திங்கள், 29 அக்டோபர், 2012

புத்தேள் நாடு


முன்னுரை:

புத்தேள் நாடு, புத்தேள் என்ற சொல்லாடல்கள் தமிழிலக்கியங்களில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் இவற்றுக்கு இன்றைய தமிழ் அகராதிகள் கூறும் பொருட்கள் பாடலின் கருத்துக்களோடு சற்றும் பொருந்தா நிலையே காணப்படுகிறது. இது இச் சொல்லுக்கு வேறொரு பொருள் உள்ள நிலையினையே நமக்குக் காட்டுகிறது. இக் கட்டுரையில் புத்தேள் நாடு அல்லது புத்தேள் உலகு என்பது என்ன என்பதைப் பற்றியும் புத்தேளிர் அல்லது புத்தேள் எனப்பட்டோர் யாவர் என்பது பற்றியும் விரிவாக பல சான்றுகளுடன் காணலாம்.

புத்தேள் நாடு - தற்போதைய விளக்கங்கள்

புத்தேள்நாடு என்பதற்கும் புத்தேள் என்ற சொல்லிற்கும் கீழ்க்காணும் பொருட்களை இன்றைய அகராதிகள் கூறுகின்றன.

சென்னை இணையத் தமிழ்ப் பேரகராதி:

புத்தேள்¹ puttēḷ , n. < புது-மை. 1. Novelty; புதுமை. (சூடா.) 2. Strange woman; stranger; புதியவள். புலத்தகைப் புத்தேளில் புக்கான் (கலித். 82).
புத்தேள்² puttēḷ, n. prob. puttala. God, deity; தெய்வம். புத்தேளிர் கோட்டம் வலஞ்செய்து (கலித். 82)
புத்தேணாடு puttēṇāṭu , n. < புத்தேள்² + நாடு. Celestial world; வானுலகு. புலத்தலிற் புத்தேணா டுண்டோ (குறள், 1323).

பேப்ரிசியஸ் இணையப் பேரகராதி:

புத்தேள் (p. 717) [ puttēṉ ] , s. God, தெய்வம்; 2. novelty, புதுகை.
புத்தேணாடு, (புத்தேள்+நாடு) Swerga, the world of Indra.
புத்தேளிர், supernals.

வின்சுலோ இணையப் பேரகராதி:

புத்தேள், (p. 793) [ puttēḷ, ] s. God, தெய்வம். 2. Novelty, புதுமை. (சது.)
புத்தேணாடு, s. Swerga, the world of Indra, தெய்வலோகம்; [ex நாடு.]
புத்தேளிர், s. [pl.] The gods, supernals, inhabitants of Swerga, தேவர்கள். 2. The celestials, வானோர். (p.)

பொருள் தவறுகள்:

மேற்காணும் அகராதிப் பொருட்களில் இருந்து புத்தேளிர் எனப்படுவோர் வானுலகத் தேவர்கள் என்றும் புத்தேளிர் உலகு எனப்படுவதாவது இந்த வானுலகத் தேவர்கள் வாழும் சொர்க்க உலகம் அதாவது இந்திர உலகம் என்றும் அறியப்படுகிறது. இப் பொருட்கள் உண்மையா எனில் இல்லை என்றே கூறலாம். இதைக் கீழ்க்காணும் திருக்குறள்களின் வாயிலாக அறியலாம்.

பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு. 58

புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே
ஒப்புரவின் நல்ல பிற. 213

நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்
போற்றாது புத்தேள் உலகு. 234

கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்வார்க்குத்
தள்ளாது புத்தே ளுளகு. 290

புகழ்இன்றால் புத்தேள்நாட்டு உய்யாதால் என்மற்று
இகழ்வார்பின் சென்று நிலை. 966

புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ நிலத்தொடு
நீரியைந் தன்னார் அகத்து. 1323

மேற்காணும் ஆறு திருக்குறள்களிலும் புத்தேள் உலகு என்பதற்கு இந்திர உலகம் என்ற பொருளைக் கொள்ள முடியுமா என்றால் உறுதியாக முடியாது என்றே கூறலாம். ஏனென்றால் வள்ளுவர் இந்திர உலகம் போன்ற கற்பனையான உலகத்தைப் பற்றித் திருக்குறளில் எவ்விடத்திலும் கூறவில்லை என்று தாமரைக்கண்ணான் உலகு என்ற ஆய்வுக் கட்டுரையில் முன்னரே பல ஆதாரங்களுடன் கண்டுள்ளோம். மேலும் வள்ளுவர் இக் குறள்களில், உதவி செய்தல், ஊடல் கொள்ளுதல், திருடாதிருத்தல், கற்புநெறி போன்ற மனிதருக்குத் தேவையான பண்புகளைப் பற்றித் தான் பேசுகிறாரே ஒழிய இவை ஏதும் தேவையற்ற கற்பனையான வானுலகத் தேவர்களைப் பற்றியல்ல.

இதிலிருந்து மேற்காணும் குறள்களில் வரும் புத்தேள் உலகு என்பது இந்திர உலகத்தையோ அல்லது கற்பனையான வேறு ஒரு உலகத்தையோ குறித்து வரவில்லை என்பது தெளிவாகிறது. மேலும் புத்தேள் என்னும் சொல் வானுலகத் தேவர்களையோ அல்லது கற்பனையான பிற உயிரினங்களையோ குறித்து வரவில்லை என்பது இதனால் உறுதியாகிறது.

புத்தேள் உலகத்தின் தன்மைகள்:

என்றால் புத்தேள் உலகம் என்பது என்ன? அது எங்கிருந்தது? அங்கே யார் வசித்தனர்? என்பது போன்ற கேள்விகள் எழலாம். இக் கேள்விகளுக்கான விடைகளைக் கீழே காணலாம்.

புத்தேள் உலகத்தின் தன்மைகள் பற்றி பல பாடல்களின் வாயிலாகப் பெறப்பட்ட செய்திகள் கீழே தொகுக்கப்பட்டுள்ளன.

புத்தேள் உலகத்தில் கற்புநெறி சான்ற பெண்களுக்கு பெரும் செல்வாக்கு இருந்தது. ( குறள் - 58)

புத்தேள் உலகம் கைம்மாறு கருதாமல் உதவி செய்யும் நல்லோரைக் கொண்டது. ( குறள் - 213)

புத்தேளுலகம் பிறர்க்கு உதவி செய்வோர் எங்கிருந்தாலும் அவரை வரவேற்று இணைத்துக் கொள்ளும் தன்மையது. ( குறள் - 234)

புத்தேள் நாட்டில் திருட்டு என்பதே இல்லாமல் அனைவரும் பாதுகாப்புடன் வாழ்ந்தார்கள். ( குறள் - 290)

புத்தேள் நாடு நல்ல கல்வியறிவில் சிறந்து விளங்கியது. ( குறள் - 1323)

கல்வி அறிவாலும் சிறந்த பண்பாலும் புகழ் பெறாதவர்கள் புத்தேள் உலகத்தில் வாழ முடியாது. ( குறள் - 966)


மேலே கண்டவற்றில் இருந்து இந்த புத்தேள் நாட்டில் நல்ல கல்வி அறிவும் நற்பண்புகளும் நிறைந்த புகழ் பெற்ற பெரியோர்கள் வாழ்ந்தனர் என்பது பெறப்படுகிறது.

புத்தேள் நாடு எங்கிருந்தது?

இனி இந்த புத்தேள் நாடு எங்கே இருந்தது என்பதைப் பற்றிக் காணலாம். புத்தேள் நாட்டின் இருப்பினைப் பற்றி நேரடியாகக் கூறாவிட்டாலும் மறைமுகமாக சில பாடல்கள் நமக்குத் தெரிவிக்கின்றன.

செவ்வேள் பரங்குன்றம் ஆகிய திருப்பரங்குன்றம் புத்தேள் நாட்டிற்கு அருகில் இருந்தது. ( ஆதாரம்: பரிபாடல்)

ஈவாரைக் கொண்டாடி, ஏற்பாரைப் பார்த்து உவக்கும்--
சேய் மாடக் கூடலும், செவ்வேள் பரங்குன்றம்,
வாழ்வாரே வாழ்வார் எனப்படுவார்; மற்றையார்
போவார் ஆர், புத்தேள் உலகு? - பரிபாடல்

நான்மாடக் கூடல் என்று மதுரை மாநகர் போற்றப்படுவதைப் போல இந்த திருப்பரங்குன்றம் சேய்மாடக் கூடல் என்று இப்பாடலில் போற்றப்பட்டுள்ளது. இங்கு வாழ்ந்த மக்கள் பிறருக்கு உதவி செய்து அவரின் மகிழ்வைக் கண்டு தாம் மகிழும் இயல்பினர். இவர்களுக்கு புத்தேள் உலக வாழ்க்கை எளிதில் கிடைக்கும்  என்று இப் பாடல் கூறுகிறது. இதிலிருந்து புத்தேளுலகமானது இந்த திருப்பரங்குன்றத்திற்கு அருகில் தான் இருந்திருக்க வேண்டும் என்பது புலனாகிறது.

புத்தேள் உலகம் வையை ஆற்றங்கரையில் அமைந்திருந்தது. ( ஆதாரம்: மதுரைக் காஞ்சி) 

காய்சின முன்பிற் கடுங்கட் கூளியர்
ஊர்சுடு விளக்கிற் றந்த ஆயமும்
நாடுடை நல்லெயில் அணங்குடைத் தோட்டி
நாடொறும் விளங்கக் கைதொழூஉப் பழிச்சி
நாடர வந்த விழுக்கல மனைத்தும்
கங்கையம் பேரியாறு கடற்படர்ந் தாங்கு
அளந்துகடை யறியா வளங்கெழு தாரமொடு
புத்தே ளுலகம் கவினிக் காண்வர
மிக்குப்புகழ் எய்திய பெரும்பெயர் மதுரைச்
சினைதலை மணந்த சுரும்புபடு செந்தீ...

                                                 -     -மதுரைக்காஞ்சி - 700

மேற்காணும் பாடலில் புத்தேள் உலகமானது கங்கை ஆறு கடலில் கலக்கின்ற கழிமுகம் போல பல்வேறு உணவுப்பொருள் வளங்களுடன் அழகுற விளங்கியது என்று கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த புத்தேள் உலகத்தினால் மதுரை பெரும்பெயர் பெற்று விளங்கியது என்று கூறப்பட்டுள்ளது. இதிலிருந்து புத்தேள் உலகமானது மதுரையில் இருந்த வையை ஆற்றங்கரையில் அமைந்திருந்து பெரும் பொருள் வளத்தாலும் நல்ல கல்வி அறிவாலும் மதுரைக்குப் பெரும் புகழினைத் தேடித் தந்தது என்று கூறலாம்.

புத்தேள் உலகமைப்பு: 

புத்தேளுலகத்தின் அமைப்பு பற்றிய வேறு பல செய்திகள் கீழே தரப்பட்டுள்ளன.

புத்தேள் உலகில் மந்தாரப் பூஞ்சோலை இருந்தது. அதில் கிளிகள் வாழ்ந்தன. ( ஆதாரம் -திருவிளையாடல் புராணம்)

தீவினை யந்த ணாளர் சிறார்பயி றெய்வ வேதம்
நாவரு வேற்றக் கேட்டுக் கிளிகளோ நவிலும் வேற்றுப்
பூவையும் பயின்று புத்தே ளுலகுறை புதுமந் தாரக்
காவுறை கிளிகட் கெல்லாங் கசடறப் பயிற்று மன்னோ.

அந்தணாளர் ஓதிய வேத மொழிகளைக் கிளிகள் பயில, அதைக் கேட்டறிந்த பூவைகள் புத்தேலகம் வந்து அங்கிருக்கும் மந்தாரப் பூஞ்சோலையில் வசிக்கும் கிளிகளுக்கெல்லாம் கற்றுக் கொடுத்தனவாம். இதிலிருந்து புத்தேள் உலகத்தில் வேத மொழிகள் ஏதும் ஓதப்படவில்லை என்பது தெளிவாகிறது.

புத்தேள் உலகத்திற்கு மதில் இருந்தது. ( ஆதாரம்- கலித்தொகை)

ஞாலம் வறம் தீரப் பெய்யக், குணக்கு ஏர்பு
காலத்தில் தோன்றிய கொண்மூ போல், எம் முலை
பாலொடு வீங்கத் தவ நெடிது ஆயினை,
புத்தேளிர் கோட்டம் வலம் செய்து இவனொடு
புக்க வழி எல்லாம் கூறு;

மேற்காணும் பாடலானது புத்தேளிர்க் கோட்டத்தினை ஆணும் பெண்ணும் சேர்ந்து வலம் வருதலைப்  பற்றிக் கூறுகிறது. இதிலிருந்து புத்தேளிர் நாட்டிற்கு ஒரு சுற்று மதில் இருந்திருக்க வேண்டும் என்பது புலனாகிறது.

புத்தேள் உலகத்திற்கு காவலும் கட்டுப்பாடும் இருந்தது. ( ஆதாரம்- சிலப்பதிகாரம்)

பத்தினி இல்லோர் பல அறம் செய்யினும்
புத்தேள் உலகம் புகாஅர் என்பது
கேட்டும் அறிதியோ? - சிலம்பு- 22-115

ஒருவர் எவ்வளவு தான் அறங்கள் செய்திருந்தாலும் கற்புசான்ற மனைவியுடன் அல்லாமல் தனியாக புத்தேளிர் கோட்டத்திற்குள் புக முடியாது என்று மேற்காணும் பாடல் கூறுகிறது.  இதிலிருந்து புத்தேளுலகிற்குள் நுழைவதற்கு கடுமையான காவலும் கட்டுப்பாடும் இருந்தது என்பது தெளிவாகிறது.

மதுரையில் அமைந்திருந்த இந்த புத்தேள் நாடானது பாண்டிய நாட்டின் தனிப்பெரும் சிறப்பாக விளங்கியது எனலாம். பாண்டிய நாட்டில் மட்டும் தான் புத்தேள் நாடா ஏன் எங்கள் மன்னன் மாந்தரஞ் சேரல் இரும்பொறையின் சேர நாடே புத்தேள் நாட்டினைப் போலத் தானே இருக்கிறது என்று ஒரு புலவர் பாடுவதிலிருந்து இதனை அறியலாம்.

............................................................
மாந்தரஞ் சேரல் இரும்பொறை ஓம்பிய நாடே
புத்தேள் உலகத்து அற்று’ எனக் கேட்டு, வந்து
இனிது காண்டிசின்: பெரும! - புறநானூறு: 22

புத்தேள் / புத்தேளிர் - யார்?

இதுவரை புத்தேள் நாட்டின் தன்மைகள், புத்தேள் நாடு எங்கிருந்தது மற்றும் புத்தேள் உலகமைப்புப் பற்றிப் பல ஆதாரங்களுடன் கண்டோம். இனி புத்தேளிர் / புத்தேள் என்னும் சொல் குறிப்பிடும் முதன்மைப் பொருள் என்ன என்பதைப் பற்றி இங்கே காணலாம்.

இதுவரை கண்டவற்றில் இருந்து புத்தேள் நாட்டில் நல்ல கல்வி அறிவும் நற்பண்புகளும் மிக்க பெரியோர்கள் வாழ்ந்தனர் என்பதை அறிந்தோம். இவர்கள் தமது பரந்த கல்வி அறிவாலும் அனுபவ அறிவாலும் பிறருக்கு வாழ்க்கை நெறிமுறைகளை வகுத்து அதன்படி வாழ நல்வழி காட்டினர். மணமான ஆண்களும் பெண்களும் இணைந்தே சென்று இக் கோட்டத்தில் வாழ்ந்த பெரியோர்களிடத்து நல்ல வாழ்க்கைக் கல்வியையும் அறம் பற்றியும் அறிந்தனர். அறமும் கல்வியும் தழைத்தோங்கிய பொருள் வளம் மிக்க ஒரு இன்ப பூமியாக இந்த புத்தேளிர்க் கோட்டம் விளங்கியது என்றால் அது மிகையில்லை. கல்வி சான்ற ஆசிரியர்களையும் அறம் சான்ற ஆன்றோர்களையும் தனியாக ஒரு பாதுகாப்பான கோட்டத்திற்குள் வாழச் செய்ததின் மூலம் பாண்டிய மன்னர்கள் கல்விக்கும் அறத்திற்கும் கொடுத்த பெருமதிப்பினை தெற்றென விளங்கிக் கொள்ளலாம். புகழ் சான்ற பெரும்புலவர்கள் பலர் இங்கு வாழ்ந்தனர். மொத்தத்தில் இங்கு வாழ்ந்த மக்கள் பிறருக்கு எடுத்துக்காட்டாகவும் அறியாமை இருளகற்றும் ஆசிரியர்களாகவும் இருந்தனர் என்பது தெரிகிறது. எனவே,

புத்தேள் என்னும் சொல்லுக்கு 'அறியாமை இருளகற்றும் ஆசிரியன்' என்று பொதுவாக ஒரு விளக்கம் கொள்வது சாலப் பொருத்தமாய் இருக்கும். புத்தேளிர் என்பது புத்தேளின் பன்மையாகும். இச் சொல் பல ஆசிரியர்களைக் குறிக்கும்.

புத்தேள் - விரிவாக்கப் பொருட்கள்:

இவ்வாறு ஆதியில் ஆசிரியரைக் குறித்து வந்த புத்தேள் என்ற சொல் நாளடைவில் வேறு பல பொருட்களையும் குறிக்கப் பயன்படலாயிற்று. இந்த பிற பொருட்கள் எவ்வாறு கிளைத்தன என்பதைப் பற்றி இங்கே காணலாம்.

ஒரு ஆசிரியரின் முதல் கடமையானது மாணவனின் அறியாமை இருளை அகற்றி அவனிடத்து அறிவொளியை ஏற்றுவது. இது நம் எல்லோருக்கும் தெரியும். ஒரு ஆசிரியரைப் போலவே உலகத்தின் புற இருளை அகற்றி உலகோர்க்கு ஒளி தருவதால் கதிரவனையும் நாளடைவில் புத்தேள் என்று கூறலாயினர். கீழ்க்காணும் பாடல்களில் கதிரவனை புத்தேள் என்று கூறுகின்றனர்.

ஆயர் எமர் ஆனால் ஆய்த்தியேம் யாம் மிகக்;
காயாம் பூம் கண்ணிக் கரும் துவர் ஆடையை,
மேயும் நிரை முன்னர்க் கோல் ஊன்றி நின்றாய், ஓர்
ஆயனை அல்லை; பிறவோ அமரர் உள்
ஞாயிற்றுப் புத்தேள் மகன்?
அதனால் வாய்வாளேன்; - கலித்தொகை

விண்ணிடைப் பரிதிப் புத்தேள் மேலைநீர் குளிக்கும் எல்லை
அண்ணலை வணங்கிற் கோடி யானினத் தானப் பேறோம்
பண்ணவர் பரவும் பாதி யிருள்வயிற் பணியப் பெற்றால்
வண்ணவெம் புரவி மேத மகம்புரி பெரும்பே றெய்தும் - திருவிளையாடல்

சரி, கதிரவன் மட்டும் தான் உலகுக்கு ஒளி தருகிறதா? நிலவு ஒளி தருவதில்லையா? அது புத்தேள் இல்லையா? என்றால் நிலவும் ஒரு புத்தேள் தான்.ஆனால் அது ஒளி தருவதால் இல்லை. ஏனென்றால் நிலவின் ஒளியானது உலகின் இருளை முழுமையாக அகற்றுவதில்லை. கீழ்க்காணும் பாடலானது நிலவு எப்படி ஒரு புத்தேள் ஆக விளங்குகிறது என்பதை விளக்குகிறது.

........................................................
தேய்தல் உண்மையும், பெருகல் உண்மையும்,
மாய்தல் உண்மையும், பிறத்தல் உண்மையும்,
அறியா தோரையும், அறியக் காட்டித்,
திங்கட் புத்தேள் திரிதரும் உலகத்து, - புறநானூறு

இவ் உலகில் உள்ள அனைத்திற்கும் ஆக்கமும் தேய்வும் வளர்ச்சியும் அழிவும் உண்டென்னும் உண்மையினை உலகோருக்கு உணர்த்த நிலவானது தன்னைத்தானே ஒரு சான்றாகக் காட்டிக் கொண்டு திரிவதாக இப்பாடல் கூறுகிறது. இப்படி ஒரு ஆசிரியரைப் போல பணியாற்றுவதால் நிலவும் ஒரு புத்தேள் ஆயிற்று.

கதிரவனையும் நிலவையும் தொடர்ந்து தீயும் ஒரு புத்தேளாக வருகிறது. தீயை நேரடியாகப் புத்தேள் என்று எங்கும் கூறவில்லை. ஆனால் மறைமுகமாக கீழ்க்காணும் பாடலில் கூறியுள்ளனர்.

வெள்ளநீர் வறப்ப ஆதி வேதியன் ஞாலம் முன்போல்
உள்ளவாறு உதிப்ப நல்கி உம்பரோடு இம்பர் ஏனைப்
புள்ளடு விலங்கு நல்கிக் கதிர் உடல் புத்தேள் மூவர்
தள்ளரு மரபின் முன் போல் தமிழ் வேந்தர் தமையும்
தந்தான். -   திருவிளையாடல்: 2333

மேற்காணும் பாடலில் வரும் ' கதிர் உடல் புத்தேள் மூவர்' என்ற தொடரானது ஒளி தரும் உடலை உடைய கதிரவன், நிலவு மற்றும் தீயைக் குறிப்பதாகும். தீயானது வெப்பத்துடன் ஒளியையும் தரும் என்பது நாமறிந்ததே. இத் தீயினை சமைத்தல், சூடாக்குதல், விளக்கேற்றுதல் போல பல்வேறு ஆக்க வினைகளுக்கு நாம் பயன்படுத்துகிறோம். அதே சமயம் இத் தீயினை எரித்தல், உருக்குதல், ஆவியாக்குதல் போன்ற அழிவு வினைகளுக்கும் பயன்படுத்த முடியும். இப்படி தீயினால் தீமை மட்டுமில்லை; நன்மையும் உண்டு. ஆனால் தீய செயல்களோ தீமையை மட்டுமே தரும். அதனால் தான் தீவினையானது தீயை விட மிகவும் அஞ்சத்தக்கது என்று கூறுகிறார் வள்ளுவர்.

தீயவை தீய பயத்தலால தீயவை
தீயினும் அஞ்சப் படும். - 202

சரி, இந்த தீ நமக்கு என்ன உண்மையினை விளக்குகிறது?அது எப்படி புத்தேளாகிறது? என்று பார்ப்போம். தீயானது நமது அறிவிற்கு ஒப்பானது. எப்படி தீயை ஆக்கத்திற்கும் அழிவிற்கும் பயன்படுத்துகிறோமோ அதைப் போலவே நமது அறிவினையும் ஆக்க மற்றும் அழிவு வேலைகளுக்குப் பயன்படுத்த முடியும். எனவே தீயையும் சரி அறிவினையும் சரி பயன்படுத்தும்போது ஒரு கட்டுப்பாடு தேவை என்றாகிறது. இப்படி தீயானது தனது பண்பின் மூலமாக ஒரு எச்சரிக்கை உணர்வினை மனித சமுதாயத்தினருக்கு வழங்கி வழிகாட்டுவதால் தீயும் ஒரு புத்தேள் ஆகிறது.

புத்தேள் வண்டு:

கதிரவன், நிலா, தீ ஆகிய இயற்கைப் பொருட்கள் எப்படிப் புத்தேள் ஆகினர் என்பதை மேலே கண்டோம். கீழ்க்காணும் ஒரு பாடலில் ஒரு வண்டினைப் புத்தேள் என்று புலவர் கூறுகிறார். ஏன் அவ்வாறு அழைக்கிறார் என்று பார்ப்போம்.

முத்து ஏர் நகையார் வளைப்ப முகை விண்டு அலர் பூங்கொம்பர்ப்
புத்தேள் வண்டும் பெடையும் புலம்பிக் குழலில் புகுந்து
தெத்தே எனப் பாண் செய்து தீந்தேன் அருந்தும் துணையோடு
ஒத்து ஏழ் இசை பாதிக் கள் உண்ணும் பாணர் ஒத்தே.
                          - திருவிளையாடல்: 2464

ஒரு மரக்கிளையில் பூமொக்குகள் நிறைந்து இருந்தனவாம். மலராத நிலையிலிருந்த அவற்றின் மேல் சென்று இந்த வண்டுகள் ஊத அம் மொக்குகள் வாய் பிளந்து மலர்ந்தனவாம். இந் நிகழ்ச்சியினை, அறிவுக்கண் மூடி முகம் வாடியிருந்த மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கல்வி அறிவினை ஊட்டியதும் அவர்களது அகக் கண் மலர்ந்து அவர்களிடத்தில் ஒரு முகத்தெளிவு பிறக்குமே அதற்கு ஒப்பாகக் கூறுகிறார். என்ன ஒரு ஆழ்ந்த ஒப்புமை!. இங்கு புத்தேளிரைப் போலவே இந்த வண்டுகளும் ஒரு இணையாய் (ஆணும் பெண்ணுமாய்) சேர்ந்து இருப்பது குறிப்பிடத்தக்கது. இப்படி ஒரு ஆசிரியரைப் போல இந்த வண்டுகள் செயலாற்றியதால் இவற்றை புத்தேள் என்று கூறுகிறார் புலவர்.

முடிவுரை:

இயற்கைப் பொருட்களையே குறித்து வந்த புத்தேள் என்ற சொல் நாளடைவில் புராணப் பொருட்களையும் குறிக்கப் பயன்படலாயிற்று. குறிப்பாக பிரம்மதேவன் வேதங்களையும் கல்வியையும் படைத்து ஒரு குருவைப் போல பணியாற்றியதால் பிரம்மதேவனை புத்தேள் என்று பல பாடல்கள் குறிப்பிடுகின்றன.

கமலப் புத்தேள், நான்முகப் புத்தேள், பூவில் தோன்றும் புத்தேள், வான்மலர் மேலுறை புத்தேள் என்று பல்வேறு பெயர்களில் இந்த பிரம்மதேவர் குறிப்பிடப்படுகிறார். சான்றுக்கு ஒருசில பாடல்கள் மட்டும் கீழே.

புகுந்தறி வான்மலர் மேலுறை புத்தேள் - திருமந்திரம் - 397

ஒண்சுடர் அடிப்போது
ஒன்றுவிண் செலீஇ, நான்முகப் புத்தேள்
நாடுவியந் துவப்ப, - திவ்ய பிரபந்தம் - 2582

புரந்தர் ஆதிவா னவர்பதம் போதுறை புத்தேள்
பரந்த வான்பதஞ் சக்கரப் படையுடைப் பகவன்
வரந்த வாதுவார் பதமெலா நிலைகெட வருநாள்
உரந்த வாதுநின் றூழிதோ றோங்குமவ் வோங்கல் - திருவிளையாடல்.
-------------------------------- ---------------------------------

வெள்ளி, 20 ஜூலை, 2012

அறிந்தும் அறியாமலும்

குறள்:

    நோவற்க நொந்தது அறியார்க்கு மேவற்க
    மென்மை பகைவர் அகத்து.
                                 
             - எண்: 877





தற்போதைய உரைவிளக்கங்கள்:

கலைஞர் உரை: தனது துன்பத்தைப் பற்றி அதனை அறியாமல் இருக்கும் நண்பர்களிடம் சொல்லக்கூடாது. தனது பலவீனத்தைப் பகைவரிடம் வெளிப்படுத்திவிடக் கூடாது.

மு.வ உரை: துன்புற்றதைத் தாமாகவே அறியாத நண்பர்க்குத் துன்பத்தைச் சொல்லக் கூடாது, பகைவரிடத்தில் மென்மை மேற்கொள்ளக் கூடாது.

சாலமன் பாப்பையா உரை: நம் பலம் இன்மையை, தாமாக அறியாத நண்பர்களிடம் சொல்ல வேண்டா; பகைவர்களிடமோ அதைக் காட்டிக் கொள்ளவோ வேண்டா.

உரைத்தவறுகள்:

மேற்காணும் உரைகள் யாவற்றிலுமே இரண்டு கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன. இவற்றில் முதல் கருத்தில் தான் பெரும்பிழை உள்ளது. மேற்காணும் உரைகளின்படி, தனது துன்பத்தைப் பற்றி ஏதும் அறியாமல் இருக்கின்ற நண்பர்களிடத்தில் தமது துன்பத்தைப் பற்றிச் சொல்லக் கூடாது என்பது முதல் கருத்தாகும். இக்கருத்து ஏற்புடையதா என்றால் இல்லை என்றே கூறலாம். இதைப் பற்றிக் கீழே விரிவாகக் காணலாம்.

வள்ளுவர் நட்பின் பெருமையைப் பற்றிப் பல குறள்களில் கூறியுள்ளார். அவற்றுள் மிகவும் சிறப்புடைய ஒரு கருத்தினைக் கீழ்க்காணும் குறள் கூறுகின்றது.

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு. - 788

இதன் பொருளானது: அணிந்திருக்கும் ஆடை உடலைவிட்டு நழுவும்போது எப்படிக் கைகள் உடனடியாகச் செயல்பட்டு அதனைச் சரிசெய்ய உதவுகின்றனவோ அதைப்போல நண்பனுக்கு வரும் துன்பத்தைப் போக்கத் துடித்து செல்வதே நட்புக்கு இலக்கணமாகும்.

இப்படி எது நட்பு, யார் நண்பன் என்று நட்புக்கு இலக்கணம் வகுத்த வள்ளுவன், தனது துன்பத்தை அறியாத நண்பர்களிடத்தில் அதைப் பற்றிக் கூறவேண்டாம் என்று சொல்லியிருப்பாரா?. ஒருபோதும் கூறியிருக்க மாட்டார். ஏனென்றால் தனது நண்பனின் துன்பத்தை, உடுக்கை இழந்தவன் கைபோல,  அவன் கூறாமலேயே அறிந்து அவனுக்கு உதவி செய்பவனே நண்பன் ஆவான். அவ்வாறு செய்யாதவன் நண்பனே அல்லன். இதிலிருந்து நமது தலைப்புக் குறளில் வரும் முதல் கருத்தில் வள்ளுவர் நண்பனைப் பற்றியோ நட்பைப் பற்றியோ கூறவில்லை என்பது தெரிகிறது. அதுமட்டுமின்றி சொல்லுதல் அல்லது கூறுதல் என்னும் பொருளைத் தருவதான எந்த ஒரு சொல்லையும் இக் குறளில் வள்ளுவன் கூறவில்லை. அப்படி இருக்கும்போது நண்பர்களிடத்தில் 'சொல்லக்கூடாது' என்ற பொருளை இவ் உரையாசிரியர்கள் எவ்வாறு கொண்டனர் என்பது புரியாத புதிராக உள்ளது.

இக் குறளில் வரும் இரண்டாவது கருத்தை எடுத்துக் கொண்டால் அதிலும் பிழை இருப்பது தெரிகிறது. 'பகைவர்களிடத்தில் மென்மை மேவ வேண்டாம்' என்று வள்ளுவர் கூறுவதற்குப் பொருளாக, ' பகைவரிடத்து தமது பலவீனத்தைக் காட்டிக் கொள்ள வேண்டாம் ' என்று கொள்வது சற்றும் பொருத்தமற்றதாகும். ஏனென்றால் எந்த ஒரு அரசனும் அல்லது தலைவனும் தனது பலவீனத்தை பகைவரிடத்தில் காட்டிக் கொள்ள மாட்டான். தனது பலவீனத்தைக் காட்டிக் கொள்வது, தான் பகைவரிடத்தில் தோற்பதற்கு சமமாகும் என்பதை எந்த ஒரு தலைவனும் நன்கு அறிவான். எனவே இதற்கு யாரும் அறிவுரை கூறத் தேவையில்லை. இந்தத் தவறான விளக்கத்திற்குக் காரணம் இக் குறளில் வரும் மென்மை என்னும் சொல்லுக்கு பலவீனம் என்ற பொருள் கொண்டதே ஆகும்.

இச்சொல்லின் உண்மைப் பொருள் என்ன என்பதைப் பற்றியும் இக் குறள் உணர்த்தும் உண்மையான கருத்து என்ன என்பதைப் பற்றியும் கீழே விரிவாகக் காணலாம்.

திருத்தம்:

இக் குறளில் வரும் மென்மை என்ற சொல்லுக்கு பொறுமை என்ற பொருளும் நோவுதல் என்ற சொல்லிற்கு துன்புறுத்துதல் என்ற பொருளும் கொள்ளப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இக் குறளின் திருந்திய பொருள் இதுதான்:

தாமறியாமல் தமக்குத் துன்பம் செய்தவரைத் துன்புறுத்த வேண்டாம்; (தாமறிந்தே தமக்குத் துன்பம் செய்யும்) பகைவரிடத்தில் பொறுமை மேற்கொள்ளவேண்டாம்.

நிறுவுதல்:

பகைத்திறந்தெரிதல் என்னும் அதிகாரத்தில் வரும் இக் குறளில் பகைவர்களை இனம் காண்பது பற்றியும் அவர்களை எவ்வாறு நடத்த வேண்டும் என்பது பற்றியும் மிகத் தெளிவாக விளக்கி இருக்கிறார் வள்ளுவர்.

அறிந்தே துன்பம் தருபவன் பகைவன் மட்டுமே. ஆனால் சில சூழ்நிலைகளில் சிலர் தம்மை அறியாமல் பிறர்க்குத் துன்பம் விளைவித்து விடுகின்றனர். தம்மால் பிறர் துன்பத்துக்கு ஆளாகினர் என்பதைக் கூட அவர்கள் அறியாதவர்களாக இருக்கின்றனர். இந்த அப்பாவிகளைப் பகைவர்களாகக் கருதித் தண்டிக்கலாகாது என்பதே வள்ளுவரின் விருப்பமாகும்.

ஆனால் பகைவர்களை.....?  தண்டித்தே ஆக வேண்டும் என்கிறார். ஏனென்றால் பகைவர்கள் தாமறியாமல் துன்பம் செய்பவர்கள் அல்லர். தெரிந்தே துன்பம் தருகின்ற இவர்களைக் குற்றவாளிகளாகக் கருதித் தண்டிக்க வேண்டுமே ஒழிய இவர்களிடத்தில் பொறுமை மேற்கொள்ளக் கூடாது. அப்படி இவர்களிடத்தில் பொறுமை மேற்கொண்டால் என்ன ஆகும்?. இதற்கான பதிலை குறள் 879 ல் கூறுகிறார்.

இளைதாக முள்மரம் கொல்க களையுநர்
கைகொல்லும் காழ்த்த இடத்து.

இக் குறளில் பகைவர்களை முள்மரத்துடன் ஒப்பிடுகிறார். இது ஏன் என்று பார்க்கலாம். இக் குறளில் கூறப்படும் முள்மரமான சீமைக்கருவேலி மரத்திற்கு ஒரு பண்பு உண்டு. ஒரு பெரிய பகுதியின் ஒரு சிறிய இடத்தில் இதன் விதைகளைத் தூவினால் போதும். கடுமையான வறட்சியையும் தாங்கி மளமளவென வளர்ந்து பல்கிப் பெருகி ஒரு பெரிய தோப்பு போல உருவாகி பிற செடிகள் எதனையும் வளரவிடாமல் தடுத்து அந்த பகுதியையே ஆக்கிரமித்து விடும். அதுமட்டுமின்றி இந்த மரத்தை சிறிய செடியாக இருக்கும்போது மட்டுமே வெறும் கைகளால் எளிதாகக் களைய முடியும். சற்று வளர்ந்த நிலையிலும் முட்கள் தோன்றி விடுவதால் களையும்போது கையைக் கிழித்து விடும். இந்த பகைவர்களும் அப்படித்தான் என்கிறார் வள்ளுவர். பகைவர்களை துவக்கத்திலேயே அதாவது அவர்கள் பகைவர் எனக் கண்டறியப்பட்ட போதே தண்டித்துவிட வேண்டும். அவர்களைத் தண்டிப்பதில் எள்ளளவும் பொறுமையைக் கடைப்பிடிக்கலாகாது. அப்படி பொறுமை மேற்கொண்டால் அவர்கள் கையால் களையமுடியாத முள்மரத்தைப் போல வளர்ந்து பல்கிப் பெருகி முடிவில் அரசனுக்கே துன்பம் விளைவிக்கின்ற பெரும் படையாகி விடுவர் என்று எச்சரிக்கிறார் வள்ளுவர். இக்குறளில் வரும் 'இளைதாக' என்ற சொல்லில் தோன்றும் இளமைப் பொருளானது, பகைவரின் இளமைப் பருவத்தைக் குறித்து வாராமல் பகைமை உணர்வின் இளமையை அதாவது துவக்கத்தைக் குறித்தே வருகின்றது என்பது ஈண்டு குறிப்பிடத்தக்கது.

இனி இக் குறளில் வரும் நோவுதல் என்ற சொல்லிற்கு துன்புறுத்துதல் என்ற பொருள் எவ்வாறு வரும் என்பதை பற்றிக் காண்போம். நோவு என்ற பெயர்ச்சொல்லுக்கு சென்னை இணையத் தமிழ்ப்பேரகராதி கீழ்க்காணும் பொருட்களைத் தருகிறது.

நோவு nōvu , n. < நோ-. [K. M. Tu. nōvu.] 1. Pain, hurt, anguish; வலி. 2. Mental anguish; துன்பம்

இந்த நோவு என்ற பெயர்ச்சொல்லில் இருந்து நோவுதல் என்ற வினைச்சொல் பிறக்கிறது.

நோவு -----------------------------------> நோவுதல்
(துன்பம்/வலி)                   (துன்புறுத்துதல்/வலிக்கச்செய்தல்)

இந்த நோவு என்ற சொல் நோதல் என்று தன்வினைச் சொல்லாகவும் வரும்.

நோவு -------------------------------> நோதல்
(துன்பம்)                        ( துன்புறுதல்)

இனி, குறளில் வரும் சொற்களுக்குக் கீழ்க்காணுமாறு பொருள் கொள்வது சாலப் பொருந்தும். .

நோவற்க = துன்புறுத்த வேண்டாம்
நொந்தது = துன்புற்றது
அறியார்க்கு = அறியாதவரை.

இங்கே வேற்றுமை உருபு மயக்கம் வந்துள்ளது. ஐ என்ற உருபிற்கு பதிலாக கு என்ற உருபு மயங்கி வந்துள்ளது. 

மேவற்க = மேற்கொள்ள வேண்டாம்
மென்மை =பொறுமை
பகைவரகத்து = பகைவரிடத்து.

அறியாமல் செய்த பிழையினை பொறுத்துக்கொள்ள வேண்டும்;
அறிந்தே செய்யப்படும் பிழைகளுக்குத் தண்டனை வழங்க வேண்டும்.

என்று மிக இன்றியமையாத ஒரு கருத்தினை எவ்வளவு நேர்த்தியாக இக் குறளில் வள்ளுவர் கூறியிருக்கிறார் பாருங்கள்.!

வாழ்க திருக்குறள்!                                                   வளர்க தமிழ்!
============================================================

திங்கள், 18 ஜூன், 2012

வாலெயிறு ஊறிய நீர்

குறள்:

பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
வாலெயிறு ஊறிய நீர். - 1121

தற்போதைய விளக்கங்கள்:

கலைஞர் உரை: இனியமொழி பேசுகினற இவளுடைய வெண்முத்துப் பற்களிடையே சுரந்து வரும் உமிழ்நீர், பாலும் தேனும் கலந்தாற்போல் சுவை தருவதாகும்.

மு.வ உரை: மென்மையான மொழிகளைப் பேசுகின்ற இவளுடைய தூய பற்களில் ஊறிய நீர் பாலுடன் தேனைக் கலந்தாற் போன்றதாகும்.

சாலமன் பாப்பையா உரை: என்னிடம் மெல்லிதாகப் பேசும் என் மனைவியின் வெண்மையான பற்களிடையே ஊறிய நீர், பாலோடு தேனைக் கலந்த கலவை போலும்!.

பரிமேலழகர் உரை: [அஃதாவது , தலைமகன் தன் காதல் மிகுதி கூறலும் , தலைமகள் தன் காதல் மிகுதி கூறலும் ஆம் . இது , புணர்ச்சியும் நலனும் பற்றி நிகழ்வதாகலின் , புணர்ச்சி மகிழ்தல் , நலம் புனைந்து உரைத்தல்களின் பின் வைக்கப்பட்டது.]    (இயற்கைப்புணர்ச்சி இறுதிக்கண் தலைமகன் தன் நயப்பு உணர்த்தியது.) பணிமொழி வால் எயிறு ஊறிய நீர் - இம்மெல்லிய மொழியினை யுடையாளது வாலிய எயிறூறிய நீர்; பாலொடு தேன் கலந்தற்று - பாலுடனே தேனைக் கலந்த கலவை போலும். ('கலந்தற்று' என்பது விகாரமாயிற்று; கலக்கப்பட்டது என்றவாறு. 'பாலொடு தேன்' என்ற அதனால் அதன் சுவை போலுஞ் சுவையினை உடைத்து என்பதாயிற்று. 'எயிறூறிய' என இடத்து நிகழ்பொருளின் தொழில் இடத்தின்மேல் நின்றது. வேறு வேறறியப்பட்ட சுவையவாய பாலும் தேனும் கலந்துழி அக்கலவை இன்னது என்று அறியலாகாத இன்சுவைத்தாம் ஆகலின், அது பொருளாகிய நீர்க்கும் எய்துவிக்க.).

மணக்குடவர் உரை: பாலொடுகூடத் தேனைக்கலந்தாற் போலும்: மிகவும் இனிமைதரும் புகழினையுடையாளது வெள்ளிய எயிற்றினின்று ஊறிய நீர். இது புணர்ச்சியுண்மையும் காதல் மிகுதியும் தோன்றத் தலைமகன் கூறியது.

உரைத் தவறுகள்:

மேற்காணும் உரைகள் யாவற்றிலுமே ஒரே கருத்து தான் கூறப்பட்டுள்ளது. அதாவது, காதலியின் பற்களின் இடையே ஊறிய எச்சிலை உண்ட காதலன் அதை பாலும் தேனும் கலந்த கலவையைப் போல இனிப்பாக இருந்ததாகக் கூறுகின்றானாம். இக் கருத்து அறிவியலுக்கு முற்றிலும் முரணானது மட்டுமின்றி வள்ளுவரின் மாண்புக்கு இழுக்கு சேர்ப்பதாகவும் அமைந்துள்ளது. பரிமேலழகர், மணக்குடவ்ர் போன்ற பேரறிஞர்களும் உரை எழுதுகையில் இப்படி ஓர் தவறான விளக்கத்தை எவ்வாறு கொடுத்தனர் என்பது வியப்பினை மட்டுமின்றி வருத்தத்தையும் ஒருசேரத் தருகின்றது. முதலில் இவ் விளக்கங்களில் உள்ள தவறுகளைக் காணலாம்.

அறிவியல் கூற்றுப்படி, பாலூட்டிகளுக்கு உமிழ்நீரானது, மூன்று வகையான சுரப்பிகளில் இருந்து சுரக்கிறது. இதில் குறிப்பாக மனிதருக்கு, சாதாரண மனநிலையில், முக்கால்வாசி (70-75%) உமிழ்நீர் சப்-மாண்டிபுலார் சுரப்பி (2) யில் இருந்தும் கால்வாசி (20-25%) பரோடிட் சுரப்பி (1) யில் இருந்தும் சிறிய அளவில் (5-10%) சப்-லிங்குவல் சுரப்பி (3) யில் இருந்தும் சுரக்கிறது. அதுவே உணர்ச்சி வசப்பட்ட நிலையில் பரோடிட் சுரப்பியே அதிகமான உமிழ்நீரைச் சுரக்கிறது. இதுபற்றிய மேலதிக தகவல்களை விக்கிபீடியாவில் காணலாம். அருகிலுள்ள படத்தில் இந்த மூன்று சுரப்பிகளும் மனிதரின் வாய்க்குள் அமைந்துள்ள இடங்கள் காட்டப்பட்டுள்ளது.

இப் படத்தில் இருந்து எவ்விதமான குறிப்பிடத்தக்க அளவுள்ள உமிழ்நீரைச் சுரக்கும் சுரப்பிகளும் பற்களுக்கிடையிலோ பற்களின் மேலேயோ கீழேயோ இல்லை என்பது தெளிவாகிறது. உமிழ்நீர் சுரப்பிகளே இல்லாத நிலையில் காதலியின் பற்களுக்கிடையில் சுரந்து வரும் உமிழ்நீரை காதலன் உண்டதாக வள்ளுவர் எவ்வாறு கூறியிருக்க முடியும்?. ஒருவேளை வள்ளுவர் அறிவியலை அறியாமல் தவறாக எழுதி விட்டாரா?. இப்படியும் சிலர் கூறுவர். ஆனால் வள்ளுவர் குறளைத் தான் எழுதி இருக்கிறாரே ஒழிய விளக்கத்தினை எழுதவில்லை. இது அப்பட்டமாக உரையாசிரியர்கள் உரை எழுதும்போது அறிவியல் உண்மையினை ஆராயாமல் செய்த தவறாகும். இதற்கு வள்ளுவர் பொறுப்பல்ல.

அதுமட்டுமல்ல, இவ் விளக்கங்களில் இன்னொரு தவறும் இருக்கிறது. இவ் விளக்கங்கள் மிகப் பச்சையாக ஒரு முத்த நிகழ்ச்சியினை விரிப்பதாக உள்ளது. பெரும்பாலான ஆங்கிலப் படங்களில் காட்டப்படுவதைப்போல ( இப்போது தமிழ்ப் படங்களிலும் இது பரவலாகத் தலைதூக்கி இருப்பது வேறு செய்தி) காதலன் காதலியின் உதடுகளுடன் தனது உதடுகளை வைத்து அவற்றைச் சுவைத்து அப்படியே அவளது வாயில் இருந்த உமிழ்நீரை  உறிஞ்சிக் குடித்து ஆகா, என்ன சுவை! என்ன சுவை! தேனும் பாலும் கலந்து குடித்ததைப் போலல்லவா இருக்கிறது.!  என்று இறுமாப்புடன் கூறுவதாக அல்லவா இவ் உரையாசிரியர்கள் விளக்கம் கொடுத்துள்ளனர்.?. எப்படி இவர்களால் இப்படி ஒரு கண்ணியமற்ற விளக்கத்தைக் கொடுக்க முடிந்தது? இதற்கு இயற்கைப் புணர்ச்சி என்று சப்பைக்கட்டு வேறு. இப்படி ஒரு முத்த நிகழ்ச்சியினை வள்ளுவர் இங்கே கூற வேண்டிய அவசியமேயில்லை. அதுவும் காதலின் சிறப்பினைக் கூறுகின்ற இந்த அதிகாரத்தின் முதல் பாடலிலேயே இப்படித்தான் காமரசம் சொட்டச்சொட்ட வள்ளுவர் கூறுவாரா?. ஒருபோதும் மாட்டார். என்ன இருந்தாலும் இப்படி ஒரு பண்பில்லாத கருத்தினைக் கூறி வள்ளுவரின் மாண்புக்கு இவ் உரையாசிரியர்கள் வேட்டு வைத்திருக்கக் கூடாது. :(((

இத்தகைய தவறான உரை விளக்கங்கள் உருவாகக் காரணம் நமது உரையாசிரியர்களிடையே ஒரு முறையான உரைக்கொள்கை இல்லாமல் போனது தான். முறையான உரைக்கொள்கை என்பது எவ்வாறு இருக்கும் என்பதைப் பற்றிக் கீழே காணலாம்.

திருக்குறள் உரைக்கொள்கை:

எந்த ஒரு இலக்கியத்திற்கும் உரைசெய்யப் புகும்முன்னர் அந்த நூலுக்கு ஒரு உரைக்கொள்கை வகுத்தாக வேண்டும். இந்த உரைக்கொள்கையானது அந்த இலக்கியத்தை இயற்றிய நூலாசிரியரைப் பொருத்து அமைவதாகும். நூலாசிரியரின் கல்வி அறிவு, பரந்த அனுபவ அறிவு, .பொது நோக்கு, கண்ணியம், பொதுநலன் போன்ற பல பண்புகளின் அடிப்படையில் இந்த உரைக்கொள்கையானது வகுக்கப்படும். அவ்வகையில், திருக்குறளுக்கு உரைசெய்யும் முன்னர், வகுக்கப்பட வேண்டிய உரைக்கொள்கையானது கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

திருக்குறள் உலகப்பொதுமறை என்று சான்றோர்களால் போற்றப்பட்டுள்ளது. எனவே இந் நூலாசிரியரான திருவள்ளுவர் பொதுநோக்கு உடையவர்; ஒரு சான்றோரும் ஆவார்.
இவரது திருக்குறளில் சமய, இன, மத, சாதி வேறுபாடுகள் கொண்ட கருத்துக்கள் இருக்காது.
இவரது குறள்கள் பொதுநலம் விரும்புவதாக இருக்கும்.
இவரது பாடல்களில் கண்ணியக் குறைவு இருக்காது.
இவரது பாடல்களில் இவரது பரந்துபட்ட அனுபவ அறிவு மிளிருமே அல்லால் கற்பனைகளைக் காண முடியாது.
இவரது கல்விப் புலமைக்கு இவரது பாடல்களே நற்சான்றுகளாக அமையும்.
எந்த சூழ்நிலையிலும் இவரது சான்றாண்மைக்கு இழுக்கு ஏற்படும் வண்ணம் கருத்துக்கள் கூறப்பட்டிருக்காது.


இப்படி ஒரு உரைக்கொள்கையினை வகுத்த பின்னர் திருக்குறளுக்கு உரைசெய்ய முனைவதே சரியான விளக்கங்களைத் தருவதாக அமையும். சரி, குறளுக்கு உரை செய்யும்பொழுது, ஏதேனும் ஓர் இடத்தில், உரைக்கொள்கையுடன் ஒவ்வாத கருத்துக்கள் இருப்பதாகத் தெரிந்தால் என்ன செய்வது?.

மீண்டும் உரைக்கொள்கையின் கடைசி வரியை நோக்கவும். இதுவே உரைசெய்வோருக்கு வழிகாட்டியாகும். உரைக்கொள்கையுடன் ஒவ்வாத வகையில் கருத்துக்கள் தோன்றுமானால், குறளில் பிழைகள் இருக்கலாம் என்பது பெற்றியாம். அது எழுத்துப் பிழையாகவோ, சொற்பிழையாகவோ, பொருள் பிழையாகவோ இருக்கலாம். முறையான ஆய்வின் மூலம் அப்பிழையினைக் கண்டறிந்து அப் பிழைக்கேற்ற சரியான திருத்தத்தினைச் செய்யப் பரிந்துரைப்பதும் உரையாசிரியரின் கடமையாகும். திருத்தம் செய்த பின்னர் கிடைக்கின்ற புதிய உரையானது, உரைக்கொள்கைக்கு ஏற்ற வகையில் அமைந்திருக்க வேண்டும் என்பது இன்றியமையாத விதியாகும்.

இனி, மேலே கூறப்பட்டுள்ள உரைக்கொள்கையின் படி, இக்குறளுக்கான புதிய விளக்கம் அதாவது திருந்திய பொருள் என்னெவென்று காணலாம்.

திருந்திய பொருள்:

இக் குறளில் வரும் எயிறு என்னும் சொல்லுக்கு கடைக்கண் என்பது பொருளாகும். இதன் அடிப்படையில், இக் குறளுக்கான புதிய விளக்கம் இதுதான்:

குறைவாகவே பேசும் எனது காதலியின் வெண்ணிற கடைக்கண்ணில் ஊறிய கண்ணீர்த் துளியானது, பாலுடன் கலந்த தேன் போல எனக்குள் இனிமை பயவாநின்றது.

நிறுவுதல்:

எயிறு என்ற சொல்லானது கண் மற்றும் கடைக்கண்ணையும் குறிக்கும் என்று எயிறு என்றால் என்ன? என்ற ஆய்வுக் கட்டுரையில் முன்னரே ஆதாரங்களுடன் கண்டுள்ளோம். இக்குறளிலும் கடைக்கண் என்ற பொருளில் தான் வள்ளுவர் பயன்படுத்தியுள்ளார். இனி, இக் குறளுக்கான புதிய விளக்கத்தினைப் பற்றி விரிவாகக் காணலாம்.

காதற் சிறப்புரைத்தல் என்னும் இந்த அதிகாரத்தில் வரும் பத்து குறள்களில் முதல் ஐந்து குறள்கள் காதலனால் கூறப்படுவதாகவும் பின் ஐந்து குறள்கள் காதலியால் கூறப்படுவதாகவும் அமைக்கப்பட்டுள்ளது. காதலனும் காதலியும் ஏதோ காரணத்தால் சில நாட்கள் பிரிந்துள்ளனர். மீண்டும் இவர்கள் இருவரும் ஒருவரையொருவர் சந்திக்கும் போது அவர்களுக்கிடையிலான காதல் எவ்வாறு வெளிப்பட்டது என்பதை விளக்கும் விதமாக இந்த முதல் குறள் அமைந்துள்ளது.

பிரிந்திருந்த காதலனைக் கண்முன்னர் கண்டதும் காதலியின் மனம் மகிழ்ச்சி பொங்குகிறது. உள்ளத்தில் உண்டாகிய உணர்ச்சிகளை வெளியே காட்டாமல் மறைக்க முயல்கிறாள். ஆனால் அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்?. அவளால் தனது உணர்ச்சிகளை மறைக்க முடியவில்லை. ஆர்வலர் புன்கணீர் பூசல் தருவதன்றோ?. இறுதியில் அவளது கண்ணீர் அவளது காதலை வெளிப்படுத்தி விட்டது. எப்போதுமே நாணத்தால் மிகக் குறைவாகப் பேசுகின்ற தனது காதலியின் கடைக்கண்ணில் நீர் துளிர்ப்பதை காதலன் கண்ணுறுகிறான். அவள் தன்மேல் கொண்டுள்ள அளவில்லாத காதலை அறிந்து மகிழ்கிறான். அவளது காதலின் சிறப்பினைப் போற்றும் விதமாகவும் அவளைப் பிரிந்து சென்று துன்பத்துக்கு உள்ளாக்கியதற்காக அவளைச் சமாதானப் படுத்தும் விதமாகவும் அவளது கண் அழகினைப் புகழ்ந்து பாடுகிறான்.

மகிழ்ச்சியின் காரணமாய் காதலியின் கடைக்கண்ணில் ஊறிய கண்ணீர்த் துளியானது, பாலுடன் கலந்த தேன் துளியைப் போல காதலனுக்கு இனிமை தருகிறதாம். இதைப்பற்றி விரிவாக எயிறு என்றால் என்ன என்ற கட்டுரையில் சொல்லப்பட்டு இருந்தாலும் இங்கேயும் அதைப்பற்றிச் சுருக்கமாகக் காணலாம். பொதுவாக, மாந்தரின் கண்ணீர் லேசான உப்புச் சுவை உடையது என்பது உலகறிந்த உண்மை. ஆனால் காதலியின் கடைக்கண்ணீர் மட்டும் இனிய அமிர்தம் போன்ற சுவை உடையதாக இத் திருக்குறள் உட்பட பல இலக்கியப் பாடல்கள் கூறுகின்றன. இது எங்ஙனம் என்றால், துயர மிகுதியால் நாம் அழும்போது கண்ணீரானது கண்ணின் முன்பகுதியில் தோன்றுவதையும் அது உப்புக்கரிப்பதையும் மகிழ்ச்சியின் போதும் சிரிக்கும்போதும் கண்ணீரானது கடைக்கண்ணில் தோன்றுவதையும் அது உப்பின்றி இனிப்பதையும் அறிவோம். பிரிந்துசென்ற காதலரை மறுபடியும் கண்டு மகிழ்ச்சியடைந்த காதலியின் கடைக்கண்ணில் ஊறிய கண்ணீரானது பாலும் தேனும் கலந்த கலவையினைப் போலக் காதலனுக்கு மகிழ்ச்சியும் இன்பமும் தருவதாக வள்ளுவர் கூறுவதற்கு இதுவே அடிப்படையாகும்.

இக் குறளில் வரும் எயிறு என்பது காதலியின் கண்ணையே அன்றி அவளது பல்லைக் குறித்து வரவில்லை என்பதற்கு அந்த அதிகாரத்தில் வரும் ஏனைக் குறள்களே போதுமான சான்றாகும். காதல் சிறப்புரைத்தல் என்ற இந்த அதிகாரத்தில் மொத்தமுள்ள 10 குறள்களில் 1121, 1123, 1125, 1126, 1127, 1129 ஆகிய 6 குறள்களிலும் காதலியின் கண்ணைப் பற்றியே கூறியிருக்கிறார். மீதமுள்ள இரண்டு பாடல்களில் உயிர் பற்றியும் இரண்டில் உள்ளம் பற்றியும் கூறியிருக்கிறார். அதுமட்டுமின்றி, காதலின் சிறப்பினைக் கூறுவதான இந்த அதிகாரத்தில் காதலியின் பல்லில் ஊறும் எச்சில் பற்றிக் குறிப்பிட வேண்டிய தேவை என்ன?. எயிறு என்ற சொல்லுக்குப் பல் என்ற பொருள் மட்டுமின்றி கண் என்ற பொருளுமுண்டு என்று தெரிந்திருந்தால், அகராதிகளோ நிகண்டுகளோ கூறியிருந்தால், எந்த உரையாசிரியரும் இதுபோல தவறான உரை விளக்கம் எழுதியிருக்க மாட்டார்கள் என்பது உறுதி.

சங்க இலக்கியத்தில் வாலெயிறு ஊறிய நீர்:

திருக்குறளில் 'வாலெயிறு ஊறிய நீர்' என்று வள்ளுவர் கூறுவதைப் போலவே சங்க இலக்கியத்திலும் 'வாலெயிறு ஊறிய நீர்' என்ற சொல்லாடல் வருகிறது. வாலெயிறு ஊறிய நீர் என்பது பற்களில் ஊறிய எச்சில் நீரைக் குறிக்காது என்பதற்குக் கீழ்க்காணும் அகநானூற்றுப் பாடலை ஒரு அருமையான சான்றாகக் கொள்ளலாம்.

புன்காற் பாதிரி அரிநிறத் திரள்வீ
நுண்கொடி அதிரலொடு நுணங்கறல் வரிப்ப,
அரவுஎயிற்று அன்ன அரும்புமுதிர் குரவின்
தேன்இமிர் நறுஞ்சினைத் தென்றல் போழக்,
குயில்குரல் கற்ற வேனிலும் துயில்துறந்து   
இன்னா கழியும் கங்குல்' என்றுநின்
நல்மா மேனி அணிநலம் புலம்ப,
இனைதல் ஆன்றிசின் ஆயிழை! கனைதிறல்
செந்தீ அணங்கிய செழுநிணக் கொழுங்குறை
மென்தினை புன்கம் உதிர்த்த மண்டையொடு,   
இருங்கதிர் அலமரும் கழனிக் கரும்பின்
விளைகழை பிழிந்த அம்தீஞ் சேற்றொடு,
பால்பெய் செந்நெற் பாசவல் பகுக்கும்
புனல்பொரு புதவின் உறந்தை எய்தினும்,
வினை பொருளாகத் தவிரலர் கடைசிவந்து   
ஐய அமர்த்த உண்கண்நின்
வைஏர் வால்எயிறு ஊறிய நீரே!     - அகம். 237.

இப்பாடலில் வரும் ' துயில் துறந்து இன்னா கழியும் கங்குல் என்று நின் நல்மா மேனி அணிநலம் புலம்ப, கடை சிவந்து ஐய அமர்த்த உண்கண் நின் வைஏர் வால்எயிறு ஊறிய நீரே! இனைதல் ஆன்றிசின் ஆயிழை ! ' என்ற வரிகள் தலைவியின் துயர நிலையினை அப்பட்டமாக விளக்கி நிற்கின்றன. தலைவன் வாராமையால் அவனை எதிர்பார்த்து இரவெல்லாம் உறக்கமின்றிக் கழிய, சோர்வடைந்த கண்ணிமைகளுடன் அழுகின்ற நிலையில் இருக்கின்ற தலைவியைப் பார்த்து அவளது தோழியானவள் ' கடைக்கண் ஈற்றில் பூசிய சிவந்த வரிகளுடன் அழகாகத் தோன்றுகின்ற மையுண்ட கண்களை உடையவளே ! உனது வெண்ணிற விழிகளில் நீர் பெருகுகிறது; அழவேண்டாம்; அவர் உடனே வந்துவிடுவார் ' என்று ஆறுதல் கூறுகிறாள்.

இப்பாடலில் வரும் ' வாலெயிறு ஊறிய நீர் ' என்பதற்கு ' வெண்ணிற விழிகளில் பெருகிய நீர் ' என்பதே மிகப் பொருத்தமான பொருளாகும். மாறாக, பற்களில் ஊறிய எச்சில் நீர் என்று பொருள் கொள்ளலாமா என்றால் கூடாது. காரணம், தலைவியின் துயரநிலை. ஆனால் இரண்டாவது பொருளில் தான் உரை விளக்கம் எழுதி உள்ளனர். அதாவது, அழுதுகொண்டிருக்கும் தலைவியைப் பார்த்து ' உனது பற்களில் ஊறுகின்ற எச்சிலைப் பருகுவதற்காகவேனும் உனது கணவன் ஓடோடி வந்துவிடுவான். நீ அழவேண்டாம். ' என்று உரை கூறியுள்ளனர். என்ன ஒரு விளக்கம் பாருங்கள்.! தலைவன் தலைவியின் வாயுடன் வாய்வைத்து அவளது எச்சிலை உண்கின்ற செய்தி அவளது தோழிக்கு எப்படித் தெரியுமோ புரியவில்லை.!! எந்தச் சூழலில் எப்படிப் பேசவேண்டும்?. எதைப் பற்றிப் பேசவேண்டும்? என்ற வரைமுறையே இல்லாமல் இப்படியெல்லாம் பேசியதாகக் கூறினால் பழந்தமிழரின் பண்பாடு நாறிப்போகுமே என்ற நினைப்பின்றி உரை எழுதி இருப்பதனை நினைத்து வருத்தமே மேலிடுகிறது.!!!

வாழ்க தமிழ்!                                                                        வளர்க குறள்!

புதன், 13 ஜூன், 2012

பெற்ற மனம் பித்து

பழமொழி:

பெற்ற மனம் பித்து; பிள்ளை மனம் கல்லு.

தற்போதைய கருத்து:

மேற்காணும் பழமொழிக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் ஒரே கருத்து இதுதான்:

பிள்ளைகளைப் பெற்றெடுத்து வளர்க்கும் பெற்றோரின் மனமோ பிள்ளைகளின் மேல் பாசப்பித்தாய் இருக்கிறது. ஆனால் பிள்ளைகளின் மனமோ பெற்றோரின் மேல் எள்ளளவும் பாசமின்றி கல்போல உள்ளது.

இன்னொரு கோணம்:

இப் பழமொழிக்குக் கூறப்பட்டு வரும் மேற்கண்ட கருத்தினை முழுதாக ஏற்க இயலவில்லை. அதற்கான காரணங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் இப் பழமொழிக்கு இன்னொரு கோணம் இருக்குமா என்பதைப் பற்றிய ஆய்வும் இக் கட்டுரையில் செய்யப்பட்டுள்ளது.

பொதுவாக திருமண உறவில் ஈடுபடும் அனைத்துப் பிரிவு மக்களுக்கும் பிள்ளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆவல் இருப்பதில் வியப்பில்லை. ஏனென்றால் இது இயற்கையின் உந்துதல். பிள்ளைப் பேற்றின் சிறப்பினைப் பற்றித் திருக்குறளில் புதல்வரைப் பெறுதல் என்னும் அதிகாரத்தில் கீழ்க்காணுமாறு கூறுகிறார் வள்ளுவர்.

அறியவேண்டுவனவற்றை அறியும் அறிவு படைத்த பிள்ளைச் செல்வத்தைத் தவிர மற்றவற்றை ஒருவன் பெறும் நன்மையாக நான் எண்ணுவதில்லை. ( குறள் - 61)

தம்முடைய மக்களின் சிறு கைகளால் அளாவப்பெற்ற உணவு, பெற்றோர்க்கு அமிழ்தத்தை விட மிக்க இனிமை உடையதாகும். ( குறள் - 64)

மக்களின் உடம்பைத் தொடுதல் உடம்பிற்கு இன்பம் தருவதாகும்: அம் மக்களின் மழலைச் சொற்களைக் கேட்டால் செவிக்கு இன்பம் தருவதாகும். ( குறள் - 65)

பெற்ற பிள்ளைகள் பேசும் பொருளற்ற மழலைச் சொல்லைக் கேட்காதவர்தாம், குழலும் யாழும் கேட்க இனியவை என்பர். ( குறள் - 66)

இப்படியெல்லாம் பெருமையாகப் பேசப்படும் பிள்ளைச் செல்வங்கள் வளர்ந்து பெரியவர்களாக ஆனதும் பெற்ற தாய் தந்தையரின் மேல் சிறிதும் அக்கறையின்றி கல்நெஞ்சத்துடன் நடந்து கொள்வதாக இப் பழமொழிக்குப் பொருள் கூறப்பட்டுள்ளது.

பிள்ளைகளின் மேல் இடப்படும் இந்தக் குற்றச்சாட்டு உண்மை தானா என்று பார்ப்பதைவிட இப்படி குற்றம் சாட்டுவது முறைதானா என்று முதலில் பார்க்க வேண்டும்.  ஆம், பிள்ளைகள் ஏன் பெற்றோரிடம் பாசமில்லாமல் நடந்து கொள்கின்றனர்?. அவர்கள் எந்த சூழ்நிலையில் அப்படி நடந்து கொள்கின்றனர்? என்பதையும் அலசிப் பார்க்க வேண்டும். தவறு யார் மீது இருக்கிறது என்று ஆராயாமலே பொத்தாம்பொதுவாக இப்படிப் பிள்ளைகளின் மேல் மட்டும் குற்றம் சுமத்துவது சரியல்ல.

பல குடும்பங்களில் பெற்றோர் பிள்ளைகளுக்கு அன்பை ஊட்டி வளர்ப்பதில்லை. பிள்ளைகள் கேட்கும் பணத்தைக் கொடுத்து விட்டால் மட்டும் அது அன்பாகி விடாது. அன்பு என்பது என்ன என்று சரியான முறையில் புரியுமாறு குழந்தைகள் வளர்க்கப் பட்டிருந்தால் எந்தப் பிள்ளையும் பாசமின்றி இருக்காது.

மேலும் திருமணத்திற்குப் பின்னர் சில பிள்ளைகள் குறிப்பாக ஆண் பிள்ளைகள், தமது மனைவியின் கட்டளைப்படியோ, இல்லற சுமையினைத் தாங்க முடியாமலோ பிற காரணங்களாலோ பெற்றோரைக் கவனிக்காமல் /கவனிக்க முடியாமல் இருந்து விடுகின்றனர். காரணம் எதுவாயினும் பெற்றோரைப் பிள்ளைகள் கவனிக்காமல் இருப்பது தவறுதான். ஆசையுடன் பெற்றுப் பாசத்துடன் வளர்த்து ஆளாக்கிய  பெற்றோரின் கடைசிக் காலத்தில் பிள்ளைகள் ஓர் ஆதரவாய் இல்லாவிட்டால் அந்தக் கொடுமையினை பெற்றோரால் தாங்க முடியாது. தன்னால் முடிந்த அளவுக்கேனும் பெற்றோருக்கு ஓர் உதவியாய் இருக்க வேண்டியது பிள்ளைகளின் கடமையாகும்.

பிள்ளையின் கடமைகள்:

புதல்வரைப் பெறுதல் எனும் அதிகாரத்தில் பிள்ளைகளின் குறிப்பாக ஆண் பிள்ளையின் கடமை பற்றிக் கீழ்க்காணும் குறளில் கூறுகிறார் வள்ளுவர்.

மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல். - 70

அதாவது, மகன் தன் தந்தைக்குச் செய்யத் தக்க உதவி, இவன் தந்தை இவனை மகனாகப் பெற என்ன தவம் செய்தானோ என்று பிறர் புகழ்ந்து சொல்லும் சொல்லாகும்.

இக் குறளில் வள்ளுவர் கடமை என்று கூறாமல் உதவி என்ற சொல்லைக் கையாண்டுள்ளதைக் கவனிக்கவும். உதவி என்பது கடமையைப்போல கட்டாயமானதல்ல. விருப்பப்பட்டால் செய்யலாம். இருந்தாலும் ஒரு மகன் தன் தந்தைக்குப் புகழ் தேடித் தருகிறானோ இல்லையோ அவரது நற்பெயருக்கு எவ்விதத்திலும் களங்கத்தை ஏற்படுத்தி விடக் கூடாது என்னும் கருத்தினையே இக் குறள் இங்கே வலியுறுத்துவதாகக் கொள்ளலாம்.  அதேபோல ஒரு மகன் தனது தாய்க்குச் செய்கின்ற ஒரு கடமையாகக் கீழ்க் காணும் குறளைக் கூறுகிறார் வள்ளுவர்.

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய். - 69

அதாவது, தன் மகனை நற்பண்பு நிறைந்தவன் என பிறர் சொல்லக் கேள்வியுற்ற தாய், தான் அவனை பெற்றக் காலத்தில் உற்ற மகிழ்ச்சியை விடப் பெரிதும் மகிழ்வாள்.

இதிலிருந்து தனது தாய்க்கு இப்படிப்பட்ட ஒரு மகிழ்ச்சியை அளிக்க வேண்டியதும் ஒரு மகனின் கடமை என்ற கருத்தினை மறைமுகமாக உணர வைக்கிறார் வள்ளுவர்.

பெற்றோரின் கடமை:

பிள்ளைகளுக்கு மட்டுமல்ல, பெற்றோருக்கும் குறிப்பாகத் தந்தைக்கும் கடமை ஒன்று இருப்பதாகக் கீழ்க்காணும் குறளில் கூறுகிறார் வள்ளுவர்.

தந்தை மகற்காற்று நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல். - குறள் - 67.

அதாவது, தந்தை தன் மகனுக்குச் செய்யத்தக்க கடமை, கற்றவர் கூட்டத்தில் தன் மகன் முந்தியிருக்கும்படியாக அவனைக் கல்வியில் மேம்படச் செய்தலாகும்.

இங்கே நன்றி என்ற சொல்லை கடமை என்ற பொருளில் கூறுகிறார் வள்ளுவர். பிள்ளைகளைப் பெற்று விட்டால் மட்டும் போதாது; அவர்களுக்கு நல்ல ஆசானாய் இருந்து கல்வியைத் தந்து நல்வழியைக் காட்டிநின்று அவர்களைக் கற்றவர்களின் அவையில் முதல்வனாக விளங்கச் செய்ய வேண்டியது தந்தையின் கடமை என்று கூறுகிறார் வள்ளுவர். ஆனால் இன்று எத்தனை தந்தையர் அவ்வாறு நடந்து கொள்கின்றனர்.?. குழந்தையின் பிறப்புக்குக் காரணமாய் இருப்பதோடு சரி, அதன்பின் அக் குழந்தையின் வளர்ச்சி மற்றும் எதிர்காலத்தைப் பற்றிச் சிறிதும் கவலையில்லாமல் திரிகின்ற தந்தையர் பலர் இச் சமுதாயத்தில் இருப்பதைப் பார்க்கிறோம். இப்படிப் பல குழந்தைகள் தந்தையின் கவனிப்பின்றியும் சரியான பாதை காட்டப்படாமலும் வளர்க்கப்படுவதால் தறுதலைகளாகச் சமுதாயத்தில் உருவெடுத்து வருவதை நாம் இன்றும் கண்கூடாகப் பார்க்கலாம்.

இப்படிப்பட்ட தந்தையின் நிலையையும் அவரது மனைவியின் நிலையையும் காணும் போது பசுவும் காளையும் தான் நினைவுக்கு வருகிறது. 

பசுவும் காளையும்:

பசுவின் குணம் பற்றியும் காளையின் குணம் பற்றியும் ஏற்கெனவே நமது திருக்குறளில் தெய்வம் மற்றும் திருக்குறள் காட்டும் தேவர் யார்? என்ற ஆய்வுக் கட்டுரைகளில் கண்டுள்ளோம்.

பொதுவாக, பசு, காளை மற்றும் கன்று அடங்கிய ஒரு பசுவின் குடும்பத்தில் பசு தாயாக இருந்து தனது கன்றின் மேல் பாசம் காட்டி பாலூட்டி வளர்க்கிறது. தனது கன்றுக்கொரு துன்பம் வந்தால் அத் துயரத்தினைத் தாங்க மாட்டாமல் கண்ணீர் வடித்து அழுகிறது; உதவிக்கு அழைத்துக் கதறுகிறது. ஆனால் அந்தக் கன்றின் மேல் எந்தவித அக்கறையுமின்றி காளைமாடு திரிகிறது. அந்தக் கன்றின் பிறப்புக்குத் தானே தந்தையாய் இருந்தும் அந்தக் கன்றின் மீது ஒரு பற்றுதலும் இல்லாமல் கல்நெஞ்சம் கொண்டவரைப் போல வாழ்கிறது காளைமாடு. இந்தப் பசுவின் மனநிலையையும் காளையின் மனநிலையையும் பற்றிக் கூறுவதாக அமைவதே நமது தலைப்புப் பழமொழியாகும். இது எவ்வாறு என்று கீழே காணலாம்.

பழமொழியின் வடிவமும் பொருளும்:

பழமொழிகள் வாய்மொழி வழியாக பல்லாண்டு காலம் வழங்கப்பட்டு பின்னர் எழுத்தில் இடம்பெற்றன. அப்படி எழுதப்பட்ட பொழுது பல எழுத்துப் பிழைகளால் பொருள் தவறுகள் நேர்ந்துள்ளதை நாம் இதற்கு முன்னர் பல பழமொழி ஆய்வுக் கட்டுரைகளில் கண்டுள்ளோம். அப்படி ஒரு எழுத்துப் பிழையே இப் பழமொழியிலும் பொருள் மாறுபாடு உண்டாகக் காரணமாகி விட்டது.

நமது தலைப்புப் பழமொழியின் உண்மையான வடிவம் கீழ்க்காணுமாறு இருப்பதாகும்.

பெற்ற மனம் பித்து; புல்ல மனம் கல்லு.

இதில் வரும் பெற்றம் என்பது பசுவையும் புல்லம் என்பது காளையையும் குறிக்கும் என்று அகராதிகள் கூறுகின்றன. அவ்வகையில்,

பெற்ற மனம் = பெற்றத்தின் மனம் அதாவது பசுவின் மனம் ஆகும்.

புல்ல மனம் = புல்லத்தின் மனம் அதாவது காளையின் மனம் ஆகும்.

புல்ல என்பது லகர ளகர குழப்பத்தால் புள்ள என்று  உருமாறி பின் தூய தமிழாக உருவெடுக்கும்போது பிள்ளை என்று மாறிவிட்டது. இதன் வரலாறு கீழே காட்டப்பட்டுள்ளது.

புல்ல ---> புள்ள -----> பிள்ளை

இனி, பழமொழியின் உண்மைப் பொருள் இதுதான்:  
பசுவின் மனம் (கன்றின் மேல்) பாசத்தால் பித்தாக இருக்கிறது; காளையின் மனமோ ( கன்றின் மேல்) பாசமின்றிக் கல்லாக இருக்கிறது.

பசுவுக்கும் காளைக்கும் இயற்கையாக அமைந்த இந்த இருவிதமான மனநிலைகளையே இப் பழமொழி வாயிலாக நம் முன்னோர்கள் கூறியுள்ளதாகத் தெரிகிறது. காளையின் இயற்கைக் குணத்தினை மாற்ற இயலாது. ஆனால் மனிதன் நினைத்தால் மாறலாம்; தன் கீழான குணத்தினை மாற்றிக் கொண்டு அன்பு காட்டலாம். அப்படி அன்பு காட்டாத கல்நெஞ்சம் கொண்ட தந்தையரை காளைக்கும் பாசத்தினால் பித்துகொண்டு அன்புகாட்டி உருகும் அன்னையரை பசுவிற்கும் உவமையாக கூறி, இந்தக் காளைகளைப் போல தந்தையர் இருக்கக் கூடாது என்ற நற்கருத்தினை வலியுறுத்துவதாக அமைகிறது இப்பழமொழி. இதுவே இப்பழமொழியின் இன்னொரு கோணம் ஆகும்.
====================== வாழ்க தமிழ்!==============

சனி, 26 மே, 2012

அவியுணவின் ஆன்றோர் யார்?

குறள்:

செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின்
ஆன்றாரோ டொப்பர் நிலத்து.
                                                       - 413

தற்போதைய பொருள்:

கலைஞர் உரை: குறைந்த உணவருந்தி நிறைந்த அறிவுடன் விளங்கும் ஆன்றோர்க்கு ஒப்பாகக் கேள்வி ஞானம் எனும் செவியுணவு அருந்துவோர் எண்ணப்படுவர்.
மு.வ உரை: கற்றவரின் செவியுணவாகிய கேள்வி உடையவர் நிலத்தில் வாழ்கின்றவரே ஆயினும் அவி உணவைக் கொள்ளும் தேவரோடு ஒப்பாவார்.
சாலமன் பாப்பையா உரை: செவி உணவாகிய கேள்வியைப் பெற்றிருப்பவர் இப்பூமியில் வாழ்பவரே என்றாலும், வேள்வித் தீயில் கொடுக்கப்படும் நெய் முதலிய உணவைப் பெறும் விண்ணுலகத் தேவர்க்குச் சமமாவர்.

உரைத் தவறுகள்:

மேற்காணும் உரைகளில் கலைஞர், வழக்கம் போல, குறளில் இல்லாத சொற்களைக் கொண்டு விளக்கம் கூறி இருப்பதால் அவ் விளக்கத்தினை உண்மை விளக்கமாகக் கொள்ள முடியவில்லை. இனி மற்ற இரண்டு விளக்கங்களைப் பார்ப்போம்.

மு.வ.வும் சரி, சாலமன் பாப்பையாவும் சரி, இருவருமே 'அவியுணவின் ஆன்றோர்' என்னும் சொல்லுக்கு 'விண்ணுலகத் தேவர்கள்' என்ற பொருளைக் கொள்கின்றனர். இச் சொல்லுக்கு இப் பொருள் பொருந்துமா என்றால் பொருந்தாது. ஏனென்றால் தேவர்கள் என்று ஒரு சாரார் இருப்பதை வள்ளுவர் எந்த குறளிலும் கூறவில்லை. இந்த உண்மையினை பல குறள்களின் வாயிலாக நாம் கண்டுள்ளோம். தேவர்கள் என்னும் கற்பனைப் படைப்பினைப் பற்றி இதுகாறும் ஒரு இடத்திலும் கூறாத வள்ளுவர் இக் குறளில் மட்டும் கூறி இருக்க முடியுமா?. முடியாது. ஏனென்றால் வள்ளுவர் ஒரு கற்பனாவாதி அல்ல. இதை நாம் பல குறள்களின் வாயிலாகக் கண்டுள்ளோம். எனவே இக்குறளில் வரும் அவியுணவின் ஆன்றோர் என்பது யாக குண்டத்தில் இடப்படும் உணவினைக் கொள்ளும் தேவர்களைக் குறிக்காது என்பது தெளிவு.

இதை இன்னொரு கோணத்தில் இருந்தும் பார்க்கலாம். செவிச்செல்வமாகிய கேள்வி ஞானத்தினை உடையோரும் வானுலகத் தேவர்களும் எவ்வாறு ஒப்பாக முடிய்ம்?. வானுலகத் தேவர்களோ நினைத்த செயலை நினைத்த கணத்தில் முடிக்கும் வல்லமை பெற்றவர்களாம். நினைத்த உருவினை நினைத்த பொழுதே அடையும் திறன் பெற்றவர்களாம். இவர்களுக்கு தூரம் என்பது ஒரு பொருட்டே அல்ல. விரும்பிய இடத்தில் விரும்பிய கணத்தில் இருப்பார்களாம். இப்படி தேவர்களிடத்தில் இருப்பதான எந்த ஒரு திறமையும் மண்ணில் வாழும் மனிதர்களிடத்தில் இல்லையே. கேள்வி ஞானம் பெற்றுவிட்டால் மட்டும் தேவர்களின் திறமைகளை ஒருவர் பெற்று விட முடியுமா?. முடியாது அல்லவா?. ஆக, இக் குறளில் வரும் அவியுணவின் ஆன்றோர் என்ற சொல்லுக்கு தேவர்கள் என்ற பொருளைக் கொண்டால் அது முழுக்க முழுக்கக் கற்பனையாக அமைவதுடன் குறளின் பொருளும் பொருத்தமாக அமையவில்லை. எனவே இந்த இரண்டு உரைகளும் தவறானவையாகக் கொள்ளப்படுகிறது.

என்றால் இக் குறளில் வரும் அவியுணவின் ஆன்றோர் என்பதற்கு வள்ளுவர் கூற விழையும் மெய்யான பொருள் என்ன? இதைப் பற்றிப் பார்ப்போம்.

திருந்திய பொருள்:

இக் குறளில் வரும் அவியுணவின் ஆன்றோர் என்பதற்கு அவித்த உணவினை மிகுதியாக உடையோர் என்பது பொருள்.

இப்புதிய பொருளின் படி, இக் குறளுக்கான புதிய விளக்கமானது,

செவிக்கு உணவாகிய கேள்வி ஞானத்தை நிறையப் பெற்ற (வறுமை நிலையில் இருக்கும் புல) வர்களும் அவித்த உணவாகிய நெல்சோற்றினை நிறையப் பெற்ற செல்வந்தர்களும் இப் பூமியில் ஒருவருக்கொருவர் ஒப்பானவர்களே ஆவர்.

நிறுவுதல்:

முதலில் இக்குறளில் வரும் ஆன்றோர் என்ற சொல்லுக்கு நிறையப் பெற்றோர் அல்லது மிகுதியாகப் பெற்றோர் என்ற பொருள் எவ்வாறு பொருந்தும் என்று பார்ப்போம்.

 'ஆன்று, ஆன்றல் ' என்ற சொற்களுக்கு கீழ்க்காணும் பொருட்களைத் தருகிறது சென்னை இணையத் தமிழ்ப்பேரகராதி.

ஆன்று āṉṟu , vbl. pple. < அகன்று. 1. Having been full or filled; நிறைந்து. பாடான் றவிந்த பனிக்கடல் (மதுரைக். 629)
ஆன்றல்² āṉṟal , n. < ஆல்-. < சால்-. 1. Greatness, dignity; மாட்சிமை. (திவா.) 2. Abundance, copiousness; மிகுதி. (திவா.)

இதிலிருந்து 'அவியுணவின் ஆன்றோர்' என்னும் சொல்லுக்கு 'அவித்த உணவினை நிறைவாகக் கொண்டோர்' அல்லது 'மிகுதியாகப் பெற்றோர்' என்ற பொருள் தோன்றுவதை நன்கு அறிய முடியும். 

அடுத்து, இக் குறளில் வரும் அவியுணவு என்பது அவித்து உண்ணப்படும் உணவாகிய நெற்சோற்றினைத் தான் குறிக்குமா? வேறு உணவினைக் குறிக்காதா? என்ற கேள்வி தோன்றலாம். இதைப் பற்றிக் கீழே பார்ப்போம்.

பொதுவாக இன்றைய தமிழக உணவு என்று எடுத்துக் கொண்டால் அதில் முதலிடம் பிடித்திருப்பது நெல்லரிசி உணவு என்பது நம் அனைவருக்கும் தெரியும். இக் காலத்தில் மட்டுமல்ல, சங்க காலத்திலும் கூட நெல்லரிசி உணவினை மக்கள் பெரிதும் விரும்பி உண்டுள்ளனர். பல சங்கப் பாடல்களில் நெல்லரிசிச் சோறு பற்றிக் கூறப்பட்டுள்ளது. மேலும் நெல்லரிசிச் சோறானது கம்பு, கேழ்வரகு, தினை போன்ற உணவுகளைக் காட்டிலும்  உயர்வகை உணவாகக் கருதப்பட்டது. ஒருவர் நெல்லரிசிச் சோற்றினை நிறைவாகக் கொண்டிருப்பது அவரது செல்வ மிகுதியின் அடையாளமாகக் கொள்ளப்பட்டது. பழங்காலத்தில் இந்த நெல்லரிசிச் சோற்றினை நிறைவாகப் பெற்றோர் யாவர்?. வேளாண் நிலக்கிழார்களும் மன்னர்களும் தானே. 

இவர்களைப் பாடித்தான் அக் காலத்தில் புலவர்கள் பரிசு பெற்றார்கள். ஒருவன் புலவனாக வேண்டுமென்றால் பல நூல்களைக் கற்க வேண்டும். ஆனால் கற்பதற்கு நூல் வாங்கப் பணம் வேண்டுமே, என்ன செய்வது?  இதற்கும் ஒரு வழி சொல்கிறார் வள்ளுவர்.

கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்கு
ஒற்கத்தின் ஊற்றாந் துணை.  - 414

'நூல்களில் இருந்து கல்லாவிடினும் ஆசிரியர் சொல்வதைக் கேளுங்கள்' என்று வள்ளுவர் மேற்காணும் குறளில் கூறுகிறார். இதிலிருந்து, பணமில்லாத வறிய நிலையிலும் கூட ஒருவன் கேள்வி ஞானத்தைக் கொண்டு கற்றுப் புலவனாக முடியும் என்னும் கருத்து பெறப்படுகிறது. வறுமை நிலையில் உள்ள மக்கள் கேள்வி ஞானம் பெற்றாவது  வாழ்வில் உயர்நிலை அடைய வேண்டும் என்னும் அவரது ஆவலை வெளிப்படுத்தும் விதமாகத் தான் 'கேள்வி' என்னும் அதிகாரத்தினையே வள்ளுவர் இயற்றியுள்ளதாகத் தெரிகிறது.

இருந்தாலும் வள்ளுவருக்கு ஒருசார் மக்கள் கூட்டம் மீது கடுஞ்சினம் வருகிறது. இம் மக்கள் உருவத்தால் மக்களைப்போல் இருந்தாலும் பண்பினால் விலங்குகளைப் போல இருக்கின்றனர். எங்கே அன்னதானம் நடந்தாலும் அங்கே முதல் ஆளாய்ச் சென்று சோற்றினை உண்ணத் துவங்குகின்றது இக் கூட்டம். ஒருவேளைச் சோற்றை உண்டு கொண்டிருக்கும்போதே ' ஐயா, அடுத்து எப்ப ஐயா சோறு போடுவீங்க?" என்று அடுத்த வேளைச் சோற்றுக்கு ஆலாய்ப் பறக்கின்றது இக் கூட்டம். இந்த அன்னதானக் கூடத்தின் அருகிலேயே ஒரு மேடையில் ஒரு அருமையான சொற்பொழிவு நடந்து கொண்டிருக்கின்றது. அச் சொற்பொழிவினை வெகுசிலர் மட்டுமே அமர்ந்து கேட்டுக்கொண்டிருக்கின்றனர். பக்கத்திலேயே நடந்தாலும் அந்த சொற்பொழிவினைக் கேட்க இந்த மக்கள் கூட்டம் போகவில்லை. இப்போது மட்டுமில்லை எப்போதுமே போவதில்லை. ஏனென்றால் இந்த மக்கள் கூட்டத்திற்கு செவியின் சுவை தெரியாது; விலங்குகளைப் போல வாயின் சுவை மட்டுமே தெரியும். எனவே தான் இக் கூட்டத்தினை மாக்கள் என்று ஏசுகிறார் வள்ளுவர். இப்படி செவியின் சுவை அறியாமலும் அறிய விரும்பாமலும் வாயின் சுவை மட்டுமே கொண்டு வாழும் இம் மாக்கள் உலகில் ஏன் வாழ வேண்டும்? இவர்கள் இறந்தால் தான் என்ன? என்று கீழ்க் காணும் குறளில் சாடுகிறார் வள்ளுவர்.

செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்
அவியினும் வாழினும் என்.  - 420

அதே சமயம் சொற்பொழிவினை ஆவலுடன் கேட்டுக் கொண்டிருந்த மக்கள் சொற்பொழிவு முடிந்த பின்னர் எழுந்து அன்னதானக் கூடம் சென்று உணவு உண்ணத் துவங்குகின்றனர். அதைக் கண்டு  வள்ளுவர் பாடுவதாக அமைகிறது கீழ்க்காணும் பாடல்.

செவிக்குண வில்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப் படும். - 412

இப்படி வயிற்றுக்குத் தேவையான உணவினை விட மிக உயர்வானதாகக் கருதப்பட்ட கேள்வி ஞானத்தினை செல்வங்களில் தலைசிறந்த செல்வம் என்றும் கூறுகிறார்.

செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்து ளெல்லாந் தலை. - 411

மேலும் நூல்களின் மூலமாகப் பெறப்படும் அறிவுக்கும் கேள்வியின் மூலமாகப் பெறப்படும் அறிவுக்கும் ஒரு வேறுபாடு உண்டு. நூல்களின் மூலமாகக் கற்கும் பொழுது ஏற்படும் ஐயப்பாடுகளுக்கு விடை கிடைப்பது அரிதாகையால் அந்த அறிவு முழுமையாக பக்குவப்படாத அறிவாக அமைகிறது. இந்த நூல் அறிவினை சமைக்கப்படாத நெல்லுடன் ஒப்பிடலாம். ஏனென்றால் இவ் இரண்டையுமே ஒருவர் பக்குவப்படுத்தாமல் உட்கொள்ள முடியாது. ஆனால் கற்றறிந்த அனுபவசாலிகளான ஆசிரியர்கள் கூறும் சொற்களில் ஐயம் திரிபற இருப்பதால் அது முழுமையாக பக்குவப்பட்ட அறிவாக அமைகிறது. இந்த கேள்வி ஞானத்தினை சமைக்கப்பட்ட அரிசிச்சோற்றுடன் ஒப்பிடலாம். ஏனென்றால் கேள்வி ஞானமும் சரி அரிசிச்சோறும் சரி இரண்டையும் ஒருவர் அப்படியே உட்கொள்ள முடியும். இத்தகைய ஒரு ஒப்பீட்டைத் தான் நமது தலைப்புக் குறளில் கூறுகிறார் வள்ளுவர்.

நிலக் கிழார்களையும் மன்னர்களையும் பற்றிக் கூறுமிடத்து, நெல்லின் மிகுதியை உடையவர்கள் என்று கூறாமல், அவித்த உணவாகிய அரிசிச்சோற்றினை மிகுதியாக உடையவர்கள் என்று கூறியிருப்பதில் இருந்து, புலவர்களிடத்தில் இருக்கும் கேள்வி ஞானத்தினை புரவலர்களிடத்தில் இருக்கும் அரிசிச்சோற்றுடன் ஒப்பிட்டிருக்கும் உவமை நயத்தினை அறிந்து இன்புறலாம்.  மேலும் என்னதான் புலவர்கள், தமது நல்வாழ்வுக்காக புரவலர்களைப் பாடிப் பரிசில் பெற்று வாழ்ந்தாலும் அவர்கள் எவ்வகையிலும் புரவலர்களை விடத் தாழ்ந்தவர் அல்லர். இருநிலமாகிய இப் பூமியிலே இவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் ஒப்பானவர்களே என்கிறார்.

ஆம்,

புலவர்கள்  மக்களுக்கு அறிவினைப் புகட்டுகின்றனர்.
புரவலர்கள் மக்களுக்கு உணவினைப் புகட்டுகின்றனர்.

இப்போது சொல்லுங்கள், இருவரும் ஒப்பானவர்கள் தானே?.

......................................தமிழ் வாழ்க!.............................................

புதன், 18 ஏப்ரல், 2012

கவரிமா (ன்)

முன்னுரை:

'மயிர் பெரிதா? உயிர் பெரிதா?' என்று கேட்டால், நாம் அனைவரும் 'உயிர் தான் பெரிது' என்று சொல்வோம். ஆனால் 'மயிரே தனக்கு பெரிது' என்று பழந் தமிழ்நாட்டில் ஒரு உயிர் வாழ்ந்திருக்கிறது. ஏதாவது ஒரு காரணத்தால் தனது மயிரை இழக்க நேர்ந்தால் தனது உயிரை விட்டுவிடவும் அது தயங்கவில்லை. அது தான் கவரிமா எனப்படும் உயிரினமாகும். இந்த கவரிமா என்பது என்ன என்று ஆராய்வதே இக் கட்டுரையின் நோக்கமாகும். அதற்கு முன்னர், கவரிமா உயிர் விடும் செயலைப் பற்றித் திருக்குறளில் வள்ளுவர் கூறியுள்ளதைக் காணலாம்.

குறள்:
    மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
    உயிர்நீப்பர் மானம் வரின்.
                                                          - 969

தற்போதைய விளக்க உரைகள்:

கலைஞர் உரை: உடலில் உள்ள உரோமம் நீக்கப்பட்டால் உயிர் வாழாது கவரிமான் என்பார்கள். அதுபோல் மானம் அழிய நேர்ந்தால் உயர்ந்த மனிதர்கள் உயிரையே விட்டு விடுவார்கள்.
மு.வ உரை: தன் உடம்பிலிருந்து மயிர் நீங்கினால் உயிர்வாழாத கவரிமானைப் போன்றவர் மானம் அழிய நேர்ந்தால் உயிரை விட்டுவிடுவர்.
சாலமன் பாப்பையா உரை: மயிர்எலாம் இழந்துவிட்டால் உயிர் வாழ முடியாத கவரிமான் (சாமரம்) போன்றவர் தம் குடும்பப் பெருமை எல்லாம் அழிய நேர்ந்தால் உயிர் வாழமாட்டார்.

கவரிமா என்பது விலங்கா?:

மேற்காணும் விளக்க உரைகளில் 'கவரிமா' என்று வள்ளுவர் குறளில் எழுதியதை 'கவரிமான்' எனக் கொண்டு அச் சொல் ஒரு வகைக் காட்டு மானைக் குறிப்பதாக சிலர் விளக்கம் கூறுகின்றனர். ஒருசிலர் இச்சொல்லானது பனிப்பிரதேசங்களில் வாழ்கின்ற, உடல் முழுவதும் அடர்ந்த மயிரால் மூடப்பட்ட, ஆங்கிலத்தில் 'யாக்' என்று அழைக்கப்படுகிற ஒருவகை மாட்டினைக் குறிப்பதாகக் கூறுகின்றனர். இவற்றில் எது சரி?. உண்மையில் வள்ளுவர் இக் குறளில் கவரிமா என்று ஒரு விலங்கினைத் தான் குறிப்பிடுகிறாரா?. என்று இக்கட்டுரையில் பார்ப்போம்.

ஆராயந்து பார்த்தால், வள்ளுவர் 'கவரிமா' என்று இக் குறளில் குறிப்பிடுவது மேற்காணும் இரண்டு விலங்குளையுமே அல்ல என்று தெரிய வரும். முதலில் கவரிமானைப் பற்றிப் பார்ப்போம். முதலில் உடலில் உள்ள மயிர் முழுவதும் நீக்கப்பட்டு விட்டால் இந்த மான் இறந்துவிடுமென்றால் அதற்கொரு அறிவியல் காரணம் இருந்தாக வேண்டும். அப்படியான எந்த ஒரு காரணமும் ஒரு காட்டு மானுக்குப் பொருந்தாது. மேலும் பொதுவாக காட்டில் வாழும் மானை வேட்டையாடுபவர்கள் வெறும் மயிரை மட்டும் மழித்துவிட்டு அந்த மானை அப்படியே உலவ விட்டுவிடுவார்களா?. இல்லையே. மானை வேட்டையாடுவதே மானின் இறைச்சிக்கும் தோலுக்கும் அதன் கொம்புகளுக்கும் தானே. இந் நிலையில் மயிரை மழித்துவிட்டால் கவரிமான் உயிர் வாழாது என்று கூறுவது சற்றும் பொருந்தாத கூற்றாகிறது. இதை இன்னொரு கோணத்தில் இருந்தும் பார்க்கலாம். ஒருவகை நோயினால் மானின் உடல் மயிர் முழுவதும் தானே உதிர்ந்து அது இறந்துவிட்டால், அந்த மானின் இறப்புக்கு அந்த நோயைத் தான் காரணமாகக் கூறலாமே ஒழிய மயிரை இழந்ததால் தான் அது மரணம் அடைந்தது என்று கூற முடியாது. அவ்வாறு கூறினால் அது அறிவியலுக்குப் புறம்பான கூற்றாகும். எனவே இக்குறளில் வரும் கவரிமா என்பது ஒரு காட்டுமானைக் குறித்து வரவில்லை என்பது தெளிவாகிறது.

இனி, யாக் என்னும் விலங்கினைப் பற்றிப் பார்ப்போம். பெரும்பான்மை பனிப்பிரதேசங்களிலும் சிறுபான்மை காடுகளிலும் வாழ்கின்ற இவ் வகைமாடுகள் திபெத்திய பகுதிகளில் கால்நடைகளாக வளர்க்கப்படுகின்றன. உழவுக்கும் இழுவைக்கும் பயன்படுத்தப்படுகின்றன. இறைச்சி, தோல் மற்றும் மயிருக்காக இவை கொல்லப்படுகின்றன. இவை பற்றிய மேலதிக தகவல்களை விக்கிபீடியாவில் காணலாம். உடல் முழுவதும் மயிரைக்கொண்ட பிற கால்நடைகளான செம்மறி ஆடு, கருப்பாடுகளைப் போல இவற்றின் மேல் தோலும் மிகத் தடிப்பாக இருப்பதால் இவற்றின் மயிர் முழுவதையும் மழித்துவிட்டாலும் இவை இறந்து விடுவதில்லை. மேலும் தமிழ்நாட்டு மக்களின் வாழ்வியலுடன் இவ் விலங்கு தொடர்புடையதாக எவ்வித ஆதாரங்களும் இல்லை. தொடர்பில்லாத இவ் விலங்கினைப் பற்றி வள்ளுவர் உவமையாகக் கூற வேண்டிய தேவையும் இல்லை. எனவே கவரிமா என்னும் சொல்லின் மூலம் வள்ளுவர் இந்த விலங்கினையும் குறிப்பிடவில்லை என்பது இதிலிருந்து தெளிவாகிறது.

மேலே கண்டவற்றில் இருந்து கவரிமா என்னும் சொல்லின் மூலம் வள்ளுவர் எந்த ஒரு விலங்கினையும் குறிப்பிடவில்லை என்பது உறுதியாகிறது. என்றால், உண்மையில் இச்சொல் எதைக் குறிக்கும் என்று பார்ப்போம்.

கவரிமா என்றால் என்ன?

முதலில் கவரிமா என்ற சொல்லுக்கு தற்கால அகராதிகள் கூறும் பொருள் என்ன என்று காணலாம்.

சென்னை இணையத் தமிழ் அகராதி:

கவரிமா = கவரிமான் = மான் வகை

ஆனால், பிங்கல நிகண்டோ கவரிமாவைக் குறிக்கும் பல பெயர்களுள் ஒன்றாக எகினம் என்ற சொல்லைத் தருகிறது. ஆனால் எகினம் என்பதோ அன்னப் பறவையைக் குறிக்கும் பல பெயர்களுள் ஒன்றாகும். இதிலிருந்து,

கவரிமா = எகினம் = அன்னப் பறவை.

என்பது பெறப்படுகிறது.

மேலும் வின்சுலோ அகராதி கீழ்க்கண்டவாறு பொருள் கூறுகிறது.

அன்னம், (p. 58) [ aṉṉm, ] s. A swan, அன்னப்புள். 2. (p.) The bosgrunniens, or yak, as கவரிமா.
எகினம் (p. 169) [ ekiṉm ] --எகின், s. A swan, அன்னம். 2. The yac or bos grunniens, கவரிமா.

இதிலிருந்து கவரிமாவிற்கும் எகினத்திற்கும் அன்னப்பறவைக்கும் இடையே உள்ள தொடர்பு தெரிய வருகிறது. இம் முக்கோணத் தொடர்பின் அடிப்படையை நோக்கும்பொழுது கவரிமா என்பது அன்னப்பறவையாக இருக்கக் கூடும் என்னும் கருத்து முகிழ்க்கிறது. இதை மேலும் சில சான்றுகளுடன் ஆராயலாம்.

அன்னப் பறவை:

அன்னப் பறவை ஒரு நீர்நில வாழ் பறவையாகும். நீரில் இருந்தவாறே பறந்து சென்று மரத்திலும் அமரும். நீரில் மிக வேகமாக நீந்தக் கூடியது. ஆனால் தரையில் மிக மெதுவாகத் தான் நடக்கும். இதைத்தான் நம் மக்கள் 'அன்ன நடை நடக்கிறாள் ' ' என்று சொல்வார்கள். தமிழ் இலக்கியங்களில் அன்னப் பறவை பரவலாகப் பேசப்பட்டுள்ளது.

இலக்கியங்கள் கூறுவதிலிருந்து அன்னப்பறவையினைப் பற்றிக் கீழ்க்காணும் தகவல்களைப் பெறுகின்றோம்.

அன்னம் மெல்ல நடக்கும் இயல்பினது.
அன்னம் பெரும்பாலும் தனது துணையுடனே இருக்கும்.
அன்னம் தூய வெள்ளை நிறத்தில் இருக்கும். (காரோதிமம் விதிவிலக்கு)
அன்னத்தின் தூவி (இறகின் அடிமயிர்) மிக மெல்லியது. இதை தலையணை மற்றும் மஞ்சத்தில் பயன்படுத்துவார்கள்.
அன்னத்தின் கண்களும் கால்களும் சிவந்த நிறமுடையவை.
அன்னத்தின் கால்கள் குட்டையானவை.
அன்னம் தாமரை மலர் மேல் படுத்துறங்கும். சில நேரங்களில் புன்னை மரங்களிலும் தங்கும்.
அன்னப் பறவையும் மயிலும் ஒன்றுக்கொன்று நட்புடையவை.

கவரிமாவும் அன்னப் பறவையும்

அன்னப் பறவையானது பெரும்பாலும் தனது துணையுடனே இருக்கும் என்று மேலே கண்டோம். மேலும் அன்னப்பறவையின் இன்னொரு இயல்பான மெல்ல நடக்கும் பண்பினையும் வைத்துப் பார்க்கும் பொழுது 'அன்னம்' என்னும் பெயர் ஒரு பெண் பறவையைக் குறிப்பதாகக் கொள்ள முடிகிறது. என்றால் இதனுடைய ஆண் துணையின் பெயர் என்ன?. அது தான் கவரிமா என்பதாகும். ஆம், கவரிமா என்பது அன்னத்தின் ஆண் துணையின் பெயராகும். இதனுடைய இன்னொரு பெயர் 'எகினம்' என்பதாகும்.

கவரிமாவின் பண்புகளாகக் கீழ்க்காண்பவற்றை இலக்கியங்களில் இருந்து பெறுகிறோம்.

இதன் உடல் முழுவதும் நீண்ட மயிர் மூடி இருக்கும்.
இதுவும் அன்னத்தைப் போலவே  வெண்மையானது..
இது தனது உடல் மயிரை முழுவதுமாக இழந்தால் வாட்டமுற்று உணவேதும் உண்ணாமல் உயிரிழந்து விடும்.

இனி இக் கருத்துகளுக்கான ஆதாரங்களைக் காணலாம்.

ஆதாரங்கள்

நெடுமயிர் எகினத் தூநிற ஏற்றை
குறுங்கால் அன்னமோ டுகளு முன்கடைப்
                   - நெடுநல்வாடை: 91-92

மேற்காணும் பாடலில் இருந்து, எகினமாகிய கவரிமாவிற்கு நீண்ட மயிர் உள்ளது என்ற தகவலும் அது அன்னத்தைப் போலவே வெண்மையானது (தூநிறம்) என்பதும் அது தனது துணையாகிய அன்னத்துடன் இருக்கும் என்ற தகவலும் பெறப்படுகிறது.

கீழ்க்காணும் சிலப்பதிகாரப் பாடலானது எகினமே கவரிமா என்றும் அது அன்னப் பறவையின் துணையாகும் என்றும் கூறுகிறது.

எகினக் கவரியும் தூமயிர் அன்னமும் துணை எனத் திரியும் - நாடுகாண்: 5 - 6

கீழ்க்காணும் அகநானூற்றுப் பாடலும் கவரிமாவின் தூய வெண்ணிறத்தைப் போற்றுகிறது.

பசைகொல் மெல்விரல் பெருந்தோள் புலைத்தி
துறைவிட் டன்ன தூமயிர் எகினம்
துணையொடு திளைக்கும் காப்புடை வரைப்பிற்,
                          - அகநானூறு: 35

உயிரும் மயிரும்

சரி, கவரிமா தன் உடல் மயிரை ஏன் இழக்கிறது? அது தன் உடல் மயிரை இழந்தால் ஏன் இறக்கிறது?. இக் கேள்விகளுக்கான விடைகளைக் கீழே காணலாம்.

கவரிமா தனது உடல் மயிரை அதுவாக இழப்பதில்லை. மாறாக அது மழிக்கப்படுகிறது. ஆம், அதன் தூய வெள்ளைநிற நீண்ட மெல்லிய மயிரானது கவரி எனப்படும் சாமரம் செய்யப் பயன்படுகிறது. கவரிமா உயிரோடு இருக்கும் போது அதன் மயிர் மழிக்கப்பட்டால், அது இறந்து படுவதன் அறிவியல் காரணம் அது ஒரு நீர்ப் பறவை என்பதே. பொதுவாக நீரில் நீந்தும் பறவைகளுக்கு நீரின் குளிர்ச்சியால் பறவையின் உடல் சில்லிடாத வண்ணம் அதன் உடல் மயிர் ஒரு கவசமாக இருந்து பாதுகாக்கும். உடல் மயிர் முழுவதும் மழிக்கப்பட்டால் கவரிமாவால் நீரில் இறங்கி நீந்த முடியாது. காரணம் சில்லென்ற நீரின் குளிர்ச்சி அதன் உடலைத் தாக்கும். இதனால் கவரிமா ஏக்கத்தால் வாடியும் மீன் முதலிய உணவுகளை உண்ண முடியாமல் தவித்தும் உயிர் துறக்கும்.

முடிவுரை:

மேறகண்ட சான்றுகளில் இருந்து வள்ளுவர் திருக்குறளில் கூறியுள்ள கவரிமா என்பது அன்னப் பறவையின் ஆண் துணையினைத் தான் குறிக்கும் என்பது நிறுவப் படுகிறது. இதுவே சில இடங்களில் கவரி எனவும் பயின்று வந்துள்ளது.

ஆண் அன்னத்தினைக் குறித்து வந்த கவரிமா என்ற சொல் எவ்வாறு மானைக் குறிக்கலாயிற்று என ஆராய்ந்ததில் ஓர் உண்மை புலப்பட்டது. காட்டில் வாழும் விலங்குகளில் கவரிக் கடமா என்றொரு மான் இருக்கிறது ( சான்று: ஐந்திணை ஐம்பது). இதுவே கவரிமான் என்று அழைக்கப்பட்டு அது பின்னர் கவரிமாவுடன் பிறழக் கொள்ளப்பட்டுள்ளது. இதோ கவரிமாவையும் கவரிமானையும் பிறழக் கொண்டு இயற்றப்பட்டுள்ள விவேகசிந்தாமணியின் பாடல்:

மானம் உள்ளோர்கள் தங்கள் மயிர் அறின் உயிர் வாழாத
கானுறு கவரி மான்போல் கனம்பெறு புகழே பூண்பார்
மானம் ஒன்று இல்லார் தாமும் மழுங்கலாய்ச் சவங்கலாகி
ஈனமாம் கழுதைக்கு ஒப்பாய் இருப்பர் என்று உரைக்கலாமே. 48.

இப்படித் தான் கவரிமாவும் ( பறவை) கவரிமானும் ( விலங்கு) இதுவரை ஒன்றாகக் கருதப்பட்டு வந்துள்ளது. இனியேனும் இவை வேறு வேறானவை என்று அறியப்பட்டால் அதுவே இக் கட்டுரையின் பயனாகும்.
--------------------- வாழ்க தமிழ்!------------------------------

திங்கள், 19 மார்ச், 2012

ஆனைக்கொரு காலம் ( பூனைக்கு?)

முன்னுரை:

ஆனைக்கு ஒரு காலம் வந்தால்
பூனைக்கும் ஒரு காலம் வரும்.


என்றொரு பழமொழி இன்றும் வழக்கில் உண்டு. இதைப்பற்றி விரிவாக ஆராய்வதே இக் கட்டுரையின் நோக்கமாகும்.

தற்போதைய விளக்கங்கள்:

இப்பழமொழிக்குக் காலம் காலமாகக் கூறப்பட்டு வரும் விளக்கம் இதுதான்:


ஆனை போல பெரியவர்களுக்கு வாழ்க்கையில் ஒரு நல்ல காலம் வந்தால்
பூனை போல சிறியவர்களுக்கும் அவரது வாழ்வில் ஒரு நல்ல காலம் வரும்.

இக் கருத்து சரியானதா என்று பார்ப்போம். இங்கே பெரியவர் என்பது உருவத்தால் மட்டுமின்றி செல்வாக்கு, பணபலம், புகழ் போன்றவற்றால் பெருமை உடையவர்களைக் குறிப்பதாகவும் கொள்ளலாம். சிறியவர் என்பது உருவத்தால் மட்டுமின்றி செல்வாக்கு, பணபலம், புகழ் ஆகிய எதுவுமே கொஞ்சம்கூட இல்லாத மிகச் சாதாரண நிலையில் உள்ளவர்களையும் குறிப்பதாகக் கொள்ளலாம். மொத்தத்தில் இப்பழமொழி உணர்த்த வரும் கருத்துப்படி பார்த்தால் நல்லகாலம் என்பது அனைத்துவகையான மக்களுக்கும் வாழ்க்கையில் ஒரு கட்டத்திலாவது வரவே செய்யும் என்பதே.

ஆனை போல பெரியவர்களானாலும் சரி, பூனை போல சிறியவர்களானாலும் சரி, நன்மை மட்டுமல்ல தீமையும் அனைவருக்கும் அவரவர் வினைப்படிதான் நடக்கும். இதைத்தான் ' தீதும் நன்றும் பிறர்தர வாரா' என்று புறநானூற்றிலேயே கூறிவிட்டனர். ஆக, இக் கருத்து ஓரளவுக்குத் தான் சரியாகக் கூறப்பட்டுள்ளது. மேலும் இக் கருத்தினை நேரடியாகக் கூறாமல் ஆனையினையும் பூனையினையும் பயன்படுத்திக் கூறி இருப்பதன் தேவை என்ன?. இக் கருத்து உருவான பின்புலம் என்ன? இதைப் பற்றிக் கீழே விரிவாகக் காணலாம்.

அதற்கு முன்னர், மேற்காணும் கருத்தைத்தவிர, இணையத்தில் காணப்பட்ட வேறு சில கருத்துக்களைப் பற்றிக் காணலாம்.

கருத்து 2:

இக் கருத்தினை முன்மொழிவோர், ஆனை என்பதனை ஆநெய் என்பதின் திரிபு என்றும் பூனை என்பதனை பூநெய் என்பதின் திரிபு என்றும் கொண்டு, இப்பழமொழியை

ஆநெய்க்கு ஒரு காலம் வந்தால்
பூநெய்க்கும் ஒரு காலம் வரும்.

என்று மாற்றிக் கொண்டு கீழ்க்கண்டவாறு பொருள் கூறுகின்றனர். 

ஆநெய் ஆகிய பசுநெய்யினை ஒரு காலத்தில் உண்டால் பூநெய் ஆகிய தேனையும் ஒரு காலத்தில் உண்ணவேண்டி வரும்.

அதாவது, பசுநெய்யினை உணவுடன் சேர்த்து அதிகம் உண்டால் அதனால் உண்டாகும் கொழுப்பினைக் குறைக்க அதன்பின்னர் தேனை உண்ண வேண்டி வரும் என்று விளக்கம் கூறுகின்றனர்.

இக் கருத்து ஏற்புடையதாகத் தோன்றவில்லை. ஏனென்றால், பசுநெய் மட்டுமல்ல, கொழுப்பை உண்டாக்கும் பல எண்ணைப் பலகாரங்களையும் மாமிச உணவுகளையும் நாம் (கொழுப்பு என) அறிந்தே தான் உண்கிறோம். இருந்தாலும் அதனைக் குறைப்பதற்கு நாம் தேனையா உட்கொள்கிறோம்?. இல்லையே. மேலும் நெய்யும் தேனும் உணவுப்பொருட்களே. இதில் எதை அதிகம் உண்டாலும் சிக்கல் வரும். அதனால் தானே ' அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு' என்று கூறினர் பெரியோர். எனவே இப் பழமொழி இங்கே உணவுப் பொருட்களைக் குறித்து வரவில்லை என்பது தெளிவாகிறது. 

கருத்து 3:

கருத்து 2 னைப் போலவே இதுவும் ஆநெய், பூநெய்யுடன் தொடர்புடையதே. ஆனால் சற்று மாறுபடுவது; ஆன்மீகத்துடன் தொடர்புடையது. இக் கருத்தின் படி,

இறைவனுக்கு முதலில் பசுநெய்யால் முழுக்காட்டப்படும். அதன்பின்னர்
தேனால் முழுக்காட்டப்படும்.

இக் கருத்தும் பொருத்தமானதாகத் தெரியவில்லை. ஏனென்றால் இறைவனுக்கு செய்யப்படும் முழுக்காட்டுதலைப் பழமொழியாகச் சொல்ல வேண்டிய தேவை ஒன்றுமில்லை. மேலும் இறைவனுக்குப் பலவகையான முழுக்காட்டுதல்கள் உண்டு. எனவே இப்பழமொழி இங்கே இறைவனுடன் தொடர்புடையதாய் வரவில்லை என்பது தெளிவு.

இனி, முதலாம் கருத்துக்கு அரணாக உள்ள இப் பழமொழியின் பின்புலம் பற்றிக் காண்போம்.

பழமொழியின் பின்புலம்:

பழமொழிகளிலே பலவகைகள் உண்டு. பழமொழிகள் கூறுகின்ற கருத்துக்களின் அடிப்படையில் அவற்றை மருத்துவப் பழமொழி, வேளாண்மைப் பழமொழி, இலக்கியப் பழமொழி, வரலாற்றுப்பழமொழி என பலவகைகளாகப் பிரிக்கலாம்.

நாம் தலைப்பில் கண்ட பழமொழியானது ஒரு வேளாண்மைப் பழமொழி ஆகும். வேளாண்மையே மக்களின் அடிப்படைத் தொழில் என்பதால் இது தொடர்பாக பல பழமொழிகள் வழக்கில் எழுந்தன. அவற்றில் ஒரு சில பழமொழிகள் மட்டும் சான்றாகக் கீழே தரப்பட்டுள்ளன. (நன்றி: விக்கிகோட்.ஆர்க்)

காற்றுள்ள போதே தூற்றிக் கொள்
உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கு மிஞ்சாது.
அகல உழுவதை விட ஆழ உழுவது மேல்.
அறுக்க மாட்டாதவன் இடுப்பில் ஐம்பத்தெட்டு கருக்கு அருவாளாம்.
அறுப்புக் காலத்தில் எலிக்கு ஐந்து பெண்சாதி.
ஆடிப் பட்டம் தேடி விதை.

மேலே கண்டதைப் போல, வேளாண்மைத் தொழிலை அடிப்படையாகக் கொண்டு எழுந்த பழமொழிகள் பலவற்றுள்ளும், நமது தலைப்புப் பழமொழிக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. இப் பழமொழியானது வேளாண்மைத் தொழிலில் பயன்படுத்தப்படும் விலங்குகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒன்றாகும்.

வேளாண்மைத் தொழிலில் மிக அதிகமாக பயன்படுத்தப்படும் விலங்கு 'எருது' என்பது அனைவருக்கும் தெரியும். உழவுமாடாகவும் வண்டி மாடாகவும் பெரிதும் பயன்படுவது எருதே ஆகும். பல நேரங்களில் விளைந்த நெற்கதிர்களை கதிரடிக்கவும் இவற்றைப் பயன்படுத்துவர். ஆனால், விளைச்சல் அதிகமாக இருந்தால், யானைகளையும் கதிரடிக்கப் பயன்படுத்துவர். இதன் அடிப்படையில் எழுந்தது தான் கீழ்க்காணும் பாடல்:

" மாடு கட்டிப் போரடித்தால்
மாளாது செந்நெல் என்று
ஆனை கட்டிப் போரடிக்கும்
அழகான தென்மதுரை."


மிக அழகான இப் பாடலை இயற்றியது யார் எனத் தெரியவில்லை. ஆனால், தென்மதுரையில் உழவுத் தொழில் எவ்வளவு செழித்திருந்தது என்பது மட்டும் இப்பாடலின் மூலம் நன்கு தெரிகிறது.

இப்படி யானைகளைக் கொண்டு கதிரடித்த பின்னர், பிரிந்த நெல்மணிகளைத் தனியாக எடுத்துத் தானியக் கிடங்குகளில் சேமித்து வைத்திருப்பர். இப்போது தான் சிக்கல் துவங்குகிறது. சேமித்து வைக்கப்பட்டுள்ள இந்த நெல்மணிகளைக் குறிவைத்து எலிகளின் பட்டாளம் படையெடுக்கத் துவங்குகின்றது. ஒவ்வொரு எலியும் தனக்குத் தேவையானதை விட ஐந்து மடங்கு தானியத்தை அள்ளிக் கொண்டு செல்லுமாம். இதனடிப்படையில் தான்,

" அறுப்புக் காலத்தில் எலிக்கு ஐந்து பெண்சாதி "

என்ற பழமொழியே எழுந்தது எனலாம்.

கூட்டம் கூட்டமாக இவை புகுந்து நெல்மணிகளைத் திருடிக் கொண்டு செல்வதை அப்படியே விட்டுவிட்டால், கிடங்கையே காலி செய்து விடும். எனவே இந்த எலிகளைக் கூண்டோடு ஒழிக்க, பூனைகளைக் கொண்டுவந்து தானியக் கிடங்குக்குள் வைப்பர். பூனைகளும் கிடங்கிற்குள் வருகின்ற எலிகளை வேட்டையாடித் தின்றுவிடும்.

முடிவுரை:

இவ்வாறாக கதிரடிக்கும் காலத்தில் யானையின் உதவியும் சேமிக்கும் காலத்தில் பூனையின் உதவியும் மனிதருக்குத் தேவைப்பட்டது. இதைத்தான்,

யானைக்கொரு காலம் வந்தால்
பூனைக்குமொரு காலம் வரும்.

என்று கூறிச் சென்றுள்ளனர் நம் முன்னோர். இப் பழமொழியில் இருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டிய இன்றியமையாத செய்தி என்னவென்றால்:

மிகப் பெரிய யானைகள் மட்டுமே பயன் தருபவை அல்ல.
மிகச் சிறிய பூனைகளும் தான். எனவே
உருவு கண்டு எள்ளாமை வேண்டாம்.! ( நன்றி: திருவள்ளுவர்)



......................................... தமிழ் வாழ்க!.......................................................

வியாழன், 8 மார்ச், 2012

மாசில் வீணை (75 ஆம் கட்டுரை)

முன்னுரை:

ஒளியின் வடிவாய் அண்டவெளி எங்கும் நிறைந்திருக்கும் சிவபரம்பொருளைப் போற்றிப்பாடிய பலருள்ளும் தேவார நால்வராகிய அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகியோர் குறிப்பிட்டுச் சொல்லத் தக்கவர்கள். ஏனென்றால் இவர்களது பாடல்கள் கற்போரையும் பாடுவோரையும் நெஞ்சம் கரைந்துருகச் செய்து சிவபக்தனாக்கி விடும் தன்மை கொண்டவை. இவர் நால்வருள்ளும் வயதில் மூத்தவரும் இறை அனுபவம் மிக்கவருமாகிய அப்பரின் பாடல்கள் மிகவும் இனிமையானவை.

மருள்நீக்கியார் என்ற இயற்பெயர் கொண்ட இவர் துவக்கத்தில் சமண சமயம் தழுவி தருமசேனர் என்ற பட்டப்பெயர் பெற்றார். பின்னர் சூலைநோயினால் சிவ பக்தனாக மாறினார். சிவபக்தனாக மாறியமைக்காக அவர் பட்ட துன்பங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.. சமணர்கள் செய்த சூழ்ச்சியால் அரசனால் சுண்ணாம்புக் காளவாசலுக்குள் (நீற்றறை) சிறை வைக்கப்பட்டார். கடுமையான வெப்பமும் சுண்ணாம்பின் கார நெடியும் எந்த ஒரு சாதாரண மனிதனையும் சிலமணி நேரம் கூட உயிரோடு விட்டு வைக்காது. என்ன ஆச்சரியம்! சிவன் அருளால் திருநாவுக்கரசர் ஏழு நாட்களுக்குப் பின்னும் நீறறறையில் இருந்து உயிரோடு வெளி வந்தார். சொக்கலிங்கத்தின் அருளால் நீற்றறை அவருக்கு சொர்க்கலோகம் ஆனது. திருநாவுக்கரசர் நீற்றறைக்குள் தனது அனுபவம் எப்படி இருந்தது என்று கூறுவதைப் பாருங்கள்.

இறையருள் தந்த இன்பங்கள்:

மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நீழலே.

இப்பாடலுக்குத் தற்போது கூறப்படும் பொருள் இதுதான்: " மாசில் வீணை காதிற்கு இன்பம். மாலை மதியம் கண்ணிற்கின்பம். வீசு தென்றல் மூக்கிற்கு நறுமணம் சேர்த்து இன்பம் நல்கும். வண்டு அறை பொய்கை நாவிற்கு இன்பம். (நீரினால்) இளவேனில் மெய் உடலுக்கு இன்பம். இவ்வாறு ஐம்பொறிகளாகிய மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐம்பொறிகளின் வாயிலாக சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்னும் ஐம்புல இன்பம் நுகர்தல் உலகியல், இதேபோன்று பொறி புலன் இன்றி உயிர் நேரே அனுபவிக்கும் இன்பமே இறையின்பம். சிற்றின்பம் சிறுகாலை இன்பம். பேரின்பம் - என்றும் மாறுபாடு இல்லாது நிலைத்திருப்பது. அதற்கு உலகியல் சிற்றின்பங்களைக் காட்டித்தான் சாதாரண மக்கட்கு இறை இன்பத்தை உணர்த்த இயலும். அந்தமுறையில் அப்பர் நீற்றறையில் தாம் அனுபவித்த இறையின்பத்தை உலகியலோடு இணைத்துச் சுவைபட அருளியுள்ளமை அறிந்து இன்புறத்தக்கது. "

உரைத்தவறுகள்:

மேற்காணும் உரையில் சில தவறுகள் உள்ளன. அவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

மாசில் வீணை காதிற்கு இன்பம். - இக்கருத்து சரியானது.

மாலை மதியம் கண்ணிற்கு இன்பம் - இதுவும் சரியானதே.

வீசு தென்றல் மூக்கிற்கு இன்பம் (நறுமணத்தால்) - இது சரியல்ல. ஏனென்றால் தென்றல் காற்று தனது மென்மைத் தன்மையினால் உடலை வருடும்போது உடலுக்கு ஒரு சுகத்தைக் கொடுக்குமே அல்லாமல் மூக்கிற்கு நறுமணத்தைக் கொண்டு வராது. நறுமணமோ துர்நாற்றமோ அது தென்றல் கடந்து வரும் பாதையைப் பொருத்ததே அன்றி தென்றலுக்குரிய பொதுவான பண்பல்ல. மேலும் பாடலில் 'வீசு தென்றல்' என்று தான் உள்ளதே ஒழிய 'நறுமணம்' என்ற பொருளைக் குறிப்பதாக எந்த ஒரு சொல்லும் அதனுடன் இல்லாதது குறிப்பிடத்தக்கது. ஆக, வீசு தென்றல் மூக்கிற்கு நறுமணம் தரும் என்ற கருத்து ஏற்புடையதல்ல.

மூசு வண்டு அறை பொய்கை நாவிற்கு இன்பம் (நீரினால்) - இந்தக் கருத்தும் ஏற்புடையதல்ல. ஏனென்றால் பொய்கை என்பது தேங்கி நிற்கும் நீரை உடைய சிறுகுளத்தைக் குறிப்பதாகும். 'மூசு வண்டு அறை பொய்கை' என்று கூறி இருப்பதால் அப் பொய்கையில் வண்டுகள் மொய்ப்பதான பல பூக்கள் பூத்துள்ளமை அறியப்படுகிறது. ஆக, நீர் தேங்கி இருப்பதாலும் அதில் பல மலர்கள் பூத்திருப்பதாலும் பொய்கை நீரானது நாட்பட்ட தன்மையினால் நிறமும் சுவையும் மாறி இருக்கும். மேலும் பொய்கையில் பாம்பு, தவளை, பூச்சிகள் போன்றவையும் வாழ்வதால் பொய்கை நீரினை யாரும் அருந்த மாட்டார்கள். எனவே மூசு வண்டறை பொய்கை நாவிற்கு இன்பம் என்னும் கருத்து தவறு என்பது பெறப்படுகிறது.

வீங்கு இளவேனில் மெய் உடலுக்கு இன்பம் - இக் கருத்தும் பொருத்தமற்றதே. ஏனெனில் இப்பாடலில் வரும் இளவேனில் என்பது பருவ காலத்தைக் குறித்து வந்திருக்க வாய்ப்பில்லை. இது எவ்வாறு என்று பார்ப்போம்.

வீங்குதல் என்ற சொல்லுக்குக் கீழ்க்காணும் பொருட்கள் இருப்பதாக சென்னை இணையத் தமிழ்ப் பேரகராதி கூறுகின்றது.

வீங்கு-தல் vīṅku- , 5 v. intr. [K. bīgu.] 1. To increase in size; to become enlarged; பருத் தல். (நாமதீப. 710.) 2. To swell; பூரித்தல். மணந்தநாள் வீங்கிய தோள் (குறள், 1233). 3. To become morbidly inflamed and swollen; வீக்க முறுதல். (பொரு. நி.) 4. To grow; வளர்தல். (அக. நி.) 5. To be copious or excessive; to increase; மிகுதல். வளம் வீங்கு பெருக்கம் (பதிற்றுப். 24, 17). 6. To be close, crowded; நெருங்குதல். (சூடா.) 7. To become tight and pressing; இறுகுதல். வீங்கிறை தடக்கையின் (குறிஞ்சிப். 123). 8. To be taut and not slack; விறைப்பாய் நிற்றல். விளரூன் றின்ற வீங்குசிலை மறவர் (அகநா. 89, 10). 9. To go up; மேனோக்கிச் செல்லுதல். நாவிளிம்பு வீங்கி (தொல். எழுத். 96). 10. To become emaciated; மெலிதல். அவன் வீங்கலா யிருக்கிறான். 11. To have morbid desires; ஏக்கங்கொள்ளுதல். 12. To sleep; தூங்கு தல். (யாழ். அக.)

மேற்காணும் பொருட்களுள் ஏதேனும் ஒரு பொருளாவது இளவேனில் பருவத்தின் தன்மைகளுடன் பொருந்தி வருகின்றதா என்று பார்த்தால் ஒன்றும் பொருந்தாத நிலையே காணப்படுகிறது. இதிலிருந்து, 'வீங்கு இளவேனில்' என்ற சொல்லில் வரும் இளவேனில் என்ற சொல் பருவகாலத்தைக் குறித்து இங்கு வரவில்லை என்பது பெறப்படுகிறது. என்றால், இளவேனில் என்பது இப்பாடலில் எதைக் குறிக்கும் என்பதைக் காணலாம்.

வேனில் என்றால் என்ன?

வேனில் என்ற சொல்லுக்குத் தற்போதிய அகராதிகள் கீழ்க்காணும் பொருளைத் தருகின்றன.

வேனில்¹ veṉil, n. prob. வே-. 1. See வேனிற்காலம். வேனிலாயினுந் தண்புனலொழுகுந் தேனூர் (ஐங்குறு. 54). 2. Spring season; இள வேனில். 3. Heat; வெப்பம். வேனி னீடிய சுர னிறந்தோரே (அகநா. 201). 4. Mirage; கானல். (பிங்.)
வேனில்² vēṉil. , n. prob. வேய்¹-. (பிங்.) 1. Decoration; ஒப்பனை. 2. Beauty; அழகு. 3. Splendour; பொலிவு.

திருநாவுக்கரசர், மேற்காணும் பொருட்களில் அல்லாமல், புதிய பொருளில் 'வேனில்' என்ற சொல்லைக் கையாண்டுள்ளார். அதுதான் 'பனைமரத்தின் நுங்கு' ஆகும். ஆம், வேனில் அதாவது கோடைகாலம் என்றதும் நம் எல்லோருக்கும் உடனே நினைவுக்கு வருவது 'பனைமரத்தின் நுங்கு' தானே?. இன்சுவையும் குளிர்ச்சியும் மிக்க நுங்கினை விரும்பி உண்ணாதவர் யாரே இருக்க முடியும் இவ் உலகில்?.

வேனில் என்பது முதலில் பனைமரம் என்ற பொருளிலும் பின்னர் அதன் பயனாகிய நுங்கினையும் குறிக்கப் பயன்படலாயிற்று. பனைமரம் என்ற பொருளில் இலக்கியத்தில் கீழ்க்காணும் இடங்களில் பயன்படுத்தப் பட்டுளளது.

வேனில் அருஞ்சுரம் தண்ணிய இனிய வாக - ஐங்கு: 303
தண்பத வேனில் இன்ப நுகர்ச்சி - ஐங்கு: 368

மள்ளர் அன்ன மரவந் தழீஇ மகளிர் அன்ன ஆடுகொடி நுடக்கும்
அரும்பதம் கொண்ட பெரும்பத வேனில்.. - ஐங்கு: 400

மேற்காணும் பாடல்களில் வரும் வேனில் என்பது பனைமரத்தினையும் பதம் என்பது நுங்கினையும் குறித்து வந்துள்ளன. ஐங்குறுநூற்றின் 400 ஆவது பாடலில் வரும் உவமை மிக அழகானது. கருமை நிறங்கொண்ட வீரர்களைத் தழுவி நிற்கும் மகளிரைப் போல கரிய பனைமரத்தினைச் சுற்றி மெல்லிய கொடிகள் பரந்துள்ளதைக் கூறுகின்றன அவ் வரிகள். மேலும் சில பாடல்கள்:

வேனில் ஓரிணர் தேனோடு ஊதி ஆராது பெயருந் தும்பி - - குறு. 211
நிழலுரு இழந்த வேனில் குன்றத்து - மதுரை.: 313

எரியணிந்த விளம்பிண்டி யிணரார்ந்த விடமெல்லாம்
பொரியணிந்த புன்குதிர்ந்து பூநாறுந் துறையெல்லாம்
வரியணிந்து வண்டூத வளர்கின்ற இளவேனில்
புரியணிந்த குழலீர்நுஞ் செல்வம்போற் பொலிந்ததே
- சூளாமணி

அகநானூற்றின் 333 ம் பாடல் பனைமரத்தின் மேலுள்ள வரிகள் யானையின் கரிய துதிக்கையில் உள்ள வரிகளைப் போல இருப்பதை நமக்கு நினைவூட்டுகிறது.

வேனில் வெளிற்றுப்பனை போலக் கையெடுத்து
யானைப் பெருநிரை வானம் பயிரும்....

பனைமரத்தின் அருகில் இருந்த ஒரு மரத்தில் அமர்ந்திருந்த பறவை ஒன்று எதையோ உண்டுகொண்டு இருந்தது. அப்போது திடீரென காற்று வீசவும் பனைமரத்தின் நடுவில் இருந்த காய்ந்த ஓலையானது காற்றில் அசைந்து சடசடவென்று ஒலியெழுப்ப, அதைக்கேட்டு அஞ்சிய பறவை உணவை உண்ணாமல் மரத்தைவிட்டுப் பறந்துசென்ற காட்சியைக் கண்முன்னர் காட்டும் சங்கப்பாடல் வரிகள் கீழே:  

வேனில் அரையத்து இலையொலி வெரீஇ
போகில் புகா உண்ணாது பிறிதுபுலம் படரும் .. - ஐங்கு. 325


மேற்காணும் சான்றுகளில் இருந்து வேனில் என்பதற்கு தற்போதைய அகராதிகள் கூறி இருக்கும் பொருட்களைத் தவிர,

பனைமரம், நுங்கு போன்ற பொருட்களும் உண்டென்பது உறுதியாகிறது.

திருந்திய பொருள்:

மேற்கண்ட புதிய பொருட்களின் அடிப்படையில், இப்பாடலின் புதிய பொருள் பின்வருமாறு:

குற்றமிலாத வீணையின் இன்னிசையும், மாலை நேரத்து சந்திரனின் தண்ணொளியும், வீசுகின்ற தென்றலின் குளிர்ச்சியும், பருத்த இள நுங்குகளின் இன்சுவையும், மொய்க்கும் வண்டுகளின் ஆரவார மிக்க மலர்ப் பொய்கையின் வாசமும் போல எந்தையாகிய ஈசனின் திருவடி நீழல் எமக்கு (நீற்றறைக்குள்) இன்பம் நல்கியது.

நிறுவுதல்:

திருநாவுக்கரசருக்கு நீற்றறையில் நேர்ந்த அனுபவத்தினை இப்பாடல் மிக அழகான உவமைகளுடன் கூறுகிறது. பொதுவாக சுண்ணாம்பு சுடப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு நீற்றறைக்குள் சிறை வைக்கப்படும் ஒருவரது ஐந்து புலன்களும் சொல்லொணாத வேதனைகள் அடையும் என்பது அனைவரும் அறிந்த உண்மை. ஆனால், இங்கே சிவபெருமானின் அருளால் திருநாவுக்கரசருக்கு எவ்வித வேதனைகளும் ஏற்படவில்லை. மாறாக, ஐந்து புலன்களுக்கும் நல்ல விருந்து கிடைத்ததாகச் சொல்கிறார் அவர். இந்த ஐம்புல விருந்துகளைப் பற்றியும் ஒவ்வொன்றாகக் கீழே காணலாம்.

முதலில், இப்பாடலில் வரும் வேனில் என்னும் சொல்லுக்கு நுங்கு என்ற பொருள் எவ்வளவு பொருத்தமாயுள்ளது என பார்ப்போம.

வீங்கு இள வேனில் = பருத்த இள நுங்கின் சுவை

நுங்கில் இள நுங்கு, கல் நுங்கு என இருவகை உண்டு. இதில் இள நுங்கானது தொட்டால் மெதுவாக இருக்கும். உள்ளே இன்சுவையுடைய நீரைக் கொண்டிருக்கும். கல் நுங்கானது முதிர்ந்த தன்மையுடன் தொட்டால் கல் போல கடினமாக இருக்கும். இதில் நீர் இருக்காது. கடித்தால் தேங்காயைப் போன்ற சுவையுடன் இருக்கும். மக்கள் பெரும்பாலும் விரும்பிச் சுவைப்பது இள நுங்கினையே. ஏனென்றால் இதன் நீரானது மிக இனிய சுவையுடன் கோடைகாலத்தில் உண்டாகும் உடல் சூட்டைக் குறைக்கும் அளவுக்கு குளிர்ச்சியும் கொண்டிருக்கும். திருநாவுக்கரசர் நீற்றறையில் இருக்கும்போது சுண்ணாம்பின் காரநெடியால் அவரது நாக்கில் கொப்புளங்களோ புண்களோ உண்டாகவில்லை; மாறாக ஈசனின் அருளால் அவரது நாக்கில் இள நுங்கின் இன்சுவை உடைய நீர் ஊறிற்றாம். என்னே ஈசனின் அருள்!.

மாசில் வீணை = குற்றமில்லாத வீணையின் இசை

இசைக்கருவிகள் பலவற்றுள்ளும் வீணைக்கென்று தனிச்சிறப்பு உண்டு. இதன் இசை கேட்பவர் நெஞ்சை நெகிழ்த்தி விடும். கலைமகள் கையிலும் இந்த வீணையே உள்ளது. வீணையிலும் குற்றமில்லாத வீணை அதாவது பிசிறில்லாமல் தெளிவாக இசைக்கும் வீணையின் இசை செவிக்கு பேரின்பம் தருவதாகும். பொதுவாக ஒரு சுண்ணாம்புக் காளவாசலில் சுண்ணாம்பு சுடப்படும் போது வெடிக்கும் சப்தமும், கொதிக்கும் சப்தமும் கலந்த நிலையில் கேட்பவரது காதும் மனதும் புண்ணாகி விடும். ஆனால், திருநாவுக்கரசருக்கோ அப்படி ஒரு நிலை ஏற்படவில்லை. இறைவனின் அருளால் அவரது காதில் குற்றமில்லாத வீணையின் இனிய இசையே கேட்டதாம். என்னே பரமனின் அருள்!

மாலை மதியம் = மாலை நேரத்து சந்திர ஒளி

அதென்ன மாலை நேரத்து சந்திர ஒளி?. சந்திரனின் ஒளியானது இரவு முழுக்க நமக்குக் கிடைத்தாலும் மாலை நேரத்தில் ( 6 மணி முதல் 10 மணி வரை) கிடைக்கும் முதல் ஒளியினையே நாம் பெரும்பாலும் காண்கிறோம. நிலாச்சோறு காட்டி ஊட்டுவதில் இருந்து காதலர்கள் ஒன்றாகக் கூடி கண்ணுற்று மகிழ்வது வரை நிகழும் நிகழ்ச்சிகள் எல்லாம் 10 மணிக்குள் முடிந்துவிடும். அதன்பின்னர் சாமப்பொழுது ( 10 மணி முதல் 2 மணி வரை) துவங்கி விடுவதால் பெரும்பாலும் தூங்கச் சென்று விடுவர். எனவே தான் மாலை நேரத்து சந்திரன் இங்கு பேசப்படுகிறான். பொதுவாக சுண்ணாம்புக் காளவாசலில் ஒருவர் மாட்டிக் கொண்டால், அதிலிருந்து வெளிப்படும் வெப்பம் மிகுந்த புகையினால் கண்களைத் திறந்து பார்க்கவே முடியாது. ஆனால் திருநாவுக்கரசருக்கோ வேறு மாதிரியான காட்சி தெரிகிறது. அவருக்கு புகை மண்டலம் தெரியவில்லை. மாறாக, கண்ணிற்கினியதாய் மாலை நேரத்து சந்திரனின் ஒளியைப்போல தெளிவான இனிமையான காட்சி தெரிகிறது. என்னே ஈசனின் அருள்!

வீசு தென்றல் = வீசுகின்ற தென்றல் காற்றின் குளுமை

கொண்டல், கோடை, தென்றல், வாடை என்ற நால்வகைக் காற்றுள்ளும் தென்றல் காற்று இதமானது மட்டுமின்றி குளுமையானதும் கூட. இதைப்பற்றி தொல்தமிழகம் - பகுதி 1 என்ற ஆய்வுக் கட்டுரையில் விரிவாகக் கண்டுள்ளோம். இனி, நீற்றறையில் சிக்கிக்கொண்ட ஒருவருக்கு அதிலிருந்து வரும் வெப்பக் காற்றினால் அவரது உடல் படும்பாடு சொல்லொணாதது. ஆனால் திருநாவுக்கரசருக்கோ அந்த நீற்றறையில் வெப்பமே தெரியவில்லையாம். மாறாக நீற்றறைக்குள் தென்றல் வீசுவதைப் போல இதமாகவும் உடலுக்குக் குளுமையாகவும் இருந்ததாகச் சொல்கிறார். அட, இதல்லவா ஈசனின் அருள்!

மூசு வண்டறை பொய்கை = மொய்க்கும் வண்டுகள் ஆரவரிக்கும் குளத்து வாசனை

பொதுவாக பொய்கை என்றாலே அதில் அல்லி, தாமரை முதலான பல நீர்ப்பூக்கள் பூத்திருக்கும். இப் பூக்களினால் கவரப்பட்ட வண்டுகள் அப்பூக்களைச் சுற்றிப் பறந்தவாறு அங்குமிங்கும் திரிந்து கொண்டு ஒலி எழுப்பிக் கொண்டிருக்கும். பலவிதமான பூக்களின் நறுமணக் கலவையால் பொய்கைக்கு அருகில் சென்றாலே ஒருவித நறுமண வாசனையை அறிய முடியும். பொதுவாக நீற்றறைக்குள் சுண்ணாம்பின் காரநெடிதான் இருக்கும். இந்தக் காரநெடியால் மூக்கு புண்ணாகி எரிவதுடன் மூச்சடைப்பும் ஏற்படும். ஆனால், திருநாவுக்கரசருக்கோ நீற்றறைக்குள் ஒரு பொய்கையின் மலர் வாசனையே கிடைத்ததாம். நறுமணமிக்க பல பூக்களின் வாசனையை முகர்ந்ததாகக் கூறுகிறார். என்னே சிவனருள்! என்னே சிவனருள்!

முடிவுரை:

இப்படி ஐந்து புலன்களும் வெந்து போகும்படியான ஒரு சுண்ணாம்புக் காளவாசலுக்குள் தள்ளப்பட்ட திருநாவுக்கரசருக்கோ இறையருளால் ஐந்து புலன்களும் மகிழ்ந்து இன்புறுமாறு ஒரு பெரிய விருந்து கிடைத்தது. சுண்ணாம்புக் காளவாசல் அன்றி வேறு ஒரு சாதாரண சிறைக்குள் அவரை அடைத்திருந்தாலும் இப்படி ஒரு ஐம்புலன் விருந்து கிடைத்திருக்காது என்றே சொல்லலாம். ஏனென்றால் சுண்ணாம்புக் காளவாசலில் தான் ஐந்து புலன்களுக்கும் தீங்கு விளைவிப்பதான புகையும் வெப்பமும் ஒலியும் ஒருங்கே இருக்கும். இந்த நீற்றறையில் என்ன நடந்திருக்கும் என்பதை சற்று கற்பனை செய்து தான் பார்ப்போமே.

நீற்றறைக்குள் சிறைவைக்கப்பட்டதும் திருநாவுக்கரசர் திடுக்கிட்டுப் போகிறார். வெப்பமிக்க சுண்ணாம்புப் புகையினால் அவரால் கணகளையே திறக்க இயலவில்லை. கண்களை மூடிக் கொள்கிறார். உடல் சுடுகிறது. நா வறள்கிறது. மூக்கில் சுண்ணாம்புப் புகை புகுந்து துன்புறுத்துகிறது. சுண்ணாம்பு வெடிக்கும் ஒலியும் கொதிக்கும் ஒலியும் காதில் புகுந்து வேதனைப் படுத்துகிறது. இனி சிவனே கதி என்று கண்களை மூடிய நிலையிலேயே அமர்ந்து ஈசனின் ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதத் துவங்குகின்றார். நேரம் கடக்கிறது. எவ்வளவு நேரம் சிவ மந்திரத்தில் ஈடுபட்டிருந்தாரோ அவருக்கே தெரியவில்லை. திடீரென்று இதுவரை கேட்டுக் கொண்டிருந்த வெடியொலியும் கொதியொலியும் அடங்கி விட்டிருந்தது. எங்கிருந்தோ இனிமையான வீணையின் இசை அவரது காதில் கேட்கிறது. துணுக்குற்ற அவர் கண்களைத் திறந்து பார்க்கிறார். என்னே ஆச்சர்யம்! அவர் முன் இருந்த புகை மண்டலம் போய் இப்போது நிலா ஒளிவீசிக் கொண்டிருந்தது. அந் நிலவொளியைக் கண்டு அவர் மகிழ்ந்திருக்கும் நேரத்தில் தென்றல் அவரை 'சுகமா?' என்று நலம் விசாரித்துச் செல்கிறது. திருநாவுக்கரசரின் உடல் குளிர்கிறது. சூழல் முற்றிலும் மாறிப்போன மகிழ்ச்சியில் அவரது நாவில் நீர் ஊறுகிறது. அட, இந்த உமிழ்நீர் ஏன் இன்று இளநுங்கின் நீரைப் போல் இனிக்கிறது? என்று மயங்குகிறார் திருநாவுக்கரசர். ஈசன் நமக்கு அருளிவிட்டானோ? என்ற ஐயம் தோன்றுகிறது அவர் மனதில். ஆம் என்று அவருக்குப் பதிலளிப்பதைப் போல அவரது மூக்கிற்குள் நுழைகிறது பூக்களின் நறுமண வாசம். ஈசனின் அருளால் திக்குமுக்காடிப் போகிறார் திருநாவுக்கரசர். மீண்டும் கண்களை மூடிக்கொண்டு சிவ மந்திரத்தை ஓதத் துவங்குகிறார் நீற்றறையின் கதவுகள் திறக்கப்படும் வரை.

ஓங்குக திருநாவுக்கரசர் புகழ்!          ஓங்கி வளர்க அவர்தம் தமிழ்!
...............................................................................................................................