனர்.
கோ (=எருது) – எருதினைக் கோ என்ற சொல்லால்
குறித்தனர்.
கௌ (=உண்) – மாமிசம் உண்ணுவதைக்
கௌ என்ற சொல்லால் குறித்தனர். தற்போது இதனைக் கவ்வு என்று குறிப்பிடுகின்றனர்.
சா (=இற) – வேட்டையின்போதோ பிறசமயத்திலோ
யாராவது இறந்துவிட்டால் அதனைச் சா என்ற சொல்லால் குறித்தனர்.
சீ (=சீவு) – வேட்டைக் கருவிகள் மழுங்கிவிட்டால்
அவற்றை மீண்டும் கூராக்குவதனைச் சீ என்று குறித்தனர்.
சூ (=துரத்து) – வேட்டையின்போது விலங்கினைப்
பின்தொடர்ந்து செல்வதனைச் சூ என்று குறிப்பிட்டனர்.
சே (=தூரம்) – வேட்டைக்கான இடம் தமது
இருப்பிடத்தில் இருந்து தூரமாய் இருப்பதனைக் குறிக்கச் சே என்ற சொல்லைப் பயன்படுத்தினர்.
தற்போது இதனைச் சேய் என்றும் குறிப்பிடுகின்றனர்.
சோ (=சுற்றிவளை) – வேட்டையின்போது விலங்கு
தப்பிவிடாமல் இருப்பதற்காக அதனைச் சுற்றிவளைக்குமாறு சோ சோ என்று சொல்லிக் கட்டளையிட்டான்
வேடர் தலைவன். தற்போது சோ என்பது சுற்றி வளைந்த மதில் சுவரைக் குறிக்கப் பயன்படுகிறது.
சௌ (=தோல்) – கொல்லப்பட்ட விலங்கின்
உடலில் இருந்து பிரித்து எடுக்கப்பட்ட தோலினைச் சௌ என்று குறித்தனர். தற்போது இது சவ்வு
என்று குறிப்பிடப்படுகிறது.
தா (=கொடு) – தம்மிடம் உள்ள இறைச்சியைப்
பிறருக்குக் கொடுப்பதனைத் தா என்றனர்.
தீ (=நெருப்பு) – விலங்கின் தசையினைச்
சுட்டு உண்பதற்காக மூட்டப்பட்ட நெருப்பினையும் காடுகளில் தானாகத் தோன்றிய நெருப்பையும்
தீ என்ற சொல்லால் குறித்தனர்.
தூ (=மாமிசம்) – கொல்லப்பட்டுத் தோல்
உரிக்கப்பட்ட ஆனால் வெட்டப்படாத முழு மாமிசத்தினைத் தூ என்று குறித்தனர்.
தே (=இனிமை) – இறைச்சியின் இனிய சுவையினைக்
குறிக்கத் தே என்ற சொல்லைப் பயன்படுத்தினர்.
தை (=உருவாக்கு, தயாராகு) – வேட்டைக்கான ஆயுதங்களைத்
தயார் செய்வதனையும் வேட்டைக்குத் தாங்கள் தயார் என்பதனையும் தை என்ற சொல்லால் குறித்தனர்.
தௌ (=தவறு) – வேட்டையின்போது விலங்கு
அகப்படாமல் தப்பிச் சென்றதால் தவறிய வேட்டையைத் தௌ என்றனர். தற்போது இதனைத் தவ்வு என்ற
சொல்லால் குறிப்பிடுகின்றனர்.
பா (=நிழல், மறைவு) – வேட்டையின்போது மறைவாகப்
பதுங்கி இருப்பதனைப் பா என்ற சொல்லால் குறிப்பிட்டனர்.
பீ (=மலம்) – கழிவு / மலத்தினைப்
பீ என்ற சொல்லால் குறித்தனர்.
பூ (=பெறு) – வேட்டையில் வெற்றி அடைந்து
விலங்கினைப் பெற்றுக்கொண்டு வருவதனைப் பூ என்றனர்.
பே (=அச்சம்) – வேட்டையின்போது விலங்கிற்கு
அச்சத்தை உண்டாக்கிப் போக்கு காட்டுவதனைப் பே என்ற சொல்லால் குறித்தனர். இப்போதும்
தமிழர்கள் குழந்தைகளிடம் பே என்று கூறி அச்சுறுத்துவது விந்தையாக உள்ளது.
பை (=பாம்பு) – வேட்டையின்போது பாம்புகளால்
கடிபடுவதும் உண்டு. பாம்பிடம் இருந்து பாதுகாப்பாக விலகி இருக்க, பாம்பினைப் பை என்ற
சொல்லால் குறித்தனர்.
போ (=செல்) – வேட்டைக்குச் செல்வதனைப்
போ என்ற சொல்லால் குறித்தனர்.
நா (=பக்கம்) – வேட்டைக்கான இடம் தமது
இடத்தில் இருந்து பக்கமாக இருப்பதனை நா என்ற சொல்லால் குறித்தனர்.
நீ (=பிரி) – வேட்டையின்போது ஒவ்வொருவரும்
தனித்தனியே பிரிந்து செல்வதற்கு நீ என்ற சொல்லைப் பயன்படுத்தினர்.
நூ (=யானை) – வேட்டையின்போது விலங்குகளில்
மிகப்பெரியதான யானையிடம் சிக்கி உயிரிழப்பதும் உண்டு. இதனை எச்சரிக்க நூ என்ற சொல்லால்
யானையைக் குறித்தனர்.
நே (=அன்பு) – வேட்டையில் கணவனும்
தந்தையும் ஈடுபடுவதுண்டு. இவ் இருவரில் அன்பு மிக்கவரான கணவனை நே என்ற சொல்லால் குறித்தனர்.
நை (=தாக்கு, வருந்து) – வேட்டையின்போது விலங்குகளால்
தாக்கப்படுவதும் உண்டு. இவ்வாறு தாக்கப்பட்டு வலிமைகுன்றி வருந்துவதனை நை என்ற சொல்லால்
குறித்தனர்.
நோ (=நோய்) – நோய்வாய்ப் பட்டிருந்தால்,
வேட்டைக்கு அழைத்துக்கொண்டு செல்லமாட்டார்கள். இதற்காக, நோயினை நோ என்ற சொல்லால் குறித்தனர்.
நௌ (=விரும்பு) – வேட்டையில் தமது விருப்பத்தை
நௌ என்ற சொல்லால் குறித்தனர். தற்போது இது நவ்வு என்று வழங்கப்படுகிறது.
மா (=விலங்கு) – வேட்டையாடப்படும் அனைத்து
விலங்குகளையும் பொதுவாக மா என்ற சொல்லால் குறித்தனர்.
மீ (=மேலே) – வேட்டையாடப்படும் விலங்கின்
இருப்பிடம் உயரமாக இருப்பதனை மீ என்ற சொல்லால் குறித்தனர்.
மூ (=மூப்பு) - வேட்டையில் கணவனும்
தந்தையும் ஈடுபடுவதுண்டு. இவ் இருவரில் மூப்பு மிக்கவரான தந்தையை மூ என்ற சொல்லால்
குறித்தனர்.
மே (=பொருந்து) – வேட்டையில் சரியாகப்
பொருந்தி ஈடுபடுதலை மே என்ற சொல்லால் குறித்தனர்.
மை (=எருமை) – வேட்டையாடப்படும் எருமையினை
மை என்று அழைத்தனர்.
மோ (=மூக்கால் அறி) – வேட்டையின்போது தவறுதலாக
புலி, சிங்கத்திடம் மாட்டி இறந்துபோவதும் உண்டு. இதனால், ஒரு காட்டில் புலி மற்றும்
சிங்கத்தின் இருப்பை அறிய, அவற்றின் சிறுநீர் மற்றும் உடலில் இருந்து தோன்றி காற்றில்
வீசும் மணத்தினை மூக்கால் நுகர்ந்து அறிவர். இதனை மோ என்ற சொல்லால் குறித்தனர்.
யா (=கட்டு) – வேட்டையாடப்பட்ட விலங்கினைக்
கட்டுவதனை யா என்ற சொல்லால் குறித்தனர்.
வா (=வருதல்) – வேட்டையாடிவிட்டுத்
திரும்பி வருவதனை வா என்ற சொல்லால் குறித்தனர்.
வீ (=அழி, கொல்) – வேட்டையாடி விலங்குகளைக்
கொல்வதனை வீ என்ற சொல்லால் குறித்தனர்.
வே (=சுடு) – மாமிசத்தைத் தீயில்
இட்டுச் சுடுவதனை வே என்றனர்.
வை (=சேமி) – சுட்ட மாமிசத்தில் உண்டதுபோக
எஞ்சியதைச் சேமித்து வைத்தலை வை என்றனர்.
வௌ (=கவர்) – வேட்டையாடிய விலங்கினைத்
திடீரென்று புலி, சிங்கம் போன்ற பிற வலிய விலங்குகள் கவர்ந்து கொண்டு செல்வதனை வௌ என்ற
சொல்லால் குறித்தனர். தற்போது இதனை வவ்வு என்று குறிக்கின்றனர்.
முடிவுரை:
இதுவரை
கண்டதில் இருந்து, தமிழ்மொழியில் இருக்கும் ஓரெழுத்து ஒருமொழிகள் யாவும் காட்டுமிராண்டிகளின்
/ வேட்டைக்காரர்களின் வாழ்வியலுடன் தொடர்பு உடையதாக இருப்பது உறுதியானது. தமிழ்மொழியைப்
போல வேறு எந்தவொரு மொழியிலும் இத்தனை ஓரெழுத்து ஒருமொழிகள் இருப்பதாகவோ அவை யாவும்
வேட்டைக்குடிகளின் வாழ்வியலுடன் தொடர்புற்று இருப்பதாகவோ இதுவரையிலும் அறியப்படவில்லை.
இந்நிலையில்,
இந்தக் கட்டுரையின் துணிபாக முன்வைக்கப்படுவதும் ஒவ்வொரு தமிழனும் தமது மொழியின் தொன்மையினை
நெஞ்சை நிமிர்த்திப் பெருமையுடன் பறைசாற்றிக் கொள்ளக் கூடியதும் இதுதான்:
தமிழ்மொழி காட்டுமிராண்டிகளின் மொழியே !!!
Excellent Explanation.
பதிலளிநீக்குநன்றி. :))
நீக்கு