புதன், 13 ஜனவரி, 2021

சோதிடத்தில் உள்ள இராசிப் பெயர்கள் தமிழா? (தைப்பொங்கல் 2021 சிறப்புக் கட்டுரை)

 

சோதிடத்தில் உள்ள இராசிப் பெயர்கள் 

தமிழா?

 

 

முன்னுரை:

தமிழர்கள் பயன்படுத்தி வருகின்ற சித்திரை முதல் பங்குனி வரையிலான மாதப் பெயர்கள் அனைத்தும் தமிழ்ச் சொற்களே என்று முன்னர் ஒரு கட்டுரையில் பல ஆதாரங்களுடன் கண்டோம். இந்த பன்னிரு மாதங்களும் சந்திர மாதங்கள் எனப்படும். இதைப்போல சூரிய மாதங்களும் உள்ளன. மேசம் முதல் மீனம் வரையிலான பன்னிரு மாதங்களும் சூரிய மாதங்கள் எனப்படும். சோதிடத்தில் பெரிதும் பயன்படுத்தப்படும் இந்த பன்னிரு மாதங்களை இராசிகள் என்றும் அழைப்பர். இந்த பன்னிரு இராசிகளின் பெயர்களும் தமிழா இல்லையா என்பதை விரிவாக இக்கட்டுரை அலசுகிறது.

சோதிடமும் இராசிகளும்:

சோதிடம், இராசி போன்ற பெயர்களே தமிழ்ச் சொற்கள் இல்லை என்ற நம்பிக்கை நம்மில் பெரும்பாலோர் இடத்தில் நிலவி வருகிறது. உண்மையில் இந்த இரண்டு பெயர்களும் தமிழ்ச் சொற்களே என்பதைக் கீழ்க்காணும் சொற்பிறப்பு முறைகளில் இருந்து அறியலாம்.

சோதி (=ஒளி) + ஈட்டம் (=கூட்டம், பேறு) = சோதீட்டம் >>> சோதிடம் = ஒளிக் கூட்டத்தின் பேறு.

வானத்தில் ஒளிரும் கூட்டமாகிய 9 கிரகங்கள் மற்றும் 27 நட்சத்திரங்களால் கிடைக்கும் பேற்றினைப் பற்றியது என்ற பொருளில் தோன்றியதே சோதிடம் என்ற பெயர் ஆகும். இதைப் போலவே, ஒளிக் கூட்டத்தின் ஒவ்வொரு கிரகமும் நட்சத்திரமும் வானில் தங்குகின்ற இடமே இராசி என்று வழங்கப்படுகிறது.

இறை (=தங்கல், உயரம், ஆசனம்) + ஆயம் (=ஒளி, கூட்டம்) + இ = இறாயி >>> இராசி = ஒளிக் கூட்டம் தங்குகின்ற உயரமான ஆசனம்.

மேலே கண்டவற்றில் இருந்து, சோதிடம், இராசி என்ற பெயர்கள் தமிழே என்று தெளியலாம். இவை மட்டுமின்றி, சோதிடத்தில் வருகின்ற மேசம் முதல் மீனம் வரையிலான பன்னிரு இராசிப் பெயர்களும் தமிழே என்பதைத் தனித்தனித் தலைப்புக்களின் கீழ் காணலாம்.

மேசம்:

இராசிகளில் முதலாவதாக வருவது மேசம் ஆகும். மேசம் என்பது ஆட்டினைக் குறிக்கும். இந்த இராசியில் உள்ள விண்மீன் கூட்டமானது ஆட்டின் வடிவில் இருப்பதால் மேசம் என்ற பெயர் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. மேசம் என்ற பெயர் தமிழே என்று கீழ்க்காணும் சொற்பிறப்பு முறையில் இருந்து அறியலாம்.

மே + அம் (=ஒலி) = மேயம் >>> மேசம் = மே மே என்று ஒலிப்பது = ஆடு

மேசம் என்பதே சரியான வடிவமாகும். மேசம் என்ற தமிழ்ச்சொல்லில் சகரத்திற்குப் பதிலாகக் கிரந்த எழுத்தாகிய ச~கரம் இட்டு எழுதுவது தவறான வழக்காகும்.

ரிசபம்:

இராசிகளில் இரண்டாவதாக வருவது ரிசபம் ஆகும். ரிசபம் என்பது காளைமாட்டினைக் குறிக்கும். இந்த இராசியில் உள்ள விண்மீன் கூட்டமானது காளை மாட்டின் வடிவில் இருப்பதால் ரிசபம் என்ற பெயர் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. ரிசபம் என்ற பெயர் தோன்றிய முறையினைக் கீழே காணலாம்.

ஏர் + இழு + ஆ (=மாடு) + அம் = ஏரிழாவம் >>> ஏரிசபம் >>> ரிசபம் = ஏரினை இழுக்கும் மாடு = காளை மாடு.

ஏரிசபம் என்பதே சரியான வடிவமாகும். இதிலுள்ள முதல் எழுத்தாகிய ஏகாரத்தை விடுத்தும் சகரத்திற்குப் பதிலாகக் கிரந்த எழுத்தாகிய ச~கரத்தை இட்டும் எழுதுவது தவறான வழக்காகும்.

மிதுனம்:

இராசிகளில் மூன்றாவதாக வருவது மிதுனம் ஆகும். மிதுனம் என்பது ஆண் பெண் உடல்களின் சேர்க்கையைக் குறிக்கும். இந்த இராசியில் உள்ள விண்மீன் கூட்டமானது ஆண் – பெண் பிணை வடிவில் இருப்பதால் மிதுனம் என்ற பெயர் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. மிதுனம் என்ற பெயர் தமிழே என்பதைக் கீழ்க்காணும் சொற்பிறப்பு முறையில் இருந்து அறியலாம்..

மை (=உடல்) + துன் (=செறி, பிணி) + அம் = மைதுனம் >>> மிதுனம் = உடல்களின் பிணிப்பு. .

கடகம்:

இராசிகளில் நான்காவதாக வருவது கடகம் ஆகும். கடகம் என்பது நண்டினைக் குறிக்கும். இந்த இராசியில் உள்ள விண்மீன் கூட்டமானது நண்டு வடிவில் இருப்பதால் கடகம் என்ற பெயர் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. கடகம் என்ற பெயர் தோன்றிய முறையினைக் கீழே காணலாம்.

கட்டு (=தழுவு, வளைத்துப் பிடி) + அகை (=அறு, வெட்டு) + அம் = கட்டகம்  >>> கடகம் = வளைத்துப் பிடித்து வெட்டுவது = நண்டு.

மேற்கண்ட சொற்பிறப்பு முறையில் இருந்து கடகம் என்ற பெயர் தமிழே என்று அறியலாம்.

சிம்மம்:

பன்னிரு இராசிகளில் ஐந்தாவதாக வருவது சிம்மம் ஆகும். சிம்மம் என்பது சிங்கத்தைக் குறிக்கும். இந்த இராசியில் உள்ள விண்மீன் கூட்டமானது சிங்க வடிவில் இருப்பதால் சிம்மம் என்ற பெயர் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. சிம்மம் என்ற பெயர் தோன்றிய முறையினைக் கீழே காணலாம்.

செம்மை (=சிவப்பு, தலைமை, வலிமை, செருக்கு) + அம் = செம்மம் >>> சிம்மம் = வலிமையும் செருக்கும் மிகுந்த தலைமைப் பண்புடைய செந்நிற விலங்கு = சிங்கம்.

செவப்பு என்பது சிவப்பு என்று ஆவதைப் போல செந்தூரம் என்பது சிந்தூரம் என்று ஆவதைப் போல செம்மம் என்பது சிம்மம் என்று ஆனது. மேற்கண்ட சொற்பிறப்பு முறையில் இருந்து சிம்மம் என்ற பெயர் தமிழே என்று அறியலாம்.

கன்னி:

பன்னிரு இராசிகளில் ஆறாவதாக வருவது கன்னி ஆகும். கன்னி என்பது இளம்பெண்ணைக் குறிக்கும். இந்த இராசியில் உள்ள விண்மீன் கூட்டமானது பெண் வடிவில் இருப்பதால் கன்னி என்ற பெயர் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. கன்னி என்ற பெயர் தோன்றிய முறையினைக் கீழே காணலாம்.

கன்று (=இளமை) + இ = கன்றி >>> கன்னி = இளமை உடையவள் = இளம்பெண்.

பன்றி என்பது பன்னி என்று ஆவதைப் போல கன்று என்பது கன்னு என்று ஆவதைப் போல கன்றி என்பது கன்னி என்று ஆனது. மேற்கண்ட சொற்பிறப்பு முறையில் இருந்தும் சங்க இலக்கியங்களில் பயின்று வருவதாலும் கன்னி என்ற பெயர் தமிழே என்று அறியலாம்.

துலாம்:

இராசிகளில் ஏழாவதாக வருவது துலாம் ஆகும். துலாம் என்பது தராசினைக் குறிக்கும். இந்த இராசியில் உள்ள விண்மீன் கூட்டமானது தராசு வடிவில் இருப்பதால் துலாம் என்ற பெயர் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. துலாம் என்ற பெயர் தோன்றிய முறையினைக் கீழே காணலாம்.

தொலி (=புடை, அடி, தட்டு) >>> துலை (=தட்டையாக்கு, சமப்படுத்து) + அம் = துலம் >>> துலாம் = சமப்படுத்தப் படுவது = தராசு.

மேற்கண்ட சொற்பிறப்பு முறையில் இருந்தும் சங்க இலக்கியங்களில் பயின்று வருவதாலும் துலாம் என்ற பெயர் தமிழே என்று அறியலாம்.

விருச்சிகம்:

விருச்சிகம் என்பது பன்னிரு இராசிகளில் எட்டாவதாக வருவதாகும். விருச்சிகம் என்ற பெயர் தேளினைக் குறிப்பதாகும். இந்த இராசியில் உள்ள விண்மீன் கூட்டமானது தேள் வடிவில் இருப்பதால் விருச்சிகம் என்ற பெயர் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இப் பெயர் தோன்றிய முறையினைக் கீழே காணலாம்.

வீறு (=வளை, உயிர்) + உய் (=தப்பி ஓடு) + இங்கு (=குத்து, கொட்டு) + அம் = வீறுய்யிங்கம் >>> விருச்சிகம் = வளைத்துக் கொட்டிவிட்டுத் தப்பியோடும் உயிரி = தேள்.

மேற்கண்ட சொற்பிறப்பு முறையில் இருந்து விருச்சிகம் என்ற பெயர் தமிழே என்று அறியலாம்.

தனுசு:

தனுசு என்பது பன்னிரு இராசிகளில் ஒன்பதாவதாக வருவதாகும். தனுசு என்ற பெயர் வில்லைக் குறிப்பதாகும். இந்த இராசியில் உள்ள விண்மீன் கூட்டமானது வில் வடிவில் இருப்பதால் தனுசு என்ற பெயர் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இப் பெயர் தோன்றிய முறையினைக் கீழே காணலாம்.

தணி (=தாழ், பணி, வளை, தாக்கு, தாமதி, நீள், தண்டு) + ஊசி (=கூரிய பொருள்) + உ = தணூசு >>> தனுசு = கூரிய நீண்ட பொருளால் தாக்க உதவும் வளைவுடைய தண்டு = வில்.

மேற்கண்ட சொற்பிறப்பு முறையில் இருந்து தனுசு என்ற பெயர் தமிழே என்று அறியலாம்.

மகரம்:

பன்னிரு இராசிகளில் பத்தாவதாக வருவது மகரம் ஆகும். மகரம் என்ற பெயர் சுறாமீனைக் குறிப்பதாகும். இந்த இராசியில் உள்ள விண்மீன் கூட்டமானது சுறாமீன் வடிவில் இருப்பதால் மகரம் என்ற பெயர் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இப் பெயர் தோன்றிய முறையினைக் கீழே காணலாம்.

வாக்கு (=வாய், வடிவம்) + அரம் = வாக்கரம் >>> மகரம் = அரம் போன்ற வடிவுடைய வாயைக் கொண்டது = சுறாமீன், முதலை.

மேற்கண்ட சொற்பிறப்பு முறையில் இருந்து மகரம் என்ற பெயர் தமிழே என்று அறியலாம்.

கும்பம்:

கும்பம் என்பது பன்னிரு இராசிகளில் பதினொன்றாவதாக வருவதாகும். கும்பம் என்ற பெயர் குடத்தைக் குறிப்பதாகும். இந்த இராசியில் உள்ள விண்மீன் கூட்டமானது குடத்தின் வடிவில் இருப்பதால் கும்பம் என்ற பெயர் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இப் பெயர் தோன்றிய முறையினைக் கீழே காணலாம்.

கூம்பு (=தேர்மொட்டு, மேல்நோக்கிக் குவி) + அம் = கூம்பம் >>> கும்பம் = தேர்மொட்டைப் போல மேல்நோக்கிக் குவிந்திருப்பது = குடம்.

மேற்கண்ட சொற்பிறப்பு முறையில் இருந்து கும்பம் என்ற பெயர் தமிழே என்று அறியலாம்.

மீனம்:

பன்னிரு இராசிகளில் பன்னிரண்டாவதாக வருவது மீனம் ஆகும். மீனம் என்ற பெயர் நீரில் வாழும் மீனைக் குறிப்பதாகும். இந்த இராசியில் உள்ள விண்மீன் கூட்டமானது நீர்மீன் வடிவில் இருப்பதால் மீனம் என்ற பெயர் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இப் பெயர் தோன்றிய முறையினைக் கீழே காணலாம்.

மின்னு (=மினுக்கு, ஒளிர்) + அம் (=நீர், அழகு) = மின்னம் >>> மீனம் = நீரில் அழகாக ஒளிர்வது / மினுக்குவது = மீன்.

மேற்கண்ட சொற்பிறப்பு முறையில் இருந்து மீனம் என்ற பெயர் தமிழே என்று அறியலாம்.

முடிவுரை:

இதுவரை கண்டவற்றில் இருந்து, மேசம் முதல் மீனம் வரையிலான பன்னிரு இராசிகளின் பெயர்கள் அனைத்தும் தமிழ்ச் சொற்களே என்று ஆதாரங்களுடன் அறிந்துகொண்டோம். மேலே கண்ட செய்திகள் சுருக்கப்பட்டு ஒரு அட்டவணை வடிவில் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

 

வரிசை

இராசி

பொருள்

தமிழ்ப்பெயர்

சந்திரமாதம்

1

மேச~ம்

ஆடு

மேசம்

சித்திரை

2

ரிச~பம்

காளை

ஏரிசபம்

வைகாசி

3

மிதுனம்

புணர்ச்சி

மிதுனம்

ஆனி

4

கடகம்

நண்டு

கடகம்

ஆடி

5

சிம்மம்

சிங்கம்

சிம்மம்

ஆவணி

6

கன்னி

இளம்பெண்

கன்னி

புரட்டாசி

7

துலாம்

தராசு

துலாம்

ஐப்பசி

8

விருச்சிகம்

தேள்

விருச்சிகம்

கார்த்திகை

9

தனுசு

வில்

தனுசு

மார்கழி

10

மகரம்

சுறாமீன்

மகரம்

தை

11

கும்பம்

குடம்

கும்பம்

மாசி

12

மீனம்

மீன்

மீனம்

பங்குனி

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.