வியாழன், 17 செப்டம்பர், 2009

திருக்குறள் காட்டும் இந்திரன் யார்?. (இந்திரனே சாலும் கரி)




குறள்:

ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்புளார் கோமான்
இந்திரனே சாலும் கரி. - 25.

தற்போதைய விளக்க உரைகள்:

கலைஞர் மு.கருணாநிதி உரை: புலன்களை அடக்க முடியாமல் வழிதவறிச் சென்றிடும் மனிதனுக்குச் சான்றாக இந்திரன் விளங்கி, ஐம்புலன்களால் ஏற்படும் ஆசைகளைக் கட்டுப்படுத்தியதால் வான்புகழ் கொண்டவர்களின் ஆற்றலை எடுத்துக் காட்டுகிறான்.

மு.வரதராசனார் உரை: ஐந்து புலன்களாலாகும் ஆசைகளை ஒழித்தவனுடைய வல்லமைக்கு, வானுலகத்தாரின் தலைவனாகிய இந்திரனே போதுமான சான்று ஆவான்.

சாலமன் பாப்பையா உரை: அகன்ற வானத்து வாழ்பவரின் இறைவனாகிய இந்திரனே, புலன்வழிப் பெருகும் ஆசை ஐந்தையும் அறுத்தவனின் வலிமைக்குத் தகுந்த சான்று ஆவான்.

பரிமேலழகர் உரை: ஐந்து அவித்தான் ஆற்றல் - புலன்களில் செல்கின்ற அவா ஐந்தனையும் அடக்கினானது வலிக்கு; அகல் விசும்பு உளார் கோமான் இந்திரனே சாலும் கரி - அகன்ற வானத்துள்ளார் இறைவன் ஆகிய இந்திரனே அமையும் சான்று. (ஐந்தும் என்னும் முற்று உம்மையும் ஆற்றற்கு என்னும் நான்கன் உருபும் செய்யுள் விகாரத்தால் தொக்கன. தான் ஐந்து அவியாது சாபம் எய்தி நின்று, அவித்தவனது ஆற்றல் உணர்த்தினான் ஆகலின், 'இந்திரனே சாலும் கரி' என்றார்.

மணக்குடவர் உரை: நுகர்ச்சியாகிய வைந்தினையுந் துறந்தானது வலிக்கு அகன்ற விசும்பிலுள்ளார்க்கு நாயகனாகிய இந்திரனே யமையுஞ் சான்று. இந்திரன் சான்றென்றது இவ்வுலகின்கண் மிகத் தவஞ் செய்வாருளரானால் அவன் தன்பதம் இழக்கின்றானாக நடுங்குமாதலான். இது தேவரினும் வலியனென்றது.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: புலன்களில் சொல்லுகின்ற ஐந்து ஆசைகளையும் அடக்கியவனுடைய ஆற்றலுக்கு அகன்ற வானத்தில் உள்ளவர்களின் தலைவனான இந்திரனே சான்றாவான் (சாட்சியாவான்).

உரைத்தவறுகள்:

நீத்தார் பெருமையைச் சுட்டுவதாக அமைந்திருக்கும் இக்குறளில் வரும் இந்திரன் என்ற சொல்லுக்குப் புராணக் கதைகளில் வரும் தேவர்களின் தலைவனாகிய தேவேந்திரனைப் பொருளாகக் கொண்டே அனைவரும் உரை எழுதியுள்ளனர். உண்மையில் யார் இந்த தேவேந்திரன்?. ஒரு மகா அயோக்கியன் என்று புராணம் கூறுகிறது.

தேவேந்திரன் - அகலிகை - கௌதமன் ஆகியோரின் முக்கோணக் காமக்கதை நாடறியும். கௌதமமுனிவர் வீட்டில் இல்லாத நேரம்பார்த்து அவரைப் போலவே பொய்வேடம் பூண்டு அவரது மனைவியாகிய அகலிகையிடம் சென்று தவறாக நடக்க முயற்சிசெய்து சாபம் பெற்றவன் இந்த தேவேந்திரன். பலர் பலவிதமாக இக் கதையினைக் கூறினாலும் ஒன்று மட்டும் உண்மை. இவன் புலனடக்கம் இன்றி அகலிகையின் மேல் காம விருப்பம் கொண்டு அவளை அடைய முயன்றான் என்பதே அது. இதைப்போல புலனடக்கம் இன்றி இவன் பல தவறுகளைச் செய்திருக்கிறான் என்று புராணம் கூறுகிறது. இதிலிருந்து தேவேந்திரன் புலனடக்கம் இல்லாதவன் என்பது மிகத் தெளிவாக அறியப்படுகிறது. இப்படிப்பட்ட ஒருவனை ஐம்புலன் அடக்கியவரின் ஆற்றலுக்குச் சான்றாகக் கூறுவாரா வள்ளுவர்? ஒருபோதும் மாட்டார். நல்லது செய்தால் கிட்டும் நன்மைகளை ஒரு நல்லவரைக்கொண்டுதான் சான்றுகாட்ட வேண்டுமே ஒழிய ஒரு கேடுகெட்டவனைக் கொண்டா சான்று காட்டுவது?.

அதுமட்டுமின்றி வள்ளுவர் எந்தவொரு குறளிலும் புராணக் கதைகளையோ குறிப்பிட்ட சமயம் தொடர்பான பெயர்களையோ பயன்படுத்தவில்லை என்று பல குறள்களின் வாயிலாக அறிந்திருக்கிறோம். இப்படி அனைத்துச் சமயத்தார்க்கும் பொதுவாகக் கருத்துக்களைக் கூறியிருப்பதால்தான் உலகப்பொதுமறை என்று திருக்குறள் கொண்டாடப்படுகிறது. ஆனால், வள்ளுவர் மேல்கொண்ட அதிகமான பற்றினால் ஒவ்வொரு சமயத்தாரும் அவரைத் தமது சமயம் சார்ந்தவராகவே பார்க்கின்றனர். இதன் விளைவாக, அவரது கருத்துக்களைத் தமது சமயக்கருத்துக்கு ஏற்பத் திரித்துக் கூறுகின்றனர். இப்படித் திரித்துக்கூறப்பட்ட பல்வேறு குறள்களில் ஒன்றுதான் இது. இதில் வரும் இந்திரன் என்ற சொல்லை தேவேந்திரன் என்றும் திருமால் என்றும் அவரவர் விருப்பப்படி திரித்துக்கூறி வருகின்றனர்.

தேவேந்திரனும் திருமாலும் குறிப்பிட்ட சமயம் சார்ந்தவர்கள் என்பதால் பொதுமக்களில் எத்தனைபேர் அறிவார் இவர்களை?. மக்கள் பரவலாக அறிந்திராத ஒரு கற்பனைப் பாத்திரத்தினை உவமையாகக் கூறி விளக்கினால் பாடலின் பொருளை அனைவரும் எப்படி விளங்கிக்கொள்ள முடியும்?. குழந்தைப் பருவத்தில் இருந்தே பார்வையற்ற ஒருவர் யானையைத் தடவிப் பார்த்துக் கருத்து கூறுவதைப் போன்றதே இது. புரியாதவற்றை மக்கள் அறியாதவற்றை வள்ளுவர் ஒருபோதும் உவமைப் பொருளாகக் கூறமாட்டார் என்பதால் இப்பாடலில் வரும் இந்திரன் என்பது தேவேந்திரனையோ திருமாலையோ குறிக்க வாய்ப்பில்லை என்பது உறுதிசெய்யப்படுகிறது.

குறளுக்கான திருந்திய விளக்கம்:

இக்குறளுக்கான திருந்திய புதிய விளக்கத்தினைக் காணும் முன்னர் குறளில் வரும் சில சொற்களுக்குக் கீழே அகராதிகள் காட்டும் புதிய பொருட்களைக் கொள்ளவேண்டும்.

ஆர்¹-தல் ār- , 4 v. [T. K. M. āru.] intr. 1. To become full; நிறைதல். ஆரப்பருக (திவ். திருவாய். 10, 10, 5). 2. To spread over; பரவு தல். போதாரிவண்டெலாம் (திணைமாலை. 95, உரை). 3. To be satisfied; திருத்தியாதல். ஆராவமுதம் (திவ். திருவாய். 2, 5, 5). 4. To combine with, belong to; பொருந்துதல். சீரார்செழும்பந்து (திவ். இயற். சிறியதி. 11, கண்ணி). 5. To abide, stay; தங்குதல். (திவா.)--tr. 1. To eat, to drink; உண்ணுதல். அமலைக் கொழுஞ்சோ றார்ந்த பாணர்க்கு (புறநா. 34, 14). 2. To experience; அனுபவித் தல். ஆர்வுற்றார் நெஞ்ச மழிய (கலித். 42, 13). 3. To resemble; ஒத்தல். மணியார்கண்டத் தெம்பெருமான் (பெரியபு. திருநா. 314). 4. To wear, put on; அணிதல். (பிங்.) 5. To get, obtain; பெறுதல். ஆர்கின்ற தின்றோ ரலரே (கந்தபு. தேவரையே. 11).

ஆற்றல் āṟṟal , n. < ஆற்று¹-. 1. Strength, power, prowess, ability; சக்தி. (திவா.) 2. Effort, endeavour; முயற்சி. (திவா.) 3. Abundance, copiousness; மிகுதி. (பிங்.) 4. Determinedness; கடைப்பிடி. ஆற்றலு மவள்வயி னான (தொல். பொ. 129). 5. Endurance, fortitude; பொறை. ஆற் றுவா ராற்றல் பசியாற்றல் (குறள், 225). 6. Manliness, courage; ஆண்மை. (பிங்.) 7. Victory; வெற்றி. (பிங்.) 8. Truth; வாய்மை. (பிங்.) 9. Wisdom, knowledge; ஞானம். (பிங்.) 10. Power inherent in a word to express a particular sense, the connotative power of a word; இன்னசொல் இன்னபொருளுணர்த்து மென் னும் நியதி. (தர்க்கசங்.)

கோமான்¹ kōmāṉ , n. < கோ³. [M. kōmān.] 1. King; அரசன். வத்தவர் கோமான் வயவர் திரிதர (பெருங். உஞ்சைக். 44, 93). 2. Person of eminence, Lord; பெருமையிற் சிறந்தோன். கோமாற்கே நாமென்று மீளா வாளாய் (தேவா. 1236, 1). 3. Spiritual preceptor; குரு. (பிங்.) 4. Elder; மூத்தோன். (திவா.)

இந்திரன் intira , n. < indra. (நாநார்த்த.) 1. The inner soul; அந்தரான்மா. 2. Sun; சூரியன்.

மேலே அகராதிகளில் கண்டபடி,

ஆற்றல் = ஞானம், அறிவு.
ஆர்தல் = நிறைந்திருத்தல்.
கோமான் = பெருமையில் சிறந்தோன்.
இந்திரன் = கதிரவன்.

இப்புதிய பொருட்களின் அடிப்படையில், குறளுக்கான திருந்திய விளக்கம்:

ஐம்புலன்களையும் அடக்கியவரின் அறிவுக்கு, அகன்ற வானத்துள் (ஒளியால்) நிறைந்திருப்பவனும் பெருமையில் சிறந்தோனுமாகிய கதிரவனே பொருத்தமான சான்று ஆவான்.

நிறுவுதல்:

பொதுவாக, புலவர்கள் தமது பாடல்களில் உவமைகளைக் கையாளும்போது மக்கள் நன்கறிந்த இயற்கைப் பொருட்களையே பயன்படுத்துவர். இது திருக்குறளுக்கும் பொருந்தக்கூடியதே. அவ்வகையில், வள்ளுவர் இப்பாடலில் உவமையாகக் கதிரவனைக் கூறியிருக்கிறார்.

வள்ளுவர் இக்குறளில் கூறியிருக்கும் உவமையினைப் போலவே நாமும் இக்காலத்தில் பயன்படுத்தவே செய்கிறோம். வடமொழியில் ஞானசூரியன் என்றும் தமிழில் அறிவில்ஆதவன் என்றும் கூறுவது இந்த உவமையின் அடிப்படையில் தான். ஐம்புலன்களை அடக்கியாள்வதின் மூலம் அறிவு என்னும் ஒளியானது உள்முகமாகப் பாய்ச்சப்படுகிறது. இதனால் அகத்தில் இருக்கும் இருள் நீங்கி அகத்தில் இருக்கும் பொருட்களைப் பற்றிய பேரறிவினைப் பெறுகிறோம். இப் பேரறிவானது எல்லையற்ற தன்மைகொண்டது. கண்களை மூடிக்கொண்டு அகத்தில் நாம் காணும் பேரறிவுக்கு எல்லையே இல்லை என்பதால் அதனைக் கதிரவனின் ஒளியுடன் ஒப்பிட்டுக் கூறுகிறார் வள்ளுவர். சரி, அறிவுக்கும் கதிரவனுக்கும் என்ன தொடர்பு?. ஏன் இரண்டையும் ஒப்பிடுகிறார்கள்?. என்று பார்க்கலாம்.

ஒருபொருள் இருளில் இருக்கும்போது அதை நம்மால் காணவியலாது. அங்கே ஒளி பாயுமானால் அதனை நம்மால் காணமுடியும்; அப்பொருளைப் பற்றிய அறிவினையும் பெறமுடியும். ஆக, ஒளி பாயாதவரை அப்பொருளைப் பொருத்தமட்டிலும் நமக்குள் 'அறியாமை' யே நிறைந்திருக்கும் அல்லவா?. உண்மையில் அப்பொருளின்மீது ஒளிபாயும்போது விலகுவது அங்கிருக்கும் இருள்மட்டுமல்ல; நமது அறியாமையும்தான். இங்கே கூறப்பட்டிருக்கும் 'பொருள்' புறப்பொருளாகட்டும்; அகப்பொருளாகட்டும் இரண்டுக்குமே பொருந்துவதுதான். எனவேதான், மக்களின் அறியாமையினை இருளுக்கும் அறிவினை ஒளிக்கும் உவமையாகக் கூறுவது வழக்கமாயிற்று. வள்ளுவரும் அறிவுடைமை என்னும் அதிகாரத்தில் அறிவினைப் பற்றிக் கீழ்க்காணுமாறு கூறுகிறார்.

அறிவு அற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும்
உள் அழிக்கல் ஆகா அரண். - 421.

ஒருவரை அவரது அழிவில் இருந்து காப்பாற்றும் வல்லமை மிக்க கருவி அவரது அறிவே ஆகும் என்கிறார். ஏனைய கருவிகளை இவரிடமிருந்து அழித்துவிடலாம். ஆனால் இந்த அறிவென்னும் கருவியினை அழிக்க முடியாது. காரணம், இது பொருளின் வடிவாக இன்றி ஒளியின் வடிவாக இருப்பது.

உலகம் தழீஇய தொட்பம் மலர்தலும்
கூம்பலும் இல்லது அறிவு. - 425

மேற்காணும் குறளில் மலர்தலும் கூம்பலும் இல்லது அறிவு என்று கூறுகிறார் வள்ளுவர். மலர்தலும் கூம்பலும் உடையது எது?. ஒரு மலர்தானே. பொதுவாக ஏதோ ஒருமலர் என்றில்லாமல் இங்கே அதனைத் தாமரைமலராகக் கருதலாம். ஏனென்றால், தாமரைமலரானது பகலிலே மலர்ந்தும் இரவிலே கூம்பியும் காணப்படும். இந்தத் தாமரைமலரினைப் போல நமது அறிவு இருக்கக்கூடாது என்கிறார். மாறாக, தாமரைமலரை மலரச்செய்யும் கதிரவனாக இருக்கவேண்டும் என்கிறார். ஏனென்றால், கதிரவன் மட்டுமே எப்போதும் ஒளிவீசிக் கொண்டிருப்பவன். இக்கதிரவன் நமக்கு மட்டுமின்றி உலகத்தார் அனைவருக்கும் உரியவனாய் இருப்பதைப்போல நமது அறிவானது நம்மோடு மட்டும் அமையாமல் உலகமக்களுடன் பொருந்தக்கூடியதாய் அவர்களுக்கும் பயன்படக்கூடியதாய் அமைவதே சிறப்பானது என்று கூறுகிறார் வள்ளுவர். இக்குறளில் அறிவினைக் கதிரவனுடன் நேரடியாக ஒப்பிடாமல் மறைமுகமாக ஒப்பிட்டிருக்கும் நுட்பம் எண்ணி மகிழத்தக்கது. !

முடிவுரை:

அகக்கண்களில் தோன்றும் அறிவினைக் கதிரவனுடன் இப்பாடலில் ஒப்பிட்டிருப்பதைப்போல, புறக்கண்களில் தோன்றும் அழகினை நிலவுடன் ஒப்பிட்டும் பாடியிருக்கிறார் வள்ளுவர்.

தாம்வீழ்வார் மென்தோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு. - 1103.

இப்பாடலில் வரும் தோள் என்பது பெண்களின் அழகிய கண்களையும் தாமரைக்கண்ணான் என்பது நிலவினையும் குறிப்பதாகும். இதைப்பற்றித் தாமரைக்கண்ணான் உலகு என்னும் தனிக்கட்டுரையில் விரிவாகக் காணலாம்.

========== வாழ்க தமிழ் ! வளர்க வள்ளுவம் !! ========= 

9 கருத்துகள்:

 1. உரைகளில் தவறுகள் இருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்கிறேன் நண்பரே

  தங்கள் விளக்கமும் பொருத்தமாக இருக்கிறது,

  தொடர்ந்து நிறைய எழுதுங்கள்

  வாழ்த்துகிறேன்

  பதிலளிநீக்கு
 2. இந்திரன் என்னும் சொல்லாட்சி மருத நிலத்தின் அதிபதியையும் குறிக்கும் அல்லவா? இக்குறளில் வருவது வானுலக அரசனான இந்திரன் அல்ல என்றால்... தமிழ் ஐந்திணைப் பகுப்பில் ஒன்றான மருத நிலத்து அதிபதியான கடவுள் இந்த்ரனும் அல்ல என்று நிறுவ வேண்டி யுள்ளது பற்றி தங்கள் கருத்து ஏதேனும்?

  பதிலளிநீக்கு
 3. தொல்காப்பியத்தில் வரும் கடவுளர் பெயர்கள் இயற்கைத் திணைகளின் உருவகங்கள். அதாவது, மாயோன் என்பது கார்மேகங்களையும் சேயோன் என்பது மலைக்குன்றுகளையும் வேந்தன் என்பது கதிரவனையும் வருணன் என்பது கடலையும் குறிப்பவை. இதைப்பற்றிய விரிவான ஆய்வுக் கட்டுரையும் உண்டு.

  பதிலளிநீக்கு
 4. இந்திரன் எனபது தேவர்களின் தலைவன் பதவி. புலன்களை அடக்கி தவம் செய்து உய்ரந்த நிலைக்கு சென்றவர்கள் இந்திர பதவியை அடைவார்கள் என்பது ஹிந்துக்கள் நம்பிக்கை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நண்பரே, வள்ளுவர் காலத்தில் இந்து, முசுலிம் போன்ற மதப்பாகுபாடுகள் இல்லை. அது மதச்சார்பற்ற கருத்துக்களைக் கொண்டது என்பதால்தான் உலகப் பொதுமறை என்று போற்றப்படுகிறது.

   நீக்கு
 5. இந்திரன் பற்றிய தகவல்கள் இந்த காணொளியில் உள்ளது . பார்த்து பயன்பெருக
  https://www.youtube.com/watch?v=C9umcmEcJCs&list=UUPAOjjErftIB6lBiC0v9XdQ&index=19

  பதிலளிநீக்கு
 6. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

  பதிலளிநீக்கு
 7. வானவர்கள் என்கிற ஒரு இனம் இருக்கிறது , அதற்க்கு தலைவர் என்று ஒருவர் இருக்கிறார் என்கிற concept

  quran 81:20. (அவர்) ( ஜிப்ரஈல் ) வலிமை மிக்கவர்;

  21. வானவர்களின் தலைவர்;


  good character . noble

  81:9. இது மரியாதைக்குரிய தூதரின் (ஜிப்ரீலின்) சொல்லாகும்


  81:20. (அவர்) வலிமை மிக்கவர்; அர்ஷுக்கு ( சிம்மாசனத்திற்கு ) உரியவனிடத்தில் (இறைவனிடத்தில் ) தகுதி பெற்றவர்.

  21. வானவர்களின் தலைவர்; அங்கே நம்பிக்கைக்குரியவர்.

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.