வெள்ளி, 29 ஜூலை, 2016

முறுவல் என்றால் என்ன?


முன்னுரை:

சங்ககாலம் தொட்டு இன்றுவரையிலும் பயின்றுவரும் பல தமிழ்ச் சொற்களுள் ' முறுவல் ' என்ற சொல்லும் ஒன்றாகும். இச் சொல்லுக்குப் பல பொருட்களை இன்றைய தமிழ் அகராதிகள் வழங்கினாலும், அவற்றில் ஒன்றுகூட பொருந்தாத நிலை இலக்கியங்களில் பல இடங்களில் காணப்படுகிறது. இது இச்சொல்லுக்குப் புதியதோர் பொருள் இருப்பதையே காட்டுகிறது. இச் சொல்லுக்கான புதிய பொருள் என்ன என்பதைப் பற்றியும் அது எப்படி பொருந்துகிறது என்பதைப் பற்றியும் இக் கட்டுரையில் மிக விரிவாக ஆதாரங்களுடன் காணலாம்.

முறுவல் - அகராதிகள் காட்டும் பொருட்கள்:

முறுவல் என்ற சொல்லுக்கு இற்றைத் தமிழகராதிகள் காட்டும் பொருட்களைக் கீழே காணலாம்.

முறுவல் muṟuval, n. 1. Tooth; பல். முத்த முறுவல் (குறள், 1113). 2. Smile; புன்னகை. புதியதோர் முறுவல் பூத்தாள் (கம்பரா. சூர்ப்ப. 5). 3. Happiness; மகிழ்ச்சி. பழிதீர் முறுவல் சிறிதே தோற்றல் (தொல். பொ. 111). 4. An ancient treatise on dancing, not extant; இறந்துபட்டதொரு பழைய நாடகத்தமிழ் நூல். (சிலப். உரைப்பாயிரம், பக். 9.) n. Lettuce-tree, laughing tree; இலச்சைகெட்டமரம். (L.)

பொருள் பொருந்தா இடங்கள்:

முறுவல் என்னும் சொல்லுக்கு அகராதிகள் காட்டும் மேற்காணும் பொருட்களில் எதுவுமே பொருந்தாத பல இலக்கிய இடங்கள் உள்ளன. அவற்றில் சிலவற்றை மட்டும் இங்கே ஆதாரங்களுடன் காணலாம்.

பெண்களின் முறுவலைக் கீழ்க்காணும் பொருட்களுடன் ஒப்பிட்டுப் பல பாடல்கள் உள்ளன.

கடல் முத்து - 18+ பாடல்கள்
முல்லைப்பூ மொக்கு - 7+ பாடல்கள்
நிலவு - 6+ பாடல்கள்
மணி (பளிங்கு) - 4+ பாடல்கள்
முளை (மூங்கில்) காய் - 3+ பாடல்கள்
வெள்ஆம்பல் மொக்கு -  2+ பாடல்கள்
குலிகம் (இலுப்பை)ப் பூமொக்கு - 1 பாடல்

மேற்காணும் பொருட்களை நோக்கினால், அவற்றில் பலவும் வெண்மை நிறத்தவை என்பதுடன் உருண்டு திரண்ட வடிவமும் ஒளிரும் தன்மையும் கொண்டவை என்பது புலப்படும். பெண்களின் முறுவலை மேற்காணும் பொருட்களுடன் ஒப்பிட்டுக் கூறியிருப்பதில் இருந்து, பெண்களின் முறுவலுக்கும் இத்தகைய பண்புகள் உண்டென்பது உறுதியாகிறது. இந்நிலையில்,

பெண்களின் முறுவலுக்கு, அகராதிகள் கூறுகின்ற பல் (மென்று தின்ன உதவும் ஓர் அக உறுப்பு) என்ற பொருளைக் கொள்ள முடியுமா என்றால் முடியாது. காரணம், பல்லுக்கும் மேற்காணும் பொருட்களுக்கும் ( மூங்கில் காய் நீங்கலாக ) இடையே ஒரே ஒரு பண்பு தான் ஒத்திருக்கிறது. அது ' வெண்மை நிறம் ' மட்டுமே. பொதுவாக, ஓரே ஒரு ஒத்த பண்பினைக் கொண்டு அமைக்கப்படும் உவமைகள் பாடலுக்கோ புலவருக்கோ சிறப்பு சேர்க்காது. குறைந்தபட்சம் இரண்டு ஒத்த பண்புகளைக் கொண்டு அமைத்தாலன்றி, உவமைகள் சிறக்காது என்பதுடன் புலவருக்கும் பெருமை சேர்க்காது.

மேலும், முறுவலின் வெண்மை நிறத்தைச் சுட்டுவது மட்டுமே புலவரின் நோக்கமென்றால், வெண்மை நிறம் கொண்ட இயற்கைப் பொருளான பசும்பாலை உவமையாகக் காட்டியிருக்கலாம். பசும்பாலானது இயற்கையிலேயே நல்ல வெண்ணிறம் கொண்டதுடன் நாள்தோறும் மக்கள் பயன்படுத்துகின்ற பொருளும் கூட. ஆனால் புலவர்கள், ஒரு பாடலில் கூட முறுவலைப் பசும்பாலுடன் ஒப்பிட்டுக் கூறவில்லை. இதிலிருந்து முறுவலானது, வெண்மை நிறம் மட்டுமே கொண்ட பல் என்னும் பொருளில் பயன்படுத்தப் படவில்லை என்பது தெளிவாகிறது.

அடுத்து, பெண்களின் முறுவலை முளையுடன் அதாவது மூங்கில் காயுடன் ஒப்பிட்டும் புலவர்கள் பாடியுள்ளனர். ஆனால், மூங்கில் காய்க்கும் பல்லுக்கும் எந்தவொரு ஒப்புமையும் இல்லை என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. இதிலிருந்தும் முறுவல் என்பது பல்லைக் குறிக்காது என்று தெளியலாம்.

இறுதியாக, பல் என்பது வாய்க்குள் அமைந்திருக்கும் ஒரு அக உறுப்பாகும். ஆண்கள் மகிழ்ச்சியில் வாய்விட்டுச் சிரித்து விடுவார்கள். ஆனால், சங்ககாலப் பெண்கள் எவ்வளவுதான் மகிழ்ச்சியாக இருந்தாலும் தமது பற்களெல்லாம் வெளியில் தெரியும் வண்ணம் சிரிக்கமாட்டார்கள். தமது மகிழ்ச்சியினை கண்களாலும் முகத்தினாலுமே வெளிப்படுத்துவார்கள். இதைப்பற்றிய கலித்தொகைப் பாடல் இதோ கீழே.

ஒண்நுதல் ஆயத்தார் ஓராங்கு திளைப்பினும்
முள் நுனை தோன்றாமை முறுவல் கொண்டு அடக்கி தன்
கண்ணினும் முகத்தினும் நகுபவள் பெண் - கலி -142

இதிலிருந்து, பெண்களைப் பொருத்தமட்டிலும் முறுவல் என்பதற்குப் பல் என்னும் பொருள் பொருந்தாது என்பதனை உறுதியாகக் கூறலாம். என்றால், முறுவல் என்னும் சொல் குறிக்கும் புதிய பொருள் என்ன என்று கீழே காணலாம்.

முறுவல் - புதிய பொருள்:

முறுவல் என்னும் சொல் குறிக்கும் புதிய பொருளானது ' கண் ' ஆகும்.

கண் என்று பொதுவாகக் குறிப்பிட்டாலும், பெரும்பாலும் கண்விழியினையே குறிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

நிறுவுதல்:

முறுவல் என்பதற்குக் கண் / கண்விழி என்ற பொருள் எவ்வாறு பொருந்தும் என்பதனைக் கீழே பல ஆதாரங்களுடன் காணலாம்.

பொதுவாக ஒரு சொல் குறிக்கும் பொருளை நன்கு விளங்கிக்கொள்ள, அப் பொருளுக்கு உவமையாகக் கூறப்படும் பிற பொருட்களின் பண்புகளை விளங்கிக் கொள்வது இன்றியமையாதது. ' உன் நண்பனைப் பற்றிச் சொல்; உன்னைப் பற்றிக் கூறுகிறேன் ' என்ற சொல்லாடலுக்கேற்ப, உவமானங்களின் அதாவது உவமையாகக் கூறப்படும் பொருட்களின் பண்புகளைக் கொண்டு உவமேயத்தின் அதாவது உவமிக்கப்படும் பொருளின் தன்மையினை நன்கு அறிந்துகொள்ளலாம். இதனால் உவமேயம் எதைக் குறிக்கிறது என்பதை எளிதில் புரிந்துகொள்ள முடியும். அவ்வகையில், முறுவல் என்னும் சொல் எதைக் குறிக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள, முதலில் முறுவலுக்கு உவமையாகக் கூறப்படும் பொருட்களைப் பற்றி விரிவாக அறிந்துகொள்வது நலம் பயக்கும். பொதுவாக, இலக்கியங்கள் முறுவலுக்கு உவமையாகக் கீழ்க்காணும் பொருட்களைக் கூறுகின்றன.

கடல் முத்து - 18+ பாடல்கள்
முல்லைப்பூ மொக்கு - 7+ பாடல்கள்
நிலவு - 6+ பாடல்கள்
மணி (பளிங்கு) - 4+ பாடல்கள்
முளை (மூங்கில்) காய் - 3+ பாடல்கள்
வெள்ஆம்பல் மொக்கு -  2+ பாடல்கள்
குலிகம் (இலுப்பை)ப் பூமொக்கு - 1 பாடல்

இப் பொருட்களைப் பற்றி விரிவாகக் கீழே காணலாம்.

முறுவலும் முத்தும்:

பெண்களின் விழியினை கடலில் விளையும் முத்துடன் உவமைப்படுத்துவது இலக்கிய வழக்கம் தான். இதைப்பற்றி ' கண்ணகி மதுரையை எரித்தது எப்படி? என்ற ஆய்வுக் கட்டுரையில் முன்னரே விரிவாகக் கண்டுள்ளோம். அக் கட்டுரையில், பெண்களின் கண்ணை 'முலை' என்ற சொல்லால் குறித்து, அதனைக் கடல்முத்துடன் உவமைப்படுத்திக் கூறி இருப்பார்கள். இக் கட்டுரையில், பெண்களின் கண்ணை 'முறுவல்' என்று குறிப்பிட்டுள்ளார்கள். அவ்வளவு தான் வேறுபாடு. 

பொதுவாக, சிப்பியில் விளையும் முத்துக்கள் சிறியதும் பெரியதுமாய் பல அளவுகளில் இருக்கும். இவற்றில் ஆணி முத்து எனப்படுவதானது பெரிய அளவில் உருண்டு திரண்டு நல்ல வெண் நிறத்தில்  ஒளிரும் தன்மையுடன் விளங்குவதாகும். பெண்கள் மகிழ்ச்சியுடன் இருக்கும்போது, அவர்களது உருண்டு திரண்ட கண் விழிகள் நல்ல வெண்ணிறத்தில் ஒளிவீசி அழகுடன் காணப்படும். இப்படி மகிழ்ச்சியுடன் இருக்கும் பெண்களின் அழகிய கண்விழிகளைத்தான் புலவர்கள் முத்துடன் உவமைப்படுத்திக் கூறியிருக்கின்றனர்.

அதுமட்டுமின்றி, கடலில் விளையும் இயற்கை முத்தின் குறுக்குவெட்டுத் தோற்றத்தினை நோக்கினால் ஒரு ஆச்சரியம் உண்டாகும். அருகில் இதற்கான படம் இணைக்கப்பட்டுள்ளது. இப் படத்தைப் பார்த்தால், முத்தின் நடுவில் சிறிய கருமையான பகுதி இருப்பதையும் அதைச்சுற்றிலும் சில வளையங்கள் இருப்பதையும் காணலாம். இவ் அமைப்பானது அப்படியே மாந்தரின் கண்விழியின் அமைப்பினை ( அதாவது நடுவில் கருமையும் அதைச்சுற்றி வளையங்களும் முடிவில் வெள்ளைநிறமும் ) ஒத்திருப்பதை அறியலாம். இக் காரணங்களால்தான் தமிழ்ப் புலவர்கள் பெண்களின் கண்விழியினை கடல் முத்துடன் ஒப்பிட்டுக் கூறியிருக்கின்றனர். இனி, பெண்களின் விழிகளை முத்துடன் ஒப்பிட்டுக் கூறும் பாடல்களில் சிலவற்றை மட்டும் இங்கே விளக்கங்களுடன் காணலாம்.

வீங்கு இறை பணை தோள் மெத்தென் சாயல் முத்து உறழ் முறுவல்
பூங்குழைக்கு அமர்ந்த ஏந்து எழில் மழை கண் - நெடு - 36

இப்பாடலில் வரும் இறை என்பது கண்ணிமையினையும், தோள் என்பது கண்ணின் திரண்ட புறவிளிம்பினையும் குறிக்கும் என்று முன்னர் பல கட்டுரைகளில் கண்டுள்ளோம். இந்நிலையில், கண்ணின் அழகினைப் பாராட்டுவதாக அமைந்திருக்கும் இப்பாடலில் வரும் முறுவல் என்பதும் கண்ணையே அன்றி பல்லைக் குறித்துவர இயலாது அன்றோ.?

இதோ கீழ்க்காணும் பாடலிலும் அத்தகையதோர் அழகியலைக் காணலாம்.

மாரி வீழ் இரும் கூந்தல் மதைஇய நோக்கு எழில் உண்கண்
தாழ் நீர முத்தின் தகை ஏய்க்கும் முறுவலாய் - கலி -131

இப் பாடலில் வரும் கூந்தல் என்பது கண்ணிமையினைக் குறிக்கும் என்று முன்னர் கட்டுரையில் கண்டுள்ளோம். கண்ணழகினைப் பாராட்டும் இப் பாடலிலும் முறுவல் என்பது கண்ணையே அன்றி பல்லைக் குறிக்க வாய்ப்பில்லை. அடுத்து, வள்ளுவர் காட்டும் முறுவலைக் காண்போம்.

முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்
வேலுண்கண் வேய்த்தோள் அவட்கு - குறள்:1113

பொருள் விளக்கம்: மாந்தளிர் போன்ற கண்ணிமைகளையும், முத்துப் போன்ற விழிகளையும், மயக்குகின்ற காட்சி (கண் பார்வை) யினையும், வேல்போல கூர்மையாக மைதீட்டிய கண்களையும், மூங்கில்காய் போலத் திரண்ட கண் விளிம்புகளையும் உடையவள் அவள்.

இப் பாடலில் வரும் மேனி என்பது கண்ணிமையினையும், தோள் என்பது கண்ணின் திரண்ட புறவிளிம்பினையும் குறிக்கும் என்று முன்னர் கண்டுள்ளோம். முழுக்க முழுக்க காதலியின் கண்ணழகினைப் பாராட்டும் இப் பாடலில் வரும் முறுவல் என்பதற்கு கண்விழியெனப் பொருள்கொள்ளாமல் பல் என்று பொருள் கொண்டால் அது பொருந்தாமல் போவதுடன் நகைப்புக்குரியதும் ஆகிறது.!. இப் பாடலில் வரும் நாற்றம் என்பதற்கு காட்சி அல்லது பார்வை எனப் பொருள்கொள்வதே சாலச் சிறந்தது. இது எவ்வாறு பொருந்துமெனின்,

நாற்றம் என்பதற்கு தோற்றம் என்று அகராதிகள் பொருள் கூறுகின்றன. இதிலிருந்து, தோற்றம் = காட்சி = காட்சிக்குரிய பார்வை எனக் கொள்ளலாம்.

அடுத்து, சிந்தாமணியில் இருந்து ஒரு பாடலைக் காணலாம்.

தத்தும் நீர் பவளத்து உறை நித்திலம்
வைத்த போல் முறுவல் துவர் வாயினீர் - சிந்தா - 895

பொருள்விளக்கம்: கடலில் விளையும் செம்பவளத்தின் நடுவில் பொதிந்துவைத்த வெண்முத்தினைப் போலச் செவ்வண்ணம் பூசிய புறவிதழ்களின் நடுவில் வெண்ணிற ஒளிவீசும் விழியுடையீர்....

மேற்காணும் உவமையைச் சரியாகப் புரிந்துகொள்ள அருகில் உள்ள பவளத்தின் படத்தைப் பாருங்கள். இதில் கண்போன்று தோன்றும் பகுதியின் நடுவில் உள்ள நீலநிற முத்துப்போன்ற பகுதிக்கு பதிலாக வெண்ணிறமுத்து இருப்பதாகக் கொண்டால், அதைச் சுற்றியும் சிவப்பு வண்ணப் பகுதியிருக்க, இது பார்ப்பதற்கு பெண்களின் ஒளிவீசும் வெண்ணிற விழியும் அதைச் சுற்றியும் செந்நிறம் தடவிய பகுதியும் போலத் தோன்றுமன்றோ !.

அடுத்து கம்பராமாயணத்தில் இருந்தும் ஒரு பாடலைக் காண்போம்.

மூடுண்ட முறுவல் முத்தும் முள்ளுண்ட முளரிச் செங்கண் - கம்ப. யுத் - 3/4

பொருள்விளக்கம்: சிப்பிக்குள் மூடிய முத்துப் போலும் (இமைகளுக்கிடையிலான) விழியும் கூரிய செந்தாமரை மொக்குப்போலும் (செவ்வரி தீட்டிய) கடைக்கண்ணும்......

முறுவலும் பூக்களும்:

பெண்களின் முறுவலை முல்லை, ஆம்பல், குலிகம் (இலுப்பை) மலர்களுடன் ஒப்பிட்டுப் பல பாடல்களில் பாடியுள்ளனர் புலவர். அவ்வாறு அவர்கள் உவமைப்படுத்தியதன் காரணம் யாதெனில்,

பொதுவாக மேற்காணும் மலர் மொக்குகள் தோன்றும்போது வெண்ணிறத்தில் நன்கு உருண்டு திரண்டு காணப்படும்; மேலும் அவற்றுக்கு மலர்ச்சியும் தளர்ச்சியும் உண்டு. பெண்களின் கண்விழிகளும் அவ்வாறே; வெண்ணிறத்தில் உருண்டு திரண்டு காணப்படும் விழிகளுக்கு மலர்ச்சியும் தளர்ச்சியும் உண்டு. ஆனால் பற்கள் யாருக்கும் உருண்டு திரண்டு அமைவதில்லை என்பதுடன் இவற்றுக்கு மலர்ச்சியோ தளர்ச்சியோ இல்லை. எனவே, பெண்களைப் பொருத்தமட்டில், முறுவல் என்பது ஒருபோதும் பல்லைக் குறித்துவராது என்பதை உறுதியாக அறிந்துகொள்ளலாம்.

மலர்களில் முதலில் முல்லை மலர்பற்றிக் காணலாம். பொதுவாக, முல்லை என்னும் பெயர் பலவகை மலர்களைக் குறிக்கப் பயன்படுகிறது. காட்டுமல்லிகை, கொடிமல்லிகை, ஊசிமல்லிகை உட்பட பல மல்லிகை மலர்களையும் முல்லை என்ற பெயராலேயே குறித்து வந்துள்ளனர். இதைப்பற்றிச் சென்னைத் தமிழ்ப் பேரகராதியே கூறுகிறது.

 முல்லை mullai , n. [T. molla, K. molle, M. mulla.] 1. Arabian jasmine, m. sh., Jasminum sambac; கொடிவகை. முல்லை வைந்நுனை தோன்ற (அகநா. 4). 2. Trichotomus-flowering smooth jasmine, m.cl., Jasminum trichotomum; கொடி வகை. (L.) 3. Wild jasmine. See காட்டுமல் லிகை. (L.) 4. Eared jasmine. See ஊசிமல் லிகை, 1. (L.) 5. Pointed leaved wild jasmine, m. cl., Jasminum malabaricum; கொடிவகை. (L.)

இவற்றில் முதல்வகையாகக் காட்டப்படுகின்ற ஜாஸ்மினம் சம்பக் என்ற மல்லிகைப் பூவே பெண்களின் வெண்ணிற விழிகளுக்கு உவமையாகக் கூறப்படுவதாகும். காரணம், இம் மலரின் மொக்குகளானவை பெரியதாய் நல்ல வெள்ளைநிறத்தில் உருண்டு திரண்டு காணப்படும். அருகில் உள்ள படம் இதனை விளக்கும். இப்படி நிறம் மற்றும் வடிவம் ஆகிய இரண்டு பண்புகளால் ஒத்திருப்பதால்தான் பெண்களின் விழிகளை முல்லை மலர் மொக்குகளுடன் ஒப்பிட்டுப் பாடியுள்ளனர் புலவர்.

மாதரார் முறுவல் போல் மண மௌவல் முகை ஊழ்ப்ப - கலி -27

இப்பாடலில் பெண்களின் வெண்ணிற விழிகளைப் போல மணமௌவல் அதாவது மல்லிகை மலர்மொக்குகள் தோன்றியிருப்பதாகக் கூறுகிறார் புலவர். மௌவல் என்பதற்கு மல்லிகை என்றும் முல்லை என்றும் பொருள் உரைக்கிறது சென்னைத் தமிழ்ப் பேரகராதி.

மௌவல் mauval , n. 1. Wild jasmine. See காட்டுமல்லிகை. ஞாழன் மௌவல் (குறிஞ்சிப். 81). 2. Arabian jasmine. See முல்லை, 1. (சூடா.) 3. Lotus; தாமரை. மௌவ னீண்மலர் மேலுறை வானொடு (தேவா. 1213, 13).

அடுத்து குலிக மலர் பற்றிக் காணலாம்.

முருக்கு இதழ் குலிகம் ஊட்டிவைத்தன்ன முறுவல் செவ்வாய் - சிந்தா -1454

விளக்கம்: சிவந்த முருக்கமலரின் இதழ்களுக்கிடையில் இலுப்பையின் வெண்ணிற மலர்மொக்கினை பொதிந்துவைத்தது போல செவ்வண்ணம் பூசிய இமைகளுக்கிடையில் ஒளிரும் வெண்விழி.....

இப் பாடலில் வரும் முருக்க மலரின் இதழ்கள் சிவந்த நிறமுடையவை. இவை படத்தில் இருப்பதுபோல் தனித்தனியாக தடித்தும் வளைந்தும் இருக்கும். குலிகம் என்பது மதுகா லாங்கிஃபோலியா என்று அழைக்கப்படும் இலுப்பை (இருப்பை) யைக் குறிக்கும். இதன் பூக்கள் உருண்டு திரண்டு வெள்ளை நிறத்தில் கண் போன்ற வடிவிலேயே இருக்கும். மேலே உள்ள படம் இதனை விளக்கும். இரண்டு முருக்கப் பூவிதழ்களின் நடுவில் ஒரு இலுப்பைப் பூமொக்கினைப் பொதிந்துவைத்தால் அது பார்ப்பதற்கு உண்மையாகவே செந்நிறம் பூசிய இமைகளுக்கிடையில் ஒளிரும் வெண்ணிறக் கண்விழி போலவே தோன்றும் அல்லவா?.

அடுத்து ஆம்பல் மலர் பற்றிக் காணலாம்.

முகம் தாமரை முறுவல் ஆம்பல் கண் நீலம் - திணை.நூற்.-72

முகமோ தாமரை மலர் போல மலர்ந்திருக்கிறதாம்; அதிலுள்ள கண்விழிகளோ வெள்ஆம்பல் மலர் போல வெண்ணிறத்தில் அழகாக ஒளிர்கிறதாம்; அவ் விழிகளின் மேலுள்ள மையுண்ட கண்ணிமைகளோ நீலமலர் போன்று தோன்றுகிறதாம். என்ன ஒரு கற்பனை பாருங்கள் புலவருக்கு.! 

முறுவலும் மூங்கிலும்:

பெண்களின் கண்ணை மூங்கில் காயுடன் ஒப்பிட்டுப் பாடுவது இலக்கிய வழக்கமே. இதைப்பற்றி தோள் என்றால் என்ன? என்ற கட்டுரையில் ஏற்கெனவே பல ஆதாரங்களுடன் கண்டுள்ளோம். அக் கட்டுரையில் பெண்களின் கண்ணை 'தோள்' என்ற சொல்லால் குறித்து, அதை மூங்கிலின் திரண்ட காய்களுடன் ஒப்பிட்டுக் கூறியிருப்பார்கள். இக் கட்டுரையில், பெண்களின் கண்ணை 'முறுவல்' என்ற சொல்லால் குறித்து, அதை மூங்கில் காய்களுடன் ஒப்பிட்டுப் பாடியுள்ளார்கள். அவ்வளவு தான் வேறுபாடு.

முளை நிரை முறுவல் ஒருத்தியொடு நெருநல் - ஐங் 369
முளை நிரை முறுவலார் ஆயத்துள் எடுத்து ஆய்ந்த - கலி - 15
முளை நேர் முறுவலார்க்கு ஓர் நகை செய்து - கலி 98

இப் பாடல்களில் வரும் முளை என்பதற்கு மூங்கில் என்ற அகராதிப் பொருளைக் கொள்ளவேண்டும். நிரை என்பது இங்கே திரளுதல் என்ற அகராதிப் பொருளைக் குறிக்கும். ஆக, இப்பாடல்களில் பயின்றுவரும்

முளை நிரை முறுவல் = மூங்கில்(காய்) போலத் திரண்ட விழி

மூங்கில் காய்களின் படம் அருகில் இணைக்கப்பட்டுள்ளது. அதைப் பார்த்தால், பெண்களின் திரண்ட விழிகளைப் போலவே உருண்டு திரண்டு கூரிய முனையுடன் விளங்குவதைக் காணலாம். இதனால் தான் புலவர்கள் இவ் இரண்டையும் உவமைப்படுத்திக் கூறியுள்ளனர்.

முறுவலும் நிலவும்:

பெண்களின் கண்ணை நிலவுடன் உவமைப்படுத்திப் புலவர்கள் பாடுவதும் இலக்கிய வழக்கம் தான். இதைப் பற்றி ' நுதலும் நுதலப்படாத கருத்துக்களும் ' என்ற ஆய்வுக் கட்டுரையில் முன்னரே ஆதாரங்களுடன் கண்டுள்ளோம். அக் கட்டுரையில், பெண்களின் கண்ணை 'நுதல்' என்ற சொல்லால் குறிப்பிட்டு, அதனை நிலவுடன் குறிப்பாக பிறைநிலவுடன் ஒப்பிட்டுப் பாடியிருப்பார்கள். இக் கட்டுரையில், பெண்களின் கண்ணை 'முறுவல்' என்ற சொல்லால் குறிப்பிட்டு அதனை நிலவுடன் ஒப்பிட்டுப் பாடியுள்ளனர். அவ்வளவே வேறுபாடு.

வாள் நிலா முறுவல் - கம்ப. பால -6
வாள் நிலா முறுவலன் வயங்கு சோதியை - கம்ப. ஆர- 13

இப்பாடலில் வரும் ' வாள் நிலா முறுவல் ' என்பது ' ஒளிவீசும் நிலவு போன்ற கண்கள் ' என்று பொருள்படும். நிலவானது ஒரு கோள வடிவில் வெண்ணிற ஒளிவீசும் தன்மையது. அதுமட்டுமின்றி, அதற்கு வளர்ச்சியும் தேய்வும் உண்டு. அதனால் தான் அதனை பெண்களின் கண்களுக்கு உவமையாகப் பயன்படுத்தி உள்ளனர். ஆனால், யாருடைய பற்களும் கோளவடிவில் இருப்பதில்லை என்பதுடன் அவற்றுக்கு வளர்ச்சியும் தேய்வும் இல்லை. எனவே பெண்களின் முறுவல் என்பது அவரது கண்களையே அன்றி, பற்களைக் குறிக்க வாய்ப்பில்லை என்பதை இதிலிருந்தும் முடிவு செய்யலாம். இன்னும் சில பாடல்கள் கீழே தரப்பட்டுள்ளன.

முத்தினும் நிலவினும் முறுவல் முற்றினாள் - கம்ப. சுந்தர. -98
துண்ட வெண் பிறை நிலவு என முறுவலும் தோன்ற - கம்ப. யுத் - 3/77

முறுவலும் பளிங்கும்:

பெண்களின் கண்விழிகளை ஒளிரும் பளிங்குடன் ஒப்பிட்டும் சில பாடல்களைப் பாடியுள்ளனர். அவற்றுள் சில கீழே:

துகிர் புரையும் செவ்வாய் மணிமுறுவல் - பழ. -226
தீம்கதிர் வாள்முகத்தாள் செவ்வாய் மணிமுறுவல் - சிலப்.புகார் 7
மணிமுறுவல் தோன்ற வந்தனை -சிந்தா - 1126

இப் பாடல்களில் வரும் மணி என்பது பளிங்கு என்னும் அகராதிப் பொருளைக் குறிப்பதாகும். செவ்வாய் என்பதற்கு சிவந்த உதடுகளை உடைய வாய் என்று தவறாகப் பொருள்கொண்டுள்ளனர். உண்மையில் இது செந்நிறம் பூசிய விளிம்புகளைக் குறிப்பதாகும். இது எவ்வாறெனில்,

வாய் என்பதற்குப் பலவேறு பொருட்களை அகராதிகள் காட்டினாலும் விளிம்பு என்ற பொருளும் உண்டு.

வாய்³ vāy , cf. vāc. [T. vāyi, K. bāy, M. vāy.] n. 1. Mouth; beak of birds; உதடு அல்லது அலகு இவற்றினிடையிலுள்ள உறுப்பு. (பிங்.) கய வர்வா யின்னாச் சொல் (நாலடி, 66). 2. Mouth, as of cup, bag, ulcer, etc.; பாத்திரம் முதலியவற்றின் திறந்த மேற்பாகம். வாயில்லை நாமங்கள் செப்ப . . . முத்திபெற்ற தென்னோ தயிர்த்தாழியுமே (அஷ்டப். திருவரங். மாலை, 53). புண்வாய் கிழித்தன (பெருந் தொ. 701). 3. Mouthful; வாய்கொண்ட வளவு. நாலுவாய் உண்டான். 4. Lip; உதடு. வாய்மடித் துரறி (புறநா. 298). (நாமதீப. 587.) 5. Edge, rim; விளிம்பு. பொன்னலங்கல் . . . வாயருகு வந் தொசிந்து (சீவக. 595).

கண்ணின் விளிம்புகளில் அதாவது கண்ணைச் சுற்றிலும் செவ்வண்ணம் பூசியிருப்பதையே செவ்வாய் என்ற சொல்லாடல் குறிக்கிறது. ஆக,

துகிர் புரையும் செவ்வாய் மணிமுறுவல் என்பது செம்பவளம் போலத் தோன்றுமாறு செந்நிறம் கொண்டு பூசப்பட்ட விளிம்புகளையும் பளிங்கு போல ஒளிவீசும் விழிகளையும் குறிக்கும். அருகில் உள்ள பவளத்தின் படத்தைப் பாருங்கள். இதில் கண்போன்று தோன்றும் பகுதியின் நடுவில் உள்ள நீலநிற முத்துப்போன்ற பகுதிக்கு பதிலாக பளிங்கு இருப்பதாகக் கொண்டால், அதைச் சுற்றியும் சிவப்பு வண்ணப் பகுதியிருக்க, இது பார்ப்பதற்கு பெண்களின் ஒளிவீசும் விழியும் அதைச் சுற்றியும் செந்நிறம் தடவிய பகுதியும் போலத் தோன்றுமன்றோ !.

கம்பராமாயணத்தில் முறுவல்:

கம்பராமாயணத்தில் இருந்து முறுவல் குறித்த சில பாடல்களை நாம் ஏற்கெனவே மேலே கண்டிருந்தாலும், இங்கே இன்னும் சிலவற்றைக் காணலாம். ராமனின் கண் அழகினை கம்பன் வர்ணிக்கும் அழகினை இங்கே படித்து இன்புறலாம்.

ஆரமும் அகிலும் நீவி அகன்ற தோள் அமலன் செவ்வாய்
நாரம் உண்டு அலர்ந்த செம் கேழ் நளினம் என்று உரைக்க நாணும்
ஈரம் உண்டு அமுதம் ஊறும் இன் உரை இயம்பாதேனும்
மூரல் வெண் முறுவல் பூவா பவளமோ மொழியல்பாற்றே - கம்ப. சுந்தர. -52

அந்த இரண்டாம் வரியினைப் பாருங்கள். செவ்வாய் நாரம் அதாவது சிவந்த அலகுடைய நாரையினைப் போல  செவ்வரி பூசிய அலர்ந்த கண் என்று கூற நாணமாம். ஏன்?. அதில் ஈரம் இருக்கிறதே; அமுதம் போன்ற (ஆனந்தக் கண்) நீர் ஊறுகிறதே; செவியுறும் வண்ணம் இனிய உரையேதும் செய்யவில்லையே; அப்படியானால் அது கண்தானே?. இருக்கலாம். இருந்தாலும் அதை வெறுமனே கண் என்று கூறமுடியவில்லை. அத்தனை அழகு !!!. மலர்ச்சியுடன் வெண்நிறத்தில் திகழும் அதனை மலர் என்று கூறுவதா?. பவளம் என்று கூறுவதா?. எதையும் என்னால் சொல்ல முடியவில்லையே. !!!

இப் பாடலில் கம்பர் வர்ணனை செய்திருக்கும் முறையைப் பாருங்கள். ராமனின் கண் அழகினை இதைவிடப் புகழ முடியுமா ஒருவரால்.?. இதோ கம்பராமாயணத்தில் இருந்து இன்னொரு பாடல்.

இந்திர நீலம் ஒத்து இருண்ட குஞ்சியும்
சந்திர வதனமும் தாழ்ந்த கைகளும்
சுந்தர மணி வரை தோளுமே அல
முந்தி என் உயிரை அம் முறுவல் உண்டதே - கம்ப. பால - 56

சீதை, தனது உயிரை உண்டதாக எதைக் கூறுகிறாள் பாருங்கள். ராமனின் கருநிறத் தலைமயிர் அல்ல; நிலவு போல ஒளிவீசும் முகமும் அல்ல; தாழ்ந்த கைகளும் அல்ல; மலைபோலத் திரண்டு உயர்ந்த தோளும் அல்ல; என் உயிரை முதலில் உண்டது அவனது கண்களே என்று கூறுகிறாள். இதைத்தான் அண்ணலும் நோக்கினாள்; அவளும் நோக்கினாள் என்றும் தோள் கண்டார் தோளே கண்டார் என்றும் பின்னர் விரித்துக் கூறுவார் கம்பர்.

முடிவுரை:

இதுகாறும் மேலே கண்டவற்றில் இருந்து, பெண்களைப் பொருத்தமட்டிலும் முறுவல் என்ற சொல்லுக்கு கண்விழி என்ற பொருளும் உண்டு என்பதனைப் பல ஆதாரங்களுடன் அறிந்தோம். இனி, முறுவல் என்பது ஆண்களுக்கும் சில இடங்களில் கண் என்ற பொருளில் பயன்பட்டு வந்துள்ளது என்பதனைச் சில சான்றுகளுடன் காணலாம்.

வீரர் வீரனும் முறுவலும் வெகுளியும் வீங்க - கம்ப. சுந்தர - 34
கேட்ட அண்ணலும் முறுவலும் சீற்றமும் கிளர - கம்ப. யுத் - 3/34

இப் பாடல்கள் முறுவல் ஆகிய கண்விழிகளில் சினம் தோன்றிப் பெருகுவதையே கூறுகின்றன.
=================  வாழ்க தமிழ் ! ==============

வெள்ளி, 8 ஜூலை, 2016

திருக்குறளில் முயக்கம்

முன்னுரை:

சங்கப் புலவர்கள் தமிழுக்குக் கொடையாய் அளித்த பல அழகிய தமிழ்ச்சொற்களுள் முயங்கு, முயக்கு, முயக்கம் போன்றவையும் அடங்கும். எப்படி ' அல்குல் ' என்ற அழகிய தமிழ்ச் சொல்லுக்கு பண்பாட்டுக்கு ஒவ்வாத அசிங்கமான பொருளை இன்றைய அகராதிகள் அளித்து தமிழ்ப் புலவர்களின் மாண்பையும் ஒட்டுமொத்தத் தமிழரின் மானத்தையும் காற்றில் பறக்கவிட்டதோ அதைப்போலவே இந்த மூன்று சொற்களுக்கும் சரியான பொருட்களைக் கூறத் தவறிவிட்டது. விளைவு?. திருக்குறள் உட்பட பல தமிழ் இலக்கியங்களை ஆசிரியர்களும் மாணவர்களும் தவறாகப் புரிந்துகொண்டதுடன், தமிழ்ப் புலவர்கள் கண்ணியமற்றவர்களாகப் பார்க்கப்படுகிறார்கள்.

தமிழ்ப் புலவர்களின் உயர்ந்த நோக்கமானது மறக்கப்பட்டோ மறைக்கப்பட்டோ இருட்டடிப்புக்கு உள்ளாகிப் போனது. அவர்கள் சொல்லவந்த அழகிய பீடுடைய கருத்துக்கள் மக்களால் புகழப்படாமல் கவனிப்பாரற்று கலையிழந்து நிற்கின்றன. இதுகாறும் நிலவிவந்த இந்நிலையானது இனியேனும் மாறவேண்டும் என்ற நோக்குடன் இக் கட்டுரையானது எழுதப்படுகிறது. இந்த மூன்று சொற்களும் உண்மையிலேயே எவ்வளவு அழகிய பொருளுடையவை என்பதை இக் கட்டுரையில் பல ஆதாரங்களுடனும் விளக்கங்களுடனும் காணப் போகிறோம். இக் கட்டுரையின் முதல் பகுதியில் திருக்குறளில் இந்த சொற்கள் பயின்றுவரும் இடங்களையும் அவற்றுக்கான விளக்கங்களையும் காணலாம்.

முயக்கம் - தற்போதைய அகராதிப் பொருள்:

முயங்கு, முயக்கு, முயக்கம் ஆகிய சொற்களுக்கு தற்போதைய தமிழ் அகராதிகள் காட்டுகின்ற பொருட்கள் எவையெவை என்று கீழே தரப்பட்டுள்ளது.

முயக்கம் muyakkam , n. < முயங்கு-. 1. Embrace; தழுவுகை. பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் (குறள், 913). 2. Copulation; புணர்ச்சி. முயக்கம் பெற்றவழி (ஐங்குறு. 93, உரை). 3. Connection; uniting, joining; சம்பந்தம். ஆணவத் தின் முயக்கமற்று (தணிகைப்பு. நந்தி. 110).

முயக்கு muyakku , n. See முயக்கம். வளியிடை போழப் படாஅ முயக்கு (குறள், 1108). முன்பு மாதவப்பயத்தினாலவண் முயக்கமர்வார் (தணி கைப்பு. நாட்டுப். 48).

முயங்கு-தல் muyaṅku- , 5 v. tr. 1. To embrace; தழுவுதல். முயங்கிய கைகளை யூக்க (குறள், 1238). 2. To copulate with; புணர்தல். அறனில்லான் பைய முயங்கியுழி (கலித். 144). 3. To join; to cling to; பொருந்துதல். முலையு மார்பு முயங்கணி மயங்க (பரிபா. 6, 20). 4. To do, perform; செய்தல். மணவினை முயங்கலில்லென்று (சூளா. தூது. 100).

அனைத்துத் தமிழ் அகராதிகளும் மறுக்காமல் கூறும் ஒரே பொருள் முயக்கம் / முயக்கு / முயங்கு என்றால் ' தழுவுகை / தழுவுதல் ' என்பதாகும். அதாவது ஒருவருக்கொருவர் உடலால் ஒன்றிணையும் செய்கை. ஆணும் பெண்ணுமாக உடலால் ஒன்றிணைவதான உடலுறவும் இதில் அடங்குவதாகக் கொண்டு உரையாசிரியர்கள் பொருள்கூறுகின்றனர்.

பொருள்தவறுகளும் உரைத்தவறுகளும்:

முயக்கம் / முயக்கு / முயங்குதல் என்பதற்கு தழுவுதல் அல்லது உடலுறவு என்ற பொருள் பொருந்தாது என்பதனைச் சில குறள்களின் மூலம் இங்கே காணலாம்.

வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை
போழப் படாஅ முயக்கு - குறள் 111:8

திருக்குறளையும் திருவள்ளுவரையும் தவறாகப் புரிந்துகொள்ளக் காரணமான பல குறள்களில் தலையாய குறள் இதுதான். இக் குறளுக்குக் கூறப்பட்டிருக்கும் உரைவிளக்கங்களைப் படித்துப்பார்த்தால் அனைவருக்கும் அவ்வாறுதான் தோன்றும். இதோ இக் குறளுக்குத் தற்போதைய உரையாசிரியர்கள் கூறியிருக்கும் விளக்கங்களைக் கீழே காணலாம்.

மு.வ உரை: காற்று இடையறுத்துச் செல்லாதபடி தழுவும் தழுவுதல், ஒருவரை ஒருவர் விரும்பிய காதலர் இருவருக்கும் இனிமை உடையதாகும்.

பரிமேலழகர் உரை: (ஒத்த அன்புடைய நுமக்கு ஒரு பொழுதும் விடாத முயக்கமே இனியது என வரைவுகடாய தோழிக்குச் சொல்லியது.) (நீ சொல்லுகின்ற தொக்கும்) வளி இடை போழப்படா முயக்கு - ஒரு பொழுதும் நெகிழாமையின் காற்றால் இடையறுக்கப்படாத முயக்கம்; வீழும் இருவர்க்கு இனிதே - ஒருவரையொருவர் விழைவார் இருவர்க்கும் இனிதே. (முற்று உம்மை விகாரத்தால் தொக்கது. ஏகாரம் தேற்றத்தின்கண் வந்தது. 'ஈண்டு இருவர் இல்லை இன்மையான், இஃது ஒவ்வாது' என்பது கருத்து. களவிற்புணர்ச்சியை மகிழ்ந்து வரைவு உடன்படான் கூறியவாறு.).

மணக்குடவர் உரை: ஒத்த காதலுடையார் இருவர்க்கும் இனிதாம்; காற்றால் இடை யறுக்கப்படாத முயக்கம். இது புணர்ச்சி விருப்பினால் கூறினமையால் புணர்ச்சி மகிழ்தலாயிற்று. இது குறிப்பினால் புகழ்ந்தது.

அதாவது, காற்றுகூட இடையறுத்துச் செல்ல முடியாதபடிக்கு உடலால் இணைந்து தழுவிக்கிடப்பதே காதலர்க்கு என்றென்றும் சுகமாம். எப்படி இருக்கிறது விளக்கம்?. வள்ளுவர் என்ன காதலர்களுக்கு செக்ஸ் பாடமா நடத்துகிறார்?. வள்ளுவர் சொல்லாவிட்டால் காதலர்க்கு செக்ஸ் பற்றி தெரியாதா?. காதல் செய்யும் இருவர்க்கு காதலின் இலக்கணத்தைச் சொல்லித் தராமல் கலவியின் இலக்கணத்தையா வள்ளுவரைப் போன்ற ஆன்றோரும் சான்றோரும் கற்றுத் தருவார்கள்?. இக் காலத்தில் காதலர் பலர் காதலிக்கும்போதே உடலுறவு கொள்கின்றனர். அதைப்போலவே அக் காலத்திலும் காதலர்கள் செய்திருப்பார்கள் என்று நாமாக நினைத்துக்கொண்டு இப்படி ஒரு தவறான விளக்கம் கூறுவது முறையாகுமா?. இப்படிப்பட்ட விளக்கங்களைப் படிக்கின்ற நல்ல காதலர்கள் கூட, ' வள்ளுவரே சொல்லிவிட்டார், இனி நமக்கென்ன ' என்று தவறிழைக்கத் துவங்கி விடுவார்களே. உண்மையைச் சொன்னால், இக் காலத்தில் இதுபோன்ற தவறான உடலுறவுகள் பெருகிப் போனதன் காரணமும் இத்தகைய தவறான விளக்கமே.

தமிழ் சினிமா வந்த புதிதில் எடுக்கப்பட்ட படங்களில் காதலனும் காதலியும் தூரமாகத் தள்ளி இருந்தே காதலிப்பார்கள். ஒருவரையொருவர் கண்களால் பார்த்துப் பேசிக்கொள்வதும் காதலியைக் காதலன் பாராட்டுவதும் காட்டப்பட்டிருக்கும். திருமணமாகும்வரை, அவர்கள் ஒருவருக்கொருவர் விரல்நுனியால் தொட்டுக் கொள்வதைக் கூட காணமுடியாது. எம்.கே. தியாகராஜ பாகவதரின் ' வதனமே சந்த்ர பிம்பமோ' என்ற காதல் பாடலை இதற்கொரு காட்டாகக் கொள்ளலாம். இலக்கியங்களின் வழிவழியாக சொல்லப்பட்டு வந்த காதலின் இலக்கணத்தை அப்படியே படம்பிடித்துக் காட்டியிருப்பார்கள். ஆனால் இன்றைய திரைப்படங்களில் காதலின் நிலை என்ன என்று சொல்லத் தேவையில்லை. அனைவருக்கும் அப்பட்டமாகத் தெரிந்த ஒன்றுதான். 

அதுமட்டுமல்ல, இக் குறளானது புணர்ச்சிமகிழ்தல் என்ற அதிகாரத்தின் கீழ் காதலர்க்கு காதலின் சிறப்பை உணர்த்த வருவதாகும். பல கட்டுப்பாடுகளையும் தடங்கல்களையும் மீறி காதலர் இருவர் சந்தித்துக் கொள்கின்றனர். அப்போது ஒருவருக்கொருவர் ஆசைதீரக் கண்டு எப்படியெல்லாம் மனதுக்குள் மகிழ்கின்றனர் என்பதை அழகாக அவர்களது அக உணர்வுகளின் வழியாக படம்பிடித்துக் காட்டியிருக்கிறார் வள்ளுவர். ஆனால், முயக்கு என்ற ஒரே ஒரு சொல்லுக்குத் தவறான பொருளை அகராதிகள் கற்பித்ததன் விளைவாக, வள்ளுவர் வரைந்திருந்த அந்த அழகோவியம் அழிக்கப்பட்டு அலங்கோலம் ஆகிவிட்டிருக்கிறது. முயக்கு என்பதற்கு தழுவுதல் எனப் பொருள்கொண்டால், அது என்ன காற்று இடையறுத்துச் செல்ல முடியாத ஒரு தழுவல்?. இருவரும் கைகளை நெகிழ்த்தாமல் ஒருவருக்கொருவர் இறுக்கிக் கட்டிப் பிடித்திருப்பதா?. இறுக்கிக் கட்டிப்பிடித்தபடி எவ்வளவு நேரம்வரை இருக்கமுடியும்?. கொஞ்சநேரம் அப்படி இருந்தாலே இருவருக்கும் வேர்த்து விறுவிறுத்துவிடும்; மூச்சும் முட்டிவிடும். இதில் எங்கே இன்பம் காண்பது?. துன்பம் தான் !.

இதோ இதே மாதிரியான ஒரு விளக்கத்தினை கீழ்க்காணும் குறளுக்கும் கொடுத்திருக்கிறார்கள் உரையாசிரியர்கள்.

முயக்கிடை தண்வளி போழ பசப்புற்ற
பேதை பெருமழைக் கண் - குறள் 124:9

மு.வ உரை: தழுவுதலுக்கு இடையே குளி்ந்த காற்று நுழைய, காதலியின் பெரிய மழை போன்ற கண்கள் பசலை நிறம் அடைந்தன.

பரிமேலழகர் உரை: (இதுவும் அது.) முயக்கிடைத் தண் வளி போழ - அங்ஙனம் கைகளை ஊக்குதலான் அம் முயக்கிடையே சிறுகாற்று நுழைந்ததாக; பேதை பெருமழைக்கண் பசப்புற்ற - அத்துணையிடையீடும் பொறாது, பேதையுடைய பெரிய மழைக் கண்கள் பசப்புற்றன; அத்தன்மையவான கண்கள், மலைகளும் காடும் நாடுமாய இவ்விடையீடுகளையெல்லாம் யாங்ஙனம் பொறுத்தன? (தண்மை - ஈண்டு மென்மைமேல் நின்றது. 'போழ' என்றது, உடம்பு இரண்டும் ஒன்றானது தோன்ற நின்றது. மழை - குளிர்ச்சி).

மணக்குடவர் உரை: யான் பிரிவதாக நினைத்து முயக்கத்தின்கண்ணே எனது உடம்பை அகற்ற, அம்முயக்கிடையே சிறு காற்று ஊடறுத்தலானே எனது நீக்கத்தைப் பொறாது பேதையுடைய பெருத்த குளிர்ந்த கண்கள் பசப்புற்றன. இது முதலாக மூன்று குறள் தலைமகன் கூறுவன.

அதாவது, தழுவிக் கிடந்த காதலர்க்கிடையில் குளிர்காற்று வீசியதும் காதலியின் கண்களின் நிறம் மாறியதாம். என்ன ஒரு விளக்கம்?!!!. பசப்பு என்பதற்கு நிறமாற்றம் எனப் பொருள்கொண்டு, காதலியின் கண்கள் உடனுக்குடன் நிறம் மாறுவதாகப் பொருள்கூறி இருப்பது இயல்புக்கு முரணான ஒரு கருத்தாகும். ஏனென்றால், பச்சோந்தி கூட தனது முழு உடலைத்தான் நிறம் மாற்றிக் கொள்ளும். ஆனால், இங்கே காதலியின் கண்கள் மட்டும் நொடிக்கொருமுறை நிறம் மாறுவதாகக் கூறுவது அறிவுக்கும் சரி அறிவியலுக்கும் சரி புறம்பான ஒன்றேயாகும். அடுத்து, இக் குறளுக்கான விளக்க உரையில் உள்ள முக்கியமான தவறைப் பார்க்கலாம்.

முயக்கு என்பதற்கு தழுவுதல் எனப் பொருள்கொண்டால், காதலனும் காதலியும் ஒருவரையொருவர் தமது கைகளால் மற்றவர் உடலை ஆரத் தழுவி இருக்கவேண்டும். இந்நிலையில், காதலனின் கைகள் சற்று நெகிழ்ந்தாலும், காதலியும் தனது கைகளை நெகிழ்த்தாலொழிய அங்கே குளிர்ந்துகாற்று இடைபுகுந்து செல்ல முடியாதல்லவா?. காதலன் தன்னைவிட்டுப் பிரிந்துசெல்வதை விரும்பாத எந்தக் காதலியும் தனது கைகளை மேலும் இறுக்கிக் கொள்வாளே ஒழிய நெகிழ்த்த விரும்பமாட்டாள். அப்படி அவள் விரும்பியே நெகிழ்த்தியிருக்கும் பட்சத்தில், ஏன் அவள் கண்கலங்கி வருந்தி அழவேண்டும்?. இது முன்னுக்குப் பின் முரணாக உள்ளதல்லவா?. இதிலிருந்து நாம் புரிந்துகொள்ள வேண்டிய கருத்து யாதெனில், முயக்கு என்பது ஒருபோதும் தழுவுதலாக இருக்க வாய்ப்பில்லை என்பதுதான். இக் கருத்துக்கு அரணாக உள்ள வேறு சில குறள்களையும் கீழே காணலாம்.

விளக்கற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கன்
முயக்கற்றம் பார்க்கும் பசப்பு - குறள் 119:6

மு.வ உரை: விளக்கினுடைய மறைவைப் பார்த்துக் காத்திருக்கின்ற இருளைப் போலவே, தலைவனுடைய தழுவுதலின் ‌சோர்வைப் பார்த்து பசப்பு காத்திருக்கின்றது.

பரிமேலழகர் உரை: (இதுவும் அது.) விளக்கு அற்றம் பார்க்கும் இருளேபோல் - விளக்கினது மெலிவு பார்த்து நெருங்கி வரும் இருளே போல்; கொண்கன் முயக்கு அற்றம் பார்க்கும் பசப்பு - கொண்கன் முயக்கினது மெலிவு பார்த்து நெருங்கி வரும் இப்பசப்பு. ('பார்க்கும்' என்பன இலக்கணைச் சொல். 'முன் பிரியாதிருக்கவும் தனக்கு அவகாசம் பார்த்து வரும் பசப்பு, பிரிவு பெற்றால் என் செய்யாது'? என்பாம்.).

மணக்குடவர் உரை: விளக்கினது இறுதிபார்க்கும் இருளே போலக் கொண்கன் முயக்கினது இறுதிபார்த்து நின்றது பசப்பு. இஃது அவர் பிரிந்தது இப்பொழுது; இப்பசப்பு யாங்ஙன் வந்தது என்று தோழிக்குத் தலைமகள் கூறியது.

இக் குறளில் இருளை பசப்புடனும் விளக்கொளியினை முயக்குடனும் உவமைப்படுத்திக் கூறியிருக்கிறார் வள்ளுவர். இருளானது விளக்கொளியினை எப்படி மறைக்குமோ அதைப்போல பசப்பானது முயக்கினை மறைக்கும் என்பதை இதிலிருந்து புரிந்துகொள்ளலாம். இதில் முயக்கு என்பதற்கு அகராதிகள் கூறுகின்ற தழுவுதல் என்ற பொருளைக் கொண்டால், ' பசப்பானது தழுவுதலை மறைக்கும் ' என்று பொருள்படும். ஆனால், உண்மையில் அவ்வாறு நிகழாது என்பதால் இப் பாடலில் வரும் முயக்கு என்பதற்கும் தழுவுதல் என்ற பொருள் பொருந்தாது என்பதனை அறிந்துகொள்ளலாம். அத்துடன் மேலே நாம் கண்ட குறளைப் போலவே இக் குறளிலும் காதலனின் முயக்கு நீங்கியதும் காதலியின் கண்கள் கலங்குவதாகக் கூறப்படுவதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். 

அடுத்து, விளக்கொளி நீங்கியதும் இருள் சூழ்வதைப் போல, தலைவனின் தழுவல் நீங்கியதும் அவளது மேனியின் நிறம் மாறியதாம். எப்பேர்ப்பட்ட விளக்கம்?!!!. இதிலும் பாருங்கள், பசப்பு என்பதற்கு நிறமாற்றம் எனப் பொருள்கொண்டு, தலைவியின் உடல் நிறம் நொடிக்கொருமுறை மாறுவதாக உரை கூறி இருக்கிறார்கள். தலைவி என்ன மனிதப் பிறவியா இல்லை வேற்றுக் கிரகத்து வாசியா?. எப்படி இருந்தாலும், இப்படி அடிக்கடி நிறம் மாறுகின்ற உடலை உடையவர்கள் வேற்றுக் கிரகத்தில் இருப்பதாகக் கூட கேள்விப்பட்டதில்லை !!!. இதிலிருந்து, காதலியின் உடல் நிறம் மாறுவதாகக் கூறியிருப்பது இயல்புக்கு முரணான ஒன்றென்று அறியலாம். அடுத்து இன்னொரு குறள்:

தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால்
அம்மா அரிவை முயக்கு. - 1107.

மு.வ உரை: அழகிய மா நிறம் உடைய இவளுடைய தழுவுதல், தம்முடைய வீட்டிலிருந்து தாம் ஈட்டிய பொருளைப் பகுந்து கொடுத்து உண்டாற் போன்றது.

பரிமேலழகர் உரை: (இவளை நீ வரைந்துகொண்டு உலகோர் தம் இல்லிருந்து தமது பாத்துண்ணும் இல்லறத்தோடு படல் வேண்டும் என்ற தோழிக்குச் சொல்லியது ) அம்மா அரிவை முயக்கம் - அழகிய மாமை நிறத்தையுடைய அரிவையது முயக்கம்; தம்மில் இருந்து தமது பாத்து உண்டற்று - இன்பம் பயத்தற்கண் தமக்குரிய இல்லின்கண் இருந்து உலகோர் தம்தாளான் வந்த பொருளைத் தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல்கட்குப் பகுத்துத் தம் கூற்றை உண்டாற் போலும். (தொழில் உவமம். 'இல்லறஞ்செய்தார் எய்தும் துறக்கத்து இன்பம் எனக்கு இப்புணர்ச்சியே தரும்' என வரைவு உடன்படான் கூறியவாறாயிற்று).

மணக்குடவர் உரை: தம்மிடத்திலேயிருந்து, தமது தாளாண்மையால் பெற்ற பொருளை இல்லாதார்க்குப் பகுத்து உண்டாற்போலும், அழகிய மாமை நிறத்தினையுடைய அரிவை முயக்கம்.

வள்ளுவரின் மாண்பினை இழிவுசெய்யும் விதமாகக் கூறப்பட்டிருக்கும் உரைவிளக்கங்களில் இதுவும் ஒன்றாகும். அதாவது, காதலன் தனது காதலியிடம் பெற்ற உடற்சுகத்தினைத் தனது தோழனிடம் கூறுவதாக உரையாசிரியர்கள் பொருள் உரைத்துள்ளனர். இது வள்ளுவரின் மாண்புக்கு ஒருபோதும் அரணாகாது; முரணே ஆகும். காதலிக்கும் இருவர் திருமணமாகும் வரையிலும், ஒருவரையொருவர் தொட்டுக் கொள்வதே தவறென்று கூறும் வள்ளுவம், இப்படி ஒரு கருத்தினை தமிழ்ச் சமுதாயத்திற்கு எடுத்துரைக்குமா?. வள்ளுவர் காலத்தில் இருந்த தமிழ்ச் சமுதாயத்தின் நிலை இதுதானென்றால், இன்று நமது சமுதாயம் இது போன்ற தவறான உடலுறவுக்கு ஏன் மறுப்பு சொல்லவேண்டும்?. நமது முன்னோர்கள் இயற்றிய பண்பாடே தவறானதென்றால், இன்றைய நமது நாகரிகமும் மேலைநாட்டாரது போன்று திருமணத்திற்கு முன்பான உடலுறவினை அனுமதித்து இருக்க வேண்டுமே. ஆனால், நமது சமுதாயம் அப்படிச் செய்யவில்லை என்பதிலிருந்தே வள்ளுவர் காலத்திலும் அத்தகைய உடலுறவுகள் நிகழ்ந்திருக்கவில்லை என்பதையும் வள்ளுவரும் அத்தகைய ஒரு தவறான பண்பாட்டினை தமது பாடல்களில் சுட்டிக் காட்டவில்லை என்பதையும் அறிந்துகொள்ளலாம்.

அதுமட்டுமின்றி, பலருடன் உணவினைப் பகிர்ந்துண்ணும் நிகழ்வினை காதலியுடன் கொண்ட உடலுறவுக்கு ஒப்பிட்டுக் கூறி இருக்கிறார்கள் உரையாசிரியர்கள். இது காதலிக்கோ காதலனுக்கோ எவ்விதத்திலாவது பெருமை சேர்க்குமா?. இல்லை இதை ஒரு பாடலாக வடித்தெழுதும் புலவருக்குத் தான் புகழ் சேர்க்குமா?. அதுமட்டுமின்றி, இக் கருத்தானது, காதலியை பலருடன் உறவுகொள்ளும் ஒரு விலைமாதுவாகக் கருதவும் இடமளித்து விடுகிறதே. இப்படி ஒரு இழிவான உரை எழுதும் முன்னர், ஏன் இவர்கள் சிந்திக்கவில்லை என்பது புரியவில்லை. ஆனால், ஒன்று மட்டும் புரிகிறது. புணர்ச்சி மகிழ்தல் என்ற அதிகாரத்தில் வரும் புணர்ச்சி என்பதற்கு உடலுறவு என்று தவறாகப் பொருள் கொண்டதே இதுபோன்ற இழிவான விளக்க உரைகளுக்கு அடிகோலி இருக்கிறது. இதுபோல இன்னும் பல தவறான விளக்கங்கள் இருக்கின்றன. அவற்றை நிறுவுதல் பகுதியில் விரிவாக, காணலாம். அதற்குமுன், முயங்கு, முயக்கு, முயக்கம் ஆகிய சொற்கள் குறிக்கும் புதிய பொருட்கள் எவையென்று கீழே காணலாம்.

முயக்கு / முயக்கம் / முயங்கு - புதிய பொருள் என்ன?

முயக்கம், முயக்கு, முயங்கு ஆகிய சொற்கள் குறிக்கும் புதிய பொருட்கள் எவை என்று இங்கே காணலாம்.

முயங்கு = பார்
முயக்கு / முயக்கம் = பார்வை

பார்வை என்று வெறுமனே சொன்னாலும் இது காதல் கலந்த பார்வையினையோ அன்பு கலந்த பார்வையினையோ தான் குறிக்கும். கண்ணும் கண்ணும் கொள்ளையடித்துக் கொள்ளும் காதல் பார்வையில் கட்டுண்டு காதலனும் காதலியும் மெய்ம்மறந்து நிற்பர். இதனையே முயக்கு என்றும் முயக்கம் என்றும் குறள் கூறுகிறது. காதலர்கள் தம் ஏக்கம் தீர ஒருவருக்கொருவர் ஆரக்கண்டு மகிழ்தல் என்றும் இதற்குப் பொருள்கொள்ளலாம். முயக்கிலும் உண்மை முயக்கம், பொய்ம்மை முயக்கம் என்று இருவகை உண்டு. பொருட்பெண்டிரான விலைமாதரின் கண்கள் வீசும் காதல் பார்வையானது பொய்ம்மை முயக்கமாகும். ஏனையவை உண்மை முயக்கமாகும். 

நிறுவுதல்:

முயங்கு, முயக்கு, முயக்கம் என்பனவற்றுக்கு புதிய பொருட்கள் எவ்வாறு பொருந்தும் என்று இங்கே காணலாம்.

முயங்கு, முயக்கு, முயக்கம் ஆகிய மூன்று சொற்களுக்குமான ஒரே வேர் ' முய் ' என்பதாகும். இவற்றுக்கு மட்டுமின்றி, முயல், முயற்சி போன்ற சொற்களுக்கும் முய் என்பதே வேராகும்.

இந்த முய் என்னும் வேர் குறிக்கும் பொருள் ' திறத்தல் ' ஆகும். இந்த வேரிலிருந்து பிற சொற்கள் எவ்வாறு தோன்றின என்பதையும் அவை எவ்வாறு அவற்றுக்கான பொருட்களைப் பெற்றன என்பதைப் பற்றியும் கீழே காணலாம்.

முய் ----> முயல் = கண் திறந்தவாறே பிறக்கின்ற விலங்கினம். இது ஆங்கிலத்தில் ஹேர் என்று அழைக்கப்படும்.

பாலூட்டிகள் இனத்தில் புதிதாகப் பிறக்கும் குட்டிகள் கண்ணை மூடிய நிலையில் பிறப்பதுதான் இயல்பான ஒன்றாகும். ஆனால், இந்த முயல் மட்டும் விதிவிலக்காகும். குட்டிகள் பிறக்கும்போதே கண் திறந்த நிலையில் இருக்கும். அதுமட்டுமின்றி, பிறந்த சில நிமிடங்களில் துள்ளிக் குதித்து ஓடத் துவங்கிவிடும். முயலின் இந்த சிறப்புப் பண்பே அதாவது பிறக்கும்போதே கண்திறந்து பார்த்துக்கொண்டே பிறக்கின்ற பண்பே அதற்கு முயல் என்ற பெயரைப் பெற்றுத்தந்தது எனலாம்.

முய் ----> முயங்கு = கண் திற அதாவது பார்.
முய் -----> முயக்கு / முயக்கம் = கண் திறந்து பார்த்தல் அதாவது பார்வை.
முய் -----> முயற்சி = செயலுக்கான முதல் திறப்பு.

இனி, முயக்கம், முயங்கு, முயக்கு ஆகிய சொற்கள் புதிய பொருட்களில் எவ்வாறு பொருத்தமாக அமைகின்றன என்பதைப் பாடல் விளக்கங்களுடன் காணலாம்.

தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால்
அம்மா அரிவை முயக்கு - குறள் 111:7

தி.பொ.ச. உரை:: தனது இல்லத்திற்கு வந்த விருந்தினர்கள் தமது உணவுகளைத் தன்னுடன் பகிர்ந்து உண்டால் ஏற்படும் மகிழ்ச்சியினை, எனது அழகிய காதலியின் காதல் பார்வை எனக்குள் உண்டாக்கியது.

பொதுவாக, வீட்டுக்கு வரும் விருந்தினர்கள் வெறும் கையுடன் வந்து நமது வீட்டில் விருந்துண்டு செல்வது வழக்கம். ஆனால், இங்கே விருந்தினர்கள் அதுவும் நமக்கு மிகவும் பிடித்த விருந்தினர்கள் வீட்டுக்கு வரும்போதே சில உணவுகளைக் கொண்டுவருகின்றனர். அப்படிக் கொண்டுவந்த உணவுகளை வீட்டில் உள்ளவர்களுடன் பகிர்ந்துண்கின்றனர். இது அவ் வீட்டில் உள்ளோருக்கு மிக்க மகிழ்ச்சியைத் தருமல்லவா?. அதைப்போல, காதலியானவள் தனது கண்களால் காதல் பார்வைவீசி காதலனின் கண்கள் வழியாக அவனது மனதுக்குள் விருந்தினராகப் புகுந்துவிடுகிறாள். புகுந்தவள் தனது காதல்மொழிகளை அவனுடனும் அவனது காதல்மொழிகளை தனக்குமாக பரிமாறிக்கொள்கிறாள். இதனால் களிபேருவகை கொள்ளும் காதலன் பின்னாளில் அதை நினைத்துப் பார்த்து அதனை தனது தோழனிடம் சொல்லி மகிழ்கிறான். காதலியின் காதல் பார்வை உண்டாக்கும் பேரின்பத்தை உணவினைப் பகிர்ந்துண்பதால் உண்டாகும் மகிழ்ச்சியுடன் ஒப்பிட்டதன் மூலம் வள்ளுவரின் நுண்மாண் நுழைபுலம் தெற்றென வெளிப்படுவதை அறியலாம்.

பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில்
ஏதில் பணம்தழீஇ அற்று - குறள் 92:3

தி.பொ.ச. உரை:: விலைமாதரின் பொய்யான காதல்பார்வையானது, இருட்டறையில் பிறரது பணத்தைத் திருடுவதற்கு ஒப்பானது.

ஒரு வீட்டில் திருடச் செல்லும் ஒருவன் அங்கே எரிந்துகொண்டிருந்த சிறுவிளக்கினை அணைத்து அறையினை இருட்டாக்கி விடுகிறான். காரணம், வீட்டில் உள்ளவர்கள் தன்னை பார்த்துவிடக் கூடாதென்று. பின்னர், பணம் இருக்கும் இடத்துக்குச் சென்று பணப்பெட்டியினைத் தழுவியவாறு வெளியேறிவிடுகிறான். இன்னொருவன் விலைமாதரிடம் இன்பம் துய்க்க வருகிறான். அங்கே விலைமாதுவானவள், தனது பொய்யான காதல் பார்வையினால் அவன் மனதுக்குள் புகுந்து அவனது அறிவு என்னும் விளக்கை அணைத்து அவனைச் சிந்திக்கவிடாமல் செய்துவிடுகிறாள் அதாவது அவனை வசியம் செய்துவிடுகிறாள். பின்னர் மிக எளிதாக அவனது பொருளைக் கொள்ளையடித்துச் சென்றுவிடுகிறாள். இந்த இருவரையும் இப் பாடலில் ஒப்புமைசெய்கிறார் வள்ளுவர். இங்கே வள்ளுவர் கூறும் உவமைநயங்கள் நினைந்து இன்புறத்தக்கவை.

திருடச்செல்பவன் எப்படி சிறுவிளக்கினை அணைத்து அறையினை இருட்டாக்குகிறானோ அதைப்போல விலைமாதரின் காதல் பார்வையானது தன்னை விரும்பியவரின் அறிவு விளக்கினை அணைத்து அறியாமை இருளை ஏற்றுகிறது.

பிறர்க்குரிய பணத்தினை திருடன் கைக்கொண்டு செல்வதைப் போல விலைமாதுவும் தன்னை விரும்பியவரின் பணத்தை விரும்பிக் கைப்பற்றிக் கொள்கிறாள். இக் குறட்பாவில் பிணம் என்று வருவது பாடவேறுபாடு. விலைமாதரின் காதல் பார்வை பற்றிக் கூறும் இன்னொரு குறளைக் கீழே பார்ப்போம். 

ஆயும் அறிவினர் அல்லார்க்கு அணங்கென்ப
மாய மகளிர் முயக்கு - குறள் 92:8

தி.பொ.ச. உரை: விலைமாதரின் காதல் பார்வையானது நீங்காத மையல்நோயாகும் என்னும் உண்மையினை ஆராயும் அறிவுடையோரன்றி பிறர் அறியமாட்டார்.

இதுவும் முன்னர் சொன்ன குறள் விளக்கத்துடன் தொடர்புடையதுதான். விலைமாதரின் காதல் பார்வையானது அறிவு விளக்கினை அணைத்து அறியாமை இருளை ஏற்றுமென்று முன்னர் கண்டோம். இதனால் தனது சிந்திக்கும் திறனை இழந்து விலைமாதரின் வசியத்திற்கு ஆளாக, அது ஒரு தீராத மையல்நோயாக மாறுகிறது. இதனையே அணங்கு என்று குறித்தார் வள்ளுவர். இந் நோயின் வாய்ப்பட்டோர் மீண்டும் மீண்டும் அவ் விலைமாதரையே நாடி அனைத்தையும் இழந்து இழிநிலை அடைவர். இதற்கு ஒரு காட்டாக, சிலப்பதிகார நாயகனாம் கோவலனைச் சொல்லலாம். மாதவி என்னும் கணிகையின் வசப்பட்டு தனது மதியழிந்து அனைத்தையும் இழந்த கதை நாடறியும். விலைமாதரின் காதல் பார்வையில் விழுந்தால் அதோ கதிதான் என்னும் உண்மையினை அறிந்துகொள்ள ஆராயும் அறிவு வேண்டும் என்று கூறுகிறார் வள்ளுவர். காரணம், அது இருந்தால்தான் அவரது பார்வையில் இருந்து தப்பிக்கவே முடியும் என்றும் அது இல்லாவிட்டால் அப் பார்வையினைச் சந்தித்துத் தன்னை இழக்க நேரிடும் என்றும் எச்சரிக்கிறார்.

விளக்கற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கன்
முயக்கற்றம் பார்க்கும் பசப்பு - குறள் 119:6

தி.பொ.ச. உரை: விளக்கின் ஒளி அணைவதனை எப்படி இருளானது எதிர்பார்த்துக் கொண்டுள்ளதோ அதைப்போல காதலனின் காதல்பார்வை ஒளி அணைவதை கண்ணீரானது எதிர்பார்த்துக் கொண்டுள்ளது.

காதலனும் காதலியும் காதல் பார்வையினால் கட்டுண்டு இருக்கின்றனர். இருவரும் கண்களாலேயே காதல்மொழி பேசிக்கொண்டு மகிழ்ந்தவாறு இருக்கின்றனர். திடீரென்று காதலனின் பார்வை அணைகிறது. அதாவது எதற்காகவோ காதலன் சிறிதுநேரம் தனது கண்ணை மூடுகிறான். ஒருசில இமைப்பொழுது நேரம் மூடியிருப்பான். கண் திறந்து பார்த்தால் காதலியின் கண்களில் கண்நீர் கோர்த்து முட்டிக்கொண்டு நிற்கின்றது. ' அட, என்ன பெண் இவள். ஒரு இமைப்பொழுது நேரம் கூட எனது பார்வை அவள் கண்ணைவிட்டு விலகுவதைத் தாங்க மாட்டாதவளாய் இருக்கிறாளே. விளக்கின் ஒளி எப்போது அணையும் என்று இருள் காத்துக்கிடப்பதைப் போல எனது காதல் பார்வை எப்போது அகலும் என்று இவளது கண்ணீர் இவள் கண்ணை மறைக்கக் காத்திருக்கிறதே.' என்று காதலியின் அன்பு குறித்துப் பெருமை கொள்கிறான் காதலன். இப் பாடலில் வள்ளுவர் காட்டும் உவமை நயங்கள் அருமையானவை.

விளக்கினை கண்ணுக்கும்
விளக்கின் ஒளியினை காதல் பார்வை ஒளிக்கும் (கண்ணொளிக்கும்)
இருளை கண்ணீருக்கும்

ஒப்புமை செய்கிறார் வள்ளுவர். பசப்பு என்பது கண்ணீரைக் குறிக்கும் என்று ' பசப்பு என்றால் என்ன? ' என்ற கட்டுரையில் முன்னரே கண்டுள்ளோம். இனி அடுத்த குறளைக் காணலாம்.

வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை
போழப் படாஅ முயக்கு - குறள் 111:8

தி.பொ.ச. உரை: காற்று இடைபுகுந்து வீசினாலும் திசைமாறாத காதல்பார்வையே காதலர் இருவருக்கும் இனிமை பயப்பதாகும்.

காதல் வயப்பட்டு காதல் பார்வையில் கட்டுண்டு மெய்ம்மறந்து நிற்கும் காதலர்க்கு இனிமை தருவது எது என்று இப் பாடலில் கூறுகிறார் வள்ளுவர். காற்று எங்கும் எப்போதும் வீசிக் கொண்டிருப்பதுதான். காதல் பார்வையில் மெய்ம்மறந்து இருக்கும்போது காதலரின் கண்களுக்கு இடைப்பகுதியிலும் காற்று வீசும் தான். இக் காற்றானது திடீரென பெருங்காற்றாகவும் வீச வாய்ப்புண்டு. அப்படி பெருங்காற்றாக வீசினாலும் காதல் பார்வையில் எந்த ஒரு மாற்றமும் இல்லாதிருப்பதே காதலர்க்கு இனிமை பயப்பதாகும் என்கிறார் வள்ளுவர். காரணம், காதல் பார்வை என்பது சாதாரணமான வெளிப்பார்வை அன்று. காதலியின் கண்ணின் ஒளி காதலனுக்குள்ளும் காதலனின் கண்ணொளி காதலிக்குள்ளும் சென்று தமது காதல்மொழிகளை தத்தம் உள்ளங்களுக்கிடையே பரிமாறிக் கொள்கின்ற ஓர் அகப்பார்வை ஆகும். இப்படிப்பட்ட வலிமையான காதல்பார்வைக்கு அவர்களுடைய காதலும் உண்மையானதாய் வலிமைமிக்கதாய் இருக்கவேண்டும். 

முயக்கிடை தண்வளி போழ பசப்புற்ற
பேதை பெருமழைக் கண் - குறள் 124:9

தி.பொ.ச. உரை: காதல் பார்வைக்கிடையே குளிர்காற்று வீசி திசைமாற்றிடப் பொறுக்காத அவளது மையுண்ட கண்கள் நீரேந்தி நின்றன.

இதுவும் மேற்சொன்ன குறளுடன் தொடர்புடையதே. காதல் பார்வையில் கட்டுண்டு களித்துக் கிடக்கும்போது, திடீரென்று இவர்களது கண்களுக்கு இடையில் புகுந்து குளிர்காற்று வீசிட, குளிர்ச்சியினால் கண்கள் சில இமைப்பொழுது மூடித் திறக்கின்றன. இந்த கணநேரப் பிரிவைக் கூடத் தாங்கமாட்டாத காதலியின் கண்கள் கலங்கி நீர்கொண்டு நிற்கின்றனவாம். என்னே ஒரு காதல்!. என்ன ஒரு காதலி!!. இங்கும் பசப்பு என்பது கண்ணீரையே குறிக்கும்.

ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின் - குறள் 133:10

தி.பொ.ச. உரை: காதலர்கள் முகம்பார்த்துக் கொள்ளாமல் ஊடல்கொள்வது காதலர்க்கு இன்பம் சேர்ப்பதுதான். இருந்தாலும், காதலர்கள் ஒன்றுகூடி காதல்பார்வையில் ஒருவர்க்கொருவர் கட்டுண்டு இருப்பது ஊடலைவிட இன்பம் தருவதாகும்.

பொதுவாக, ஊடல் என்பது காதலர்கள் ஒருவருக்கொருவர் முகம்பார்த்துக் கொள்ளாமலும் பேசிக்கொள்ளாமலும் இருப்பதையே குறிக்கும். இது எப்படி காதலர்க்கு இன்பத்தைக் கொடுக்கும் என்றால் அவர் எப்போது என்னைப் பார்ப்பார் என்று காதலி ஏங்குவதும் அவள் எப்போது என்னைக் காண்பாள் என்று காதலன் ஏங்குவதுமாய் இருவருக்குள்ளும் ஒரு ஏக்கமும் எதிர்பார்ப்புடன் திரும்பிப் பார்ப்பதுமாய் ஒருவகையான இன்பத்தைத் தரும். ஆனால் இதைவிட இன்பம் தருவது காதலர் இருவரும் ஒருவருக்கொருவர் முயங்கிக் கொள்வதுதான். அதாவது காதலர் இருவரும் ஒருவருக்கொருவர் ஆசைதீரக் கண்களால் கண்டு காதல் பார்வையில் கட்டுண்டு மெய்ம்மறந்து நிற்றலே காதலர் இருவருக்கும் அதிக இன்பதைத் தரும் என்று கூறுகிறார் வள்ளுவர்.

முயங்கிய கைகளை ஊக்க பசந்தது
பைந்தொடி பேதை நுதல் - குறள் 124:8

தி.பொ.ச. உரை: காதல் பார்வையின் ஒளியினை சற்றே அசைக்கவும், அழகிய தொடியணிந்த என் காதலியின் கண்கள் கலங்கின.

இதுவும் முன்னர் கண்ட குறள்களுடன் தொடர்புடையதே. காதலர்கள் இருவரும் காதல் பார்வையில் கட்டுண்டு இருக்கும்போது, காதலன் தனது காதல் பார்வையினை அதாவது கண் ஒளியினை சற்றே அசைத்திட, அதைக்கண்ட காதலியின் கண்கள் காதலன் தன்னைப் பிரியப் போகிறானோ என்றெண்ணிக் கலங்கினவாம்.

முயக்கம் என்பது உடலைத் தழுவுதல் என்ற பொருளைத் தரும் என்று உரையாசிரியர்கள் முடிவு செய்யக் காரணம் இக் குறளில் வரும் கை என்ற சொல்லே. இப் பாடலில் வரும் கை என்ற சொல்லுக்கு கரம் (உடலுறுப்பு) என்ற பொருளைக் கொண்டதே முயக்கம் என்பதற்கு உடலைத் தழுவுதல் என்ற பொருளைக் கொள்ள ஏதுவாயிற்று எனலாம். ஆனால், இச் சொல்லுக்கு நாம் இக் குறளில் கொள்ளவேண்டியது ' ஒளிக்கதிர் (கிரணம்) ' என்ற அகராதிப் பொருளேயாகும். மேலும், இக் குறளில் வரும் நுதல் என்பது கண்ணையும், தொடி என்பது கண்விளிம்பில் பூசும் அணியினையும் குறிக்கும் என்று முன்னர் கட்டுரைகளில் ஏற்கெனவே கண்டுள்ளோம்.

முடிவுரை:

இதுகாறும் கண்டவற்றில் இருந்து திருக்குறளில் வரும் முயங்கு, முயக்கம், முயக்கு ஆகிய சொற்களுக்கு அகராதிகள் காட்டும் பொருட்கள் பொருந்தாது என்றும் புதிய பொருட்களே பொருந்தும் என்றும் பல ஆதாரங்களுடன் அறிந்துகொண்டோம். திருக்குறளில் மட்டுமின்றி, ஏனை இலக்கியங்களிலும் பல இடங்களில் அகராதிப் பொருட்கள் பொருந்தாத நிலையே காணப்படுகின்றது. இதைப் பற்றி அடுத்த கட்டுரையில் விளக்கமாகக் காணலாம்.

மேலும், பார்த்தல் என்ற வினை குறித்து பேச்சுவழக்கில் வழங்கப்படும் முழித்தல் என்ற சொல்லுக்கும் முய் என்ற வேருக்கும் தொடர்பிருக்கலாம் என்றே தோன்றுகிறது.

முய் ----> முயி ------> முழி = கண் திற, பார்.