ஞாயிறு, 26 ஜூன், 2022

தமிழரின் பாரம்பரிய உடை "வேட்டி" அல்ல !!!


தமிழரின் பாரம்பரிய உடை 

“வேட்டி” அல்ல !!!

 

முன்னுரை:

சமீப காலமாக தமிழரின் பாரம்பரிய உடை வேட்டி தான் என்று நிறுவுவதற்கு சங்க இலக்கியங்களில் இருந்து தொடர்பில்லாமல் எதை எதையோ சான்றாகக் காட்டி இணையங்களில் பலர் கட்டுரை எழுதி வருகின்றனர். போதாக்குறைக்கு “கட்டிக்கோ ஒட்டிக்கோ” போன்ற விளம்பரங்களுடன் வேட்டிகளின் விற்பனையைப் பெருக்குவதற்கான முயற்சிகளும் மிகுந்து வருகின்றன. தமிழகத்தில் உள்ள அரசியல்வாதிகளோ வெள்ளை வேட்டியைக் கட்டிக்கொண்டு “அதுதான் தமிழரின் பாரம்பரிய உடை” என்பதைப் போல பொதுக்கூட்டங்களில் பேசியும் வருகின்றனர். ஆனால் இவர்கள் எல்லோரும் இந்தக் கட்டுரையைப் படித்து முடிக்கும்போது தங்களது கருத்து முற்றிலும் தவறானது என்பதைப் புரிந்து கொண்டிருப்பார்கள். ஆம், தமிழர்களது பாரம்பரிய உடை வேட்டியே அல்ல. இதைப் பற்றி விளக்கமாக இக் கட்டுரையில் காணலாம். 

வேட்டி – சொல்லும் ஆக்கமும்: 

வேட்டி என்ற சொல் தமிழ்ச்சொல்லே இல்லை என்றும் வேச்~டி என்னும் சமக்கிருதச் சொல்லில் இருந்தே அது தோன்றியது என்றும் விவாதம் உண்டு. உண்மையில் வேட்டி என்ற சொல் தமிழ்ச்சொல்லே ஆகும். வேடு என்ற சொல்லின் அடிப்படையில் உருவானதே வேட்டி என்பதாகும். 

வேடு என்ற தமிழ்ச்சொல்லுக்குப் பாத்திரத்தின் வாயைச் சுற்றிக் கட்டும் ஆடை என்ற பொருள் அகராதிகளில் உண்டு. பாத்திரத்தின் வட்டமான விளிம்பைச் சுற்றிலும் கட்டி மூடுவதற்கும் வடிகட்டுவதற்கும் பயன்படுத்தப்பட்ட துணியே வேட்டி ஆகும். அதாவது, 

வேடு + இ = வேட்டி (ஆடு + அம் = ஆட்டம் என்பதைப் போல) 

வேடுவதற்காக அதாவது சுற்றிக் கட்டுவதற்காகப் பயன்படுத்தப்பட்ட துணியே வேட்டி என்றானது. கண்கள் மற்றும் மூக்கு மட்டும் வெளியில் தெரியுமாறு தலையைச் சுற்றிக் கட்டி மறைத்துக் கொள்வதை வேடம் என்றும் அவ்வாறு செய்பவரை வேடர் என்றும் அழைத்தனர். அதாவது,

வேடு + அம் = வேடம் = தலையைச் சுற்றிக் கட்டி முகத்தை மறைத்தல்

வேடு + அர் = வேடர் = தலையைச் சுற்றிக் கட்டி முகத்தை மறைத்தவர் 

வேட்டி என்ற சொல் தமிழே என்றாலும் அச்சொல் தமிழ் இலக்கியங்களில் ஆளப் பெறவில்லை. இதை ஒரு காரணமாக முன்வைத்து, வேச்~டி என்ற சமக்கிருதச் சொல்லில் இருந்துதான் வேட்டி வந்தது என்று கூறுவது பொருந்தாது. காரணம், சமக்கிருதத்தில் வேச்~டி என்ற சொல்லுக்கான விளக்கம் சிறிதும் பொருத்தமற்றது. 

வேட்டியும் பயன்பாடும்: 

நீளமாக நெய்யப்பட்ட துணியில் இருந்து வெட்டி எடுக்கப்படும் எதுவுமே வேட்டி தான். வேட்டிக்கும் துண்டுக்கும் பெரிய வேறுபாடு எதுவும் இல்லை. சிறிய விரிப்பாக இருந்தால் துண்டு. சற்று பெரிய விரிப்பாக இருந்தால் வேட்டி. அவ்வளவுதான். பழங்காலத்தில் வேட்டி என்பது பாத்திர வாயில் கட்டி மூடுதல், வடிகட்டுதல், முகத்தை மறைத்துக் கொள்ளுதல் போன்ற வேலைகளுக்குப் பயன்பட்டதை மேலே கண்டோம். 

ஆனால் தற்காலத்தில் வேட்டியை இரண்டு விதமாகக் கட்டுகின்றனர். இடுப்பில் இருந்து பாதம் வரையிலும் முழுமையாகத் தொங்கவிட்டுக் கட்டுவது ஒருவிதம். அதையே முழங்கால் தெரியுமாறு தூக்கி மடித்துக் கட்டுவது இன்னொரு விதமாகும். முதலாம் முறைப்படி கட்டுவதை மரியாதை முறை என்றும் இரண்டாம் விதத்தினை அவமரியாதை முறை என்றும் கூறுகின்றனர். காரணம், கோவிலுக்குள் செல்லும்போதோ பெரியவர்கள் யாரும் எதிரில் வரும்போதோ அலுவலகத்தில் அமரும்போதோ இரண்டாம் முறையில் இருந்து முதலாம் முறைக்கு மாறிவிடுகின்றனர். அதாவது தூக்கிக் கட்டிய மடிப்பினை கீழே இறக்கிவிட்டு முதலாம் முறைக்கு மாறி விடுகின்றனர். அப்படிச் செய்வதுதான் மரியாதை என்று கருதப்படுவதே இதற்குக் காரணம் ஆகும். எனவேதான் இரண்டாவது முறையானது அவமரியாதை முறை என்று அழைக்கப்படுகிறது. 

ஆனால் முதலாம் முறைப்படி வேட்டியை அணிந்துகொண்டு இயல்பான பல வேலைகளைச் செய்ய இயலாது. காரணம், வேட்டியை முழுமையாகத் தொங்கவிட்டு வேகமாக நடக்கும்போது அது கால்களைத் தடுக்கும். நமது அவசர நகர்வுகளுக்கு ஒத்துழைக்காமல் தடையாக இருக்கும். குறிப்பாக, வயல்வேலைகளை வேட்டி அணிந்து செய்வது மிகுந்த சிரமமாக இருக்கும். எனவே சிலர் இரண்டாம் முறைப்படி முழங்காலுக்கு மேல் தூக்கிக் கட்டிக்கொண்டு செய்கின்றனர். ஆனால் இந்த முறையானது அவமரியாதை முறை என்பதால் வயல்வேலை தவிர பல அலுவல்களை அவ்வாறு அணிந்துகொண்டு செய்வது பல நேரங்களில் தர்ம சங்கடத்தை உருவாக்குகிறது.  

எப்படிப் பார்த்தாலும் வேட்டியை அணிந்துகொண்டு வேலை செய்வது என்பது சிரமமாகக் கருதப்படுவதால் தான் இக் காலத்தில் கிராமத்து விவசாயிகள் கூட முழுக்கால்சட்டை அணிந்துகொண்டு வயல்வேலை செய்கின்றனர். 

வேட்டி – தமிழர்களின் பாரம்பரிய உடை அல்ல: 

சங்க இலக்கியம் உட்பட பல்வேறு தமிழ் இலக்கியங்களில் தமிழரின் உடையைக் குறிப்பிடுவதற்கு எழுபதுக்கும் மேற்பட்ட சொற்களைப் பயன்படுத்தி உள்ளனர். இவற்றில் வேட்டி என்ற சொல் தமிழாகவே இருந்தாலும் சங்க இலக்கியம் உட்பட எந்த இலக்கியத்திலும் இடம்பெறவில்லை. வேட்டி என்பது தமிழரின் பாரம்பரிய உடை அல்ல என்னும் கூற்றுக்கு இதுவொன்றே போதுமான சான்று ஆகும். இருந்தாலும் மேலும் பல சான்றுகளையும் இங்கே காணலாம். 

சங்ககாலத்தில் தமிழர்கள் உடை வடிவமைப்பில் பல நுட்பங்களை அறிந்தவராக இருந்துள்ளனர் என்பதை சங்கப் பாடல்களின் வழியாக அறிந்துகொள்ள முடிகிறது. பாம்பின் சட்டையைப் போலவும் (புறம்: 397) புகையினைப் போலவும் (பெரும்: 469) மிக மெலிதான அதேசமயம் பார்வை உட்புகாத விதமாக உடைகளை உருவாக்கியுள்ளனர். கொடிகளைப் போன்ற வளைவுகள், பூ வேலைப்பாடுகள், ஒளிரும் வண்ணங்கள் என்று பலவற்றையும் தமது உடைகளில் உருவாக்கி இருந்தனர் என்னும் செய்திகளை சங்கப் பாடல்கள் பறை சாற்றுகின்றன. 

சங்ககாலத் தமிழர்கள் தமது உடைகளின் வடிவமைப்பில் மிகுந்த ஆர்வம் கொண்டவராக இருந்ததால்தான் அவர்கள் வேட்டியை அணியவில்லை. காரணம், வேட்டி என்பது மிகமிக எளிமையான ஒரு துண்டுத் துணி ஆகும். அதை அணிந்துகொண்டு வேலைசெய்வதும் சிரமமான ஒன்று என்பதால் சங்க காலத்திலும் சரி அதற்கு அப்புறமும் சரி வேட்டியை யாரும் விரும்பி உடையாக அணியவில்லை. இருந்தாலும், வேட்டியைப் போன்ற மிக எளிமையான துண்டுத் துணிகளை உடையாக உடுத்தாமல் மேலே போர்த்துவதற்கு மட்டுமே பயன்படுத்தி இருப்பதை சங்க இலக்கியத்தில் (புறம்: 286) காண முடிகிறது. 

அதுமட்டுமின்றி, தமிழகத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் காணப்படும் சிலைகள்  மற்றும் பிற சிற்பங்களில் கூட வேட்டியை உடுத்தியவாறான ஒரு சிற்பத்தையும் காண இயலவில்லை. இச் சான்றுகளில் இருந்து, வேட்டி என்பது தமிழர்களால் பாரம்பரியமாக உடுத்தப்பட்ட உடை அல்ல என்பதைத் தெளிவாக அறிந்து கொள்ளலாம். 


தமிழரின் பாரம்பரிய உடை கலிங்கமே: 

தமிழர்களின் பாரம்பரிய உடை வேட்டி அல்ல என்றால் வேறு எது? என்ற கேள்வி எழுகிறது. இக் கேள்விக்கான விடை “கலிங்கம்” என்பதாகும். கலிங்கம் என்னும் சொல்லுக்கு உடை என்ற பொதுப்பொருள் மட்டுமே தமிழ் அகராதிகளில் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இச்சொல்லுக்கு இரண்டு விதமான சிறப்புப் பொருட்களும் உண்டு. 

சங்க இலக்கியத்தில் மட்டும் 28 பாடல்களில் கலிங்கம் என்ற சொல் பயன்படுத்தப்பட்டு உள்ளது. அந்த அனைத்துப் பாடல்களின் குறிப்பிட்ட வரிகளையும் கீழே காணலாம். 

பல் கலை சில் பூ கலிங்கத்தள்  - கலி 56

நலம் பெறு கலிங்கத்து குறங்கின் மிசை அசைஇயது ஒரு கை - திரு 109

காடி கொண்ட கழுவுறு கலிங்கத்து - நெடு 134

கொடும் புறம் வளைஇ கோடி கலிங்கத்து ஒடுங்கினள் கிடந்த - அகம் 86

காதல் கொள் வதுவை நாள் கலிங்கத்துள் ஒடுங்கிய - கலி 69

கான மஞ்ஞைக்கு கலிங்கம் நல்கிய - சிறு 85

நீலம் நாகம் நல்கிய கலிங்கம் ஆலமர்செல்வற்கு - சிறு 96

ஆவி அன்ன அவிர் நூல் கலிங்கம் இரும் பேர் ஒக்கலொடு - பெரும் 469

கண் பொருபு உகூஉம் ஒண் பூ கலிங்கம் பொன் புனை வாளொடு - மது 433

பொன் உரை காண்மரும் கலிங்கம் பகர்நரும் - மது 513

மெல் நூல் கலிங்கம் கமழ் புகை மடுப்ப - மது 554

சோறு அமைவுற்ற நீர் உடை கலிங்கம் உடை அணி பொலிய - மது 721

இழை மருங்கு அறியா நுழை நூல் கலிங்கம்  - மலை 561

துளங்கு இயல் அசைவர கலிங்கம் துயல்வர - நற் 20

கழுவு-உறு கலிங்கம் கழாஅது உடீஇ - குறு 167

நூலா_கலிங்கம் வால் அரை கொளீஇ - பதி 12

கழுவு-உறு கலிங்கம் கடுப்ப சூடி - பதி 76

ஒருத்தி அடி தாழ் கலிங்கம் தழீஇ ஒரு கை - கலி 92

முருங்கா கலிங்கம் முழுவதும் வளைஇ - அகம் 136

ஒண் பூ கலிங்கம் உடீஇ நுண் பூண் - புறம் 383

நுண் நூல் கலிங்கம் உடீஇ உண்ம் என - புறம் 392

அகன்று மடி கலிங்கம் உடீஇ செல்வமும் - புறம் 393

புரையோன் மேனி பூ துகில் கலிங்கம் உரை செல அருளியோனே - புறம் 398

கலிங்கம் அளித்திட்டு என் அரை நோக்கி - புறம் 400

மாசு பட்டன்றே கலிங்கமும் தோளும் - நற் 380

அம் மாசு ஊர்ந்த அவிர் நூல் கலிங்கமொடு  - நெடு 146

புகா புகர் கொண்ட புன் பூ கலிங்கமொடு  - நற் 90

பாம்பு உரித்து அன்ன வான் பூ கலிங்கமொடு  - புறம் 397 

மேற்காணும் பாடல் வரிகளில் வரும் கலிங்கம் என்ற சொல்லானது இரண்டு விதமான சிறப்புப் பொருட்களில் பயன்படுத்தப் பட்டுள்ளது. அவை பற்றிக் கீழே காணலாம். 

கலிங்கம் – சொல்லும் ஆக்கமும்: 

கலிங்கம் என்னும் சொல்லுக்கு இரண்டு விதமான சிறப்புப் பொருட்கள் தோன்றும் முறையினைக் கீழே காணலாம். 

(1)  சிறப்புப் பொருள்: முழுக்கால்சட்டை 

கால் + இங்கு (=அழுந்து, புகு) + அம் (=நீளம்) = கலிங்கம் = கால்களில் நீளமாகப் புகுத்தப்படுவது = முழுக்கால் சட்டை. 

(2)  சிறப்புப் பொருள்: முழுநீள புடவை 

கலை (=உடை, கலைவடிவம்) + இங்கு (=தங்கு, பொருந்து) + அம் (=நீளம்) = கலிங்கம் = கலைவடிவம் பொருந்திய நீண்ட உடை = முழுநீளப் புடவை 

கலிங்கமும் முழுக்கால் சட்டையும்: 

கலிங்கம் என்னும் சொல்லுக்கு முழுக்கால்சட்டை என்ற பொருளும் உண்டென்று மேலே கண்டோம். சங்க இலக்கியத்தில் எந்தெந்த பாடல்களில் இப் பொருள் வந்துள்ளது என்பதைக் கீழே சான்றுகளுடன் காணலாம்.  

முழுக்கால்சட்டை என்பது இடுப்பில் இருந்து இரண்டாகப் பிரிந்து இரண்டு கால்களிலும் தனித்தனியாகப் பொருந்தி மறைக்கின்ற நீண்ட உடையாகும். சங்ககாலத்தில் வாழ்ந்த புலவர் ஒருவர் காவி நிறத்தில் அணிந்திருந்த முழுக்கால் சட்டை நைந்துபோய் இருந்ததால் அது பார்ப்பதற்கு பாம்பின் பிளவுபட்ட சிவந்த நாக்கைப் போல தோன்றியதாகவும் அப்படிப்பட்ட தனது நைந்துபோன உடையை மாற்றி பகன்றை மலர்போல வெண்ணிறத்தில் முழுக்கால்சட்டை அளித்ததாகக் கீழ்க்காணும் பாடலில் கூறுகிறார். 

ஈன்ற அரவின் நா உரு கடுக்கும் என் தொன்றுபடு சிதாஅர் துவர நீக்கி

போது விரி பகன்றை புது மலர் அன்ன அகன்று மடி கலிங்கம் உடீஇ – புறம். 393 

அடுத்ததாக, சங்க காலத்தில் சில உழவர்கள் பகன்றையின் வெண்ணிற மலர்களைக் கொண்டு அகலமாகவும் நீளமாகவும் மாலைகளைக் கட்டிக் கழுத்தில் அணிந்து தொங்க விட்டிருந்தனர். அப்போது அது பார்ப்பதற்கு வெளுக்கப்பட்ட வெண்ணிற முழுக்கால்சட்டையைப் போலத் தோன்றியதாகக் கீழ்க்காணும் பாடல் கூறுவதைக் காணலாம். 

பல் விதை உழவின் சில் ஏராளர் பனி துறை பகன்றை

பாங்கு உடை தெரியல் கழுவுறு கலிங்கம் கடுப்ப சூடி – பதி. 76 

மேற்காணும் இரண்டு பாடல்களிலும் கலிங்கம் என்னும் ஆடையின் வடிவத்திற்கு உவமைகளாக, இரண்டு பிரிவுகளைக் கொண்ட பாம்பின் பிளந்த நாக்கு மற்றும் மாலையினைக் கூறி இருப்பதில் இருந்து கலிங்கம் என்பது இரண்டு பிரிவுகளைக் கொண்ட முழுக்கால்சட்டையைத் தான் குறிக்கிறது என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம். 

கலிங்கமும் முழுநீள புடவையும்: 

சங்ககாலத்தில் ஆண்கள் அணிந்திருந்த கலிங்கம் என்பது முழுக்கால் சட்டையைக் குறிக்கும் என்று மேலே கண்டோம். அதேசமயம், பெண்கள் அணிந்திருந்த கலிங்கம் என்பது முழுநீளப் புடவையைக் குறிக்கும் என்பதனைக் கீழ்க்காணும் சான்றுகளின் வழியாக அறியலாம். 

சங்ககாலத் தமிழ்ப் பெண்கள் கலிங்கம் என்னும் உடையினை பாதம் வரையிலும் தாழ்வாக உடுத்தினர் என்பதைக் கீழ்க்காணும் கலித்தொகைப் பாடல் கூறுவதைக் காணலாம். 

ஒருத்தி அடி தாழ் கலிங்கம் தழீஇ ஒரு கை - கலி 92 

சங்ககாலத் தமிழ்ப் பெண்கள் உடுத்திய கலிங்கம் என்னும் உடையில் பல்வேறு கலை வடிவங்களும் பூ வேலைப்பாடுகளும் இருந்தன என்பதைக் கீழ்க்காணும் கலிப்பாடல் கூறுகிறது. 

பல் கலை சில் பூ கலிங்கத்தள்  - கலி 56 

கலிங்கம் என்னும் உடையானது தற்காலத்துத் தாவணி போன்ற கீழாடையாக மட்டுமே இருந்திருக்கலாமோ என்ற சந்தேக எண்ணம் இப்போது பலருக்கு எழலாம். ஆனால் அந்த எண்ணம் தவறு என்பதைக் கீழ்க்காணும் பாடல்களில் இருந்து புரிந்து கொள்ளலாம். 

கொடும் புறம் வளைஇ கோடி கலிங்கத்து ஒடுங்கினள் கிடந்த - அகம் 86

காதல் கொள் வதுவை நாள் கலிங்கத்துள் ஒடுங்கிய - கலி 69 

மேற்காணும் இரண்டு பாடல்களுமே கலிங்கம் என்னும் உடைக்குள் அவள் ஒடுங்கி இருந்தாள் என்ற செய்தியைக் கூறுகின்றன. இவ்விரண்டு பாடல்களில், கலிங்கத்தை முதுகுப் பக்கமாக வளைத்து அதற்குள் அவள் ஒடுங்கி இருந்தாள் என்று முதல் பாடல் விளக்கமாகக் கூறுகிறது. இதிலிருந்து, சங்ககாலப் பெண்கள் அணிந்த கலிங்கம் என்பது கலைவடிவங்களும் பூ வேலைப்பாடுகளும் பொருந்திக் கீழாடையாகவும் மேலாடையாகவும் உடுத்தப்பட்ட முழுநீள புடவையே என்று அறியலாம். 

பிறமொழி ஆட்சியும் தமிழர் உடை மாற்றங்களும்: 

ஆங்கிலத்தில் டிரவுசர் அல்லது ஃபேன்ட் அல்லது ஃபேன்டலூன் என்று அழைக்கப்படும் முழுக்கால் சட்டையானது முதன்முதலில் மத்திய ஆசியாவில் தோன்றியதாக விக்கிபீடியா கூறுகிறது. உண்மையில், அது தமிழர்கள் இவ் உலகிற்கு அளித்த கொடையே ஆகும். காரணம், ஏறத்தாழ 3500 ஆண்டுகளுக்கும் முற்பட்ட சங்க இலக்கியத்திலேயே முழுக்கால்சட்டை பற்றிக் கூறப்பட்டுள்ளது என்றால் அதற்கும் முன்னரே அந்த உடையினைத் தமிழர்கள் கண்டறிந்து இருக்க வேண்டும் என்பது உறுதியாகிறது.  

கலிங்கம் என்னும் முழுக்கால் சட்டையானது தமிழர்களால் கண்டறியப்பட்டு அவரது பாரம்பரிய உடையாகத் தமிழகத்தில் பலகாலம் கோலோச்சி வந்தது. இதற்குச் சான்றாக தமிழகத்தில் உள்ள பல்வேறு கோவில் சிற்பங்களில் இன்றளவும் காணப்படும் ஆண்களின் முழுக்கால்சட்டை உடை வடிவமைப்பைக் கூறலாம். இவ்வாறு கோலோச்சி வந்த கலிங்கமானது தமிழகத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றங்களால் மாறுதல்களுக்கு உள்ளானது. நாயக்கர், ஆங்கிலேயர் போன்ற பிறமொழிக் காரர்களின் ஆட்சியின்போது தமிழர்மீது கொண்ட வெறுப்பு மற்றும் அடிமைப்படுத்தும் நோக்கத்தினால் தமிழரது ஆடைச் சுதந்திரம் பறிக்கப்பட்டு வேட்டி, துண்டுகளே தமிழரது உடைகளாக ஒதுக்கப்பட்டன. இதனால் தமிழர்கள் பலரும் தமது பாரம்பரிய உடையான கலிங்கம் என்னும் முழுக்கால்சட்டையைத் தொலைத்து வேட்டிக்கும் துண்டுக்கும் மாறினர். 

முடிவுரை: 

இதுவரை கண்டவற்றில் இருந்து, தமிழர்களின் பாரம்பரிய உடையானது வேட்டி அல்ல முழுக்கால்சட்டை ஆகிய கலிங்கமே என்று பல சான்றுகளின் வழியாகத் தெரிந்து கொண்டோம். வேட்டி என்பது பிறமொழி ஆட்சியாளருக்குத் தமிழர்கள் அடிமையாக இருந்தபோது ஒதுக்கப்பட்ட அடிமை உடை என்றும் தெரிந்து கொண்டோம். எனவே இனிமேல் TROUSER / PANT / PANTALOON என்ற ஆங்கிலச் சொற்களைப் பயன்படுத்தாமலும் முழுக்கால்சட்டை என்று நீட்டி முழக்காமலும் கலிங்கம் என்ற நமது பாரம்பரியச் சொல்லையே பெருமையுடன் பயன்படுத்துவோமாக. அத்துடன், வேட்டி என்னும் அவமானச் சின்னத்தை உதறி கலிங்கம் என்னும் பாரம்பரிய உடையினையே மிடுக்குடன் அணிந்து மகிழ்வோமாக !!! 

செவ்வாய், 24 மே, 2022

13. (ஐது > ஔவை) சங்க இலக்கியச் சொற்பிறப்பியல் - Tamil Etymological Dictionary - Part 13 - Aithu > Ouvai

 

தமிழ்ச் சொல்

பொருள்

மேற்கோள்

தோன்றும் முறை

ஐது

மை

திரு. 228

ஐ (=மென்மை, குழைவு) + து = ஐது = குழைவுடையது = மை

ஐது

மென்மை

சிறு. 7

ஐ (=மென்மை) + து = ஐது

ஐது

இமை

பொரு. 7

எயிறு (=கண்ணிமை) >>> அயிது >>> ஐது

ஐது

அழகு

நற். 264

ஐ (=அழகு) + து = ஐது = அழகுடையது

ஐது

எழுத்து

நற். 252

எழுத்து >>> அய்து >>> ஐது

ஐது

மிகுதி

நற். 344

அழி (=மிகுதி) + து = அழிது >>> ஐது

ஐது

கை

அக. 94

இறை (=கை) + உ = ஈறு >>> ஐது

ஐது

வியப்பு

குறு. 217

ஐ (=வியப்பு) + து = ஐது

ஐது

ஐந்து

புற. 29

ஐந்து >>> ஐது

ஐந்து

எண் வகை

பரி. 3

அத்தம் (=கை) + ஊழ் (=எண்ணு) = அத்தூழ் >>> ஐந்து = கையில் உள்ள எண்ணிக்கை

ஐம்பால்

இமை

கலி. 32

ஐ (=அழகு, மென்மை) + பால் (=வரி, பிரிவு, உறுப்பு) = ஐம்பால் = அழகிய வரிகளைக் கொண்ட மெல்லிய உறுப்பு

ஐயம்

சந்தேகம்

புற. 216

ஆய் (=ஆராய், சந்தேகி) + அம் = அய்யம் >>> ஐயம் = சந்தேகம்

ஐயம்

பிச்சை

பதி. 21

ஈ (=கொடு) + அம் (=வணங்கு, சொல், உணவு) = ஈயம் >>> ஐயம் = கொடு என வணங்கியோர்க்கு உணவு கொடுத்தல்

ஐயர்

தந்தை

நற். 122

ஐ (=தந்தை) + அர் = ஐயர்

ஐயர்

பார்ப்பார்

பரி. 24

ஐ (=மென்மை, நுட்பம்) + அர் = ஐயர் = மென்மைத் தன்மையும் அறிவு நுட்பமும் உடையவர் = பார்ப்பார்

ஐயவி

வெண் கடுகு

திரு. 228

ஐ (=கோழை, சளி, நுண்மை, வெண்மை) + அவி (=உணவு, நீக்கு) = ஐயவி = சளியை நீக்கும் நுண்ணிய வெண்ணிற உணவு = வெண்கடுகு

ஐயவி

அம்பு செலுத்தும் மரம்

பதி. 22

ஏ (=அம்பு, செலுத்துகை, பெருக்கம்) + அமை (=பொருத்து, மரம்) + இ = எயமி >>> ஐயவி = அம்பு செலுத்துவதற்குப் பொருத்தப்படும் பெரிய மரம்

ஐயள்

அழகி

நற். 2

ஐ (=அழகு) + அள் = ஐயள் = அழகி

ஐயன்

தலைவன்

கலி. 43

ஐ (=தலைமை) + அன் = ஐயன்

ஐயை

தலைவி

அக. 6

ஐ (=தலைமை) + ஐ = ஐயை

ஐவனம்

வெண்ணெல் வகை

மது. 288

ஐ (=சிறுமை) + வான் (=வெண்மை, வலிமை) + அம் (=உணவு) = ஐவானம் >>> ஐவனம் = வலுவான வெண்ணிற சிறிய உணவு = வெண்ணெல்

ஒக்கல்

கூட்டம்

நற். 300

ஓங்கு (=பெருகு, கூடு) + அல் = ஓங்கல் >>> ஒக்கல் = கூட்டம்

ஒசியல்

முறிதண்டு

குறு. 112

ஒழி (=அறு, முறி) + அள் (=தண்டு) = ஒழியள் >>> ஒசியல் = முறிதண்டு

ஒட்டகம்

பாலைவன பெரிய உயிரி

அக. 245

உறை (=மிகக்குறைவு, மழை, மிகு, சுடு, தங்கு, வாழ், உயரம், நீளம்) + அகம் (=நிலம், உயிரி) = உற்றகம் >>> ஒட்டகம் = மிகக் குறைந்த மழையும் மிக்க சூடும் உடைய நிலத்தில் தங்கி வாழும் உயர்ந்து நீண்ட உயிரி.

ஒடியல்

முறிதண்டு

நற். 289

ஒடி (=முறி) + அள் (=தண்டு) = ஒடியள் >>> ஒடியல் = முறிதண்டு

ஒடிவு

சோர்வு

பதி. 80

ஒடி (=சோர்) + வு = ஒடிவு = சோர்வு

ஒடிவை

குறைவு

அக. 301

ஒடி (=குறை) + வை = ஒடிவை = குறைவு

ஒடுக்கம்

சோர்வு

மது. 642

ஒடுங்கு (=சோர்) + அம் = ஒடுங்கம் >>> ஒடுக்கம் = சோர்வு

ஒடுக்கம்

மறைவு

புற. 259

ஒடுங்கு (=மறை) + அம் = ஒடுங்கம் >>> ஒடுக்கம் = மறைவு

ஒடுக்கம்

அடக்கம்

நற். 393

ஒடுங்கு (=அடங்கு) + அம் = ஒடுங்கம் >>> ஒடுக்கம் = அடக்கம்

ஒண்மை

அறிவு

பதி. 70

உள் (=கருது, அறி) + மை = உண்மை >>> ஒண்மை = அறிவு

ஒண்மை

ஒளி

பரி. 4

உண் (=குறை, அழி) + மை (=இருள்) = உண்மை >>> ஒண்மை = இருளை அழிப்பது = ஒளி

ஒத்தன்

ஒருவன்

கலி. 103

ஒற்றை (=ஒன்று) + அன் = ஒற்றன் >>> ஒத்தன் = ஒருவன்

ஒத்தி

ஒருத்தி

கலி. 143

ஒற்றை (=ஒன்று) + இ = ஒற்றி >>> ஒத்தி = ஒருத்தி

ஒதுக்கம், ஒதுக்கு

வழி

அக. 323, நற். 240

உறை (=நீளம், இடம்) + உகை (=செல்) + அம் = உறுக்கம் >>> ஒதுக்கம் = செல்வதற்கான நீண்ட இடம் = வழி

ஒதுக்கு

பயணம்

அக. 142

உறை (=நீளம்) + உகை (=செல்) + உ = உறுக்கு >>> ஒதுக்கு = நீண்டு செல்லுதல் = பயணம்

ஒப்பு

சமம்

பொரு. 34

ஒ (=சமமாகு) + பு = ஒப்பு = சமம்

ஒப்புரவு

உலக ஆசாரத்தைப் பின்பற்றல்

நற். 220

ஒப்பு (=இணக்கம்) + ஊர் (=உலகம், நட) + ஔ = ஒப்பூரவு >>> ஒப்புரவு = உலக நடையுடன் இணக்கம்

ஒரால்

தப்பி ஓடுதல்

பதி. 23

ஒருவு / ஒரு (=தப்பு, ஓடு) + ஆல் = ஒரால் = தப்பி ஓடுதல்

ஒருங்கு

ஒன்று கூடுதல்

சிறு. 139

ஒருமை (=ஒன்று) + ஓங்கு (=பெருகு, கூடு) = ஒரோங்கு >>> ஒருங்கு = ஒன்று கூடுதல்

ஒருத்தல்

ஆண்

குறு. 396

உரு (=சின, மிகு, உடல்) + ஊற்றம் (=வலிமை) + அல் = உரூற்றல் >>> ஒருத்தல் = உடல் வலிமையும் சினமும் மிக்கது = ஆண்

ஒருத்தி

ஒருபெண்

கலி. 92

ஒருமை + ஒத்தி = ஓரொத்தி >>> ஒருத்தி = ஒருபெண்

ஒருவன்

ஒரு ஆண்

திரு. 254

ஒருமை + அன் = ஒருவன்

ஒல்லார்

பகைவர்

பதி. 54

ஒல்லு (=உடன்படு) + ஆ (=எதிர்மறை) + ஆர் = ஒல்லார் = உடன்படாதவர்

ஒல்லை

விரைவு

கலி. 145

ஒல் (=பொறு, தாமதி) + ஆய் (=நீங்கு, அறு) = ஒல்லாய் >>> ஒல்லை = தாமதம் அற்றது = விரைவு

ஒலி, ஓல்

அதிர்வால் உண்டாவது

பொரு. 206, கலி. 42

உலை (=நடுங்கு, அதிர்) + ஈ (=படை, உண்டாகு) = உலீ >>> ஒலி = அதிர்வினால் உண்டாவது = ஒலி

ஒலி

அழகு

நெடு. 98

ஒளி (=விளக்கம், அழகு) >>> ஒலி

ஒலி

மிகுதி

கலி. 75

உலை (=வற்று, குறை) + ஈ (=அழிவு) = உலீ >>> ஒலி = குறைவின்மை = மிகுதி, பெருக்கம்

ஒலி

வறட்சி

அக. 39

உலை (=வற்று) + இ = உலி >>> ஒலி = வற்றுகை = வறட்சி

ஒலியல்

பூ

புற. 76

உலை (=நெகிழ், வாடு) + இயல் (=மென்மை, தோன்று) = உலியல் >>> ஒலியல் = தோன்றி நெகிழ்ந்து வாடும் மென்மை கொண்டது = பூ

ஒழுக்கம்

நடப்பதற்கான நன்முறை

கலி. 100

ஊழ் (=முறை) + உகை (=செல், நட) + அம் (=நன்மை) = உழுக்கம் >>> ஒழுக்கம் = நடப்பதற்கான நன்முறை

ஒழுக்கு

பொழிவு

மது. 507

ஒழுகு (=பொழி) + உ = ஒழுக்கு = பொழிவு

ஒழுக்கு

செல்முறை

புற. 173

ஊழ் (=முறை) + உகை (=செல்) + உ = உழுக்கு >>> ஒழுக்கு = செல்முறை

ஒழுக்கு

காய்

அக. 2013

ஊழ் (=பழு) + உகு (=அழி, இல்லாகு) + உ = உழுக்கு >>> ஒழுக்கு = பழுக்காதது = காய்

ஒழுகை

வண்டி

புற. 116

ஊழ் (=சுற்று) + உகை (=பதி, செல்) = உழுகை >>> ஒழுகை = பதிந்து சுற்றிச் செல்வது = வண்டி

ஒளி

இருப்பதைக் காட்டுவது

மது. 545

உள் (=இரு) + ஈ (=படை, வெளிக்காட்டு) = உளீ >>> ஒளி = இருப்பதை வெளிக்காட்டுவது

ஒளி

அழகு

குறு. 276

உளை (=சேறு, கசடு) + ஈ (=நீக்கம், படை, தோன்று) = உளீ >>> ஒளி = கசடு நீங்குதலால் தோன்றுவது

ஒளி

தீ

கலி. 52

உலை (=அலை, பரவு, அழி) + இ = உலி >>> ஒளி = பரவி அழிப்பது

ஒளி

அறிவு

புற. 53

உள் (=கருது, அறி) + இ = உளி >>> ஒளி = அறிவு

ஒளிறு

ஒளி

அக. 96

உலை (=அழி) + இருமை (=இருள்) + உ = உலிரு >>> ஒளிறு = இருளை அழிப்பது = ஒளி

ஒற்கம்

வறுமை

புற. 327

ஒல்கு (=குறை, வறிதாகு) + அம் = ஒல்கம் >>> ஒற்கம் = வறுமை

ஒன்பது

பத்தின் குறை

திரு. 183

உண் (=குறை) + பத்து = உண்பத்து >>> ஒன்பது = பத்தின் குறை

ஒன்றார், ஒன்னார்

பகைவர்

பரி. 21, புற. 39

ஒன்று (=கூடு, சேர்) + ஆ (=எதிர்மறை) + ஆர் = ஒன்றார் >>> ஒன்னார் = சேராதவர் = பகைவர்

ஒன்று

ஆதி, முதல் எண்

புற. 166, புற. 18

ஒன் (=பொருந்து, தொடு) + து = ஒன்று = தொடக்கம், ஆதி >> எண்களின் ஆதி

ஓங்கல்

உயரம்

நற். 87

ஓங்கு (=உயர்) + அல் = ஓங்கல் = உயரம்

ஓங்கல்

கடலலை

நற். 395

ஓங்கு (=உயர்) + ஆல் (=ஒலி, நீர்) = ஓங்கால் >>> ஓங்கல் = ஒலித்து உயரும் நீர் = கடலலை

ஓங்கல்

கரும்பாறை

அக. 228

ஊழ் (=இருள், கருமை) + கல் (=பாறை) = ஊழ்க்கல் >>> ஓங்கல் = கரும்பாறை

ஓச்சம்

புகழ்

பதி. 41

ஓச்சு (=உயர்த்து) + அம் (=சொல்) = ஓச்சம் = உயர்த்தும் சொல் = புகழ்

ஓசனை

பயண தூரம்

பரி. 12

ஓச்சு (=செலுத்து, ஓட்டு) + அணை (=பொருந்து, எல்லை) = ஓச்சணை >>> ஓசனை = ஓட்டுதலுடன் பொருந்திய எல்லை

ஓசை

ஒலி

நற். 4

உய் (=அறிவி, ஒலி) + ஐ = ஊயை >>> ஓசை = ஒலிப்பது = ஒலி

ஓட்டை

பிளவு

பரி. 12

உடை (=பிள) + ஐ = ஊட்டை >>> ஓட்டை = பிளவு

ஓடம்

நீர்க்கலம்

அக. 101

ஓட்டு (=செலுத்து) + அம் (=நீர்) = ஓட்டம் >>> ஓடம் = நீரில் செலுத்தப் படுவது = படகு

ஓடை

நெற்றிப் பட்டம்

நற். 296

ஓடு (=உறை) + ஐ (=அழகு, தலைமை) = ஓடை = தலைக்கு அழகு சேர்க்கும் உறை

ஓதம்

கடலலை

புற. 22

உறை (=உயரம்) + அம் (=ஒலி, நீர்) = ஊறம் >>> ஓதம் = ஒலித்து உயரும் நீர் = கடலலை

ஓதம்

பேரொலி

பரி. 23

ஊது (=பெரு) + அம் (=ஒலி) = ஊதம் >>> ஓதம் = பேரொலி

ஓதி

கண்ணிமை

சிறு. 22

உறை (=ஒழுகல், காரம், துன்பம், நீர், துளி) + இ = ஊறி >>> ஓதி = துன்பத்தால் / காரத்தால் நீரைத் துளித்து ஒழுகச் செய்வது = கண், கண்ணிமை

ஓதி

ஓணான்

நற். 186

ஊழ் (=உடல், நிறம், மறை) + தை (=பொருத்து, சூழ்) + இ = ஊழ்தி >>> ஓதி = உடலின் நிறத்தைச் சூழலுடன் பொருத்தி மறைந்து கொள்வது

ஓதிமம்

அன்னம்

பெரு. 317

ஒத்து (=விலகு, பொழுது) + இமை (=கண்ணிமை, இல்லாகு) + அம் (=நீர், அழகு, பறவை) = ஓத்திமம் >>> ஓதிமம் = இமைப்பொழுதும் விலகாத அழகிய நீர்ப் பறவை

ஓதை

விவசாயம்

புற. 65

ஊது (=பெருக்கு, உண்) + ஐ = ஊதை >>> ஓதை = உணவைப் பெருக்குதல்

ஓதை

பேரொலி

மது. 258

உந்து (=பெருகு, ஒலி) + ஐ = உந்தை >>> ஓதை = பேரொலி

ஓரி

தலைமயிர்

பொரு. 164

அம்பு (=புல், மயிர்) + இறை (=தலை) + இ = அம்பிறி >>> அவ்விரி >>> அவுரி >>> ஔரி >>> ஓரி = தலைமயிர்

ஓரி

கரடி

பட். 257

ஏமம் (=இருள், கருமை, வலிமை) + இறை (=கை) + இ = எமிறி >>> அவிரி >>> ஔரி >>> ஓரி = கருத்த வலுவான கைகளைக் கொண்டது

ஓரி

அழகு

குறு. 244

அவிர் (=ஒளி, அழகு) + இ = அவிரி >>> ஔரி >>> ஓரி

ஓரை

ஓடியாடல்

நற். 68

ஆவு (=விரும்பு) + இரி (=ஓடு) + ஐ = அவிரை >>> ஔரை >>> ஓரை = விரும்பி ஓடுதல் = ஓடியாடல்

ஓலை

ஒலிக்கின்ற வறண்ட இலை

நற். 38

ஒலி (=வறட்சி, ஓசை) + ஐ (=மென்மை) = ஓலை = ஓசை எழுப்பும் வறண்ட மென்பொருள்

ஓவம், ஓவு

அழகிய காட்சி

பரி. 21, மது. 365

ஓம்பு (=கவனி, காண்) + அம் (=அழகு) = ஓம்பம் >>> ஓவம் = அழகிய காட்சி

ஓவியம்

வரைந்த தோற்றம்

நெடு. 147

ஓம்பு (=உண்டாக்கு) + இழை (=வரை) + அம் = ஓம்பிழம் >>> ஓவியம் = வரைந்து உண்டாக்கப்படுவது

ஓவு

தளர்வு

மது. 733

ஓய் (=தளர்) + வு = ஓய்வு >>> ஓவு = தளர்வு

ஔவை

வயது முதிர்ந்தவள்

சிறு. 101

அமை (=கோல், ஊன்று) + ஐ = அம்மை >>> அவ்வை >>> ஔவை = ஊன்றுகோலைக் கொண்டவள்