அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
- குறள் எண்: 1
தற்போதைய பொருள்:
பரிமேலழகர் உரை: எழுத்துக்கள் எல்லாம் அகரம் ஆகிய முதலை உடையன. அதுபோல உலகம் ஆதிபகவன் ஆகிய முதலை உடைத்து.
மு.வ உரை: எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது.
கலைஞர் உரை: அகர எழுத்துகளுக்கு முதன்மை, ஆதிபகவன், உலகில் வாழும் உயிர்களுக்கு முதன்மை.
சாலமன் பாப்பையா உரை: எழுத்துக்கள் எல்லாம் அகரத்தில் தொடங்குகின்றன; (அது போல) உலகம் கடவுளில் தொடங்குகிறது.
குழப்பங்கள்:
மேற்காணும் உரைகளில் கலைஞர் உரை நீங்கலான மூன்று உரைகளும் ஆதிபகவன் என்பதற்கு பொதுவாக 'கடவுள்' என்று விளக்கம் கொடுத்துள்ளன. ஆனால் இன்றைய சூழ்நிலையில் கடவுள் ஒருவர் அல்லரே. சிவன், விட்டுணு, அல்லா, இயேசு, அருகன், புத்தர் என்று ஒவ்வொரு மதத்தவருக்கும் ஒரு கடவுள் உள்ளனரே. வள்ளுவர் இவர்களில் யாரைக் குறிப்பிடுகிறார்?. இது குறித்து இணைய தளங்களில் தேடியபோது பல கருத்துக்கள் கிடைத்தன. அவை கீழே தரப்பட்டுள்ளன.
ஆதிபகவன் என்பது பரமசிவன் தான் என்று சைவர்கள் கூறுகின்றனர். இல்லை இல்லை, ஆதி என்பது வள்ளுவரின் தாய்; பகவன் என்பது அவரது தந்தை என்றும் ஒரு கருத்து நிலவுகிறது. சமண மதத் தீர்த்தங்கரர்களில் முதலாமவரான ரிஷப தேவரையே இச்சொல் குறிப்பதாக ஒரு சாரார் கருதுகின்றனர். அத்துடன் நிற்காமல் திருவள்ளுவரை சமணர் என்றும் கூறத் தலைப்பட்டு விட்டனர். இன்னும் ஒரு சாரரோ ஆதிபகவன் விட்டுணுவைக் குறிப்பதாகக் கூறி வள்ளுவரை வைணவர் என்று தங்கள் பக்கம் இழுக்கின்றனர். ஆதி பகலவன் என்பதே ஆதி பகவனாக மாறிவிட்டது என்றும் இச்சொல் ஆதி காலத்தில் இருந்து இன்றுவரை வணங்கப்பட்டு வரும் சூரியனையே குறிக்கிறது என்றும் கூறுவார் உளர். இப்படி ஆதிபகவன் குறித்து ஒரு தெளிவான விடையினைக் காண இயலவில்லை. என்றால் உண்மையில் இந்த ஆதிபகவன் யார்?. குழப்பமான இக் கேள்விக்கு சரியான விடையினைக் காண்பதே இக் கட்டுரையின் நோக்கமாகும்.
ஆதிபகவன் - சரியான சொல்லா?
ஆதிபகவன் என்னும் சொல்லே முதலில் தவறானதாகும். இதில் ஒரு எழுத்துப் பிழை உள்ளது. ஆதியகவன் என்பதே சரியான சொல்லாகும். இது கீழ்க்கண்டவாறு இரண்டாகப் பிரிந்து பொருள் தரும்.
ஆதியகவன் = ஆதி + அகவன்.
ஆதி = காரணம். (மேற்கோள்: கழகத் தமிழ்க் கையகராதி, சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், திருநெல்வேலி.)
அகவன் = அறிவானவன்.
(அகம் = ஞானம் / அறிவு. மேற்கோள்: கழகத் தமிழ்க் கையகராதி, சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், திருநெல்வேலி.)
எனவே ஆதியகவன் என்பது காரண அறிவானவன் என்ற பொருளைத் தரும்.
ஆதியகவன் சரியே என நிறுவுதல்:
ஆதிபகவன் என்ற சொல் தவறு; ஆதியகவன் என்பதே சரி என்று முன்னர் கண்டோம். இது எவ்வாறு சரி என்று இங்கே பார்ப்போம்.
தமிழ் இலக்கணத்தில் புணர்ச்சி விதி என்ற ஒன்று உண்டு. இது மிகவும் இன்றியமையாததாகும். திருவள்ளுவரும் இவ் விதிகளை மீறாமல் குறள்களை இயற்றி உள்ளார். பொதுவாக எழுத்துப் புணர்ச்சியினை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று உள்ளடிப் புணர்ச்சி. இன்னொன்று புறவடிப் புணர்ச்சி. இதை ஒரு சான்றுடன் காணலாம்.
செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்
தாற்றின் அடங்கப் பெறின்.
இக் குறளின் இரண்டாம் அடியில் 'அடங்க+பெறின் = அடங்கப் பெறின்' என்ற உள்ளடிப் புணர்ச்சி ( ஒரு அடிக்குள் நிகழும் எழுத்துப் புணர்ச்சி) உள்ளது. முதல் அடிக்கும் இரண்டாம் அடிக்கும் இடையிலான 'அறிவறிந்து + ஆற்றின் = அறிவறிந் தாற்றின்' என்பதில் புறவடிப் புணர்ச்சி உள்ளது. புறவடிப் புணர்ச்சி என்பது அடுத்தடுத்த அடிகளுக்கு இடையிலான எழுத்துப் புணர்ச்சியினைக் குறிக்கும். அவ்வகையில் அறிவறிந்து என்ற முதலடியின் ஈற்றுச்சொல் ஆற்றின் என்னும் இரண்டாமடியின் முதல் சொல்லுடன் புணர்ந்து அறிவறிந்தாற்றின் என்று இங்கே வந்துள்ளது. இதுபோன்ற புறவடிப் புணர்ச்சிகளை திருக்குறளில் பல இடங்களில் காணலாம். திருக்குறளில் மட்டுமின்றி பல தமிழ் இலக்கியங்களிலும் இப் புறவடிப் புணர்ச்சியினை காணலாம். இதுபோன்ற ஒரு புறவடிப் புணர்ச்சியே கடவுள் வாழ்த்தின் முதல் பாடலில் வந்துள்ளது.
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
யகவன் முதற்றே உலகு.
இக் குறளில் முதல் அடியின் ஈற்றில் வரும் ஆதி என்னும் சொல் இரண்டாம் அடியின் முதலாக வரும் அகவன் என்ற சொல்லுடன் புணரும்போது நன்னூல் சூத்திரம் 162 இன் படி கீழ்க்கண்டவாறு ஆகும்.
ஆதி + அகவன் = ஆதி+ய்+அகவன் (ய் என்பது உடம்படுமெய்)
= ஆதியகவன்.
எனவே புணர்ச்சி விதிப்படி ஆதியகவன் என்பதே சரியாகும். திருவள்ளுவரும் ஓலைச்சுவடியில் ஆதியகவன் என்றே எழுதியிருப்பார். பிற்கால மக்கள் ஓலைச்சுவடியில் இருந்து எடுத்து எழுதும்போது தவறுதலாக ஆதிபகவன் என்று எழுதிவிட்டனர். இத் தவறே நாம் மேலே கண்ட குழப்பங்களுக்கு எல்லாம் காரணம் ஆகும்.
அறிவே தெய்வம்:
வள்ளுவர் கடவுள் இருப்பதை மறுக்கவில்லை. அதேசமயம் கடவுளுக்கு ஒரு மதத்தை கற்பிக்கவோ பருப்பொருள் வடிவம் கொடுக்கவோ இல்லை. வள்ளுவர் கடவுளை அறிவின் வடிவமாகவே காண்கிறார். 'சுத்த அறிவே சிவம்' என்று தாயுமானவரும் 'அறிவே தெய்வம்' என்று பாரதியாரும் ' அறிவே கடவுள்' என்று திருமூலரும் இதே நோக்கில் கூறி இருப்பது இங்கே குறிப்பிடத்தக்கது. கடவுளைப் பற்றிய வள்ளுவரது தெளிவான இந் நோக்கினை இதோ கீழ்க்காணும் கடவுள் வாழ்த்துப் பாடல்களிலும் காணலாம்.
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழார் எனின்.
இப்பாடலில் 'இறைவன் தூய அறிவின் வடிவானவன்' என்பதனை 'வாலறிவன்' என்ற சொல்லால் நேரடியாக உணர்த்துகிறார். அதுமட்டுமின்றி கீழ்க்காணும் பாடல்களிலும் 'இறைவன் அறிவு வடிவானவன்' என்ற கருத்தினை நேரடியாகக் கூறாமல் உய்த்துணர வைக்கிறார்.
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடு வாழ்வர்.
வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல.
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகல் புரிந்தார் மாட்டு.
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால் மனக்கவலை மாற்றல் அரிது.
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க்கு அல்லால் பிறவாழி நீந்தல் அரிது.
கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை.
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடி சேராதார்.
மேற்காணும் ஏழு பாடல்களும் இறைவனின் அடிசேர்தலைப் பற்றியே கூறுகின்றன. உண்மையில் இந்த 'அடிசேர்தல்' என்றால் என்ன?. என்று பார்ப்போம்.
பகுத்தறிவும் ஏன் என்ற கேள்வியும்:
உயிரினினங்களில் மனிதன் மட்டுமே கேள்விகள் கேட்கிறான். இக் கேள்விகள் பலவகைப்படும். எங்கே, எப்படி, எப்போது, யாரால், எதனால், எவற்றால், எவர்களால், ஏன் என்று கேள்விச் சொற்கள் பல உள்ளன. இவற்றுள் ஏன் என்ற கேள்விச்சொல் காரணம் பற்றி எழுவது; மிக மிக இன்றியமையாது; எல்லையற்ற ஆற்றல் கொண்டது; கீழ்நிலையில் உள்ள ஒருவனை மேல்நிலைக்கு உயர்த்தும் ஆற்றல் உடையது; சிந்திக்கும் திறனைத் தூண்டுவது; புரட்சிக்கு அடிகோலி ஒட்டுமொத்த மனித சமுதாயத்தின் மேம்பாட்டுக்கு உதவுவது. இப்படி இக் கேள்வியின் சிறப்புக்களை இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். அதுவல்ல நம் நோக்கம்.

என்றால் ஏன் என்ற கேள்வி எப்போது நிற்கும்?. எங்கே முடியும்?. இவற்றின் விடை: 'இறைவன்' ஆகும். ஆம், இறைவனே ஏன் என்ற கேள்வியின் முடிவாவான். ஏனென்றால் இறைவன் காரண அறிவானவன். காரண அறிவை அறிய உதவும் கேள்வியான ஏன் என்ற கேள்விக்கு காரண அறிவாய் விளங்கும் இறைவன் தானே விடையாக இருக்க முடியும். எல்லையற்ற புரியாத புதிர்களால் நிறைந்து இருக்கும் இவ் உலகில் எவ்வளவோ இயக்கங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. சான்றாக நமது பூமி கதிரவனைச் சுற்றி வருகின்றதை நாம் அறிவோம். ஆனால் ஏன் நமது பூமி கதிரவனைச் சுற்றி வருகின்றது?. இந்த ஒரு கேள்விக்கே நம் அறிவியலாளர்களால் இன்னும் சரியான விடை காண முடியவில்லை. அப்படியே அவர்கள் மிகவும் கடினமாக உழைத்து இக் கேள்விக்கு விடை கூறி விட்டாலும் அதற்கும் ஒரு ஏன் போட்டுவிட்டால் அவர்கள் கதி என்னாகும்?. ஆம், ஏன் என்ற கேள்வி கேட்பதற்கு மிக எளிமையாகத் தோன்றினாலும் அதற்கான விடையினைக் காண மிகவும் கடினமாக உழைக்க வேண்டும். இப்படி மனிதனை உந்தும் ஆற்றலாகவும் ஏன் என்ற கேள்வி விளங்குகிறது.
காரண அறிவின் வடிவாய் விளங்கும் இறைவனே உலகில் உள்ள அனைத்துக் கேள்விகளின் அடிப்பொருள் அதாவது இறுதி விடை ஆவான். இந்த இறுதி விடை ஆகிய அடிப்பொருள் காண்டலையே அடிசேர்தல் என்று கூறுகிறார் வள்ளுவர். தாள் வணங்குதல், தாள் சேர்தல், புகல் புரிதல், அடி சேர்தல் ஆகிய சொற்கள் அனைத்தும் ஏன் என்ற கேள்விகளால் நாம் நம்முள் குடைந்து குடைந்து அடிப்பொருள் ஆகிய இறைவனை அடைய வேண்டும் என்னும் பொருளையே உணர்த்தி நிற்கின்றன.
இப்படி மேலே கண்ட ஏழு பாடல்களிலும் இறைவனை அறிவின் வடிவாகவே போற்றியுள்ளார் வள்ளுவர். அதுமட்டுமின்றி இறைவனை அடையும் முறையினையும் நமக்கு மறைமுகமாக உணர்த்திச் சென்றிருக்கின்றார். இதிலிருந்து வள்ளுவர் எழுதியது ஆதியகவன் தான் என்பதனை மிகத் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.
முடிவுரை:
தாள் வணங்குதல், அடி சேர்தல், தாள் சேர்தல் என்ற சொற்களுக்கு பாதங்களைத் தொட்டு வணங்குதல், பாதங்களில் தலையை வைத்து வணங்குதல் என்றெல்லாம் பொருள் கொண்டு வள்ளுவர் கடவுளுக்கு உருவம் கொடுத்திருப்பதாகக் க்ருதி அவரை தத்தம் மதங்களின் பக்கம் இழுக்க முயன்றுள்ளனர் நமது முன்னோர்கள். இது தவறாகும். ஏனென்றால் ஒரு பாடலுக்குப் பொருள் கூறுமிடத்து தன்கருத்தை ஏற்றிக் கூறாமல் நடுநிலையில் நின்று ஆசிரியரின் கருத்து என்னவாக இருக்கும் என்று ஆராய்ந்து பொருள் கூற வேண்டும் என்பதே விதியாகும்.
கடவுள் வாழ்த்தில் வரும் அனைத்துப் பாடல்களும் இறைவனை அறிவின் வடிவமாகக் காட்டும்போது ஆறாவது பாடலான ' பொறிவாயில் ஐந்தவித்தான்' என்ற பாடல் மட்டும் விதிவிலக்காகவும் நெருடலாகவும் உள்ளது. ஏனென்றால் ஐம்பொறிகளையும் அடக்குதல் என்பது ஐம்பொறிகள் உடைய மாந்தர்க்குரிய செயலாகும். அதை உருவமில்லாத இறைவனுக்கு ஏற்றிக் கூறுவது மிகப் பெரும் தவறாகும். நீத்தார் பெருமையில் வரவேண்டிய இக் குறளை தவறுதலாகவோ வேண்டுமென்றோ சிலர் கடவுள் வாழ்த்தில் சேர்த்துள்ளனர். இதுவே இக் கட்டுரையின் துணிந்த முடிபாகும்.