புதன், 11 பிப்ரவரி, 2009

' ஆமை புகுந்த வீடு உருப்படாது.'


' ஆமை ஒரு வீட்டிற்குள் புகுந்துவிட்டால் அந்த வீடு உருப்படாமல் போய்விடும் ' என்று இந்த பழமொழிக்குப் பொருள் கொண்டு 'ஆமையின்' மேல் ஒரு 'துரதிருஷ்டசாலி' என்னும் பழியைப் போடுகின்றனர் நம் மக்கள்.

இக்கருத்து சரியாகுமா?. இல்லை. ஆமை என்ன தவறு செய்தது? அதன் மேல் நாம் ஏன் வீண்பழி போடவேண்டும்?. நீர்நிலைகளில் வசிக்கும் இயல்புடைய ஆமை நமது வீட்டிற்கு ஏன் வரவேண்டும்?. சரி தவறுதலாக எப்படியோ ஒரு ஆமை நமது வீட்டிற்குள் புகுந்து விட்டால் எப்படி அந்த வீடு உருப்படாமல் போகும்?. மாறாக ஆமை வீட்டிற்குள் புகுந்தால் உங்கள் வீட்டிற்கு இலக்குமி (திருமகள்) வரப்போகிறாள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். ஏனென்றால் ஆமை திருமாலின் அருள் பெற்ற ஒரு உயிரினம் ஆகும். திருமாலின் பத்து அவதாரங்களில் ஒன்றல்லவா இந்த ஆமை அவதாரம். திருமால் இருக்கும் இடம் தானே திருமகள் வாசம் செய்யும் இடம். எனவே இந்த தவறான கருத்தை இன்றோடு கைவிடுங்கள்.

அப்படி என்றால் இந்தப் பழமொழியின் உண்மையான பொருள் என்ன?. வழக்கம் போல சொல்பிழைகளால் இந்தப் பழமொழியில் பொருள் மாறுபாடு அடைந்துள்ளது. தூய செந்தமிழ்ச் சொற்கள் கொச்சை வழக்கில் எப்படி எல்லாம் மாறுபாடு அடைகின்றன என்பதற்கு இந்தப் பழமொழியும் ஒரு எடுத்துக்காட்டு ஆகும்.

உங்களுக்குக் காளானைப் பற்றித் தெரியும். புழுத்துப்போன மரம், மாட்டுச்சாணம், வைக்கோல் முதலான பொருட்களில் இருந்து சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில் தானாகத் தோன்றும் ஒரு வகைப் பூஞ்சை தான் இது. இருட்டும் ஈரப்பதமும் காளான் தோன்றுவதற்கு ஏற்ற சூழ்நிலைகள். எப்போதுமே இருளாகவும் ஈரமாகவும் மக்கிப்போன பழைய மரங்களுடன் இருக்கும் வீட்டில் காளான் இயல்பாகவே தோன்றும். இது போன்ற வீட்டில் குடி இருப்பவர்கள் உடல்நலத்துடன் இருக்க முடியுமா?. முடியவே முடியாது. ஏனென்றால் இந்தச் சூழ்நிலையில் வசிக்கும் மனிதர்களுக்கு காசநோய், மனநோய், சருமநோய் முதலான பல நோய்கள் தொற்றிக்கொள்ளும். கதிரவனின் ஒளியும் வெப்பமும் இல்லாத வீட்டிற்கு வெளியாட்களும் வர விரும்ப மாட்டார்கள். எனவே இது மாதிரி வீட்டில் வசிப்பவர்கள் கவனிப்பார் யாருமின்றி நோய்வாய்ப்பட்டு மரணத்தைத் தேடிக்கொள்வர். ஆக மொத்தத்தில் காளான் பூத்த இந்த வீடு உருப்படாமலேயே போய்விடும். இதைத்தான் இந்த பழமொழியும் கூறுகிறது. சரியான பழமொழி இது தான்:

' ஆம்பி பூத்த வீடு உருப்படாது.'
(ஆம்பி = காளான்)

இதில் உள்ள தூய தமிழ்ச்சொற்களான 'ஆம்பி பூத்த' என்பன கொச்சைச் சொற்களாக மாறி பின்னர் உருமாறி இறுதியில் மீண்டும் தூய தமிழ் வடிவம் பெற்று இவ்வாறு நிற்கிறது. இந்த வரலாறு கீழே காட்டப்பட்டு உள்ளது.

ஆம்பி பூத்த > ஆமி பூத்த > ஆமெ பூத்த > ஆமெ பூந்த > ஆமை புகுந்த

--------------------------------------தமிழ் வாழ்க!------------------------------------------

செவ்வாய், 10 பிப்ரவரி, 2009

'களவும் கற்று மற'


தவறாகப் பொருள் கொள்ளப்பட்டுள்ள தமிழகப் பழமொழிகளில் இதுவும் ஒன்று. இதிலும் ஒரே ஒரு எழுத்துப் பிழையால் தான் பொருள் தவறு நேர்ந்துள்ளது. அதைப் பற்றிக் காணும் முன்னர் இதன் பொருள் என்ன என்று காணலாம்.

' திருட்டுத் தொழிலைக் கூட கற்றுக்கொண்டு பின்னர் மறந்துவிடு.' - இதுவே இதன் பொருள் ஆகும்.

எப்படி இருக்கிறது பொருள்?. மிகவும் ஆச்சர்யப்படுத்துகிறது அல்லவா?. எப்படி இதுபோன்ற பொருளில் பழமொழிகள் உலாவருகின்றன என்பதே தெரியவில்லை. இப்படித் தவறான பழமொழிகள் புழங்குவதால் தான் சமுதாயத்தில் ஒழுக்கம் குன்றி தவறுகள் அதிகரித்து விட்டன. 'ஏன் தவறு செய்கிறாய்?' என்று கேட்டால், 'களவும் கற்று மற' என்று பெரியவர்கள் சொல்லி இருக்கிறார்களே அதனால் நானும் இந்தத் தவறை ஒருமுறை செய்துவிட்டு பின்னர் மறந்துவிடுகிறேன் என்று சாக்கு சொல்லுகிறார்கள். இப்படி இளைய சமுதாயத்தினருக்கு ஒரு தவறான வழியைக் காட்டுவதாக ஒரு பழமொழி இருக்கலாமா?. கூடவே கூடாது. அதை ஒரேயடியாக நீக்கவேண்டும் இல்லையேல் அதன் உண்மைப் பொருளைக் கண்டறிந்து அதனை மக்களுக்கு உணர்த்த வேண்டும். முன்னோர்கள் சொல்லிவிட்டுச் சென்ற இப்பழமொழியை நீக்குவதை விட இதன் உண்மைப் பொருள் என்ன என்று கண்டறிந்து அதை மக்களுக்கு உணர்த்தினால் நன்றாக இருக்கும் என்னும் ஆவலில் ஏற்பட்டது தான் இந்த ஆய்வு.

பழமொழிகளின் பல்வேறு பயன்பாடுகளில் ஒன்று தான் ' இளையோரை வழிநடத்துதல்' ஆகும். பெரியோர்கள் தாம் அனுபவத்தால் பெற்ற அறிவை இளையோருக்குக் கூறி அதன்படி நடந்தால் நன்மைகள் பெறலாம் என்னும் உயர்ந்த நோக்கத்தில் உருவானவை பல பழமொழிகள். அத்தகைய பழமொழிகளுள் ஒன்று தான் இந்தப் பழமொழியும். 'தவறுகளைச் செய்யாதே' என்று தான் பெரியவர்கள் அறிவுரை கூறுவார்களே ஒழிய ' தவறுகளைப் பழகிக்கொள் பின்னர் மறந்துவிடு' என்று ஒருபோதும் சொல்லமாட்டார்கள். இனி இப் பழமொழியின் உண்மையான பொருள் என்ன என்று காண்போம்.

அக்காலத்திலும் சரி இக்காலத்திலும் சரி செய்யக்கூடாத தவறுகள் பட்டியலில் 'திருட்டு, சூது' ஆகியவை அடங்கும். இந்த இரண்டு தவறுகளும் ஒரு மனிதனை எந்த நிலைக்குக் கொண்டுசெல்லும் என்பதை இங்கே சொல்லத் தேவையில்லை. ஏனென்றால் அது உலகறிந்த உண்மை. திருட்டு என்பது பிறருக்கு உரிமை உடைய பொருளை அவருக்குத் தெரியாமல் தான் எடுத்துக் கொள்வது ஆகும். சூது என்பது பிறருக்குச் சொந்தமான பொருளை தந்திரத்தால் ஏமாற்றித் தான் கொள்வதாகும். தாயக்கட்டைகளை உருட்டி விளையாடும் இந்த விளையாட்டிற்கு 'சூதாட்டம்' என்று பெயர். இந்த தந்திரமான விளையாட்டின் அடிப்படையில் தானே 'மகாபாரதம்' உருவானது. துரியோதனன் துகில் உரிப்பதற்கும் பாஞ்சாலி சபதம் செய்ததற்கும் அடிப்படையே இந்த விளையாட்டு தானே.
இதைப் பற்றி ' சூது' என்னும் தலைப்பில் பத்து குறள்களில் மிக அருமையாக விளக்கியுள்ளார் திருவள்ளுவர். சூது விளையாடியவனின் நிலை பற்றி ஒரு குறளில் வள்ளுவர் இவ்வாறு கூறுகிறார்.

' கவறும் கழகமும் கையும் தருக்கி
இவறியார் இல்லாகி யார்.' - குறள் எண்: 935.

இங்கே 'கவறு' என்பது 'சூதாடும் கருவியையும்', 'கழகம்' என்பது 'சூதாடும் இடத்தையும்' குறிக்கும். ' சூதாடும் கருவியையும் சூதாடும் இடத்தையும் தம் கைகளையும் நம்பி மேல்சென்றவர்கள் ஒன்றும் இல்லாதவராய் ஆவர்.' என்பதே இக்குறளின் பொருள் ஆகும். சூதாடும் கருவியைக் குறிக்கும் இந்த 'கவறு' என்னும் சொல்லை 'கற்று' என்று பழமொழியில் பிழையாக எழுதியதால் தான் தவறான பொருள்கோளுக்கு வழிவகுத்து விட்டது. களவுத்தொழிலைக் கையால் தான் செய்யவேண்டும். அதேபோல சூது விளையாட்டையும் முழுக்க முழுக்க கைகளால் தான் ஆடவேண்டும். ' இந்த இரண்டையும் கையில் தொடாமல் இரு' என்பதே இப்பழமொழியில் பெரியவர்கள் கூற வரும் அறிவுரை ஆகும். இனி சரியான பழமொழி இது தான்:

' களவும் கறு மற.'
(கவறு மற = கவறும்+அற; அற - தவிர்)

பி.கு: சூதாடும் இடத்தைக் குறிக்கின்ற 'கழகம்' என்ற சொல்லை தமிழக அரசியல் கட்சிகள் பல தங்களது பெயருடன் இணைத்து வைத்துள்ள நோக்கம் என்னவோ?. சூதாடும் கழகத்தைச் சேர்ந்தவர்கள் ஏமாற்றுக்காரர்களாக இருப்பதுபோலவே அரசியல் கட்சிகளும் மக்களை ஏமாற்றி வருவதன் மறைபொருள் இப்போது தான் புரிகிறது.
-----------------------------------------வாழ்க தமிழ்!---------------------------------------

' பாத்திரம் அறிந்து பிச்சை இடு '


தமிழ்நாட்டில் புழங்கிவரும் பல பழமொழிகளில் இதுவும் ஒன்று. வழக்கம்போல இந்தப் பழமொழியிலும் எழுத்துப் பிழையால் இதன் பொருள் தவறாகக் கூறப்பட்டு வருகிறது.

பழமொழிகள் என்பவை பல காலங்களாக வெறும் வாய்வழக்காகவே இருந்து வந்ததால், அவை எழுத்து வடிவம் பெறும்போது அவற்றில் தவறுகள் நேர்ந்திருக்கக் கூடும் என்பது ஆய்வாளர்களின் பொதுவான கருத்து ஆகும். அன்றியும் பழமொழிகள் எப்போது தோற்றம் பெற்றன என்பதையோ அவற்றில் என்னென்ன மாற்றங்கள் காலங்கள்தோறும் உண்டாயின என்பதைப் பற்றியோ இங்கே யாரும் அறுதியிட்டுக் கூற இயலாது. எனவே இப்போதுள்ள பழமொழிகள் நடைமுறைக்கு ஒத்துவராத பொருளைக் கொண்டிருந்தால் அதனை திருத்தி செம்மை செய்யவேண்டியது நமது கடமை ஆகும். அந்த வகையில் மேற்காணும் பழமொழியிலும் எழுத்துப்பிழையால் பொருள் குற்றம் நேர்ந்துள்ளது. முதலில் இந்தப் பழமொழிக்கு என்ன பொருள் என்பதைப் பார்ப்போம்.

' பிச்சைக்காரன் வைத்திருக்கும் பாத்திரத்தின் தன்மை அறிந்து அதற்கேற்ப அவனுக்குப் பிச்சை இடு.' - இதுவே அதன் பொருள் ஆகும்.

இந்த கருத்து சற்றேனும் ஏற்புடையதாக இருக்கிறதா?. பிச்சைக்காரன் கையில் வைத்திருக்கும் பாத்திரம் பெரியதா? சிறியதா? அலுமினியமா? வெள்ளியா? பித்தளையா? திருவோடா? என்றெல்லாம் பார்த்து பிச்சை இடுங்கள் என்று கருத்து சொன்னால் அது நகைப்புக்கு இடமளிப்பதாய் இருப்பதுடன் அதை யாரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். இவ்வளவு கீழான பொருளுடன் ஒரு பழமொழி ஏன் இயற்றப்பட வேண்டும்?. தமிழுக்கு இருக்கும் மரியாதையை குறைப்பதற்காகவா?. இல்லை. ஒருபோதும் இல்லை.
பழமொழியை இயற்றியவர்களை என்றுமே நாம் குறைகூறக்கூடாது. ஏனென்றால் எந்தத் தமிழ் ஆசிரியரும் தமிழுக்குப் புகழ் சேர்க்கும் வண்ணமாகத் தான் பாடல்களை இயற்றுவாரே ஒழிய அதற்கு இழுக்கு சேர்க்க ஒருக்காலும் நினைக்கமாட்டார். ஒவ்வொரு பழமொழியும் முத்தான கருத்துக்களைத் தான் கொண்டிருக்கின்றன. சிலவற்றில் வரலாற்றுச் செய்திகள் கூட கூறப்பட்டுள்ளன. இந்த பழமொழியிலும் அப்படி ஒரு வரலாற்றுச் செய்தி தான் சொல்லப்பட்டுள்ளது.

சங்கத் தமிழர்களின் சமுதாய அமைப்பில் முக்கிய இடம் பெற்றவர்கள் தமிழ்ப்புலவர்கள் என்பது நாம் அறிந்த செய்தியே. சிலர் அரசவைப் புலவர்களாக இருந்த அதே நேரத்தில் பலர் வறுமைக்கோட்டின் கீழ் பிச்சைக்காரர்களாய் வாழ்ந்து வந்தனர். புலவர்கள் வறுமையாலும் பட்டினியாலும் வாடி வதங்கிய செய்திகள் புறத்திணை நூல்களில் காணக்கிடக்கின்றன. அவற்றைப் படிக்கும்போது நமது நெஞ்சம் நெகிழ்ந்துவிடும். தமிழை வளர்க்கும் பணியில் ஈடுபட்டிருந்த இந்தப் புலவர்களை சிற்றரசர்களும் மூவேந்தர்களும் போற்றிப் பாதுகாத்து வந்தனர் என்றாலும் பட்டினிச்சாவு புலவனுக்கு புதியதாய் இருந்ததில்லை. தமிழைக் கற்றுப் புலவனானால் பட்டினியே மிஞ்சும் என்று அறிந்தும் தமிழ் மீது கொண்ட காதலால் துணிந்து தலைப்பட்டோர் பலர்.

இப்போது நாம் பயன்படுத்தும் 'பிச்சை' என்னும் சொல்லுக்கு அக்காலத்தில் 'பரிசு' என்று பொருள். ஏன் தெரியுமா? மன்னன் பிச்சையாகப் போடும் பொருள் தான் புலவனுக்குக் கிடைக்கும் பரிசு ஆகும். அதைப் பெறுவதற்கு அந்தப் புலவன் மன்னனைப் புகழ்ந்து பாடவேண்டும். எவ்வளவு உயர்வாக புகழ்ந்து பாடுகிறானோ அதற்கேற்ப அவனுக்குப் பரிசுகள் கிடைக்கும். இப்படிப் புகழ்ந்து பாடுவது தான் புலவர்களின் 'திறமை' யாகக் கருதப்பட்டது. புலவனின் பாடும் திறம் அதாவது திறமையை அறிந்தே அக்காலத்தில் அவனுக்கு பிச்சை அதாவது பரிசுகளைக் கொடுத்தனர் மன்னர்களும் சிற்றரசர்களும். இதன் அடிப்படையில் தான் இந்தப் பழமொழியும் உண்டானது. காலப்போக்கில் ஒரே ஒரு எழுத்து மாற்றத்தால் அதாவது 'ற' கரத்திற்குப் பதிலாக 'ர' கரத்தைப் போட்டதால் பொருளே மாறிப்போய் ஒரு வரலாற்றுச் செய்தியே அதற்குள் முடக்கப்பட்டு விட்டது. உண்மையான பழமொழி இது தான்:

' பாத்திம் அறிந்து பிச்சை இடு.'
(பாத்திறம் = பா+திறம் = பாடும் திறமை)
---------------------------------------தமிழ் வாழ்க!------------------------------------------

திங்கள், 2 பிப்ரவரி, 2009

' அவரே என் காதலர் '


'நிலத்தினும் பெரிதே; வானினும் உயர்ந்தன்று;
நீரினும் ஆரளவின்றே; சாரல்
கருங்கோல் குறிஞ்சிப் பூக்கொண்டு
பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே.'

- குறுந்தொகையில் மூன்றாவதாக வரும் இப்பாடலில் எழுத்துப் பிழையோ சொற்பிழையோ இல்லை. பொருளில் தான் பிழை உள்ளது. அது என்ன என்று காணும் முன்னர் இப்பாடலுக்கு தற்போதைய உரைநூல்கள் கூறும் கருத்து என்ன என்று காண்போம்.

'மலைச்சாரலில் உள்ள கரிய கோல்களைக் கொண்ட குறிஞ்சிப் பூக்களால் பெரிய தேனிறால்களைக் கட்டும் மலைநாட்டுத் தலைவனுடன் நான் கொண்டுள்ள காதலானது நிலத்தை விட மிகவும் பெரியது; வானத்தைவிட மிகவும் உயர்ந்தது; கடல்நீரைவிட அளவற்றது ஆகும்.' - இதுவே உரைநூல்கள் கூறும் கருத்து ஆகும். தலைவனிடத்து காதல் கொண்ட தலைவி தனது காதலின் சிறப்பினைப் பற்றி தனது தோழியிடம் கூறுவதாக அமைந்துள்ள செய்யுள் இது. இப்பொருளில் பிழை இருக்கிறது. அதைப் பற்றிக் கீழே காணலாம்.

பழந்தமிழர் மரபு குறித்து நாம் நன்கு அறிவோம். அதிலும் பழந்தமிழ்ப் பெண்டிரின் காதல் மரபுகள் அகத்திணை நூல்கள் முழுக்க முழுக்க பரவிக் கிடக்கின்றன. தன்னுடைய காதலின் சிறப்பினைப் பற்றி எந்த பழந்தமிழ்ப் பெண்ணும் பெருமையாக பேசமாட்டாள் என்பது இந்த நூல்களில் காணக்கிடைக்கின்ற உண்மை ஆகும். உயர்வாகக் கூறவேண்டும் என்று விரும்பினால் தலைவனின் குண நலன்களைப் பற்றியோ தலைவனது நாட்டுவளம் குறித்தோ தான் பேசுவாள். அகத்திணை நூல்களை ஆராய்ந்து பார்த்தால் இந்த உண்மை தெளிவாகப் புரியும். அத்துடன் 'இழைக்கும்' என்ற சொல்லுக்கு 'கட்டும்' என்று தவறாகப் பொருள் கொண்டுள்ளனர். இழைத்தல் என்றால் இளகச்செய்தல் அதாவது நெகிழ்வித்தல் என்பதே பொருள். இங்கே தேன்கூட்டினை நெகிழ்வித்தல் என்பது கூட்டை குத்திவிட்டு தேனைப் பாய்ந்தோடச் செய்தல் ஆகும்.

இப்படி இருக்க மேற்கண்ட பாடலில் தலைவி தனது காதலைப் பற்றி இவ்வளவு உயர்வாகக் கூறியிருப்பதாக பொருள் கொள்வது தவறாகும் அல்லவா?. அப்படி என்றால் தலைவி எந்தப் பொருளில் கூறியிருப்பாள்?. நிச்சயம் தலைவனது நாட்டுவளம் குறித்துத் தான் ஏனென்றால் தலைவனது குணநலன்களைக் குறிக்கும் சொற்கள் எவையும் இந்தப் பாடலில் பயிலவில்லை. இனி இப்பாடலில் பயின்றுவரும் நாட்டுவளம் பற்றிய செய்திகள் எவை என்று பார்ப்போம்.

'சாரல்', 'கருங்கோல் குறிஞ்சிப் பூ', 'பெருந்தேன்' ஆகியன. ஒப்பாக வரும் பிற பொருட்கள் 'நிலம்', 'வானம்', 'நீர்' ஆகியவை ஆகும். இம் மூன்று பொருட்களையும் நாட்டுவளம் குறித்த மூன்று சொற்களுடன் நிரல்நிறை முறைப்படி இணைத்துப் பார்த்தால் கீழ்க்காணும் பொருள் கிடைக்கும்.

' நிலத்தைவிட மிகப் பெரியது சாரல்;
வானத்தைவிட மிக உயரமானது குறிஞ்சிப் பூவின் கருங்கோல்;
நீரைவிட மிக அளவற்றது பெருந்தேன்.'

இப்போது மிகச் சரியாகப் பொருள் பொருந்துகிறது அல்லவா?. சாரல் ஒரு நிலப்பகுதி என்பதால் அதன் பெருமைக்கு பூமியுடன் ஒப்பிட்டும், குறிஞ்சிப்பூவின் கோல் (தண்டு) நீளமானது என்பதால் அதன் பெருமைக்கு வானத்துடன் ஒப்பிட்டும், தேன் ஒரு நீர்ப்பொருள் என்பதால் அதன் பெருமைக்கு கடல்நீருடன் ஒப்பிட்டும் கூறப்பட்டுள்ளது.
இது உண்மை தான் ஏனென்றால் குறிஞ்சிப் பூக்களின் தண்டு மிகவும் நீளமாகத் தான் இருக்கும். இதை நீங்கள் நேரில் பார்த்தால் உணர்வீர்கள். இந்தத் தண்டு உயரமாக இருப்பதால் மலைக்குற மக்கள் இதனைக் கொண்டு மரத்தின் உச்சிக் கிளைகளில் உள்ள தேன்கூடுகளைக் குத்தி உடைப்பர். அப்படி உடைத்த தேன்கூடுகளில் இருந்து வழிந்து ஓடும் தேனின் அளவு கடல்நீரை விட அதிகமாய் இருக்கிறது என்று பெருமைப் படுகிறாள் ஒரு பெண். வழிந்து ஓடும் தேனே கடல்நீரைவிட அதிகம் என்று சொல்பவள் அந்த மலைச்சாரலை பூமியைவிட பெரியது என்று தானே சொல்வாள். இப்படித் தான் அந்த பழந்தமிழ்ப் பெண்ணும் தனது காதலனின் நாட்டுவளம் குறித்து பெருமையாகக் கூறுகிறாள்.

இனி மேற்காணும் பாடலுக்குச் சரியான பொருள் என்ன என்று நீங்களே ஊகித்து இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். ஆம் அது இது தான்.

' தோழீ! அவரது சாரல் பூமியைவிட மிகவும் பெரியது ஆகும்; அம்மலைச் சாரலில் பூத்துள்ள குறிஞ்சிப் பூக்களின் கரியநிறக் கோல்கள் வானத்தைவிட மிகவும் உயரமானவை; அக்கோல்களைக் கொண்டு குத்திக் குடைந்த பெரிய தேனிறால்களில் இருந்து வழிந்தோடும் தேனின் அளவோ கடல்நீரைவிட அதிகமானது ஆகும். இத்தகைய மலைநாட்டுக்குத் தலைவராகிய அவரே என் காதலர்.'
----------------------------------------தமிழ் வாழ்க!-----------------------------------------