வெள்ளி, 20 ஜூலை, 2012

அறிந்தும் அறியாமலும்

குறள்:

    நோவற்க நொந்தது அறியார்க்கு மேவற்க
    மென்மை பகைவர் அகத்து.
                                 
             - எண்: 877

தற்போதைய உரைவிளக்கங்கள்:

கலைஞர் உரை: தனது துன்பத்தைப் பற்றி அதனை அறியாமல் இருக்கும் நண்பர்களிடம் சொல்லக்கூடாது. தனது பலவீனத்தைப் பகைவரிடம் வெளிப்படுத்திவிடக் கூடாது.

மு.வ உரை: துன்புற்றதைத் தாமாகவே அறியாத நண்பர்க்குத் துன்பத்தைச் சொல்லக் கூடாது, பகைவரிடத்தில் மென்மை மேற்கொள்ளக் கூடாது.

சாலமன் பாப்பையா உரை: நம் பலம் இன்மையை, தாமாக அறியாத நண்பர்களிடம் சொல்ல வேண்டா; பகைவர்களிடமோ அதைக் காட்டிக் கொள்ளவோ வேண்டா.

உரைத்தவறுகள்:

மேற்காணும் உரைகள் யாவற்றிலுமே இரண்டு கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன. இவற்றில் முதல் கருத்தில் தான் பெரும்பிழை உள்ளது. மேற்காணும் உரைகளின்படி, தனது துன்பத்தைப் பற்றி ஏதும் அறியாமல் இருக்கின்ற நண்பர்களிடத்தில் தமது துன்பத்தைப் பற்றிச் சொல்லக் கூடாது என்பது முதல் கருத்தாகும். இக்கருத்து ஏற்புடையதா என்றால் இல்லை என்றே கூறலாம். இதைப் பற்றிக் கீழே விரிவாகக் காணலாம்.

வள்ளுவர் நட்பின் பெருமையைப் பற்றிப் பல குறள்களில் கூறியுள்ளார். அவற்றுள் மிகவும் சிறப்புடைய ஒரு கருத்தினைக் கீழ்க்காணும் குறள் கூறுகின்றது.

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு. - 788

இதன் பொருளானது: அணிந்திருக்கும் ஆடை உடலைவிட்டு நழுவும்போது எப்படிக் கைகள் உடனடியாகச் செயல்பட்டு அதனைச் சரிசெய்ய உதவுகின்றனவோ அதைப்போல நண்பனுக்கு வரும் துன்பத்தைப் போக்கத் துடித்து செல்வதே நட்புக்கு இலக்கணமாகும்.

இப்படி எது நட்பு, யார் நண்பன் என்று நட்புக்கு இலக்கணம் வகுத்த வள்ளுவன், தனது துன்பத்தை அறியாத நண்பர்களிடத்தில் அதைப் பற்றிக் கூறவேண்டாம் என்று சொல்லியிருப்பாரா?. ஒருபோதும் கூறியிருக்க மாட்டார். ஏனென்றால் தனது நண்பனின் துன்பத்தை, உடுக்கை இழந்தவன் கைபோல,  அவன் கூறாமலேயே அறிந்து அவனுக்கு உதவி செய்பவனே நண்பன் ஆவான். அவ்வாறு செய்யாதவன் நண்பனே அல்லன். இதிலிருந்து நமது தலைப்புக் குறளில் வரும் முதல் கருத்தில் வள்ளுவர் நண்பனைப் பற்றியோ நட்பைப் பற்றியோ கூறவில்லை என்பது தெரிகிறது. அதுமட்டுமின்றி சொல்லுதல் அல்லது கூறுதல் என்னும் பொருளைத் தருவதான எந்த ஒரு சொல்லையும் இக் குறளில் வள்ளுவன் கூறவில்லை. அப்படி இருக்கும்போது நண்பர்களிடத்தில் 'சொல்லக்கூடாது' என்ற பொருளை இவ் உரையாசிரியர்கள் எவ்வாறு கொண்டனர் என்பது புரியாத புதிராக உள்ளது.

இக் குறளில் வரும் இரண்டாவது கருத்தை எடுத்துக் கொண்டால் அதிலும் பிழை இருப்பது தெரிகிறது. 'பகைவர்களிடத்தில் மென்மை மேவ வேண்டாம்' என்று வள்ளுவர் கூறுவதற்குப் பொருளாக, ' பகைவரிடத்து தமது பலவீனத்தைக் காட்டிக் கொள்ள வேண்டாம் ' என்று கொள்வது சற்றும் பொருத்தமற்றதாகும். ஏனென்றால் எந்த ஒரு அரசனும் அல்லது தலைவனும் தனது பலவீனத்தை பகைவரிடத்தில் காட்டிக் கொள்ள மாட்டான். தனது பலவீனத்தைக் காட்டிக் கொள்வது, தான் பகைவரிடத்தில் தோற்பதற்கு சமமாகும் என்பதை எந்த ஒரு தலைவனும் நன்கு அறிவான். எனவே இதற்கு யாரும் அறிவுரை கூறத் தேவையில்லை. இந்தத் தவறான விளக்கத்திற்குக் காரணம் இக் குறளில் வரும் மென்மை என்னும் சொல்லுக்கு பலவீனம் என்ற பொருள் கொண்டதே ஆகும்.

இச்சொல்லின் உண்மைப் பொருள் என்ன என்பதைப் பற்றியும் இக் குறள் உணர்த்தும் உண்மையான கருத்து என்ன என்பதைப் பற்றியும் கீழே விரிவாகக் காணலாம்.

திருத்தம்:

இக் குறளில் வரும் மென்மை என்ற சொல்லுக்கு பொறுமை என்ற பொருளும் நோவுதல் என்ற சொல்லிற்கு துன்புறுத்துதல் என்ற பொருளும் கொள்ளப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இக் குறளின் திருந்திய பொருள் இதுதான்:

தாமறியாமல் தமக்குத் துன்பம் செய்தவரைத் துன்புறுத்த வேண்டாம்; (தாமறிந்தே தமக்குத் துன்பம் செய்யும்) பகைவரிடத்தில் பொறுமை மேற்கொள்ளவேண்டாம்.

நிறுவுதல்:

பகைத்திறந்தெரிதல் என்னும் அதிகாரத்தில் வரும் இக் குறளில் பகைவர்களை இனம் காண்பது பற்றியும் அவர்களை எவ்வாறு நடத்த வேண்டும் என்பது பற்றியும் மிகத் தெளிவாக விளக்கி இருக்கிறார் வள்ளுவர்.

அறிந்தே துன்பம் தருபவன் பகைவன் மட்டுமே. ஆனால் சில சூழ்நிலைகளில் சிலர் தம்மை அறியாமல் பிறர்க்குத் துன்பம் விளைவித்து விடுகின்றனர். தம்மால் பிறர் துன்பத்துக்கு ஆளாகினர் என்பதைக் கூட அவர்கள் அறியாதவர்களாக இருக்கின்றனர். இந்த அப்பாவிகளைப் பகைவர்களாகக் கருதித் தண்டிக்கலாகாது என்பதே வள்ளுவரின் விருப்பமாகும்.

ஆனால் பகைவர்களை.....?  தண்டித்தே ஆக வேண்டும் என்கிறார். ஏனென்றால் பகைவர்கள் தாமறியாமல் துன்பம் செய்பவர்கள் அல்லர். தெரிந்தே துன்பம் தருகின்ற இவர்களைக் குற்றவாளிகளாகக் கருதித் தண்டிக்க வேண்டுமே ஒழிய இவர்களிடத்தில் பொறுமை மேற்கொள்ளக் கூடாது. அப்படி இவர்களிடத்தில் பொறுமை மேற்கொண்டால் என்ன ஆகும்?. இதற்கான பதிலை குறள் 879 ல் கூறுகிறார்.

இளைதாக முள்மரம் கொல்க களையுநர்
கைகொல்லும் காழ்த்த இடத்து.

இக் குறளில் பகைவர்களை முள்மரத்துடன் ஒப்பிடுகிறார். இது ஏன் என்று பார்க்கலாம். இக் குறளில் கூறப்படும் முள்மரமான சீமைக்கருவேலி மரத்திற்கு ஒரு பண்பு உண்டு. ஒரு பெரிய பகுதியின் ஒரு சிறிய இடத்தில் இதன் விதைகளைத் தூவினால் போதும். கடுமையான வறட்சியையும் தாங்கி மளமளவென வளர்ந்து பல்கிப் பெருகி ஒரு பெரிய தோப்பு போல உருவாகி பிற செடிகள் எதனையும் வளரவிடாமல் தடுத்து அந்த பகுதியையே ஆக்கிரமித்து விடும். அதுமட்டுமின்றி இந்த மரத்தை சிறிய செடியாக இருக்கும்போது மட்டுமே வெறும் கைகளால் எளிதாகக் களைய முடியும். சற்று வளர்ந்த நிலையிலும் முட்கள் தோன்றி விடுவதால் களையும்போது கையைக் கிழித்து விடும். இந்த பகைவர்களும் அப்படித்தான் என்கிறார் வள்ளுவர். பகைவர்களை துவக்கத்திலேயே அதாவது அவர்கள் பகைவர் எனக் கண்டறியப்பட்ட போதே தண்டித்துவிட வேண்டும். அவர்களைத் தண்டிப்பதில் எள்ளளவும் பொறுமையைக் கடைப்பிடிக்கலாகாது. அப்படி பொறுமை மேற்கொண்டால் அவர்கள் கையால் களையமுடியாத முள்மரத்தைப் போல வளர்ந்து பல்கிப் பெருகி முடிவில் அரசனுக்கே துன்பம் விளைவிக்கின்ற பெரும் படையாகி விடுவர் என்று எச்சரிக்கிறார் வள்ளுவர். இக்குறளில் வரும் 'இளைதாக' என்ற சொல்லில் தோன்றும் இளமைப் பொருளானது, பகைவரின் இளமைப் பருவத்தைக் குறித்து வாராமல் பகைமை உணர்வின் இளமையை அதாவது துவக்கத்தைக் குறித்தே வருகின்றது என்பது ஈண்டு குறிப்பிடத்தக்கது.

இனி இக் குறளில் வரும் நோவுதல் என்ற சொல்லிற்கு துன்புறுத்துதல் என்ற பொருள் எவ்வாறு வரும் என்பதை பற்றிக் காண்போம். நோவு என்ற பெயர்ச்சொல்லுக்கு சென்னை இணையத் தமிழ்ப்பேரகராதி கீழ்க்காணும் பொருட்களைத் தருகிறது.

நோவு nōvu , n. < நோ-. [K. M. Tu. nōvu.] 1. Pain, hurt, anguish; வலி. 2. Mental anguish; துன்பம்

இந்த நோவு என்ற பெயர்ச்சொல்லில் இருந்து நோவுதல் என்ற வினைச்சொல் பிறக்கிறது.

நோவு -----------------------------------> நோவுதல்
(துன்பம்/வலி)                   (துன்புறுத்துதல்/வலிக்கச்செய்தல்)

இந்த நோவு என்ற சொல் நோதல் என்று தன்வினைச் சொல்லாகவும் வரும்.

நோவு -------------------------------> நோதல்
(துன்பம்)                        ( துன்புறுதல்)

இனி, குறளில் வரும் சொற்களுக்குக் கீழ்க்காணுமாறு பொருள் கொள்வது சாலப் பொருந்தும். .

நோவற்க = துன்புறுத்த வேண்டாம்
நொந்தது = துன்புற்றது
அறியார்க்கு = அறியாதவரை.

இங்கே வேற்றுமை உருபு மயக்கம் வந்துள்ளது. ஐ என்ற உருபிற்கு பதிலாக கு என்ற உருபு மயங்கி வந்துள்ளது. 

மேவற்க = மேற்கொள்ள வேண்டாம்
மென்மை =பொறுமை
பகைவரகத்து = பகைவரிடத்து.

அறியாமல் செய்த பிழையினை பொறுத்துக்கொள்ள வேண்டும்;
அறிந்தே செய்யப்படும் பிழைகளுக்குத் தண்டனை வழங்க வேண்டும்.

என்று மிக இன்றியமையாத ஒரு கருத்தினை எவ்வளவு நேர்த்தியாக இக் குறளில் வள்ளுவர் கூறியிருக்கிறார் பாருங்கள்.!

வாழ்க திருக்குறள்!                                                   வளர்க தமிழ்!
============================================================

10 கருத்துகள்:

 1. அருமையான, மிகச் சரியான விளக்கம். மிகவும் மகிழ்சியாக உள்ளது. வளர்க உங்கள் தமிழ்த் தொண்டு.

  பதிலளிநீக்கு
 2. காலந்தாழ்த்திப் படித்தேனாயினும், இப்போது சிறிது வருந்துகிறேன் அதற்காக.. அருமையான கருத்து..!!

  நன்றிகள் பல

  பதிலளிநீக்கு
 3. உடுக்கை இழந்தவன் - என்ற தொடரில் உடை நழுவியவன் என்ற விளக்கம் வராது. மணக்குடவர், வ.உ.சி. போன்றவர்கள் இது படி எடுத்தோன் பிழை. ‘இழிந்தவன்’ என்பதுதான் சரியான சொல்லாக இருக்க வேண்டும் என்பர். ஆனால் பாட பேதம் செய்ய விரும்பவில்லை என்கின்றனர்.அருவி இழிகிறது. நீரிழிவு எனில் நீர் இறங்குகிறது எனப் பொருள்.

  அது போல.1972-3இல் கிறித்துவக் கல்லூரி ஆண்டு மலரில் இது பற்றி விரிவாக எழுதினேன். பாட பேதம் தேவையில்லை. எப்பொழுது ஒருவன் தன் ஆடையை ”இழப்பான்”? என்று பார்த்தால் பஞ்ச காலங்களில் வழிப்பறிக் கொள்ளையர் “ஆடை பறிக்கும்” வழக்கம் இருந்தது.கைப் பொருள் எதை இழந்தாலும் தன் மானத்தைக் காக்கும் ஆடையை எவனும் இழக்க மாட்டான். கள்வனுடன் போராடி அதை மீட்டு அது இருந்த இடத்திலே சேர்ப்பான் என்பது சிறப்பான விளக்கமாக அமையும்.அதுபோல எப்படியாகிலும் போராடி நண்பன் முன்பு இருந்த நல்ல நிலையிலேயே அவனை அமர்த்துவான் என்பது சிறப்பு.

  பதிலளிநீக்கு
 4. ஜெயபாலன் ஐயா, உடுக்கை இழிந்தவன் என்று பாடபேதம் செய்தாலும் சரியாகத் தான் இருக்கிறது. உடுக்கை இழந்தாலும் சரி, இழிந்தாலும் சரி, முதலில் மானத்தைக் காப்பதற்கு அவனது கைகளே விரைந்து செல்லும் இல்லையா?. அதைப்போலத் தான் நட்பும் துன்பம் சூழ்ந்த போதே உடனடியாகக் காப்பாற்ற விரைவதாய் இருக்க வேண்டும் என்றார் வள்ளுவர். கருத்துப் பகிர்வுக்கு நன்றி ஐயா.

  பதிலளிநீக்கு
 5. நல்ல கருத்து. உங்கள் இலக்கியப் பணி தொடரவேண்டும்.

  பதிலளிநீக்கு
 6. நன்றி மணிவானதி. திருக்குறளுக்கான எனது புதிய விளக்க உரைகளை kuraluraikal.blogspot.in என்ற வலைப்பூவிலும் இட்டு வருகிறேன். அதையும் நீங்கள் படிக்கலாம்.

  அன்புடன்,
  தி.பொ.ச.

  பதிலளிநீக்கு
 7. அருமையான தமிழின் சுவை மிகுந்த பகுதிகளை இந்த கால சூழலுக்கு ஏற்றார் போல புனைந்து கொடுத்திருக்கும் உங்கள் எழுத்து கண்டு வியக்கிறேன் தொடருங்கள் இன்னும் சிறப்பாக .வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.