குறள்:
தாம்வீழ்வார் மென்தோள்
துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு. - எண்: 1103
தற்போதைய உரைகள்:
கலைஞர் மு.கருணாநிதி உரை:
தாமரைக் கண்ணான் உலகம் என்றெல்லாம் சொல்கிறார்களே, அது என்ன அன்பு நிறைந்த காதலியின்
தோளில் சாய்ந்து துயில்வது போல அவ்வளவு இனிமை வாய்ந்ததா?.
மு.வரதராசனார் உரை: தாமரைக்
கண்ணனுடைய உலகம், தாம் விரும்பும் காதலியரின் மெல்லிய தோள்களில் துயிலும் துயில் போல்
இனிமை உடையதோ?.
சாலமன் பாப்பையா உரை: தாம்
விரும்பும் மனைவியின் மெல்லிய தோளைத் தழுவித் தூங்கும் உறக்கத்தைவிடத் தாமரைக் கண்ணனாகிய
திருமாலின் உலகம் இனிமை ஆனதோ?.
பரிமேலழகர் உரை: (நிரதிசய
இன்பத்திற்குரிய நீ இச்சிற்றின்பத்திற்கு இன்னையாதல் தகாது என்ற பாங்கற்குத் தலைவன்
சொல்லியது.) தாம் வீழ்வார் மென்தோள் துயிலின் இனிதுகொல் - ஐம்புலன்களையும் நுகர்வார்க்குத்
தாம் விரும்பும் மகளிர் மெல்லிய தோளின்கண் துயிலும் துயில் போல வருந்தாமல் எய்தலாமோ;
தாமரைக் கண்ணான் உலகு - அவற்றைத் துறந்த தவயோகிகள் எய்தும் செங்கண்மால் உலகம். (ஐம்புலன்களையும்
நுகர்வார் என்னும் பெயர் அவாய் நிலையான் வந்தது. 'இப்பெற்றித்தாய துயிலை விட்டுத் தவயோகங்களான்
வருந்த வேண்டுதலின், எம்மனோர்க்கு ஆகாது' என்னும் கருத்தால், 'இனிதுகொல்' என்றான்.
இந்திரன் உலகு என்று உரைப்பாரும் உளர். தாமரைக்கண்ணான் என்பது அவனுக்குப் பெயரன்மையின்,
அஃது உரையன்மையறிக.).
மணக்குடவர் உரை: தம்மால்
விரும்பப்படுவாரது மெல்லிய தோளின்கண் துயிலுந் துயிலினும் இனிதோ இந்திரனது சுவர்க்கம்.?
இது சுவர்க்கத்தின்பமும் இதுதானே யென்று கூறியது.
திருக்குறளார் வீ. முனிசாமி
உரை: தாம் விரும்பிய மகளிரது மெல்லிய தோள்களின் மீது துயிலும் துயில்போலத் தாமரைக்
கண்ணான் உலகம் இனிமையுடையதோ?.
உரைத்தவறுகள்:
மேற்காணும் உரைவிளக்கங்களை
நோக்கினால், தாமரைக்கண்ணான் என்பதற்குத் திருமால் என்று சிலரும் இந்திரன் என்று சிலரும்
பொருள்கொண்டிருப்பது புரியும். நமக்கேன் வம்பு? என்று சிலர் எதையுமே விளக்காமல் தாமரைக்கண்ணான்
என்றே கூறியிருப்பதையும் காணலாம். இந்த ஆய்வுக்கட்டுரையின் நோக்கமே வள்ளுவர் கூறும்
தாமரைக்கண்ணான் யார் என்பதைப் பற்றியே என்பதால் தெளிவாக விளக்கம் கூறாத மற்ற உரைகளைப்
புறந்தள்ளிவிட்டு, பரிமேலழகர் மற்றும் மணக்குடவர் உரைகளைப் பற்றி மட்டுமே காண்போம்.
இக்குறளில் வரும் தாமரைக்கண்ணான்
என்ற சொல் திருமாலையோ இந்திரனையோ குறித்துவர வாய்ப்பில்லை என்பதற்குக் கீழ்க்காணும்
காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன.
1. கடவுள் வாழ்த்திலும்
சரி பிற குறள்களிலும் சரி எந்தவொரு சமயம் சார்ந்த பெயர்களையும் வள்ளுவர் குறிப்பிடவில்லை
என்று முன்னரே பல கட்டுரைகளில் கண்டுள்ளோம். இந்திரனே சாலும் கரி என்று முடிவதான குறளில்கூட
இந்திரன் என்ற சொல்லினால் புராணங்களில் வரும் தேவேந்திரனையோ திருமாலையோ குறிக்காமல்
இயற்கைப் பொருளான கதிரவனைத்தான் குறித்தார் என்று முன்னர் ஆதாரங்களுடன் கண்டுள்ளோம்.
அவ்வகையில், இக்குறளில் வரும் தாமரைக்கண்ணான் என்ற சொல்லுக்கும் புராணம் சார்ந்த எந்தவொரு
கடவுள் பெயரையும் வள்ளுவர் குறிப்பிட்டிருக்க மாட்டார்.
2. 'தாமரை மலர் போன்ற கண்களை
உடையவன்' என்ற பொருளில் இந்திரனையோ திருமாலையோ வள்ளுவர் குறிக்க விழைந்திருந்தால்
'தாமரைக் கண்ணன்' என்றே குறித்திருப்பார். காரணம், பண்புப்பெயராகவோ பண்பாகுபெயராகவோ
பெயர்களை அமைக்கும்போது 'அன்' விகுதி சேர்ப்பதே பொதுவான வழக்கம். சான்றாக, இறைவன்,
அறிவன், அந்தணன், மன்னன், பொன்னன், நன்னன் போன்ற பெயர்களைக் காட்டலாம். ஆனால் குறளிலோ
'தாமரைக் கண்ணான்' என்று வருகின்றது. இதிலிருந்து வள்ளுவர் கூற வருவது 'தாமரை மலர்
போன்ற கண்களை உடையவன்' என்ற கருத்தல்ல என்பது பெறப்படுகிறது.
3. தாமரைக்கண்ணான் உலகு
என்பதற்குத் திருமால் உலகம் என்று வைத்துக்கொண்டால், அங்கே வாழ்வது துறந்த தவயோகிகள்
என்று பரிமேலழகரே கூறுகிறார். திருமால் உலகம் இத்தன்மையானது என்று காதலன் அறிவானா?
இல்லை அந்தக் காதலிதான் அறிவாளா?. இருவருமே அறியாத ஒன்றினைப் பற்றிக் காதலன் எப்படி
உவமையாகக் கூறுவான்? ஒருவேளை காதலன் கேள்விப்பட்டிருந்தாலும் ஐம்புலன்களால் காதல்இன்பம்
துய்த்துக் கொண்டிருக்கின்ற நிலையில் ஐம்புலன் அவித்த தவயோகிகள் வாழ்வதான திருமால்
உலகம் தான் அவனுக்கு நினைவுக்கு வருமா?. என்னவொரு முரண்பட்ட சிந்தனை !. மேலும் ஒன்றுக்கொன்று
தொடர்பேயில்லாத இரண்டு பொருட்களை ஒப்பீடு செய்யலாமா?. சான்றாக, கரும்பைக் காட்டிலும்
தேன் இனிப்பானதா? என்று கேட்டால் அதிலொரு பொருளுண்டு. இரண்டுமே இனிப்புச்சுவை கொண்டவை.
ஆனால், உப்பைக்காட்டிலும் தேன் இனிப்பானதா என்று கேட்டால் அக்கேள்வியில் ஏதேனும் பொருளுண்டா?.
அப்படி யாரும் கேட்டால் மனநிலை சரியில்லையா? என்று எதிர்க்கேள்வியே கேட்பார்கள். காதலியின்
தோள்தரும் ஐம்புலன் இன்பத்தை அவ்வின்பமே என்னவென்று அறியாத திருமால் உலகத்துடன் ஒப்பிடுவது
தேனுடன் உப்பினை ஒப்பிடுவதைப் போன்றதுதான். ஒப்புமை பொருந்தாத நிலையில் தாமரைக்கண்ணான்
என்பது திருமாலைக் குறித்துவர வாய்ப்பில்லை என்பது இதனானும் உறுதியாகிறது.
4. தாமரைக்கண்ணான் என்பதற்கு
இந்திரன் என்ற தேவேந்திரன் என்று பொருள்கொண்டு உரைகூறுகிறார் மணக்குடவர். ஆனால், தாமரைக்கண்ணான்
என்ற பெயர் எப்படி தேவேந்திரனைக் குறிக்கும் என்று அவர் விளக்கினாரில்லை. இவர்களைப்
போலவே நாமும் புராண வழிமுறையில் சிந்திப்போமானால் தாமரைக்கண்ணான் என்பதற்குப் பிரம்மனையும்
ஒருபொருளாகக் காட்டமுடியும். திருமாலின் உந்தியில் தோன்றிய தாமரைமலரின்கண் அமர்ந்திருப்பவன்
என்று அதற்கொரு விளக்கமும் கொடுக்கமுடியும். இப்படி வள்ளுவரின் குறள்களுக்குப் புராணங்களின்
அடிப்படையில் பொருள்தேட முனைந்தால் எந்தவொரு தெளிவும் கிடைக்காமல் முடிவில் குழப்பமே
மிஞ்சும் என்பதனைத் தெளிவாகப் புரிந்துகொள்ளலாம்.
திருந்திய திருக்குறள்
விளக்கம்:
இக்குறளில் வரும் தோள்
என்பது கண்ணையும் தாமரைக்கண்ணான் என்பது நிலவையும் குறிப்பதாகும். இப்புதிய பொருட்களின்
அடிப்படையில் இக்குறளின் திருந்திய பொருள் இதுதான்:
தாம்விரும்பும் காதலியின்
கண்களிலே பெறும் துயிலின்பத்தைக் காட்டிலும் நிலவுலகம் இன்பம் தருவதோ?.
தாமரைக்கண்ணான் என்பது
சந்திரனா?
முதலில் தாமரைக்கண்ணான்
என்ற சொல் எவ்வாறு சந்திரனைக் குறிக்கும் என்று காணலாம்.
தாமரைக்கண்ணான் = தாமரைக்கு
+ அண்ணான்
= தாமரைக்குப் பகைவன்
= சந்திரன் (நிலவு)
அண்ணார் என்பதற்குப் பகைவர்
என்ற பொருளை சென்னை இணையத் தமிழ்ப் பேரகராதி காட்டுகிறது.
அண்ணார்² aṇṇār , n. < அண்ணு- + ஆ neg. + ஆர்.
Enemies; பகைவர். அண்ணார் புரமவிய (உப தேசகா. திரிபுர. 112).
அண்ணுதல் என்றால் கிட்டுதல்,
பற்றுதல் என்று பொருள்கள் உண்டு. தம்முடன் அண்ணாதவர்கள் அதாவது பற்றுகொள்ளாதவர்கள்
பகைவர்களே அல்லவா?. வள்ளுவர் இக்குறளில் ஒருமையைச் சுட்ட அண்ணான் என்ற சொல்லை பயன்படுத்தியுள்ளார்.
இனி நிலவு எவ்வாறு தாமரைக்குப் பகைவன் ஆகும் என்று பார்ப்போம்.
நீரில் பூக்கும் பல மலர்களில்
தாமரை மலர் மிக அழகானது. நீரிலேயே இருந்தாலும் இம் மலர் வெப்பத்தை விரும்பும் ஒரு மலராகும். எனவே தான் கதிரவன் உலாவும் பகல் நேரத்தில் நீரினின்று
உயர்ந்து முழுமையாக விரிந்து மலர்ந்திருக்கும். கதிரவன் மறையும் மாலை வேளையானதும் தனது
இதழ்களை சுருட்டி மூடிக் கொள்ளும். இரவு நேரத்தில் வரும் நிலவின் ஒளியோ குளுமையானது.
இக் குளுமை தாமரைக்குப் பிடிக்காது. எனவே நிலவின் ஒளியில் தாமரைமலரானது சிலநேரம் தண்ணீருக்குள்
மூழ்கி தன்னை மறைத்துக் கொள்வதாகவும் கூறப்படுகிறது. தாமரைப் பூவின் இத்தன்மைகளைப்
பற்றி மேலும் அறிந்து கொள்ள ஜெந்தமுனி என்ற இணையதளத்தைக் காணலாம்.
நிலவொளி வீசும் இரவு நேரத்தில்
தாமரை நீருக்குள் மறைந்து கொள்வதால்தான் நிலவைத் தாமரையின் பகைவன் என்றனர். தியாகராஜ
பாகவதர் நிலவினைத் தாமரைப் பகைவன் (தம்மி வைரி) என்றும் கமலப் பகைவன் (கமல வைரி) என்றும்
தனது பாடல்களில் கூறியுள்ளார். கீழ்க்காணும் இணைய தளங்களில் அப்பாடல்களைக் காணலாம்.
மேற்காணும் இரண்டாவது பாடலில்
'கமலப் பகைவனின் பிறை அணிவோன் இல்லாளே' என்று அன்னை சக்தியை விளிக்கிறார் பாகவதர்.
'நிலவின் பிறை அணிந்த சிவனின் இல்லத்தரசியே'
என்று கூறுவதில் இருந்து கமலப் பகைவன் என்ற சொல் நிலவைத் தான் குறிக்கிறது என்பது உறுதியாகிறது.
கலித்தொகை 134 ஆம் பாடல் இரவு நேரத்தில் நிலவின் ஒளியில் தாமரைமலர்கள் கூம்பியுள்ள
நிலையைக் கூறுகிறது.
மல்லரை மறம் சாய்த்த மலர்
தண் தார் அகலத்தோன்
ஒல்லாதார் உடன்று ஓட, உருத்து,
உடன் எறிதலின்,
கொல் யானை அணி நுதல் அழுத்திய
ஆழி போல்,
கல் சேர்பு ஞாயிறு கதிர்
வாங்கி மறைதலின்,
இரும் கடல் ஒலித்து ஆங்கே
இரவுக் காண்பது போலப்,
பெரும் கடல் ஓத நீர் வீங்குபு
கரை சேரப்,
போஒய வண்டினால் புல்லென்ற
துறையவாய்ப்
பாயல் கொள்பவை போலக் கயமலர்
வாய் கூம்ப,
ஒரு நிலையே நடுக்குற்று
இவ் உலகு எலாம் அச்சுற,
இரு நிலம் பெயர்ப்பு அன்ன,
எவ்வம் கூர் மருள் மாலை;
மேற்காணும் பாடலில்வரும்
கயமலர் என்பது தாமரையைக் குறிக்கும். தாமரை மலரானது மதியிடம் தோற்கும் என்ற கருத்து
கீழ்க்காணும் தண்டியலங்காரப் பதிப்புப் ( திரு.கு.சுந்தரமூர்த்தி, திருப்பனந்தாள்)
பாடலில் கூறப்பட்டுள்ளது.
மறுப்பயின்ற வாண்மதியும்
அம்மதிக்குத் தோற்கும்
நிறத்தலரும் நேரொக்கு மேனும் - சிறப்புடைத்துத்
தில்லைப் பெருமா னருள்போல்
திருமேனி
முல்லைப் பூங்கோதை முகம்'
இங்கே நிறத்தலர் என்பது
தாமரைமலரைக் குறிக்கும். விவேக சிந்தாமணியின் கீழ்க்காணும் 19 ஆம் பாடலிலும் இதைப்
பற்றிய குறிப்பு உள்ளதைக் காணலாம்.
தேனுகர் வண்டு மது தனை
உண்டு தியங்கியே கிடந்ததைக் கண்டு தானதைச் சம்புவின் கனி
என்று தடங்கையில் எடுத்துமுன் பார்த்தாள் வானுறு மதியும் வந்தது
என்றெண்ணி மலர்கரம் குவியும் என்று அஞ்சிப் போனது வண்டோ பறந்ததோ பழம்
தான் புதுமையோ இது எனப் புகன்றாள். 19.
இங்கே மலர் எனக் கூறப்பட்டது
தாமரை மலரே ஆகும். மலரிலே தேனுண்டு மயங்கிக்கிடந்த ஒரு கருவண்டினை நாவல்பழம் என்று
கருதிய ஒருபெண் அதனையெடுத்துத் தனது உள்ளங்கைகளிலே வைத்துப் பார்க்கிறாள். அப்போது
கண்விழித்த வண்டானது பெண்ணின் சிவந்த கைகளைத் தாமரை மலரென நினைத்து நிலவு வந்துவிட்டதால்
தாமரை மலர் மூடிக் கொள்ளுமே என்று அஞ்சிப் பறந்து சென்றுவிட்டதாம். எவ்வளவு அழகிய கற்பனை
இது!.
மேற்கண்ட சான்றுகளில் இருந்து
இக்குறளில்வரும் தாமரைக்கண்ணான் என்பது சந்திரனையே குறிக்கும் என்பது உறுதியாகிறது.
தாமரைப்பகைவன் என்று கூறாதது
ஏன்?
இக்குறளில் வரும் தாமரைக்கண்ணான்
என்ற சொல் சந்திரனைக் குறிக்கும் என்று மேலே விரிவாகக் கண்டோம். ஆனால், சந்திரனைக்
குறிக்கத் தாமரைப்பகைவன் என்ற சொல்லை வள்ளுவர் நேரடியாகப் பயன்படுத்தாமல் தாமரைக்கண்ணான்
என்ற சொல்லால் ஏன் குறிக்கவேண்டும்?. என்ற கேள்வி எழுகிறது. இதற்கான விடையினை இங்கே
காணலாம்.
திருக்குறள் முழுவதையும்
தேடியதில், பகைவன் என்ற ஒருமையைக் குறிக்கும் சொல்லை வள்ளுவர் எந்தவொரு குறளிலும் பயன்படுத்தவில்லை
என்று தெரியவந்தது. ஆனால், பகைவர் என்ற பன்மையைக் குறிக்கும் சொல்லையும் பகை/பகைமை
என்ற பொதுமையைக் குறிக்கும் சொல்லையும் பல இடங்களில் பயன்படுத்தி இருக்கிறார். இந்த
அனைத்து இடங்களிலும் பகை / பகைமை / பகைவர் என்பதனை பெருங்கேட்டினைத் தருகின்ற ஒன்றாகவோ
அழிக்கப்படவேண்டிய ஒன்றாகவோத்தான் வள்ளுவர் பயன்படுத்தி இருக்கிறார். சான்றாக,
எள்பகவு அன்ன சிறுமைத்தே
ஆயினும்
உள்பகை உள்ளதாம் கேடு.
- 89:9
பகையானது எள்ளின் பாதியளவாக
மிகச்சிறியதாகவே இருந்தாலும் உட்பகையாய் ஒளிந்திருக்கும் அது பெருங்கேட்டைத் தருவதாகும்
என்கிறார். மனிதர்களுக்கு இடையில் மட்டுமின்றி விலங்குகளுக்கு இடையிலும் பகை உண்டு.
எலிக்கும் பாம்புக்கும் இடையில் இருக்கும் பகையினைக் கீழ்க்காணும் குறளில் கூறுகிறார்.
ஒலித்தக்கால் என்ஆம் உவரி
எலிப்பகை
நாகம் உயிர்ப்பக் கெடும்
- குறள் 77:3
இப்படிப் பகை என்பது எப்போதும்
அழிவினையே விளைவாகத் தருவதால் வள்ளுவரைப் பொருத்தமட்டிலும் பகை / பகைமை / பகைவர் என்பது
கொடியதாகும். ஆனால், இக்குறளில் வரும் நிலவுக்கும் தாமரைக்கும் இடையில் இருப்பது அழிவினைத்
தருவதும் கொடியதுமான பகை அல்ல.!. இதைப்பற்றிக் கீழே காணலாம்.
நிலவானது அனைவருக்கும்
பொதுவாகத்தான் தண்ணிய ஒளியை வீசுகிறது. இவ்வொளியைக் குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை
அனைவரும் விரும்புவர். மேலும், நிலவொளியில் காதல் செய்வது காதலர்களுக்கு மிகவும் பிடித்த
ஒன்றாகும். ஆனால், தாமரைக்குத்தான் அந்த குளிர்ந்த ஒளி பிடிக்கவில்லை. காரணம், இயற்கையாகவே
நிலவின் ஒளியானது தாமரைமலரின் இதழ்களுக்கு ஒத்துக்கொள்ளாததினால் தாமரைக்கு நிலவின்மேல்
ஒரு வெறுப்பு மட்டுமே. இதனை 'ஒவ்வாமை' என்றுகூட ஒருவிதத்தில் கூறலாம். ஆனால், நிலவுக்குத்
தாமரைமேல் எவ்வித வெறுப்புமில்லை. இந்நிலையில், தாமரைக்கும் நிலவுக்கும் இடையில் இருப்பதை,
எலிக்கும் பாம்புக்கும் இடையில் இருப்பதைப்போன்ற
அழிவைத்தரவல்ல கொடியபகை என்று கூறலாமா?. கூடாது.
அப்படியென்றால், இதை எவ்வாறு
குறிப்பிடுவது?. அதற்குத்தான் இங்கே அண்ணான் என்ற சொல்லைக் கையாள்கிறார். அண்ணுதல்
என்ற சொல்லுக்குப் பற்றுதல் என்று அகராதிகள் பொருள் கூறுவதை மேலே கண்டோம். இதிலிருந்து,
அண்ணான் என்ற சொல்லுக்குப் பற்றற்றவன் / விருப்பமற்றவன் என்றும் பொருள்கொள்ளலாம். தாமரைக்கு
நிலவின்மேல் / நிலவொளியின்மேல் விருப்பமில்லை என்பதால், தாமரைக்கு விருப்பமற்றவன் என்ற
பொருளைத் தரும்படியாக,
தாமரைக்கு + அண்ணான் =
தாமரைக்கண்ணான்
என்ற சொல்லினால் நிலவினைக்
குறிப்பிட்டார் என்க. ஆனால், தியாகராஜ பாகவதர் தாமரைப்பகைவன் என்று கூறுகிறாரே என்றால்
அது அவர் விருப்பம். வள்ளுவரைப் பொருத்தமட்டிலும் நிலவானது தாமரைக்குப் பகைவன் அன்று;
தாமரைக்கு விருப்பமில்லாதவனே ஆவான். அதனால்தான் இக்குறளில் நிலவினைக் குறிக்கத் தாமரைப்பகைவன்
என்ற சொல்லை அவர் பயன்படுத்தவில்லை.
பெண்களின் தோளும் நிலவும்:
பெண்களின் 'தோள்' என்பது
அவரது கண்களையே பெரும்பாலும் குறிக்கும் என்று 'தோள் என்றால் என்ன?' என்ற ஆய்வுக் கட்டுரையில்
பல ஆதாரங்களுடன் கண்டுள்ளோம். இக்குறளிலும் தோள் என்பது காதலியின் கண்களையே குறித்து
வந்துள்ளது. பெண்களின் தோள் ஆகிய கண்கள் வட்டவடிவினதாய் வெண்ணிற ஒளி வீசுவதால் அக்கண்களை
நிலவுடன் ஒப்பிட்டுப் புலவர்கள் பாடுவது வழக்கமே. இதைப்பற்றி ஏராளமான கட்டுரைகளில்
முன்னரே கண்டுள்ளோம்.
முழுநிலா ஒளிவீசும் ஓர்
இரவிலே காதலனும் காதலியும் ஒரு பொய்கையின் அருகே காதல்செய்து கொண்டிருக்கின்றனர். அப்பொய்கையில்
பிற மலர்களுடன் தாமரைமலர்களும் பூத்திருக்கின்றன. ஆனால், தாமரைமலர்கள் மட்டும் வாடியவைபோல
கூம்பியிருக்கின்றன. காதலன் தனது காதலியின் கண்கள் வீசும் காதல் பார்வையின் இன்பத்தில்
திளைத்துக்கொண்டிருக்கிறான். அப்படியே மெய்ம்மறந்துபோய் உடல் அசைவின்றி உறங்குவதைப்போல
இருவரும் காதல்வயப்பட்ட நிலையில் இருக்கின்றனர். இந்நிலையினையே 'துயில் கொள்ளுதல்'
என்றும் 'முயங்குதல்' என்றும் இலக்கியங்கள் கூறும். இப்படியே வெகுநேரம் கழிந்தபின்னர்,
மேலே ஒளிவீசும் முழுநிலவையும் தாமரைமலர்களையும் காதலியின் கண்களையும் மாறிமாறிப் பார்க்கின்றான்
காதலன். அப்போது வெண்ணிற ஒளிவீசும் காதலியின் கண்களையும் நிலவினையும் மனதிற்குள் ஒப்பிட்டுப்
பார்க்கின்றான்.
இந்நிலவின் தண்ணொளியோ
இராப்பொழுதே
கிடைத்திருக்கும்.
என்னவளின் கண்ணொளியோ
எப்பொழுதும்
கிடைத்திருக்கும்.
வெண்ணிலவின் தண்ணொளியில்
தாமரையும் கூம்பிவிடும்.
பெண்ணிவளின் கண்ணொளியில்
ஐம்புலனும் அகமலரும்.
இப்படியெல்லாம் ஒப்பிட்டுப்பார்த்த
அவன் ஒருமுடிவுக்கு வந்தவனாகக் கூறுகிறான்:
தாம்விரும்பும் காதலியின்
கண்களிலே பெறும் துயிலின்பத்தைக் காட்டிலும் நிலவுலகம் இன்பம் தருவதோ?. ஒருபோதும் இல்லை.
முடிவுரை:
கண்டுகேட்டு உண்டுயிர்த்து
உற்றறியும் ஐம்புலனும்
ஒண்தொடி கண்ணே உள. -
1101.
காதலியின் கண்கள் தனது
ஐம்புலன்களுக்கும் விருந்தளிப்பதாய் மேற்காணும் குறளில் கூறும் காதலன், அடுத்தடுத்த
பாடல்களிலும் காதலியின் தோள் ஆகிய கண்களையே பலவாகப் புகழ்கின்றான்.
வேட்ட பொழுதின் அவையவை
போலுமே
தோட்டார் கதுப்பினாள் தோள்.
- 1105.
உறுதோறு உயிர்தளிர்ப்பத்
தீண்டலால் பேதைக்கு
அமிழ்தின் இயன்றன தோள்.
- 1106.
காதலியின் தோள் ஆகிய கண்கள்
தரும் இன்பமே அனைத்து இன்பங்களிலும் மேலானது என்ற கருத்தை வலியுறுத்த நினைத்த வள்ளுவர்
வேறெதனுடனும் ஒப்பிடாமல் அதனை நிலா தரும் இன்பத்துடன் இக்குறளில் ஒப்பிட்டுக் கூறினார்.
காரணம், நிலவொளி தரும் இன்பம் இயற்கையானது; இத்தன்மைத்து என்று அனைவருமே உய்த்து அறியத்தக்கது;
குறிப்பாகக் காதலர்கள் அனைவரும் நன்கு அறிந்த ஒன்றாகும். ஆனால், இந்திர உலகம் அல்லது
திருமால் உலகம் என்பதோ கற்பனையானது; இத்தன்மைத்து என்று யாருமே உய்த்து அறிந்திராதது.
ஆகவே, இக்குறளில்வரும் தாமரைக்கண்ணான் உலகு என்பது நிலவையே அன்றி இந்திர உலகத்தையோ
திருமால் உலகத்தையோ வேறெதையுமோ குறித்து வரவில்லை என்பது உறுதிசெய்யப்படுகிறது.
========== வாழ்க தமிழ் ! வளர்க வள்ளுவம் !! ===========